தோப்பில் முஹம்மது மீரான் |
வஹாபிஸத்திற்கும் நாட்டார் இஸ்லாமிய மரபுக்கும் இடையிலான பாலத்தை தீவிரமாக பேசும் நாவல் அஞ்சுவண்ணம் தெரு. அஞ்சுவண்ணம் தெருவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் நாட்டார் இஸ்லாமிய மரபை பின்பற்றுகிறார்கள்.மவ்லிது ஓதுதல், தர்கா வழிபாடு, சந்தனக்கூடு விழா,இசைப்பாடல்கள்,மரபான நம்பிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வழிபாட்டு முறையை கொண்டவர்களை சுன்னத் ஜமாஅத் என்று சொல்கிறார்கள்.ஷீர்க் (இணைவைத்தல்) மற்றும் பித் அத் (புதுமை) ஆகியவற்றை மறுப்பது வஹாபிஸம். அல்லா மட்டுமே வழிபாட்டுக்குரியவர்.தர்கா வழிபாடு,மவ்லிது ஓதுதல்,கந்தூரி விழா ஆகியவற்றை ஷீர்க் என்று சொல்லி வஹாபிஸம் நிராகரிக்கிறது.இசைப்பாடல்களை நிராகிரக்கிறது.அஞ்சுவண்ணம் தெருவில் தாயாரின் வழிபாடு அவர்களின் முக்கியமான நம்பிக்கை.அதை கபர் வழிபாடு என்று சொல்லி தவ்ஹித்(ஏகத்துவம்) ஜமாத்தை சேர்ந்தவர்கள் தவறு என்கிறார்கள்.முழுக்க முழுக்க சவுதி அராபியாவில் பின்பற்றப்படும் வஹாபிஸத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று தவ்ஹித் ஜமாத் வலியுறுத்துகிறது.மற்றது அனைத்தையும் ஷீர்க்,பித் அத் என்கிறது.
அஞ்சுவண்ணம் தெருவிற்கு புதிய வீட்டை வாங்கிக்கொண்டு வரும் வாப்பா வஹாபி.அவர் அங்கு இருக்கும் நாட்டார் மரபு வழிபாடுகளை, நம்பிக்கைகளை விமர்சிக்கிறார்.தான் வாங்கியிருக்கும் வீடு மஹமூதப்பா தைக்காப் பள்ளியை விட உயரமானது என்றும் பள்ளிவாசலுக்கு இரண்டு மினாரக்களை கட்டிக்கொடுத்தால் கெடுதல் வராது என்று பள்ளிவாசலின் மைதீன் பிச்சை மோதீன் சொல்கிறார்.இதற்கு முன்னர் இருந்த ஷேக் மதார் சாகிப்பின் வியாபாரம் நசிந்து வீடு ஜப்தி செய்யப்படுகிறது. இந்தக் கதையை கேட்டும் அந்த வீட்டை வாங்கும் வாப்பா அவருடைய மகளும் மருமகனும் எத்தனை மன்றாடியும் மினாரக்கள் கட்டித்தர மறுக்கிறார்.மருமகனுக்கு வியாபாரத்தில் நஷ்டம், உடல் நலம் மோசமடைகிறது.அப்போதும் வாப்பா அவர்களின் கோரிக்கையை ஏற்காமல் இருக்கிறார்.பின்னர் அவரது மகளின் பிள்ளைகள் அதே வீட்டில் வளர்ந்து மருத்துவர்களாகவும், கல்லூரி முதல்வராகவும், காவல் துறை அதிகாரியாகவும் ஆகிறார்கள். அப்படியென்றால் மினாராக்களை கட்டித்தராததால் அவர்களின் குடும்பம் சிதைந்துவிடவில்லை என்று ஆலிப்புலவரின் வாரிசான குவாஜா அப்துல் லத்தீப் ஹஜ்ரத் உணர்கிறார்.தோப்பில் முஹம்மது மீரான் மேக்கத்திகாரர் பிடிவாதமாக அந்தத் தெருவே சொன்ன போதும் மினாரக்கள் கட்டித் தராமல் இருந்ததால் எந்த இழப்பையும் சந்திக்கவில்லை என்பதை நிறுவுகிறார்.விஷ காய்ச்சலுக்கு தெரு மக்கள் அவதிப்படும் போது தர்கா வழிபாடு காய்ச்சலை சரிசெய்யாது என்று சொல்லி தவ்ஹித் ஜமாத்தை சேர்ந்தவர்கள் மருத்துவரை கூட்டி வந்து மருந்து அளித்து அவர்களுக்கு உதவுவதையும் உணர்த்துகிறார்.
ஆலிப்புலவர் மெஹராஜ் மாலையை இயற்றிய போது வேப்ப மரத்தடியில் ஒரு ஜோதி தெரிந்தது.திருநபி அவர்கள் ஆலிப்புலவருக்கு தோற்றமளித்து "ஆலி,உம்முடைய காப்பியத்தை நான் ஏற்றுக்கொண்டேன்" என்று சொன்ன வரலாற்று சிறப்புமிக்க வேப்ப மரமும் பள்ளிவாசலும் இடிக்கப்படுகிறது.வேம்படித் தெருவில் தொழும் போது முகம் தெரியும் மார்பிள்களாலும் வானை எட்டும் மினாரக்களாலும் புதிய பள்ளிவாசல் கட்டப்படுகிறது.ஆனால் அங்கே தொழும் போது மேக்கத்திகாரரான வாப்பா அந்த பழைய உணர்வு கிடைக்கவில்லை என்று வருந்துகிறார்.
ஒரு பக்கம் நாட்டார் நம்பிக்கைகள் மீது விமர்சனத்தை பொழியும் மேக்கத்திகாரரான வாப்பாதான் வேம்படி தெருவின் பழைய பள்ளிவாசலையும் அதன் வரலாற்று மகிமையையும் மதிக்காமல் இடிக்கப்பட்டதை எண்ணி கவலை கொள்கிறார். இந்த இரண்டு தரப்புகளையும் தோப்பில் முஹம்மது மீரான் சொல்கிறார்.எங்கோ ஒரு இடத்தில் மரபான நம்பிக்கைகளுக்கும் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதும் அதே நேரத்தில் அது நம்மை மூட நம்பிக்கைகள் கொண்டவர்களாக மாற்றி முடக்கிவிடக்கூடாது என்பது நாவல் முன்வைக்கும் முக்கிய சொல்லாடல்.
அதே நேரத்தில் சவுதி அராபியாவில் இருந்து வரும் பணத்தைக்கொண்டு புதிய பள்ளிவாசல்களை கட்டிக்கொண்டு மரபான இஸ்லாமிய வழக்கங்களை விமர்சித்து சண்டையிட்டு பூசல் கொள்வதால் இழப்பு இஸ்லாமியர்களுக்குத்தான் என்பதையும் அவர் சொல்கிறார்.மஹமூதப்பா தைக்காப் பள்ளியை சுன்னத் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் சீரமைப்பு செய்ய முற்படும் போது தவ்ஹித் அமைப்பை சேர்ந்தவர்கள் தடுக்கிறார்கள்.ஆனால் அவர்களும் அதை சீரமைக்கவில்லை.அது பாழடைகிறது. அப்படி பாழடையும் பள்ளிவாசலை இறுதியில் பாபர் மசூதியுடன் ஒப்பிடுகிறார் வாப்பாவின் கனவில் வரும் மைதீன் பிச்சை மோதீன்.இப்படி நம்மால் தொழுகையும் வணக்கமும் இல்லாமல் கைவிடப்படும் கட்டிடங்கள் அந்நியப்படத்தான் செய்யும் என்கிறார் மைதீன் பிச்சை மோதீன்.
மேலும் இறுதியில் மனிதன் சந்திர மண்டலுத்துக்கு சென்று பூமி பிரகாசமுள்ள கோளம்ணு இப்போது சொன்னான்.ஆனால் 16வது நூற்றாண்டில் ஆலிப்புலவர் நபிநாயகம் வானலோகப் பயணம் செய்ததைப் பற்றி எழுதிய மெஹராஜ் மாலையில் பூமி பிரகாசிக்கக் கூடிய கோளம் என்று எழுதியிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டி, வஹாபிஸம் முன்வைக்கும் பகுத்தறிவுக்கு அப்பால் உள்ளூணர்வுத்தளம் ஒன்று நாட்டார் இஸ்லாத்தில் உள்ளது என்பதை மீரான் சொல்கிறார்.
வஹாபிஸம் குறித்தும் இங்குள்ள நாட்டார் இஸ்லாமிய மரபு பற்றியும் தொடர் உரையாடல்கள் நம் சூழலில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.இந்த உரையாடல்களின் தொகுப்பை அதன் இரு எல்லைகளையும் அதன் சிக்கல்களையும் அதில் பொதிந்துள்ள உண்மைகளையும் புரட்டுகளையும் இந்த நாவல் பேசுகிறது.அபாரமான நாவல்.
ஒரு மனிதன் தன் வேர்களை அறுத்துக்கொண்ட பின்னர் அவன் ஒன்றுமில்லை.எந்த சமயமும் குறியீடுகளாகவும், ஆழ்படிமங்களாவும், தொன்மங்களாவும் மாறித்தான் மனிதனுக்கு உளவியல் சக்தியை அளிக்க இயலும்.வெறும் பகுத்தறிவின் துணைக்கொண்டு மனிதன் உளவியல் சக்தியை பெற முடியாது.பெளத்தத்தில் நாகார்ஜூனர் முன்வைக்கும் மத்தியமிகத்தை பகுத்தறிவும் தர்க்கமும் கொண்டு நம்மால் புரிந்து கொள்ள முடியும்.பிறருக்கு விளக்க முடியும்.ஆனால் அதை வைத்துக்கொண்டு வாழ முடியாது.அது குறியீடுகளாகவும் , ஆழ்படிமங்களாவும் , தொன்மங்களாவும் மாறினால் மட்டுமே அது நமக்கு தினசரி வாழ்க்கையில் உதவும்.அப்படி மாறுவதற்கு இசைப்பாடல்களும், சடங்குகளும்,விழாக்களும், மந்திரங்களும் தேவை.அவையே காலமாற்றத்தில் மனிதனுக்கு உளவியல் சக்தியை அளித்து அவனது தினசரியை கடக்க உதவி செய்யும்.மிக அவசியமாக அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய நூல்.
அஞ்சுவண்ணம் தெரு - தோப்பில் முஹம்மது மீரான் - அடையாளம் பதிப்பகம்.
நிழற்படம் - https://thoppilmeeran.wordpress.com/