வைகோவை போல தனக்கான எல்லா வெற்றி வாய்ப்புகளையும் எப்போதும் இழக்கும்
ஒரு அரசியல்வாதி தமிழ்நாட்டில் இல்லை.இந்தியாவில் கூட இருக்க
முடியாது.அவரின் அரசியல் வாழ்க்கை திராவிட முன்னேற்றக் கழகத்தில் அண்ணாதுரை
காலத்தில் துவங்குகிறது.ஐம்பது வருடங்களாக அரசியலில்
இருக்கிறார்.தி.மு.கவில் இருந்த போது எம்.பியாக
இருந்திருக்கிறார்.தொண்ணூறுகளில் அவர் திமுகவிலிருந்து
நீக்கப்படுகிறார்.அது அவருக்கு ஆழமான காயத்தை ஏற்படுத்திவிட்டது என்று
அவருடைய மகன் வையாபுரி சொல்லியிருக்கிறார்.வைகோவால் அந்த துரோகத்தை
தாங்கிக் கொள்ளவே இயலவில்லை.அவர் வேறு வழியில்லாமல் மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்றக் கழகத்தை துவங்குகிறார்.பல மாவட்ட செயலாளர்கள் வைகோவுடன்
செல்கிறார்கள்.குடையை சின்னமாக தேர்வு செய்கிறார்.மணிரத்னம் இயக்கிய
கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தின் முதல் தலைப்பு மஞ்சள்குடை.குடை
ஈழத்தமிழர்களுக்கு ஒரு நிழலாக இங்கும் அங்கும் இருக்கும் என்ற எண்ணத்தில்
அவர் அதை உருவாக்கியிருக்கலாம்.அவருக்கு 2009வரை பிரதான அக்கறையாக ஈழம்தான்
இருந்தது.அதுவும் மதிமுக பெரிய அளவில் வளராமல் போனதற்கு முக்கிய
காரணம்.தொண்ணூற்றியாறு தேர்தலில் திமுக த.மா.காவுடன் கூட்டனி
வைத்தது.ரஜினிகாந்த் அந்த கூட்டணியை ஆதரித்தார்.வைகோ படுதோல்வி
அடைந்தார்.அதன்பின் அணைத்து சட்டமன்ற தேர்தல்களிலும் அவர் தவறான முடிவையே
எடுத்திருக்கிறார்.அவரால் ஒரு போதும் திமுகவுடன் இயல்பாக இருக்க
முடியவில்லை.அது அவரை வெளியேற்றிய கட்சி.அங்கு அவரின் இருப்பு
மறுக்கப்பட்டது.அதற்கு விசேஷமான காரணங்கள் ஒன்றுமில்லை என்பது
எல்லோருக்கும் தெரியும்.அதிமுகவில் அவருக்கு பெரிய அளவில் ஓட்டு வங்கி
இல்லை என்பதால் கடந்த தேர்தலில் அதிக இடங்கள் மறுக்கப்பட்டது.அவருடைய கட்சி
கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.உண்மையில் மதிமுக
ஆரம்பிக்கப்பட்ட போது அவருக்கு நல்ல ஆதரவு இருந்தது.தொண்ணூற்றியாறு
தேர்தலுக்கு பிறகு குடை சின்னத்தை அவரால் தக்கவைக்க முடியவில்லை.அவருக்கு
பம்பரம் சின்னம் வழங்கப்பட்டது.
பொடா சட்டத்தில் கைது
செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையில் கழித்தார்.அப்படிப்பட்டவர்
மறுபடியும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார்.ஒரு பேட்டியில் சொல்லும் போது
எங்கள் கட்சியினர் இதையே இயல்பான கூட்டணியாக எண்ணுகிறார்கள் என்று
சொல்லியிருந்தார்.திமுகவில் இன்று பெரிய அளவில் இருக்கும் அனைவருடன்
அவருக்கு நல்ல பழக்கம் இருந்திருக்க வேண்டும்.அங்கே கூட்டணிக்காக செல்லும்
போது அவர் நுட்பமான அவமானங்களை தொடர்ந்து சந்திந்திருக்க வேண்டும்.அல்லது
சாதாரண விஷயங்களை கூட அவர் மிகப் பெரிய அவமானமாக நினைத்து புழுங்கியிருக்க
வேண்டும்.அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியில் கூட்டணி
சேர்ந்து இறுதியில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
அவர்
தனியாக கட்சி தொடங்கிய இந்த இருபது வருடங்களில் அவர் மிகச்சரியான முடிவை
இந்த சட்டமன்ற தேர்தலில்தான் எடுத்தார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
தலைவர் திருமாவளவன் மக்கள் நல கூட்டு இயக்கம் என்பதின் எண்ணத்தை
உருவாக்கினாலும் அதை ஒரு மாற்று கூட்டணியாக மாற்றியவர் வைகோ.நான்கு
கட்சிகளை இணைத்தார்.விஜயகாந்தை கூட்டனிக்கு கொண்டு வந்தார்.அதற்காக
மிகப்பெரிய சமரசத்தை செய்துக்கொண்டார்.த.மா.காவை இணைத்தார்.உண்மையில் ஒரு
கட்டத்தில் அந்த கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெறக்கூடும் என்பது சாத்தியமே
என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்தது.தேதிமுகவிலிருந்து சிலர் விலகிச்சென்ற
போது வைகோ அதீதமாக உணர்ச்சிவசப்பட்டு மிகவும் தரக்குறைவாக பேசினார்.மிக
குறைந்த நேரத்தில் மன்னிப்பு கேட்டார்.இது தன் வாழ்நாளில் செய்த பெரும்
தவறாக கருதுவதாக சொன்னார்.ஒரு அரசியல் தலைவர் தான் செய்த தவறுக்கு
வருந்தலாம் , மன்னிப்பு கேட்கலாம் ஆனால் அழ வேண்டியதில்லை , கதற
வேண்டியதில்லை.வைகோ கிட்டத்தட்ட கதறினார்.நம்மை அவமானப் படுத்தியவர்கள்
மீது நமக்கு வெறுப்பு இருப்பது இயல்பு.சந்தர்ப்பம் அமைந்தால் நாமும்
அவர்கள் பழிவாங்க துடிக்கிறோம்.அவமானம் ஆழமான மன உரையாடல்களை உருவாக்க
வல்லது.வைகோ ஸ்டாலின் ஒரு போதும் முதலமைச்சர் ஆகக்கூடாது என்று
விரும்பினார்.திமுக கட்சி வலுவிழந்து தோல்வி அடைய வேண்டும் என்று
ஆசைப்பட்டார்.ஒரு வகையில் அவரை இயக்கும் சக்தியே அந்த வெறுப்புதான்.அந்த
வெறுப்பில் அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.பின்னர்
வருந்தினார்.செய்தியாளர்களிடம் பேசும் போது நான் பேசியதற்கு ஆழி
செந்தில்நாதன் , ரவிக்குமார் போன்ற அறிவுஜீவிகள் அளித்த கண்டனத்தை
வாசித்தேன் என்றார்.உண்மையில் ஒரு அரசியல்வாதி அறிவுஜீவிகளை
பொருட்படத்துக்கூடாது.அறிவுஜீவிகள் களத்தில் இல்லை.மேலும் வைகோவின்
பிரச்சனை இந்த தேர்தல் மட்டும் இல்லை.இருபது வருட பகை.மிகவும் தாழ்ந்து
மன்னிப்பு கேட்கும் போது மறுபடியும் வெறுப்பு அதிகமாகிறது.ஏனேனில் உண்மையான
பிரயமும் அன்பும் இருக்கும் இடத்தில் மட்டுமே மன்னிப்பு கேட்கும் போது
நீங்கள் அதை அவமானமாக உணர்வதில்லை.
பின்னர் அவர் வேட்பு
மனு தாக்கல் செய்ய செல்கிறார்.திடீரென்று ஏதோ சதி நடக்கிறது ,நான் இந்த
தேர்தலில் நிற்க போவதில்லை என்று சொல்லி தன் கட்சியை சேர்ந்தவரை நிற்க
வைக்கிறார்.அவருக்கு தான் பதவிக்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்று நிறுவ
வேண்டும்.தன் நோக்கம் சமூக நீதியை நிலைநிறுத்துவதுதான் என்று
அறிவுஜீவிகளிடம் சொல்ல வேண்டும்.தன் எண்ணம் பதவியோ பணமோ அல்ல என்று சொல்ல
நினைத்தார்.அவர் திமுகவினரை விமர்சித்து உணர்ச்சிவசப்பட்டு பேசியதற்கும்
இந்த முடிவுக்கும் நிச்சயமாக தொடர்பு உள்ளது.அவர் தன்னை மிகவும் நல்லவராக
காட்டிக் கொள்ள முயல்கிறார்.அதை செய்ய பலதையும் செய்து பரிதாபமாக
தோற்கிறார்.உண்மையில் மிஷ்கின் படங்களில் மைய கதாபாத்திரங்களை பார்த்து ஒரு
உதிறி கதாபாத்திரம் நீ போலீஸ் ,நீ டாக்டர் என்று சொல்லும்.அப்போது தான்
அந்த கதாபாத்திரம் தன்னை உணரும்.அதுபோல யாராவது வைகோவிடம் நீங்கள்
அரசியல்வாதி அரசியல் செய்யுங்கள் என்று சொல்ல வேண்டும்.அவருக்கு திமுக
ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஆசை.சரி.அதற்கான வேலைகளை நிதானமாக வலுவாக செய்ய
வேண்டும்.சரியான நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.அதுவரை
உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும்.அதை வைகோவால் செய்ய முடியவில்லை.அவர்
வேட்பு மனுவை தாக்கல் செய்யாமல் விட்டது அவருடைய கூட்டணிக்கு மிகப்பெரிய
பின்னகர்வை உருவாக்கியிருக்கிறது.தேர்தல் முடிந்தபின் அவருடைய கூட்டணி
தலைவர்களே இதை சொல்வார்கள்.வெறுப்பு ஒரு ஆழமான விசை.சரியாக பயன்படுத்தினால்
நல்ல ஆற்றல் சக்தியாக இருக்க வல்லது.வெறுப்பை கடக்க மூன்று வழிகள்
உண்டு.ஒன்று பழிவாங்குவது.மற்றது முற்றிலுமாக புறக்கணிப்பது ,மூன்றாவது
அவர்களை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் எல்லாவற்றையும் மறந்து நம் மகிழ்ச்சியை
முதன்மையாக்கி வாழ்வது.இந்த மூன்றில வலுவானது மூன்றாவது வழி.
No comments:
Post a Comment