பாரதி மணி |
பாரதி மணி அவர்களின் இறப்பு வருத்தமளிக்கிறது. நான் 2009யில் எடுத்த ராவ் சாஹிப் குறும்படத்தில் அவர் நடித்தார்.நவம்பரில் சென்னையில் இது போன்ற ஒரு மழைக்காலத்தில் திருவல்லிக்கேணி, அடையார் ஆகிய இடங்களில் மூன்று அல்லது நான்கு நாட்கள் படத்தை எடுத்தோம். எனக்கு எந்த திரைத்துறை அனுபவமும் இல்லை. காட்சிகளை எப்படி ஷாட்டுகளாக மாற்ற வேண்டும் என்ற புரிதலும் இல்லை. ஏதோ எடுத்தேன். அவரும் அலிடாலியா ராஜாமணி அவர்களும் அந்த மழையிலும் வந்து நடித்துக்கொடுத்தார்கள்.சென்ற வருடம் இறந்து போன அருண்மொழி அந்தப் படத்திற்கு நிறைய உதவிகள் செய்தார்.அந்தப் படத்தை எடுத்த போதும் அதன் பிறகும் சில முறை விருகம்பாக்கத்தில் இருந்த அவரது இல்லத்தில் அவரை சந்தித்திருக்கிறேன்.நான் இயக்கிய இரண்டாவது குறும்படத்தில் அவரை நடிக்கக் கேட்டு 2013யில் ஒரு முறை அவர் வீட்டிற்குச் சென்றேன். பிறகு அதில் எஸ்.எஸ்.ராமன் நடித்தார். அதன் பிறகு அவரை அதிகம் சந்திக்கவில்லை.
எப்போதும் கையில் பைப்புடன் சாக்லெட் நறுமணம் தரும் புகையிலையை நிரப்பி அறையில் கம்பீரமாக அமர்ந்திருப்பார். தொலைக்காட்சியில் எதாவது செய்திச் சேனல் ஓடிக்கொண்டிருக்கும். இவ்வளவு தனியாக எப்படி இருக்கிறீர்கள் என்று ஒரு முறை கேட்டிருக்கிறேன்.நண்பர்கள் வருவார்கள், இசை கேட்பேன் என்று சொல்லியிருக்கிறார்.பல வருடங்கள் சென்னையில் தனியாக இருந்தார்.ஆனால் தனிமையிலும் அவர் நிறைவாகவே இருந்தார் என்பதே என் எண்ணம்.கடந்த நான்கு ஐந்து வருடங்களாகத்தான் அவர் பெங்களூரில் அவர்களின் மகள்கள் வீட்டில் வாழ்ந்து வந்தார்.கொரோனா காலத்தில் எப்படி இருக்கிறீர்கள் என்று சென்ற வருடம் அழைத்து நலம் விசாரித்தார்.நானும் கோரமங்களாவில் தான் இருக்கிறேன் என்றேன்.பின்னர் எல்லாம் சரியானபின் வந்து பாருங்கள் என்றார்.பண்பாளர்.
நாடகங்கள் மீது அவருக்கு பெரும் பற்று இருந்தது.செம்மீன் படத்தின் தேசிய விருதுக்கு அவரும் ஒரு காரணம்.உச்சரிப்பு குறித்து நிறைய கவனம் கொள்வார்.மோடி இல்லை மோதி , லல்லு இல்லை லாலு என்பார்.திண்டிவனம் என்பது Tindivanam என்கிற போது ஏன் பாரதி என்பது Bharathi ஆகிறது Bharati என்று தானே இருக்க வேண்டும் என்று கேட்பார். தன் பெயருக்கு முன் அவர் பாரதியை இணைத்துக்கொண்ட போது Bharati என்று தான் எழுதினார்.எதையும் திருத்தமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். லெனின் இயக்கிய ஊருக்கு நூறு பேர் படத்தில் நடித்திருப்பார். பாரதி படத்தில் இணை இயக்குனராக பணியாற்றினார்.ஷாயாஜி ஷிண்டேவை அவர் தான் தேர்வு செய்தார். பாரதி மணி அவர்களின் திரைப் பங்களிப்பில் முக்கியமான ஆக்கம் பாரதி திரைப்படம் . செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை படத்தில் முதலமைச்சர் வேடத்தில் அவர் நடித்தது எனக்குப் பிடித்திருந்தது.அந்தப் படத்தில் அவரது குரலைக்கூட சற்று மாற்றி பேசியிருப்பார் என்று எண்ணுகிறேன்.இறுதியாக சைக்கோ படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார்.
டெல்லியில் பல நிறுவனங்களில் மிக உயர்ந்த பதவிகளை வகித்தார்.அவரே இறுதியில் ஒரு நிறுவனத்தை நடத்தினார்.பின்னர் எதன் பொருட்டோ அவர் அனைத்தையும் விட்டுவிட்டு சென்னையில் விருகம்பாக்கத்தில் ஒரு வீடு எடுத்து தங்கினார்.ஐம்பது வருடங்கள் இருந்த ஊரை விடுத்து அறுபது வயதுக்குப் பின்னர் தனியாக தங்க அவர் சென்னையை தேர்தெடுத்து வந்தது எனக்கு ஆச்சரியம் அளித்தது.பள்ளிப் படிப்பை முடித்து டெல்லி சென்று அக்கா வீட்டில் தங்கி பி.காம் , எம்.பி.ஏ என்று வேலை செய்து கொண்டே படித்து வாழ்க்கையில் முன்னேறியவர்.டெல்லியில் தேசிய நாடகப் பள்ளியில் இந்திய நாடகத்துறையில் புது பாய்ச்சலை கொண்டு வந்த மேதை இப்ராஹிம் அல்காஸியிடம் பயின்றார்.ஐம்பது வருடங்களுக்கு மேலாக நாடகங்களை இயற்றி நடித்தார்.இசை , திரைப்படங்கள் , நாடகங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். நன்கு சமைப்பார். கூர்மையான நினைவுத்திறன் கொண்டவர்.அவர் தனியாக இசைக்கேட்டுக் கொண்டு இருக்கும் சித்திரத்தின் அடிப்படையில் "நடிகர்" என்ற ஒரு கதையை எழுதினேன். அந்தக் கதையில் வரும் வாசுதேவன் கதாபாத்திரத்திற்கும் அவரின் குணத்திற்கும் தொடர்பு இல்லை. ஆனால் புறச்சித்திரமாக அவரை வரித்துக்கொண்டேன். இறந்த பின் எந்த சடங்குகளும் செய்யாமல் அவர் தன் உடலை புனித ஜோன்ஸ் மருத்துவமனைக்கு கொடுத்து விட சொல்லியிருக்கிறார்.அதன் படி அவரின் மகள்களும் அப்படியே செய்திருக்கிறார்கள்.அவர் டெல்லியில் இருந்த போது இறந்து போனவர்களுக்கு உதவியது குறித்து தில்லியில் நிகம்போத் காட் என்ற கட்டுரை எழுதியிருப்பார். அந்தக் கட்டுரை நினைவுக்கு வந்தது.என் அஞ்சலி.