வெங்கட்
சாமிநாதன் எழுதிய அக்ரஹாரத்தில் கழுதை திரைக்கதையில் பேராசிரியர்
சென்னையில் தன் வீட்டில் கழுதையை பராமரிக்க முடியாததால் அதை சென்னையிலிருந்து தன் கிராமத்திற்கு
ரயிலில் கொண்டுசெல்வதாக ஒரு காட்சி இருக்கும்.அதே ஜான் ஆப்ரகாம் இயக்கிய அக்ரஹாரத்தில்
கழுதை திரைப்படத்தில் அது பேருந்தாக மாறியிருக்கும்.மாற்று சினிமாவின் முக்கிய பிரச்சனை
திரைக்கதை திரைப்படமாக மாறும் போது நிறைய நடைமுறை சிக்கல்களை அது சந்திக்க நேர்கிறது
என்பதுதான்.புதுமைப்பித்தன் எழுதிய ஒரு சிறுகதையின் பெயர் நிசமும் நிழலும்.ஒரு எழுத்தாளர்
பதிப்பாளரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார் என்பதையும் உண்மையில்
எவ்வாறு நடந்து கொள்ள முடிகிறது என்பதையும் சொல்லும் கதை.மாற்று சினிமா முயற்சிகளும் அப்படியானதுதான்.ஒரிரு வருடங்களுக்கு முன் கிரிஷ்
காசரவள்ளி இயக்கிய கூர்மாவதாரம் படத்தை பார்த்தேன்.குறைந்த செலவில் எடுக்க வேண்டிய
அவஸ்தை இயக்குனருக்கு இருந்திருக்கிறது என்பதை நாம் அதில் எளிதாக உணரமுடியும்.
வெகுஜன
சினிமாவாக இருந்தாலும் மாற்று சினிமாவாக இருந்தாலும் இரண்டிற்கும் கிட்டத்தட்ட அதே
தொழில்நுட்ப கலைஞர்கள் தேவைப்படுகிறார்கள்.நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் , படப்படிப்பு
தளம், உணவு , ஆடை வடிவமைப்பு, போக்குவரத்து என்ற அனைத்து தளங்களிலும் வேலை ஒரே போல
இருக்கிறது.இந்த தொழில்நுட்ப கலைஞர்கள் , துணை நடிகர்கள் எல்லோரும் சங்கங்களோடு இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.ஆக
மாற்று சினிமா உருவாக்கத்திலும் அவர்களிடமிருந்து வேலையை பெற அதே ஊதியத்தைத்தான் ஒருவர்
தர வேண்டும்.குறும்படம் , ஆவணப்படங்கள் போன்றவற்றில் நமக்கு தெரிந்தவர்கள் வீட்டில்
, அலுவலகத்தில் என்று எடுத்துவிடலாம்.ஆனால் முழு நீளத் திரைப்படத்தில் அத்தகைய விஷயங்கள்
சாத்தியமில்லை.அதிகப்பட்சம் காமிரா செலவு , படத்தொகுப்பு செலவு, மாற்று சினிமாவில்
ஆர்வம் கொண்ட சில நடிகர்கள் கிடைத்தால் நடிகர்கள் செலவு ஆகியவற்றை ஒரளவு குறைக்கலாம்.மற்றபடி
ஒரு நாளின் Production cost குறைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.அதாவது இயங்கிவரும்
மைய சினிமாத்துறையின் மனிதர்களின் உதவியில்லாமல் வெளியிலிருந்து ஒரு முழு நீளத்திரைப்படத்தை
உருவாக்குவது இன்றைய காலத்திலும் அவ்வளவு எளிதல்ல.மதுபானக்கடை படம் எடுக்கப்பட்டதும்
கூட மைய சினிமாத்துறையின் தொழில்நுட்ப கலைஞர்களின் துணையோடுதான்.
இன்றும்
திரைப்படத்திற்கு செல்வதுதான் பெரும்பாலும் முக்கிய கேளிக்கையாக இருக்கிறது.மாற்று
திரைப்படங்கள் என்று அடையாளப்படுத்தப்படும் திரைப்படங்களையும் திரையிட திரையரங்குகள்
தேவைப்படுகின்றன.வெகுஜன சினிமா திரையிடப்படும் திரையரங்குகளில் இவற்றை திரையிட முடியாது.திரையரங்குகள்
கிடைக்காது.அப்படியென்றால் மாவட்டம் தோறும் பிரத்யேகமாக இத்தகைய மாற்று திரைப்படங்களை
திரையிடுவதற்கான திரையரங்குகளை உருவாக்க வேண்டியது முக்கிய விஷயம் ஆகிறது.நூறு பேர்
அமரக்கூடிய வகையில் உருவாக்கப்படும் திரையரங்குகள் ஒரு சர்வரோடு இணைக்கப்பட்டு குறும்படங்கள்
, ஆவணப்படங்கள் , முழூ நீள திரைப்படங்கள் ஆகியவை திரையிடப்படலாம்.பார்வையாளர்களிடம்
கட்டணம் வசூலிக்கப்படலாம்.அந்த வருமானத்தில் அரங்குகள் பராமரிக்கப்படலாம்.ஆனால் இது
எந்தளவுக்கு சாத்தியம்.இன்று இத்தகைய திரைப்படங்களை பார்க்க யார் விரும்புகிறார்கள்.அப்படியே
விரும்பினாலும் இணையத்தில் எளிதாக பார்த்துவிடலாம்.
No comments:
Post a Comment