கொண்டாட்ட வெளிகள்


அமெரிக்காவில் குடியானவர்கள்,பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல வேலையில் அமர்ந்துகொண்டு , வீடு கார் என்று செட்டிலானவர்களில் சிலர் எரிமலை போல தமிழ்நாட்டின் நிலை நினைத்து எரிந்துகொண்டே இருக்கிறார்கள்.கோக்,பெப்சி தடை செய்ய வேண்டும்,ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்,விவசாயம் பெருக வேண்டும்,மாணவர்கள் அரசியலில் இறங்க வேண்டும்,இதோ யுகப் புரட்சி என்று சும்மா குமறுவது என்று இவர்கள் செய்வது வேடிக்கையாக இருக்கிறது.இவர்கள் எது நடந்தாலும் ஒரு நாள் விடுப்பு கூட எடுக்க மாட்டார்கள்.ஏன் இத்தனை கூப்பாடு போடுகிறார்கள் என்று புரியவில்லை.இதில் தனித்தமிழ்நாடு கோஷம் போடுவர்கள் வேறு இருக்கிறார்கள்.அராபிய வசந்தம்,வால் ஸ்டீரிட் ஆக்கிரமிப்பு , ஜவகர்லால் பல்கலைகழகத்தில் நடந்த போராட்டம், FTII யில் நடந்த போராட்டம் இவை என்னவாயிற்று.கன்னையா இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்.

பெரு நகர வாழ்க்கை , பன்னாட்டு நிறுவனத்தில் வேலை,இது தானே இன்றைய இளைஞனின் கனவாக இருக்கிறது.அதற்காகத்தானே பள்ளிப்படிப்பு , கல்லூரிப்படிப்பு எல்லாம்.இன்றைய இளைஞனிடம் என்ன கலாச்சார அடையாளம் இருக்கிறது.எதுவும் இல்லை.சமயம் சார்ந்த எந்த அடையாளத்தையும் இன்றைய தலைமுறை பெறவில்லை.ஒரு ஆழ்வார் பாசுரத்தையோ , திருவாசக வரிகளையோ சொல்ல ஒருவருக்கும் தெரியாது.ஏனேனில் இன்றைய தலைமுறையினரின் பெற்றோருக்கே அது தெரியாது.எந்த பண்டிகைக்கும் பின்னால் உள்ள வரலாற்றையும் தொன்மத்தையும் நாம் அறிவதில்லை.விவசாயத்தை , நெசவை , குயவை தன் தொழிலாக ஏற்றுக்கொள்ள எந்த இளைஞன் விரும்புகிறான்.எந்த பெற்றோர் விரும்புகிறார்கள்.நமது போராட்டங்கள் உள்ளீடற்ற வெற்று போராட்டங்கள்.நமக்கு கொண்டாட்ட வெளிகள் இல்லை.நிகழ்வுகள் இல்லை.இன்று தமிழகத்தில் ஒரு நல்ல அரசியல் தலைவர் இல்லை.உண்மையில் இந்த போராட்டமே நல்ல அரசியல் தலைவர் இல்லை என்பதனால் உருவானதுதான்.தமிழகத்தில் நல்ல வலுவான மாநிலத்தலைவர் உருவாக வேண்டும்.ஆந்திராவில் என்.டி.ஆர் தெலுகு தேசம் கட்சியை உருவாக்கியதற்கு பின்னால் இருந்த முக்கிய காரணம் அவர்கள் வலுவற்று போனதால்தான்.இங்கு இப்போது அப்படியான வலுவான தலைமை இல்லை என்பதே நம்மை பாதுகாப்பற்றவர்களாக நினைக்க வைக்கிறது.தர்மராஜ் சொல்லியுள்ளது போல தந்தையற்ற வீட்டில் நிற்கும் சிறுவன் போன்ற நிலை.

உண்மையில் இன்றைய மாறிவரும் கலாச்சார சூழலில் அதற்கான கொண்டாட்ட வெளிகளும், நிகழ்வுகளும் உருவாக வேண்டும்.பெருநகர மனிதனின் வாழ்வின் விழுமியங்களை முன்னிறுத்தும் கேளிக்கை நிகழ்வுகள் அதன் குறியீட்டு தளத்தில் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை அவை நிகழ வேண்டும்.ஒரு திருவிழா மனநிலையை அவை உருவாக்க வேண்டும்.அவை தான் இன்றைய தேவை.

துக்கம் விசாரிப்பு





நேற்றிரவு நல்ல மழை
ஆமாம் இன்று காலை நல்ல வெயில்
நாளையும் வெயில் அடிக்கக்கூடும்
ஆமாம் அடிக்கக்கூடும்
கார் ஒன்று வேகமாக சீறிச் சென்றது
இன்னும் ஐந்து வருடங்களில் ஓட்டுநர் இல்லா கார்கள் வந்துவிடும்
ஆமாம் காலம் வேகமாக மாறி வருகிறது
இயந்திரங்கள் நிறைய வேலைகளை எடுத்துக்கொள்ளக்கூடும்
வேலை இல்லாமல் நாம் எல்லோரும் என்ன செய்யப்போகிறோம்
ஆமாம் நானும் உங்கள் துக்கத்தை பகிர்ந்துகொள்கிறேன்
உங்கள் மகன் என் வீட்டிற்கு அடிக்கடி விளையாட வருவான்
ஆமாம் என் மகன் நிறைய விளையாடுவான்
நீங்கள் இந்த துக்கத்தை கடக்க வேண்டும்
ஆமாம் கடக்கத்தான் வேண்டும்
உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
நன்றி
நான் புறப்படுகிறேன்
புறப்படுங்கள்


நான் இந்த உலகத்து மனிதர்களை பார்க்கிறேன்



நான் இந்த உலகத்து மனிதர்களை பார்க்கிறேன்
இச்சைகளுக்காக தங்கள் வாழ்வை தூக்கி எறிபவர்கள்
தங்கள் ஏக்கங்களை ஒருபோதும் திருப்தி செய்துகொள்ள இயலாதவர்கள்
ஆழமான அவநம்பிக்கைக்கு உள்ளாகுகிறார்கள்
தங்களை தாங்களே துன்புறுத்திக்கொள்கிறார்கள்
அவர்கள் விரும்புவதே அவர்களுக்கு கிடைத்தாலும்
எத்தனை நாட்கள் அவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்?
ஒரு சொர்க்கலோக சுகத்திற்காக
பத்து நரகங்களின் துயரத்தை அனுபவிக்கிறார்கள்
தங்களை மிகவும் இறுக்கமாக சானைக்கல்லோடு பிணைத்துக்கொள்கிறார்கள்
இத்தகைய மனிதர்கள் குரங்குகளை போன்றவர்கள்
வெறி கொண்டு தண்ணீரில் நிலவை பிடிக்க முயல்பவர்கள்
பிறகு நீர்ச்சுழியில் வீழ்பவர்கள்
இந்த மிதக்கும் உலகத்தில் சிக்கிக்கொள்பவர்கள் முடிவற்று எத்தனை துயரப்படுகிறார்கள்
என்னைத் தவிர்த்து,அவர்களுக்காக நான் இரவு முழுவதும் கவலைப்படுகிறேன்
மேலும் என் பெருகும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.


***

நீ மலையுச்சியை மூடியிருக்கும்
இருண்மையான மேகங்களுக்கு மேல்
உயர வேண்டும்
இல்லையென்றால், நீ எப்போதுதான்
வெளிச்சத்தை காண்பாய்?



I watch people in the world
Throw away their lives lusting after things,
Never able to satisfy their desires,
Falling into deeper despair
And torturing themselves.
Even if they get what they want
How long will they be able to enjoy it?
For one heavenly pleasure
They suffer ten torments of hell,
Binding themselves more firmly to the grindstone.
Such people are like monkeys
Frantically grasping for the moon in the water
And then falling into a whirlpool.
How endlessly those caught up in the floating world suffer.
Despite myself, I fret over them all night
And cannot staunch my flow of tears.


***

you must rise above
the gloomy clouds
covering the mountaintop
otherwise, how will you
ever see the brightness?




கூழாங்கல்






தற்கொலை என்பது முக்கியமான தத்துவ பிரச்சனை.தற்கொலையின் முக்கிய காரணம் வாழ்க்கை குறித்த அர்த்தம்.வாழ்க்கை அர்த்தமற்றது என்பவர் தற்கொலை செய்துகொள்ள போவதில்லை.அர்த்தப்படுத்தி பார்க்க முனைபவர்தான் அர்த்தமற்று போகும்போது தற்கொலை செய்கிறார் என்றார் முகுந்தன்.உங்களை யாராவது செருப்பால் அடித்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி கேட்டார் நரசிம்மன்.நான் மறுபடி அவரை அடிக்கக்கூடும் என்றார் முகுந்தன்.அப்படியென்றால் நீங்கள் எதையோ அர்த்தப்படுத்திக் கொள்கிறீர்கள் தானே, அர்த்தமற்ற இடத்தில் தன்மானத்திற்கு என்ன வேலை என்றார் நரசிம்மன்.நான் சொல்வது அர்த்தமற்ற இந்த வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்வதற்கான ஒரு கோட்பாடு.தன்மான உணர்வு என்பது மனிதனின் இயல்பு.அகங்காரமற்ற மனிதன் இருக்கவே சாத்தியமில்லை.எந்த மனிதனின் அகங்காரத்தை சீண்டும் போது அவன் எதிர்வினை ஆற்றவே செய்வான்.காமம் கூட அகங்கார செயல்பாடுதான்.அகங்காரத்தை கடந்தவன் காமத்தை கடக்கிறான்.அகங்காரத்தை கடந்தவனை ஒரு பெண்ணால் ஒன்றுமே செய்ய முடியாது.அப்படிப்பட்டவன் ஞானி.அவனை செருப்பால் அடித்தால் அவனும் உங்களை செருப்பால் அடிப்பான்.ஆனால் அவன் அதை மனதில் தூக்கி சுமந்து காழ்ப்பாக வளர்க்க மாட்டான்.அந்த செருப்பால் அடிக்கும் எதிர்வினை உயிர் நிலை மட்டுமே என்பதை அவன் அறிவான்.

தோற்று போகும் போது, சலிக்கும் போது சமாதான படுத்திக்கொள்ள உபயோகப்படும் ஒரு ஏற்பாடு, அப்படியா என்று சிரித்தார் நரசிம்மன்.இல்லை,இது வாழ்வை உணர்ந்தவன் முன்வைத்த கோட்பாடு.தன் புத்திரன் இறந்துவிடும் போது,பருத்த அவமானத்தை உணரும் போது,கையறு நிலையில் இதைவிட சிறந்த கோட்பாடு உங்களுக்கு உதவாது என்றார் முகுந்தன்.சரி, ஆனால் அப்படியென்றால் நீங்கள் ஏன் பதவிஉயர்வு கேட்க வேண்டும், ஏன் அழகான பண்னை திருமணம் செய்து கொள்ள முயல வேண்டும்,ஏன் நல்ல வண்டியை ஓட்ட ஆசைப்பட வேண்டும், ஏன் அழகான ஆடைகளை உடுத்த வேண்டும்,ஏன் நல்ல காற்றட்டமான இடத்தில் அமர முயல வேண்டும், எப்படியும் இருக்கலாமே என்று சொல்லி வயிறு குலுங்கினார் நரசிம்மன்.சுவதர்மம் என்பது இயற்கையானது.நீங்கள் வீண் வாதம் செய்கிறீர்கள் நரசிம்மன் என்று சொல்லி பேப்பர் காபி கப்பை குப்பைத்தொட்டியில் கடாசினார் முகுந்தன்.நாம் செல்வோம் என்று சொல்லி தன் இடம் நோக்கி நடந்தார் முகுந்தன்.

நரசிம்மன் மேற்கொண்டு ஒன்றும் பேசவில்லை.இருவரும் தங்கள் கணிப்பொறியின் முன் சென்று அமர்ந்தார்கள்.முகுந்தனை ஜான் அழைத்து பகுப்பாய்பு செய்து தரச்சொன்ன முடிவுகளை பற்றிக் கேட்டார்.முகுந்தன் முடித்துவிட்டதாக சொன்னார்.அவர் உபயோகப்படுத்திய படிமுறை பற்றி கேட்டார் ஜான்.முடிவுகாண் மரம் பயன்படுத்தியதாக சொன்னார்.முடிவுகளை பரிசீலித்தார் ஜான்.நரசிம்மனை அழைத்து அவரது படிமுறை பற்றி கேட்டார் ஜான்.நரசிம்மனின் படிமுறை முகுந்தனின் படிமுறையை விட சிறப்பாக பணிபுரிந்தது.முகுந்தனிடம் ஜான் விளக்கம் கேட்டார்.குளிர்காலமா அல்லது கோடைகாலமா என்பதை சொல்லும் மாறுபடு பொருளை முகுந்தன் கணக்கில் கொள்ளவில்லை என்றார் நரசிம்மன்.ஜான் முகுந்தனின் விளக்கத்தை கேட்க முணைந்தார்.முகுந்தன் தான் அதைப்பற்றி யோசிக்கவில்லை என்று சொல்லி தன் இடத்திற்கு சென்றார்.அன்று நடந்த கூட்டத்தில் நரசிம்மன் முன்வைத்த படிமுறையை விளக்கி அங்காடியில் எந்தப் பொருள்களை எந்த இடத்தில் வைத்தால் விற்பனை இன்னும் அதிகமாகும் என்று மேலும் விளக்கினார் ஜான்.

அன்று மதிய உணவு இடைவேளையின் போது முகுந்தன் தனியாக உணவருந்த சென்றார்.நரசிம்மன் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.அன்று வீடு திரும்பும் போது பேருந்து நிறுத்தத்தில் சிவப்பு ஸ்கார்ப் அணிந்த குட்டிப்பெண் தன் பர்தா அணிந்திருந்த அன்னையோடு பேருந்தில் ஏறச்சென்ற போது அந்த குட்டிப்பெண்னை வண்டியில் இடிக்க போய்விட்டார் முகுந்தன்.வண்டி பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் சாய்ந்து நின்றது.நடத்துனர் இடது பக்கம் ஏன் வருகிறீர்கள் என்று திட்டினார்.பேருந்திலிருந்தவர்கள் எட்டிப் பார்த்தனர்.குழந்தையை பார்த்து ஒன்றும் ஆகவில்லையே என்று மறுபடி மறுபடி கேட்டார் முகுந்தன்.பேருந்திலிருந்த ஒரு கண்ணாடி அணிந்த பெண் ஒன்றுமாகவில்லை என்று சொல்லவும் முகுந்தன் ஆசுவாசமடைந்தார்.வீட்டுக்கு சென்று ஒன்றும் உண்ணாமல் அப்படியே தூங்கிவிட்டார்.

மறுநாள் காலையில் இன்று வரவில்லை என்று சொல்லி ஜானுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்.பின்னர் மதியம் வரை தூங்கினார்.மதியம் அருகிலிருந்த பேக்கிரி கடைக்கு சென்று ஜாம் பன் சாப்பிட்டு டீ குடித்தார்.அன்றிரவு ஜானுக்கு தான் ராஜினாமா செய்வதாக மின்னஞ்சல் அனுப்பினார்

மறுநாளும் முகுந்தன் அலுவலகம் செல்லவில்லை.நரசிம்மன் அன்றிரவு முகுந்தனின் வீட்டுக்கு வந்தார்.சட்டையில்லாமல் லுங்கிமட்டும் அணிந்து அமர்ந்திருந்தார் முகுந்தன்.நரசிம்மன் வருவார் என்பதை முகுந்தன் எதிர்பார்க்கவில்லை.ஏன் ராஜினாமா செய்தார் என்று கேட்டார் நரசிம்மன்.முகுந்தன் தனக்கு எதுவும் பிடிக்கவில்லை என்றார்.ஏன் ஒரு சின்ன விஷயத்திற்காக ராஜினாமா வரை செல்கிறீர்கள், உங்களுக்கு ஏற்கனவே நிறைய கடன் வேறு இருப்பதாக சொல்லியிருந்தீர்களே என்றார்.நான் உங்களை அறிவுரை கேட்கவில்லை என்றார் முகுந்தன்.நான் அறிவுரை கூற வரவில்லை முகுந்தன்.ஆனால் அந்த அங்காடி நிறுவனத்திற்கு என்னுடைய படிமுறையை பயன்படுத்தப் போகிறார்கள் என்பதுதானே உங்கள் பிரச்சனை என்றார் நரசிம்மன்.இது ஒரு விஷயமா , இதற்கு முன்னர் பல நிறுவனங்கள் உங்களின் படிமுறையை பயன்படுத்தியிருக்கிறார்களே , பயன்படுத்தி நன்றாக பலன் பெற்றதாக சொல்லியிருக்கிறார்களே , அப்புறம் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்றார் நரசிம்மன்.ராஜினாமா செய்திருந்தாலும் நான் இன்னும் இரண்டு மாதம் பணிபுரிந்தாக வேண்டும் இல்லையா,நாம் நாளை அலுவலகத்தில் பார்க்கலாம் என்றார் முகுந்தன்.நரசிம்மன் ஒன்றும் சொல்லாமல் எழுந்து சென்றார்.

முகுந்தன் நீர் நிரம்பிய இஸ்திரி பெட்டியால் சட்டையை தேய்த்த போது க்ளூக் என்ற சத்தம் எழும்பியது.பொத்தானிலிருந்து நீரை அழுத்தினார்.ப்ரூக் என்ற ஒலியுடன் துவாரங்களின் வழி வெளிவந்தது நீர்.நீரின் மேல் இஸ்திரி பெட்டியை வைத்த போது ஆவி பறந்தது.நிறைய நீர் விட்டு நிறைய ஆவியை பறக்க விட்டார்.வெண்ணிற பருத்தி சட்டை நேர்த்தியாக இருந்தது. ஹங்கரில் மாட்டினார்.நிறைய நேரம் குளித்தார்.சட்டை பேண்ட்டை மாட்டிக்கொண்டு வெளியே வந்து ஆகாயத்தை பார்த்தார்.மேகங்களற்ற நீல வானம்.பூமரம் ஒன்றிலிருந்து மஞ்சள் நிற குடைப்போன்ற பூ உதிர்ந்து ஊதா நிற காரின் மேல் பட்டு கீழே விழுந்தது.இன்னுமொரு மஞ்சள் நிற பூ உதிர்ந்து காரின் மேல் விழுந்தது.இந்த முறை அது தரையில் விழவில்லை.ஊதா நிற காரின் மீது வெயிலின் வெண்ணிற கோடு பிரதிபலித்தது.முகுந்தன் காரின் அருகிலிருந்த தன் பைக்கை எடுத்து துடைத்தார்.கிக்கரை அழுத்தியதும் எழும்பிய ஒலியை கேட்டு அதன் லயத்தில் சற்று முறுக்கினார்.வண்டியை கீயர் மாற்றி மெதுவாக செலுத்தினார்.அவரின் கால்சராயின் உள்சென்ற காற்றால் பேண்ட் காற்றில் அடித்துக்கொண்டது.நாற்சந்தி வரை வேகமாக சென்றவர் சிக்னலில் நிறுத்தினார்.அவரின் பின் நிறைய வண்டிகள் வந்து நின்றன.

எவர்சில்வர் பாத்திரத்தில் கொதிக்கும் நீர் போல வாகஇரைச்சல் அதிகரித்தது.வண்டியை ஒரமாக நிறுத்தி சென்று கொண்டிருந்த வாகங்களை பார்த்தார்.எங்கும் இரைச்சல்.யாரைத்தாக்க விரைந்தோடுகிறது வாகங்கள் என்று தோன்றியது முகுந்தனுக்கு.வண்டியை அலுவலக திசையின் எதிர்திசையில் கடற்கரை நோக்கி செலுத்தினார்.அலுவலகத்திற்கு வரவில்லை என்ற குறுஞ்செய்தி எதையும் அனுப்பவில்லை.அலைபேசியை அணைத்தார்.கடற்கரையில் கூட்டமில்லை.அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டார்.காகங்கள் மணலில் அமர்வதும் எழுவதும் அமர்வதுமாக இருந்தன.ஒருவர் வலையை மடித்துக்கொண்டிருந்தார்.பச்சை நிற குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு பூப்போட்ட சேலை அணிந்திருந்த கறுப்பு நிறப் பெண் சென்றுகொண்டிருந்தாள்.ஒரு ஆள் புத்தகம் ஒன்றை விரித்து முகத்தை மூடி தூங்கிக்கொண்டிருந்தான்.

சாலையின் இரைச்சல் குறைந்திருந்தது.வேகமாக சென்றுகொண்டிருந்த வாகங்களை பார்த்த போது முகுந்தனுக்கு சிரிப்பு வந்தது.அங்கிருந்த தள்ளுவண்டி கடையில் நிறைய பேர் நின்று கொண்டு இட்லி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.தாடி வைத்து தலையில் தலைப்பாய் போல துண்டை கட்டியிருந்த வயோதிகர் ஒருவர் ஆவேசமாக இட்லிகளை முழுங்கிக் கொண்டிருந்தார்.முகுந்தன் அவரை பார்ப்பதை அவர் பார்த்துவிட்டார்.சட்டென்று சிரித்துவிட்டார்.அவர் வாயிலிருந்து சாம்பார் வழிந்தது.முகுந்தன் வேறு பக்கம் திருப்பிக்கொண்டார்.ஒருவர் சைக்கிளை நிறுத்திவிட்டு முகுந்தன் அருகில் உட்கார்ந்து அன்றைய நாளிதழை விரித்து படிக்கதுவங்கினார்.முகுந்தன் தலை சாய்த்து வானத்தை பார்த்தார்.வானம் விரிந்திருந்தது.நீல மேகம்.நீலக்கடல்.கண்களை மூடி எதையும் சிந்திக்காமல் அயர்ந்து தூங்கினார்.

ஒரு காவி நிற உடை அணிந்த சாமியார் பேருந்து நிலையத்தில் பள்ளி விட்டு வீடு திரும்ப நின்ற முகுந்தன் அருகில் வந்தார்.அவரிடம் ஒரு பெரிய கழியும் ஒரு பாத்திரமும் இருந்தது.தன் வேட்டி மடிப்பில் இருந்து கொஞ்சம் மல்லாட்டைகளை உடைத்து கடலைகளை எடுத்து முகுந்தனை அழைத்து கொடுத்தார்.முகுந்தன் வாங்கிக்கொண்டான்.அவர் தன் நீள வெண்ணிற தாடியை நீவிக்கொண்டார்.தன் பாத்திரத்தை திறந்தார் சாமியார்.ஏதேதோ பழைய நாணயங்கள் , ஒரு வெண் சங்கு,உத்திராடஷ்ச மாலையும் ஒரு கூழாங்கல்லும் இருந்தது.அந்த கூழாங்கல்லை எடுத்து முகுந்தனிடம் நீட்டினார்.இதை தேய்த்தால் பூதம் வருமா என்று கேட்டான்.இல்லை.அதை கன்னத்தில் வைக்கச்சொன்னார்.அது ஜில் என்றிருந்தது.ஆ என்று கூவி கன்னத்தை தேய்த்துக்கொண்டு மறுபடியும் வைத்தான் முகுந்தன்.நானே வைச்சுக்கட்டுமா என்றான்.உனக்குத்தான் என்றார் சாமியார்.

அவர் எழுந்த போது அவர் அணிந்திருந்த மணிகள் சத்தம் எழுப்பின.தன் மூட்டையையும் பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு கழியை ஊன்றி நடந்தார்.அந்த கூழாங்கல்லை இரவில் தன் அருகில் வைத்துக்கொண்டு உறங்கினான் முகுந்தன்.அதை தேய்த்தான்.தன் கன்னத்தில் வைத்துக்கொண்டு ஆ வென்று கூவினான்.அதை உள்ளங்கையில் வைத்துக்கொண்டே உறங்கினான்.மறுநாள் தன் வீட்டுருகில் சென்று கொண்டிருந்த சிற்றோடையில் அந்த கல்லை விட்டான்.அது இறங்கி சென்று படுகையில் விழுந்தது.அதை மறுபடி எடுத்தான்.அதை உள்ளங்கையில் வைத்து குளிர்ச்சியை உணர்ந்தான்.முகுந்தன் கைகளை குவித்தார்.அங்கே வெற்றிடம் மட்டுமே இருந்தது.சட்டென்று கண்களை திறந்தால் எதிரில் தள்ளுவண்டி கடையில் யாருமில்லை.அருகில் இருந்தவர் உறங்கிக்கொண்டிருந்தார்.வாகனங்களின் இரைச்சல் குறைந்திருந்தது.

பால்ய காலம் எத்தனை தொலைவிலிருக்கிறது என்று தோன்றியது முகுந்தனுக்கு.படித்து , வேலைக்கு சென்று , காதலித்து, கண்ணீர் சிந்தி , திருமணம் செய்து , குழந்தைகள் பெற்று , டிவி பார்த்து , இணையத்தில் மேய்ந்து , இரைச்சலில் வாகனத்தை ஓட்டி, வேகமாக சாப்பிட்டு , கனவு கண்டு, படுக்கையில் புரண்டு , மாய்ந்து போகும் வேடிக்கை தானே வாழ்க்கை என்று கசப்பாக புன்னகைத்தார் முகுந்தன்.இதில் எனது படிமுறையை பயன்படுத்தினால் என்ன, நரசிம்மனின் படிமுறையை பயன்படுத்தினால் என்ன என்று கைகளை விரித்து சிமெண்ட் பெஞ்சில் நீட்டி அமர்ந்தார்.இந்த வாழ்க்கை அர்த்தமற்றது என்பது அர்த்தமற்றதை புகழவோ , சலிப்பை சிராங்காரிக்கவோ இல்லை.

அலைபேசியை எடுத்து ஆன் செய்தார்.உங்களை ஜான் கேட்டார், விரைவில் வாருங்கள் என்ற நரசிம்மனின் குறுஞ்செய்தியை பார்த்தார்.அங்கிதாவை அழைத்தார்.உன்னை பார்க்க வரலாமா என்று கேட்டார்.இல்லை நான் இப்போது ஆஸ்பத்திரிக்கு கணவனுடன் செல்லயிருப்பதாக தெரிவித்தாள்.கருவுற்று இருப்பதாக நினைக்கிறேன்.மேலும் நாம் பார்த்து பேச என்ன இருக்கிறது என்றாள்.நாம் தான் இந்த வாழ்க்கை முழுமைக்குமாக பேசியாகிவிட்டதே.என்னால் முடிந்தவரை நான் உன் முதுகிலும் நீ என் முதுகிலும் குத்திய காயங்கள் நிறைய இருக்கிறதே.இப்போது நினைத்தாலும் முதுகுதண்டு அதிரும் அளவுக்கான குரூரத்தை நான் உனக்காக வைத்திருந்தேன்.நீயும் தானே என்றாள்.அப்படி சொல்ல முடியாது என்றார் முகுந்தன்.இல்லை முகுந்தன் , நீ என்னை கொலை செய்ய விரும்பவில்லை என்று சொல் பார்ப்போம் என்றாள்.உண்மைதான் என்றார் முகுந்தன்.நாம் பார்ப்பதோ , பேசுவதோ தேவையற்றது என்றாள்.சரிதான்.உனக்கு என் வாழ்த்துக்கள்.நாம் உரையாடலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உரையாடல் இருந்துகொண்டுதான் இருக்கும் என்றார்.நிஜம்தான் முகுந்தன் என்றாள்.எனக்கு உங்கள் மீது சில நேரங்களில் புரிந்து கொள்ள விளக்க இயலாத அன்பும் குரூர வெறுப்பும் வருவதுண்டு.ஆனால் இப்போதெல்லாம் வெறுப்பு இல்லை என்றாள்.

நாம் இருவரும் அவ்வளவு பிடிவாதமாக இருந்திருக்க தேவையில்லை என்றார் முகுந்தன்.நீ எப்போது திருமணம் செய்து கொள்ளவிருக்கிறாய் என்றாள்.தெரியவில்லை.அணைத்தும் அர்த்தமற்ற இந்த வாழ்க்கையில் எதன் அடிப்படையில் திருமணம் செய்து கொள்வது என்று புரியவில்லை என்றார்.சிரித்தாள்.வேலையில் இருக்கிறாய் தானே என்றாள்.இப்போது தான் ராஜினாமா செய்தேன் என்றார்.நீ திருமணம் செய்து குழுந்தை பெற்றுக்கொள், வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறிவிடும் என்றாள்.வேலையை விடாதே என்றாள்.உன் அக்கறைக்கு நன்றி என்றார்.மறுபடி சிரித்தாள்.எனக்கு உன் மீது பகையில்லை முகுந்தன்.நான் உன்னை புரிந்துகொள்கிறேன் என்றாள்.நீ அக்கறையுடன் பேசுவது எரிச்சலை உருவாக்குகிறது என்றார் முகுந்தன்.நாம் பேச வேண்டாமே.பேசி ஆகப்போவது ஒன்றுமில்லை என்றாள்.சரி ஏன் என்னை பார்க்க வேண்டும் என்றாள்.

நான் உருளும் பாறை ஒன்றை மேலே இருந்து கீழே தள்ள வேண்டும்.பிறகு கீழே வந்து அதை மலை உச்சி வரை கொண்டு செல்ல வேண்டும்.பிறகு மறுபடி அதை உருட்டி விட வேண்டும்.எனக்கு புரியவில்லை என்றாள்.இதை நான் தொடரந்து செய்ய வேண்டும்.அதை செய்வதில் ஒரு த்ரில் இருக்கிறது என்பது புரிகிறது.ஆனால் எனக்கு தேவை ஒரு கூழாங்கல் .அது இருந்தால்தை வாழ்நாள் முழுவதும் செய்துவிடுவேன்.எதை என்றாள்.இந்த பாறையை உருட்டும் வேலையை.அந்த கூழாங்கல்லை உன்னால் எனக்கு கொடுக்க முடியும் என்றார்.அங்கிதா புன்னகைத்தாள்.என்னிடம் கூழாங்கல் இல்லையே என்று ொல்லி கண்களில் நீர் வர சிரித்தாள் அங்கிா.முகுந்தனும் சத்தமாக சிரித்தார்.அந்த கூழாங்கல் இப்போது கிடைத்துவிட்டதாகத்தான் தோன்றுகிறது என்றார்.அழகாய் பேசுகிறாய் என்றாள்.சரி.பேசியது மகிழ்ச்சி , நான் வைக்கிறேன் என்றார்.சரி , உடம்பை பாத்துக்கோ என்று சொல்லி முடித்தாள் அங்கிதா.எழுந்து கைகளை தலைக்கு மேல் தூக்கி நெட்டி முறித்தார்.வண்டியின் மீது அமர்ந்து கிக்கரை ஓங்கி மிதித்து கிளட்ச்சை விடாமல் ஆக்ஸிலேட்டரை முறுக்கியவாறு நீல வானத்தை பாரத்தவாறு நின்றார்.சட்டன்று வண்டியை வேகமாக செலுத்தினார்.