பெருநகரங்களில் வாழும் பெரும்பாலானோர் சிறுநகரங்கள் அல்லது கிராமங்களிலிருந்து பெருநகரங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள்தான்.பெருநகரங்கள் தீமையின் உருவமாக நமக்கு காட்சி அளிக்கிறது.வா.மணிகண்டனின் என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி தொகுப்பில் வரும் பெருநகரம் தீமையின் உருவமாகவே வருகிறது. வெடிகுண்டு வெடிக்கலாம் என்று வந்த செய்தி வெறும் வதந்தி என்று நம்ப மறுக்கும் சத்யன் தான் இன்றிரவு புரட்டிப் படுக்கும் இந்த தலை இந்த உடலில் உள்ளது வெறும் தற்செயல் மட்டுமே என்று நம்புகிறான். காதலர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் மரம் ஒன்று வெட்டப்படுகிறது.பறவைகள் இழந்த குஞ்சுகளையும் கூட்டையும் தேடுகிறது.பின்னர் ஒரு நாள் தன் காதலி தன்னை பிடிக்கும் என்று சொன்னது அனைத்தும் பொருளற்றவை என்று விலகிச் செல்ல அவன் இரவில் வெறுமையில் விழித்துக்கிடக்கிறான்.அவன் அருகில் ஒரு நைலான் கயிறு கிடக்கிறது.
அதே பெருநகரத்தில் காவல்துறையிலோ, பத்திரிக்கையிலோ பணிபுரியும் அவன் இரத்தச் சகதியோடு தோண்டப்பட்ட கண்களை பார்க்கையில் தனக்கு மிகவும் நெருக்கமான ஒருவரின் கடைசி முத்தத்தில் கசிந்த கண்களின் சாயலை பார்க்கிறான்.
உறவுகளின் நிலையற்றதண்மை, பறவைகளும் மரங்களும் அற்ற நகரம்,தற்கொலைகள் தினந்தோறும் நிகழும் ஊரில் முழுக்க நிராகரிப்பட்டவனாக உணரும் ஒருவனின் கதையை கேட்க வரும் சிலர் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள்.அவர்கள் இவனின் துக்கத்தை மதுக்கோப்பையில் பிடித்துக்கொள்வார்கள்.அது அவர்களுக்கு சந்தோஷத்தின் சிறகுகளை தரும்.அவர்கள் கோடையின் கொடூரச் சாலையில் பாடுவதற்கான பாடலின் வரிகளுக்காகவே இவனை தேடி வந்திருக்கிறார்கள்.நிராகரிப்பைப் போர்த்திக்கொண்டவன் என்ற இந்த கவிதையை வாசித்தபோது சில தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள், சமீபத்தில் பார்த்த ஜிகிர்தண்டா திரைப்படம் ஆகியவை இயல்பாகவே நினைவுக்கு வருகின்றன.இன்று பெருநகரத்தில் ஒங்காரமிட்டு அழும் ஒருவன் இறுதியில் கண்டுகொள்வது தன் துக்கத்திற்கும் கதறலுக்கும் எந்த செவியும் மடியப்போவதில்லை என்பதைத்தான்.இறுதியில் அவன் கொதிக்கும் சுடுமணலில் மென்பாதங்கள் வதங்கி போக வழி தெரியாமல் அலையும் பூனையென இறக்கத் துவங்கினான் என்று அந்த கவிதை முடிகிறது.
தொடர்ச்சியாக இந்த தொகுதி முழுவதும் பெருநகரத்தில் நடக்கும் சாலை விபத்துக்கள், தற்கொலைகள், மரணம், கோடைக்காமம் ஆகியவையே மறுபடி மறுபடி வருகின்றன.அதை எதிர்கொள்பவன் அதற்கு எந்த எதிர்வினையும் செய்யாதவனாக இருக்கிறான்.அவனுக்கு வழிபட ஒரு கடவுளோ, நம்ப ஒரு சித்தாந்தமோ, பற்றிக்கொள்ள ஒரு கரமோ, கதை கேட்க ஒரு செவியோ இல்லை.அவன் தனித்து நிராகரிப்பட்டு செய்வதறியாது நிற்கிறான்.
இந்த கவிதைகள் அனைத்தும் இருத்தலிய அபத்தம் பற்றியதோ அல்லது இருத்தலிய துயர் பற்றியதோ இல்லை.மாறாக இவை அனைத்தும் இருத்தலிய அவதி பற்றியதாகவே இருக்கின்றன.பெரும் அவதியில்,அவஸ்தையில் துயரறும் மனிதன் அந்த அவஸ்தையை எதிர்த்து புரியும் செயல்தான் என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி கவிதையில் வருகிறது.அவன் செம்மண்ணைக் குழைத்து ஒரு குருவியைச் செய்துவிட முயற்சிக்கிறான்.அவன் தவிட்டுக்குருவியைத்தான் உருவாக்க முயற்சிக்கிறான்.அவன் இந்த பெருநகரத்தின் இல்லாத வனங்களிலிருந்து அதன் சாம்பல் நிறத்தை எடுக்கிறான், அதன் பாடலுக்கு வாகன இரைச்சலை பயன்படுத்திக்கொள்கிறான்.பறத்தல் என்பதே சாத்தியமற்ற இந்த நகரத்தில் ஒரு தவிட்டுக்குருவியை உருவாக்குவதை குறித்து கேலி செய்யும் கடவுளை செருப்பால் அடித்துவிட்டு அமர்கையில் அவன் குழைக்க விரும்பும் செம்மண்ணில் மழைத்துளி விழுகிறது.காமத்தின் குறியீடாகவே இந்த தொகுப்பில் பல கவிதைகளில் வரும் மழை இந்த கவிதையில் ஒரு ஆசிர்வாதத்தின் பெருங்கருணையின் தாய்மையின் குறியீடாக மாறுகிறது.
பறத்தல் என்பது பறவைகளுக்கு உரியது.பறத்தல் என்பது விடுதலை. எல்லாவற்றாலும் நிராகரிப்பட்ட அவன் இரவின் தனிமையில் தன் அகத்தில் ஒரு தவிட்டுக்குருவியை பறக்க விடுகிறான்.முதல் முறையாக அவன் உலகத்தில் ஒரு குருவி பறக்கிறது. அவன் தவிட்டுக்குருவியாகிறான்.அவன் பறக்கிறான்.அவன் தன் உலகத்தை சிருஷ்டித்து கொள்ளும் கடவுளும் ஆகிறான்.
என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி - வா.மணிகண்டன்.காலச்சுவடு பதிப்பகம்.
No comments:
Post a Comment