நான்தான் நீ என்பது ஒரு உண்மை: தேவதேவன்
குறிப்பு-வடபழனியிலுள்ள ஒரு பழைய புத்தக கடையில், நெய்வேலியிலிருந்து வெளிவந்த வேர்கள் சிற்றிதழின் 1999 ஆம் ஆண்டு இதழ் கிடைத்தது.
அந்த ஆண்டு சிற்பி இலக்கிய விருது கவிஞர் தேவதேவன் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. அப்போது அவரிடம் வேர்கள் அமைப்பினரால் எடுக்கப்பட்ட நேர்காணல் இது.
வேர்கள் இதழுக்கு நன்றி.
---------------------------
இவ்வான்டின் 'சிற்பி இலக்கிய விருது' பெற்றுள்ள தேவதேவனின் இயற்பெயர் பிச்சுமணி கைவல்யம்.வயது 51.ஆசிரியராக பணிபுரிகின்றார்.அம்ருதா , அரவிந்தன் என்று இரண்டு குழந்தைகள். பள்ளியிறுதிவரை படித்தபின் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தார்.வேலை கிடைக்காத்தினால் தன் வீட்டின் ஒரு பகுதியிலே அச்சகம் வைத்து நடத்தினார்.அதிகமான அறிமுகம் இல்லாத நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்கி தன் வீட்டை பிணையாக்கினார். கடன் வாங்கிய நண்பர் ஒடிப்போனபின் வங்கி அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு , நீதி மன்றத்திற்கு அலைந்து இறுதியாக பெருந்தொகை கொடுத்து தன் வீட்டை பிணையிலிருந்து மீட்டார். இது போன்ற சம்பவ அடுக்குகளால் பின்னப்பட்டது தேவதேவனின் வாழ்க்கை.
கலை, இலக்கியம் , சமூகம் , வாழ்க்கை என்று பேசும்போது தன்னை ஒரு பெரும் கலாச்சார சக்தியாக , அசாதாரண மனிதனாக உணர்பவராகவும் , உணர்த்துபவராகவும் காணப்படும் தேவதேவன் , தன் இளமைக் காலத்தில் அரசியல் மற்றும் புரட்சி பேசும் தன்னையொத்த இளைஞர்களால் பெரிதும் விமர்சிக்கப்படுவரும் , ஆகர்ஸிக்கப்படுபவருமான ஆளுமையை உடையவர். 70களில் தூத்துக்குடியில் உள்ள சில ஆர்வமுள்ள இளைஞர்களால் நிறுவப்பட்ட 'தர்சனா' திரைப்படக் கழகத்தின் பிதாமகர்.மிகப் பிரம்மாண்டமான அளவில் நடந்த புத்தகத் திருவிழா நிகழ்வின் மிக முக்கிய சக்தியாக இருந்தவர்.கலாச்சாரம் குறித்த பல கனவுகளை உடைய இவர் ஒரு கவிஞனாக எஞ்சியது ஒர் இயற்கை நிகழ்வு என்றுதான் கூறவேண்டும்.
இன்று கவிதையை மூச்சுக்காற்றாய் கொண்டிருக்கும் தேவதேவன் இதுவரை பத்து கவிதை தொகுதிகள் வெளியிட்டிருக்கின்றார்.
1.குளித்துக்கரையேறாத கோபியர்கள்(1976)
2.மின்ன்ற்பொழுதே தூரம் (1981)
3.மாற்றப்படாத வீடு (1984)
4.பூமியை உதறியெழுந்த மேகங்கள் (1990)
5.நுழைவாயிலிலே நின்றுவிட்ட கோலம் (1991)
6.சின்னஞ்சிறிய சோகம் (1992)
7.நக்ஷ்த்திர மீன் (1994)
8.அந்தரத்திலே ஒர் இருக்கை (1995)
9.நார்சிசஸ் வனம் (1996)
10.புல்வெளியின் ஒரு கல் (1998)
'கவிதை பற்றி' என்னும் (உரையாடல்) தொகுப்பு வெளியிட்டிருக்கிறார்.
கவிதைகள் தவிர சிறுகதைகள் , நாடகம் , திறனாய்வு கட்டுரைகள் , மற்றும் மொழிபெயர்களும் செய்திருக்கிறார்.
கவிதைகள் மீது கொண்ட தாகத்திற்கு சற்றும் தணியாத தாகத்துடன் தன் வீட்டைச் சுற்றிலும் , பள்ளி வளாகம் முழுவதிலும் மரம் வளர்த்து வருகிறார்.
உணவு மற்றும் உடை விஷயங்களில் எளிமையாகவே வாழ்கிறார்.ஆர்வத்துடன் உரையாடலில் ஈடுபடுகிறார். தன் கருத்துகளை வற்புறுத்திச் சொல்லி தயங்கிவதில்லை.மழுப்பலற்ற நேரடியான பதில்களையே தருகிறார்.
வேர்கள் சார்பாக தேவதேவனை பேட்டி கண்டவர் எழுத்தாளர் மோகனன். அப்பேட்டியினை ஒட்டி சில
துனைக்கேள்விகள் : பா. சத்தியமோகன்.
'கவிஞனாக' உருவெடுத்த இளமைக் காலம் பற்றி....
வறுமையும் அறியாமையும் நிறைந்த ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தேன். என்னுடைய இளமைக்காலம் ரொம்பத் துக்கம் நிறைஞ்சதா இருந்தது. பிறந்த்திலிருந்தே நான் அப்படித்தான் இருந்திருக்கேன். காரணம் புரியாத ஒரு துக்கம். பிறகு பொருளாதார ரீதியில் உள்ள கஷ்டங்கள். படிப்பைத் தொடரமுடியாத நிலை.இந்த நிலைமையிலேயே கலைகள் மீது எனக்கு ஏற்பட்ட ஆர்வமும் மோக பங்கமும்... இதுதான் சுருக்கமான எனது இளமைக்காலம்.
'காரணம் புரியாத துக்கம்' என்கீறிர்கள், உங்கள் பெரும்பாலான கவிதைகளில் அதை உணர முடியாது.அந்த இனம் புரியாத துக்கத்தின் தொடர்பாகவோ, வேறு வடிவமாகவோ உங்கள் கவிதைப் படைப்புகளைக் கருத இடம் இருக்கிறதா?
எனது துக்கத்தை அவதானிக்கும் விதமாகவும் அதிலிருந்து விடுதலை பெறுமவிதமாகவும் அந்தக் கவிதைகள் உருவாகியுள்ளன. விடுதலையடைந்த மனிதனின் உற்சாகமும் பரவசமும் என்னுடைய கவிதைகளில் உண்டு . வில்லியம் பிளேக் தன்னுடைய கவிதைகளை வகைப்படுத்தும் போது கண்டைந்த ஆனந்தமும் துக்கமும்("Songs of Innocence & Songs of Experience) என்னுடைய கவிதைகளில் உள்ளன.
தமிழின் நீண்ட கவிதை மரபு, சங்கக் கவிதை, மரபுக் கவிதை பற்றி...
தமிழுக்கு நீண்டதும் தனித்துவமானதுமான ஒரு கவிதை மரபு இருக்கிறது. இயற்கையோடு நெருங்கி வாழ்ந்த காலத்தைக் காட்டுகின்ற சங்க காலப் பாடல்கள் மிகவும் தனித்துவம் வாய்ந்தவை. தாங்கள் வெளிப்படுத்த வேண்டிய விஷயங்களுக்கு அவர்கள் இயற்கையப் பயன்படுத்திய விதம் இன்றைய நவீன , பின் நவீனத்துவக் காலத்திலும் மறுக்க முடியாத சில கூறுகளைக் கொண்டுதான் இருக்கிறது. திருக்குறள் தோன்றுகிற சமயத்தில் உலகத்தின் எந்த மூலையிலும் இவ்வளவு உயர்வான - கவிதைச் செறிவிலும் கூட - இவ்வளவு உயர்வான ஒரு நீதி நூல் தோன்றியதில்லை என்று அறிகிறோம். கவித்துவ உத்தேசமில்லாமலேயே எழுதப்பட்ட நீதிநூலில் கவிதையின் முக்கிய கூறான மனவெழுச்சி எவ்வளவு தூரம் வெளிப்பட்டிருக்கிறது என்பதுதான் நாம் வியந்து கவனிக்க வேண்டிய விஷயம். நீதியுணர்வுக்கு அடிப்படையானது இந்த மனவெழுச்சி என்பதுதான் காரணம் என்று தோன்றுகிறது . அடிப்படைகளைத் தொட்டுள்ள படைப்பு திருக்குறள்.
தானாடுகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்தம் மாலும் என்நெஞ்சு....
இது மாதிரி நிறைய குறள்களில் காணப்படுகிற உணர்வெழுச்சிகளை "ரொமாண்டிக்" தனமானது என்று தள்ளிவிடக் கூடியது நவீனக் கவிதைக் கோட்பாடு. ஆனால் அது வள்ளுவருக்குத் தெரியாது. அவருக்குத் தெரிஞ்சது அவரது ஆர்வமும் மனவெழுச்சியும் மட்டுத்தானே. இன்றைக்கு இதுபோன்ற ஒரு "ரொமான்டிக்" கான மனவெழுச்சியில்தான் மிக உயர்ந்த ஒரு யதார்த்த நிலையை நாம் அறியமுடியும் என்று நான் என்னுடைய உரையாடல்களிலும் , கவிதைகளிலும் எழுதி உணர்த்தி உள்ளேன். இன்றைக்கு பின் நவீனத்துவம் கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும், இருக்கமுடியும் என்கிறது. மறைந்த "குரு" நித்ய சைதன்ய யதி போன்றோர்கள் பேட்டி (காலச்சுவடு) மூலமும் உறுதிப்படுத்தப்படுகிறது . ஜெயமோகன் தனது ஆழ்ந்த படிப்பு மற்றும் அவதானங்கள் மூலமாக இதை ஒரு நூலாக எழுதியுள்ளதையும் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இது முக்கியமான ஒரு பாய்ச்சல்.
உணர்ச்சி மிகையைத் தவிர்க்க வேண்டும் என்பது நவீனத்துவக் கோட்பாடு. அதை (உணர்ச்சியை) அறிவுத்தளத்தில் நாம் யோசிக்கவேண்டும் அல்லவா?
எழுத்தில் உணர்ச்சி மிகையைத் தவிர்க்க வேண்டும்தான். நாம் தர்க்கத்திற்கு அடிப்படையாய் உள்ள "உணர்ச்சி மிகை" யை இப்பொழுது வற்புறுத்துகிறோம். சொற்களிலும் அது ஒரு இசையாக வெளிப்பட்டால் நல்லது என நினைக்கிறோம்.
ஒரு நுண்பொருள் உருவத்தை உருப்பெருக்கிக் காட்டுற மைக்ராஸ் கோப்பாலத்தான் காணுதல் , புரிதல் சாத்தியமாகிறது மாதிரி .காவிய இலட்சனங்கள்ல ஒன்றுதானே அதீதக் கற்பனை. அதற்கு எத்தகைய மனவெழுச்சி வேனும்னு நாம் யோசித்துப் பார்க்கணும்.நாம கவிதை மூலமா கவிஞன் மூலமா அடைய வேண்டியது அந்த மனவெழுச்சிதான்.அதை வடிகட்டி நாம கண்டமைகிற அறிவு எல்லாம் கவிதையில் இரண்டாவது விஷயம்தான் .அந்த அறிவிலும் அழகும் அற்புதமும் உண்டுங்கிறதையும் மறுக்க முடியாது .
இன்றைய கவிஞன் பிரஞ்சு மற்றும் ஐரோப்பியக் கவிதை மரபுகளை அறிந்தவன். நமது சங்க இலக்கியம் , பக்தி இலக்கியம் , காவியங்களை அறியும் போது ஆச்சிரியப்பட பல விஷயங்கள் இருக்கின்றன, என்றாலும் கவிதையில் உலக இலக்கிய வாரிசாகத்தான் அவன் வெளிப்பட வேண்டும்.அப்படி வெளிப்படும் போதுதான் அவன் இன்றைய கவிஞனாக இருக்க முடியும். இதையும் மீறி அவன் கவிதையில் ஒரு கலாச்சாரம் , மரபு , இனத் தனிமை , தவிர்க்கப்பட முடியாமல் இடம்பெற்றிருக்குமானால் - அப்போதுதான் அதை யாரும் குறை சொல்ல முடியாது.
கவிதையில் உலக இலக்கியத்தின் வாரிசாகத்தான் இன்றைய கவிஞன் வெளிப்பட வேண்டுமென நீங்கள் கூறுவது எதன் பொருட்டு? பரந்துபட்ட வாசிப்பு மற்றும் உள்வாங்குதல் , உணர்தலின் அடிப்படையிலா?
கவிதை அத்தகைய ஒரு கலை என்று நான் கருதுவதால்.
புதுக்கவிதைக்கு , 60 களில் இருந்த உத்வேகம் இப்போதும் உள்ளதா?
பாரதியும் , பாரதிதாசனும் இலகுவான யாப்புகளைப் பயன்படுத்தினார்களே ஒழிய யாப்பைத் துறக்கவில்லை. புதிய விஷயங்களுக்கு வந்தாங்க.ஆனாலும் முற்றிலும் புதிய விஷயங்களை யாப்பிலே சொல்ல முடியுமாங்கிற சந்தேகம் இருந்தது. இவர்களால நவீனக்காலக் கவிஞர்களா ஆக முடியாம இருந்தது. இந்தச் சமயத்துல நவீனக் கவிதையை ஒரு இயக்கமா சி.சு.செல்லப்பா ஆரம்பிக்கவும் தமிழ்க் கவிதையுலகில ஒரு எழுச்சி , சுறுசுறுப்பு பிறந்தது. எல்லா எழுத்தாளர்களும் ஒரு திருவிழாக் கொண்டாட்டம் மாதிரி புதுக்கவிதைகள் எழுத ஆரம்பிச்சாங்க, அதேதான் இன்னைக்கும் தொடருது. அதில எந்த மாற்றமுமில்ல.60கள்ல இருந்த அதே மாதிரி உத்வேகம் இன்னமும் இருக்கவே செய்யுது.
ஒரு கவிதை உங்களுக்குள் எவ்வாறு உருவெடுக்கிறது?
ஒளி வீசுகிற ஒரு காட்சி என்னை வசீகரிச்சு ஒரு படிமமா எழுதத் தூண்டியிருக்கு.
நெஞ்சு கனத்து கண்ணீரை வர வைக்கிற தனிமையில் அப்போ காணுற காட்சி, என்னை மொழி பெயர்க்க உதவுற படிமமா உதிவியிருக்கு.
துக்கம் நிறைந்துவிட்ட மனநிலையோட அந்த் வேதனையின் துக்க காரணத்தை ஆராய்கிற விதமா நான் உட்கார்ந்திருவேன்
அப்போ ஒரு தாளம் இசையோடு கூடிய ஒரு வாக்கியம் , எனக்கு நானே பேசிக்கொள்ள உதவுவது போல வரும். அந்தச் சொல்லே அதற்கான அடுத்த அடுத்த சொல், படிமம் எல்லாவற்றையும் இழுத்துக் கொண்டு வந்து , எப்படி எழுதி முடித்தேன் என்று பின்னால் வியக்கும்படியான , என்னை மீறிய ஒன்றாக அது எழுதப்பட்டிருக்கும்.
என் மனதில் திரும்பத் திரும்ப வந்து மோதும் தீவிரமான படிமங்களை நான் தியானித்துக் கோர்த்தும் எழுதுவதுண்டு.நெடுங்கவிதை முயற்சிகளுக்கு இந்த்த் தியானம் அவசியம்.
உங்களது கவிதை அனுபவம் மிகவும் சிகரத்தில் இருக்கிறதா தோணுது. அதாவது எழுத உட்காருதல் என்கிற ஒரு புறச்செயலைத் தவிர , துக்கம் நிறைந்த அந்த மனோவேளை உங்களை எழுத வைப்பது உன்னதம்தான். அப்படியெனில் அந்தப் பொழுதிற்காகக் காத்திருப்பதும் நிகழ்கிறதா? நீங்கள் விரும்பி எழுத முற்படுவது என்ற நிலையை நீங்கள் மறுப்பதாக எடுத்துக் கொள்ளலாமா? இந்தக் கேள்வியைக் கவிதை மனோபாவ ஆளுமை குறித்த கேள்வியாகக் கூடக் கருதலாம்.
'அந்த இடத்தை' - அதுதான் எனது 'மூட்' , எனது 'யதாஸ்தானம்' என்று கருதுகிறேன். எல்லா வேலைகளையும் மளமளவென்று முடித்துவிட்டு அந்த இடத்திற்கு ஒவ்வொரு நாளும் தவறாமல் போய் இருக்கவே விரும்புகிறேன். மற்றப் பொழுதுகளில் குழந்தைகளுடனும் , நண்பர்களுடனும் , ஆர்வத்துடன் ஈடுபடமுடிகிற பிற தொழில்களிலும் இருக்க விரும்புகிறேன். நான் காத்திருக்கலை. ஆனா நான் எப்போதும் என்னுடைய இருப்பிடத்திற்கும் போக விரும்புகிறேன். அங்கிருந்துதான் நான் கவிதை எழுதறேன். அங்கிருப்பது தண்ணீரில் இருப்பது மாதிரி.கவிதை எழுதுவது நீர்ப்பூவைப் பறிப்பது மாதிரி.
நீங்கள் எழுத ஒன்றுமில்லாத வெறுமையை உணரும் போது என்ன செய்கிறீர்கள்?
பெரும் படைப்புகளைத் திட்டமிட்டிருப்பவர்களிடம் நீங்கள் இக்கேள்வியைக் கேட்க முடியாது. நான் கவிஞன் என்பதால் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். எழுத ஒன்றுமில்லாமல் இருக்கும் வெறுமையை நான் துக்கமாக ஆக்கிக் கொள்வதில்லை."கதே" யைப் போல , வாசிப்பிலும் , மானுடப் பிரச்சனைகளை அன்றாட நிகழ்வுகளில் சிந்திப்பதிலும் செலவிடுவேன்.
பாரதி பாரதிதாசனுக்குப் பின் அவர்கள் அளவுக்குச் சொல்லக்கூடிய கவிஞர்கள் உருவாகாதது ஏன்?
இருவருமே தங்களது தார்மீக ஆவேசத்தை சமகாலத்தோடு பிணையும்படி விட்டார்கள்.இன்றைய கவிஞர்களுக்கு அத்தகைய ஆவேசமோ சமர்ப்பணமோ இல்லை. ஆனாலும் ஒன்று சொல்வேன்: முதல்ல கவிதையோட தளம் என்ன? எல்லாக் கலைகளோட உச்சத்தைத்தான் கவிதைன்னு சொல்றோம்கையில கவிதைங்கிற கலை தன்னியல்பாகவே எதற்காகத் தோன்றியிருக்குன்னு நாம யோசிக்கணும். பாரதி, பாரதிதாசன் இரண்டுபேருமே தங்களுடைய தார்மீக ஆவேசத்தை முறையே தேசீயத்திலும் , தமிழ்த் தேசியம் மற்றும் சமூகச் சீர்திருத்தம் ஆகியவற்றிலும் பெரும்பாலும் செலவிட்டார்கள்.பாரதிதாசன் அழகின் ரகசியம் , குடும்பம் என்று நுணுகிச் சென்றது போலவே , பாரதியும் ஆன்மிகத்திற்குள் நுழைந்தார் , அவை நமது வேதங்கள் , உபநிஷத்துக்கள் ஆகியவற்றின் எதிரொலியாக அமைந்ததே அன்றி, ஜீரணித்தமையால் ஏற்பட்ட வாழ்வனுபவங்களாக வரவில்லை. தாகூருக்கு அவரது ஆளுமையின் வெளிப்பாடாகவே அவை வெளிவந்தன. பாரதி , பாரதிதாசன் இருவருமே குறிப்படத்தக்க நம் கவிஞர்கள் என்பதோடு அவர்களது தார்மீக ஆவேசத்தை நாம் சந்தேகப்படுவதன் மூலமே , அதாவது துருவுவதன் மூலமே நம்மிலும் வளர்ச்சி சாத்தியமாகும் . இன்று பின் நவீனத்துக் கவிதை பிரமளில் தொடக்கம் கொள்கிறது என ஜெயமோகன் நிறுவுகிறார் . பிரமளின் மொத்தப் படைப்புகளையும் கொண்டு பார்த்தால் தமிழுக்குக் கிடைத்த அடுத்த கவிஞர் அவர் என்று நாம் காண முடியும் முந்தைய கவிஞர்களை நாம் சந்தேகப்படுவது- துருவுவது போலவே நாம் பிரமிளையும் ஆராய வேண்டும். புறங்காரணங்களான அரசியல் மற்றும் பண்பாட்டு நெருக்கடிகள் ஒருவனை வெகுதூரம் வழி நடத்துவதில்லை.மழைக்காக அண்ணாந்தவன் எல்லையற்ற வானத்தைக் கண்டடைவதற்கு அவனுக்குள் ஏற்கனவே தார்மீக எழுச்சி பதுங்கியிருந்திருக்க வேண்டும் அதுவும் போதிய வீரியத்துடன்.
கவிதைகளில் நீங்கள் குறிப்பிடும் தார்மீக எழுச்சி ஒரு கவிஞனுக்கு இயற்கையிலேயே இருக்க வேண்டுமென்கிறீர்கள்?அதை ஒரு முக்கியமான கூறுபாடாகக் கருதுகீறிர்களா?
ஆமாம்.இல்லாவிட்டால் அவன் யார்? அவன் எதற்காக எழுதனும்? அவன் தன் கட்சிக்காகவும் , சாதிக்காகவும் கூச்சலிடுவது எழுத்தாகிவிடுமா?
கவிதை என்பதற்கு அடிப்படையான அழகியல் , உள்ளடக்கக் கோட்பாடு வடிவம், உத்தி பற்றி.
அழகியல் அடிப்படை.ஏதாவது ஒரு உணர்வுதான் உள்ளடக்கம். அந்த அழகும் உணர்வும் ஒவ்வொரு கவிதையிலும் தனக்கே ஆன ஒரு முழுமையைத் தானே தேர்ந்தெடுத்துக்கொள்கிறது.அதுதான் அந்தக் கவிதையோட வடிவமாயிடுது.ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும். உணர்வு என்பதே தன்னளவில் மிகத் தீவிரமான ஒன்றுதான்.அந்தத் தீவிரத்தின் மூலமே எதையாவது ஒன்னை வெளிபடுத்துகிறோம். அல்லது கண்டடைகிறோம்.அதைக் கவிதை என்கிறோம். கவிஞனோட போதமும் தீவிரமும் தாங்கள் வெளிப்படத் தோதான உத்திகளைத் தாங்களே தேடி எடுத்துக் கொள்கின்றன.
உங்களது 'நக்ஷ்த்ரமீன்' தொகுப்பில் 'உள்ளும் புறமுமாய்ச் சில படிமங்கள்' கவிதையில்
நிலா ஒளிபோல அகண்டது என் இதயச்சதை
சின்னஞ் சிறு இடையூறுக்கும் சிலந்தி வலைப்போல அது துடிக்கிறது.
சின்னஞ் சிறு தூண்டலுக்கும் நிலாவினைப் போல் அது பாடுகிறது
எப்போதும் எனக்கு ஒரே வேலை
இந்த இதயத்தை பழுதுபார்க்கும் வேலை
என்கிறீர்கள். கவிதையில் நீங்கள் குறிக்கும் 'நான்' 'எனது' அனுபவங்கள் வாசிக்கும் போது வாசகனுக்காகிறது. சமூகத்தைச் சென்றடைய உங்களது உத்திமுறையாக இதுபோன்ற கவிதைகளை எடுத்துக்கலாம்னு நினைக்கிறேன்.
ஏனேனில் அறியப்பட வேண்டிய கவிஞர்கள் மத்தியில் நீங்கள் உணரப்பட வேண்டிய கவிஞரா இருக்கிறதால இப்படி கேட்கிறேன்?
அது உத்திமுறை என்பதல்ல. நான்தான் நீ என்பது ஒரு உண்மை.ஆகவே நாம் நாம அனுபவத்தைச் துணிந்து சொல்லலாம்.அது ஆழமான அனுபவமாக இருப்பின் எல்லோரது அனுபவமாகவும் விரிவுகொள்வது இயற்கை.
தமிழ்க் கவிதையின் எதிர்காலம் பற்றி...
நான் யோசிக்கலை. நடந்துகிட்டிருக்கிறது பற்றி யோசிச்சிருக்கேன்.
கவிஞனோட சக்தி காலத்தை அழிச்சு புதுப்பிக்குது சொற்கள்ல புதுப்படிமங்களை உருவாக்குது. நம்ம கவிஞர்கள் தங்கள் கவிதை மீதே நம்பிக்கையில்லாதவர்கள் தாங்கள் கவிஞர்கள் என்பதன் மீதும் நம்பிக்கை கிடையாது. திராணி இல்லாதவர்கள் "கவிதை என்பது காகிதத்தில் எழுதப்படும் எழுத்துக்களே " என்று ஒரு அமைப்பியல்வாதி சொல்லிவிட்டால் உதறலெடுக்கக் கூடியவர்கள்.
சுற்றுச் சுழல் அக்கறை பற்றிய உங்கள் பின்ணணி என்ன?
சுற்றுச் சூழல் அக்கறைங்கிற மாதிரியான எந்த ஒரு பிரக்ஞையோடயும் நான் எதையும் எழுதியதில்லை. மனம் பெரியதாய் வேதனை கொண்ட ஒரு நிலையில், கையறுநிலை போன்ற ஒரு நிலையில் நெஞ்சப் பொருமலாய் வெளிவந்த ஒரு வரிதான் "ஒரு மரத்தை கூடக் காணமுடியவில்லை" என்ற வரி.அதைத் தலைப்பாக வைத்து அந்த மனநிலையோட நான் எழுதிமுடித்த அந்தக் கவிதையில இருக்கிறது, என் மனசோட ஒரு நிலச்சித்திரம்தான்.அதே மாதிரிதான் "அகழி" நெடுங்கவிதையும்."அகழி" யோட படிமங்கள் என் மனதில் உதித்திருந்த போது உலகில் ஓசோன் பிரச்சனை எழுந்திருக்கவில்லை.மேலும் இயற்கையின் முன்பு என் மனம் கொள்கிற பரவசத்திலிருந்து என்னோட பல கவிதைகள் பிறந்திருக்கு."அகழி" ஒரு துஷ்டலோகம்(Dystopia)
திராவட இயக்கம் இடதுசாரி இயக்கம் தமிழ் நவீன இலக்கிய வளர்ச்சியில் போதுமான தாக்கம் செலுத்தி உள்ளதா?
நாம பரிசீலித்தாக வேண்டிய நிலையில மறைமுகமான அதனோட தாக்கம் தமிழ் நவீன இலக்கியத்தை நன்றாக பாதிச்சிருக்கவே செய்யுது. அழகியலோடு முற்போக்கான அம்சம் மற்றும் அறச் சீற்றத்திற்கு முதன்மை கொடுத்து ஒரு தேர்வுடன் இலக்கியம் அதாவது முற்போக்கு இலக்கியம் தன் பங்கை அளித்திருக்கவே செய்யுது. அதே போலதான் திராவிட இயக்கத்தின் உள்ளார்ந்த பலத்தை அந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களாலும் கூடச் சீரழிக்க முடியாததற்கு அதன் அறம் தான் காரணம்.
ஓரளவுக்கு படிக்கும் போக்குடைய வாசகர்களைத் தன்வயப்படுத்தி இதற்குமேல் போகாதே என அணைகட்டுவது போல் சட்டாம்பிள்ளைத்தனம் செய்யும் "போக்குகள்" பற்றி...
காலத்தை யாராலும் அணைபோட முடியாது. உள்ளேயிருந்து கொண்டே அவர்களைக் கேள்வி கேட்கிற இளைஞர்கள் அங்கேயும் தோன்றுவார்கள். ஒரு அமைப்பில் இருந்து கொண்டு , 'தலைவர்கள்' பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கிற இளைஞர்கள் மிகவும் பலவீனமானவர்கள்தான். ஒருவன் பொதுவான ஒரு சமூகச் செயல்பாட்டுக்காகவே ஒரு குழுவை நாட வேண்டும்.கருத்துலக மனப் பாதுக்காப்புக்காக நாடுவது பெரிய அவலம். அத்தகைய சுகந்திரமற்ற இளைஞர்கள் சுயவாசிப்பு மூலம் நல்ல இலக்கியங்களை அடையாளங்காணமுடியாத ஊனத்தை அடைந்துவிடுகிறார்கள்.அவர்கள் விடுதலை பெற வேண்டும். அதற்கு படைப்புகள் பற்றிய ஆழ்ந்த விரிவான விமிர்சனங்களும், ஆய்வுகளும் நமக்குத் தேவை.
திராவிட இயக்கப் போக்கினால்தான் தமிழின் நவீன இலக்கியத்திற்குப் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை`என்பது பற்றி...
அப்படியா? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அமைப்பியல் , பின் அமைப்பியல் நோக்கிலான விமர்சனங்கள் பற்றி.
அது எழுப்பிய பரபரப்பு இப்போது ஓய்ந்துவிட்டதென நினைக்கிறேன். உண்மையைக் கண்டடைவதற்கான வழிகளை வித்தியாசப்படுத்தவது அந்த்த் தத்துவங்களோடு உள்ள கலைச் கலைச் சொற்கள்தான்.இந்தக் கலைச் சொற்களை ஒருவன் ஜீரணித்த பிறகு உண்மையைக் கண்டடையும் முறையில் ஒரு சுலபம் ஏற்பட்டிருக்க வேண்டும்.அந்தக் கலைச் சொற்களை உபயோகிக்காமலேயே வேகமாகத் தன் தொழிலில் இறங்க வேண்டும்.முடிவைத் தவறின்றிக் காண முடிய வேண்டும். தவறுகள் நேர வாய்ப்புகள் வைத்திருக்க கூடாது அந்தத் தத்துவம். ஆனால் பின் அமைப்பியல் இன்றும் வளர்ந்து கொண்டு வருவது தெரிகிறது.
அமைப்பியல் , பின் அமைப்பியல் பூர்வமா உங்களது ஒரு நல்ல கவிதை தீவிரமா விமர்சிக்கப்பட்டு நிராகரிக்கப்படும்போது உங்களது எதிர்வினை என்னவாக இருக்கும்?
சிரிப்பேன்.
எழுத்தாளன் பணி எழுதுவதோடு நின்றுவிடுகிறதா? உங்கள் எழுத்து மூலம் நீங்க தெரிவிக்க விரும்புவது?
எழுத்தாளன் , அவன் எழுதும் எழுத்தோடு தொடர்புடையதாகத்தான் அவன் செயல்பாடும் இருக்கும். பெரிய போராட்டங்களிலோ, தீவிரமான ஒரு இயக்கத்திலோ அவன் இல்லாம இருக்கலாம். " பாவனை" தான் பொல்லாதது. Fancy ஆக ஒன்றைச் செய்யாமலிருப்பது நல்லது.என் எழுத்து இன்றைக்கு வாழ்ற ஒரு மனுஷனோட ஜீவனை வெளிப்படுத்துற நோக்கங் கொண்டதாக நினைக்கிறேன்.
தமிழ் இலக்கியச் சூழல் அதன் குழு மனோபாவம் பற்றி...
"கெட்டதைப் பார்க்காதே, கெட்டதைப் பேசாதே , கெட்டதைக் கேளாதே " ங்கிற அறிவுரைக்குச் செவிசாய்த்தவர்கள் மாதிரி இருக்கிறோம்.தமிழ் இலக்கியச் சூழல்ல குழு மனோபாவம் இருக்கிறதுங்கிறதுக்கான சான்றாக உங்க கேள்வியை எடுத்துக்கிடறேன். அடுத்தது நீங்க இந்தச் குழு மனோபாவத்தை ஒரு எதிர்மறை அம்சமா அதாவது ஒரு அவலமாக் கண்டுதான் கேக்கிறீங்க இல்லையா? சரி . அப்புறம் இந்த குழு மனோபாவம் எங்ககிட்ட இருக்குங்கிறதை யாராவது ஒத்துக்கிடாறாங்களா? இல்லை. அப்படின்னா நீங்க நெனைக்கிற குழுமனோபாவம் உங்கள் மனப் பிராந்தி தானா? இல்லை. அப்படீன்னா அந்தக் குழு மனப்பான்மையினால நிலவுற தீமைகள் என்னன்னும் உங்களுக்குத் தெரியும் . அதனாலதான் கேக்கறீங்க ? இந்தக் குழுமனப்பான்மைக்கு யார் காரணம்? எது காரணம் ? எத்தனை மனிதர்களுக்கு இது பற்றி அக்கறை இருக்கு? எந்த , யாருடைய சவுகரியத்தின் பொருட்டு இந்தக் குழுமனோபாவம்? இந்தக் கேள்விகளுக்குப் பின்னணியில் இருப்பது மிகவும் அருவருப்பான மனிதர்களாலான ஒரு சூழலின்றி வேறு என்ன? ஆனால் இதைப் பற்றிப் "பேசக் கூடாது, கேட்கக் கூடாது, பார்க்கக் கூடாது" ஆகவே திருட்டுத் தனமாக அவைகள் பேசப்படுகின்றன.அறியாத மனிதர்கள் ஒருத்தரும் இல்லை.
மலையாளத்தில் , கன்னடத்தில் உள்ளது போல தமிழில் வெகு ஜன இதழ்கள் இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் போனது ஏன்?
நம்ம வெகுஜன இதழ்கள் தரத்தில் பின் தங்கியிருப்பதுதானே காரணம்.நம்முடைய கலாச்சாரச் சக்திகள் சிதறுண்டு கிடக்கு. அவற்றை ஒன்று சேர்க்கிறது பற்றியும் வாசகத்தரத்தை உயர்த்துகிறது பற்றியும் நாம் சிந்திக்கணும்.
நல்ல படைப்புகள் கண்டுகொள்ளப் படாமல்போவது , தமிழில் இலக்கிய உணர்வு போதிய அளவு இல்லாமல் போனது குறித்து...
திரும்பவும் நம்ம சூழல் குறித்தே கவலை தெரிவிக்கிறீங்க. நானும் உங்களோட இந்தக் கவலையைக் பகிர்ந்துகிடறேன்.
கவிஞனாக இருப்பதற்காக வருத்தப்பட்டது உண்டா?
இல்லை. இது மகத்தான பேறு. கலைஞர்களிலேயே பெரிதும் கவுரவிக்கப்படத் தகுந்தவன் கவிஞனே என்னும் பெருமிதமும் உண்டு.
குடும்பச் சூழல் எழுதுவதற்கு ஊக்கம் அளிக்கிறதா?
"குடும்பச் சூழல் தவிர்க்க முடியாதது. நான் எழுதுவதும் தவிர்க்க முடியாதது" என்ற நிலை மாறி இன்று எனது நண்பர்களும் குடும்பமும் மிகவும் ஊக்கமளிப்பதான சூழல் நிலவுகிறது. நான் தான் எழுதிக் குவிக்கவில்லை.
படைப்பாளியே பதிப்பாளராகவும் இருந்ததால் ஏற்பட்ட நன்மைகள் - பாதங்கள்.
என்னைப் பற்றிதானே கேட்கிறீங்க. என்னோட இரண்டு புத்தகங்கள் தவிர மற்ற ஒன்பதையும் நானே வெளியிட்டிருக்கிறேன். காரணம் பதிப்பாளர் கிடைக்காததாலதான்.
உரிய நேரத்தில் புத்தகம் வெளிவருகிறதுங்கறதுதான் நன்மை.ரொம்ப நட்டத்திற்குப் பிறகாவது இன்றைக்கு எனக்கு நல்ல விற்பனையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். இந்தத் தொழில் எனக்கு இடைஞ்சலாகத்தான் இருக்கு.
நிதிச் சுமையை மீறி இத்தனை தொகுப்புகள் வெளியாக உதவியது லெளகீக நெருக்கடியைப் புறக்கணிப்பதில் வெற்றிபெற்றதாலா? அதாவது.... நிதிச்சுமைக்கு எதிர்த்தட்டுல இருக்கிற குடும்பம் இரண்டையும் சமமா பிடிக்கிற தராசு மனோநிலை பற்றி.......
எனது முதல் இரண்டு தொகுப்புகளும் எனது குடும்பம் ஆரம்பிப்பதற்கு முன்னே வெளிவந்துவிட்டன. அவை வெளிவர ஒரு நண்பரின் உதவி இருந்தது. அந்த முதலீட்டைத் தொடர்ந்து வருகிறோம். ஒவ்வொரு புத்தக வெளியீட்டின் போதும் கணிசமான தொகை போட்டுத் தொடர வேண்டியுள்ள அவலமே இன்னும் உள்ளது.புத்தக வெளியீடு - குடும்பம் இரண்டும் ஒன்றையொன்று எந்தவிதத்திலும் பாதிக்காத ஓர் ஒழுங்கை நான் கடைப்பிடித்துவருவதுதான் நான் செய்யும் மிகப்பெரிய ஒரு தீரச் செயல்.
சமகால எழுத்தாளர்களில் நம்பிக்கையூட்டுபவர்கள் யார் யார்?
பெரிய சாதனைகளை நிகழ்த்தக்கூடியவராக இப்போதைக்கு ஜெயமோகன் தெரிகிறார்.மற்றவர்கள் இவ்வளவு திடமாகக் கூறமுடியாததால் பெயர்களைத் தவிர்க்கிறேன். "விஷ்ணுபுரம்" நாவலைப் பற்றி பேர் பெற்ற எழுத்தாளர்கள் பலர் கூறிய அபிப்பிராயங்களை வைத்துப் பார்க்கும்போது தமிழ்ப் படைப்பாளிகளின் வாசிப்புத்தரம் மிக மட்டமாக உள்ளது என்பதைத்தான் அறிய முடிந்தது. இப்படி இருக்கையில் சிறந்த இலக்கிய படைப்புகள் இவர்களிடமிருந்து வருவதும் இவர்களால் தமிழர்களின் வாசிப்புத்தரம் உயர்வதும் எவ்வாறு ஆகும்? திடீரென்று இந்த விஷயம் இப்போதுதான் உறைப்பது போல் இருக்கிறது. தமிழில் பிரஞ்கையுள்ள படைப்பாளிகள் ரொம்பக் குறைவாகவே இருக்கிறார்கள். தங்கள் 'சுய அனுபவத்திலிருந்து திராணியான கலையைப் படைத்தலை' சு.ராவும் கூட தவறவிட்டுள்ளார்.தன்னோட புதிய நாவலில் Text ஐ மட்டும் முன்வைத்தல் போதும் என்கிற நவநாகரிக மோஸ்தர் வலையில் சிக்கி, Text ஒரு மெட்டபெர் அல்லது படிமம் ஆகையில்தான் கலையாகிறது என்பதையே தவறவிட்டிருக்கிறார். அது பத்தாம்பசலித்தனமான கருத்தாகிவிட்டிருக்கிறது அவருக்கு. நமது படைப்பாளிகளிடம் அவர்களையும் மீறி சிறந்த படைப்புகள் தானாக வந்தால்தான் உண்டு என்கிற நிலைதான் உள்ளது. சிறுகதைகளில் , கவிதைகளில் கூட அது சாத்தியமாகலாமேயன்றி நாவல், காவியம் போன்ற செவ்வியல்கலைகளில் இதுவரை சாத்தியப்படவில்லை. கலைபற்றிய ஞானமும் பிரஞ்கையும் ரொம்ப அவசியம் .இன்று நம்ம நிலைமையைப் பார்த்தால், இது கோட்பாடுகளின் காலம்னு சொல்லும்படியா இருக்கு. கோட்பாடுகளோட ஆதிக்கத்திற்கு அகப்படாத வீர்யத்துடன் ஒருவனுக்குச் சிந்திக்க தெரியணும்.
உங்களது கவனத்தில் சிறப்பாக எழுதும் தமிழ்க் கவிஞர்கள் எவரும் இல்லையா?
பெயர் உதிர்ப்பைத் தவிர்க்க விரும்புகிறேன். காரணம் நம்முடைய தமிழ்ச் சுழல். கவிஞனாக இருப்பவனின் மனவெழுச்சியும் ஊக்கமும் விசேஷமானது. அவனுக்கே அது தெரியும். நல்ல படைப்புகளின் மூலம் அவன் தனக்குத் தானே உத்வேக மூட்டிக் கொள்ள வல்லவன். அவனுக்குத்தான் காத்துக்கொள்ள வேண்டிய உணர்வுகள் எவை என்பதும் தெரியும்.
தமிழனின் வாழ்வும் பண்பாடும் தமிழ்ப் புதுக் கவிதையில் போதுமான அளவு பதிவாகி உள்ளதா?
நான் இப்படிச் சிந்திக்கிறதே இல்லை.தமிழனின் தனிவாழ்வு , தனிப் பண்பாடு குறித்து எனக்கு அக்கறையே இல்லைன்னுதான்படுது. மனித வாழ்வு மனிதப் பண்பாட்டுக்கான துடிப்பு , தவிப்பு நமது கவிதைகள்ல பதிவாகியிருக்கான்னுதான் நாம பார்க்கணும். அந்த மாதிரி இனவரைவுகளுக்கு முக்கியம் கொடுத்து எழுதற கவிஞர்கள் இருக்கிறார்கள். ஒரு கோட்பாடு அளிக்கிற சலுகை அவங்களுக்கு கிடைக்குது. சாதி, மதம், இனம், நாடு ஆகியவற்றால் பிளவுண்ட ஒரு மனம் கூட அத்தகைய கவிதைகளை எழுதிவிட முடியும்.
மனித வாழ்வு , மனிதப் பண்பாடுன்னு கவிதையைப் பொதுமைப் படுத்துவது பரந்த மனோபாவம். இருந்தாலும் இயற்கைச் சூழலையும் , பண்பாடு வாழ்வியல் முறைகள் இவற்றிலிருந்து விடுபட்டுப் படைக்கப்படுகிற தமிழ்க் கவிதைகள் - எதிர்கால தமிழ்ச் சமூகம் வாசிக்கிறபோது - எந்த அடையாளத்தை அந்தக் கவிதையில் தேடி அடைய முடியும்? அப்படி ஒரு சிக்கல் இருக்கே? இப்போ புறநானூற்றுக் காலச் சூழல் எப்பேர்ப்பட்ட தொன்மையை நாம் பெற்றிருந்தோம்னு சொல்லுதோ........அதுபோல.........
நம்மீது சுமத்தப்பட்டிருக்கும் அடையாளங்களை உதறுவது தான் முக்கியமானது . அடையாளங்களைப் பற்றி ஏன் கவலைப்படுகிறோம்? அடையாளங்கள் - இயற்கையானவை - இருக்கவே செய்யும், மனிதன் புற அடையாளம் கூட அழிந்து அமானுஷ்யத்தைக் தரிசிக்கிற வேளை கூட உண்டல்லவா? தாம் அடையாளங்களைக் குறித்து சிந்திக்கிறது ஏன்?..... இப்படி நாம் சிந்திக்கிறது அடையாள அழிப்பு, கலாச்சார அழிவு ஆகியவற்றை ஆதிரிக்கிறதும் , கண்டுகொள்ளாமலிருக்கிறதுமான செயலாப்படுது போலிருக்கு, அழிய வேண்டியவைகளை அழிப்பதும் , காக்க வேண்டியவைகளை காப்பதுமாய் நடக்கிற ஒரு சுதந்திர இயக்கத் தோடதான் கவிஞன் இருக்கிறான். சுதந்திரப் போர் அது. 'நாம்' கிறதை மையமாகக் கொண்டது அது.
பள்ளி ஆசிரியப்பணி நிறைவு தருகிறதா?
எழுத்தாளனுக்கு இதைவிட உகந்த வசதியான தொழில் வேறு என்ன இருக்க முடியும்?
சிறுபத்திரிக்கைச் சூழல் , செயல்பாடுகள் பற்றி.......
நிறைய புத்தகங்கள் வருகின்றன. பத்திரிக்கைகள் வருகின்றன. வாசகர்கள்தான் யாருன்னு தெரியல.ஒரு வேளை எத்தனை எழுத்தாளர்களோ அத்தனை பேருந்தான் வாசகர்களோன்னு தோனுது. எழுத்தாளனல்லாத சில வாசகர்களைப் பார்க்க முடிஞ்சபோது அவங்கமட்டும்தான் ஆரோக்கியமான வாசகர்களாக இருக்கிறதும் தெரியுது. அவங்களைக் கண்டு பிடிச்சு பரிசு கொடுத்து கவுரவிக்கலாம்.
இனிவரும் கணிணி யுகத்தில் இலக்கியத்தின் தேவை கரைந்து போய்விடுமா?
இலக்கியத்தின் தேவை அதிகரிக்கும். குறிப்பாக கவிதையின் தேவை.மானுடச் செயல்பாடுகளை வேகப்படுத்துவதுதானே கணிணி.
எதன் முன்னும் சளைக்காத மூளை, கவிதையின் முன் மட்டும் வியந்து நிற்கும். புத்துணர்வு கொள்ளும். கணிணிகளால் மூளையைக் களைப்படையச் செய்யவே முடியும்.
கணினியுகம் வந்தால்கூட கவிதைச் சிகரம் எட்டப்பட முடியாமலே இருக்கும்னு அழகாச் சொன்னீங்க. கவிதையின் முழுப்பொருளும் பரிமாறப்பட்ட ஒரு வாசனையேனும் இப்போதெல்லாம் காணமுடிகிறதா? இந்த இடைவெளிபற்றி உங்கள் கருத்து என்னவாக இருக்கிறது.
நிச்சயமாக நல்லகவிதைகள் அதன் வாசகர்களைச் சென்றடையவே செய்யும். செய்கிறது. இடைவெளிகளைப் பற்றி நாம் கவலைகொள்ளாமல் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். எல்லோரும் புரிந்து கொண்டு கொண்டாட வேண்டும் என்ற எண்ணமும் , கவலையும் வெகுஜனப் புகழ் மீது கொண்ட ஆர்வமாக இருப்பின் அது சரியாகதல்லவா? அதே சமயம் சமூகத்தில் கவிதா உணர்வு இல்லாமையை உணர்கிற துக்கம் - தனிமை - கவிஞனுக்கு உண்டு என்பது வேறு விஷயம். நம்முடைய கஷ்டம் எந்த மாதிரியானது என்பதை நாமேதான் அறிந்து கொள்ள வேண்டும்.
காட்சி ஊடகம் அச்சு ஊடகத்தை வெற்றி கொள்ளுமா?
காட்சி ஊடகம் அச்சு ஊடகத்திலுள்ள வெறுங் காட்சிகளை அகற்றும். வெறும் நிகழ்வுகளை அகற்றும். தத்ரூபமாகக் காட்சிப்படுத்த முயலும் வெறும் விவரணை வர்ண்ணை வரிகளை அகற்றும். மொழியால் மட்டுமே இயலக்கூடியவற்றில் சிந்தனையைச் செலுத்தி உயரிய இலக்கியத்தை மட்டுமே ஊக்குவிக்கும்.
"தேவதேவன்" - பெயர்க்காரணம் ஏதும் உண்டா?
எனது புனைப் பெயரே நான் எழுதிய எனது முதல் கவிதை என்று சொல்லலாம். வேறு காரணம் ஏதுமில்லை.
இசை மற்றும் பிற துறைகளில் ஈடுபாடு உண்டா?
இசை , நடனம் இரண்டும் என்னை ரொம்பக் கவர்ந்திருக்கு. என்னோட இளமைக் காலம் முழுக்க அதிலேயே தோய்ந்துதுன்னு கூடச் சொல்லலாம். அதுக்கான சூழல் இருந்தது. ஆனால் நான் ஒவியனாகனும்னுதான் ரொம்ப ஆசைப்பட்டேன். அது நிறைவேறல்ல.
கி.ரா. வை நான் முதல்ல அவரோட இடைசெவல்ல வைத்து சந்திக்கிறேன். அவருக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு தெரியும்.கர்னாடக இசையின் ராகங்களை எப்படி
சுலபமாகக் கண்டுபிடிக்கிறதுன்னு சொல்லிக்கிட்டிருந்தார். எங்களோட பேச்சு நெருக்கமான முறையில் போய்க்கிட்டிருந்தது. அப்போ, "இசை ஒரு போகப் பொருள் மாதிரி தெரியுது" ன்னு நான் சொல்லிட்டேன்."அடடா , இசையில மனிதன் தன் ஆத்மாவே அப்படியே கரைஞ்சு போயிடறதைத்தான் பார்க்கிறான். நீங்க எப்படி இப்படி சொல்லப் போச்சு. யாருமே இப்படி சொல்றதில்ல " ன்னார்.தியானம் என்னை ரொம்பக் கவர்ந்தது. அதுக்கும் பிறகு இசையை எப்பவாவது ஒரு சமயத்தில மாத்திரமே கேட்க விரும்பினேன். சிலர் தங்களோட அன்றாட வாழ்க்கையில இசையை ஒரு பின்னணி மாதிரி கொள்றது எனக்குச் சம்பதமில்லாதது மாதிரி தோணுது.
பின்னால கர்நாடக இசையை விட இந்துஸ்தானி இசை என்னை ரொம்பக் கவர்ந்தது; இந்திய இசைகள்ல கர்நாடக இசைதான் சுத்தமானது. இந்திய இசையும் பெர்சியனும் கலந்த இந்துஸ்தானியில கர்நாடக இசையைக் காட்டிலும் ஸ்பிரிட்சுவலான தொனி கூடுதலாக இருக்கிற மாதிரிபட்டது.
குழந்தைகளை வைத்தும் இதைப் பரிசீலித்தேன். அவங்களுக்கும் கூட சுபாவமா இந்துஸ்தானி இசை ரொம்பப் பிடிக்குது.
நண்பர் ராஜ சுந்தர ராஜன் , திருமறைப்பணிநிலையம் சவுண்ட் என்ஜினியர் பங்காரு , டேவிட் சந்திரசேகர் , பிரமிள் போன்றவர்கள் தொடர்பினால் எனக்கு மேற்கத்திய இசையில் ஏற்பட்ட அபிரிமிதமான அனுபவம் முக்கியமானது. பிரமிள் நம்முடைய இசையைவிட மேலை இசை எவ்வளவு தூரம் உயர்ந்த தரத்தில் உள்ளதுங்கிறதுக்கு எடுத்துச் சொன்ன முறையும் உதாரணமும் , ஒரு உரையாடலின் போது குரு நித்ய சைதன்ய யதி சொன்னதும் ஒன்றாக இருந்ததைப் பார்க்கும் போது உலகளாவிய இசை விமர்சன உலகில் பரவலாக நிறுவப்பட்ட ஒரு கருத்தாகத்தான் இது இருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றியது. இதையெல்லாம் நான் இப்போ ஞாபகம் கொள்றதுக்கு ஒரு உள்நோக்கமும் இருக்கலாம். நம்ம கலைஞர்களுக்கு , எழுத்தாளர்களுக்கு இது மாதிரி உண்மைகள் அதிர்ச்சி தர்றதா இருக்கும். "நாம்" , "நமது" ன்னே நாம வளர்ந்திட்டோம்...திறந்த மனதுக்கான ஒரு கலாச்சாரச் சூழலுக்குத்தான் நாம இனி உழைக்கணும்.
பிற மொழிகளிலிருந்து ஆங்கிலம்வழி தமிழுக்கு நிறையக் கவிதைகள் வந்துள்ளன. தமிழ்க் கவிதைகள் எவ்வளவு தூரம் பிறமொழிக்குச் சென்றிருக்கு ? இதுபற்றி என்ன நீனைக்கிறீர்கள்?
தமிழ்க் கவிதைகள் இந்திய , ஆங்கில மொழிப் பத்திரிக்கைகளில் மொழிபெயர்ப்புகளில் வந்துள்ளதைப் பார்த்திருக்கிறேன். "இண்டியன் லிட்டரேச்சர்" மற்றும் "கல்கத்தா எழுத்தாளர் பட்டறை" தமிழுக்கெனவே தனித் தொகுப்புகள் போட்டிருக்கின்றன . மலையாளத்தில் "சமகாலின கவிதை" இதழ் தமிழ்க் கவிதைகளை நன்கு புரிந்து கொள்ளப்படும் அளவுக்கு முக்கியமான எல்லோருடைய கவிதைகளையும் நிறைய மொழிபெயர்த்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பிற இந்திய மொழிகள் குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் சச்சிதானந்தன் கவிதைகள் ஆங்கிலத்திலும் அநேக இந்திய மொழிகளிலும் தொகுப்பாக மொழிபெயர்க்கப்பட்டது மாதிரி எந்தத் தமிழ்க் கவிஞனுக்கும் வாய்க்கவில்லை. அத்தகைய ஒரு கவிஞன் தமிழில் இல்லை என்பதையே இது காட்டுகிறது.
ஒரு படைப்பாளியோட இயக்கம் அவன் புழங்குகிற மொழியுடன் நின்றுவிடுகிறதா? சமூகத்துடன் கலக்காத தன்மை தமிழ்ப் படைப்பாளிகளிடம் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே. கன்னடத்தில் சிவராமகரந்த் மாதிரியோ, அல்லது நர்மதா அணைத்திட்டம் பிரச்சனையில் ஈடுபடுகிற அருந்ததிராய் போன்றவர்கள் மாதிரியோ இங்கே யாரும் இல்லையா. ஏன் இந்த ஒதுங்கும் தன்மை?
உள்ளூரமிக்க ஆளுமை உள்ள எந்தக் கலைஞனுமே தன்னை ஒரு பெரிய கலாச்சார சக்தியாகத்தான் உணர்கிறான். சூழல் , சந்தர்ப்பமின்மைகள்தான் காரணம். தமிழ்நாட்டில் ஊழல் மிகுந்து அரசியல்வாதிகளும் , மூன்றாந்தரப் படைப்பாளிகளும் சினிமாகாரர்களும்தான் மக்களின் நாயகர்கள். அதுதான் காரணம் என நினைக்கிறேன்.
தங்களது படைப்புகளில் உச்சநிலையை அடைந்தபிறகே டால்ஸ்டாய் போன்ற படைப்பாளிகள் குழந்தைகளுக்காக எழுத ஆரம்பித்தாக சொல்லப்படுது. அதுபோல உங்களுக்கான அடுத்த கட்டம்பற்றிய திட்டம் ஏதேனும் வைத்திருக்கிறீர்களா? உங்களது முழுக்கவனமும் பாசமும் கவிதைச் செயல்பாட்டில் மட்டுமே அமைதி பெறுகிறதா? அது போதுமானதா இருக்கா? வேறு வேறு வடிவம் பற்றி யோசிக்கதுண்டா? உதாரணத்துக்கு 'உள்முகம்' இதழில் உங்கள் கட்டுரை மிகச் சிறப்பாய் இருந்தது.
குழந்தைகளுக்கு எழுத வேண்டுமென்ற ஆசை இருந்தது. இப்போது அதுபற்றி யோசிக்கவில்லை. என்னால் சிறப்பாக எழுதி முடிக்கக்கூடிய காவியங்கள் , நாடகங்கள் மீது கவனத்தைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். வேறு தீர்மானங்கள் ஏதுமில்லை. நான் செய்வதெல்லாம் திடீர் திடீரென்று தோன்றி எழுதிமுடிக்கப் படக்கூடியதாகவே இருக்கும். இப்போது ஒரு நாடகம் முடிந்து வெளிவரும் நிலையில் உள்ளது. இதன் பிறகு இனி எழுத்தையே துறந்துவிடலாமென்று நினைத்தேன். என்னிடம் திட்டங்கள் பற்றிக் கேட்கிறீர்கள். கவிதை ததும்பும் ஒர் மனோநிலையில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருப்பதே இஷ்டமானதாக இருக்கிறது.
கவிதையின் வெளிப்பாட்டுச் சாத்தியத்தில் அடுத்த தலைமுறை எந்தவிதமாக இயங்குமெனக் கருதுவீர்கள்?
வெளிப்பாட்டுச் சாத்தியம். அவனது வாழ்க்கை , சமூகச் செயல்பாடு, அவனது அனுபவ உலகம் சார்ந்து உருவம் கொள்ளும்.இன்று வெளிப்பாட்டுச் சாதனங்கள் மலிந்து கிடக்கிற சூழலில் இனி கவிதை அந்தஸ்தை அடைந்த ஒன்றே இலக்கிய அந்தஸ்தைப் பெறும். மற்றவைகள் மிக எளிதில் தயாரிக்கப்பட்டுவிடக்கூடிய நவீன உலகில் இருக்கிறோம். சற்று தேர்ந்துவிடக் கூடிய ஒரு தொழில் நுட்பத்தை தாண்டிய ஒன்றுக்காக நாம் அவாவிக் கொண்டிருப்போம்.
புதிதாக எழுதத் தொடங்கும் இளம் கவிஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இளம் கவிஞர்களுக்கு...இந்த உலகில் உங்கள் பிரச்சனை என்ன?
குழப்பம், தேடல் மற்றும் நீங்கள் வெளிப்படுத்த என உங்களுக்குள் ஏதேதோ கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. அப்படித்தானா? அது ஒருநாளும் அடங்கிவிடக் கூடியதில்லையா? அப்படியென்றால் மட்டுமே நீங்கள் கவிஞர்களாக வாழ்வைத் தொடங்குகிறீர்கள்.
இளம் கவிஞன் தன்னை ஒரு மாணவனாகக் கருதியபடி தமிழ் , இந்திய ஆங்கில மற்றும் உலகின் பல மரபு இலக்கியங்களையும் படிக்க வேண்டும். எல்லா மொழிகளிலுமுள்ள பெருங் கவி ஆளுமைகளை ரசித்துப் படித்து தன் கவி ஆளுமையைக் கண்டடைய வேண்டும். சம காலத்தில் பேர்பேற்ற கவிஞர்களின் கவிதைகளையும் அதே கண்ணோட்டத்தில் படித்துப் பார்த்துக் கொண்டால் தன்னோட இடம் ஒன்று அவனுக்குள் உருவாகலாம்.ஒரு சுயமான குரல் அதுவே உண்மையான ஒரு குரல். நீங்கள் குறிப்பாகச் சில புத்தகங்கள் , சில கவிஞர்கள் , சில இயக்கங்கள் என்று தேடாதீர்கள். அது குறுக்கு வழியைத் தேடுவதற்குச் சமமாகும். அது சுயமான குரலை ஒலிப்பவர்களாக இன்றி எதிரொலிப்பவர்களாக உங்களை ஆக்கிவிடவும் கூடும். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு இயக்கத்திடமிருந்தும் நாம் கிரகித்துக் கொண்டவை எவை எவை என்பதுதான் முக்கியம். வெளிப்படுதலுக்கான போதம் உள்ளவனுக்கு மேலான பிற படைப்புகள் வெளிப்படுத்தலுக்குத் தேவையான எழுச்சியையும் வழிமுறைகளையும் அளிக்கும். அப்படைப்புகள் இன்னவை என்று கூறமுடியாது. தொன்மங்கள் கண்டிப்பாய் அறிந்திருப்பது அவசியம்.வாய்மொழி இலக்கியம் அவன் அகத்திற்குச் செழுமை சேர்க்கும். இதெல்லாமே மரபை அறிதல் என்பதில் அடக்கம் என்பதால் விரித்துச் சொல்லவேண்டியதுமில்லைதான்.
இந்தப் பேட்டியை நிறைவுசெய்யுமுன் உங்கள் நெஞ்சை ஒரு கணமும் விடாமல் வதைக்கும் ஒரு கவிதையைக் கூறுவீர்களா? படித்த்தாகவோ அல்லது நீங்களே எழுதியதாகவே இருக்கலாம்.
எங்கும் நிறைந்துள்ள ஒளியை
அள்ளி வழங்க நீண்ட கைகள்
கவினிப்பாரற்ற தனிமையில் முழ்கியும்
தன் புறங்கைகள் வழியால் வழங்கிக் கொண்டிருக்கிறது
எல்லோரும் விரும்பும் நிழலை.
(புல்வெளியில் ஒரு கல்- தொகுப்பிலிருந்து)
-முற்றும்
பகுப்புகள்:
நேர்கானல்
கவிஞனின் செயலிழந்த அந்த நா
குறிப்பு-வடபழனியிலுள்ள ஒரு பழைய புத்தக கடையில், நெய்வேலியிலிருந்து வெளிவந்த வேர்கள் சிற்றிதழின் 1999 ஆம் ஆண்டு இதழ் கிடைத்தது.
அந்த இதழில் வெளிவந்த - "சிற்பி இலக்கிய விருது" தேவதேவனின் ஏற்புரை.
வேர்கள் இதழுக்கு நன்றி.
-------------------------------
ஒரு விருதின் தகுதியினை நாம் எவ்விதம் மதிப்பீடு செய்கிறோம்?அதன் அளவுகோல் என்ன?.... இதுபோன்ற சந்தர்ப்பங்களைக் குறித்து நான் சிந்தித்தையும் பேசியதையுமே இங்கு மீண்டும் நினைவு கூர்கிறேன்...அந்த விருதானது ஒரே சமயத்தில் அதை வழங்குவோர்க்கும் , அதைப் பெறுவோர்க்கும் , அவர்கள் வாழும் மொத்த சமுதாயத்திற்குமே பெருமைதரக்கூடியதாக இருக்க வேண்டும்,யார் யாருக்கு நன்றி சொல்வது என்ற கேள்வியே அழிந்துபோய் விடுகிற ஒரு கொண்டாட்டம் அது.
கவிஞர்கள் தாம் வாழும்காலத்தில் கண்டுகொள்ளப் படாமலேயே புறக்கணிக்கப் பட்டிருக்கிறார்கள்.அது அறிவார்ந்த தளத்தில் அந்தச் சமூகம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தமையை நமக்குக் காட்டுகிறது.ஒரு கவிஞன் தான் வாழுங்காலத்தில் கொடுந் தண்டனைக்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறான்.அரசு அதிகாரத்தின் வன்முறையை அப்போது நாம் அடையாளம் கண்டிருக்கிறோம்.ஒரு கவிஞன் தன் வாழுங்காலத்தில் அடையாளம் காணப்பெறுவதும் , கொண்டாடப்பெறுவதும் , அந்தச் சமூகத்தின் ஒரு பகுதியெனும் ஆரோக்கியமாய் இருக்கிறது என்று நாம் ஆசுவாசிக்க முடிகிறதற்கான அடையாளம்தான்;முழு வெற்றி அல்ல.முழு வெற்ற அவன் வாழும் சமூகத்தின் வளர்ச்சியில்தான் இருக்கிறது.
கவிஞனை மொத்த சமூகமும் முழுமையாய்ப் புரிந்துகொண்டது என்பது மனித வரலாற்றில் இல்லாத ஒன்று.கவிஞனும் தான் கண்டவற்றை வெற்றிகரமாய்க் கூறி முடித்துவிட்டான் என்ற நிலைமையும் இதுவரை இல்லாத ஒன்று.இந்த்த் தோல்விக்குக் காரணம் அவனது ஊடகமான மொழி .அவன் தன் வாழ்க்கையையே ஒரு ஊடகமாகக் கொண்டால்தான் என்ன? தோல்வியையே தழுவுகிறான்.கருணையைத் தன் இதயத்தால் துய்த்து அறிந்தவனும் சொல்லால் சாதிக்க முடிந்தது என்ன, கருணை என்ற சொல் போதாமல் போய் அதற்கு மேலும் இரண்டு முன் ஒட்டுப்(Prefix) பண்புச் சொற்களை(Adjectives) அழுத்தி அவன் தன் மனவெழுச்சியை மட்டும்தான் பதிவு செய்ய முடிந்தது தவிர மற்ற எல்லாமும் எளிதில் சாதிக்கப்படக்கூடிய அற்பங்கள்தாம் என்ற முடிவுக்கு வந்தவைகள்தாம்.
கவிஞனின் இத்தகைய மனவெழுச்சியால் கோர்க்கப்படாத படைப்புகளைத் துச்சமென மதித்துத் தூர ஏறிந்துவிடுவது மிகச் சிறந்த ஒரு மதிப்பீட்டுச் செயல் என்று கூற முடியும் .இலக்கியத் திறனாய்வு என்பது இதைக் கண்டடைவதற்கான ஒரு உளவு வேலையாகவும் சிக்கலான வேளைகளில் ஆகி விடுகின்றது.கவிஞனோ மிக எளியவனாகவும் மிகு உறுதிமிக்கவனாகவும் காட்சியளிக்கிறான்.ஏதோ ஒரு மையத்தினின்று பெறப்படும் அறமதீப்பீடுகளை வலியுறுத்தும் ஒரு அறவீனமுள்ள மூர்க்கனாக அடையாளம் காட்டப்படுகிறான்.அவனோ "ஆம்.அதை மையம் என்று கொள்வோமானால் பெருவியப்பு ஒன்றின் உன்னத நிகழ்வேதான்" என்னும் உணர்வுதான் அது என்று அவன் தனக்குத்தானே கூறிக் கொள்கிறான்.அவனிடமிருந்து வரும் அறமதிப்பீடுகளின் கருப்பையே அது.
தண்டனைகளைப் போலவே பாராட்டுகளாலும் சிதைந்துவிடாதவனாக இருக்கவே அவன் விதிக்கப்பட்டிருக்கிறான்.காரணம் அவனது பொறுப்பு தானும் சமூகமும் வேறுவேறு அல்லாத ஒன்றேயான ஒர் பொருள் மீது ஊன்றப்பட்டிருக்கிறது என்பதுதான.இன்று நாம் மிக நெருக்கடியான ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் உலகின் மிகச் சிறந்த கவிதைகள் எல்லாமே மரணப்படுக்கையிலிருக்கும் ஒரு மனிதனின் அன்புக்கான கதறலே என்றும் அவன் அறுதியற்ற சொற்றொடர்களை உருவாக்கிய வண்ணமாய் இருக்கிறான்.அவன் கவிதைகளில் சமூகத்தின் சுரணையின்மைக்கு எதிரான சூடும் , அடுக்குமுறை , அதிகாரம் வன்முறை ஆகியவைகளுக்கு எதிரான அச்சமின்மையும் , கொண்டாடங்களின் சந்தோஷத்தில் தோய்ந்துவிடாத விழிப்பும் காணக் கிடைக்கிறது.எல்லாமாகவும் இருக்கிற ஒரு தனிமை அவனுடையது .அந்த்த் தனிமைத் துக்கத்தின் இன்னொரு பக்கமே 'சொல்லொணாத அமைதி' என்பதையும் அறித்திருக்கிறான்.
இவைகளெல்லாமே ஒரிடத்தில் படித்துவிட்டு இன்னோரிடத்தில் வந்து ஓதுகிற தத்துவங்கள் அல்ல.அப்படியானால்? நாம் சுட்டிக்காட்ட விரும்புவதும் , இயற்ற விரும்புவதும் ஒர் பிரக்ஞை நிலையைத்தான் என்பதே.அந்தப் பிரக்ஞை நிலையைத்தான் ஒவ்வொரு கவிதையும் ஆதர்சிக்க வேண்டும்.
நம் தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டுத் தொன்மையுடையது என்பதிலும் ஒரு வளமான பாரம்பரியத்தின் வாரிசுகள் நாம் என்பதிலும் சந்தேகம் இல்லை.ஆனால் இந்தப் பெருமைகளால் நாம் சாதித்தது ஒன்றுமில்லை. அவலமான ஒரு தற்பெருமைக்குச் சமமானதுதான், ஒருவன் தன் நாட்டின் பெருமையைச் சார்ந்திருப்பதும்.கவிதை ஒரு மனிதனின் உள்ளார்ந்த சுகந்திரத்தையே அவாவுகிறது.ஒரு நாட்டின் நலமும் , அதன் சுற்றுச்சுழுலும் , பண்பாடும் அந்நாட்டு மக்களின் நெஞ்சிலே சுடர்கிற கவிதையைப் பொருத்துத்தான் அமையும் என்பதையே இந்த விழாவின் சந்தர்ப்பத்தில் பெரிதான ஒரு செய்தியாக சொல்ல விழைகிறேன்.... கவிஞன் என்றாலே பெருங்கணவுகளைக் காண்பவன் என்பது ஒரு பழைய மதிப்பீடு.மனித நல்வாழ்வுக்கான இஷ்ட லோகக் (Utopian) கனவுகளைக் காண்பவன் அவன் கனவு பங்கம் ஏற்பட்டு துஷ்டலோகக் (Dystopian) கனவுகளில் துடித்து தன் ஆழ்மன அலறலை சிறுசிறு துடிப்புகளாக எழுதிக் கொண்டிருந்தவனும் அவனே.
கலைகள் மீதும் கவிதை மீதும் ஆர்வம் முகிழ்த்திருந்த எனது தொடக்க காலத்தில் - 30 , 35 ஆண்டுகளுக்கு முன்பு - செய்தித் தாளின் மூலம் வடக்கே ஒரு கவிஞர் - அவர் பெயர் , ஆண்டு ஆகியவை நினைவில்லாத்தற்கு வருந்துகிறேன் - தீடீரென்று வாய் பேச இயலாது போய்விட்ட செய்தி என் மனதில் அழியாது பதிந்துவிட்ட ஒன்றாக இருக்கிறது.பின்னாளின் வாசிப்பில் ஃபிரெஞ்சுக் கவிஞர் போதெலோருக்கும் அந்த விபத்து நடந்துள்ளது என்பதை அறிந்தேன்.
சமூகத்தின் ஆரோக்கியத்திற்கான ஒரு விசேஷ நரம்பு மண்டலத்தை அவாவுகிற வேகத்தில் இஷ்டலோகத்திற்கும் (Utopian) துஷ்ட லோகத்திற்குமாய் (Dystopian) அதிர்கிற ஒரு நரம்பு நெறித்து அறுபட்டுவிட்ட நிலைதான் கவிஞனின் செயவிழந்த அந்த நா என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்.
அரசியல்வாதிகளால் சிதைக்கப் பட்டிருக்கும் இந்த உலகை உடல்நோய் மருத்தவர்களைக் கொண்டும், உளவியல் அறிஞர்களைக் கொண்டும் , சீர்திருத்திவிடப் பார்க்கிறோம். கவிதை மட்டுமே நமக்கு நம்பிக்கை தரும் என்பதற்கு கவிஞனே ஒரு சாட்சிப் பொருள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.தன்னைக் கவிஞன் என உணர்ந்து கொண்டுவிட்ட ஒரு உள்ளம்தான் இந்த பிரபஞ்சத்தின் மிக உறுதியான ஒரு பொருள். மற்றும் மனித விடுதலை அரசியல்வாதிகளின் கையில் இல்லை என்பதையும் மனிதனை உய்விக்க எழுந்த எல்லாச் சமயங்களும் ஏன் தோற்றுவிட்டன என்பதையும் இன்னும் அறியாதவனை நாம் எந்த சொல்லால் அழைப்பது?... கவிஞனிடம் திட்டவட்டமான சமயம் ஒன்று உள்ளது.அதை ஒருக்காலும் சாகடிக்க முடியாத சொற்களில் அவன் எழுதிக் கொண்டேயிருக்கிறான்.
கவிதை இல்லாத இடத்தில்தான் கவிதை ஒரு அலங்காரப் பொருளாகவும் , கவிதை ஒரு தொழிற்சாலையாகவும் , கவிஞர்கள் சாதாரண மனிதர்களாகவும் கருதப்படுவதும் தர்க்கத்திற்கு உட்பட்டதும் இயல்பானதுமான ஒன்று.நான் பேச விரும்புவது கவிதையை உணர்ந்து கொண்ட ஒரு சமூகம் அல்லது தான் கவிஞன் என்பதை உணர்ந்துகொண்ட ஒரு உள்ளம் பற்றி மட்டுமே.
பகுப்புகள்:
கட்டுரை
தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தக சாலை
கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் கேத்ரீனா போல் தன் வாழ்விலும் ஒரு சம்பவம் நிகழுமென பார்வதி எதிர்பார்த்ததிருக்கமாட்டாள்.ஏனேனில் அவளுக்கு கேத்ரீனாவை தெரியாது.கரமசோவ் சகோதரர்கள் நாவலையும் வாசித்ததில்லை.பார்வதி பேரழகி என்று சொல்ல முடியாது. கண்டிப்பாக அழகி. சிரிப்பதை விடவும் சிரிக்க முற்படும் தருணங்கள் அற்புதமானவை. தீமையின் நிழல்கூட விழாத தேவதையின் முகம், உண்மை அதுவல்ல என்றபோதும்.தன் சகாக்கள் போலன்றி ஸ்தனங்களை கச்சிதமாக துப்பட்டாவால் மறைக்ககூடியவள். அவளை பிறர் அநேகம் பார்ப்பதில் அவளுக்கு கர்வமோ, அகங்காரமோ இல்லை.மகிழ்ச்சி உண்டு.அலைபாய்ந்திடும் கண்கள்.அவளும் சிறுபெண் தானே.இதன் காரணங்களாலேயோ என்னவோ அவளை அதிகம் ரசிப்பான் ஸ்ரீனிவாசராவ்.
சுப்பையா பிள்ளையின் காதல்கள் என்ற புதுமைபித்தனின் கதையில் சுப்பையா பிள்ளைக்கு தினமும் தாம்பரத்திலிருந்து பீச் நோக்கி பயணம்.இன்று நிலைமை வெகு ஜோராக மாறிவிட்டது.ஸ்ரீனிவாசராவுக்கு திருவல்லிக்கேணியிலிருந்து தாம்பரம்.ஜீவிதம் பெரும்பாலான இளைஞர்கள் போல் திருவல்லிகேணியின் மேன்சன்களில் அல்லாமல் பார்த்தசாரதி கோவிலின் தேரடி வீதியில்.செகந்தரபாத்தில் அவனது தந்தையுடன் வேலை செய்த சிநேகிதர் வீடு.அவர்களுக்கு ஒரே மகன்.மகனுக்கு கூர்ஹானில் வேலை.இவர்களுக்கு வீட்டை விற்க மனமில்லை.ஆக ஸ்ரீனிவாசராவ் இருக்கிறான்.பழைய வீடு.திண்ணை வைத்த பழைய வீடு! அவன்,வீடு அவ்வளவுதான். தினசரி பயணம் 21ஜியில்.
அதுவொரு எலக்டாரினிக்ஸ் நிறுவனம்.செல்போனுக்கான உபகரணங்கள் தயாரிப்பு பிரதானம்.அங்கே பார்வதியை பார்த்த மறுமுறை பார்க்காதவர் சகாய இருதய ராஜ்.உற்பத்தி துறையையும் , எலக்கிடிரிக்கல் துறையையும் கவனித்துக்கொள்பவர்.தொழில்நுட்பக்காரனின் மூளை.உதிரிகளை வைத்தே புதிய இயந்திரம் உருவாக்ககூடியவர்.அந்த நிறுவனத்தில் மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை இருக்கும் ஐந்தாறு தமிழர்களில் ஒருவர்!ஸ்ரீனிவாசராவ் இருப்பதால் உற்பத்தி துறையை பற்றி இருதய ராஜ் அதிகம் கவலைகொள்வதில்லை.பார்வதி அங்கே புதிதாக தொடங்கப்பட்ட ஒரு யூனிட்டுக்காக எடுக்கப்பட்ட ஐந்து எலக்டிரிக்கல் இன்ஜினியர்களில் ஒருத்தி.டிரெயினிங் முடிந்து வேலை நிரந்தரப்படும் தருணம்.
மார்கழி மாதத்தின் மாலையில் பார்த்தசாரதி கோவிலின் தேரடி வீதி , பைகராப்ட்ஸ் ரோட்டின் பாதைசாலையில் பழைய புத்தகங்களின் குவிப்பு, தனியாக நின்றுகொண்டு ஏதேனும் பழச்சாறை பருகும் இளம் பெண்கள்,மதிய வெயிலின் காக்கை கரைப்பும் - சைக்கிள் பயணியும், இப்படியாக ஸ்ரீனிவாசராவுக்கு சில ரசனைகள்,பிரியங்கள் உண்டு.அதில் மோட்டார் சைக்கிள் ஒட்டுவதும் அடங்கும். ஜனசந்தடி அற்ற சாலையில் கீயர் மாற்றாமல் சீரான வேகத்தில் வண்டியை செலுத்தும்போது அவனும் வண்டியும் ஒர் உடல் ஆகும் நிகழ்வு அவனுக்கு அமைவதுண்டு. அப்படி ஒரு நிகழ்த்தலில் ஏதிரே எதோ ஒன்று பாய்ந்தது. மனிதன்!ரத்தம்.சலசலப்பு.ஆஸ்பத்திரி.லேசான சீராய்ப்புகள் இருவருக்கும்.சிகிச்சை முடிந்து அவனை வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவிலருகேயிருந்த அவன் வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டான்.பெயர் ரிஷி.கண்களில் கனவுகள்.ஆங்கில மருத்துவம் படித்தவன்.நவீன நாடகத்தின் மீதான ஈர்ப்பு காரணமாக மருத்தவ பயிற்சியோ, மேற்கொண்டு படிப்போ இல்லை. ஒரிரு நாடகங்கள் மேடையேறி இருக்கின்றன என்றான்.அதை சொல்லும்போதுதான் அவனில் எத்தனை மகிழ்ச்சி.கிளம்பும்போது தெருவில் எதிரில் அவள் வருவதை பார்த்தான்.அவளே தான்.அவள் வீடும் அங்கே இருக்கலாம்.சிரித்துவிட்டு வண்டியை கிளப்பினான்.
மறுநாள் அவள் அலுவலகத்தில் இவனை சந்தித்து நன்றி தெரிவித்தாள்.ஏன் என்றான். தன் சகோதரனை சிகிச்சை அளித்து விட்டில் வந்து விட்டதற்காக என்றாள். "சகோதரன்,அவன்,ஓஹோ" ஸ்ரீனிவாசராவின் வாய் திறந்த நிலையில் சில நொடிகள் இருந்தன.மேற்கொண்டு அவன் எதுவும் கேட்கவில்லை.அவளுக்கு பேசவேண்டும் போலிருந்தது.எதிர்வினையில்லாமல் என்ன பேசுவது. சென்றுவிட்டாள்.
உலக பொருளாதார நெருக்கடி காரணமாகவோ என்னவோ புதிதாக தொடங்கப்பட்ட யூனிட் முடப்படபோகிறது என்ற வதந்தி சில மாதங்களாக இருந்து வந்தது.வதந்திக்கு முற்றுப்புள்ளி.புதிதாக தொடங்கப்பட்ட யூனிட்டை சேர்ந்த அத்தனை பேரும் வேலையிலிருந்து நீக்கப்பட போகிறார்கள்.ஐந்து எலக்டிரிக்கல் இன்ஜினியர்கள், ஐம்பது டிப்ளமோ ஹோல்டர்கள் எல்லோருக்கும் வேலை போகப் போகிறது. இதனால் சில அடித்தட்டு வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வேலை போகும்.வேலை போய்விடும் என்றால் யாரும் மகிழ்ச்சிகொள்வதில்லை.பார்வதியும் தான். சில நிமிடங்களில் ஸ்ரீனிவாசராவை சென்று பார்த்தாள்.எதாவது செய்ய முடியுமா என்று கேட்டாள்.ஸ்ரீனிவாசராவுக்கு ஆறுதலாகவோ,வேடிக்கையாகவோ பேச தெரியாது. அவளிடம் பேசலாமேன்று நினைத்து பிறகென்ன திருமணம்தானே என்றான்.அவளது முகம் சுனங்கி போயிற்று.யார் திருமணம் செய்து வைப்பார்கள் என்று கேட்டவள் தொடர்ந்து பேசினாள்.அவளது தந்தை விசாகப்பட்டணித்தில் கண் மருத்துவர். அவளுக்கு சிறு வயதுயிருக்குபோதே அவளது தாயை விடுத்து வேறோரு பெண்னோடு தொடர்பு வைத்துக்கொண்டார்.பின்பு திருமணமும் செய்து கொண்டார்.தங்களின் பொருளாதார தேவைகளுக்கு தன் மாமாதான் பெரிதும் உதவினாரென்றும், இப்போது தன் தாய் அவர் வீட்டில்தான் வசிக்கிறாரென்றும் சொன்னாள்.மாமா வீட்டில் எல்லோரும் அன்போடுதான் பழகுகிறார்கள், ஆனால் இனி எப்போதும் அவர்களை அனுகமுடியாத அளவுக்கு தன் சகோதரன் நடந்து கொள்வதாகவும் சொன்னவள், இந்த எரிச்சலை அவர்கள் கொஞ்ச காலமாக தங்கள் மீதும் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள் என்றாள்.அதனால் அவளது ஒரே குறிக்கோள் தாயை அவளோடு அழைத்து வரவேண்டும். அதற்கு அவள் வேலையில் இருக்க வேண்டும். அவளது சகோதரன் இது ஏதுவும் புரியாமல் நிழல்களில் வாழ்கிறான் என்று வருந்தினாள்.சாதாரணமாக ஸ்ரீனிவாசராவ் முசடன்.இது போன்ற ஒரு சந்தர்பத்தில் அவன் பேசியிருக்க்கூடியது 'பார்க்கலாம், என்னால் முடிந்தது செய்கிறேன்' இதுதான்.ஆனால் அன்று அவன் வேறு விதமாக பேசினான்.பார்த்தசாரதி கோவிலின் தேரடி வீதியில் தன் அறையிருக்கிறது என்றான்.அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.என்ன என்றாள்.நாளை தன் அறைக்கு வந்து சென்றால் வேலை சம்பந்தமாக முயற்சிப்பதாக சொன்னான்.அவனை பார்த்த கண்கள் அப்படியே தாழ்ந்துபோயின.சென்றுவிட்டாள்.
மனிதர்களுக்கு பதற்றமான நேரங்களில் மூளை செயலிழந்து விடுகிறது.பார்வதிக்கு இப்போதுள்ள வேலையில் பதினையந்தியாரம் கிடைக்கிறது. இது இல்லாவிட்டால் மூனாயிரத்திலிருந்து ஐந்தாயிரம் வரை ஏதாவது கிடைக்கும்.அவளது கஷ்டத்தை பார்த்து ரிஷி கூட வேலைக்கு செல்ல ஆரம்பிக்கலாம்.விரைவில் அவளுக்கு நல்ல வேலை கிடைக்கவும் செய்யலாம்.எல்லாவற்றையும் விட தன் சகோதரினிடம் பேசலாம்.ஆனால் மனம் அப்படி சிந்திக்கவில்லை.வேலை போய்விட்டால் அவ்வளவுதான்.வீட்டு வாடகை, சகோதரன், தாய், வேறு வழியில்லை.வீட்டு வாடகை, சகோதரன், தாய், வேறு வழியில்லை.வேறு வழியேயில்லை.எல்லாம் சுவரில் சென்று முட்டிக்கொண்டது.
அவள் சென்றாள்.பித்தளையில் சங்கு சக்கரம் பொருத்தப்பட்டுயிருந்த அரையடிக்குமேல் கணமான மரக்கதவை தள்ளினாள்.திறந்தது.உள்ளே தாவாரத்தில் வெயிலின் நிழலாடியது.அவன் லுங்கியும் டீசர்ட் அனிந்தவாறு படுக்கையில் சாய்ந்து கிடந்தான்.இருட்டறை.ஈரத்துணிகளின் நாற்றம்.அவள் வரக்கூடும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.சற்று அதிர்ச்சிதான்.காட்டிக்கொள்ளவில்லை.எழுந்து விளக்கை போட்டான்.அறையினுள் சென்றாள்.வெள்ளை நிறத்திலான சுடிதார் அனிந்திருந்தாள்.இரவு முழுக்க அழுதிருப்பாலோ,தெரியவில்லை.அங்கேயிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமரச்சொன்னான். ரெடாக்ஸின் தரை தண்னென்றுயிருந்தது.அமர்ந்தவாறு அவளின் முகத்தையே பார்த்தான்.என்ன வயசு என்று கேட்டான்.இரவைரெண்டு என்றாள் சன்னமான குரலில்.மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.அவளை பரிகாசத்தோடு பார்த்தான்.சொன்னவுடனே வந்துவிட்டாயே வெட்கமே இல்லையா என்று கேட்டு பரிகாசம் செய்தான்.அவள் அழவில்லை.அவனை பார்க்கவுமில்லை.பரிகாசம் வெறுப்பாகி அவள் மீது காறி உமிழ வேண்டும் போல தோன்றியது.வெறுப்பு,வெறுப்பு, அதன் உச்சம்.சட்டென்று ஏனோ அவனுக்கு அன்பு பீறிட்டு எழுந்தது.பைத்தியக்காரி,எழுந்து ஓடு என்று கத்தினான்.பார்த்தாள்.நின்றால் அடித்துவிடுவேன் ஓடு என்று பயங்கரமாக கத்தினான்.சிறுமி.நிஜமாகவே ஓடினாள்.
அவன் அதன் பிறகு அலுவலகத்திற்க்கு சில நாட்கள் செல்லவில்லை.அவள் வீட்டுக்கு அவள் இல்லாத சமயத்தில் ரிஷியை கான சென்றான். உங்களை பார்க்கத்தான் வந்தேன் என்றான்.சம்பந்தமில்லாமல் ஏதேதோ பேசினார்கள்.ஏன் மருத்துவத்தில் மேற்படிப்பு படிக்க்கூடாது , அல்லது பயிற்சி செய்யக்கூடாது என்று பட்டென்று கேட்டுவிட்டான். உனக்கென்ன என்று ரிஷி கேட்கவில்லை.நாடகம் தனக்கு உயிரென்றும் ,வேறெதிலும் தன்னால் ஈடுபாடு காட்டமுடியவில்லை என்றும் சொன்னான்.ஆனால் அது ஆத்மார்த்தமான பதிலாக தெரியவில்லை.அதை சொல்லும்போதே அவன் மண்டையில் எதிர்வினைகள் ஒடிக்கொண்டிருந்தது போலும்.அவனோடு தர்க்கம் செய்ய வரவில்லையென்றும் , ஒரு யோசனை இருக்கிறது கேட்கமுடியுமா என்றும் கேட்டான்.தனக்கு தெரிந்த ஒரு உளவியல் மருத்துவர் அவரிடம் சிகிச்சை பெறும் மனநோயாளிகளுக்கு என்றே பிரத்தேயகமாக நாடகம் நடத்துகிறாரென்றும், அவரிடம் சென்று சிறிது காலம் நாடகம் சம்பந்தமாக வேலை செய்தால் பின்னர் மருத்துவ துறையில் கூட அவனுக்கு ஆர்வம் எற்படலாம், முயற்சித்து பார்கலாமே என்றான். அவரின் பெயரை கேட்டான்.சொன்னான்.ஆச்சரியத்துடன் அவர் மிகவும் புகழ் பெற்ற மருத்துவர் ஆயிற்றே, நாடகத்தில் அவருக்கு ஈடுபாடு உள்ளதென்று தனக்கு இதுவரை தெரியாதென்றும் , அவசியம் சென்று பார்பதாகவும் சொன்னான்.
ஸ்ரீனிவாசராவ் கிளம்பினான்.வாசல் வரை வந்தவனிடம் ஏன் குற்றவுணர்ச்சியா என்று கேட்டான். இல்லை. அப்படியென்றால் தன் சகோதரி மீது காதலா என்றான்.அவன் முகத்தில் பரிகாசம் தெரியவில்லை.அது ராவை ஆசுவாசப்படுத்தியது.இல்லை தனக்கு அது போன்ற உணர்வுகளை புரிந்து கொள்ளவே முடிந்த்தில்லை என்றவன் தயங்கியவாறு தன் மீது கோபம் இல்லையா என்று கேட்டான்.இல்லை.மாறாக உன்னிடம் நெருக்கமாகவே உணர்கிறேன்.கீழ்மையின் உச்சத்தில் மேண்மை , நீ தஸ்தாயெவ்ஸ்கியின் கதாபாத்திரம் , அவரை வாசித்திருக்கிறானா என்று கேட்டான். தான் ஏதையும் வாசித்த்தில்லையென்றும் , ஆனால் தான் சொன்ன உளவியல் மருத்துவர் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி பேசுவதை கேட்டிருப்பதாகவும் சொன்னான்.மிக முக்கியமாக , அங்கே வரும் மனநோயாளிகள் பலருக்கு பிரச்சனை வேறேதோ.அவர்கள் பாவனை செய்வார்கள்.விஷயம் என்னவென்றால் அவர்கள் பாவனை செய்கிறார்களென்று அவர்களுக்கே தெரியாது. கண்டுபிடிப்பதும் கஷ்டம்.அது போன்ற சந்தர்ப்பங்களில் உரையாடல் மட்டுமே தீர்வு.அப்போது தஸ்தாயெவ்ஸ்கியை படித்ததும்,படிப்பதும் மிகவும் உதவுவதாக சொல்வார் என்றான்.
ஆம் அவர் அமரர் என்றான் ரிஷி.ஸ்ரீனிவாசராவுக்கு வேறு சில விஷயங்களை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.மறுபடியும் சந்தர்ப்பம் அமையுமா என்று தெரியாது. பார்வதி மீதும் அவனுக்கு கோபமில்லையா என்று கேட்டான்.தனக்கு தன் மீது மட்டும்தான் கோபம் என்றான்.அவள் என் இருப்பையை நிராகரித்துவிட்டாள்.எல்லா விஷயங்களும் முடிந்தபின் தனக்கு அதை செய்தியாக மட்டுமே அவள் சொன்னபோது தன்னால் எந்த எதிர்வினையும் செய்யமுடியவில்லையென்றும், மனம் மிகவும் அலைகழிந்து கிடப்பதாகவும் சொன்னான்.ஸ்ரீனிவாசராவுக்கு ஏனோ எல்லாம் சரியாகி விடும் என்ற எண்ணம் வந்தது.நிம்மதியாக உணர்ந்தான்.அவளுக்கு வேறு வேலை கிடைத்ததா என்று விசாரித்தான். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு சிறு நிறுவனத்தில் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்திருப்பதாக சொன்னான். மகிழ்ச்சி ,மிக்க மகிழ்ச்சி. முகத்தின் அந்த மகிழ்ச்சியை ரிஷியிடம் காட்டவிரும்பாமல் வருகிறேன் என்று சொல்லி திரும்பிவிட்டான்.
சில நாட்களில் ரிஷி சென்று மருத்தவரை சந்தித்தான்.மார்பு வரை நீளும் மெண்மையான வெண்தாடி.கதர் ஜிப்பா.அவர் அவனது வலது கையை தன் இரு கைகளாலும் பற்றினார். அப்போது தான் உணர்ந்தான்.அவருக்கு அந்த வயதிலும் உறுதியான உடல்.ஒடுங்கிய வயிறு.உயரம் ஆறடிக்கும் மேல்.அவனது பார்வையை புரிந்து கொண்டவர் சிரித்தார்.அவனது நாடக விருப்பங்கள், அவனது ஆசைகள் அனைத்தையும் பற்றி சொன்னான்.அவருக்கு கார்வையான குரல்.சொன்னார். உங்கள் மனம் மிகவும் அலைகழிந்து கிடக்கிறது. கவலைபடாதீர்கள். இதுவே உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆசி.
நீங்கள் பேசும் போது இன்றைய பலரைப் போல நாடகத்திலிருந்து சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையிருக்கிறதா என்று பார்த்தேன்.இல்லை.உங்களுக்கு மனிதர்கள் மீது உண்மையான அன்பு இருக்கிறது.இந்த வருடம் இங்கே வேலை செய்யுங்கள்.எது எதில் உங்களை ஈடுபடுத்தி கொள்வதென்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.ஒரிரு வருடங்களில் நீங்கள் உளவியல் துறையில் மேற்கொண்டு படிக்கலாம். படிக்க வேண்டும்.கட்டளையிட்டார்.அவன் ஏதுவும் பேசவில்லை.மேலும் நாடகத்தின் மீதான ஈர்ப்பை அவன் குறைத்துக்கொள்ள தேவையில்லை, அதுவே அவனை சிறந்த உளவியல் மருத்துவர் ஆக்கும் , இது உறுதி என்றார்.இப்போது புறப்படுங்கள் என்று அவர் சொல்வது போல் அவனுக்கு பட்டது. அவரின் கால் தொட்டு வணங்கினான். உங்கள் கனவுகள் நனவாகட்டும் என்று ஆசிர்வதித்தார்.அவரை பார்த்தான்.வாஞ்சையாக சிரித்தார்.நீங்கள் என்னை புனிதர் போல பார்க்கீறிர்கள். நாளையே நீங்கள் என்னை முழுவதுமாக வெறுக்ககூடிய செயலை நான் செய்யக்கூடும்.பொறுக்கிகள் புனிதர்கள்,குழந்தைகள் பெரியவர்கள்,பரதேசிகள், பணக்காரர்கள்,அரசர்கள் அடிமைகள் எல்லோரும் மண் மேல் நிற்கும் மனிதர்கள்தான்.இதை உணர்ந்து கொண்டால் தூய அன்பு பெரிய விஷயமில்லை."என் ஆசிர்வாதங்கள்" என்றார்.ரிஷி புறப்பட்டான்.
ஸ்ரீனிவாசராவ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு , செக்ந்திரபாத் சென்று வேறு வேலை பார்த்துக்கொள்ளலாமென்று முடிவு செய்தான். ரிஷியிடம் தொடர்பிலிருந்தான்.பார்வதி அவனிடம் பேச முயற்சி செய்தாள்.அவன் பேசவில்லை.ஒரு நாள் வீட்டிற்க்கே வந்து விட்டாள். அவளை ஏதுவும் பேச அவன் அனுமதிக்கவில்லை.தானே செகந்திரபாத் செல்லும்முன் பார்த்து செல்ல நினைத்தாகவும் வந்ததில் மகிழ்ச்சியே என்றும் சொன்னான். நான் சொல்வதை மட்டும் கேட்டுவிட்டு இங்கிருந்து சென்றுவிட வேண்டும்.உன் தாயை எவ்வளவு சீக்கிரம் முடியுமா அவ்வளவு விரைவாக அழைத்துக்கொள்.நீ சிறுமி.எக்காரணத்தைக்கொண்டும் விரைவில் திருமணம் செய்து கொள்ளாதே.ஒரு விஷயம் ஞாபகம் வைத்துக்கொள் , பெரிய விஷயங்களில் அல்ல, சிறு சிறு விஷயங்கிளிலே மனிதன் முழுமையாக வெளிப்படுகிறான்.மனிதர்கள் பண்முகங்களால் ஆனவர்கள்,கூர்ந்து கவனி, உனக்கானவன் உனக்கு கிடைப்பான்.இப்போது செல் என்றான்.நீங்கள் என்றாள்.எனக்கு தற்செயலில் நம்பிக்கை உண்டு.நீ செல் என்றான்.வருகிறேன் என்று சொல்லி கிளம்பினாள்.பிறகு அவர்கள் வாழ்வில் எப்போதெனும் சந்தித்திருக்கலாம்,சந்திக்காமலும் போயிருக்கலாம்.சுபம்.
பகுப்புகள்:
சிறுகதை
புத்தக கண்காட்சி
புத்தக கண்காட்சியில் எத்தனை புத்தகங்கள்.அதை முன்னிட்டு எத்தனை வெளியீடுகள். மிக சமீபத்தில் வரும் புத்தகங்களை தவிர்த்துவிடுவது நல்லது. சுடச்சுட படிப்பதற்க்கு அது ஒன்றும் செய்திதாள் அல்ல! இதில் தள்ளுபடிகள் வேறு. சில பதிப்பகங்களுக்கு என்ன நோக்கமென்று தெரியவில்லை. இந்தமுறை நான் சமகாலத்து எழுத்தாளர்கள் எழுதிய எந்த புத்தகத்தையும் வாங்கவில்லை.அசோகமித்திரன், கி.ரா., பஷூர், தஸ்தாயெவ்ஸ்கி,காம்யூ,ந.முத்துசாமி,சுந்தர ராமசாமி,பாதசாரி ஆகியோரின் புத்தகங்களைத்தான் வாங்கினேன்.இப்போது வணிக நோக்கில் வந்து குவியும் எழுத்துகளை சூழலின் பரபரப்பு காரணமாக வாங்க ஆரம்பித்தால் , பின்பு அவற்றை படித்து இருக்கும் ஆர்வத்தையும் விட்டுவிட நேரும்.
பகுப்புகள்:
சில குறிப்புகள்
ஒற்றன்
ஒவ்வொரு அத்தியாயமும் தன்னளவில் முழுமையானது என்ற வகையில் எழுதப்பட்டிருக்கிறது. ஏப்படி இவரால் இவ்வளவு அகங்காரம் இல்லாமல் எழுத முடிகிறது. துளிகூட கர்வம் இல்லை.ஆச்சரியம்.காந்தியை உண்மையாகவே உள்வாங்கி கொண்ட எழுத்தாளர். எழுதுவது ஒரு பயிற்சி.ஆட்டோ ஒட்டுவது போல.அவ்வளவுதான் என்கிறார்.இப்படிப்பட்ட ஆளுமைகள் ஆபூர்வம்.
ஒற்றன் அயோவா பல்கலைக்கழகத்திற்க்கு அசோகமித்திரன் ஏழுமாத காலம் அழைப்பின்பேரில் சென்ற போது ஏற்பட்ட அனுபவங்களால் எழுதப்பட்டது.புற உலகை கூர்ந்து கவணிப்பது எழுத்தாளனின் முக்கியமான மன அமைப்பு.அப்படி இல்லாதவர்கள் எழுதும் போது பெரும்பாலும் அது சுயசரிதை ஆகிவிடுகிறது.அப்படிபட்டவர்களுக்கு குறைந்தபட்சம் நேர்மையாவது வேண்டும். அசோகமித்திரன் புற உலகை எளிதில் உள்வாங்க கூடியவராகயிருக்கிறார்.நேர்மையானவர்.அவரை படிக்கும் போது ஒரு goodness உருவாகிறது.
கிளர்ச்சியையோ,குழப்பத்தையோ எழுத்து ஏற்படுத்தக்கூடாது என்கிறார்.அமெரிக்கா சென்றவர் முயன்றிருந்தால் அங்கேயே தங்கயிருக்கலாம். ஏன்?இங்கேயே கூட ஆங்கிலத்தில் எழுதியிருக்கலாம். செய்யவில்லை. அம்ஷன்குமார் இயக்கத்தில் அவரைப்பற்றிய ஆவணப்படம் அவர் ஆளுமையின் முக்கிய பதிவு.
ஒற்றன் நாவலில் ஒரு அத்தியாத்தில் மாணவி ஒருத்தி அவரை காதலிப்பதும்,இவர் தன் வீட்டு மனிதர்கள் புகைப்படத்தை காட்டி அதை மறுப்பதும் அழகானவை.
ஒற்றன் - காலச்சுவடு வெளியீடு
பகுப்புகள்:
சில குறிப்புகள்
பாதசாரியின் காசி
பாதசாரியின் காசி சிறுகதை வாசித்தேன். தமிழின் மிக முக்கியமான சிறுகதை. உளவியல் தளத்தில் இன்னும் சில தூரம் சென்றிருக்க வேண்டுமென்று தோன்றியது.
இதில் காசியாக வருவதும் அவனது நன்பனும் ஒரே மனிதனின் இருவேறு மனநிலைகள் ,ஆளுமைகள்.அந்த மனிதர் கதையை சொல்லும் பாதசாரிதான்.கதையில் முக்கிய தருணங்கள் பல இருந்தாலும் , பேருந்தில் செல்லும் போது ஏற்படும் வாழ்வின் ஆபூர்வ தருணம் என்ற இடம் மிக முக்கியமானது. பேருந்தில் செல்லும்போது அதுவும் மதியான நேரத்தில் (பதினொரு மணியிலிருந்து மூன்று மணிவரை) சமயங்களில் கூட்டம் குறைவாகயிருக்கும்.ஜன சந்தடியில்லாமல் நேரான சாலையில் ஓட்டுனர் சீரான வேகத்தில் , கீயர் மாற்றாமல் செலுத்தும்போது அநேகமாக பேருந்தில் யாரும் பேசுவதில்லை. சிலர் தூங்குவார்கள். அப்போது ஓட்டுனர் , பயனிகள், பேருந்து எல்லாம் சேர்ந்து ஒர் உடல் ஆகும் தருணங்கள் அமைவதுண்டு. வாழ்வின் அற்புத தருணங்கள்.
அவசியம் வாசிக்கபட வேண்டிய சிறுகதை.தமிழினி வெளியீடு.
பகுப்புகள்:
சில குறிப்புகள்
Subscribe to:
Posts (Atom)