பிதாமகன் திரைப்படம்
வெளியாகியிருந்தது.தேவிரத்னா திரையரங்குக்கு சென்றிருந்தேன்.மதியக் காட்சி.பொறியியல்
படித்து விட்டு மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த காலம்.கல்லூரியில்
என்ன படித்தேன் என்று எண்ணிய போது பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு எதையும் கற்றுக்
கொள்ளவில்லை என்பதை உணர்ந்தேன்.நண்பர்கள் பலரும் சென்னை பெங்களூரு என்று வேலை தேடிச்
சென்றனர்.சிலருக்கு ஐடித் துறையில் பத்தொன்பதாயிரம் சம்பளத்தில் வேலையும் கிடைத்தது.எனக்கு
ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.சினிமா முடிந்து வெளியே வந்த போது உடனே வீட்டுக்கு
சென்று என்ன செய்யப் போகிறோம் என்று எண்ணம் உதித்தது.நடந்து மெயின் பஜாரிலிருந்த இந்தியன்
காபி ஹவுஸூக்கு சென்றேன்.ஒரு பிளேட் வெஜிடபிள் கட்லெட்டும் காபியும் சொன்னேன்.என் தந்தை
என்னை சிறு வயதில் இங்கே அடிக்கடி அழைத்து வருவார்.இந்த ஹோட்டலின் சூழல் ,சுத்தம்
, வெள்ளை பிங்கான் கோப்பைகள் , சர்வர்களின் வெண்ணிற உடை, நீள் தொப்பி எனக்கு எப்போதும்
பிடித்தமானது.
என்ன நிவாஸ் எங்களை
விட்டுட்டு சாப்படுறீங்க என்று ஒரு குரல் கேட்டது.குரல் வந்த திசையில் பார்த்தால் பரதன்
நின்று கொண்டிருந்தார்.எப்போதும் போல நன்கு சவரம் செய்த முகம்.நில நிறச்சட்டை அணிந்து
இன் செய்திருந்தார்.தங்க நிற பிரேமில் கூலிங் கிளாஸ் போன்ற
பவர் கிளாஸ்.முழுக்கை சட்டையை முட்டி வரை மடித்து விட்டிருந்தார்.அவருடன் ஒருவர் அமைதியாக
நின்றிருந்தார்.இவர் தான் முரளிகிருஷ்ணன் என்று சொல்லி அறிமுகப்படுத்தினார்.இவர் நிவாஸ்
, வக்கீல் பாஷ்யத்தின் மகன்.நான் எழுந்து கை குலுக்கினேன். அவர் புன்னகைத்து கைகுலுக்கி
மறுபுறம் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.பரதன் இருவருக்கும் காபி சொன்னார்.
பரதன் எங்கள் வீட்டின் அருகிலிருந்த காம்ப்ளக்ஸில்
மெடிக்கல் ஷாப் வைத்திருந்தார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். நைனா சில நேரங்களில்
அவரைச் சென்று சந்திப்பார்.எங்களுக்கு ஏதோ ஒரு வகையில் உறவு.அவர் மனைவி பத்மாவும் வழக்கறிஞர்
தான்.முரளிகிருஷ்ணன் சென்னையில் குழந்தைகள் நல மருத்துவராக இருக்கிறார் என்று சொன்னார்
பரதன்.
எனக்கு வியப்பாக இருந்தது.மருத்துவர் என்பதற்கான எந்த
அறிகுறியும் அவரிடம் இல்லை.அவர் அணிந்திருந்த செருப்பு கிழிந்திருந்தது.தோளில் ஒரு
ஜோல்னாபை.அதில் நிறைய காகிதங்கள்.கையில் ஒரு பச்சை நிற டயரி.விரிந்த முகம் , அகன்ற
நெற்றி.சரியாக கோதாத சிகை.அரைக்கைச் சட்டை.கறுப்பு நிற தடித்த சட்டகத்தில் ஒரு கண்ணாடி.அவர்
ஒன்றும் பேசாமல் இருந்தார்.மெல்ல காபி பருகினார்.சிதம்பரத்தில் நடந்த ஒரு லாக்கப் மரணத்தை
பற்றி இருவரும் உரையாடிக் கொண்டனர்.அதைப்பற்றி விசாரிக்கவும் அறிக்கை தயாரிக்கவும்
வந்திருந்தார் முரளிகிருஷ்ணன்.அவர் மனித உரிமைகள் அமைப்பு ஒன்றை நிர்வகித்து நடத்தி
வருவதாக பரதன் என்னிடம் கூறினார்.பரதன் எதிரில் இருப்பவர் யார் , என்ன படித்திருக்கிறார்
, அவருக்கு என்ன புரியும் என்பதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அப்போது என்ன பேசப்படுகிறதோ
அதில் அனைவரையும் இணைத்துக்கொள்வார்.என் சிறு வயதிலிருந்தே எப்படி இருக்கிறீர்கள் என்று
தான் கடைக்கு செல்லும் போது விசாரிப்பார்.நீ வா போ என்று யாரையும் சொல்லி பார்த்ததில்லை.அவர்கள்
இல்லாத போதும்.
முரளிகிருஷ்ணன் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்
என்று வினவினார்.பொறியியல் படித்திருக்கிறேன்.வேலை தேட வேண்டும் என்றேன்.பாடப்பிரிவு
பற்றி கேட்டார்.மின்னியல் என்று கூறினேன்.உணவகத்திலிருந்து வெளியே வந்த போது கல்லாவின்
அருகில் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தைப் பார்த்து இது யார் என்று கேட்டேன்.இவர்
தான் ஏ.கே.கோபாலன்.இந்தியன் காபி ஹவுஸ் உருவாக காரணமாக இருந்தவர்.முக்கிய இடதுசாரித்
தலைவர்.மலையாளத்தில் இந்தியன் காபி ஹவுஸ் பற்றி புத்தகம் கூட வந்திருக்கிறது. முரளிகிருஷ்ணனை
சிபிஎஸ் பஸ் ஸ்டாண்டுக்கு அழைத்துச் சென்று சென்னைக்கு பஸ் ஏற்ற வேண்டும் , நீங்களும்
வாங்களேன் என்றார் பரதன்.
பரதன் ஆர்.எக்ஸ் 100 வைத்திருந்தார்.மூவரும் அவரின் இரு சக்கர வாகனத்தில் பஸ் நிலையம் சென்றோம்.முரளிகிருஷ்ணன்
உணவகம் ஒன்றிற்கு சென்று தான் வைத்திருந்த பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக்கொண்டார்.பரதனை
பார்த்து யாரோ இருவர் சலாம் வைத்து அருகில் வந்து பேசிக்கொண்டிருந்தனர்.முரளிகிருஷ்ணன்
தன் சகோதரன் சென்னையில் ஒரு மின்னணுவியல் நிறுவனத்தை நடத்திவருவதாகவும் அவனிடம் சொல்வதாகவும்
சொன்னார்.வேலையில் சேர விருப்பம் இருக்கிறதா என்றும் கேட்டார்.அவர் இதை சிரிக்காமல்
தான் கேட்டார்.எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.பிறகு சற்று சுதாரித்து விருப்பம்
தான் , ஆனால் எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது என்றேன்.வேலையில் சேர்ந்தால் கற்றுக்
கொள்ளலாம் , நான் சொல்கிறேன் என்று கூறி என் வீட்டுத் தொலைபேசி எண்ணை வாங்கினார்.தன்
டயரியில் குறித்துக் கொண்டார்.அவர் ஒரு பேஜர் வைத்திருந்தார்.
பரதனிடமும் என்னிடமும் விடைபெற்று ஒரு பெரியார் வண்டியில்
ஜன்னல் ஓரத்தில் ஏறி அமர்ந்தார்.நாங்கள் இருவரும் எங்கள் இல்லம் நோக்கி வண்டியில் திரும்பினோம்.மாலையின்
செந்நிறக் கதிர்கள் எங்கும் வியாபிக்க சீரான வேகத்தில் வண்டியை செலுத்தினார் பரதன்.தெர்மல்
சாலையில் செல்லும் போது குளிர்ந்த நீர் முகத்தில் பட்டது.முரளிகிருஷ்ணன் அழைப்பார்
என்று நான் நினைக்கவில்லை.ஏனேனில் அவர் என் ரெஸ்யூமை கூட அனுப்பச் சொல்லி கேட்கவில்லை.
இரண்டு மூன்று நாட்களில் நான் அதைப்பற்றி மறந்தும்
விட்டேன்.ஒரு நாள் மதியம் தொலைபேசி ஒலிக்கவும் என் அப்பா எடுத்து பேசினார்.எனக்குத்
தான் அழைப்பு என்று சொல்லி கொடுத்தார்.மறுமுனையில்
முரளிகிருஷ்ணன் தன் சகோதரனிடம் பேசிவிட்டதாகவும் அடுத்த நாளே கிளம்பி வருமாறும் சொன்னார்.நான்
உண்மையில் அந்த வாய்ப்பை மறுத்து விட விரும்பினேன்.எனக்கு பணியில் சேர அச்சமாக இருந்தது.
என் அம்மாவின் சொந்த ஊர் எழும்பூர் என்பதாலும் என்
அம்மா வழி உறவினர்கள் பலர் கோடம்பாக்கம், பெசன்ட்நகர்,எக்மோர் பகுதிகளில் வாழ்ந்ததாலும்
நான் தொடர்ந்து கோடை விடுமுறைகளுக்கு என் அம்மாவுடன் சென்னை சென்றதுண்டு.அதனால் மெட்ராஸ்
பரிச்சயமான நகரம் தான்.அடுத்த நாள் கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்திலிருந்த என் பெரியம்மாவின்
வீட்டில் சென்று தங்கினேன்.முரளிகிருஷ்ணன் சொன்ன நிறுவனம் தாம்பரம் மெப்ஸில் இருந்தது.கோடம்பாக்கம்
ரயில் நிலையம் சென்று ரயில் ஏறி தாம்பரம் சானடோரியத்தில் இறங்கி வெளியே வந்து ஒரு ஆட்டோ
பிடித்து நிறுவனத்திற்கு சென்றேன்.ரயில் கட்டணம் ஏழு ரூபாய்.ஆட்டோகாரர் இருபது ரூபாய்
கேட்டார்.
என்னை நேர்காணல் எடுப்பார்கள் என்று பார்த்தேன்.இவர்
தான் வீராசாமி.மின்னியல் துறையின் தலைவர்.இவரிடம் தான் நீங்கள் வேலை செய்வீர்கள் என்று
சொன்னார்கள்.சில படிவங்களை நிரப்பக் கொடுத்தார்கள்.பணி ஒப்பந்தக் கடிதத்தில் கையெழுத்து
வாங்கினார்கள்.வங்கிக் கணக்கு இருக்கிறதா என்று கேட்டார்கள்.இல்லை என்றேன்.ஒரு எண்ணைக்
கொடுத்து இவரைத் தொடர்பு கொள்ளுங்கள் ,தொடங்க உதவுவார்கள் என்றார்கள்.முதல் ஆறு மாதங்கள்
பயிலுனராக வேலை செய்ய வேண்டும்.எட்டாயிரம் சம்பளம்.வேலை உறுதி செய்யப்பட்டால் பதினைந்தாயிரம்
ஊதியமும் வருடாந்திர போனஸூம் தரப்படும் என்றார்கள்.வீராசாமி என்னை உற்பத்தி யூனிட்டுக்கு
அழைத்து சென்று இங்கு தான் உங்களுக்கு அடுத்த ஆறு மாதத்திற்கு வேலை என்று சொல்லி கிளம்பிவிட்டார்.எனக்கு
என்ன வேலை என்பதே விளங்கவில்லை.நான் ஓரிடத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன்.யாரும்
என்னைக் கண்டுகொள்ளவில்லை.அப்படியே எழுந்து ஓடிவிடலாம் என்று கூடத் தோன்றியது.உணவுக்கூடம்
எங்கே இருக்கிறது என்று கூட தெரியவில்லை.நான் மதியம் வெளியே சென்று உணவருந்தி வந்தேன்.மாலை
கோடம்பாக்கம் திரும்பிய பின்னர் ஓர் அலைபேசியை வாங்கினேன்.நோக்கியா 1100.
அடுத்த நாள் சென்ற போது எனக்குத் தொழிற்கூடத்தில்
அணிந்து கொள்ள நில நிற ஓவர்கோட் கொடுத்தார்கள்.செய்யக்கூடியவை , செய்யக்கூடாதவை என்ற
சின்ன வகுப்பு எடுத்தார்கள்.எத்தனை மணிக்கு வர வேண்டும் , எப்போது செல்லலாம் என்பதை
சொன்னார்கள்.நான் யாரிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்பதை தெரிவித்தார்கள்.அது மின்னணுவியல்
உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம்.மின்னியல் துறை உற்பத்தித் துறையையும் உள்ளடக்கியது.இந்தத்
துறையில் மின்னணுவியல் உதிரிப் பாகங்கள் தயாரிப்புக்கு தேவையான இயந்திரங்களை உற்பத்தி
செய்வதையும் அவற்றை பராமரிக்கும் வேலையையும் செய்வார்கள்.அதே போல சில தொடர் செயல்பாடுகளை
இயந்திரப்படுத்தும் பணியையும் செய்தார்கள்.நியூமேடிக் சிலிண்டர்களை அங்கு தான் முதல்
முறை பார்த்தேன்.அதற்கான கம்ப்ரஸர் கீழ் தளத்தில் இருந்தது.அதைப் பல இயந்திரங்களில்
பயன்படுத்தினார்கள்.
நேதாஜி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஒருவன் அவனாக
வந்து பேசினான்.ஒல்லியாக பள்ளிச் சிறுவன் போல இருந்தான்.என்னை மதிய உணவகத்திற்கு அழைத்துச்
சென்றான்.எப்போதும் துள்ளிக் கொண்டே இருந்தான்.யாரைப் பார்த்தாலும் அவர்களிடம் எதாவது
பேசினான்.பெண்களிடம் நிறைய அளாவினான்.அவர்களும் அவனிடம் நிறைய கதைத்தார்கள்.அங்கு மூன்று
வருடங்களாக வேலை செய்வதாக கூறினான்.அவன் தான் என்னை பிறருக்கு அறிமுகம் செய்தான்.நிறுவனத்தைப்
பற்றிய சித்திரத்தை அளித்தான்.அன்பு ஈனும் ஆர்வமுடைமை அது ஈனும் நண்பு என்னும் நாடாச்
சிறப்பு என்கிறது குறள்.நாடாமல் கிடைத்த நண்பன் நேதாஜி.அவன் இல்லாமல் போயிருந்தால்
நான் ஒரு வேளை அந்த நிறுவனத்தை விட்டு ஓடிப் போயிருப்பேன்.வீராசாமி சின்னச் சின்ன வேலைகளை
பணித்தார்.நேதாஜி எனக்கு உதவினான்.ரிலே என்றால் என்ன , டயோட் என்றால் என்ன , டிரான்ஸ்ஸிஸ்டர்
என்றால் என்ன என்று முதல் முறை அறிந்தேன்.அவைகளை எதற்குப் பயன்படுத்துவார்கள் என்பதும்
எனக்கு மெல்ல புரிய ஆரம்பித்தது.மைக்ரோ கண்டோரலர் , பிஎல்சி போன்றவற்றை உபயோகப்படுத்த
ஆரம்பித்தேன்.எனக்கு என்னை குறித்த ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது.என்னை ஒரு அணியில் இணைத்தார்கள்.அதில்
நேதாஜி இருந்தான். தினமும் கோடம்பாக்கம் சென்று திரும்புவது கடினமாக இருந்தது.கிழக்கு
தாம்பரத்தில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினேன்.
சாலிகிராமத்தில் அருணாச்சலம் சாலையில் கிளினிக் வைத்து
நடத்தி வந்தார் முரளிகிருஷ்ணன்.ஒரு நாள் நன்றி தெரிவிக்க மாலை அவரின் மருத்துவகம் சென்றிருந்தேன்.நிறைய
கூட்டம்.குழந்தைகள்.அன்னையர்கள்.இஸ்லாமியப் பெண்கள் அதிகம் இருந்தனர்.பலரும் வறியவர்களாக
தெரிந்தார்கள்.குறைவான எண்ணிக்கையிலேயே ஆண்களை பார்க்க முடிந்தது.கிளினிக்கின் வெளியே
பச்சை நிறக் கூரை வேய்ந்து பிளாஸ்டிக் நாற்காலிகள் போட்டிருந்தார்கள்.கூட்டம் ஓயட்டும்
என்று வெளியில் காத்திருந்தேன்.இரவு பத்து மணி ஆகிவிட்டது.நான் அதற்குள் அருகிலிருந்த
அக்ஷ்யா என்ற ஹோட்டலில் இரண்டு முறை டீ குடித்து பின்னர் இட்லியும் சாப்பிட்டு விட்டேன்.
நோயாளிகள் சென்றப் பின்னர் நான் உள்ளே சென்றேன்.எப்போது
வந்தீர்கள் என்று மலர்ச்சியுடன் கேட்டார்.சொன்னேன்.அவர் தலையசைத்துவிட்டு அமரச் சொன்னார்.வேலை
குறித்து விசாரித்தார்.பணியில் சில மாதங்களில் அனைத்தையும் கற்றுக் கொள்ளலாம்.கூர்மையாக
கவனியுங்கள்.அவமானப் படுவதை குறித்து கவலை கொள்ளாதீர்கள் என்றார்.எனக்கு வேலை மகிழ்ச்சியை
அளித்திருக்கிறது என்றேன்.அதைத் தான் மார்க்ஸூம் சொல்கிறார்.படைப்பூக்கமான வேலை மகிழ்ச்சியை
அளிக்கும்.இயந்திரத்தனமான செயல்களும் மிகவும் பகுக்கப்பட்ட பணிகளும் தான் சோர்வைத்
தரும் என்றார்.நாங்கள் மருத்துவகத்திலிருந்து வெளியே வந்தோம்.சிறிது நேரத்தில் அலுவலர்
கிளினிக்கை பூட்டிவிட்டு தன் ஸ்கூட்டரில் சென்றுவிட்டார்.நான் கிளம்புகிறேன் என்று
விடைபெற்றேன்.நீங்கள் என்னிடம் நன்றியுணர்வு கொள்ளத் தேவையில்லை.இது சமூக மூலதனம் மூலம்
உங்களுக்கு கிடைத்த சாத்தியம்.அதில் நான் ஒரு நிமித்தம்.நான் இல்லை என்றால் வேறு யாராவது
உங்களுக்கு இதைச் செய்திருப்பார்கள்.ஆனால் இப்போது நீங்கள் பார்த்த குழந்தைகளுக்கு
இத்தகைய வாய்ப்புகள் கிடைக்காது.அது தான் சமூக யதார்த்தம் என்றார்.எனக்கு அவர் சொன்னது
பெரிதாக விளங்கவில்லை.வெறுமன தலையாட்டி வைத்தேன்.
நான் பெத்தம்மாவின் கோடம்பாக்கம் வீட்டுக்கு செல்லும்
நாட்களில் சில முறை முரளிகிருஷ்ணனையும் சென்று சந்தித்து வந்தேன்.அவரிடம் பேச பெரிதாக
ஒன்றும் இருக்காது.வேலை குறித்து எதாவது சொல்வேன்.அவரும் கேட்டுக் கொள்வார்.உண்மையில்
எனக்கு அவரைப் பிடித்திருந்தது என்பது தான் முக்கிய காரணம்.மிக மெதுவாக மீன் அலசுவது
போல ஒவ்வொரு சொல்லாக எடுத்து பேசுவார்.இரவு ஒன்பது ஒன்பதரை போல செல்வேன்.அப்போதும்
சிலர் காத்திருப்பார்கள்.அவர் மிகக் குறைந்த கட்டணத்தை தான் பெறுகிறார் என்பதை கவனித்தேன்.சிலர்
வெறும் பத்து ரூபாய் இருபது ரூபாய் கொடுத்துவிட்டு போனார்கள்.இதை வைத்துக்கொண்டு இவர்
எப்படி இந்தப் பெருநகரத்தில் சமாளிக்கிறார் என்று நினைத்துக்கொள்வேன்.ஒரு முறை சென்ற
போது கிளினிக் மூடப்பட்டிருந்தது.அருகிலிருந்த ஆப்டிக்கல்ஸில் விசாரித்த போது அவர்
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்று சொன்னார்கள்.எதற்கு என்று கேட்ட
போது ஈழத்தில் நிகழும் இனப்படுகொலைகளுக்கு எதிராக அனுமதியின்றி பேரணி நடத்தியதற்காக
என்றார்கள்.
அப்போது தான் எனக்கு முரளிகிருஷ்ணனின் மற்றொரு முகம்
நினைவுக்கு வந்தது.அவர் இதைக் குறித்தெல்லாம் என்னிடம் பேச மாட்டார்.பெரும்பாலும் அவரைச்
சந்தித்து சில வார்த்தைகள் பேசிவிட்டு கிளம்பிவிடுவேன்.கிளினிக் அருகிலிருந்த கடையில்
டீ குடித்துவிட்டு அவர் தசரதபுரத்திலிருந்த அவர் வீட்டுக்கு செல்வார் , நான் கோடம்பாக்கம்
திரும்பிவிடுவேன்.ஒரு முறை அவர் இல்லத்திற்கு அழைத்து சென்றார்.அவர்கள் வீட்டில் தெலுங்கில்
பேசினார்கள்.எனக்குத் தெலுங்கு புரியும் என்றாலும் நான் பேசுவதில்லை.அவருக்கு ஒரு மகன்.அப்போது
அவனுக்கு மூன்று வயது இருந்திருக்கும்.அவர் மனைவி சாலிகிராமத்தில் இருந்த கிளை நூலகத்தில்
நூலகராக பணி புரிந்தார்.அவர் வீட்டின் வெளியே ஒரு பெரிய பால்கனி இருந்தது.அங்கே ஒரு
நாற்காலியும் மேஜையும் போட்டிருந்தார்.அதன் மீது ஒரு ஸ்டடி போர்ட்.வீட்டில் நிறைய கேஸ்
கட்டுகள் இருந்தன.சட்ட நூல்கள் , தத்துவ நூல்கள்.இவர் என்ன வக்கீல் மாதிரி நிறைய கேஸ்
கட்டுகள் வைத்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டேன்.
முரளிகிருஷ்ணன் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில்
பிறந்தவர்.அவருக்கு ஒரு சகோதரன்.பெயர் வேங்கடகிருஷ்ணன்.அவர் சென்னை ஐஐடியில் படித்துவிட்டு
அமெரிக்காவில் பணிபுரிந்தார்.பின்னர் அந்த நிறுவனத்தின் கிளையை சென்னையில் தொடங்கினார்.அதன்
தலைமைப் பொறுப்பை ஏற்றார்.அங்கு தான் நான் வேலைக்குச் சேர்ந்தேன்.முரளிகிருஷ்ணன் திருப்பதியில்
மருத்துவம் படித்துவிட்டு முதுநிலை குழந்தை மருத்துவம் படிக்க சென்னை வந்தார்.பின்னர்
இங்கேயே தங்கிவிட்டார்.அவர் கல்லூரியில் படிக்கும் போது இடதுசாரி மாணவர் இயக்கத்தில்
இருந்திருக்கிறார்.இங்கே வந்தப் பின்னர் தன்னை மனித உரிமைகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார்.
காலை எட்டு மணிக்கு அலுவலகம் சென்றால் இரவு ஆறு மணி
போல திரும்புவேன்.விடுதிக்கு திரும்பிய பின்னர் செய்ய ஒன்றும் இருக்காது.ஒரு முறை ஜிஎஸ்டி
சாலையிலிருந்த ஜிகே உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டு சானடோரியம் ரயில்வே கிராஸிங்கை
தாண்டி நடந்து வந்தேன்.அங்கே ஒரு நாளிதழ் கடையில் சே குவேராவின் அட்டைப்படத்துடன் புகைப்படம்,
பதிப்புரிமை , உலகமயமாதல் என்று தலைப்பிடப்பட்ட சஞ்சிகையை பார்த்தேன்.எனக்கு சே குவேரா
எப்படியோ அறிமுகமாகியிருந்தார்.மோட்டார் சைக்கிள் டயரீஸ் என்ற திரைப்படத்தை பார்த்திருந்தேன்.அந்த
இதழின் பெயர் உயிர்மை என்றிருந்தது.எடுத்து புரட்டினேன்.எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா,
ஜெயமோகன் , ரவிஸ்ரீநிவாஸ் என்று யார் யாரோ ஏதேதோ எழுதியிருந்தார்கள்.வாங்கினேன்.பெரிதாக
ஒன்றும் புரியவில்லை என்றாலும் முழுதும் படித்தேன்.எஸ்.ராமகிருஷ்ணனின் பெயர் முன்னரே
ஆனந்த விகடனில் துணையெழுத்து என்ற பத்தித் தொடரில் அறிமுகமாகியிருந்தது.தொடர்ந்து இதழ்கள்
வாங்கினேன்.உயிர்மை போன்ற வேறு பத்திரிக்கைகளையும் வாசித்தேன்.பின்னர் நூல்கள் வாங்கலாம்
என்ற எண்ணம் வந்தது.நெடுங்குருதி என்ற நாவல் படித்தேன்.வேறு பல எழுத்தாளர்களின் நூல்களை
வாங்கிப் படித்தேன்.அங்கே கார்முகில் என்ற லெண்டிங் லைப்ரரி இருந்தது.அதில் இணைந்து
வாசித்தேன்.சென்னை புத்தக கண்காட்சிக்கு செல்லத் தொடங்கினேன்.இடதுசாரி நூல்கள் அறிமுகமாகின.மார்க்ஸியம்
இந்தச் சமூகத்தை மிக கச்சிதமாக விளக்க பயன்படும் ஒரு தத்துவமாக எனக்குத் தோன்றியது.எவரையும்
ஈர்க்கக்கூடிய சிந்தனை.முரளிகிருஷ்ணன், பரதன் சொன்ன சில விஷயங்கள் புரிய ஆரம்பித்தன.
ஓரிரு வருடங்களில் நான் கோடம்பாக்கம் செல்வது குறைந்தது.என்
பெரியம்மா வீட்டினரும் வீட்டை இடித்து அடுக்குமாடி குடியிருப்பு கட்ட முடிவு எடுத்தனர்.அவர்கள்
நெல்சன் மாணிக்கம் சாலையிலிருந்த வீட்டுக்கு வாடகைக்கு குடிபுகுந்தனர்.நான் முரளிகிருஷ்ணனை
சந்திப்பதும் அருகிப் போனது.வேலையில் பதவி உயர்வு பெற்றேன்.நிறுவனங்கள் மாறினேன்.ஊதியம்
உயர்ந்தது.திருமணம் நிச்சயமானது.அப்போது திருமணப் பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு முரளிகிருஷ்ணனை
சந்திக்க போயிருந்தேன்.சாலிகிராமம் அருணாச்சல சாலை முழுவதுமாக மாறியிருந்தது.அக்ஷ்யா
என்ற ஹோட்டலைக் கானோம்.பார்வதி பவன் என்ற பெரிய உணவகம் வந்திருந்தது..அடுக்குமாடி குடியிருப்புகள்
முளைத்திருந்தன.சாலையில் அதிக வாகனங்கள்.ஆனால் அவரின் கிளினிக்கில் எந்த மாற்றமும்
இல்லை.அதே கூட்டம்.குழந்தைகள்.ஏழைப் பெண்கள்.நான் எப்போதும் போல காத்திருந்தேன்.கூட்டம்
கலைந்த பின்னர் அவரைச் சென்று சந்தித்தேன்.அவரைச் பார்த்து ஏழேட்டு ஆண்டுகள் கடந்திருந்தன.அவர்
அப்படியே இருந்தார்.சற்றே சோர்வும் புத்துணர்வும் இணைந்த முகம்.
நான் பத்திரிக்கையை கொடுத்தேன்.என்னால் திருமணத்திற்கு
நெய்வேலி வர இயலுமா என்று தெரியவில்லை , என் வாழ்த்துகள் என்றார்.நீங்கள் கட்டாயம்
வர வேண்டும் என்றெல்லாம் நான் சொல்லவில்லை.அவரின் நாள் அலுவல்கள் நிரம்பியது என்பதை
நான் அறிந்திருந்தேன்.சில நாட்கள் வழக்கு விசாரணை, உண்மை கண்டறிதல் என்று சென்று விடுவார்.வேறு
மாவட்டங்களுக்கு , மாநிலங்களுக்கு பயணிப்பார்.அதனால் அவரைத் தொந்தரவு செய்ய எனக்கு
விருப்பமில்லை.எதிரில் ஒரு கேக் ஷாப் இருந்தது.அழைத்து போய் கேக் வாங்கி கொடுத்தார்.திருமணம்
ஒரு சமூக ஒப்பந்தம்.இப்படி நமக்கு பல சமூக ஒப்பந்தங்கள் இருக்கின்றன.நமது அரசியலமைப்பு
கூட சமூக ஒப்பந்தம் தான்.நாம் தான் எதையும் பின்பற்றுவதில்லை என்றார்.இப்போது அவர்
பேசுவது சற்று புரிந்தது.நான் ரூசோவை பற்றிய அறிமுகத்தை பெற்றிருந்தேன்.அவர் நான் நூல்கள்
வாசிக்கிறேன் என்பதை அறிந்து உவகை கொண்டார்.
உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சைக்
கொடியைப் போல இருப்பாள்.உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமர கன்றுகளைப்
போல இருப்பார்கள்.சாலையை பார்த்தபடி முறுவலுடன் கைகளை விரித்து பாடுவது போல இதைச் சொன்னார்.என்னிடம்
திரும்பி எத்தனை அழகான வரிகள் , உங்களுக்கு அப்படியான வாழ்க்கை அமையட்டும் என்றார்.எனக்கு
அந்தச் சொற்கள் மதுரமாக ஒலித்தன.இது என்ன என்று கேட்டேன்.ஓர் ஆற்காடு லுத்தரன் தேவயாலத்தில்
நடந்த திருமணத்திற்கு சென்றிருந்த போது அங்கே இவை இசைக்கப்பட்டன.இவற்றை பாடும் போது
எங்களை எழுந்து நிற்கச் சொன்னார்கள்.மனமக்கள் முழுங்கால் படியிட்டு இருந்தார்கள்.வரிகள்
மனதில் பதிந்து போயிற்று என்றார்.இவருக்குள் இதெல்லாம் இருக்கிறதா என்று எண்ணிக்கொண்டேன்.பரதனைப்
பார்த்து நாட்கள் ஆகின்றன என்றார்.நானும் பரதனைப் பார்த்து பல வருடங்கள் கடந்துவிட்டன.இப்போது
திருமணத்தின் போது அவரை சந்திக்க இயலும்.நான் வருகிறேன் என்றேன்.மஞ்சிதி என்று சொல்லி
விடை கொடுத்தார்.எப்போதாவது தெலுங்கு வார்த்தைகளை உதிப்பார்.
திருமணம், முதல் வருடத்தில் ஒரு ஆண் குழந்தை , அடுத்த
இரண்டு வருடங்களில் ஒரு பெண் குழந்தை , மேலும் புதிய நிறுவனங்கள் என்று வாழ்க்கை ஸ்திரப்பட்டது.பல
வாடகை வீடுகள் மாறினேன்.என் மனைவி போரூர் டிஎல்எப்பிலிருந்த ஒரு ஐடி நிறுவனத்தில் வேலையில்
இருந்தார்.நான் நுங்கம்பாக்கத்தில் ஒரு மோட்டார் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பணி
புரிந்து வந்தேன்.வடபழனி குமரன் காலனியில் ஐந்து வருட பழைய வீட்டை வாங்கினேன்.ஒரு கோடி
ஆனது.ஆறு வீடுகள் கொண்ட அடுக்ககம்.
நேதாஜி கோவிட்டின் போது இறந்து போனான்.என் வாழ்வில்
நான் ஒரு நிலையை அடைய காரணமானாக இருந்தவர்களில் முதன்மையானவன்.நட்பு என்பது அளிப்பது
என்பதை அவன் மூலம் தான் அறிந்தேன்.அவனுக்கு இரண்டு ஆண் குழந்தைகள்.அவன் மனைவி தனித்து
நின்றாள்.அப்போது அவள் பணியில் இல்லை.எப்படி வாழ்வை எதிர் கொள்ளப் போகிறாள் என்று கலங்கினேன்.ஆனால்
அவள் அடுத்த சில மாதங்களிலேயே வேலைக்கு செல்லத் தொடங்கினாள்.வண்டி ஓட்ட கற்றுக் கொண்டாள்.யாரையும்
சார்ந்து இருக்காமல் தனித்து வீடு எடுத்து தங்கினாள்.அவளது தாய் தந்தையரின் உதவியை
எதிர்பார்க்கவில்லை.எனக்கு அவளை பார்க்க வியப்பாக இருந்தது.
என் தந்தையும் அப்போது மரணமடைந்தார்.அவருக்கு அது
விடுதலையாக அமைந்தது.நெய்வேலியுடனான என் உறவும் அவருடன் முடிந்தது என்றும் தோன்றியது.நான்
என் தந்தையின் மரணத்தின் போது அதிகம் அழவில்லை.பின்னரும் இல்லை.ஆனால் நேதாஜியின் இன்மை
, தந்தையின் இன்மை என்னை வெகுவாக பாதித்தது.
நான் வடபழனியில் தங்கத் தொடங்கியப் பின்னர் இரண்டு
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முரளிகிருஷ்ணனை சென்று சந்திப்பேன்.அருணாச்சல சாலை மேலும்
மாறிவிட்டது.எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் தியேட்டர் இடிக்கப்பட்டு சின்னச் சின்ன உணவுக் கடைகள்
, காஸ் நிலையம் என்று அந்த இடமே புதிதாக இருந்தது.மிகவும் விரிந்திருந்த அந்தச் சாலை
குறுகிப் போயிருந்தது.ஷோபா திருமண மண்டபத்தில் ரிலையன்ஸ் டிரண்ட்ஸ் கடை வந்திருந்தது.மேலும்
நிறைய உணவகங்கள்,அங்காடிகள்.முன்னர் மாலையில் அந்தச் சாலையில் வண்டியில் சொல்லும் போது
தென்றல் வீசும்.இப்போது வெம்மையை உணர்ந்தேன்.உயர் கட்டிடகங்கள் காற்றை மறித்துவிட்டன.பாலு
மகேந்திரா இறந்தப் பின்னர் அவர் நடத்திய சினிமாப்பட்டறை மழலையர் பள்ளியாக உருமாறியிருந்தது.பிரசாத்
நிறுவனத்தின் வளாகத்திலிருந்த இளையராஜாவின் ரிக்கார்டிங் ஸ்டுடியோ கோடம்பாக்கத்திற்கு
இடம் பெயர்ந்திருந்தது.அங்கு முதலில் எம்.எம். என்ற திரையரங்கம் இருந்தது.அருணாச்சல
சாலையின் முனையில் போலீஸ் பூத் இருந்த இடத்தில் அடிக்கடி அரசியல் கூட்டங்கள் நடந்தன.ஆற்காடு
ரோட்டில் காவேரி மருத்துவமனையை தொடங்கியிருந்தார்கள்.மெட்ரோ ரயில் பணிகளால் ஆற்காடுச்
சாலை போரால் பாதிக்கப்பட்ட இடம் போல காட்சியளித்தது.
ஒரு முறை அவரின் கிளினிக் போன போது அனைவரும் சென்றிருந்தனர்.உதவியாளரும்
தான் புறப்படுவதாக சொல்லி கிளம்பிவிட்டார்.அவரின் அறை தானாக மூடிக்கொள்ளக்கூடிய வகையில்
ஸ்பிரிங் டோர் கொண்டிருந்தது.அவரைச் சென்று சந்திக்கலாம் என்று உள்ளே போனேன்.அவரைக்
காணவில்லை.அப்போது வரை அங்கு தான் இருந்தார்.கழிப்பறைக்கு சென்றிருப்பார் என்று பார்த்தால்
அது வெளிப்பக்கமாக மூடியிருந்தது. இதென்ன மாயம் என்று வெளியில் வந்து பார்த்தேன்.அங்கும்
இல்லை.பின்னர் மறுபடி உள்ளே சென்றேன்.அவர் பக்கத்திலிருந்த ஆப்டிகல்ஸின் சுவரிலிருந்து
வெளிவந்தார்.எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.என்னைப் பார்த்து அமரச் சொன்னார்.இதென்ன
சுவரிலிருந்து வருகிறீர்கள் என்று வியப்பாக கேட்டேன்.நான் ஒன்றும் மாயாவி இல்லை என்று
சிரித்தவர் எழுந்து அங்கிருந்த தீரைச்சீலையை அகற்றினார்.சுவற்றோடு பதிந்த நிலையில்
ஒரு கதவு இருந்தது.அது கதவு என்பதே கூர்ந்து பார்த்தால் தான் தெரிந்தது.லேசாகத் தள்ளினால்
திறந்தது.அந்தப் பக்கம் சென்று தள்ளிவிட்ட போது சரியாக மூடிக் கொண்டது.அந்தப் பக்கமும்
திரைச்சீலை இருந்தது.அந்தக் கதவு ஆப்டிகல்ஸின் உள் அறை ஒன்றுக்கு கொண்டு சென்றது.அங்கிருந்து
பங்கஜம் சாலைக்கு செல்ல மற்றொரு வாசல் இருந்தது.அந்த அறையில் ஒருவர் அமர்ந்து உணவு
உட்கொண்டிருந்தார்.
ஏதேதோ காரணங்களுக்காக போலீஸ்காரர்கள் வருவார்கள்.திடீரென்று
கைது செய்வார்கள்.அல்லது வேறு ஆபத்துகள் வரலாம்.அப்போதைய சூழ்நிலைகளில் அதிலிருந்து
தப்பிக்க செய்து கொண்ட ஏற்பாடு.தேவைப்பட்டால் மறு வாசல் வழியாக அப்படியே வெளியேறி விடலாம்.ஒரு
பதுங்கு குழி போல என்று சொல்லி சிரித்தார்.உள்ளே சாப்பிட்டு கொண்டிருந்தவரைப் பற்றி
கேட்டேன்.அவர் தெலுங்கானாவைச் சேர்ந்தவர்.அவருக்கு தண்ணீர் கொடுக்கத்தான் போயிருந்தேன்.வழக்கு
ஒன்றில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.முன் ஜாமீன் வழக்கு நாளை நடைபெறுகிறது. கிடைத்தவுடன்
போய் விடுவார் என்றார்.அப்போது தான் அந்த ஆப்டிகல்ஸில் இருப்பவர்கள் அவரின் இயக்கத்தை
சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்து கொண்டேன்.மனித உரிமைகள் என்பது இத்தனை சாகசங்கள் நிரம்பியதா
என்று ஆச்சரியம் கொண்டேன்.அவருடன் அத்தனை காலம் பழகியிருந்தாலும் அவருக்கு இத்தனை நெருக்கடிகள்
ஆபத்துகள் இருக்கின்றன என்பதை அறியாதிருந்தேன்.
தொடர் வாசிப்பாலும் எப்போதும் எனக்குள் இருந்த சலிப்பின்
காரணமாகவும் எதாவது எழுதலாம் என்று எண்ணி கட்டுரைகள் எழுதத் தொடங்கினேன்.கதைகள் எழுதத்
தொடங்கியப் பின்னர் கட்டுரைகளை விட அவை எளிதாக தெரிந்தன.பிள்ளைகள் சற்று வளர்ந்தார்கள்.அவர்களை
அண்ணா நகரிலிருந்த பள்ளியில் சேர்த்தேன்.வேலை , மனைவி , மக்கள் என்று வாழ்க்கை ஒரு
அட்டவணைக்குள் பொருந்திக்கொண்டது.இலக்கியத் துறையில் நான் நண்பர்களை உருவாக்கிக் கொள்ளவில்லை.யாருடனும்
தொடர் உரையாடலில் இல்லை.மூத்த எழுத்தாளர்கள் யாரையும் சென்று சந்திக்கவும் இல்லை.கூட்டங்களுக்கு
அதிகம் போனதில்லை.அப்படி செய்யக்கூடாது என்று தீர்மானித்து செய்யவில்லை.ஆனால் நாம்
அறிவுத்தளத்தில் செயல்படுகிறோம் , அதன் பொருட்டு கூடுகிறோம், உரையாடுகிறோம் என்ற எண்ணம்
எனக்கு அசெளகரியத்தை அளித்தது.அது முதன்மையான காரணமாக இருந்தது.
ஒரு முறை பரதன் சென்னை வந்திருந்தார்.கிளினிக்கில்
இருக்கிறேன்.அருகிலிருந்தால் வரவும் என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.அவரை சந்தித்து
பல வருடங்கள் ஆகியிருந்ததால் சென்றேன்.அப்போது எனது முதல் சிறுகதைத் தொகுப்பு பிரசுரமாகியிருந்தது.எடுத்துக்
கொண்டு போனேன்.சில மாதங்களுக்கு முன்னர் முரளிகிருஷ்ணனுக்கு ஒரு பிரதி கொடுத்திருந்தேன்.அவர்
படித்தாரா என்று நான் கேட்கவுமில்லை.அவர் சொல்லவுமில்லை.
பரதன் பத்து வருடங்களுக்கு முன்னர் திருமணத்தின் போது
பார்த்தது போலவே இருந்தார்.தலை மயிர் சற்று நரைத்திருந்தது.வாங்க நிவாஸ் , எப்படி இருக்கீங்க
என்று கேட்டார்.அவரின் கைகளைப் பற்றிக் கொண்டேன்.நான் புத்தகம் எழுதியிருப்பதை கூறிய
போது மிகவும் மகிழ்ந்தார்.சற்று வியப்பும் அடைந்தார்.உங்க அப்பா பாஷ்யம் இருந்தா ரொம்ப
சஷ்தோஷப்பட்டிருப்பார் என்றார்.நல்ல விஷயம் நல்ல விஷயம் என்று பல முறை கூறினார்.மெடிக்கல்ஸ்
குறித்து கேட்டேன்.அதைத் தன் கடையில் பணிபுரிந்த ஒருவருக்கு மாற்றி கொடுத்து விட்டதாகவும்
தற்சமயம் முழு நேர கட்சிப் பணியாளர் என்றும் சொன்னார்.நெய்வேலி நிறைய மாறிப் போயிவிட்டது
, கடலூர் விருத்தாசலம் சாலையை விரிவுப் படுத்தியதில் பெரியாக்குறிச்சி, கங்கைகொண்டான்
பகுதிகள் முழுதும் திரிந்துவிட்டன , மந்தாரக்குப்பம் பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு
கொண்டு சென்று விட்டார்கள் என்றார்.நான் போய் சில வருடங்கள் ஆகிவிட்டதால் எனக்கு அவை
செய்தியாக இருந்தன.
அன்று மருத்துவகத்தில் அதிக கூட்டம் இல்லை.உதவியாளரும்
சென்றுவிட்டார்.மூவரும் அருகிலிருந்த ஹோட்டலுக்கு சென்று உணவு உண்டோம்.சாலையின் முனையில்
மேடை அமைக்கப்பட்டு கலியபெருமாள் என்பவருக்கான இரங்கல் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.பேச்சு
அதைக் குறித்து திரும்பியது.கலியபெருமாள் கட்சிப் பிரமுகர்.ரியல் எஸ்டேட் தொழில் செய்து
வந்தார்.ஓரிரு திரைப்படங்களும் தயாரித்திருந்தார்.அந்தப் பகுதியில் செல்வாக்கான மனிதர்.அவரது
வாகனம் செல்லும் போது ஆட்டோகாரர்கள் எழுந்து நிறப்தை பார்த்திருக்கிறேன்.தீபாவளி பொங்கல்
போன்ற பண்டிகைகளின் போது பலர் அவர் வீட்டின் முன் கூடுவார்கள்.பணமும் பொருட்களும் அள்ளித்
தருவார்.படாடோபான ஆள் என்ற பிம்பம் எனக்கு இருந்தது.வடபழனியிலும் சாலிகிராமத்திலும்
அவருக்கு சில வணிக வளாகங்கள் இருந்தன.அதில் நிறைய கடைகள் இயங்கிவந்தன.விருகம்பாக்கத்தில்
அவர் ஓர் அடுக்ககத்தை கட்டிக் கொண்டிருந்தார்.அதற்காக கொண்டு வந்து இறக்கப்பட்ட கம்பிகள்,
சிமெண்ட் மூட்டைகள் , பிளாக்குகள் கணிசமான அளவு காணாமல் போயின.அந்தத் தெருவில் டீக்கடை
வைத்து நடத்தி வந்த பத்தொன்பது வயது இளைஞன் நந்தனுக்கு அந்தத் திருட்டில் தொடர்பு இருப்பதாக
குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டான்.லாக்கப்பில் அவன் குற்றத்தை ஒப்புக் கொள்ள
வேண்டும் என்று சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டான்.முரளிகிருஷ்ணன் நந்தனை பிணையில் கொண்டு
வந்தார்.அவன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் புகார்
தெரிவித்திருந்தார்.அந்த விசாரணை நிலுவையில் இருந்தது.
இது நிகழ்ந்த மூன்றாவது மாதத்தில் கலியபெருமாள் சில
அடையாளம் தெரியாத நபர்களால் அவர் கட்டிட வேலைகளை மேற்பார்வையிட சென்றிருந்த பொழுதில்
கொல்லப்பட்டார்.நந்தனும் இதில் உடந்தையாக இருக்கலாம் என்று கலியபெருமாளின் ஆட்கள் சந்தேகித்தனர்.அவன்
தலைமறைவாகியிருந்தான்.முரளிகிருஷ்ணன் அவனை சில காலம் திருப்பதியில் தனக்குத் தெரிந்தவர்கள்
வீட்டில் சென்று தங்கியிருக்க சொல்லியிருந்தார்.இந்த நிலையில் தான் இரங்கல் கூட்டம்
நடந்து கொண்டிருந்தது.பரதன் முரளிகிருஷ்ணனை எச்சரித்தார்.நீங்கள் இங்கே இன்றிரவு இருப்பது
அத்தனை நல்லதல்ல.என்னுடன் கட்சி அலுவலகம் வந்துவிடங்கள்.சென்றுவிடலாம் என்றார்.முரளிகிருஷ்ணன்
மறுத்துவிட்டார்.அவர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்.அதெல்லாம் ஒன்றும் ஆகாது என்றார்.பரதன்
பலமுறை வற்புறுத்தியும் அவர் கேட்கவில்லை.பரதன் ஓலா புக் செய்து தி.நகரிலிருந்த பாலன்
இல்லம் சென்றார்.
நீங்கள் எதற்கும் பத்திரமாக இருங்கள் என்று சொல்லி
நானும் புறப்பட போனேன்.உங்கள் புத்தகத்தைப் படித்தேன் என்று கூறினார் முரளிகிருஷ்ணன்.எனக்கு
அவை குறித்து சொல்ல சில எண்ணங்கள் உண்டு.வாங்களேன் , நடந்து கொண்டே பேசலாம் என்றார்.இப்போதா,
அங்கே கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்றேன்.நான் சொன்னதை சட்டை செய்யாமல் வாருங்கள்
என்று கூறி நடக்க ஆரம்பித்தார்.அவர் எந்தப் பதற்றமும் இல்லாமல் இருந்தார்.சிறிது நேரத்திற்கு
பிறகு பேசத் தொடங்கினார்.உங்கள் நூலில் பல கேள்விகள் இருக்கின்றன.விடைகள் இல்லை.விஞ்ஞானம்
, தொழில்மயம், அதனால் உருவாகும் நகரமயம், அங்கே சமூகமற்று போகும் தனிமனிதன் , தனிமனிதனாக
மாறுவதால் ஏற்படும் பிறழ்வுகள் , இந்த அமைப்பை எதிர்க்க இயலாத அவனது கையறு நிலை, இவற்றுக்கு
மத்தியில் நிலப்பிரபுத்துவ காலத்தின் எச்சங்களான சாதிய படிநிலைகள் என்று உங்கள் சிறுகதைகள்
இன்றைய சூழலை நன்கு பிரதிபலிக்கின்றன.ஆனால் கலையின் நோக்கம் அது மட்டும் அல்ல.கலையின்
மையத் தளம் மறுதலிப்பது தான். The Purpose of art is to negate.
உங்கள் கதை ஒன்றில் ஒருவன் மனப்பிறழ்வு அடைகிறான்.மற்றொரு
கதையில் ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான்.சிலர் வேலையை விட்டுவிட்டு அலைந்து திரிகிறார்கள்.அவை
தனிப்பட்ட துயரத்தின் காரணமாக அல்ல.அவை பணி அல்லது சூழல் ஏற்படுத்தும் அறச்சிக்கலால்
அல்லது நெருக்கடியால்.அது மறுதலிப்புதான்.ஆனால் அது மட்டுமே தீர்வு அல்ல.மாற்றுத் தளத்தை
குறித்த கனவும் Negation தான்.நான் கற்பனாவாதம்
குறித்து பேசவில்லை.மறுப்பதின் பல்வேறு சாத்தியங்களை குறித்து பேசுகிறேன்.எதிர்ப்பதும்
,போராடுவதும் ,குரலை உயர்த்துவதும், சண்டை போடுவதும் , கூட்டம் சேர்ப்பதும் , கோஷமிடுவதும்
, மற்றமையோடு நம்மை இணங்கொண்டு கொள்வதும் , மற்றமையோடு இரண்டறக் கலப்பதும் மறுதலிப்பு
தான்.
முதலாளித்துவம் உருவாக்கிய ஒரு வாழ்க்கைப் பார்வை
தான் இருத்தலியம்.பொதுவாக நாம் பேசும் பல இடர்கள் தனிப்பட்ட வாழ்வின் சிக்கல்கள் அல்ல.அவை
அமைப்பின் பிரச்சனைகள்.உதாரணமாக உங்கள் கண் முன்னே ஒருவன் கொல்லப்படுகிறான் என்று வைத்துக்
கொள்ளுங்கள்.நீங்கள் உடனே காவல் நிலையம் சென்று புகார் அளிக்க மாட்டீர்கள்.அரசியல்
அல்லது சேவைத் தளத்தில் இருப்பவர்கள் அதை செய்ய வாய்ப்பு உண்டு.ஆனால் பிறர் அதை செய்வதற்கான
சாத்தியங்கள் அதிகமில்லை.உடனே நாம் அவனை கோழை என்று முத்திரை குத்தலாம்.ஆனால் அதே தனிமனிதன்
இந்த அமைப்பு அவனை பாதுகாக்கும் என்று உணர்ந்தால் தனக்குத் தெரிந்தவற்றை கூறுவான்.
அதற்காக தனிமனிதன் இல்லை என்று நான் சொல்லவில்லை.உங்களுக்கும்
எனக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன.வாழ்க்கை பார்வையில் வித்யாசங்கள் உண்டு.ஒரு பிரச்சனையை
கையாள்வதில் அணுகுமுறைகள் மாறலாம்.தனிமனிதர்கள் அமைப்பாக திரள்வதின் வழி பல இறுகிப்போன
சாஸ்திரங்களை உடைக்கலாம்.இன்று அரசியலமைப்பு பிரிவு பதினேழின் படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு
விட்டது.ஆனால் நம் சமூகத்தில் தீண்டாமை இன்றும் உள்ளது.இந்த இரண்டுக்கும் இடையில் முரண்
இருக்கிறது.இந்த முரண் வழி ஒரு இயக்கம் சாத்தியமாகிறது.இன்று வன்கொடுமை தடுப்புச் சட்டம்
உருவாகியிருக்கிறது.இட ஓதுக்கீடு இருக்கிறது.சாதி மாற்று திருமணங்கள் நிகழ்கின்றன.உரையாட
ஒரு வெளி இருக்கிறது.அதற்கு காரணம் இந்த முரணியக்கம் தான்.தனிமனித விடுதலை அகவழிப்பயணத்தின்
வழி மட்டும் தான் சாத்தியம் என்று நான் எண்ணவில்லை.அதை புறவயமாக திருப்பியும் தீர்வை
கண்டடைய முடியும்.
இன்று துரதரிஷ்டவசமாக வேலை வாழ்க்கை என்று ஒரு வலையத்துக்குள்
இருக்கிறீர்கள்.இதைத் தவிர்ப்பது கடினம் தான் என்பதை ஓப்புக் கொள்கிறேன்.ஆனால் உங்கள்
வாழ்வை மேலும் விரித்துக்கொள்வதற்கான வழிகளை கண்டுபிடியுங்கள்.மனிதர்களை தொடர்ந்து
சந்தியுங்கள்.இணைந்து பணிபுரியுங்கள்.புத்தகங்கள் ஒரு போதும் மனிதர்களுக்கு ஈடில்லை.இலக்கியம்
என்பது அடிப்படையில் மானுட உரிமைகளுக்கான ஒரு பிரதி தான்.பலர் அதை மறுக்கலாம்.ஆனால்
அதில் உண்மை இருக்கிறது.வேறு எதற்காக இலக்கியம் உருவாக்கப்படுகிறது.கண்ணாடியை பார்த்து
ஆடைகளை சரி செய்து கொள்வதற்காகவா? பண்பாட்டை பதிவு செய்வதற்காகவா? பண்பாட்டை ஏன் பதிவு
செய்ய வேண்டும்.பண்பாடு மறைந்து போகட்டுமே.ஓடுக்கப்பட்ட மனிதனின் ஓலம் தான் உலக அளவில்
மானுட உரிமைகளுக்கான அவசியத்தை உருவாக்கியது.இந்தியாவில் நெருக்கடிக் காலத்திற்கு பிறகு
தான் மனித உரிமைகள் பற்றிய சொல்லாடல்கள் அதிகரித்தன.
அந்தக் கூட்டம் நிகழ்ந்துகொண்டிருந்த இடத்தை நோக்கி
நடந்தோம்.பலரும் கலியபெருமாளை வானாளவ புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.அவரைப் போலவே அவருக்கான
இரங்கலும் பகட்டாக இருந்தது.நான் திரும்பி விடலாம் என்று சொன்ன போது அவர் அந்த முனையிலிருந்த
காமராஜர் சாலை வழியாக குமரன் காலனி மெயின் ரோடு சென்று திரும்பலாம் என்றார்.நாங்கள்
கூட்டத்தை நெருங்கிய போது அங்கே பலர் எங்களை கூர்மையாக நோக்குவதாக எனக்குத் தோன்றியது.
அதில் ஒருவனை நான் முன்னர் எங்கோ பார்த்திருக்கிறேன் என்றாலும் எங்கே என்று சரியாக
நினைவு கூர முடியவில்லை.அவர்களை கடந்த போது என் முதுகில் அவர்களின் கண் பார்வை பதிந்திருப்பதை
உணர முடிந்தது.சில காவலாளிகள் முரளிகிருஷ்ணனை பார்த்து வணக்கம் வைத்தார்கள்.அவர்கள்
கூட தங்களுக்குள் ஏதோ குசுகுசு என்று பேசிக் கொண்டார்கள்.எனக்கு ஏதோ நிகழப் போகிறதோ
என்று எண்ணம் வலுப்பெற்றது.அடிக்கடி நெற்றியில் படிந்த வியர்வையை துடைத்துக் கொண்டேன்.
நான் என் பார்வையை உங்கள் மீது திணிக்கிறேனா என்று
தெரியவில்லை.நான் இதுவரை உங்களிடம் இப்படி பேசியதில்லை.ஆனால் இப்போது உரையாடலாம், ஏனேனில்
நீங்கள் அதை நோக்கி நகர்ந்து வந்திருக்கிறீர்கள் என்று சொல்லி நிறுத்திக்கொண்டார்.நான்
மெளனமாக அவர் சொல்வதை கேட்டுக் கொண்டு வந்தேன்.அவரை எனக்கு இருபது வருடங்களாக தெரியும்.ஆனால்
அதுவரை பேசியதை தொகுத்தாலும் அன்று சொன்னது அதிகம்.
மானுட உரிமைகள் என்பதை எவ்வாறு வரையறை செய்வீர்கள்
என்று கேட்டேன். இந்திய அரசியலமைப்பின் பிரிவு இருபத்தி ஓன்று மனித உரிமைகள் பற்றிய
எளிய ஆனால் முழுமையான வாசகம் என்றார்.No person shall be deprived
of his life or personal liberty except according to procedure established by Law.ஒருவரின் உயிரும் தனிப்பட்ட சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும்.நமது உயிரையும் சுதந்திரத்தையும் பறிக்கும் உரிமை யாருக்குமில்லை.இதில்
சட்டத்திபடி ஒருவரின் உயிரை எடுக்கலாம் என்பதையும் நாங்கள் எதிர்க்கிறோம்.மேலும் இதை
நமக்கு அரசியலமைப்பு வழங்கவில்லை.மாறாக உறுதி மட்டுமே செய்கிறது.இதை விரித்துக் கொண்டே
செல்லலாம்.ஆனால் அடிப்படை இதுதான்.
நாங்கள் அருணாச்சல சாலையிலிருந்து ஜெனரல் கரியப்பா
ஸ்கூலை கடந்து காமராஜர் சாலை வழியாக குமரன் காலனி மெயின் ரோடு சென்று பின்னர் எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம்
சாலை வழியாக மறுபடியும் அருணாச்சல சாலை வந்து கிளினிக்கை அடைந்தோம்.நிறைய நேரம் நடந்திருந்தோம்.இரங்கல்
கூட்டம் முடிந்திருந்தது.எல்லோரும் கலைந்து சென்று கொண்டிருந்தார்கள்.நான் புறப்படுகிறேன்
என்றேன்.அவர் மஞ்சிதி என்று சொல்லி உள்ளே போனார்.அவர் தன் அறையினுள் சென்றபின் கதவு
தானாக மூடிக்கொண்டது.அலுவலர் முன்பே கிளம்பியிருந்தார்.ஆப்டிகல்ஸின் ஊழியர் என் அருகில்
நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்.இரவு மணி பத்தாகியிருந்தது.சாலையில் கூட்டம்
குறைந்திருந்தது.சில கடைகளை அடைத்துவிட்டார்கள்.நான் வண்டியில் ஏறி அமர்ந்தேன்.சட்டென்று
மோட்டார் சைக்கிளில் ஆறேழு பேர் வந்தனர்.என்னைக் கடந்து சென்றார்கள்.கிளினிக்குள் புகுந்தார்கள்.அவர்கள்
அனைவரும் முகத்தில் கர்சீப் அல்லது மூகமுடி அணிந்திருந்தார்கள்.கைகளில் அருவாள் இருந்தது.இருபதிலிருந்து
முப்பது வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள். என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்வதற்குள்
அனைவரும் வெளியே வந்தார்கள்.ஒருவன் எங்கடா அந்த டாக்டரு என்று கேட்டான்.என்னிடம் பதில்
எதுவும் எதிர் நோக்காமல் சிதறி பக்கத்திலிருந்த பங்கஜம் சாலைக்குள் சென்றார்கள்.அங்கிருந்த
ஆட்டோகாரர்களும் பிறரும் என்ன நிகழ்கிறது என்று கூடினார்கள்.
சென்றவர்களில் ஒருவன் மட்டும் திரும்ப வந்து அவரது
கதவை உதைத்து மறுபடியும் உள்ளே புகுந்தான்.நான் ஐயோ என்று கத்திக்கொண்டு கிளினிக்குள்
ஓடினேன்.அவர் அறையில் இல்லை.அவன் சட்டென்று முரளிகிருஷ்ணனின் அறையிலிருந்த திரைச்சீலையை
விலக்கி அங்கிருந்த கதவைத் தள்ளி ஆப்டிகல்ஸூக்குள் சென்றான். அவர் உள் அறையில் பதுங்கியிருந்தார்.அவனைப்
பார்த்ததும் மற்றொரு வாசல் வழி தப்ப முயன்றார்.அவன் அவரை அருவாள் கொண்டு முதுகில் வெட்டினான்.அவர்
வாசல் அருகே கீழே சரிந்தார்.அவன் இன்னும் இரண்டு மூன்று முறை அவர் மீது அருவாளை வீசினான்.அவன்
முகத்தில் அணிந்திருந்த கர்சீப் கீழே விழுந்தது.அதை எடுத்துக் கட்டிக்கொண்டு அங்கிருந்து
வெளியே ஓடினான்.நான் அவனை தெளிவாக பார்த்தேன்.அங்கே ஒருவன் மோட்டார் சைக்கிளை கொண்டு
வந்தான்.அதில் ஏறி அந்த இடம் விட்டு விரைந்தார்கள்.கூட்டம் முழுதும் முன்பக்கம் இருந்ததால்
அவர்கள் தப்பிக்க எளிதாக இருந்தது.அவசர ஊர்தி அழைக்கப்பட்டது.அவர் அதற்குள் மரணமடைந்திருந்தார்.நான்
உறைந்து நின்றேன்.போலீஸார் வந்தார்கள்.மீடியாக்கள் குழுமின.
எஸ்.ஐ.வரதராஜன் என்னை விசாரித்தார்.நான் உள்ளே செல்வதற்குள்
கொலையாளி ஓடிவிட்டான்.யார் வெட்டியது என்று தெரியாது.கும்பலில் அனைவரும் மூகமுடி அணிந்திருந்ததால்
எவரின் முகத்தையும் பார்க்கவில்லை என்றேன்.அங்கிருந்த வேறு யாரும் கொலை செய்தவனை பார்த்திருக்கவில்லை.ஆனால்
அவன் யார் என்பது எனக்கு நன்கு புலனானது.நாங்கள் அந்தக் கூட்டத்தில் நடந்து சென்ற போதே
அவனைப் பார்த்தேன்.அவனது குழந்தையை சிகிச்சைக்காக முரளிகிருஷ்ணனிடம் ஓரிரு முறை அழைத்து
வந்திருக்கிறான்.அப்போது தன் மனைவியை வைதபடியே இருந்தான்.அவனுக்கு எப்படியோ அந்தக்
கதவு குறித்து தெரிந்திருந்திருக்கிறது.
நான் அறிந்தவற்றை நான் யாரிடமும் சொல்லவில்லை.பரதனிடமும்
என் மனைவியிடமும் சொல்ல நினைத்து பின்னர் முடிவை மாற்றிக்கொண்டேன்.பிரேதப் பரிசோதனை
முடிந்து உடல் அளிக்கப்பட்டது.குளிர்பதனப் பெட்டியிலிருந்த அவர் முகத்தை பார்த்த போது
நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் அழுதேன்.பரதன் என்னை அணைத்துக் கொண்டார்.
அரசியல் வாதிகள் , போலீஸ்காரர்கள் , வழக்கறிஞர்கள் ,பொது மக்கள் என்று நிறைய கூட்டம்.பெண்கள்
அதிக அளவில் இருந்தார்கள்.சிலர் அவரை மருத்துவராக மட்டுமே அறிந்திருந்தார்கள்.அவரின்
இயக்கத்தை சேர்ந்தவர்கள் பாடல்கள் பாடினார்கள்.அவரது மகன் சினிமாத்துறையில் ஒளிப்பதிவாளராக
இருந்தார்.அவதி உடல் வழி இறங்கி வலியாக மாறுவதை அன்று தான் பார்த்தேன்.அவர் உருக்குலைந்து
காணப்பட்டார்.அவரது மனைவி சலனமற்று அவரின் தலைமாட்டின் அருகில் அமர்ந்து அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்.அவரது
சகோதரர் வேங்கடகிருஷ்ணனை பல காலம் கழித்து பார்த்தேன்.எந்தச் சடங்கும் செய்யப்படவில்லை.மின்
மயானத்தில் அவரை எரியூட்டி அனைவரும் கலைந்து போனோம்.
அன்று நிகழ்ந்தவை தன்னிச்சையாக அரங்கேறின என்றும்
அதற்கு பின்னால் சதியோ திட்டமிடலோ இல்லை என்றும் போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
செய்தார்கள்.கலியபெருமாள் மீதிருந்த அன்பாலும் அவரிடமிருந்து பெற்ற உதவிகளாலும் சிலர்
உணர்ச்சிவசப்பட்டு முரளிகிருஷ்ணன் மீது வன்முறையை ஏவினார்கள் என்று சொல்லியிருந்தார்கள்.கொலையின்
பொருட்டு சிலர் கைது செய்யப்பட்டு பிணையில் வந்தார்கள்.விசாரணை நீதிமன்றத்தில் சாட்சியாக
அழைத்து கேட்ட போதும் நான் குற்றம் இழைத்தவனை பார்க்கவில்லை என்றே சொன்னேன்.சிசிடிவியில்
சிலரின் முகம் பதிந்திருந்தாலும் கொலை செய்தது யார் என்று அரசுத் தரப்பால் நிறுவ இயலவில்லை.ப்ராஸிக்யூஷன்
தரப்பும் அந்த வழக்கு நீர்த்துப் போவதை அனுமதித்தது ,விரும்பியது.
அவரைக் குறித்து புத்தகங்கள் வெளியிடப்பட்டன.ஆவணப்படங்கள்
தயாரிக்கப்பட்டன.அவர் எழுதியவற்றை தொகுத்தார்கள்.இணையதளம் தொடங்கி அவரைப் பற்றிய அணைத்து
தரவுகளையும் அதில் பதிவேற்றினார்கள்.”இந்தியாவில் மனித உரிமைகள்” என்ற கருத்தரங்கு
ஒன்றை எல்எல்ஏ பில்டிங்கில் நடத்தினார்கள்.பல மாநிலங்களிலிருந்து முன்னாள் நீதிபதிகள்,மனித
உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், வழக்கறிஞர்கள் அதில் கலந்து கொண்டனர்.
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து நெய்வேலி கிளம்பிச்
சென்று பரதனை சந்தித்தேன்.என்னை அறுத்துக் கொண்டிருந்த குற்றவுணர்வை அவரிடம் ஓப்புவித்தேன்.பெருமூச்சு
விட்டார் பரதன். குற்றவுணர்வால் ஆகப்போவது ஒன்றுமில்லை.செயலே பிரதானம்.இதை புறவயமாக
பாருங்கள்.உங்களால் இதிலிருந்து எப்படி வெளிவர முடியும் என்று பரிசீலியுங்கள்.சமாதானமாக
எதையாவது சொல்வது உங்களுக்கும் எனக்கும் எந்தப் பயனையும் தரப்போவதில்லை.மேலும் இருவருக்குமே
அது அவமானத்தை அளிக்கும்.இப்போது நீங்கள் புறப்படலாம்.நாம் இனி பேசிக் கொள்ள ஒன்றுமில்லை
என்றார்.நான் வடலூர் வந்து சென்னைக்கு பஸ் ஏறினேன்.சிறிது நேரத்தில் கண் அயர்ந்து உறங்கிப்
போனேன்.
அகழ் மின்னிதழில் பிரசுரமான சிறுகதை