கர்ம ஞானி
நான் நினைத்துகொண்டிருந்தேன் வசந்த காலத்தில் விதைக்கப்படும் நெல் , பின்பு விளைந்து அறுவடையின் போது இறந்துவிடுகிறதென்று. ஆனால் உண்மை என்னவென்றால் இந்த செயல் ஒவ்வொரு ஆண்டும் மறுபடி மறுபடி நிகழ்ந்தேபடியே இருக்கிறது. அப்படியென்றால் இந்த நிலத்தில் உயிர் இருந்துகொண்டேயிருக்கிறது. ஆக அந்த ஆண்டின் மரணமே அந்த ஆண்டின் பிறப்பும் ஆகும். ஆதலால் நாம் அறுவடை செய்யும் நெல் எப்போழுதும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.
தன் கர்மத்தின் மூலமாக மட்டும் பிரபஞ்ச தரிசணம் கிடைக்கபெற்ற கர்ம ஞானி. ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற புத்தகத்தில் அவர் யாரையேனும் மேற்கொள் காட்டுகிறாரென்றால் அது புத்தர் மட்டுமே.யின்-யாங் உணவுமுறையிலிருந்து , ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் வரை எல்லாவற்றையும் நிராகரிக்கிறார்.
மாசானோபுவின் "ஒற்றை வைக்கோல் புரட்சி" நூலை சென்ற வருடம் அவர் இறந்தபின் அதைப்பற்றிய ஜெயமோகனின் அஞ்சலி கட்டுரை வழியாக அறிந்து கொண்டேன்.
விவசாய விஞ்ஞானியாக பணிபுரிந்தவர் அடிக்கடி சோதனைகூடத்திலேயே சுயநினைவு இழந்துவிடுகிறார். மருத்தவமனையில் சிறிது காலம் சிகிச்சை பெற்றபின் ஒரு நாள் துறைமுகத்தை ஒட்டியிருக்கும் மலையில் ஏறுகிறார்.அங்கே மரத்துக்கு அடியிலேயே இரவு முழுவதும் தூக்கமும் அல்லாத விழிப்பும் அல்லாத நிலையில் துறைமுகத்தை பார்த்தபடியே இருக்கிறார். சூரியோதத்தின் போது நேய்ட் ஹிரான் என்ற பறவை அவரை கடந்து செல்கிறது. அதன் சிறகடிப்பை கேட்கிறார். மனிதருக்கு எல்லாம் புரிந்துவிடுகிறது. தர்க்க அறிவுக்கு எல்லை உண்டு என்று அறிகிறார். வேலையை ராஜினாமா செய்கிறார். இயற்கையை விவசாயம் செய்கிறார். செயற்கை விவசாயத்தை விடவும் இயற்கை முறையே சிறந்தது என்று உறுதி செய்கிறார்.தொண்ணூற்றி ஐந்து வயதில் சென்ற வருடம் இறந்தார். One Straw Revolution என்பதை தவிர The Natural Way of Farming , The Road back to Nature ஆகிய புத்தகங்களையும் எழுதியுள்ளார்.காந்தி விவசாயம் செய்திருந்தால் இயற்கை விவசாயமே செய்திருப்பார் என்று சொல்கிறார்.
அந்த புத்தகம் விவசாயத்தை மையப்படுத்தி பேசும் போதும் அது ஒரு தத்துவ நூல் தான். தர்க்க அறிவுக்கு மீறிய ஒரு நிலை உண்டு , அது மனிதனுக்கு சாத்தியப்படும் என்பதை நடைமுறையில் கண்டுகொள்கிறார். இந்த புத்தகம் ஏற்படுத்திய மனஎழுச்சி நிறைய மாதங்களுக்கு இருந்தன. இப்போது மனம் சற்று சமன் அடைந்துள்ள நிலையில் என்னால் சொல்லமுடிந்ததெல்லாம் இதுதான். மனிதனின் தர்க்க அறிவுக்கு மீறிய ஒரு நிலை மனிதனுக்கு சாத்தியமே. அதை அவன் தன் கர்மத்தின் மூலமும் அடைய முடியும். அந்த நிலையை தியான நிலை என்று சொல்லாமா தெரியவில்லை. அந்த நிலையில் இந்த முடிவற்ற பிரபஞ்சத்தின் துளிதான் தான் என்றும் , கடலே அலை, ஆக தானே பிரபஞ்சம் என்பதும் , பிறப்பும் இறப்பும் அதன் உண்மையான அர்த்தத்தில் இல்லை என்ற உணர்தலும் சாத்தியமே.
இந்த கர்ம ஞானிக்கு என் அஞ்சலி.
பகுப்புகள்:
கட்டுரை
நாட்டாரியல் வரலாறு
குறிஞ்சிப்பாடி அருகே கஞ்மநாதம்பேட்டை என்கிற கிராமத்தில் எனது தாத்தா காலத்தில் இருந்திருக்கிறார்கள். தெலுங்கு பேசும் கம்மவார்களான இவர்கள் எப்படி அங்கே சென்றார்கள், விவசாயம் செய்தார்கள்.இதை அறிந்து கொள்ள முயற்சி செய்தால் அது ஒரு வரலாறை நமக்கு கொடுக்கும். அந்த வரலாற்றின் மூலம் நமக்கு கிடைக்கும் தரிசனம் பல வாசல்களை திறக்கும்.அந்த வரலாறு, நாட்டாரியல் வரலாறாகத்தான் இருக்கமுடியும்.
நாட்டாரியல் என்ற பெயரை சொல்லிக்கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது.
கி.ராஜநாரயணனின் கோபல்ல கிராமம் என்ற நாட்டாரியல் நாவல் 1976ல் முதல் பதிப்பாக வெளிவந்திருக்கிறது.
கம்மவார்கள் தெலுங்கு பேசும் நாட்டிலிருந்து தெற்கே பல மைல் தூரம் சிறு சிறு குழுக்களாக ஏதேதோ காரணங்களுக்காக வெவ்வேறு காலக்கட்டங்களில் தமிழ் பேசும் மண்ணின் பல இடங்களுக்கு புலம்பெயர்ந்திருக்கின்றனர்.அப்படிப்பட்ட ஒரு குழுவைப்பற்றிய நாட்டாரியல் வரலாறு இந்த நாவல்.நூற்றி மூப்பத்தி ஏழு வயது நிரம்பிய மங்கத்தாயாரு அம்மாள் தன் நினைவாக சொல்லும் நாட்டாரியல் வரலாறு. அதில் வரும் யதார்தத்திற்கு மீறிய காட்சிகளே நம்மை வசீகரிக்கிறது.யதார்தத்தின் ஆழ்மன உணர்வுதான் கற்பனை என்று எம்.என்.விஜயன் பஷீர் பற்றிய பஷீர் எனும் தனிமரம் கட்டுரையில் சொல்கிறார். அது உண்மை.
சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை நாவலில் முதல் பகுதியில் ஆசான் மூலமாக விவரிக்கப்படும் வரலாற்றை படிக்கும் போது ஏற்படும் உணர்வு , பின்பு விவரிக்கப்படும் நாவலின் சமகாலத்திய வரலாற்றில் இல்லை. அதற்கு காரணம் அந்த ஆசானின் மொழியில் இயல்பாக வெளியாகும் யதார்த்திற்கு மீறிய சொல் முறையே. இதை பொய் என்று ஒதுக்க முடியாது. நாம் சொல்வது நம் மனதில் இருக்கும் காட்சி பிம்பங்களையே.உண்மைகளை அல்ல.
அதே நேரத்தில் இதுபோன்ற கற்பனைகளை,கவித்துவங்களை ஒரு எழுத்தாளன் மிகவும் சிரத்தை கொண்டு செயற்கையாக உருவாக்கினால் அது திகட்ட கூடும்.எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் நாவலில் வரும் கவித்துவம் வாசகனை கிறுகிறுக்க செய்யக்கூடியது. படித்த சில நாட்களுக்குப்பின் அந்த கிறுகிறுப்பு மறைந்தபின் எஞ்சுபவை என்ன என்பது தான் முக்கியம். நெடுங்குருதி நாவலின் மூலமே இன்று நான் வெயிலை ரசிக்கிறேன். ஒளிக்கற்றைகளை பார்க்கும்போது மனம் கொள்ளும் எழுச்சி ஆச்சர்யம் அளிக்கிறது.யாமத்தில் அது செயற்கையாக மிகைபடுத்தபட்டுவிட்டதால் அந்த வசீகரம் இப்போது மறைந்துவிட்டது.
கோபல்ல கிராமம் நாவலில் வரும் , நாவலின் சமகாலத்திய பதிவுகளும் , கழுமரம் பற்றிய குறிப்புகளும் மிக முக்கியமான ஆவணங்கள்.ஒரு கலைஞன் என்பவன் யார்? எல்லா மனிதர்களையும் மனிதர்கள் என்று உளப்பூர்வமாக ஏற்றவன். அதை தன் மொழியில் நிரூபிப்பவன். கி.ரா. நம் காலத்து மூத்த கலைஞன்.அவருக்கு என் வணக்கங்கள்.
என் வாழ்க்கையில் என் மூதாதையர்களின் கதையை ஒரளவுக்கேனும் தெரிந்து கொள்ள முயற்சி செய்வேன்.சாதிய நோக்கத்தில் இதை தெரிந்து கொள்ளவோ , ஆர்வம் கொள்வதோ கூடாது என்ற பூச்சுகளையெல்லாம் ஏற்கவே தேவையில்லை. அவை நம்மை எங்கும் ஈட்டுச் செல்லாது , வெறும் மண் மேல் நிற்கும் மனிதர்களாக்கி விடும். அது ஏற்படுத்தும் வெறுமை நம்மை தனிமனிதனாக உலகை நோக்க செய்யும். பிறகென்ன தனிமனிதர்களாகி இருப்பு சார்ந்த துயர் பேசுவோம்.
கோபல்ல கிராமம் - அன்னம் வெளியீடு
பகுப்புகள்:
கட்டுரை
Subscribe to:
Posts (Atom)