வடபழனி காவல் நிலையத்திற்கு வெளியே நின்றவாறு மேலே சென்றுகொண்டிருந்த நீல நிற மெட்ரோ ரயிலை பார்த்தேன்.நான்கைந்து பெட்டிகளோடு மிக சிறியதாக இருப்பதாக தோன்றியது.நீல நிற மேகங்களற்ற வானம்.கிறிஸ்டோபர் காவல் நிலையத்தின் வாசலில் நின்று அழைத்தான்.என்னை ஒரு காகிதத்தில் கையெழுத்து போடச் சொன்னான்.என்னைப் பார்த்துக்கொண்டேயிருந்த ஏட்டு உங்க அப்பா கிட்ட கடைசியா எப்போ பேசினீங்க என்று கேட்டார்.ஞாபகமில்லை என்றேன்.கிறிஸ்டோபர் என்னைப் பார்த்து முறைத்தான்.ஏட்டு கிறிஸ்டோபரை பார்த்தார்.நீங்க கிளம்பலாம் என்றார்.
வெளியே நிறுத்தியிருந்த என் ஸ்கூட்டரை கிளப்பினேன்.கிறிஸ்டோபர் பின்னால் அமர்ந்துகொண்டான்.குமரன் காலனியின் பிரதான சாலையில் வண்டியை செலுத்திய போது சாலையின் பெயர் பலகையை பார்த்தேன்.அடர் நீல நிறம்.இந்த எல்.எம்.எல் வெஸ்பா ஸ்கூட்டரும் அப்படியான ஒரு நிறம்தான்.இது முதலில் மென் பச்சை நிறத்திலிருந்த நினைவிருக்கிறது.வண்டியை வாங்கிய தினத்தன்று என் தந்தையே வேலூரிலிருந்து வாணியம்பாடிக்கு இதை ஓட்டிக்கொண்டு வந்தார்.ஆனால் சில மாதங்களிலேயே அதை அடர் நீல நிறத்திற்கு மாற்றினார்.ஆர்சி புக்கில் கூட நிறத்தை புதுப்பித்தார்.எங்கள் வீட்டில் யாருக்குமே அவர் ஏன் அப்படி செய்தார் என்று புரியவில்லை.மென் பச்சை இன்னும் அழகாக இருந்தது.எங்கள் வீட்டின் முன்னிருந்த பூவரசமரத்தின் நிழலில் அது நிற்பது மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருந்தது. அவர் அதை அடர் நீல நிறத்திற்கு மாற்றியப்பின் எனக்கும் என் அக்காளுக்கும் அதன் மீது ஒருவித விலக்கம் ஏற்பட்டது.எங்கள் வீட்டிலிருந்து இஸ்லாமியா கல்லூரி ஒரு கீலோமீட்டர் கூட இருக்காது.ஆனால் என் தந்தை எப்போதும் அவரது ஸ்கூட்டரில்தான் செல்வார்.நானும் எனது அக்காளும் நடந்தே நியூடவுனிலிருந்து ரயில் பாலத்தின் மீது ஏறி சி.எல்.ரோடில் இருந்த எங்கள் பள்ளிக்கு செல்லோம்.ஒரு நாள் கூட அவர் எங்களை அந்த வண்டியில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு கொண்டுசென்று விட்டதில்லை.அவர் என்னிடம் மகிழ்ச்சியாக பேசிய நினைவு எதுவுமே எனக்கில்லை.நானும் அவரிடம் எதுவும் கேட்டதில்லை.என் அக்காள்தான் எப்போதாவது ஆம்பூரில் ரீலிசாகும் படத்திற்கு அழைத்துச்செல்ல கெஞ்சுவாள்.எங்களுக்கு டிக்கெட் வாங்கிக்கொடுத்து உள்ளே செல்லச்சொல்லி விட்டு அவர் தன் கட்சி அலுவலகத்திற்கு போய்விடுவார்.படம் முடிவடையும் போது வந்து திரும்ப அழைத்துக்கொண்டு போவார்.என் அம்மா எங்களோடு ஒரு முறை கூட வந்ததாக நினைவில்லை.எனக்கு இந்த ஏற்பாடு மிகவும் எரிச்சலாக இருந்தது.சில வருடங்களில் அக்காளும் ஆம்பூருக்கு செல்ல அடம்பிடிப்பதை நிறுத்திவிட்டாள்.
ஒரு டீக்கடையின் முன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்று அமரந்தோம்.கிறிஸ்டோபர் மிகவும் இறுக்கமாக இருந்தான். நான் சொன்னேன், கிறிஸ்டோபர் , உண்மையிலேயே நான் என் தந்தையிடம் இறுதியாக எப்போது பேசினேன் என்று நினைவில்லை.ஆனால் போன சனிக்கிழமை அவருடைய உடல் வெகுவாக ஆடியது.அவரது இடது கை மற்றும் காலின் அசைவுகளை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.இது முன்னரும் நடந்திருக்கிறது.ஆனால் கொஞ்ச நேரத்தில் நின்றுவிடும்.அன்று நீண்ட நேரம் இப்படி இருந்தது.எனக்கு அதைப் பார்க்க சகிக்கவில்லை.எல்டோபா சாப்பிட்டால் இப்படி தன்னிச்சையாக அசைவதை தடுக்க இயலாது என்று நரம்பியல் மருத்துவர் சகாதேவன் என்னிடம் சொல்லியிருக்கிறார்.இதற்கு ஏதேனும் தீர்வு இருக்கிறதா என்று கேட்டேன்.Deep Brain Stimulation வேண்டுமானால் செய்து பார்க்கலாம் என்று சொல்லியிருந்தார்.அதைப்பற்றி பேச அன்று மாலை அவரை அழைத்து செல்ல முடிவு செய்திருந்தேன், அதற்குள் காணாமல் போய்விட்டார்.கிறிஸ்டோபர் தன் முகப்பருக்களை தடவியவாறு வெளியே பார்த்தான்.அவர் காணாமல் போன மறுநாளே நீ புகார் அளித்திருக்க வேண்டும் என்று கத்தினான்.அல்லது குறைந்தபட்சம் என்னிடம் சொல்லியிருக்க வேண்டும் என்றான்.அவர் இப்போது கூட காணாமல் போனதாக நான் நினைக்கவில்லை , அவர் என்னை பிடிக்காமல்தான் விலகிச்சென்று விட்டார் என்று நினைக்கிறேன் என்றேன்.அவர் ஒரு மேதை, உனக்கு அவரின் அருமை தெரியாது என்று சொல்லியவாறு கிறிஸ்டோபர் அழுதான்.
அவரின் இயற்பியல் ஆர்வம் , மாற்றுப்பொருளாதாரம் குறித்த அவரின் சிந்தனைகள், கம்யூனிசத்தின் மீதான அவரது ஈடுபாடு இதுப்பற்றியெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொன்னவாறு டீ கப்பை என் மீது
வீசினான்.டீ சுடாக இல்லை.கடையில் இருந்தவர்கள் எங்களை பார்த்தனர்.சண்டைனா வெளியே போயிடுங்க என்றான் கல்லாவிலிருப்பவன்.நான் பிரச்சனை ஒன்றுமில்லை என்று சொல்லி கர்சீப்பை எடுத்து முகத்தை துடைத்து வாஷ் பைஸினில் முகத்தை கழுவினேன்.பீங்கானின் நிறமும் அதிலிருந்து வெளியேறும் கழிவு நீர் குழாயின் நிறமும் நீல நிறத்தில் இருந்தது.எனக்கு சிரிப்பு வந்தது.மாற்றுப் பொருளாதாரத்திற்கும் கம்யூனிசத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்தவாறு மேலும் சிரித்தேன்.நான் மறுபடியும் வந்து அமரந்துகொண்டேன்.கிறிஸ்டோபர் இரண்டு பட்டர் பிஸ்கட்டுகளை எடுத்துக்கொண்டு அமர்ந்தான்.மறுபடியும் டீ சொன்னான்.கல்லாவிலிருப்பவன் எங்களையே பார்த்தான்.கிறிஸ்டோபர் - அவர் ஒரு மேதையாக இருக்கலாம்.அவரின் வாசிப்பு, சிந்தனைகள், ஆர்வம் இது குறித்தெல்லாம் எனக்கு பெரிதாக தெரியாது.தெரிந்துகொள்ளவும் விரும்பியதில்லை.அவரும் இவை குறித்து என்னிடம் பேசியதில்லை.உன்னைப்போன்ற அவரது மாணவர்களிடம்தான் அவர் அதிகம் பேசியிருக்கிறார்.என் தொழில் தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாது.தொழில் முணைவோருக்கு சந்தை மற்றும் நுகர்வோர் குறித்த தரவுகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் பரிந்துரைகளை முன்வைக்கும் இந்த வேலைக்கு உங்கள் ஆசிரியரின் அக்கறைகள் எனக்கு எந்த வகையிலும் உதவியதில்லை.இன்று புதிதாக வளர்ந்து வரும் இணையத்தின் தகவல் குவியல்கள் எங்கள் வேலைகளை எளிதாக்கி இருக்கிறது.அவை குறித்து படிப்பதும் ஆராய்வதும்தான் என் உலகம்.எனக்கு என் உலகம் சலிக்கவில்லை.அவர் எனக்கு மேதை இல்லை, தந்தை மட்டுமே ,அதுவும் உயிரியல் ரீதியாக.அவ்வளவுதான்.கிறிஸ்டோபர் ஒன்றும் பேசவில்லை.
காசு கொடுத்துவிட்டு வெளியே வந்து ஸ்கூட்டரில் அமர்ந்த போது, ஏன் இன்னும் இந்த ஸ்கூட்டரை வைத்திருக்கிறாய் என்றான்.நான் பெரும்பாலும் அலுவலகத்திற்கு காரைத்தான் பயன்படுத்துகிறேன்,பக்கத்தில் எங்கேனும் செல்வதற்குத்தான் இந்த ஸ்கூட்டர் என்று சொல்லி சிரித்தேன்.அவனுக்கு என் சிரிப்பு எரிச்சலை ஏற்படுத்தியது.அவருக்கு பார்கின்ஸன் பிரச்சனை இருப்பது கூட உனக்கு பொருட்டாக இல்லை என்றான்.இல்லை கிறிஸ்டோபர், அதற்காக எதையெல்லாம் செய்ய முடியுமோ,செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டுதான் இருக்கிறேன் என்றேன்.அவருக்கு டிம்னிஷியா போன்ற ஏதேனும் பிரச்சனை உண்டாகியிருக்குமோ என்று கேட்டான்.அதற்கான சாத்தியங்கள் எதுவும் இல்லை. வெள்ளிக்கிழமை அன்று கூட பரணிலிருந்து அவர் முப்பது வருடங்களுக்கு முன் நியூட்டிரினோ குறித்து எழுதிய கட்டுரை பிரசுரமாகியிருந்த சஞ்சிகையை எடுத்துக் கொடுக்கச் சொன்னார்.அதன் மாதம் , வருடம் அனைத்தையும் சரியாகத்தான் சொன்னார்.அவரின் புத்தகமாக வராத கட்டுரைகளை Miscellaneous என்ற தலைப்பில் கொண்டு வர அவரின் பதிப்பாளர் விரும்புவதாக சொல்லிக்கொண்டிருந்தார்.அநேகமாக பதினைந்து கட்டுரைகளை தொகுத்திருந்தார்.அதுதான் நீ அவரிடம் கடைசியாக பேசினதா என்று திடீரென்று வினவினான். ஞாபகமில்லை,இருக்கலாம்,ஆனால் அதற்குப் பின் அவரிடம் ஏதோ பேசினேன் என்று நினைக்கிறேன், சரியாக நினைவில்லை என்றேன்.உன் தந்தை காணாமல் போனது குறித்து உனக்கு கவலையே இல்லையா என்று வருந்தினான்.அவர் நன்றாக இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன்,அவர் மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை கிறிஸ்டோபர் என்றேன்.கிறிஸ்டோபர் நல்ல உயரம்.சற்று கூன் போடுவான்.அவன் ஆங்கிலத்தில் பேசும் போது கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கும்.ஸ்கூட்டரில் ஏறாமல் நின்றுகொண்டிருந்தவன் ஆக்ஸிலேட்டரை வெறுமன சுழற்றியவாறு , அந்த ஏட்டுக்கு உன் மீது சந்தேகம் என்றான்.தெரியும், ஆனால் என்னை காப்பாற்றத்தான் வக்கீல் கிறிஸ்டோபர் இருக்கிறாரே என்றேன்.கிறிஸ்டோபர் என் தோள்களில் கைவைத்து சட்டென்று சிரித்தான்.நானும் சிரித்தேன்.அவன் சிரிக்கும் போது வெகு சத்தமாக சிரிப்பான்.என் தந்தையும் அப்படித்தான் சிரிப்பார். அவர் சனிக்கிழமை காலை யாரிடமோ சத்தமாக பேசி சிரித்துக்கொண்டிருந்தது அறையில் இருந்த எனக்கு கேட்டது.முதல் முறையாக அவரது இன்மை துயரத்தை தோற்றுவித்தது.வயிற்றில் ஒருவித வெற்றிடமும் பதற்றமும் ஏற்பட்டது.
கிறிஸ்டோபரை வீட்டுக்கு வரச்சொன்னேன். ப்ரோபஸர் நாராயணன் வந்தபின் வருகிறேன் என்றான்.நான் அவனை வற்புறுத்தவில்லை.வண்டியில் அமர்ந்தவாறு அவன் நடந்து செல்வதை பார்த்தேன்.வீட்டுக்குள் நுழைந்ததும் என் தந்தை இல்லாத வெறுமையை முதல் முறையாக உணர்ந்தேன்.என் அம்மா இறந்து போவதற்கு முன்பே என் அக்காளுக்கு திருமணமாகிவிட்டது.நானும் எனதும் தந்தையும் அதிகம் பேசிக்கொள்வதற்கான சூழலும் தேவையும் இருந்ததே இல்லை.அவரை பார்க்க அவருடைய மாணவர்கள் வந்துக்கொண்டே இருப்பார்கள்.அவருடைய கோப்பில் அவர் சேகரித்து வைத்திருந்த பதினைந்து கட்டுரைகளை பார்த்தேன்.சில இடங்களில் பேன்சிலால் மாற்றங்களை குறித்திருந்தார்.இறுதியாக ஒரு வெற்றுத்தாளில் அப்ஸர்ட் என்று பெரிதாக எழுதியிருந்தார்.அவர் சென்னை பல்கலைகழகத்தில் ஆற்றிய உரை ஒன்றின் புகைப்படமும் அந்தக் கோப்பில் இருந்தது.வாணியம்பாடியிலிருந்து சென்னை பல்கலைகழகத்திற்கு அவர் பணி மாறி வந்ததிலிருந்து நாங்கள் இந்த வீட்டில்தான் இருக்கிறோம்.அந்த எல்.எம்.எல்.வெஸ்பா ஸ்கூட்டரும் கூடவே இருக்கிறது.சும்மா இருக்கும் போதெல்லாம் முப்பட்டகத்தின் வழியே நிறப்பிரிகையால் சுவற்றில் ஏழு வண்ணங்களை உருவாக்கி வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்.அவர் என் தொழில் குறித்து என்னிடம் பெரிதாக பேசியதில்லை.அவருக்கு நுண்துகள்கள் குறித்த அதீத ஆர்வம் இருந்தது.வைசேஷிகம் போன்ற இந்திய தத்துவங்களை பற்றி தீவிரமாக ஒருவரிடம் விவாதித்த போது கவனித்திருக்கிறேன்.அவருக்கு தத்துவத்திற்கும் இயற்பியலுக்கும் இடையிலான அறிவு பரிமாற்றத்தை பற்றியும் அறிவுத் தோற்றவியலை பற்றியும் உண்மையான தேடல் இருந்தது.சோர்வாக உணர்ந்தேன்.சோபாவிலேயே படுத்துவிட்டேன்.
அழைப்பு மணி கேட்டது.நிறைய நேரம் தூங்கி விட்டேன் என்று தோன்றியது.இருட்டியிருந்தது. கிறிஸ்டோபரும் மீராவும் வந்திருந்தார்கள்.வயிறு சட்டென்று வலித்தது.மீரா உள்ளே வந்து குவளையிலிருந்த நீரை எடுத்துக் குடித்தாள்.தளர்ந்திருந்தாள்.எங்காவது வெளியே போகலாமா என்று கிறிஸ்டோபர் கேட்டான்.மூவரும் கிளம்பி ஃபோரம் மாலுக்கு சென்றோம்.நான் உள்ளே செல்ல வேண்டாம் என்று சொல்லவே மூவரும் வெளியே அமர்ந்து கொண்டோம்.சனிக்கிழமை என்பதால் நல்ல கூட்டம்.ஒரு பெண் அவனுடைய காதலனின் நெற்றியில் முத்தமிட்டதை பார்த்ததும் சிரித்து விட்டேன்.குழந்தைகள் ஆர்வமாக பொம்மைக் குதிரைகள் மீது ஏறி சவாரி செய்துக் கொண்டிருந்தார்கள்.பெற்றோர்கள் பதற்றத்தோடும் மகிழ்ச்சியோடும் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.நான்கு இளைஞர்கள் செய்வதறியாது அருகில் அமர்ந்திருந்தார்கள்.அதில் ஒருவன் மீராவையே பார்த்துக்கொண்டிருந்தான்..அன்று சிவப்பு சுடிதாரில் இடையில் கைவைத்தவாறு அவள் எங்கோ பார்த்துக்கொண்டு நின்ற தோரணையை வெகுவாக ரசித்தேன்.அவளை கட்டிக்கொள்ள வேண்டும் போலத் தோன்றியது.அவள் என்னை பார்த்தாள்.நான் புன்னகைத்தேன்.
கிறிஸ்டோபர் என்னிடம் நீ ஏன் இஸ்லாத்திற்கு மாறப்போகிறாய் என்று கேட்டான்.மீரா என் அருகில் வந்து
அமர்ந்தாள்.என்னை கடந்து சென்ற ஒரு தந்தையையும் அவரின் கைகளை பற்றியவாறு சென்ற பெண் குழந்தையையும் பார்த்தேன்.அந்தக் குழந்தை கறுப்பு நிற ஸ்கார்ப்பை தலையில் அணிந்திருந்தாள்.காரணமென்று ஒன்றுமில்லை கிறிஸ்டோபர்.அல்லா ஒருவரே இறைவன்.முகம்மது நபி அவருடைய கடைசித் தூதர்.நான் இதை நம்புகிறேன்.நான் இஸ்லாம் சொல்லும் வாழ்க்கை நெறிகளை பின்பற்றி வாழ விரும்புகிறேன்.சாத்தியப்படும் நாட்களில் எல்லாம் ஐந்து முறை தொழ நினைக்கிறேன்.நான் இந்த வாழ்க்கை அபத்தமானது என்றோ கட்டற்றது என்றோ அல்லது இதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறதென்றோ ஆராய விரும்பவில்லை.நான் நம்ப விரும்புகிறேன்.பற்றிக்கொள்ள விரும்புகிறேன்.எனது துயரங்களின் போது நான் மண்டியிட்டு கதறி அழுது பிராத்திக்கவும் , பற்றிக் கொள்ளவும் எனக்கு ஒரு கடவுள் வேண்டும். என் தினசரி நாளை கடத்த எனக்கு ஒரு வாழ்க்கை நெறி வேண்டும்.நான் இஸ்லாமை தேர்வு செய்தேன்.அப்படி கூட சொல்ல முடியாது.என்னால் அதை தவிர்க்க முடியவில்லை.எனக்கு அது பிடித்திருந்தது.அவ்வளவுதான்.வாணியம்பாடியின் நாட்களிலிருந்தே பிடித்திருந்தது.மீரா என் கைகளை பற்றிக்கொண்டாள்.மீராவை திருமணம் செய்து கொள்ளப்போகிறாயா இல்லையா என்று கிறிஸ்டோபர் கேட்டான்.நான் இப்போதும் தயாராகவே இருக்கிறேன் என்று சொல்லி மீராவை
பார்த்தேன்.
மிஸ்டர்.நாராயணனுக்கு இதில் விருப்பமில்லாமல் சென்றிருக்கலாம் இல்லையா என்றாள் மீரா.தெரியவில்லை என்றேன்.கிறிஸ்டோபர் அடர் நீல நிற பேண்ட் அணிந்திருந்தான்.இது உங்கள் ஆசிரியருக்கு பிடித்த நிறம் என்றேன்.அவன் அதை பொருட்படுத்தவில்லை.என் ஊகம் சரியாக இருக்கமென்றால் அவர் அவருடைய பால்ய காலத்தின் அல்லது கல்லூரி காலத்தின் மனிதர்கள் யாரையோ பார்க்கச் சென்றிருக்கிறார்,சீக்கிரம் வந்துவிடுவார் என்றேன்.மீராவும் கிறிஸ்டோபரும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.நாங்கள் மாலுக்குள் சென்று உலாவினோம்.கிறிஸ்டோபர் தனக்கு ஒரு தொப்பி வாங்க வேண்டும் என்று சொல்லி விதவிதமான தொப்பிகளை அணிந்து பார்த்தான்.அவனுக்கு எந்தத் தொப்பியும் நன்றாக இல்லை.அந்த மாலின் பளீர் வெளிச்சமும் சுத்தமும் எனக்கு சற்று எரிச்சலையும் சலிப்பையும் உருவாக்கியது.அங்கிருந்த ஒரு பழச்சாறு அங்காடியில் சப்போட்டா மில்க் ஷேக் வேண்டும் என்று சொல்லி வாங்கிப் பருகினாள் மீரா.
மீரா தீவிரமான தொனியில் , அப்படியென்றால் நீ யாரிடமாவது விசாரிக்கலாமே அல்லது காவல் நிலையத்தில் இதைப்பற்றி தெரிவிக்கலாமே என்றாள்.அப்போது அவளது உள்ளங்கைகள் வியர்த்திருந்தை கவனித்தேன்.நான் புகார் அளித்ததே கிறிஸ்டோபரின் வற்புறுத்தலால்தான் மீரா.சரி ஏன் சொல்லாமல் போக வேண்டும் என கேட்டாள்.சொல்ல மறந்திருக்கலாம், ஆனால் பின்னராவது அழைத்திருக்க வேண்டுமே என்று கிறிஸ்டோபர் எரிச்சலாக கேட்டான்.அதுதான் தெரியவில்லை.ஒருவேளை அவர் தன் மொபைலை தொலைத்திருக்கலாம்.அல்லது வேண்டுமென்றே அழைக்காமல் இருக்கலாம் என்று சொல்லியபடி
கிறிஸ்டோபரை பார்த்தேன்.அவன்
தலையை திருப்பிக் கொண்டான்.
எப்போது இஸ்லாத்திற்கு மாறப்போகிறாய் என்றான்.உன் ஆசிரியர் வந்தவுடன்.அவரிடம் இதுகுறித்து பேசினாயா என்றான்.இதைக்குறித்து அவரிடம் சொல்லவோ கேட்கவோ ஒன்றுமில்லை என்றேன்.மீரா அழுதாள்.எனக்கு ஏன் என்று புரியவில்லை.சட்டென்று என் கைகளில் முத்தமிட்டாள்.
கிறிஸ்டோபரும் மீராவும் மாலிலிருந்தே வீட்டுக்கு சென்றுவிட்டார்கள்.இரவில் வெகுநேரம் சம்மந்தமே இல்லாமல் பேஸ்புக்கில் பலரது பக்கங்களுக்கு போய் அவர்களின் நிலைத்தகவல்களையும்
புகைப்படங்களையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
காலை ஆறுமணிக்கெல்லாம் தரைவழித் தொலைபேசி ஒலித்தது.இடதுபக்க கண் இமையின் மேல்
பயங்கரமாக வலித்தது.திஸ் இஸ் நாராயணன் என்ற குரல் ஒலித்தது.அப்பா என்றேன்.வெங்கடன் , ஸாரி , நான் உன்னை பிரச்சனையில் சிக்க வைத்துவிட்டேன், நான் இப்போது புறப்படுகிறேன், இன்னும் மூன்று மணி நேரத்தில் வந்துவிடுவேன் என்றார்.எங்கே இருக்கிறீர்கள் என்றேன்.பாண்டிச்சேரியில் என்றார்.அங்கே யாருடைய வீட்டில் , நான் வந்து அழைத்துக்கொள்கிறேன் என்றேன்.இல்லை வேண்டாம் , நான் வந்துவிடுகிறேன் என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.
கிறிஸ்டோபரும் மீராவும் வந்துவிட்டார்கள்.சரியாக மூன்று மணி நேரத்தில் ஒரு இன்டிகா டிராவல்ஸ் கார் என் தந்தையை இறக்கிவிட்டு சென்றுவிட்டது.முதல் முறையாக வாக்கிங் ஸ்டிக்கை அவர் கையில் பார்க்கிறேன்.புது உடை.பளிச்சென்று இருந்தார்.உள்ளே நுழைந்தவர் என்னை பார்த்து ஸாரி என்றார்.நான் ஒன்றும் சொல்லவில்லை.கிறிஸ்டோபரின் தோளை பற்றிக்கொண்டு நடந்து வந்து நாற்காலியில் அமர்ந்தார்.நான் பாண்டிச்சேரியில் என் நண்பன் சிலுவைராஜ் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.என்னை கல்லூரியில் திருமணம் செய்துக்கொள்ள சொல்லி இரண்டு முறை கேட்ட நஸியா என்ற பெண்ணும் பாண்டிச்சேரியில்தான் இருக்கிறாள்.அவள் ஒரு கல்லூரியின் முதல்வராக இருந்து ஒய்வு பெற்றவள்.அவளது மூன்று பேரக்குழந்தைகள் கல்லூரிக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள், ஒரு பேத்திக்கு திருமணம் கூட ஆகிவிட்டது என்று சொல்லி சிரித்தார்.என் தந்தை இப்படிப் பேசி நான் இதுவரை பார்த்ததில்லை.நான் அவளை நேற்றுதான் சென்று பார்த்தேன்.சிலுவைராஜ் உன்னிடம் பாண்டிச்சேரியில் இருப்பதாக சொல்லச்சொல்லி வற்புறுத்தினான்.ஆனால் எனக்கு உன்னிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லை என்றவர் சட்டென்று மெளனமானார்.வெகு நேரம் தலையை தொங்கப்போட்டவாறு கீழே தரையையே பார்த்துக்கொண்டிருந்தார்.வாக்கிங் ஸ்டீக்கால் தரையை லேசாக தட்டினார்.என்னைப் பார்த்தார்.வெங்கடன், நீ இஸ்லாத்திற்கு மாறுவதில் எனக்கு எந்த புகாரும் இல்லை என்றார்.பிறகு தலையை ஆம்
என்பது போல அசைத்தார்.அவர் என் பெயரை சொல்லி அழைத்தது ஏனோ ஆச்சரியமாக இருந்தது. அதன் பின் சிறிது நேரம் அவர் ஒன்றுமே சொல்லவில்லை.எனக்கு சற்று சோர்வாக இருக்கிறது,நான் உள்ளே செல்கிறேன், எக்ஸ்கியூஸ் மீ என்று சொல்லிவிட்டு எழுந்தார்.கிறிஸ்டோபர் அவரின் கரங்களை பிடிக்கப் போனான்.நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சைகை செய்தவாறு அறைக்குள் போனார்.
கிறிஸ்டோபர் காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று சொல்லியவாறு சென்றுவிட்டான்.வெங்கடன் உன் புதுப்பெயர் என்ன என்று கேட்டாள் மீரா.ரஹ்மத்துல்லாஹ் என்றேன்.சிரித்தாள்.இன்று மாலை எங்காவது வெளியே செல்லலாமா என்றாள்.தெரியவில்லை,மருத்துவர் சகாதேவனை அழைக்க வேண்டும், அவர் வீட்டிலிருந்தால் தந்தையை அழைத்து சென்று காண்பிக்க வேண்டும் என்றேன்.மீரா உனக்கு தெரியுமா , எனக்கு இப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிறது , அன்று பெயர் மாற்றத்திற்காக
படிவத்தை வாங்கி வைத்திருந்தேன்.அதை தற்செயலாக பார்த்தவர் என்ன பெயருக்கு மாற்றப்போகிறாய் என்று கேட்டார்.ரஹ்மத்துல்லாஹ் என்றேன்.ரஹ்மத்துல்லாஹ் என்று தனக்குள்
சொல்லிக்கொண்டார்.பிறகு யாரிடமோ ஆம் என்று சொல்வது போல தலையாட்டினார்.யாரையோ வெளியோ போ என்று சொல்வது போல கைகளை அசைத்தார்.பிறகு எழுந்து அவரது அறைக்கு போய்விட்டார்.இதுதான் அவரிடம்
கடைசியாக பேசியது.கடந்த வெள்ளிக்கிழமை இரவு என்று நினைக்கிறேன்
என்றேன்.மீரா என் தோளில் சாய்ந்துக்கொண்டாள்.அவள் கண்களிலிருந்து நீர் கசிந்தது.கன்னத்தில் முத்தமிட்டாள்.கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடீ என்று முணுமுணுத்தேன்.மீரா புன்னகைத்தாள்.
(மணல் வீடு சிற்றிதழில் வெளியான சிறுகதை)
No comments:
Post a Comment