புறத்தில் இருப்பவை

அபிலாஷ் சமீபத்தில் ஒரு பதிவில் இவ்வாறு எழுதியிருக்கிறார். 

"தமிழ் முற்போக்கு மானுடவாத சிறுகதைகள் போலித்தனத்தின் உச்சம். தம் கண்முன் - தம் குடும்பத்தில், சகோதர சகோதரியிடத்து - காணும் அநீதியை கண்டுகொள்ளாமல் கடந்துவிட்டு, அதைப் பற்றி எழுதாமல், தனக்குள் உழலும் குற்றவெண்ணங்களை, தான் செய்யும் அநீதிகளை எழுத்தில் ஆய்வு செய்யாமல், அதில் இருந்து விடுதலை பெறுவது பற்றிப் பேசாமல், சமூகத்தில் வெளியே தீமையை அடையாளம் கண்டு விமர்சித்து எழுதுவார்கள். "

அவர் எழுத்தை புறவயமானதாக மட்டும் அணுகும் தன்மையை குறித்து இதில் சொல்கிறார். ஆனால் இதைக் குறித்து எனக்கு சில கேள்விகள் உள்ளன.

நாம் ஏன் ஒன்றை புறவயமாக மட்டுமே அணுகி தீவிரமாக பேசக்கூடாது.ஏன் அதை அகவயமானதாக மாற்ற வேண்டும்.ஒன்றை தீவிரமாக ஆராய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை , ஆனால் அது ஏன் அகம் நோக்கி திரும்ப வேண்டும்.நாம் மிகப் பெரிய பூதக்கண்ணாடிகளைக் கொண்டு மனித அகத்தை ஆராய்ந்து விட்டோம்.இரண்டாம் உலகப் போருக்கு பின்  லட்சியவாதங்கள் பற்றிய நம்பிக்கைகளை நாம் இழந்து நின்றோம்.தனிமனிதனை ஆராய்ந்தோம்.ஆனால் அதன் வழி நாம் அடைந்தது என்ன.நாம் எதை மாற்றாக முன்வைத்தோம்.என்ன தீர்வைக் கண்டடைந்தோம்.

இன்று இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் மீது  மானுடத்திற்கு எதிரான மாபெரும் குற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.இந்த உலகம் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.இங்கே யாரும் அதைக் குறித்து அலட்டிக்கொள்ளவில்லை.எந்தச் சலனமும் இல்லை .இன்று தொலைக்காட்சிகளில் , இணையத்தில் என்று அனைத்து ஊடகங்களிலும் நாம் அந்த மக்கள் படும் துயரங்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.நமக்கு ஏன் அது பிரச்சனையாக மாறவில்லை. ஏன் யாரும் பதாகைகளை தூக்கிக்கொண்டு தெருவில் இறங்கவில்லை.வியட்நாம் போரின் போது இதே சிவில் சமூகம் அந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று சொன்னது. இன்று அப்படி ஒரு குரல் ஏன் எங்கும் ஒலிக்கவில்லை.

இன்று நமக்கு பேஸ்புக்கில் ஐயாயிரம் நண்பர்கள் இருப்பார்கள்.ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் பெயர் தெரியாது.பக்கத்து வீட்டுக்காரன் இறந்து போய் விட்டால் அதை நாம் போலீஸ்காரன் வந்த பின்னர் தான் அறிந்து கொள்வோம். இந்த தனிமனிதன் வாய் பேச இயலாதவன்.அவன் ஏதோ ஒரு பூதத்தை பார்த்து அஞ்சுவது போல வாழ்வை எதிர்கொள்கிறான்.அவன் தன் உரிமைகளுக்கே குரல் எழுப்ப இயலாதவன்.அப்படி சத்தம் போட வேண்டும் என்றாலும் யாரை நோக்கி கத்த வேண்டும் என்று கூட அவனுக்குத் தெரியாது.

இன்று நாம் அடைந்திருப்பவை உற்பத்தி முறைமைகளின் மாற்றத்தால் நிகழ்ந்திருக்கின்றன.இன்று தனிமனிதன் என்று யாருமில்லை.அல்லது தனிமனிதனை பற்றி பேசி இனி ஆகப்போவது ஒன்றுமில்லை.இன்றைய மனிதன் இந்த அமைப்பின் வார்ப்பு.சமீபத்தில் தனஞ்செய் பாலகிருஷ்ணன் என்ற ஐஐடி மாணவன் பட்டமளிப்பு விழாவில் விருது பெற்ற போது ஆற்றிய சிற்றுரையில் விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் குறித்து கேள்வி எழுப்பினான்.

அந்த மாணவன் எளிய வினா ஒன்றை கேட்டான்.நாம் பொறியாளர்களாக பெரிய தொழில் நிறுவனங்களில் பணிபுரிகிறோம்.நல்ல சம்பளம் பெறுகிறோம்.இந்தப் பெரிய தொழில் நிறுவனங்கள் தான் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு மக்களை கொல்வதற்கான தொழில்நுட்பங்களை அளிக்கிறது.நாம் அதில் பங்கு பெறுகிறோம்.நாம் தான் அந்த நிரல்களை எழுதுகிறோம்.அந்த இயந்திரங்களை நாம் தான் உருவாக்குகிறோம்.நாம் இதைக் குறித்த ஓர்மையுடன் பணிபுரிய வேண்டும் என்று அந்த மாணவன் சொன்னான்.நாம் என்ன செய்கிறோம் என்ற பிரக்ஞை நமக்கு இருக்க வேண்டும் என்று அந்த மாணவன் பேசினான்.

மார்ட்டின் லூதர் கிங் எனக்குண்டு ஓர் கனவு என்று சொன்னார்.அதற்கு இணையான வாக்கியங்கள் அந்த மாணவன் பேசிய வரிகள்.இன்று அப்படி ஒரு குரலை என்னால் எங்கும் கேட்க முடியவில்லை.யாரும் அதைப் பேசுவது இல்லை.நமது பொருள் உலகத்தில் நாம் செய்யும் பிழைகளை நாம் லட்சியப்படுத்துவதே இல்லை.நமது பொருள் உலகமே அனைத்தையும் தீர்மானிக்கிறது.பண்பாட்டு , கலாச்சார மனிதன் என்று ஒருவன் இன்று இல்லை.தமிழில் எஸ்.என்.நாகராஜன் மட்டுமே விஞ்ஞானத்தின் அதிகாரம் குறித்து பேசினார்.விஞ்ஞானத்தில் அறம் இல்லை ஏனேனில் அதன் சட்டகத்திலேயே அது இல்லை என்று அவர் தன் கீழை மார்கஸியம் நூலில் எழுதினார்.விஞ்ஞானமே அதிகாரம் என்றார்.ஆனால் அதை நாம் தொடரவில்லை.

நாம் பண்பாட்டு ரீதியில் மனிதனை ஆராயத் தொடங்கிவிட்டோம்.ஆதிக்கம் எங்கிருந்து தொடங்குகிறது என்று கருத்துத் தளத்தில் பண்பாடு, கலாச்சாரம், மொழி, மதம் , பாலியல், சாதி, தத்துவம் என்று நுண்தளத்தில் பயனிக்க ஆரம்பித்துவிட்டோம்.இது ஒரு வகையில் வசதியாக போய்விட்டது. ஏனேனில் நாம் மிகச் சிறிய விஷயங்களை பேசுவதால் பருண்மையாக நம் முன் இருக்கும் இந்த பொருள் உலகத்தை பற்றி பேச மறுக்கிறோம்.அத்வைதம் உலகு மாயை என்று சொல்லி மீட்சியை மனிதனை நோக்கித் திருப்பியது.உலகு மாயை அதனால் உடல் கீழானது , உடல் உழைப்பாளிகள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று அது மாற்றியது.

இன்று இந்தியாவைச் சுற்றி உள்ள பல்வேறு நாடுகள் தங்கள் ஜனநாயக அமைப்பைத் தொடர முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன. இந்தியா அதை ஓரளவு சமாளிப்பதற்கான காரணம் அதன் அமைப்புகளே.இந்திய அரசியல் சாசனம் தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்று சொல்கிறது.இந்திய அரசியல் அமைப்பே இந்திய நாட்டின் அனைத்து அமைப்புகளை விடவும் மேலானது.அதை நீதித்துறையும் பாராளுமன்றமும் நிர்வாகமும் ஏற்றுத்தான் ஆக வேண்டும். இன்று தலித் மக்களின் மீட்சி இந்த அமைப்பின் வழியே சாத்தியமாகி இருக்கிறது. நாம் ஒவ்வொரு தனிமனிதனிடம் சென்று அவர்களை காந்தி சொல்வது போல மாற்றிக் கொண்டிருக்க முடியாது.

மாறாக நாம் ஒரு சமூக ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும்.அந்தச் சமூக ஒப்பந்தந்தை நிலைநிறுத்த வலுவான அமைப்புகள் இருக்க வேண்டும்.அவை ஒன்றுடன் ஒன்று எப்போதும் உரையாடலில் இருக்க வேண்டும்.ஒரு தனிமனிதன் தவறு செய்யும் போது மற்றமை மீது அக்கறை இல்லாத போது நாம் அந்த தனிமனிதனை திருத்தத் தேவையில்லை.அவனுக்கு அழுத்தம் அளித்தாலே போதுமானது.அவனைச் சுற்றி உள்ள அமைப்புகள் , முகமைகள் அதை செய்ய இயலும்.அதற்கு அந்தக் கருத்து சூழலில் இருக்க வேண்டும்.இன்று தீண்டாமை இல்லை என்ற கருத்து அரசியல் சாசனத்தின் வழி சூழலில் நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது.

அத்தகைய அமைப்புகளின் மூலமாக முகமைகள் மூலமாக நாம் தனிமனிதனை நோக்கி பேச முடியும்.மற்றபடி அவன் ஆணாதிக்கவாதியாக , பிறழ்வு கொண்டவனாக இருப்பது குறித்து நமக்கு பிரச்சனை இல்லை.அவன் தன் செயலை இந்தச் சமூகத்தில் நிகழ்த்தும் போது அங்கு சமூக ஒப்பந்தம் பருண்மை வடிவில் வந்து அதை பரிசீலிக்கும்.அதைப் பற்றி பேசினால் போதுமானது என்று நினைக்கிறேன்.அதற்கு புறவயமான பார்வை தேவைப்படுகிறது.