பத்து வயதில் தன் பகுதிக்கு அடிக்கடி வந்த ஃபகீரின் பாடல்களில் மெய் மறக்கும் ரஃபி அவரிடம் கஸலை பாடிக்காட்டுகிறார்.அந்த சிறுவனின் ஆர்வத்தை பார்க்கும் ஃபகீர் அவரை ஆசிர்வதிக்கிறார்.1940 களின் மத்தியிலிருந்து 1980 வரை ஹிந்தி திரைப்பட உலகின் பிரதான பின்னணி பாடகராக இருந்த முகமது ரஃபி பற்றி அவரின் மருமகள் யாஸ்மின் காலித் ரஃபி எழுதியுள்ள நினைவுக்குறிப்பு ரஃபி பற்றிய முழுமையான சித்திரத்தை அளிக்கிறது.அவரின் மருமகள் என்பதால் வெறும் புகழ்மாலையாக மட்டும் இந்த நூல் இல்லை.
1940களில் லாகூரிலிருந்து தன் உறவினருடன் பம்பாயில் திரையுலகில் பாடுவதற்கு வருகிறார் ரஃபி.அங்கு பட வாய்ப்புகளுக்காக அலைகிறார்.அவர் வாடகைக்கு தங்கியிருந்த சிராஜூதின் அகமதுவின் மூலமாக நவ்ஷத் அலியிடம் பாடும் வாய்ப்பை பெறுகிறார்.1947யில் ஜுக்னு திரைப்படத்தில் நூர்ஜகானுடன் இணைந்து பிரோஸ் நிஜாமியின் இசையில் பாடும் பாடல் மூலமாக அவரின் திரையுலக பயணம் துவங்குகிறது.அதே ஆண்டில் இந்திய சுதந்திரத்தை முன்னிட்டு செங்கோட்டையில் அவருக்கும் பாட வாய்ப்பு கிடைக்கிறது.முதலில் மூன்று நிமிடங்கள் மட்டுமே பாட கிடைக்கையில் மக்கள் மிகவும் விரும்பவே அரைமணி நேரம் பாடகிறார்.நேரு அவரை மிகவும் பாராட்டி அவரை அரவனைத்துக் கொள்கிறார்.அதன்பின் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கிறது.
1969யில் ஆராதணா திரைப்படம் வெளியாகிறது.ராஜேஷ் கண்ணா இளைஞர்களின் அக உலகில் நுழைகிறார்.இளைஞர்களின் உடல் மொழியை மாற்றுகிறார்.அந்தப் படத்தின் அநேக பாடல்களை கிஷோர் குமார் பாடகிறார்.அந்த கட்டத்திலிருந்து 1970களின் மத்தியில் ராஜேஷ் கண்ணாவின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து குறையத் துவங்கும் வரை கிஷோர் குமார் நிறைய பாடல்களை பாடுகிறார்.அதன் பின் முகமது ரஃபிக்கு அதிக பட வாய்ப்புகள் அவரது மரணம் வரை வருகிறது.லக்ஷமிகாந்த் பியாரிலாலின் முதல் பாடலை அவர் பாடகிறார்.
உலகம் முழுவதும் பல இசைவிழாக்களை நடத்துகிறார்.கொளும்புவில் அவரின் இசைவிழாவிற்கு பத்து லட்சத்திற்கும் அதிக கூட்டம் வருகிறது.ஹிந்தி தெரியாத அந்தக் கூட்டம் அவரின் பாடல்களில் பித்து கொள்கிறது.அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் கூடுகிறது.இதனால் தன் திரைப்பட வாய்ப்புகள் பிறருக்கு போவதை பற்றியும் அவர் கவலை கொள்வதில்லை.
கார்கள் மீது அதீத நாட்டம் அவருக்கு இருந்திருக்கிறது.லண்டனில் தன் பிள்ளைகளுடன் சென்று தங்கிய ரஃபி அங்கு கார்களுக்கு ஈடப்படும் அடர் வண்ண நிறங்களை பம்பாயில் தன் பியட் காருக்கு ஈட்டு மகிழச்சி கொள்கிறார்.ஒரு முறை தன் காருக்கு அடர் பச்சை நிறத்தை தீட்டுகிறார்.
உணவுகள் மீது அவருக்கு நிறைய ஈடுபாடு இருந்திருக்கிறது.ஒரு முறை இங்கிலாந்தில் இசை நிகழ்வுகளுக்கு சென்றிருந்த போது அங்கு அவருக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு நல்ல உணவு கிடைக்கவில்லை.தன் மகனிடம் லண்டன் சென்று வர எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்கிறார்.ஆறு மணிநேரம் ஆகும் என்றாலும் அங்கு சென்று தன் மருமகள் யாஸ்மினை சமைக்கச் சொல்லி நன்கு உணவருந்தி சரியான நேரத்திற்கு இசை நிகழ்வுக்கு திரும்பி விடுகிறார்.
அவருடைய பிள்ளைகள் எவரையும் அவர் பாடகராக ஊக்குவிக்கவில்லை.அதற்கு அவர் அளித்த காரணம் காலித்தும் மகள் நஸ்ரினும் நன்றாக பாடுகிறார்கள்.ஆனால் ஒரு வேளை அவர்கள் நன்றாக வளர முடியவில்லை என்றால் அது பெரிய துயரமாக எஞ்சிவிடும் என்கிறார்.அவரின் மரணத்திற்கு பிறகு அவரின் இளைய மகன் பாடராக முயன்று தோற்கிறார்.
பம்பாயில் அவர் தொடர்ந்து வீடு மாறுபவராக இருக்கிறார்.அதற்கு எந்த குறிப்பிட்ட காரணத்தையும் அவரால் கொடுக்க முடியவில்லை.இறுதியாக ரஃபி வில்லாவில் குடிபுகுகிறார்.அங்கு மரணமடைகிறார்.அவர் தன் வீட்டு உறுப்பினர்கள் யாரும் தன் பாடல் ஒலிப்பதிவின் போது ஒலிப்பதிவு கூடத்திற்கு வரக்கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறார்.குடி,சிகரெட்,கேளிக்கை கூடல்கள் எதிலும் ஆர்வமற்றவராக இருக்கிறார்.கூச்ச சுபாவத்தாலும் , வாக்கியங்களை ஒழுங்காக அமைத்து பேச இயலாததாலும் பெரும்பாலும் நேர்காணல்களை தவிர்க்கிறார்.
அவர் உலகின் அனைத்து இடங்களிலும் தன் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும் தன் சொந்த மண்ணில் நிகழ்ச்சி நடத்த அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.1962யில் ஒரு முறை வாய்ப்பு கிடைத்து சீனப்போர் துவங்கிதால் அது பறி போய்விடுகிறது.அதன் பின் அப்படி ஒரு சாத்தியம் அவருக்கு நிகழவே இல்லை.
தான் வாடகைக்கு தங்கிய சிராஜூதின் அகமதுவின் மகள் பில்கியூஸை திருமணம் செய்து கொள்கிறார்.அதற்கு முன் அவர் செய்த திருமணம் மிக விரைவில் முடிந்து விடுகிறது.அவரின் மூத்த மகன் சயீத் முதல் திருமணத்தில் பிறந்தவர்.
இந்த நினைவு குறிப்பை எழுதியுள்ள யாஸ்மின் மத்திய பிரதேசத்தில் இந்தூரில் மிக வசதியான குடும்பத்தில் பிறந்தவர்.ரஃபியின் பாடல்களை கேட்டு ரசித்தவர் அவரின் வீட்டிற்கே மருமகளாக செல்கிறார்.அவரின் எண்ணங்களை மிக கூர்மையாக பதிவு செய்திருக்கிறார்.லதா மங்கேஷ்கருக்கும் ரஃபிக்கும் ராயல்டி பற்றிய விவாதத்தால் மனஸ்தாபம் ஏற்பட்டு சில வருடங்கள் இணைந்து பாடாமல் இருக்கின்றனர்.தயாரிப்பாளர் பாடுவதற்கான தொகையை அளித்து விடுவதால் மேற்கொண்டு எதையும் தர வேண்டியதில்லை என்பது ரஃபியின் வாதம்.தயாரிப்பாளர் அந்த பாடலை கொண்டு தொடர்ந்து பணம் ஈட்டுவதால் ராயல்டி தருவதுதான் சரி என்பது லதா மங்கேஷ்கரின் வாதம்.மிகவும் பிந்தி லதா மங்கேஷ்கரின் வாதத்தில் நியாயம் உள்ளது என்பதை உணர்கிறார்.இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதையும்.
1980யில் மாரடைப்பில் இறக்கிறார்.அதன்பின் தன் குடும்பத்தில் துர்மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்தன என்கிறார் யாஸ்மின்.1990யில் ரஃபியின் இளைய மகனும் தன் சகோதரியின் கணவருமான ஹமிது மாரடைப்பில் இறக்கிறார்.மூத்த மகன் சயீத் 1998யில் கார் விபத்து ஒன்றில் இறக்கிறார்.2005யில் யாஸ்மினின் கணவர் காலித் மாரடைப்பில் இறக்கிறார்.மாரடைப்பு ரஃபியின் குடும்பத்தில் தொடர்ந்து வந்த நோய்கூறு என்கிறார் யாஸ்மின்.
லாகூரில் பிறந்த ரஃபி 1947க்கு பிறகு இந்தியாவிலேயே தங்க முடிவு எடுக்கிறார்.ஆனால் அவரின் சகோதர்கள் ,தந்தை,தாய் எல்லோரும் லாகூரில் வசித்தனர்.எத்தனை எத்தனை குடும்பங்கள் இந்த பிரிவினையால் பாதிக்கப்பட்டிருக்கும்.
வளர்ந்து வந்த பாடகரான ரஃபியிடம் பாடும் போது முக பாவங்களை உருவாக்கிக்கொள்ளாதே என்று அறிவரை வழங்குகிறார் நூர்ஜகான்.அதை ரஃபி கடைபிடிக்கவும் செய்கிறார்.இங்கிலாந்தில் நடந்த இசை நிகழ்வை பற்றி சொல்லும் யாஸ்மின் அதுவரை இருந்த ரஃபி அல்ல மேடையில் பாடியது.அவர் வேறு யாரோவாக இருந்தார்.பாடி முடித்து கீழே வந்ததும் எளிய மனிதராக கூச்சம் நிரம்பியவராக மென்மையானவராக மாறிவிட்டார் என்கிறார்.
Mohammed Rafi MY ABBA - A MEMOIR
Yasmin Khalid Rafi - Tranquebar
Translated by Rupa Srikumar and A.K.Srikumar.