அறிவும் அதிகாரமும்


பி.ஏ.கிருஷ்ணன் விஞ்ஞானத்தை விரும்புபவர்கள் கலைகளையும் இலக்கியத்தையும் விரும்புகிறார்கள் , ஆனால் மறுதரப்பு அப்படி இருப்பதில்லை என்கிறார்.இதற்கு காரணமாக அவர் சொல்வது விஞ்ஞானம் கச்சிதமானதும் நிரூபணவாதத்தையும் கொண்டது என்றும் அதை இவர்களால் புரிந்து கொள்ள முடியாததால் அதை வெறுக்கிறார்கள் என்றும் சொல்கிறார்.முறையான கல்வியும் , வாய்ப்பும் , வழிகளும் இருந்தால் யாரும் விஞ்ஞானம் கற்க முடியும்.தொழில்நுட்பக் கல்வியும் அப்படியானதே.சுமாராக படித்த மருத்துவர்கள் , பொறியியலாளர்கள் வேலையில் சேர்ந்து துறை சார்ந்த விஷயங்களை ஒரு வருடத்தில் எளிதல் கற்கிறார்கள்.இது உண்மை. விஞ்ஞானத்தை வழிபடுவதும் அதை மனிதனுக்கான விடுதலையாக பாவிப்பதும் அறிவுத்துறைகளில் அதை உயர்த்திற்கு எடுத்துச்செல்வதும் உண்மையில் மிகப்பெரிய மனித அவலம்.

இப்படி பேசும் போது தான் நாம் இட ஒதுக்கீடு குறித்தும் கவலை கொள்கிறோம்.இட ஒதுக்கீட்டால் கல்வியின் தரம் குறைகிறது என்கிறார்கள்.துறை சார்ந்த அறிவை வேலையில் சேர்ந்த சில வருடங்களில் பலரும் கற்கிறார்கள்.இது நடைமுறை உண்மை.நீங்கள் கல்லூரியில் கற்பது என்பது வெறுமன ஒரு ஏற்பாடு.அதை பரவலாக்குவதும் எல்லோருக்கும் கொண்டு செல்வதும் தான் முக்கியம்.தரத்தால் ஒன்றும் மாயம் நிகழ்ந்துவிடுவதில்லை.உயர்கல்வியின் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனநிலை விஞ்ஞானத்தின் மீதான வழிபாட்டால் வருகிறது.விஞ்ஞானத்தின் மீதான வழிபாடு அறிவின் மீதான மயக்கத்திலிருந்து வருகிறது.கல்வியின் தரம் என்று சொல்லி உயர்கல்விக்கு நாம் பற்பல தடைகளை உருவாக்குகிறோம்.கிராமத்து சிறுநகரத்து மனிதர்களை உயர்கல்வியை அடையவிடாமல் செய்கிறோம்.அப்படியும் மீறி வந்து சேர்பவர்களை ஆச்சிரியமாக புருவம் தூக்கி பார்க்கிறோம்.உயர்கல்வி உயர்த்தப்பட்ட பெருநகரத்து மனிதர்களுக்கு சென்று சேர்கிறது.அவர்கள் கற்கிறார்கள்.அதிகாரத்தில் அமர்கிறார்கள்.திட்டங்கள் தீட்டுகிறார்கள்.கிராமத்து சிறுநகரத்து மனிதர்களை பெருநகரங்களுக்கு கொண்டு வந்து அடிமையாக்கிவிடுகிறார்கள்.

இதற்கு நாம் கிராமத்து சிறுநகரத்து பள்ளி கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்கிறார்கள்.உண்மையில் ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி வருவது எத்தனை கடினமானது என்று இவர்கள் அறிவார்களா.என் மகன் பத்து வயதிலேயே ஷேக்ஸ்பியரை படித்தான் என்பவர்கள் சிறுநகரத்து கிராமத்து மனிதர்களுக்கு அதற்கான வாய்ப்புகளும் பண்பாட்டு சூழலும் இருக்கிறதா என்பதை குறித்து என்ன புரிதல் கொண்டிருக்கிறார்கள்.உயர்கல்விக்கான ஒவ்வொரு தடுப்பும் வன்முறையானது.தகர்க்கப்பட வேண்டியது.நீங்கள் முதலில் கிராம , சிறுநகரத்து, பெருநகரத்து கல்விமுறை , பண்பாட்டுச்சூழலை சமதளத்துக்கு கொண்டு வந்த பின்னர் உயர்கல்விக்கான தடுப்புகளை கொண்டு வாருங்கள்.அமெர்த்தியா சென் தன் புத்தகம் ஒன்றின் தலைப்பு The Country of first boys.அவர்களுக்குத்தான் கல்வியும் வாய்ப்பும் அதிகாரமும்.

உற்பத்தி உறவுகளும் உற்பத்தி சக்திகளும்


எஸ்.என்.நாகராஜன்


முதலாளிகளிடம் இருக்கும் உற்பத்தி கருவிகளை பொதுவுடைமை ஆக்கி உற்பத்தி சக்தியை அதிகரிக்கும் போது உற்பத்தி உறவுகள் மாறுகிறது.உற்பத்தி சக்தியை பன்மடங்கு பெருக்கும் போது இயற்கையை மனிதன் தன் ஆளுகைக்கு உட்படுத்த முடியும்.இதில் உற்பத்தி கருவிகள் முதலாளிகளிடம் இருக்க வேண்டுமா அல்லது பாட்டாளிகளிடம் இருக்க வேண்டுமா என்பதில் மட்டுமே முதலாளித்துவமும் கம்யூனசிமும் வேறுபாடு கொண்டுள்ளது.

முதலாளித்துவ சமூகத்தில் இருக்கும் உற்பத்தி உறவுகள் பொதுவுடைமை சமூகத்தில் உற்பத்தி கருவிகளின் உடைமை மாற்றத்தால் மாற்றம் அடையும் என்கிறது மார்க்ஸியம்.ஆனால் நடைமுறையில் ஒரு பொதுவுடைமை சமூகத்தின் தொழிலாளி இடத்தில் தொழிலாளி வருகிறான்,முதலாளி இடத்தில் அதிகாரி வருகிறான்.வேறுபாடு அவ்வளவுதான்.அதற்கு அப்பால் வேலை பிரிவினை , அதிகார கட்டமைப்பு , அறிவின் அதிகாரம் அனைத்தும் இரு சமூக அமைப்புகளிலும் ஒரே போலத்தான் இருக்கிறது.

மேலும் முதலாளித்துவ சமூகமும் பொதுவுடைமை சமூகமும் விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் ஒரே போலத்தான் பார்க்கிறது.சோவியத் ரஷ்யாவும் அமெரிக்காவும் ஒருவரை ஒருவரை போட்டிப்போட்டுக் கொண்டு விண்வெளி ஆய்வில் ஈடுபட்டனர்.இரு சமூகங்களுமே விஞ்ஞானத்தை தொழுதது.இரண்டு சமூகங்களிலும் அறிவு, விஞ்ஞானம் , தொழில்நுட்பம் குறித்த விமர்சனங்கள் இல்லை.யார் இயற்கையை கைப்பற்றுவது, யார் இயற்கையை ஆளுகைக்கு உட்படுத்துவது என்பது தான் பிரச்சனை.கூடங்குளம் அணுமின் நிலையத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரிக்கத்தான் செய்யும்.கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தில் உதயகுமாருக்கு ஆதரவுக்கு தெரிவிக்க வந்த அச்சதானந்தன் பாதி வழியில் கட்சியின் உத்தரவினால் திரும்பிச் சென்றார்.எந்தவித விஞ்ஞான முன்னேற்றத்தையும் தொழில்நுட்பத்தையும் கம்யூனிஸ்டுகள் கேள்வி கேட்க மாட்டார்கள்.ஏனேனில் அது மார்க்ஸியத்திற்கு எதிரானது.

உண்மையில் விஞ்ஞானம் வளரும் போது தொழில்நுட்பம் வளர்கிறது.உற்பத்தி கருவிகள்  அதிக திறமையுடன் சந்தைக்கு வருகிறது.தொழிலாளியின் தேவை குறைகிறது.முதலாளி மேலும் பலமானவன் ஆகிறான்.தொழிலாளி முதலாளிக்கு தேவையற்றவன் ஆகிறான்.இன்று பல அசெம்பிளி லைன் வேலைகளில் மனிதர்களின் தேவையில்லாமல் மூலப்பொருட்கள் இறுதி வடிவம் அடைந்து வெளியே சந்தைக்கு செல்கிறது.தொழிலாளி சங்கங்கள் அமைத்து முதலாளியிடம் பேரம் பேசிய காலம் போய் தொழிலாளி முதலாளியிடம் குறைந்த ஊதியத்திற்கு வேலையில் இருக்க கெஞ்சும் சூழல் உருவாகி உள்ளது.இதை நாம் பார்க்கிறோம். மூலதன குவிப்பு வேறு எப்போதையும் விட இன்றைய தொழில்நுட்பச் சூழலில் எளிதாக நடக்கிறது. இனி மனிதர்களின் உழைப்பு தேவையற்றதாகிறது.அவர்கள் முதலாளிகளின் அரசுகளின் கருணையில் வாழ முடியும்.உழைப்பை விற்று வாழ முடியாது.அவர்களின் உடல் உழைப்பும் அறிவுத்திறனும் தேவையற்றதாகிறது.அதை ஒரு உற்பத்தி கருவி செய்துவிடுகிறது.மனிதன் உழைப்பால் மகிழ்ச்சி அடைகிறான்.வேலை பிரிவினையில் மனிதன் உழைத்தாலும் மகிழ்ச்சி அடைவதில்லை.ஏனேனில் அவன் உழைப்பின் இறுதி வடிவத்திலிருந்து விலகுகிறான்.இதனால் அவன் மன அசதிக்கு உள்ளாகுகிறான்.அதை அந்நியமாதல் என்கிறார்கள்.இதற்கான தீர்வாக தொழிலாளிகளுக்கு தங்கள் உழைப்பின் இறுதிவடிவத்தை பற்றி புரிதல் இருந்தால் அந்நியமாதல் குறையலாம் என்று எரிக் ஃபிராம் சொல்கிறார்.ஆனால் அந்த தீர்வு சரியான தீர்வு அல்ல.மேலும் அது உற்பத்தி உறவுகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

விஞ்ஞானத்தில் அறம் இல்லை.அதன் சட்டகத்தில் அறம் இல்லை.அதை பலரும் எழுதியிருக்கிறார்கள்.தஸ்தாயெவ்ஸ்கி , காந்தி, மாவோ அதைக்குறித்த தங்கள் பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.இயந்திரவியலை விட மின்னணுவியல் சிக்கலானது.புறவடிவில் எளிதல் புரிந்துக்கொள்ளக்கூடியது இயந்திரவியல்.அறிதல் மேலும் மேலும் சிக்கலாகும் போது அறிவு ஒரு குறிப்பிட்ட கூட்டத்திற்கு மட்டுமே சென்று சேர்கிறது. இன்று உயர்கல்வியை அடைவதற்கான வாய்ப்புகள் கிராமத்தை சிறுநகரத்தை சேர்ந்தவர்களுக்கு குறைந்து கொண்டே வருகிறது.அது திட்டமிட்டு குறைக்கப்படுகிறது.ஏனேனில் அறிவு பெருநகரத்து உயர்த்தப்பட்டவர்களுக்கு என்று ஆகும் போது அது அதிகாரம் கொண்டதாகவும் ஆகிறது.

கிராமத்து சிறுநகரத்து மனிதர்கள் சென்று நின்று அவர்களுக்கு வேலை செய்ய வேண்டும்.இன்று இது நடக்கிறது.விஞ்ஞானம் குறித்த வழிபாட்டு உணர்வே எல்லோருக்கும் இருக்கிறது.ஆனால் இந்த விஞ்ஞானம் வர்க்கச் சார்புடையதாகிறது.ஏனேனில் எந்த வர்க்கம் அதை கற்கிறதோ அந்த வர்க்கத்தின் நலன்களைத்தான் அது பிரிதிபலிக்கும்.அதற்கு என்று தனியாக மதிப்பீடுகள் இல்லை.அறம் இல்லை.விஞ்ஞானம் தொழில்நுட்பம் அரசு அதிகாரம் எல்லோரும் ஒரு கூட்டமாக மாறி திட்டங்கள் வகுக்கிறார்கள்.இந்த திட்டங்கள் மேலும் மேலும் மக்களை அடிமைப்படுத்தவே செய்யும்.

இதனால் தான் காந்தி கிராம ராஜ்ஜியம் பற்றி பேசினார்.மாவோ இதை செயல்படுத்த முயன்றார்.தஸ்தாயெவ்ஸ்கி விஞ்ஞானம் உருவாக்கக்கூடிய பேரழிவுகளை பற்றி எழுதினார்.விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளரும் தோறும் மனிதனின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது.அவன் சிறைக்கைதி ஆகிறான்.அவன் இயந்திரவியல் சமூகத்தில் அந்நியப்பட்டத்தை விட மின்னணுவியல் சமூகத்தில் அந்நியப்படுகிறான்.செயற்கை அறிவத்திறன் கொண்ட கருவிகள் கொண்ட சமூகத்தில் மேலும் அந்நியப்படுகிறான்.தேவையற்றவனாகிறான்.அரசையும் அதிகாரிகளையும் நம்பி வாழும் துயர நிலைக்கு செல்கிறான்.

இன்று இந்த அறிவு வளர்ச்சியால் மனிதன் எந்தளவு சுதந்திரம் அடைந்திருக்கிறான்.நிச்சயம் அவனது சுதந்திரம் குறைந்திருக்கிறது.வர்க்க நலன்களை உள்ளடக்கிய அடையாள அரசியலும் தற்சார்பு கொண்ட மனிதனை உருவாக்கும் கிராம அமைப்புமே மனிதனுக்கான விடுதலையாக இருக்கும்.

புதியது அல்ல, பழையன மீட்பு , புத்துருவாக்கமும் நமக்கான சுதந்திரத்தை கொடுக்கும்.முதலில் அதற்கு நாம் விஞ்ஞானத்தின் மீதான வழிபாட்டு உணர்வை விட வேண்டும்.யாரும் விஞ்ஞானத்தை கற்கலாம். முறையான வாய்ப்பும் சூழலும் வழிகளும் இருந்தால் விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் கற்பது எளிதுதான்.தங்கள் கல்லூரி நாட்களில் புரிந்து கொள்ளாத பல விஷயங்களை வேலையில் சேர்ந்த ஒரு வருடத்தில் பல பொறியிலாளர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.நாம் அவர்களின் அறிவுத்திறனை கேலி செய்து கொண்டிருக்கிறோம்.

உற்பத்தி கருவிகளின் வளர்ச்சியால் உற்பத்தி உறவுகள் மாற்றம் கொள்ளப் போவதில்லை.கொண்ட மாற்றங்களும் மனிதனுக்கு சுதந்திரத்தை அளிக்கவில்லை.சுதந்திரம் அதன் எதிர்திசையில் இருக்கிறது.சுதந்திரம் பிளவுபடாதது என்கிறார் மார்க்ஸ்.ஆனால் அதற்கான வாய்ப்புகள் மார்க்ஸியத்தில் இல்லை.தற்சார்பு கொண்ட மனிதன் முதலாளித்துவ சமூத்திற்கும் பொதுவுடைமை சமூகத்திற்கும் எதிரானவன்.ஆனால் அவனே சுதந்திரமானவன்.எவனது உற்பத்தி கருவிகள் அவனது கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அவனே சுதந்திரமானவன்.எவை தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய தேவையற்றதோ அவை அவனை சுதந்திரமாக்கும்.எவற்றை உருவாக்க பல்லாயிரம் தூர தேசங்களிலிருந்து மூலப்பொருட்களை கொண்டு வர தேவையில்லையோ அவை அவனை சுதந்திரமாக்குகிறது.உற்பத்தி கருவிகளை அவன் உருவாக்கிக் கொள்ள கூடியவனாக இருக்க வேண்டும்.விவசாயம் , மீன் பிடித்தல் , கைவினைக்கலைஞர்கள், உணவு சேகரித்தல் இந்த வேலைகளுக்கு தேவையான கருவிகளை உருவாக்கும் வேலை நிபுணர்கள் இவர்களை உள்ளடக்கிய சாதிய பாகுபாடு அற்ற கிராம முறை.இதுவே மனிதனை சுதந்திரமாக்கும்.இதுவே உற்பத்தி உறவுகளை மாற்றும்.இது ஒரு வகையில் ஆசிய உற்பத்தி முறை.இதற்கு சில மாற்றங்களுடன் திரும்புதலே மனிதனுக்கான விடுதலை.