லோகாயதம்



எல்லா தத்துவ போக்குகளையும் கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் என்று பிரித்துவிடலாம் என்றால் இந்திய தத்துவத்திலிருந்த பொருள்முதல்வாதத்தை பற்றிய ஏழு ஆய்வு கட்டுரைகளின் தொகுப்பு Musings in Ideology என்று சொல்லலாம். மார்க்ஸிய சிந்தனையாளர் தேவிபிரசாத் சட்டோபத்யாயவின் கட்டுரைகளின் தொகுப்பு இவை. தொண்ணூற்றி ஒன்றுக்கு முன்னிருந்த கனவு இன்று இடதுசாரிகளுக்கு இருக்க வாய்ப்பில்லை. அந்த கனவின் சில கீற்றுகளையும் நாம் இந்த புத்தகத்தில் பார்க்கலாம்.

மேற்குலகின் எல்லா வகை விஞ்ஞானங்களின் முதல் சிந்தனையாளர் என்று தேல்ஸ் குறிப்பிடபடுகிறார். ஆனால் அவரைக் காட்டிலும் அசலான பொருள்முதல்வாத சிந்தனையாளர் உத்தலக்க அருணி. அருணியின் சிந்தனைகளை நாம் சந்தோக்யா உபநிடதத்தில் பார்க்கலாம். நாம் உட்கொள்ளும் உணவின் நுட்பமான வடிவமே நமது அறிவாகிறது. நீரின் நுட்பமான வடிவமே பிராணம்.வெப்பத்தின் நுட்பமான வடிவமே பேச்சு.இறுதியில் மரணத்தின் போது உணவு நீராக மாறி, நீர் வெப்பமாக மாறி, வெப்பம் பிரதான இருப்பில் கலந்துவிடுகிறது.ஆக நமது துவக்கம் பிரதான இருப்பிலிருந்து தான் - சத் (இருப்பிலிருந்து)தான் , அ-சத்திலிருந்து என்று சிலர் சொல்கிறார்கள் , ஆனால் அ-சத்திலிருந்து எப்படி சத் உருவாக முடியும். ஆக எப்போதும் இருப்பது சத்.ஒன்று இரண்டற்றது. அதுவே அது என்கிறார் அருணி. இங்கே தன்னுடைய கருத்துகளுக்கு மூலமாக அறிவுவாதத்தை மட்டுமே முன்வைக்காமல் அதற்கு சில உதாரணங்களை சொல்கிறார். தன் மகனை தண்ணீரில் உப்பை கரைக்க சொல்கிறார். அப்படி கரைத்த பின் அதில் எப்படி உப்பை கண்டுகொள்ள முடியவில்லையோ , ஆனால் அந்த தண்ணீரின் எல்லா தளங்களிலும் எப்படி உப்பு கலந்திருக்கிறதோ அது போல இந்த அகிலம் முழுவதும் சத்(இருப்பு) தால் ஆனது. ஒன்று இரண்டற்றது.அதுவே அது என்று தன்னுடைய விளக்கங்களை ஆய்வுகள் மூலம் நிருபிக்கிறார். அவர் இருந்திருக்கக்கூடிய காலம் கி.மு.ஏழாம் நூற்றாண்டாக இருக்கலாம்.இப்படியாக எப்படி அருணி முதல் பொருள்முதல்வாதி என்று தன் ஆய்வுகளை முன்வைக்கிறார் சட்டோபத்யாய .

வேத காலத்தில் பலிபீடங்களை நிறுவுவதற்கு செங்கல்களை உருவாக்குவதற்கான தொழில்நுட்பம் சுல்வா வரைகணித நூலில் இருப்பது பற்றி தன் ஆய்வுகளை முன்வைக்கிறார். சிந்து சமவெளி காலத்தை கி.மு. 1750 எனக் கொண்டால் வேத காலம் 350 கி.மு என்று கணக்கிடப்படுகிறது. இதற்கு இடையிலான காலத்தை இருண்ட காலம் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள்.வேத காலத்தில் சுல்வா வரைகணிதம் புதிய அறிவாக உருவாகியிருப்பதற்கான ஆதாரங்கள் இல்லாத நிலையில் இருபதாம் நூற்றாண்டின் மத்திம காலங்களில் செய்யப்பட்ட அகழ்வராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட ஹரப்பா நாகரிகத்தின் எச்சங்களை வைத்து பார்க்கும் போது அந்த நாகரிகத்தின் தொடர்ச்சியாகத்தான் இந்த சுல்வா வரைகணித நூல் உருவாகியிருப்பதற்கான சாத்தியங்கள் பெரும் அளவு உண்டு என்று நிறுவுகிறார்.

கி.பி.ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த வராஹமீஹிரா என்ற வானவியல் விஞ்ஞானி சூரிய கிரகணம் வருவதற்கான காரணம் சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் மத்தியில் வருவதுதான் என்றும் சந்திர கிரகணத்துக்கான காரணம் பூமியின் நிழல் சந்திரன் மேல் விழுவது தான் என்றும் எழுதியிருப்பதை முகம்மது கஜினியுடன் பெர்சியாவிலிருந்த வந்த அல்-பிருணி என்ற அறிஞர் கண்டுகொள்கிறார். அதே சமயத்தில் பிரம்மகுப்தா போன்ற அறிஞர்கள் ராகு கவ்வுவதால் உருவாவதுதான் கிரகணம் என்று தனது பிரம்மசித்தாந்தா என்ற நூலில் எழுதியிருப்பதையும் எடுத்துக்காட்டுகிறார். இதை ஒரு குறையாக அல்லாமல் அந்த காலகட்டத்தின் சமூகத்தை வரலாற்றில் வைத்து பார்க்கையில் சாக்ரட்டீஸூக்கு ஏற்பட்ட நெருக்கடி போல பிரம்மகுப்தாவுக்கும் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார் அல்-பிருணி. ஆனால் சட்டோபத்யாயா தெகார்தேவுடன் பிரம்மகுப்தாவை ஒப்பிடுகிறார். தன்னுடைய La Monde (இந்த உலகம்) என்ற நூலை எழுதி முடித்து பிரசுரத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த நிலையில் கலிலீயோவிற்கு ஏற்பட்ட நெருக்கடியை பற்றி தெரிந்துகொண்டபின் அந்த திட்டத்தை கைவிடுகிறார் தெகார்தே.அவர் இறந்த பின் 1644ல்தான் அந்த புத்தகம் வெளிவந்தது.

அதே போல பண்டைய இந்தியாவில் முற்றிலும் சமயச் சார்பற்ற விஞ்ஞான பூர்வமான துறை என்றால் அது ஆயுர்வேதம் தான்.அதிலிருந்த தாவரவியல் , விலங்கியல் , பெளதீகம், வேதயியல் போன்ற துறைகள் கிளைந்தெழுந்தன என்கிறார் சட்டோபத்யாய.சராக்கா சம்ஹிதாவும் அதன் அறுவைசிகிச்சையின் நூலாக இருக்கும் சுஸ்ரூதா சம்ஹிதாவும்
முற்றிலும் விஞ்ஞான புத்தகங்களாக விளங்குகின்றன. இவற்றின் காலம் அநேகமாக கி.மு. ஆறாம் நூற்றாண்டாக கொள்ளலாம்.ஒருவரின் பிறப்பு சார் தாழ்வும் , அவரது கஷ்டங்களும் , அவரின் வியாதிகளும் அவருடைய கர்மத்தால் விளைபவை தான் என்ற கருத்து தீவிரமாக இருந்த காலத்தில் ஆயுர்வேதம் மருத்துவத்தின் முக்கிய காரணிகளாக நான்கை கருதுகிறது.

1. மருத்துவர்
2. மருத்துவத்திற்கு தேவைப்படும் கருவிகள்
3. மருத்துவ துணையாளன்
4. நோயாளி

இங்கே கர்மாவை ஒரு காரணியாக சேர்க்கவில்லை.இயற்கையில் உடலில் சமநிலை நிலவுகிறது. அந்த சமநிலை குலையும் போது நோய் ஏற்படுகிறது.அதை மறுபடியும் சமநிலை நோக்கிய மறுசீரமைப்பே மருத்துவம். இயற்கையில் எந்த பொருளும் உபயோகமற்றதாக இல்லை என்று கருதுகிறது ஆயுர்வேதம்.எந்த அளவு இயற்கையின் நியதிகளை புரிந்துகொள்கிறோமா அந்த அளவு நோய்கள் குறித்தும் புரிந்து கொள்ளலாம். இயற்கை என்பது பஞ்சபூதங்களால் ஆனது. அதுபோலவே மனித உடலும் பஞ்சபூதங்களால் ஆனது. மனித உடலுக்கும் இயற்கைக்கும் இடையே தொடர்ந்து பாயம் நிகழ்நதவண்ணம் இருக்கிறது. இதில் பொருள் சரியான வகையில் உடலால் பெறப்பட்டால் உடல் நன்றாக இருக்கிறது. தவறான விகிதத்தில் பொருள் உடலால் பெறப்படும் போது சமநிலை குலைகிறது. அதுவே நோய் எனப்படுகிறது. இந்த உடலுக்கும் இயற்கைக்குமான தொடர்ந்த பாயத்தில் உடல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் நாம் உடல் ஒன்று போலவே இருக்கிறது என்பதை எவ்வாறு நினைக்கிறோம் என்றால் பழையதுக்கும் புதியதுக்குமான ஒப்புமையால் தான்.இந்த மாறிக்கொண்டே இருக்கும் உடலில் ஒரு கட்டத்தில் பொருட்கள் தங்களின் பிரதான நிலைக்கு திரும்புகின்றன.அதையே நாம் மரணம் என்கிறோம். அதை இயற்கைக்கு திரும்புதல் என்றும் சொல்லலாம் என்கிறது ஆயுர்வேதம்.சுஸ்ரூதா சம்ஹிதாவில் கிட்டத்தட்ட ஆயிரத்திக்கு நிகரான தாவரங்கள் பற்றியும் சராக்கா சம்ஹிதாவில் விலங்குகளின் உடலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்கிற நோக்கில் தொள்ளாயிர வகையான தாவரங்கள் பற்றிய ஆய்வு இருக்கிறது. இதில் ஒரு இயற்கை பண்டத்தில் உள்ள பொருள் மனித உடலின் பொருள் பொதிவில் ஏன் ஒரு வகையான தாக்கத்தை செலுத்துகிறது என்றால் ஆயுர்வேத்த்தில் அதற்கு ஒரே பதில் தான் உண்டு. அது இயற்கையின் நியதி என்பதாகும்.


ஆயுர்வேதத்தை பயிற்சி செய்த மருத்துவர்களை பற்றி எதிர்மறையான கருத்துகளே அக்காலத்து சட்ட நூல்களில் இருந்திருக்கிறது என்கிறார் சட்டோபத்யாய. மருத்துவத்தை பயிற்சி செய்தவர்கள் அசுத்தமானவர்கள் என்று சட்டநூல்கள் கூறுகின்றன.பிராமணன் மருத்துவம் பயிலக்கூடாது. பயின்றால் அவன் அசுத்தம் ஆகி தியாகத்திக்கு தகுதி இல்லாதவனாக ஆகிறான். ஏன் மருத்துவத்தை பயிற்சி செய்தவர்கள் அசுத்தமானவர்கள் என்று கருதப்பட்டார்கள் என்றால் மருத்துவ பயிற்சியில் உயர்குடிகள் அற்ற மக்களோடு கலக்க வேண்டியிருக்கும் என்று யஜூர்வேதம் கூறுகிறது. ஆயுர்வேதம் ஜனநாயக தன்மை கொண்டதாக விளங்குகையில் அதன் மருத்துவர்கள் எப்படி அசுத்தமானவர்களாக ஆகிறார்கள் என்கிற போது அதற்கான ஒரே பதில் ஆயுர்வேதம் வரணாசிரம சமூகத்திற்கு ஒத்ததாக இல்லை என்பதே. அது நோயிற்கான காரணம் கர்மா என்று சொல்லவில்லை.மாறாக பஞ்சபூதங்களாலான பொருள் பொதிவில் ஏற்படும் சமநிலை குலைவு என்று தான் சொன்னது. ஆக அது சட்டத்தை உருவாக்குபவர்களுக்கு உவப்பானதாக இல்லை.இந்த காரணத்தால் மிகவும் நம்பிக்கையுடன் தன் ஆரம்ப காலங்களில் தொடங்கிய ஆயுர்வேதம் காலப்போக்கில் சமய அதிகாரிகளின் சித்தாந்த காரணங்களுக்காக கிட்டத்தட்ட அழித்தேவிட்டார்கள் என்றும் அதனால் இயற்கையை அறிந்து கொள்ளக்கூடிய  ஒரு விஞ்ஞான முறையின் வளர்ச்சி தடை செய்யப்பட்டது என்றும் அதன் பாதை மாற்றப்பட்டுவிட்டது என்றும் ஆதங்கப்படுகிறார் சட்டோபத்யாய.

இன்றைய இந்தியாவிற்கான சித்தாந்த போராட்டம் பற்றி பேசுகையில் அது இரண்டு தளங்களில் நிகழ வேண்டும் என்கிறார். முதலாவது பொதுவானது.இரண்டாவது இந்திய சூழலுக்கு முக்கியமாக தேவைப்படுவது. பொதுவானது எல்லோருக்கும் மார்க்ஸிய சிந்தனை குறித்த அடிப்படைகள் பரப்புவது.இதுவே சோஷியலிச சமூகத்திற்கான வழி.
மார்க்ஸியத்திற்கு நிகரானது என்றோ சமமானது என்றோ மற்றொரு தத்துவத்தை முன்வைப்பது ஆபத்தானது என்கிறார்.அதே நேரத்தில் இந்தியா போன்ற தொன்மையான சமூகத்திற்கு தனிப்பட்ட முறையில் செய்யப்பட வேண்டிய காரியங்களும் இருக்கின்றன.இந்தியாவில் பழங்காலத்திலிருந்து வரும் தத்துவத்தின் சாரம் அதன் எழுத படிக்க தெரியாத மக்களும் அறிந்ததே.மேற்குலகத்தில் தத்துவ பிரச்சனை தத்துவவாதிகளுக்குள் நடந்த ஒரு உரையாடல்.ஆனால் இந்தியாவில் புராணங்களை கூறும் உபசாகர்கள் மூலம் தத்துவம் மக்களுக்கு சொல்லப்பட்டது. அதுவே அக்காலத்தின் ஊடகம். அத்தகைய கருத்துகள் அவர்கள் ஆழ்மனத்தில் அழுத்தமாக உள்ளது. அவர்களின் நடத்தையை அந்த எண்ணங்கள் தீர்மானிக்கிறது. ஆக நாம் இந்திய தத்துவத்தை எளிதல் புறக்கணித்துவிடமுடியாது.அதே நேரத்தில் இந்திய தத்துவத்தில் உள்ள எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள கூடாது. இன்றைய தேவைக்கு இந்திய தத்துவத்தில் எவை உயிரோடு இருக்கின்றன எவை இறந்து விட்டன என்று பிரிக்க வேண்டும். எதை வைத்து அதை முடிவு செய்ய வேண்டும் என்கிற போது கருத்துமுதல்வாத தளத்தில் பேசப்பட்டவையே இறந்து விட்டது என ஒதுக்கி பொருள்முதல்வாத தளத்தில் இயங்கிய வானயில் விஞ்ஞானம் , ஆயுர்வேதம் , கணிதம் போன்ற அறிவுவாத, சமயச் சார்பற்ற, சிந்தனைகள் குறித்து பேச வேண்டும். அந்த சிந்தனைகள் வரலாற்றில் வைத்து அவை எப்படி அந்த அனுபூதவியல் கருத்துகளுக்கும் ,வரணாசிரம கருத்துகளுக்கும் எதிராக போராடியது என்று வலியுறுத்த வேண்டும். இப்படி பேசுகையில் மக்களுக்கு அவர்களுக்கு தெரிந்த சொற்களை பயண்படுத்தி நாம் பேச முடியும்.மேலும் மார்க்ஸியம் முற்றிலும் அந்நியமான சிந்தனை இல்லை என்பதையும் நிறுவமுடியும் என முடிக்கிறார் சட்டோபத்யாயா.

இந்த மிக சிறிய நூலில் அடங்கியுள்ள கருத்துகளை பார்க்கும் போது பிரம்மிப்பாக இருக்கிறது. சட்டோபத்யாய தமிழில் நன்கு அறிமுகவானவர் என தெரிகிறது.அவருடைய புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் கிடைக்கின்றன.அவருக்குள் இருக்கும் மார்க்ஸிய சமூகத்தின் கனவு அநேகமாக எல்லா கட்டுரைகளிலும் பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட கட்டுரைகள் எழுதுவதற்கு எப்படிப்பட்ட உழைப்பு தேவைப்படும் என்று எண்ணிப்பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நூல்.

Musings in Ideology - Debiprasad Chattopadhyaya - Navakarnataka Publications , Bangalore.


இடைமை



தி.ஜானகிராமன் எழுதிய மோகமுள் நாவல் புகழ்பெற்றது. தமிழ் இலக்கியத்தோடு எளிய அறிமுகம் கொண்டவர்கள்கூட வாசித்திருக்காவிட்டாலும் அறிந்த கதை மோகமுள். ஆக கதையை விவரிக்க தேவையில்லை.இந்த நாவலில் வரும் வெங்கட்ராமன் என்ற கதாபாத்திரம் எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் அவர்களை முன்வைத்து எழுதியதா என்று தோன்றுகிறது.


பாவுவின் பக்கத்து வீட்டில் ஒரு கிழவருக்கு இரண்டாம் தாரமாக வரும் தங்கம்மாள் தான் பாபு என்ற கதாபாத்திரத்தின் கீழ்மையின் உச்சம்.ரங்கண்ணா மேண்மையின் உச்சம்.நமக்கு இருக்கும் அதே பலஹினம் கொண்ட வேறு ஒரு மனிதரை போல நாம் இந்த புவியில் வேறு யாரையும் வெறுப்பதில்லை. பாபு தங்கம்மாளை முழுக்க வெறுக்கிறான். குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்கோல்நிகோவ் கதாபாத்திரத்தின் கீழ்மையின் உச்சம் ஸ்விட்ரிகைலோவ். அதே போலத்தான் பாபுவும் தங்கம்மாளும். தங்கம்மாள் கொள்ளும் அதே உரிமையைத்தான் பாபு யமுனாவிடம் கொள்கிறான். இதில் என்ன தவறு இருக்கிறது.எனக்கு இது தவறாகவே படவில்லையே என்று எண்ணுகிறான் பாபு.அக்டோபர் இரண்டு அன்று காந்தியின் பாடல்கள் ஒலித்து கொண்டிருக்கும்போது கூட பாபு யமுனாவிடம் இப்போது கூட எனக்கு இது தவறாக படவில்லை என்கிறான். அதே எண்ணத்தை பாபு தங்கம்மாளிடம் மூர்க்கமாக நிராகரிக்கும் போது அவள் தற்கொலை செய்து கொள்கிறான்.முதல் முறையாக தன்னுடைய எண்ணத்தை யமுனாவிடம் சொல்லும்போது யமுனா வேண்டாம் பாபு வேண்டாம் என்று கெஞ்சத்தான் செய்கிறாள்.மூர்க்கம் கொள்ளவில்லை.கொண்டிருந்தால் தங்கம்மாளின் கதியே பாபுவுக்கும் நடந்திருக்கக்கூடும். ஆனால் தங்கம்மாளுக்கு இல்லாத ஒன்று பாபுவுக்கு இருக்கிறது.அது சங்கீதமும் ரங்கண்ணாவும்.

ரங்கண்ணாவிடம் ஆறேழு வருடங்கள் சங்கீதம் கற்றுக்கொள்ளும் பாபு ரங்கண்ணா போலவே கச்சேரி செய்ய வேண்டும் என்று ஆர்வம் காட்டவில்லை. ரங்கண்ணா அவர் இறப்பதற்கு முன் அவனிடம் அப்படி கச்சேரி செய்ய வேண்டாம் என்று சொல்வதை கணக்கில் கொண்டாலும் அவனும் அதில் உடன்படவே செய்கிறான்.இந்த நாவலில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் பாலூர் ராமு. கிட்டத்தட்ட முற்றிலும் லெளகீகமான மனிதர் என்ற கதியில் அறிமுகம் ஆகும் அவர் போகப்போக முற்றிலும் வேறு விதமாக தெரிகிறார். பாபு பாடுவதை கேட்டு அடிக்கடி அவன் அறைக்கு வருகிறார்.பேசுகிறார். உரையாடுகிறார். ராமு தான் பாபு ஆகிவிட முடியாதா என்று தான் கஷ்டப்படுகிறார். ஒரு இடத்தில் அழுகிறார். கச்சேரி கச்சேரி என்று அவர் இருக்கும் போதிலும் பாபு வடநாட்டுக்கு சென்று குரலை இன்னும் மேம்படுத்திக்கொள்ள எண்ணுவதை தெரிந்துகொள்ளும் போது ராமு தனக்கு அது போல சாத்தியப்பட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றே ஏங்குகிறார்.இதில் சங்கீதத்தில் ஞானம் முக்கியமா குரல் முக்கியமா என்ற விவாதம் ராமுவுக்கும் பாபுவுக்கும் தொடர்ந்து நிகழ்கிறது. இசை அறிந்தவர்கள் இதை பற்றி எழுதலாம்.எழுதியிருக்கக்கூடும்.

பாபுவின் பெரியப்பா பிள்ளையாக வரும் சங்கு மிகப்பெரிய ஆளுமையாக வரக்கூடும் என்று ராஜமும் பாபுவும் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இறுதியில் ஆஸ்பத்திரிக்கு கூட பணம் இல்லாமல் பாபுவிற்கு எழுதுகிறான் சங்கு.விளையாட்டும் துடுக்கத்தனமும் நல்ல கணித அறிவும் உள்ள சங்கு ஏன் இப்படி ஆகிவிடுகிறான்.அதுவும் பாபு ஆகியிருக்கக்கூடிய ஒரு உச்சம் தான்.

ஒரு நீளமான கோடு வரைந்து கொண்டு அதன் நடுவில் பாபுவை வைத்தால் அதன் வலதுபக்கத்தில் இடது வலதாக பார்க்கும் போது அதில் சுந்தரம், நண்பன் ராஜம், தந்தை வைத்தி , வெங்கட்ராமன்,  சித்தர் ராஜூ , மங்கள்வாடியிலிருந்து வந்து பாடும் பாடகர்கள், உச்சமாக அவனுடைய குரு ரங்கண்ணா வருகிறார்கள். இடது பக்கத்தில் வலது இடமாக பார்த்தால் அதில் பாலூர் ராமு முதலில் வருகிறார். ஆம்.லெளகீக தளத்தில் தன் திறமையை கொண்டு அவன் அடைய சாத்தியப்படக்கூடிய உச்சத்தையும் ஆனால் அதில் உள்ள வெறுமையையும் அவன் பாலூர் ராமுவிடமே தெரிந்து கொள்கிறான். உண்மையில் முதல்முறையாக யமுனா பாபுவை பார்க்க வரும் அதே ஞாயிற்றுக்கிழமை அன்று வந்து அவனை பாடச்சொல்லி விக்கித்து போய் நின்று பாராட்டி செல்லும்போதே பாபு தன் இடத்தை உணர்கிறான். அடுத்த படியாக சங்கு.தங்கம்மாளை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்ட கிழவர். உச்சமாக தங்கம்மாள். இதில் இருபக்கத்திலும் வைக்க முடியாத முக்கியமான கதாபாத்திரம் யமுனா. பாபுவை போல அல்லாமல் யமுனா மிகவும் அழுத்தமானவள். ஆழமானவள். அவள் ஏழேட்டு வருடங்கள் கழித்து பாபுவை பார்க்க சென்னை வரும் போது அவளிடம் இருக்கும் ஒரே பிரச்சனை பசி. அது இல்லாவிட்டால் அவள் பாபுவை சந்தித்திருக்கவே மாட்டாள். அவள் அவனுடைய ஆசையை ஏற்றுக்கொள்ளும் போது அதில் அவளுக்கு மகிழ்ச்சி இல்லை. வருத்தம் இல்லை. ஒரு உணர்ச்சியும் இல்லை என்று கூட சொல்லலாம். அவளை பாபு உயர்வாகவே எண்ணுகிறான். அவள் பெரிய அளவில் இதில் குற்றவுணர்வு கூட கொள்ளவில்லை. இருக்கும் சிறு நெருடல் கூட காஞ்சிபுரத்தில் அவளுக்கு இல்லாமல் போகிறது.

இந்த மேலே வரைந்த கோட்டை பார்க்கும் போது இந்த பிரிவில் உள்ள முக்கிய அம்சம் லெளகீகம். அப்படியென்றால் சுந்தரம் ஏன் வலது பக்கம் இருக்கிறான். ஏனேனில் லெளகீகத்தின் அவஸ்தையயை , உழைப்பை அதன் தரிசனத்தை அவன் சுந்திரத்திடமிருந்தே பெறுகிறான். அவன் மேல் கோபம் இல்லாமல் இல்லை.வருத்தம் இல்லாமல் இல்லை.ஆனால் லெளகீகத்தின் நியாயத்தை அவன் சுந்திரத்திடமிருந்து தான் கற்றுக்கொள்கிறான். அதை அவனுக்கு அவன் தந்தையோ , ராஜமோ, ரங்கண்ணாவோ யாரும் சொல்வதேயில்லை.லெளகீகத்திலிருந்து பிரிந்து ஏதோ ஒரு வகையில் அவன் வரையில் முன்னோக்கி சென்றவர்கள் ஒரு உச்சம் எனில் லெளகீத்திலே தன்னை முழுதும் செலுத்திக்கொண்ட மற்றவர்கள் இன்னொரு உச்சம். இந்த கீழ்மைக்கும் மேண்மைக்குமான ஊசலாட்டமே பாபு.

அப்படியென்றால் லெளகீக தளத்திலேயே நாம் வைத்திருக்கும் இந்த உடல்பசி. அதை பாபு எப்படி எதிர்கொள்கிறான்.யமுனா அவனிடம் இதற்குத்தானா , இதற்குத்தான் என்று சொல்லிச்சென்ற பின் அதைப்பற்றி யோசிக்கும் போது அவன் அடையும் தெளிவு மிக முக்கியம்.'உடலைப் படைத்தது உதறி எறிவதற்காகவா? அதுவும் என்னில் ஒரு பகுதிதான். அதுவே எல்லாம் இல்லாமல் இருக்கலாம்.அதுவும் ஒரு பகுதிதான். இரட்டைச் சக்கரத்தில் ஒன்று.' என்று தெளிவு கொள்கிறான். இங்குதான் அவன் உண்மையில் பாலூர் ராமு, தந்தை வைத்தி, சித்தர் ராஜூ , குரு ரங்கண்ணா எல்லோரும் சொல்லும் ஒழுக்கத்தை எதிர்கொள்கிறான்.தைரியமாக எதிர்கொள்கிறான். மீறுகிறான். ராமு ஒரு முறை பிரம்மச்சரியம் குறித்து பேசும் போது இந்த உடல் என்ன பாபம் செய்தது? என்று கேட்டு கொள்கிறான். அங்கே அவன் தங்கம்மாளை சந்திக்கிறான்.இப்போது அவன் மிக தெளிவு அடைந்தவனாக மங்கள்வாடி செல்கிறான்.ராமுவிடம் யமுனாவை வீட்டுக்காரி என்று அறிமுகம் செய்கிறான். உடலை பொருட்படுத்தலாம் என்ற தரிசனத்தை பாபு அடைகிறான்.

தங்கம்மாள் இறந்து போனது, தன்னால் இறந்து போனதை பாபு யமுனாவிடமோ , ராஜத்திடமோ சொல்லவில்லை.முக்கியமாக யமுனாவிடம் சொல்லவில்லை.சொல்லியதற்கான தடயங்கள் நாவலில் இல்லை. சொல்லியிருந்தால் அது நாவலின் முக்கிய தருணமாக இருந்திருக்கும்.அது ஒரு குறை என்றே நினைக்கிறேன்.

தி.ஜானகிராமன் எந்த வித அகங்காரமும் இல்லாத எழுத்தாளர் என்றுதான் தோன்றுகிறது. இசை, காவேரி, கும்பகோணம் சொல்லி மாளவில்லை அவருக்கு. இந்த அளவுக்கு ஒருவரால் வாழ்வை அதன் அழகை ரசிக்கமுடியுமென்றால் வேறு என்ன வேண்டும் இந்த வாழ்க்கையில்.

நாவல் இப்படி முடிகிறது.

வெண்கலச் சிலைபோல் அவள்(யமுனா) அசைவற்று நின்றது, மோகத்தை காலடியில் மிதிப்பது போலிருந்தது.

அடிவானத்திலுள்ள மரங்கள்கூட நகர்ந்து வந்தன .வானையும் வின்னையும் சேர்த்தன அம்மரங்கள்.

பூமி வானைத்த தொட்டது. வானம் பூமியை தொட்டது.

ஐப்பசி காற்று ஜில்லென்று வீசியது.


தங்கம்மாளை பூமியெனக் கொண்டால் ரங்கண்ணாவை வானம் எனக் கொண்டால் பாபு இரண்டுக்கும் இடைமையாக நிற்கிறான்.இது இந்த நாவலை பற்றிய விமர்சனம் அல்ல.வாசிப்பு மட்டுமே. எல்லா வாசிப்பும் முக்கியமானவையே.


வரலாறு


சமூகம் என்பது மேற்கட்டுமானம் மற்றும் அடித்தளத்தால் ஆனது. அடித்தளம் என்பது உற்பத்தி உறவுகளாலும் உற்பத்தி முறைகளாலும் ஆனது. மேற்கட்டுமானம் என்பது இந்த உற்பத்தி உறவுகளை , உற்பத்தி முறைகளுக்கான கருத்துதளம். உற்பத்தி உறவுகளிலும் உற்பத்தி முறைகளிலும் மாற்றம் வருவதும் அவைகள் நீட்டிப்பதற்கான கருத்துதளத்தை இது உருவாக்கும்.

ஆகையால் அதன் பாதிப்புகள் அடித்தளத்தில் ஏற்படும்.அதே நேரத்தில் அடித்தளம் மேற்கட்டுமானத்தை மாற்றிப்போடும். இது ஒரு முரணியக்கம்.இதில் மேற்கட்டுமானத்தை விட அடித்தளத்தில் பாட்டாளி வர்க்கம் உற்பத்தி உறவுகளில் மாற்றத்தை கொண்டுவந்தால் அதுவே மேற்கட்டுமானத்தை புரட்டிப்போடும். முரணியக்க பொருள்முதல்வாதம் என்கிறது மார்க்சியம்.பின்னாட்களில் வந்த அன்டோனியோ கிராம்சி என்ற இத்தாலிய மார்க்சியர் அடித்தளம் மேற்கட்டுமானத்தை எந்தளவு பாதிக்கறதோ அந்த அளவு சொல்லப்போனால் இன்னும் அதிகமாக மேற்கட்டுமானம் அடித்தளத்தை பாதிக்கிறது என்றார்.


கோசாம்பி இந்தியாவின் வரலாற்றை பற்றி எழுதும் போது அது மன்னர்களின் காலத்தை பிரிப்பது அல்ல மாறாக உற்பத்தி உறவுகள் மற்றும் உற்பத்தி முறைகளிலான மாற்றத்தின் வரலாறே என்கிறார். அந்த கருவியை இந்திய வரலாற்றின் மீது செலுத்தி தன் ஆய்வை மேற்கொண்டார்.அதே போல மேற்கட்டுமானத்தை பற்றியும் பேசலாம். உதாரணமாக விஞ்ஞானத்தை பற்றி என்றால் நீயூட்டனால் நவீன பெளதிகம் தோன்றியது என்றோ ஜன்ஸ்டீனால் சார்பியல் தத்துவம் உருவானது என்று சொல்லாம். ஆனால் அது உண்மையல்ல.

இவை எப்படி ராஜராஜன் காலம் , அக்பர் காலம் என்று பிரிக்கிறோமா அது போலதான். மாறாக கருத்துதளத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தத்துவம் , விஞ்ஞானம் , மொழியியல் , பொருளாதாரம்.இலக்கியம் , கலை என்ற பல்வேறு கருத்துதளங்ளுக்கு உள்ளீடாக உரையாடல் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. Positive Unconsiousness என்கிறார் ஃபூக்கோ. இந்த உரையாடல்களின் விளைவே புதிய திறப்புகள்.நீயூட்டனும் , ஜன்ஸ்டீனும் நாம் அறிந்த முகங்கள்.தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் சார்பியல் தத்துவத்தை முன்னான பல்வேறு கேள்விகள் உள்ளன. ஆக அறிவுதுறைகளின் வராலாற்றை முன்வைத்துதான் எல்லா விமர்சனங்களும் பேசப்பட வேண்டும். இன்றைய விஞ்ஞானத்தின் வளர்ச்சி அதனால் ஏற்பட்ட நுகர்வோர் சமூகம் இதை பற்றியெல்லாம் நாம் பேசவேண்டுமென்றால் நாம் விட்கென்ஸ்டீன் முன்வைத்த தத்துவத்தை குறித்து பேசியாக வேண்டும். ஒரு இலக்கிய ஆக்கத்தை பற்றி நாம் விமர்சனம் செய்கிறோம் என்றால் அந்த காலகட்டத்தின் தத்துவம் ,விஞ்ஞானம் , பொருளாதாரம் போன்றவற்றை ஆராய்ந்து தான் பேசமுடியும்.எப்படி அடித்தளம் என்பது உற்பத்தி உறவுகள் உற்பத்தி முறைகள் பற்றிய வரலாறோ அதுபோல மேற்கட்டுமானம் இந்த அறிவுதுறைகளின் வரலாறே.Transcendental consiousness என்றும் ஆழ்மன உள்ளுணர்வு சார்ந்த அவதானிப்பு அல்லது திறப்பு என்பது போன்ற தனிநபர் வழிபாடுகளை கருவிகளாக பயன்படுத்துவது பெரிய அளவில் பயன் தர வாய்ப்பில்லை. உதாரணமாக சொல்லவேண்டுமென்றால் இன்று மனிதன் இயற்கையை அழிக்கிறான்.மனிதனும் இயற்கையே என்று அவன் கண்டுகொள்ளும்போது அவன் இயற்கையோடு இயைதல் என்ற நிலைக்கு வருவான் என்கிற ரீதியில் நாம் பேசலாம்.ஆனால் இது சாத்தியமேயில்லை. மனிதன் X இயற்கை என்ற எதிர்வுகள் நம் மனங்களில் ஆழமாக இருக்கிறது. அதற்கான கருத்தியல் தளமே கடந்த ஐநூறு ஆண்டு மேற்கட்டுமானத்தின் வரலாறு. இந்த எதிர்வை நாம் உடைக்க வேண்டுமென்றால் அதற்கான தத்துவம் உருவாக வேண்டும்.அது விஞ்ஞானத்தோடு உரையாட வேண்டும். அது பொருளாதாரத்தோடு உரையாட வேண்டும்.ஃபூக்கோ சொல்வது போல இந்த எதிர்வுகளுக்கு எதிராக Positive unconsiousness உருவாக வேண்டும் . அதற்கு அறிவுத்துறைகளில் பெரும் பாய்ச்சல் வேண்டும்.அது ஒரு நீண்ட நாள் செயலாகத்தான் இருக்க முடியும்.