தமிழ் நவீன கவிதைகளில் பொதுவாக இரு தரிசனங்களை பார்க்க முடிகிறது.ஒன்று
இயற்கையிலிருந்து விலகி தனித்திருத்தல்.மற்றொன்று இயற்கையோடு இணைதல்.இயற்கையோடு இணைதல்,
அல்லது நம்மை இயற்கையோடு அடையாளம் கண்டுகொள்ளுதல் போன்ற தரிசனங்களை நவீன தமிழ் கவிதைகளில்
தேவதேவனிடமும் பிரமிளிடமும் பார்க்கமுடியும்.இயற்கையிலிருந்து விலகி தனித்திருத்தல்
என்ற ரீதியிலான கவிதைகள் தமிழில் நிறைய இருக்கிறது.அதில் முக்கியமானவை நகுலனுடையது.
பிரமிள், தேவதேவன் ஆகியோர் முன்வைத்த தரிசனம் ஒரு அத்வைத தரிசனம்.நகுலன் முன்வைத்த
கவிதைகளில் நாம் காணுவது அபத்த தரிசனம்.அதாவது அபத்தமாக வாழ்வை நோக்குவதன் மூலமாக நாம்
கண்டடையும் தரிசனம்.இரண்டுமே முற்றிலும் வேறானவை.உதாரணமாக பிரமிளின் ஆலமரம் குறித்த
இந்த கவிதையை பார்க்கலாம்.
திரிசங்கு
தளராத ஏழுதூண்
வேரூன்றி
அணுவிதையில் விளைந்த
அடையாளம் தெரியாமல்
விஸ்வரூபம்
விரிந்து
பச்சை வெள்ளிக்
கண்களாயிரம்
அந்தரத்தில்
இறங்கும் ஒளியை
எகிறி நோக்க
தபஸேற்றது
ஆல்.
ஒவ்வொரு இலையிலும்
தெறித்தது சுவர்க்கம்.
அதே ஆலமரத்தை குளம்
போன்ற சூரல் நாற்காலியில் அமர்ந்தவாறு பார்க்கும் நகுலனின் காத்திருந்தேன் கவிதை இது.
…கண்ணெதிரே
கானல் கொதிக்கப்
பார்க்கும் தென்னை
மரமனைத்தும்
பதுமையெனத் தாங்கி
நிற்க,
ஆலின் ஆயிரமாயிரம்
சிறு இலைகள் பதறி
மின்ன
வானம் நீலமாக விரிய
நான் தனித்திருந்தேன்.
இந்த இரண்டு கவிதைகளிலும்
ஆலமரமும் அதன் சிறு இலைகளும் வருகிறது.இரண்டிலும் பகல் பொழுது.ஒன்றில் அது திரிசங்கு
சொர்க்கமாக மாறுகிறது.மற்றதில் அது வெறும் நிகழ்வாக நிற்க கவிதைசொல்லி தனித்திருக்கிறான்.பிரமிளின்
கவிதையில் கவிதைசொல்லி ஒவ்வொரு இலையிலும் தெறித்தது சொர்க்கம் என்னும் போது அதனோடு
அவனும் இணைகிறான்.அவன் தன்னை தன் தனிமையை இழக்கிறான்.நானே அது என்கிறான்.நகுலன் கவிதையில்
அதே கவிதைசொல்லி வெயில் பட்டு இலைகள் பதறி மின்னுவதை பார்க்கிறான்.அவனுக்கு அது திரிசங்கு
சொர்க்கமாக காட்சி அளிக்கவில்லை.ஒரு எளிய நிகழ்வு.அவ்வளவே.அவன் தனித்து காத்திருக்கிறான்.
நவீன தமிழ் கவிதைகளில்
பிரமிளின் , தேவதேவனின் இந்த தரிசன போக்கை தனித்த ஒன்றாகவே பார்க்கலாம்.மற்றொரு தளத்தில்
எதன் மீதும் பற்றற்று நம்பிக்கையிழந்து வாழ ஒரு வழி , சாக ஒரு மார்க்கம் சொல்ல வல்ல
சித்தரைக் காட்டாயோ (காத்த பானை – நகுலன்) என்று தனித்து தவிக்கும் ஒரு மனமும் நவீன
தமிழ் கவிதைகளில் பார்க்கலாம்.ஒருவகையில் நகுலனும் பிரமிளும் இருவேறு தரிசன போக்குகளின்
இருவேறு எல்லைகள்.அவை நவீன தமிழ் கவிதைகளின் இரு எல்லைகளும் கூட.இந்த முன்னோடிகளின்
கவிதைகளையும் அதன் தரிசனங்களையும் செரித்து நாளைய தமிழ் கவிஞன் அதன் எல்லைகளை விஸ்தரிப்பான்.
(இன்மை இணைய இதழில் எழுதிய ஆசிரியர் பக்க கட்டுரை)
No comments:
Post a Comment