சூன்ய வெளி
பல ஆயிரகணக்கான மக்கள் தங்களை காப்பாற்ற கடவுள்கள், அரசாங்கங்கள் , மனித உரிமை அமைப்புகள், இன மொழி பற்றாளர்கள் , உண்மையான மனிதாபிமானிகள் , இதழாளர்கள் இவர்களில் யாராவது வருவார்கள் என்று அவர்களின் துர்மரணத்திற்கு முன் நினைத்திருக்க கூடும்.ஆனால் கடவுளின் பீடத்தில் இருப்பது சூன்யம் என்பதை அவர்கள் இறக்கும் போது அறிந்தனர்.இதழாளர்கள் அவர்கள் நம்பும் சிந்தாந்தங்கள் அடிப்படையில் செய்திகளை உருவாக்கினர்.அரசுகளின் பிரச்சனைகள் நமக்கு புரிவதில்லை.நமக்கு செய்தியை வாசித்துவிட்டு பேச ஒரு விஷயம், இரக்கப்பட சில ஆயிர மனிதர்கள், நம் மனம் கசிய சில கண்ணீர்துளிகள், செல்ல வேண்டிய ரயில் , ஏறி அமர்ந்து கண்ணீரை துடைத்துகொண்டு பணிக்கான முகத்தை தயாரித்துக் கொள்கிறோம்.
எழுத்தாளர்களுக்கு , கோட்பாட்டாளர்களுக்கு அவர்கள் நம்பும் தத்துவத்தை முன்வைக்கும் தருணமாகிறது.உண்மையில் யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை.எந்த கதறல்களும் நம்மை மிக எளிய அளவில் கூட அசைத்துவிடுவதில்லை.எல்லாம் முடிந்துபோய்விட்டது. அங்கே இனி உருவாக போகும் தலைமுறைக்கு தெரியும் , கடவுள் பீடத்தில் இருப்பது சூன்யம்.ஆக அதனிடம் யாசிக்க ஒன்றுமில்லை.நம்புவதற்கு ஒரு சித்தாந்தம் இல்லை.வெளி இல்லை.கனவு இல்லை.எல்லோர் உணவிலும் அவர்களின் மூதாதையர்களின் ரத்தம். அவர்களுக்கு தெரியும்.பெருந்துயர் வந்தாலும் இனி அவர்கள் கதற மாட்டார்கள்.கதறினால் எந்த கையும் வரப்போவதில்லை.எல்லாவற்றையும் ஏற்கலாம்.பழகிக்கொள்ளலாம்.உயிர் வாழலாம்.நம்மை சுற்றிய மனிதர்கள் மரணமடையும் போது, நாம் சித்ரவதைக்கு உள்ளாகும் போது நாமும் நினைவில் வைத்துக்கொள்வோம் - நாம் இருப்பது வெட்டவெளியில்.மேலே வானமும் இல்லை.கீழே மண்ணும் இல்லை.சூன்ய வெளி.
பகுப்புகள்:
சில குறிப்புகள்
அவமானங்கள்
குனிந்து நில்.
கைகளை கட்டு.
மீசையை மழி.
நிர்வானம் கொள்.
கூலியை பெறு.
சோற்றைத் தின்.
பழகிக்கொள்.
குறிப்பு
தொடர்ந்த வாக்கியங்களாக அல்லாமல் ஒரு வரிக்கு கீழ் ஒரு வரி என்கிற ரீதியில் கவிதை ஏன் எழுத வேண்டும் என்கிற போது செர்கய் ஐஸன்ஸ்டைனின் Film Sense புத்தகம் படித்ததில் ஒரு எண்ணம் கிடைத்தது.இரு வரிகள் பிரிக்கப்பட்டு நமது வாசிப்பில் அது சேரும் போது கிடைப்பது அவை இரண்டிலும் இல்லாத புதியதொரு எண்ணம் தானே.
மேலே எழுதியுள்ளதை(கவிதை) காட்சிபடுத்துகையில் இவ்வாறு தோன்றியது.
1. குனிந்து நில் - மிடில் ஷாட் - கைகள், இடைவரையிலான உடைகள் அற்ற உறுதியான உடல்.அவன் மட்டும்.
2. கைகளை கட்டு - அதே காட்சி - கேமிரா நகரவில்லை - கைகளை கட்டுகிறான் - அதன் சத்தம்.
3. மீசையை மழி - மிக அண்மைக் காட்சி - குனிந்த மீசையற்ற முகம்.
4. நிர்வானம் கொள் - மிக தூரக் காட்சி - முழு நிர்வானமான அவன் உடல் பக்கவாட்டில் இருந்து.பின்னனியில் காலியான அறை.சில நாற்காலிகள்,மேஜை. அதில் யாரும் இல்லை.
5. கூலியை பெறு - மிக அண்மைக் காட்சி - அவன் கைகள் இரண்டும் - பெறும் நிலையில்- சில்லறை நாணயங்கள் வேறொரு கையிலிருந்து அவன் கையில் விழுகின்றன. நாணயங்கள் சற்று பழைய காலத்தை சேர்ந்தவை.
6. சோற்றைத் தின் - அண்மைக் காட்சி - வெள்ளைச் சோறு - பின்னனியில் வீட்டின் தூண் - சோற்றை வாயில் தினிக்கிறான் - இரண்டு முறை.
7. பழகிக்கொள் - மிடில் ஷாட் - படுத்து உறங்குவது போலவோ தூணில் சாய்ந்து அமர்ந்திருப்பது போல இருக்கும் காட்சி.
எளிதில் காட்சிபடுத்த முடியாது எழுதப்படும் கவிதை சிறந்த கவிதைகளாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
பகுப்புகள்:
கவிதை
Subscribe to:
Posts (Atom)