என்பதனால்
தொழிலாளர்களுக்கு சம்பளம் குறைவாக உள்ளது என்று ஒரு தொழிலாளி சொல்கிறான். இந்த வாக்கியத்தில் என்ன பொருள் கொள்ளலாம். நிர்வாகம் , அரசு தொழிலாளர்களுக்கு சம்பளம் சரியாக கொடுக்கவில்லை என்று கொள்ளலாம். இதை கட்டுடைக்கலாம்.இந்த வாக்கியத்தை சொல்பவன் பெயர் ராஜன்.அவன் ஒரு தொழிலாளி. அவன் சமீபத்தில் அவனுடைய சொந்த ஊரில் ஒரு வீடு வாங்கி இருக்கிறான். வங்கிக் கடனில். மேலும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டான்.மோட்டார் சைக்கிள் வேறு வாங்கிக் கொண்டான். அதுவும் கடனில். அவனுடைய வயோதிக அம்மாவிற்கு மருத்துவ செலவு. ஆக தொழிலாளிகளுக்கு சம்பளம் குறைவு என்பது உண்மையில்லை.மாறாக ராஜன் வாங்கிய வீட்டுக்கடன், வண்டிக்கடன் , செய்துகொண்ட திருமணம், அவனுடைய தாய் இவைகளே இந்த வாக்கியத்திற்கான காரணம். ராஜனின் நடவடிக்கைகளால் அவனுக்கு சம்பளம் கட்டுபடியாகவில்லை. இரண்டாவது செய்தி.ராஜன் தற்கொலை செய்து கொள்கிறான். இந்த ஊரில் தொழிலாளர்களின் தற்கொலை போன ஆண்டை விட அதிகரித்து உள்ளது என்று ஒரு கணக்கு சொல்கிறது. இதை எப்படி நிர்வாகம் எதிர்கொள்கிறது என பார்ப்போம். ராஜன் தன்னுடைய தகுதிக்கு மீறி கடன் பெற்றார். மேலும் அவர் தனி வாழ்வில் ஒழுக்கமாக இருக்கவில்லை.பாலியல் அறமதிப்பீடுகளை அவர் மீறினார்.இவைகளால் அவருக்கு உண்டான மனநெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டார்.மற்றபடி நிர்வாகம் தன்னுடைய தொழிலாளர்களுக்கு மனநெருக்கடிகளை சமாளிக்கவே நிறைய செலவு செய்கிறது என ஒரு பட்டியலை நீட்டும். மூன்றாவது செய்தி - நிர்வாகத்தின் மீதும் அரசின் மீதும் சுற்றுச்சுழல் மாசு சார்ந்து புகார் தெரிவிக்கப்படுகிறது. அப்போது அந்த நிர்வாகம் எந்த ஊரில் உள்ளதோ அந்த ஊரில் அது ஒரு பிரகடனம் செய்யும். நாம் சேர்ந்து நமது ஆற்று நீரை சுத்தப்படுத்துவோம் என்று. உடனே புகார் தெரிவித்த அமைப்புகள் வெற்றி வெற்றி என்று சொல்லும். வழக்கு திரும்ப பெறப்படும்.
மேலே சொன்ன விஷயங்களில் முதலாவதை எடுத்துக்கொள்வோம். கடன் வாங்கிக்கொள்ள நம்மை சுற்றி இருக்கும் அமைப்பு,நிர்வாகம், அரசு எல்லாம் தான் ஊக்குவிக்கிறது.ஆனால் இங்கு முக்கிய விஷயம் அதுவல்ல.ராஜன் தொழிலாளர்களுக்கு சம்பளம் குறைவாக உள்ளது என்ற ஒரு புகாரை எழுப்பும் போது அது புறவயமானதாக இருக்கிறது. அப்படியல்ல அது ராஜனின் பிரச்சனை. அவனது திறமையின்மையால் அவன் அதிக கடன் பெற்று இவ்வாறு அவதிபடுகிறான் என்று அகவயமாக்குகிறது. இரண்டாவது பிரச்சனை இன்னும் பெரிது.தன்னால் சுயமாக ஒரு தொழிலை செய்யவதற்கான அனைத்து வாசல்களையும் அடைத்தப்பின் அவனை ஒரு கைதி போல ஆக்கி அவனை நகருக்கு வரவழைத்து ஒரு பெரிய அமைப்பின் கீழ் தொழிலாளி ஆக்கப்பட்டு சுரண்டப்படுகிறான். உண்மை என்னவென்றால் அவன் சுரண்டப்படுகிறான் என்பது அவனுக்கு தெரியாது. பருண்மை வடிவில் அவனுக்கு எஜமான் இல்லை.ஆனால் அவன் அச்சப்படுகிறான். எதிர்காலத்தின் நிச்சயமின்னை அவனை பயமுறுத்துகிறது. அப்போது ராஜன் நிலப்பிரபுத்துவம் உருவாக்கி கொடுத்த பாலியல் அறங்களை மீறுகிறான். அப்படி மீறுகையில் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாகிறான்.தற்கொலை செய்து கொள்கிறான். இங்கு பிரச்சனை ராஜன் மாத்திரம் அல்ல. இந்த அமைப்பின் பிரச்சனை.முதல் இரண்டுமே மிகப்பெரிய பிரச்சனைகள்.அவற்றை ஆராய்ந்தால் அவன் சார்ந்திருக்கும் அமைப்பு அதில் முக்கிய பங்கு வகிப்பதை நாம் உணர முடியும். இரண்டுமே புறவயமாக அணுகப்பட வேண்டியவைகள். ஆனால் இரண்டுமே அகவயமானதாக , தனிநபருக்கு உரியதாக மாற்றப்படுகிறது. இதுதான் நவீன முதலாளித்துவத்தின் வெற்றி. மூன்றாவது இன்னும் பெரிய விஷயம்.இதை நமது நவீன முதலாளித்துவம் மிக அழகாக கையாள்கிறது. உதாரணத்துக்கு காந்தியர் ஒருவர் சுற்றுச்சுழலுக்கு மாசு ஏற்படுவதால் அதை எதிர்த்து பெரிய மக்கள் போராட்டம் நடத்துகிறார் என வைத்துக்கொள்வோம். கொஞ்ச காலம் நம் நிர்வாகமும் , அரசும் அவரை அடக்க பார்க்கும். ஒன்றும் வழியில்லை என்றால் கடைசி ஆயுதம்.இது எங்களால் வந்த பிரச்சனை அல்ல.மாறாக நம்மால் வந்த பிரச்சனை. நாம் தான் சமாளிக்க வேண்டும். நாம் என்பதை அழுத்திச்சொல்லும்.ஆம்.அவரை(காந்தியரை) அழைத்து சுற்றுச்சுழலுக்கு தங்களால் முடிந்ததை தாங்கள் நிச்சயம் செய்வதாகவும் ஆனால் அதை தங்களால் மட்டும் செய்ய முடியாது என்றும் ஆக நாம் செய்வோம் என சொல்லும். முடிந்தால் அந்த காந்தியரை வைத்து ஒரு கருத்தரங்கு நடத்தும். ஊர் கூடி தேர் இழுப்போம் என்று விளம்பரம் செய்யும்.ஒரு வருடம் கழித்து காந்தியர் மெளனமாகி போவார்.
என்பதனால் சொல்லப்படுவது என்னவென்றால் முதலிலேயே மெளனமாக இருந்து விடுவது நலம்.
பகுப்புகள்:
சில குறிப்புகள்
ஒரு துண்டு வானம்
ராஜன் தனது நினைவுகளை மீட்டான். மலம் என்றால் புனிதமற்றது.அமலம் என்றால் புனிதமானது.அழுக்கற்றது.அமலா என்றால் புனிதமானவள்.உண்மையில் புனிதமானது புனிதமற்றது என்ற பிரிவினைகள் உண்டோ? உண்டோ என்றால் இப்போது உண்டா அல்லது எப்போதும் இருந்ததா என்ற கேள்வி கேட்டு கொண்டான். இருந்திருக்கலாம் , ஆனால் நிச்சயம் இப்போது இல்லை. ஒரு பெரிய பாறை போல கனத்தது காலம். இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாக வேண்டும். வாழ்ந்தாகத்தான் வேண்டுமா? மனிதன் இறக்கும் போது தனியாக மரணத்தை சந்திக்கிறான்.அப்போது அதுவரை அவனோடு வந்த சித்தாந்தங்கள் , தூக்கி கொண்டு நடந்த லட்சியவாதங்கள் தள்ளி நின்று எக்களிக்கின்றன.ராஜன் தனியாக நின்றான்.அமலா பேசும் போது ஒரு முறை அவனிடம் சொன்னாள். ராஜன் நேற்று நிலப்பிரத்துவ காலத்தின் ஆண் பெண் இருந்தார்கள் , இன்று முதலாளித்துவத்தின் மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.அப்போது அவளை பெண்ணியவாதி என்று கிண்டல் செய்தான் ராஜன். அவள் சொன்னாள் நீ எப்போது புரிந்து கொள்வாயோ தெரியவில்லை ராஜன், எல்லாம் மாறிவிட்டது.பிறகு அன்று அவள் எதுவும் பேசவில்லை. ராஜனை விட்டு விலகிவிடலாம் என்று அவள் முடிவு செய்துவிட்ட நாட்கள் அவை. ராஜனுக்கு அவை புரியாமல் இல்லை. ஆனால் அது வெறும் கருத்துதளத்தில் நின்ற போது அவன் சற்று சமாதானம் செய்து கொண்டான்.ஆனால் இன்று எல்லாமே பருண்மை வடிவில் வெளிப்பட்டாகிவிட்டது. அமலா அவனை எவ்வித கருணையும் இல்லாமல் நிராகரித்து விட்டாள். அவள் கடைசியில் நேர் சந்திப்பில் சொன்னது - எல்லாம் மாறிவிட்டது ராஜன் புரிந்துகொள் சேகுவராவும் பாப் மார்லியும் இன்று முதலாளித்துவத்தின் குறியீடுகள்.சடை வளர்த்து கொள்வதும் , தாடி வைத்துக்கொள்வதும் இன்று எதிர் கலாச்சாரம் அல்ல.அவை வெறும் மோஸ்தர் அவ்வளவே.
உண்மையில் ராஜன் தாடி வைத்துக்கொள்ளவோ சடை வளர்த்துக்கொண்டதோ இல்லை.ராஜன் அடிக்கடி சோதனைக்கூடத்திலேயே நினைவிழந்துவிடுவான்.அப்படி ஒரு முறை நினைவிழந்தபோது அவனை மருத்துவமனையில் சேர்க்க வேண்டி போய்விட்டது. மருத்துவமனையிலிருந்து வெளியேறி வேலைக்கு செல்லாமலே இருந்தான். அவனது நண்பர்கள் அவனது உடல் நலமின்மையால்தான் அவன் வேலைக்கு வரவில்லை என நினைத்துக்கொண்டனர். ராஜன் அந்த நாட்களின் பின் மதியப் பொழுதுகளில் எங்கேங்கோ அழைந்து திரிந்தான். ஒரு முறை அப்படி அலைந்து திரிந்த போது காலத்திலிருந்து அவன் விலகிவிட்டது போல உணர்ந்தான் .அவன் முன் மனிதர்கள் நடந்து கொண்டிருந்தார்கள்.சைக்கிள்கள் மோட்டார்கள் எல்லாம் ஒடிக்கொண்டிருநதன்.ஆனால் அவை எல்லாம் வெகு அப்பால் பல ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் நடப்பது போல உணர்ந்தான். ராஜன் அதன்பின் சில நாட்களில் வேலைக்கு செல்ல ஆரம்பித்தான்.சோதனைக்கூடத்தில் ஒரு நாள் எதையும் செய்யாமல் அமர்ந்திருந்த போது நாய் குலைக்கும் சத்தம் கேட்டது. ராஜன் வெளியே வந்து வானத்தை பார்த்தான் . கீறல்கள் இல்லாத நீல வானம். மறுபடி சோதனைகூடத்துக்குள் சென்றான்.ஜன்னலின் வழியாக பார்த்த போது ஒரு துண்டு வானம் தெரிந்த்து. சிரித்துக் கொண்டான்.மேலதிகாரியிடம் சென்று நான் வேலையை ராஜினாமா செய்கிறேன் என்றான். அவர் உட்பட அனைவரும் அவனை பைத்தியக்காரன் என கேலி செய்தனர்.நீங்கள் எல்லோரும் துண்டு வானத்தை பாருங்கள் என்று சொல்லி வெளியேறினான் ராஜன்.
இந்த சமயங்களில் தான் அமலா அவன் மேல் எரிச்சல் கொண்டாள். ராஜன் அவளை சமாதானம் செய்யவில்லை. இனி என்னதான் செய்ய போகிறாய் என்று அவள் கேட்கும் போது எனது பயணம் முழுமையை நோக்கி இருக்கும் என்பான். அவள் மேலும் எரிச்சல் கொண்டாள். இயற்கை விவசாயம் குறித்து அவன் ஒரு முறை சொன்ன போது விவசாயத்தில் என்ன இயற்கை அது உண்மையில் இயற்கையை நம் விருப்பத்திற்கு புணரமைப்பது தான் வேண்டுமானால் கானகம் சென்று உணவு சேகரிப்பில் ஈடுபடு என்று அவனை கேலி செய்தாள்.வெயிலில் ஒரு முறை அலைந்து திரிந்த போது நினைவிழந்து கீழே விழுந்துவிட்டான். எழுந்தால் ஒரு பழைய புத்தக கடையில் நாற்காலியில் அமர்நதிருநதான். எழுந்து கெட்டி அட்டை போட்ட ஒரு புத்தகத்தை கையில் எடுத்தான். பிரித்து பார்த்த போது அவன் படம் அதிலிருந்தது. அவனை போன்ற படம்.
ராஜன் அந்த புத்தகத்தை எழுதியவரின் பெயரை பார்த்த போது அதிலும் ராஜன் என்ற பெயரே இருந்தது. புத்தகத்தின் தலைப்பு வருங்காலங்களின் வரலாறு. காசி பனாரஸ் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியில் இருந்தவர் எழுதியது. அதற்கு ஒரு முன்னுரை எழுதப்பட்டுயிருந்தது. அதை எழுதியவர் இது இந்தியாவின் வரலாறு. ஒரு மாற்றம்.இது இந்தியாவின் இறந்த கால வரலாறு அல்ல.மாறாக எதிர்கால இந்தியாவின் வரலாறு என்பதாக இருந்தது. இதை எழுதியவர் பிற்காலத்தில் காணாமல் போய்விட்டார் என்றும் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் மிக குறைந்த எண்ணிக்கையில் அச்சிடப்பட்ட இந்த புத்தகம் மறுபதிப்பு காணுமா என்பது இதை வாசிப்பவர் கைகளில் தான் இருக்கிறது என்றும் இருந்தது. ராஜன் ஐநூறு பக்கங்களுக்கு மேல் நீண்ட அந்த புத்தகத்தை ஒரே இரவில் வாசித்து முடித்தான்.
புத்தகத்தில் மொத்தமாக இருந்தது இதுதான். லட்சியவதாங்களின் தலைமுறை முடிவுக்கு வந்து முதலாளித்துவம் உருவாக்கும் பெரிய வலையில் மத்திய தர வர்க்கமும் உள்ளே நுழைந்து தொழிலாளியும் முதலாளி ஆகலாம் என்ற நிலை உருவாகும் .அதுவே பொதுமையாக்கலின் காலமாக இருக்கும். அந்த காலத்தின் அரசன் உண்மையில் தொழில்நுட்பமே என்றும் இருந்தது. அதன் பின்னான காலகட்டத்தில் மனிதர்கள் சலமின்றி வாழ்வார்கள்.அப்போது அவர்கள் முற்றிலும் தொழில்நுட்பத்தால் கட்டுபடுத்தப்பட்டுயிருப்பார்கள்.அந்த காலத்தில்
அவர்கள் இயந்திரங்களாகவும் மாறி போயிருப்பார்கள். அதற்கு அடுத்த காலகட்டம் தான் The Era of Great Refusal காலகட்டம்.அந்த காலகட்டத்தில் மனிதர்கள் பெரிதாக எதையும் எதிர்க்க மாட்டார்கள்.ஆனால் வீடுகளை விட்டு வெளியில் வந்து சாலையில் இருப்பார்கள்.அந்த காலகட்டத்தில் மனிதர்கள் மின்சாரத்தை துறப்பார்கள்.அதுவே மறுப்பின் காலகட்டம். அதன்பின்னான வரலாறு வேறு விதமாக இருக்கும்.இதுவே இந்தியாவின் அடுத்த நூறாண்டுகளின் வரலாறு என்று முடிந்திருந்தார் ராஜன். புத்தகம் ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதாம் வருடம் வெளிவந்திருக்கிறது.
பின்னர் ஒரு நாள் இந்த புத்தகத்தை அமலாவிடம் கொடுத்த போது அவள் அதை படித்துவிட்டு மிகுந்த சலிப்புடன் சொன்னாள். இந்த ராஜன் சொல்வது போல இது பொதுமையாக்கலின் காலகட்டம் . நீயும் உள்ளே நுழைந்து அதுனுள் இரு.அப்போது மிகுந்த எதிர்வினையாற்றிய ராஜனை பார்த்து அவள் சொன்னவைதான் எல்லாம் மாறிவிட்டது ராஜன் என்பது.மிகுந்த அலைகழிதல்களுக்கு பின் ஒரு நாளில் ராஜன் மறுபடியும் ஒரு துண்டு வானத்தை பார்க்க ஆரம்பித்தான்.ஆம் இந்த தலைமுறைக்கு சாத்தியப்பட்டது ஒரு துண்டு வானம் தான். ஆனால் அமலா அவனை விட்டு எப்போதைக்குமாக விலகியிருந்தாள்.
பகுப்புகள்:
சிறுகதை
ரஸ்கோல்நிகோவ்
ரஸ்கோல்நிகோவ் வட்டிக்கடை அம்மையார் அல்யோனா இவானோவ்னாவை கொலை செய்கிறான். அப்போது அங்கு எதிர்பாராதவிதமாக வந்துவிடும் அவளது தங்கை லிசாவெதாவையும் கொலை செய்து விடுகிறான். அவன் ஏன் அந்த கொலையை செய்தான் என்பதே நாவலின் பிரதானம். இந்த உலகத்தில் மொத்தம் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒரு வகை சாதாரண மனிதர்கள்.இவர்கள் சட்டம் , அறம் போன்றவற்றிற்கு கட்டுப்பட்டு வாழ்பவர்கள்.அவர்கள் அதை மீறும் போது அந்த சட்டத்தை கொண்டு அவர்களை தண்டிக்கலாம். ஆனால் மற்றொரு வகையினர் இருக்கிறார்கள்.இவர்கள் அதிமனிதர்கள்.இவர்கள் எல்லா சட்டத்தை மீற கூடியவர்கள் அல்ல.ஆனால் தாங்கள் செய்யும் செயலால் மானிட இனமே நன்மை பெறும் எனும் போது அதை முன்னிட்டு அவர்கள் எதை வேண்டுமானால் செய்யலாம். அதாவது நியூட்டன் , கெப்லர் போன்றவற்கள் தாங்கள் செய்ய விரும்பும் ஒரு செயலால் மானிடம் நன்மை அடையும் என்கிற போது அதை முன்னிட்டு யாரையும் எவ்வளவு பேரையும் கொலை செய்யலாம். அது தவறு ஆகாது. மாறாக அவர்கள் மனித குலத்தின் புரவலர்களாக கொண்டாடப்படுவார்கள்.அவர்களால் புது சட்டங்கள் இயற்றப்படும். அப்படி தானும் ஒரு அதிமனிதனே என்ற எண்ணம் ரஸ்கோல்நிகோவிடம் எழுகிறது. சரியாக சொல்வதென்றால் தான் அதிமனிதனா அல்லது எல்லோரையும் போல தானும் ஒரு மந்தை மனிதன் தானா என்னும் கேள்வி அவனுள் எழுகிறது. அதை முன்னிட்டு தான் அதிமனிதன் தான் என்ற நிறுவ முயல்கிறான்.அப்படி நிறுவுவதற்கு அவன் மேற்கொள்ளும் செயலே வட்டிக்கடை அம்மையாரை கொலை செய்வது.அதாவது அந்த செயலின் மூலம் மானுடர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதை விட தான் அதிமனிதன் எனும் தன் இருப்பை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனும் எண்ணமே அவனை கொலை செய்ய தூண்டுகிறது.
ரஸ்கோல்நிகோவ் எவ்வித நம்பிக்கையும் இல்லாமல் வாழ்கிறான். புனித பீட்டர்ஸ்பர்க் நகரமும் அதன் மனிதர்களும் , அதன் தட்பவெப்ப நிலையும்,அவன் வாழ்ந்து வரும் மிகச்சிறய அறையும் அவனது செயலுக்கு புறக்காரணங்கள்.அவன் வேறு ஏதேனும் ஒரு மனிதரோடு இந்த காலகட்டத்தில் வாழ்ந்திருந்தால் அவன் இந்த கொலை செய்யாமல் போயிருக்கலாம்.
அகக்காரணங்கள் என்று பார்க்கும் போது அவனது இருப்பே முதன்மை காரணம் .ஆம் எதை முன்னிட்டு அவன் தன் வாழ்க்கையை வாழ்வது எனும் கேள்வி அவனுள் எப்போதும் இருக்கிறது. அவன் கடவுளை மறுக்கிறான் என்று சொல்ல இயலாது. ஆனால் அவனால் கடவுளிடம் மண்டியிட்டு அழ முடியவில்லை.லாசரஸின் மீள்உயிர்ப்பு நாவலின் முக்கியமாக பேசப்படுகிறது. அதே நேரத்தில் தன்னை அவன் ஒரு மறுப்புவாதி என்றும் சொல்லிக்கொள்வதில்லை.
ரஸ்கோல்நிகோவ் நாவலின் ஆரம்பித்தில் ஒரு கனவு காண்கிறான். அவன் சிறுவயதில் தன் தந்தையுடன் கல்லறை நோக்கி செல்லும் போது ஒரு மதுவகத்திற்கு வெளியே ஒருவன் தன் குதிரை வண்டியில் அந்த வயோதிக குதிரையால் நகர முடியாத அளவுக்கு மக்களை ஏற்றிக்கொண்டு அவர்களை இழுக்குமாறு குதிரையை அடிக்கிறான்.ஆனால் அந்த குதிரையால் ஒரு அடி கூட எடுத்து வைக்கமுடியவில்லை. ஆனால் அவன் தொடர்ந்து அதை அடிக்கிறான்.வெறி கொண்டு தன் மகிழ்ச்சிக்காக தன்னை சுற்றி இருப்பர்கள் சிரிக்க அதை கொல்லும் வரை அடிக்க போவதாக கூறி அடிக்கிறான் .இறுதியில் அதை அடித்தே கொல்கிறான். இந்த கணவு ஒரு வகை குறியீடு. ஸ்விட்ரிகைலோவ் என்ற கதாபாத்திரம் ரஸ்கோல்நிகோவின் கொலை செயலை புரிந்து கொள்ள மேலும் உதவுகிறது. ஸ்விட்ரிகைலோவ் மார்ஃபா பெத்ரோவ்னா என்ற பெண்மனியின் கணவர்.கடனில் சிக்கி கடனாளிக்களுக்கான சிறையில் இருக்கும் ஸ்விட்ரிகைலோவை மார்ஃபா திருமணம் செய்து கொள்கிறாள். அவன் ஒரு பதினைந்து வயது சிறுமியின் தற்கொலைக்கு காரணமாக இருக்கிறான்.அந்த கொலையில் ஸ்விட்ரிகைலோவ் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க மார்ஃபா பணம் தந்து சமாளிக்கிறாள். அதைப்போல அவன் வீட்டின் வேலைக்காரனாக பிலிப் என்பவனின் தற்கொலைக்கும் அவன் காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.இறுதியில் மார்ஃபாவின் மரணத்திற்கும் அவனே காரணமாக இருக்கிறான். அவன் ரஸ்கோல்நிகோவின் தங்கை துனியா அவர்கள் வீட்டில் வேலை செய்யும் போது அவளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறான்.ஸ்விட்ரிகைலோவிடம் ரஸ்கோல்நிகோவ் உரையாடும் போது பெண்களால் தனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்கிற போது அதைத்தான எதன் பொருட்டு நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்கிறான்.ஆக ரஸ்கோல்நிகோவின் கனவில் வருபவன் தன் மகிழ்ச்சிக்காக குதிரையை கொலை செய்வது போல , ஸ்விட்ரிகைலோவ் தனக்கு பெண்கள் மீதுள்ள மையத்தின் காரணமாக தான் செய்த எந்த செயலுக்கும் குற்றவுணர்வு கொள்ளாமல் இருப்பது போல,ரஸ்கோல்நிகோவின் கொலையும் அமைகிறது. அவனும் தன் இருப்பின் நிறைவுக்காகவே அந்த கொலையை செய்கிறான்.
கொலைக்கு முன்னால் ஒரு மதுவகத்தில் ரஸ்கோல்நிகோவ் ஏதேர்ச்சையாக மர்மலதோவ் என்பவனை சந்திக்கிறான். அவன் மூலம் சோனியா என்ற அவனது பெண்ணை பற்றி தெரிந்து கொள்கிறான்.கொலை செய்த பின் தனக்குள் நடக்கும் போராட்டங்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் காவலர்களிடம் சென்று சொல்லிவிடலாம் என்று அவன் முடிவு செய்யும் போது மர்மலதோவ் ஒரு வண்டியில் சிக்கி இறந்து போகிறான். அவனை அவன் வீட்டிற்கு எடுத்து செல்கிறான்.அப்போது அங்கு சோனியாவை சந்திக்கிறான். பிறகு தான் ஏன் கொலை செய்தேன் என்பதை சோனியாவிடம் சொல்ல முடிவு செய்கிறான்.உண்மையில் அவன் தான் ஏன் கொலை செய்தேன் என்பதை கொலை செய்வதற்கு முன்னே அவளிட்ம்தான் சொல்ல வேண்டும் என மதுவகத்தில் சோனியாவை பற்றி மர்மலதோவ் சொல்லிய போதே முடிவு செய்ததாக சொல்கிறான். மர்மலதோவ் இறந்த பின் அவளது அறைக்கு செல்லும் ரஸ்கோல்நிகோவ் அவன் ஏன் கொலை செய்தான் என சொல்கிறான்.நான் நெப்போலியனாக விரும்பினேன்.ஆகவே நான் கொலை செய்தேன் என்கிறான். அதைக் கேட்கும் சோனியா உடனடியாக நாற்சந்திக்கு சென்று மானிட குலத்திற்குமுன் மண்டியிட்டு நான் ஒரு கொலைகாரன் என்று பிரகடனம் செய் என்று அழுகிறாள்.
இந்த கொலை வழக்கை விசாரிக்கும் பெர்போரி பெட்ரோவிச் ரஸ்கோல்நிகோவ்தான் கொலை செய்தான் என்பதை கண்டுகொள்கிறான்.ஆனால் அதை நிரூபிக்க அவனிடம் எந்த ஆதாரங்களும் இல்லை. அவன் இறுதியில் ரஸ்கோல்நிகோவிடம் பேசும் போது சொல்கிறான் குற்றம் செய்தததை ஒப்புக்கொள்.அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்.நீ எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் இருக்கிறாய்.உனக்கான நம்பிக்கையை கண்டுகொள். அதன்மூலம் நீ உயிர் வாழ்வாய்.அந்த நம்பிக்கை துயரத்தை ஏற்றுக்கொளவதாக இருக்கலாம் என்கிறான்.
சோனியா ரஸ்கோல்நிகோவிடம் துயரத்தை ஏற்றுக்கொள்ள சொல்கிறான்.ரஸ்கோல்நிகோவ் நாற்சந்தியில் மனித குலத்திற்கு முன் மண்டியிட்டு நான் கொலைக்காரன் என்று சொல்கிறான் .இறுதியில் காவலர்களிடம் சென்று குற்றத்தை ஒப்புக்கொள்கிறான்.
இதற்கு முன் அதிமனிதர்கள் பல செயல்களை செய்திருக்கிறார்கள்.அவை சட்டத்திற்கும் அறத்திற்கும் மீறிய செயலாகவே இருந்திருக்கின்றன.தானும் எதற்கும் உதவாத ஒரு கிழட்டு பெண்ணையே கொலை செய்தேன்.ஆனால் என்னால் அதை தாண்டிச் செல்ல முடியவில்லை.ஏனேனில் நான் அதிமனிதன் இல்லை. ஆம் நான் எல்லோரும் பிற்காலத்தில் போற்றக்கூடிய புரவலராக மாற முடியவில்லை.நான் நெப்போலியன் இல்லை.எளிய மனிதன் என்பதை கண்டுகொள்கிறான்.ஆனால் நாவலில் இறுதி வரை அந்த கோட்பாடை தவறு என்று ரஸ்கோல்நிகோவ் சொல்வதில்லை.
எவ்வித நம்பிக்கையும் இல்லாமல் இருப்பவன் இறுதியில் துயரத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் வாழ்வை சந்திக்கிறான்.
குற்றமும் தண்டனையும் நாவல் - பியோதர் தஸ்தாவெய்ஸ்கி.
பகுப்புகள்:
கட்டுரை,
தஸ்தாவெய்ஸ்கி
இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 2
கால்நடைகள் செம்மறிஆடுகள் மற்றும் ஆடு மேய்ப்பர்களுக்கு மிகுதியான காய்கறி வளங்கள் , அவற்றுடன் சேர்ந்து பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்கிறது என்பது வேட்டைக்கூட உயிர்வாழ்வதற்கு அத்தனை அவசியமானது இல்லை என்பதை தெளிவாக்குகிறது.இனிமையான இந்திய வானிலையில் ஒருவர் தன் ஜீவிதத்தை எதையும் கொல்லாமலே ஒப்புநோக்க சிறப்பாக காப்பாற்றிக் கொள்ள முடியும்.இந்த அடிப்படை யதார்த்தம் பழங்கால பழங்குடிகள் வாழ்வதற்கான காரணங்களை மட்டும் சொல்லவில்லை.இவை இந்திய சமூகவியல் சிந்தனையை தெளிவுபடுத்துகிறது. குணாம்சியத்தில் இந்திய சமயங்களான புத்தமும் ஜெனமும் உயிர் வாழ்வதை பாவமாக கருதுகிறது. இத்தகைய ஒரு அறநெறி ரத்தமற்ற உணவு சேகரிப்பு முறையிலான பொருளாதாரம் முன்வரலாற்று இந்தியர்களுக்கு தேவையான வாழ்க்கை ஜீவிதத்தை தந்திருக்காவிட்டால் சாத்தியப்பட்டிருக்காது.
இரும்பு காலத்தை சேர்ந்த ஏர் உழவு விவசாயத்தை பழகிய மக்கள் முதலில் கங்கையின் சமவெளி பகுதிகளின் எல்லைக்குட்பட்டு தான் வாழ்ந்தார்கள்.அத்தகைய செழிப்பான பகுதியிலிருந்து அவர்கள் தெற்கு பக்கம் அதிக சமவெளி காடுகள் நிரம்பிய தீபகற்ப இந்தியாவின் தக்காணத்து பகுதிகளுக்கு வந்தார்கள்.வன்முறையின் துனையோடு நடந்த ரோமின் இரும்பு காலத்திய கெளல் பழங்குடி ஆக்கிரமிப்பு மற்றும் ரெயின் பகுதிக்கு அப்பாலான காடுகளை கொணர்ந்ததுபோல இந்த நுழைதல் நடக்கவில்லை. வடக்கிலிருந்து வந்த உழவர்களை தெற்கிலிருந்த வன மேய்ப்பர்கள் மற்றும் உணவு சேகரிப்பாளர்களுக்குமான சந்திப்பு பரஸ்பரம் புதுப்பண்பாட்டை ஏற்கும் செயலை முடக்கிவிட்டிருக்கிறது.உணவு சேகரிப்பாளர்கள் விவசாயத்தை கற்றுக் கொண்டது போல விவசாயிகள் உணவு சேகரிப்பில் தங்களை ஈடுபடுத்தி கொண்டதோடு மட்டுமல்லாமல் காட்டு உணவு வகைகளை வேளாண்மை செய்யவும் கற்றுக்கொண்டனர். உற்பத்தியாளர்களுக்கும் சேகரிப்பாளர்களுக்குமான இந்த அனுசரித்து போகும் உறவு இந்தியாவின் கடந்தகால அமைப்பையும் மாதிரியையும் புரிந்து கொள்ள உதவுகிறது. இது இன்றைய சமூக ஏற்பாட்டில் பிரதிபலிப்பதோடு சாதியின் மூலங்கள் மற்றும் சாதி அமைப்பு பற்றியும் விளக்குகிறது.1
இந்தியாவின் பல பகுதிகளில் அப்பகுதியின் பழங்குடி மக்களுடைய பெயர்களும் அப்பகுதியின் விவசாய சாதியின் பெயர்களும் ஒன்றாக இருக்கும் அதே நேரத்தில் பழங்குடி மக்களுக்கும் விவசாயிகளுக்குமான சாதி வித்யாசம் அவர்களுக்கிடையே திருமணம் மற்றும் வேறு எந்தவித தொடர்புகளையும் தடுக்கிறது.புலம்பெயர்ந்த விவசாயிகளும் அதே இடத்தில் வசித்த உணவு சேகரிக்கும் பழங்குடியினரும் பொது காரணத்திற்காக வனப்பகுதிகளில் சந்தித்து கொண்டதால் இந்த பெயர்களின் ஒப்புமை ஒரே மூலத்திலிருந்து வந்ததாக இருக்கலாம்.சாதிய அமைப்பின் இரு முக்கிய குணாசியங்கள் - தங்கள் குழுவில் அல்லாதவரோடு திருமணம் செய்து கொள்ளவதற்கான தடை மற்றும் அந்நியரிடமிருந்து உணவு பெற்றுக்கொள்ளுதலுக்கு எதிரானது - இவை குறிப்படத்தக்க வகையில் பழங்குடி சமூகங்களுக்கும் விலக்கு. ஆக சாதிய அமைப்பு என்பது உணவு சேகரிப்பு செய்த அந்த மண்ணின் பழங்குடியினர் புலம்பெயர்ந்த ஏர்உழவர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை நிறுவுவதற்கு பிற்பாடு உருவாக்கிய முயற்சியாக எண்ணிக் கொள்ளலாம்.
1 - '"The Untouchables" of India' , by M.N.Srinivas and Andre Betelle; Scientific American,December ,1965
கோசாம்பி எழுதிய Living Prehistory in India (Scientific American - February 1967) என்ற கட்டுரையின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு. தொடரும்.
பகுப்புகள்:
கோசாம்பி,
மொழிபெயர்ப்பு
Subscribe to:
Posts (Atom)