கோர்ட்




சமீபத்தில் கோர்ட் என்ற மராத்தி படம் பார்த்தேன்.சில வருடங்களுக்கு முன் வந்த படம்.நான் ஏழேட்டு வருடங்களுக்கு முன் இருக்கும் வேலையை ராஜினாமா செய்து விட்டு பனாரஸ் இந்து பல்கலையில் சட்டம் படிக்கலாம் என்று நினைத்தேன்.நுழைவுத் தேர்வுக்கு ஹால் டிக்கேட் கூட வந்துவிட்டது.ஆனால் அந்த எண்ணத்தில் ஒரு தீவிரம் இல்லாததாலும் வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை என்பதாலும் அதை செய்யவில்லை.அப்போது ஆந்திராவை சேர்ந்த கே.பாலகோபால் என்ற மனித உரிமை ஆர்வலர் , வழக்கறிஞர் இறந்து போயிருந்தார்.அவர் எழுதிய இரண்டு கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தார்கள்.அவர் வாரங்கல்லில் பேராசிரியராக இருந்தவர்.பின்னர் சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனார்.நீதிமன்றங்களின் மூலம் புரட்சிகரமான மாற்றங்களை ஒரு போதும் பெற முடியாது என்று அந்தக் கட்டுரையில் சொல்லியிருந்தார்.ஏனேனில் அதில் அடிப்படையில் மேல் வர்க்க சமூகத்தின் பார்வையைத்தான் பிரதிபலிக்கும் என்று எழுதியிருந்தார்.அப்போது சட்டம் படிக்கலாம் என்ற ஆவல் இருந்த எனக்கு அந்த கட்டுரை அந்த எண்ணத்தை நீர்த்து போகச் செய்தது.அது உண்மையாகவும் பட்டது.

இந்த விஷயம் கோர்ட் திரைப்படத்தில் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.அரசு தரப்பு வழக்கறிஞரின் வாழ்க்கை முறை , அவர்களின் கருத்துலகம் உருவாகும் நாடகங்கள்,அவர்களின் வீடு மிகச் சிறப்பாக காட்டப்படுகிறது.அதே போல இறுதியில் அந்த நீதிபதியின் சமூக வாழ்க்கை காட்டப்படுகிறது.நாராயணன் காம்பளேவுக்காக வழக்காடும் வழக்கறிஞரின் வாழ்க்கையையும் நாம் பார்க்கிறோம்.அவர் நாராயணனுக்காக போராடுகிறார்.ஆனால் அவர் அவர்களில் ஒருவர் இல்லை.அவர் அந்த நீதிபதியின் , அரசு வழக்கறிஞரின் வர்க்கத்தை சேர்ந்தவர்.இதை மிக நுட்பமாக காட்டுகிறார்.திரைப்படம் மிக நீளமான ஷாட்டுகளை கொண்டுள்ளது.பிரச்சாரமற்ற தொனி.மிக குறைவான அண்மை காட்சிகள்.இந்த திரைப்படத்தை எடுக்கும் போது இயக்குனர் சைதன்யாவிற்கு இருபத்தியேழு வயது தான்.அந்த வயதிற்குள் இந்த முதிர்ச்சியை எப்படி அடைந்தார் என்று ஆச்சரியமாக இருந்தது.நாராயணனுக்காக போராடும் வழக்கறிஞர் காலப்போக்கில் தன் குடும்பத்தினரின் , நண்பர்களின்,வாழ்க்கையின் அழுத்தங்களால் அதிலிருந்து விலகலாம்.அவர் திருமணம் செய்து குழந்தைகள் பெற்று அவர் வர்க்கத்தின் கருத்துலகை ஏற்று நிம்மதியாக வாழலாம்.ஆனால் நாராயணன் தான் நம்பும் சமூக நீதிக்காக போராடத்தான் வேண்டும்.அவருக்காக போராட அவர் தரப்பிலிருந்தே அவரின் கருத்துலகத்தை ஏற்ற ஒருவரே வர வேண்டும்.அது அமைப்புகளால் மட்டுமே சாத்தியம்.இந்தியா போன்ற ஒரு நாட்டில் உங்களுக்கான ஒரு குரலை அமைப்பாக்கத்தின் மூலமே பெற முடியும்.ஆனால் அவரே அமைப்புகளிலிருந்து விலகியிருக்கிறார் என்று படத்தில் வருகிறது.ஒரு அமைப்பாக ஒரு தரப்பு செயல் பட முடியாதது தோல்வியைத்தான் அளிக்கும்.சமூககத்தின் விசைகள் ஒன்றை ஒன்று போராடித்தான் தங்களை நிலைநிறுத்தி கொள்ள முடியும்.மறுதரப்பின் அறவுணர்வை தூண்டுவது,புரிந்துணர்வை உருவாக்க முயல்வது ஆகியவை காலப்போக்கில் பயன் அற்று போகும்.

இந்த படத்தில் உள்ள மற்றொரு முக்கிய விஷயம் கருத்துக்கள் உருவாகும் கிடங்குகளை பற்றிய அவரின் விமர்சனம்.அரசு தரப்பு வழக்கறிஞருக்கும் நீதிபதிக்கும் அந்த வழக்கின் அபத்தமே புரியவில்லை.அவர்கள் அதை மிக எளிதாக மசால் தோசை சாப்படுவதை போல எதிர்கொள்கிறார்கள்.அவர்களுக்கான கருத்தியலை உருவாக்கிய பள்ளி,கல்லூரி,கலைகள்,மதம்,பெற்றோர்,நண்பர்கள் யாருமே எதுவுமே அதன் அபத்தத்தை அவர்களுக்கு உணரத் தர இயலவில்லை.ஏனேனில் அந்த கிடங்கிலேயே அது இல்லை.இங்கு தான் இலக்கியத்தின் பங்கு முக்கியமாக ஆகிறது.கடவுள் இறந்துவிட்டார் என்று நீட்ஷே சொன்னது நம் காலத்தின் முக்கியமான வாக்கியம்.நாம் விஞ்ஞானத்தின் துணைக்கொண்டு கடவுளை கொன்றுவிட்டோம்.இன்று மதம் என்பது சடங்குகளை கொண்ட பெரும்தொகுப்பு.அதிலிருந்து உங்களுக்கான அறப்பார்வை பெற இயலாத அளவுக்கு நம் வாழ்க்கை மாறிவிட்டது.விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் நம் வாழ்வை தகவமைக்கிறது.மறுபுறம் நம் பண்பாட்டு வாழ்க்கை வெறுமையாக இருக்கிறது.அங்கு கடவுள் இல்லை.ஒரு பெரும் வெற்றிடம் உருவாகிறது.அங்கு இன,மொழி,வர்க்க கோஷங்கள் தங்கள் கருத்தியல்களை எளிதாக உருவாக்க முடிகிறது.அதுதான் நமது அன்றாட வாழ்வின் அறப்பார்வையை தீர்மானிக்கும் கருத்துதரப்பாக ஆகிறது.சுண்ணாம்பு போல வெறுமை.

இங்குதான் கலைகளின் , இலக்கியத்தின் பங்கு இருக்கிறது.அது விஞ்ஞானத்தால் நிரப்பமுடியாத , கடவுள் தோற்று போய்விட்ட ஒரு உலகில் நமக்கான கருத்தியல் தொகுதியை உருவாக்குகிறது.இது எந்தளவு மையத்திலிருந்து விலகுகிறதோ அந்தளவு தீவிரமாகிறது.ஒரு மனிதன் ஏன் இன்னொரு மனிதனை அடிக்கக்கூடாது என்ற எளிய கேள்விக்கு இன்று சட்டத்தாலும்,மதத்தாலும்,விஞ்ஞானத்தாலும் பதில் கூற முடியாது.அதற்கான பதிலை கலையும்,இலக்கியமுமே உருவாக்க முடியும்.அதுவே அதன் பயன்.கோர்ட் அப்படியான ஒரு அறப்பார்வை உருவாக்கும் திரைப்படம்.

No comments: