-1-
அறை முழுவதும் புத்தகங்கள். மேசையின் மீதும் கட்டிலுக்கு அடியிலும் அலமாரி முழுமைக்கும் அதுவே.
ஃஹங்கரில் இரண்டு மூன்று அரைக்கை சட்டைகள். பேண்டுகள். சீனிவாசராவ் ஏதோ பழைய சஞ்சிகையை புரட்டியவாறு அமர்ந்திருந்தார். தலையிலும் முகத்திலும் நிறைந்த நரை. ‘இன்றைய பொழுது இனி எங்கனம் கழியும்’ என்பது போல மரநாற்காலியில் அமர்ந்திருந்தார் பாலா. அவர் தலை வியர்த்திருந்தது. அதன் காரணமாகவோ என்னவோ ராவின் தலை முடியை பார்த்தவாறு இருந்தார். சுவர்களிலும் மௌனம் அப்பியிருந்தது. சூரியன் தூசுகளாலும் , துகிள்களாலும் மேசையுடன் ஒளிக்கற்றைகளான பாலம் அமைத்திருந்தது. ராவ் எழுந்து பாத்ரும்க்குள் சென்றார். ‘ஸ்வேங்’ என்ற ஒலியெழுப்பியவாறு உள்ளே நுழைந்தான் ராஜன். அவன் கையில் ஏதோ லெதர்பையிருந்தது. அதை அப்படியே கட்டிலில் கடாத்தி விட்டு ராவ் புரட்டி கொண்டிருந்த சஞ்சிகையை இவன் புரட்ட ஆரம்பித்தான். பாலா அவனை பார்த்தவாறு இருந்தார். ஏதோ யோசனையில் ஆழ்ந்தவன் ‘எருமைமாட வைச்சு தலையை நக்கவிட்டா, முடி வளருமா அங்கிள் என்றான். அவன் முகத்தில் கேலிக்கான அறிகுறிகள் இல்லை. வெலவெலத்து போன பாலா சற்று நிதானித்து முயற்சித்து பார்க்கலாம் என்று சொல்லி சிரித்தார்.
ராவ் ராஜன் அருகில் அமர்ந்து கொண்டார். தங்கள் வீட்டில் இன்று தன் தாத்தாவுக்கு தவசமென்றும்,எங்கும் ஒரேபுகை, அதனால் ஓடிவந்துவிட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தான் ராஜன். தீடீரென்று ராவ்வை பார்த்து அவருக்கு என்று தவசம் என்று விசாரித்தான்.
ராவ் பாலாவின் முகத்தை பார்த்தார். பாலாவின் முகத்தில் எந்த சலனமுமில்லை. இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் கழித்திருக்கலாம் என்று சொல்லி சமாளித்தார். சஞ்சிகையை புரட்டிக் கொண்டிருந்தவன் சட்டென்று எழுந்து கொண்டு தனக்கு போர் அடிப்பதாக சொல்லி, இருவருக்கும் டாட்டா காட்டி விட்டு லெதர்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அதைப்பார்த்த ராவ் சற்று பதறியவராக அவனை பிடித்து கொண்டு லெதர்பை யாருடையது? எங்கிருந்து எடுத்தது என்று விசாரித்தார். தன்னுடையது, தன் கணக்கு புத்தகமும் நோட்டும் இருப்பதாகவும் தான் எடுத்துக் கொண்டு வந்ததாக சொல்லி மார்போடு அனைத்துக் கொண்டான். பாலாவும் அவன் கொண்டார்ந்ததுதான் என்றார். சரி போ , என்றவாறு கட்டிலில் அமர்ந்து ,அலமாரியை நோட்டமிட்டார். அதில் அதை போன்ற லெதர்பையிருந்தது. பாலாவும் அதை பார்த்தார். அவர் எதுவும் கேட்டு கொள்ளவில்லை. எங்காவது வெளியே செல்லலாம் என்றார் ராவ். பாலா எழுந்து கொண்டார்.
-2-
மைதானத்தை ஒட்டி இரண்டு மூன்று வேம்பு இருந்தது. சிறுவர்கள், பெரியவர்கள் யாருமில்லை. சூரியன் எழுந்து கொண்டிருந்தான். சைக்கிளில் ஒருவர் மைதானத்தின் ஒருமுனையிலிருந்து மறுமுனைக்கு சென்று கொண்டிருந்தார். அவர் வேஷ்டி காற்றில் பறக்க அவர் தொடைதெரிந்தது. பார்வையாளர்கள் அமர்வதுக்கென்று கட்டப்பட்ட இரண்டு மூன்று அடுக்குள் கொண்ட படிகளில் அமர்ந்து கொண்டனர் இருவரும். மைதானத்தை ஒட்டியிருந்த சாலையில் பேருந்தில் சிலர் ஏறிக் கொண்டிருந்தனர்.
‘அறுபத்தி ஒன்னுல முத சிறுகத வந்தது பாலா’ அவராகவே பேச ஆரம்பித்தார். பஷூர் போல ,தஸ்தாயெவ்ஸ்கி போல இனிதானும் ஒரு எழுத்தாளர் என்று அன்று நினைத்தது இன்றும் நினைவிலிருக்கிறது என்றார். சொற்கள் அவரிலிருந்து பீறிட்டு எழுந்தன. எழுந்து கொண்டு பெண்டுலம் போல அப்படி இப்படி நடந்தார். இந்த மைதானத்தை பற்றி , வேம்பை பற்றி ,சூரியனைப்பற்றி எல்லாமே தன் கதையில் எழுதியிருப்பதாகவும், இன்று நினைக்கையில் எல்லாமே அபத்தமாகபடுவதாகவும் சொன்னார். ‘எல்லாம் துரத்திட்டு நிக்கற மாதிரி இருக்குது பாலா’. பாலா எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. எந்த எதிர்வினையும் என்னி அவர் பேசவில்லை என்பதை அவர் அறிந்திருந்தார்.
கொஞ்ச நாட்களாகவே இப்படி தோன்றுவதாக சொன்னவர், அதுவும் தனக்கு விருது அறிவிக்கப்பட்டுயிருப்பதாக நாதன் வந்து சொன்னபின் , அந்த முள்ளின் நெருடல் அதிகமாகி விட்டது என்றார். நாதன்தான் தனக்கும் விருது வழங்கப்பட்ட விஷயத்தை நேற்று வந்து சொன்னார் என்றார் பாலா. எல்லோருக்கும் அவர்தான் சொல்வார் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டார் ராவ். பாலாவை பார்த்து தன்னைப் பற்றியும் , தன் எழுத்தைப் பற்றியும் , ஒரு வாசகனாக ஒரு நண்பனாக அவருடைய கருத்து என்ன என்று கேட்டார். ‘என்ன சார் திடீர்னு’ என்றார் பாலா. தான் யாரிடமும் இப்படி இதற்குமுன் கேட்டதில்லையென்றும் , நாதனிடம் கேட்ட தனக்கு துணிவில்லை என்று சொல்லி முடித்து கொண்டார் ராவ். பாலாவின் மனம் சொற்களை சேர்க்க ஆரம்பித்திருந்தது. அங்கு சற்று நேரம் மௌனம் நிலவியது. ‘நீங்க சுயமையநோக்கு கொண்ட இருத்தலியவாதி’ சொற்களை பட்டென்று போட்டு உடைத்தார் பாலா. ராவ் பாலாவிடமிருந்து இவ்வளவு கறாரான வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை ஆமாம். அவருடைய உலகத்தில் அவர் மட்டுமே இருப்பதாகவும், அவரின் ஆதார பிரச்சனையே அவர் இருப்புதான்யென்றும், அதை கழற்றி வைத்துவிட்டு ஒடவே அவர் யத்தனித்து வருவதாகவும், அதன் பொருட்டே அவர் திருமணமும் செய்து கொள்ளாமல், தாவூத் போன்ற உண்மையான நண்பர்களை பிரிந்து இப்படி தனித்து வாழ்ந்து தன்னையும், பிறரையும் இம்சிப்பதாக தனக்குள் நீண்ட நாட்களாயிருந்த குமறல்களை கொட்டி தீர்த்தார் பாலா. தொடர்ந்தவர், ‘உங்க பிரச்சனை இருப்பு சார்ந்த துயர். அதுக்கு விடைய எழுத்துல தேடீனிங்க. இன்னிக்கு வரைக்கும் கண்டையல. நிறைய மனிஷங்கல பத்தி நீங்க கதைகள்ல எழுதியிருக்கீங்க. நிச்சயமா உங்களுக்கு மனிஷங்க மேல உண்மையா பற்று இருக்கு , அன்பு இருக்கு ,ஆனா அத உங்க உலகத்துல இருந்துதான் எழுதீனிங்க. இருப்பு சார்ந்த துயர் ஆதி மனிதன் பிரச்சனை. ஜகப் பிரளயம் வந்து கடைசி மனிதன் இறக்கப்போகும் வரை இருக்க போகும் பேசு பொருள். அதனால் உங்க படைப்புக்கு காலத்துல இடமுண்டு என்று தனக்குள் ராவ்வை பற்றியிருந்த எல்லா பிம்பங்களையும் கழற்றி வைத்தார் பாலா. தன் வாழ்வின் அனுபவத்தில் எவ்வளவு பிரச்சனைகள் ,சச்சரவுகள் இருந்தாலும் மனிதன் தனித்து வாழ பிறந்த பிறவி அல்ல என்பதை தான் அனுபவபூர்வமான உணர்ந்து கொண்டதாகவும் சொன்னார் பாலா. ராவ் அருகில் வந்து தன் கரங்களை பாலாவின் தோள் மீது வைத்தார். ‘நீங்க சொல்றது உண்மையாத்தான்படுது’ என்றார். அவர் வெடித்து அழுதுவிடுவார் என்பது போல இருந்தது. ஆனால் பிறர்முன் அழக் கூடியவர் அல்ல அவர் என்று பாலாவுக்குத் தெரியும். ‘விருது வேண்டாம்னு சொல்லிடலாம்ன்னு இருக்கேன் , போகலாம்’ என்றார்.
-3-
பாலா வரும் வழியிலேயே விடைபெற்றுக் கொண்டார். ராவ் மிக தனியனாக படி ஏறி தன் அறைக்கு சென்று கொண்டிருந்தார். வெளியில் வரேந்தாவில் கோவிந்தன் அயர்ந்துபோய் தூங்கிக் கொண்டிருந்தார். ஒல்லியான உருவம். கதர் சட்டை, வேஷ்டி. பழுப்பேறிய கண்கள். கையில் துணிப்பை .ஒடுங்கிப் போயிருந்தார். கோவிந்தனை ராவ் எதிர்ப்பார்க்கவில்லை. ராவ் கோவிந்தனை எழுப்பி உள்ளே அழைத்து சென்றார். ‘சாருக்கு விருது அறிவிச்சிருக்கிறதா கேள்விபட்டேன். சாரை பாத்திட்டு போலாம் வந்தேன்’ என்றார் கோவிந்தன். மேலும் ஏதோ சொல்ல வந்தவர் சொல்லாமல் விட்டு விட்டார். அவரின் மகளும், மனைவியும் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரித்து கொண்டிருந்தார் ராவ். மிகவும் செளகரியமாக இருப்பதாக சொன்ன கோவிந்தன் , தனக்கு முக்கியமான வேலை ஒன்று இருப்பதாக சொல்லி கிளம்பினார். வாசல் வரை சென்றவர் திரும்பினார். காலை வெயிலின் கதிர்கள் அவர் மீது பட்டு தெரித்தது. அவர் முகம் அவ்வளவு சரியாக ராவுக்கு தெரியவில்லை. தன் மனைவி ரோஸி படிக்கட்டில் இறங்கும் போது கால் தவறி விழுந்து விட்டதால் இடுப்பு எலும்பு நழுவி விட்டதாக சொல்கிறார்கள். கொஞ்சம் பணம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றார். அவரது குரல் தழதழத்து போயிருந்தது. ராவ் எழுந்து அவர் அருகில் ஒடினார். அவர் கரங்களை பற்றிக் கொண்டு எவ்வளவு தேவைப்படும் என்றார். ஒரு இருபதாயிரம், மூப்பதாயிரம் கிடைச்சா நல்லாயிருக்கும் சார் என்று சொன்னவர் அதற்கு மேல் கட்டு படுத்த முடியாமல் ராவின் தோளில் சாய்ந்து வெடித்து அழுதுவிட்டார்.
-4-
மாலையில் பாலா வந்திருந்தபோது பதற்றமாக அமர்ந்திருந்தார் ராவ். கோவிந்தன் வந்து போன விஷயத்தை சொன்னார். பாலா கிண்டலாக விருது வாங்கிவரும் பணத்தை கொடுத்தால் போதும் என்றார். ராவின் முகம் ரத்தமேறி சிவந்தது. பாலா மேலும் கோபத்துடன் அவரும் சேர்ந்து உழைத்து உருவாக்கியது தானே அந்த செருப்புக்கடை. ஏன் தாவூத்திடம் சென்று பணம் கேட்கக்கூடாது, தாவூத் அவர் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை தான் சொல்லத் தேவையில்லை என்றார். படுக்கையில் படுத்திருந்த ராவ் எழுந்து கொண்டு மேசையில் கட்டைவிரலால் தட்டினார். தாவூத் , தாவூத் என்ற வார்த்தையை மறுபடி ,மறுபடி சொல்லிக் கொண்டார். ஏதோ தன்னுள் ஆழ்ந்து நாளைக்கு சென்று பார்க்கலாம் ,நாதனை அழைத்துக் கொண்டு கடைக்கு வந்துவிடுங்கள் என்று பாலாவிடம் சொன்னார்.
-5-
அதிகாலையெல்லாம் எழுந்து கொண்டு அடையர் டிப்போ அருகே வந்துவிட்டார் ராவ். அருகே இருந்த பள்ளிவாசலில் ஓதுவது கேட்டது. ‘ஆர்.டி. ஷூ மார்ட்’ என்ற பெயர் பலகையை பார்த்தவாறு நின்றார். கடைதிறக்க எப்படியும் இன்றும் மூன்று நாலுமணி நேரம் ஆகும், அதுவரை என்ன செய்வது என்று யோசித்தவர், கால் போன போக்கில் நடந்தார். கால் அது பழகிய போக்கில் சென்றது. எல்.பி.ரோட்டை கடந்து காந்திநகர் நோக்கி சென்றார். அங்கே இருந்த ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் முகப்பில் சென்று அமர்ந்து கொண்டார். அடர்த்தியான மரங்கள். கொஞ்சம் கொஞ்சமாக சென்னை குழந்தை விழித்துக் கொள்ள ஆரம்பித்தது. மரங்களின் ஊடாக ஒளிக்கற்றைகள் எங்கும் சிதறியபடியிருந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்தவர் சட்டென்று மன எழுச்சி கொண்டார். ஒளிக்கற்றைகளில் தன் கைகளை காட்டினார். அது செந்நிறத்தில் ஜொலித்தது. உள்ளங்கைகளால் ஒளிக்கற்றைகளை குவித்து முகத்தில் பொதித்துக் கொண்டார். கீழே எங்கும் உதிர்ந்து போன சருகுகள். லேசான காற்றில் அவை அசைந்தன. ஒரு நொடியில் வானமும் பூமியும் அவரும் அனைத்தும் சேர்ந்து ஒரு பிண்டம் ஆகின. அவர் பறக்க ஆரம்பித்தார். பறக்கிறார். தலையை சிலுப்பிக் கொண்டார் ராவ். அண்ணாந்து மேலே பார்த்தார். கண்கள் கூசின. அதுவரையான கொந்தளிப்புகள் அடங்கி போயிருந்தது. உதிர்ந்து கிடந்த இலைகளுக்கும் தனக்கும் பெரிய வித்யாசம் இல்லை என்று அவருக்கு தோன்றியது .சிரித்துக் கொண்டார்.
-6-
சென்னை குழந்தை முழுவதுமாக விழித்துக் கொண்டது. எங்கும் இரைச்சல். கடைக்கு சென்றார். பாலாவும் நாதனும் ஏற்கனவே வந்திருந்தனர். தாவூத் பருமனாக இருந்தார். ராவை பார்த்ததும் எழுந்து கொண்டார். முகமலர்ச்சியோடு வாஞ்சையாக குழந்தை போல சிரித்தார். வீட்டில் யாரிடமேனும் கருப்பட்டி காபி போட்டி எடுத்துவரச் சொல்லுமாறு கடைப்பையனிடம் சொன்னார். அங்கே யாரும் பேசிக் கொள்ளவில்லை. ராவ் தினமணி நாளிதழை புரட்டியவாறு இருந்தார். ‘இவன் தான் பஷீர்’ என்றார் தாவூத். அவர்முன் இருபது இருபத்திரெண்டு வயதிலான இளைஞன் கையில் ஃப்ளாஸ்க்கும், டம்ளர்களுடன் நின்று கொண்டிருந்தான். ‘முகம்மது பஷூரா’ என்று வாயை விரித்தார் ராவ். ஆமாம் என்பது போல தலையசைத்தார் தாவூத். ராவ் எழுந்து பஷூர் தலையை வருடினார். என்னசெய்வதாக விசாரித்தார். ‘லெதருக்கு படிச்சு முடிச்சிருக்கேன் பெரியப்பா’ என்றான். ‘ஆம்பூர்ல சின்னதா ஒரு ஃபேக்ட்ரி ஆரம்பிக்கலான்னு இருக்கோம்’ என்றார் தாவூத். நல்லது நல்லது என்று தனக்கே சொல்லிக் கொள்வது போல சொல்லிக்கொண்டார் ராவ். வாடிக்கையாளர்கள் யாருமில்லை .சிறிது நேரமிருந்தவர் வந்துடறேன் என்று சொல்லி கிளம்பிவிட்டார். நாதனும் பாலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ‘அவனுக்குள்ள ஏதோ பெரிசா நடந்திட்டுயிருக்கு அனேகமா திரும்பி வருவான்’ என்றார் தாவூத்.
-7-
ஒரு மணி நேரம் கழித்து வந்தார் ராவ். நாதனும் பாலாவும் சென்று விட்டிருந்தனர். அறுபது அறுபத்தியெந்து வயதிலான ஒருவர் தன் மனைவிக்கு செருப்பு வாங்க வந்திருந்தார். தன் மனைவிக்கு கால்கள் சிறியது, ஆனால் அகலமாகயிருக்கும், அது போன்ற செருப்புகள் ஏதாவது இருந்தால் காட்டுமாறு கடைப்பையனிடம் சொன்னார். பெரும்பாலும் அப்படி சிறியதாகவும், அதே சமயத்தில் அகலமாகவும் செருப்புகள் வருவதில்லை என்று சொன்னவன் ஒரு செருப்பை காண்பித்து இது வேண்டுமானால் நீங்கள் சொல்வது போல் இருக்கும் என்றான். வாடிக்கையாளர் தான் வாங்கிக் கொண்டு செல்வதாகவும் சரியில்லையென்றால் மாற்றுக் கொள்ளமுடியுமா என்றும் கேட்டார். கடைப்பையன் தாவூத்தை பார்த்தான். ராவ் ‘அதெல்லாம் மாத்திக்கலாம் சார் கவலைப்படாதீங்க’ என்றார். கடைப்பையனுக்கு அவர் யார் , எதுவும் புரியவில்லை. நூற்றி எழுப்பைத்தைந்து ரூபாய் வாங்கி கல்லாவில் போட்டார் ராவ். ‘அவர் அனேகமா திரும்பி வரமாட்டார். சும்மா ஒரு ஆறுதலுக்குதானே’ தாவூத்தை பார்த்து சொன்னார். தாவூத் சிரித்தார் .எல்லோரை பற்றியும் விசாரித்தார். கடைப்பையனை அழைத்தார். அவன் பெயரை கேட்டார். ரஹ்மத்துல்லாஹ் என்றான். சொந்த ஊர் திருத்துறைப்பூண்டி என்றும், அப்பா வெற்றிலை கடை வைத்திருப்பதாகவும், படிப்பு படிக்காமல் ஊர் சுற்றி கொண்டிருந்தால், ஏதேனும் வியாபாரம் கற்றுக் கொள்ளட்டும் என்று தன் அப்பா இங்கே அனுப்பியிருப்பதாவும் சொன்னான். ‘என்னோடு வந்து தங்கிக்கிறியா’ என்று கேட்டார் ராவ். அவன் தாவூத்தை பார்த்தான். தாவூத் போயி தங்கிக்கோ என்றார். அவன் அவரை எப்படி அழைப்பது என்று கேட்டான். அவன் எப்படி அழைக்க விரும்புவதாக கேட்டார்.
தன் ஊரில் அவரைப் போன்ற ஒருவரை பார்த்திருப்பதாகவும், அவரை சிலர் சாஹிப் என்று அழைப்பதை கேட்டிருப்பதாகவும் அப்படி உங்களையும் ‘ராவ் சாஹிப்’ என்றே அழைக்கிறேன் என்றான். சரி என்றார்.
No comments:
Post a Comment