பிறகும் கூகையும்






பூமணியின் பிறகு நாவல் வாசித்த போது அந்த வட்டார வழக்கு, அழகிரிக்கும் நாயக்கருக்கும் உருவாகும் நட்பு , அத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் மேலெழுந்து வரும் கருணை ஆகியவை அந்த நாவல் வாசிப்பை ஒரு சிறந்த அனுபமாக மாற்றியது. பெரும்பாலும் நாம் நாவல்களை வாசித்தவுடன் அதை தர்க்க ரீதியாக தொகுத்துக்கொள்ள முயல்வோம்.எனக்கு இந்த நாவலை எந்த வகையிலும் தொகுத்துக்கொள்ளவே தோன்றவில்லை.அப்படி செய்யவும் பிடிக்கவில்லை.மனதிற்கு மிகவும் பிடித்தமான ஒருவருடன் நிறைய நேரம் பேசிவிட்டு , அவர் சென்ற  பின்னர் அந்த உரையாடலை அசைப் போடும் போது தோன்றும் ஒரு வித தித்திப்பு உணர்வுதான் இந்த நாவலை வாசித்தப் பின்னர் எழுந்தது.ஒரு கட்டுரையையோ குறிப்பைபோ எழுதுவதை விட அந்தத் தித்திப்பை என்னகத்தே நீண்ட காலம் வைத்துக்கொள்வது தான் முக்கியம் என்று தோன்றியது.தேன் சுவைக்கும் நாவு , அதை அமுது போல இருக்கிறது என்று பகுப்பதை விட ஒர் உயிர் பிண்டமாக அந்த உணர்வை நீட்டிக்கவே விரும்பும்.அப்படித்தான் பிறகு நாவல் எனக்கு அமைந்தது.முக்கியமான தரவுகள், அனுபவங்கள் , மொழி ,பயிற்சி ஆகியவை இருந்தால் நாவல் எழுத முடியும் என்று தான் நாம் நினைக்கிறோம்.ஆனால் இவற்றை தாண்டி நாவலில் அல்லது ஒரு படைப்பில் ஓர் அற்புதம் நிகழ வேண்டி இருக்கிறது.கருமேகம் திரண்டு வந்தாலும் மழை பெய்யாமல் இருந்து விடுவது போல அனைத்தும் கைகூடினாலும் ஒரு புனைவு நல்ல படைப்பாக மாறுமா என்பது அறுதியிட்டு சொல்ல இயலாது.அது நிகழ வேண்டும்.நிகழ்வது ஓர் அற்பதத் தருணம்.எழுதுபவர் , எழுத்து அனைத்தும் ஒன்றாக மாறிவிடும் ஒரு மாயாஜாலம்.

பிறகு நாவல் என் வரையில் அப்படியான ஒரு மாயாஜாலம் நிகழ்ந்த நாவல்.அந்த தித்திப்பு தான் ஏதோ ஒரு வகையில் தனிப்பெருங்கருணை என்ற கதையை எழுத உந்தியது. கதை நன்றாக வந்திருக்கிறதா என்று தெரியவில்லை , ஆனால் எனக்கு அந்தக் கதையை எழுதிய போது அது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.அதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன்.பெரும்பாலும் கதை எழுதும் போது அதன் துவக்கம், முடிச்சு, முதிர்வு சார்ந்த ஓர் எண்ணம் நம் மனதில் இருக்கும்.நான் எழுதிய பூதக்கண்ணாடி,உதவி, பிம்பம், தனிப்பெருங்கருணை போன்ற கதைகளில் அப்படியான ஓர் எண்ணம் என்னிடமில்லை.கதை எழுதுகிற போக்கில் கதையில் மாந்தர்கள் தோன்றினார்கள்.அடுத்து என்ன எழுதப்போகிறோம் என்பது குறித்த ஒரு நிச்சயமின்மை கதை எழுதுவதை ஒரு நல்ல அனுபவமாக மாற்றுகிறது.கதையின் வரைவு இருந்தால் பெரும்பாலும் அது கச்சிதமான கதையாக வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.அப்படி இல்லாத போது திசைற்று செல்லும் மேகம் போல கதை தன் போக்கில் செல்லக்கூடும்.அதை மீறி அதில் ஒரு மாயாஜாலம் நிகழும் போது கதை நல்ல வடிவத்தை அடைவதற்கு வாய்ப்பு உள்ளது.ஆனால் அது நிகழ வேண்டும்.அதை எழுதுபவர் நிகழ்த்த முடியாது என்று தான் நான் நினைக்கிறேன்.

பூமணியின் பிறகு நாவலின் அதே களத்தை கொண்ட சோ.தர்மனின் கூகை நாவல் அப்படியான ஒரு மாயாஜாலத்தை அடையவில்லை.ஆசிரியருக்கு புனைவுக்கான பொறுமையுடன் அதை நிகழ்த்திச் செல்ல இயலவில்லை.ஓர் ஆசிரியர் , கதை தன்னைத்தானே நிகழ்த்திச் செல்ல அனுமதிக்க வேண்டும்.அவரின் ஆவேசம் கதைக்கு முன்னர் செல்லக்கூடாது.தன் மொழி, அனுபவம்,பயிற்சி,அவதி ஆகியவற்றுடன் அந்த நிகழ்த்துதலை அனுமதிக்கும் நிதானமும் இருக்க வேண்டும்.அப்படி செய்யும் போது அங்கே மேஜிக் நிகழ வாய்ப்பு உள்ளது.

ஆனால் இதெல்லாம் அறுதியிட்டு சொல்ல முடிந்த விஷயங்கள் அல்ல.தர்மனின் கூகை நாவல் முன்வைக்க விரும்பும் உரையாடலை அந்த நாவல் செய்துவிடுகிறது தான்.அந்த அளவில் அது வெற்றிப்பெற்ற ஒரு படைப்பு தான்.ஆனால் இன்று ஒருவர் அந்த உரையாடலை கூகை நாவல் வழி மட்டுமே அடைய முடியும் என்றில்லை என்பது தான் அதை குறையானதொரு படைப்பாக ஆக்குகிறது.அதே உரையாடலை நீங்கள் செய்தித்தாள் வழியாக , ஆவணப்படங்கள் வழியாக, திரைப்படங்கள் வழியாக , சமூக ஊடகங்கள் வழியாக அறிய முடியும்.நாவல் அதைத்தாண்டிய ஒன்றை நிகழ்த்த வேண்டும்.அதை நாவல் தன் படைப்புக்கான அழகியல் வழியாகத்தான் அடைய முடியும்.அது தர்மனின் நாவலில் முழுமையாக நிகழவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை, அவர்களின் நிலையை அவர் கூகையுடன் ஒப்பிடுகிறார்.ஆனால் அந்தக் குறியீட்டுத் தளம் நாவலில் மெல்ல எழுந்து வரவில்லை.அது உங்களுக்கு சொல்லப்படுகிறது.அதனாலேயே செய்தியாக ,ஒப்பிடாக மட்டுமே நின்று விடுகிறது.

நல்ல படைப்புகள் நம்மை எழுதத் தூண்டுகிறது என்பதை நான் கண்டிருக்கிறேன்.மேலே சென்னது போல பூமணியின் பிறகு நாவல் தான் தனிப்பெருங்கருணை கதைக்கான உந்துதல்.அதே போல தார்கோவ்ஸ்கியின் 'தி மிரர்' தான் பிம்பம் கதை எழுதவதற்கான காரணம்.தி மிரர் படத்தை பார்த்தவர் அதற்கும் பிம்பம் கதைக்கும் என்னதான் சம்பந்தம் என்று கேட்க முடியும்.ஆனால் எனக்கு அது ஓர் உந்துதலை தந்தது என்பது தான் என் உண்மை.பஷீர் பற்றி எம்.கே.ஸானு எழுதிய தனிவழியிலோர் ஞானியும் தர்மானந்த் கோஸாம்பியின் நிவேதன் சுயசரிதையும் தான் பூதக்கண்ணாடி கதைக்கான தோற்றுவாய்.ஜி.அரவிந்தனின் போக்குவெயில் தான் பிளவு என்ற கதையை எழுதத் தூண்டியது.கரமசோவ் சகோதரர்கள் நாவலில் திமித்ரிக்கும் கத்ரீனாவுக்குமான உறவுதான் தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தக சாலை என்ற கதைக்கான கருவை அளித்தது.இவை ஒரு நல்ல படைப்பு நமக்கு ஓர் சிறந்த அனுபவமாக இருக்க முடியும் என்பதை உணர்த்துகிறது.நாவல் சிறந்த அனுபவமாக மாற முடியும்.பூமணியின் 'பிறகு' அப்படியான ஒரு நாவல்.



தஸ்தாயெவ்ஸ்கியும் காஃப்காவும்


எம்.டி.முத்துக்குமாரசாமி தஸ்தாயெவ்ஸ்கியியையும் காஃப்காவையும் ஒப்பிட்டு , முன்னர் தஸ்தாயெவ்ஸ்கி சிறந்த எழுத்தாளர் என்ற எண்ணம் இருந்தது என்றும் இப்போது அப்படியான எண்ணம் இல்லை என்கிறார்.மேலும் காஃப்காவே சிறந்த எழுத்தாளர் என்கிறார்.என்.டி.ராஜ்குமாரின் கருடக்கொடி தொகுப்பில் உள்ள ஒரு கவிதையில் "ஆளற்ற ஒரு கூட்டம் துரத்திக்கொண்டு வருகிறது" என்ற வரி வரும். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகள் வந்த பின்னர் எல்லோரையும் ஆளற்ற ஒரு கூட்டம் துரத்திக்கொண்டுதான் இருக்கிறது. பெளதீகமான ஸ்திரமான தன்னால் கண்டு உணர முடிந்த ஒரு எதிரி இன்று யாருக்கும் இல்லை.இதை நீங்கள் காஃப்காவை வாசித்து தான் அறிய வேண்டும் என்றில்லை.இன்றைய சூழலில் வேலை அல்லது தொழிலில் இருந்தால் போதும். நிலப்பிரபுத்துவ காலத்தில் காஃப்காவிற்கு வேலை இல்லை.

ஆனால் இவை அமைப்பின் சிக்கல்கள். அதுவும் ஒரு தரப்பு மட்டுமே.ஒரு சின்ன கூறு.அவ்வளவுதான். இவற்றை புரிந்து கொள்ள நமக்கு காஃப்கா தேவை இல்லை. தரவுகள் கொண்ட கட்டுரை இன்னும் நிறைய கற்றுத்தரும். தஸ்தாயெவ்ஸ்கியின் உலகம் அமைப்பின் உலகம் இல்லை.அவரின் உலகம் காலத்தில் நடப்பது அல்ல.வெளியில் நிகழ்வது.ஒரு பிரச்சனையின் போது அந்த பிரச்சனையில் சிக்கிய பத்து பேர் மேடையில் நின்று ஒன்றாக பேசினால் அது தஸ்தாயெவ்ஸ்கியின் உலகம்.அவர் தீர்வுகளை கொடுக்கவில்லை.அந்தப் பிரச்சனையின் பல பரிமாணங்களை பேசுகிறார்.கரமசோவ் சகோதரர்கள் நாவலில் இறுதியாக தீர்வு என்று எதுவும் முன்வைக்கப்படுவதில்லை. அவர் அடிப்படையில் ரஷ்ய மக்களுக்காக எழுதினார்.ரஷ்ய மக்கள் மரபான ரஷ்ய கிறிஸ்துவத்தை ஏற்று புதிய கோட்பாடுகளில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்றார்.சிதைவுண்ட ஒரு ஆளுமை அதிகாரத்தை அவாவுகிறது.பின்னர் அதற்கு ஒரு கருத்தியல் , கோட்பாடு கிடைத்துவிட்டால் அது உலகத்தை அழிக்க இயலும். அவர் மனிதனின் பிறழ்வை பற்றிக் கவலைப்பட்டார்.அமைப்பின் சிக்கலை அல்ல.

மிக தூய்மையான , பிசிறுகள் அற்ற அமைப்பை உருவாக்கினாலும் மனிதன் பிறழ்வான்.அது அவனுள் இருக்கிறது. There is disorder in man. அதனால் அவன் தன் எல்லைகளை அறிந்து தன்னை கட்டுக்குள் வைக்க மரபான ரஷ்ய கிறுத்துவத்தை ஏற்க வேண்டும் என்றார்.சோஷியலிசம், நாத்திகம், மறுப்புவாதம் , விஞ்ஞானம் ஆகியவற்றை அஞ்சினார்.அவை அவனை மேலும் பிறழ்வானவாக மாற்றும் என்றார்.அன்பு வழி என்பதை ஜோசிமா, மிஸ்கின், சோனியா, பதின் நாவலில் அர்காடியின் தந்தையான மகர் இவானோவிச் ஆகியோர் வழி அவர் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்.அந்த அன்பு வழி என்பது மரபான ரஷ்ய கிறுஸ்துவம்.

பீடிக்கப்பட்டவர்கள் என்ற நாவலில் ஒரு சிதைவுற்ற மனிதன் ஒரு புரட்சிக்கான கோட்பாட்டை பற்றிக்கொண்டால் அவன் எத்தகைய பாதிப்புகளை உருவாக்குவான் என்பதை மிகத்தீவிரமாக சொல்கிறார்.பதின் நாவலில் சுய மதிப்பீடு, சுயம் அற்று பிறரது ஆளுமையின் முன் தன்னை ஒன்றுமில்லாதவராக மாற்றிக் கொள்ள முயலும் போது ஏற்படும் குழப்பங்களை சொல்கிறார்.தஸ்தாயெவ்ஸ்கியின் உலகில் அமைப்பின் , இயற்கையின் பகுதி குறைவுதான்.

கோட்பாடுகளை முன்வைத்து அமைப்பை உருவாக்காதீர்கள்.இதை ஏற்றால் மகிழ்ச்சி கிடைக்கும் என்று சொல்லாதீர்கள்.ஏனேனில் மனிதன் மகிழ்ச்சியை முன்னிட்டு மட்டும் செயலாற்றுபவன் அல்ல.அவன் தன் சுதந்திர விருப்புறுதியை முன்னிட்டு செயலாற்றுபவன்.அதுவே அவனுக்கு முக்கியம்.அதன் பொருட்டு சிதைவை கூட ஏற்பான் என்று நிலவறையாளின் குறிப்புகள் நாவலில் நிலவறையாளன் சொல்கிறான்.இதுதான் தஸ்தாயெவ்ஸ்கியின் உலகம்.Existence precedes Essence.அமைப்புகள் மாறிக்கொண்டே இருக்கும்.நிலப்பிரபுத்துவ மனிதனும் , நகரத்து மனிதனும் கொள்ளும் வேறுபாடு கலாச்சார வேறுபாடுகள்.ஆனால் அவனின் ஆதார பிறழ்வு எப்போதும் உள்ளது.தஸ்தாயெவ்ஸ்கி அந்த பிறழ்வை பற்றி மட்டுமே பேசினார்.அது பெரிய அளவில் பாதிக்காமல் இருக்க தேவையான அமைப்பை பற்றி கனவு கண்டார்.காஃப்கா இருக்கும் அமைப்பை பார்த்து வீடியோ கேம்களை உருவாக்கினார்.இன்றைய மனிதன் தன்னை ஒரு பூச்சியாக உணர்கிறான்.இதை உணர ஒருவர் காஃப்காவை படிக்க வேண்டியதில்லை.தன் தினசரி நாளை பார்த்தாலே போதும்.