மரப்பசு நாவல் அம்மணி என்கிற பெண் தன்னைப் பற்றி சொல்லும் கதை.அவள் சிறு வயதில் கண்டு மாமாவின் மாம்பல உடம்பை பார்ப்பதிலிருந்து முப்பத்தி எட்டு வயதில் ப்ரூஸ் என்கிற இளைஞனுடன் அவள் கொள்ளும் உறவு வரை கதை செல்கிறது.அவளுக்கு கண்டு மாமா தன் பெண்ணுக்கு இழைத்த அநீதியால் திருமணம் குறித்த கசப்பு ஏற்படுகிறது.அவளுக்கு கோபாலி என்ற பாடகரின் குரலின் மீது சிறு வயதிலிருந்தே பெரும் ஈர்ப்பு உண்டு.அவளுடைய இருபதுகளில் அவரிடம் சென்று சேர்கிறாள்.பின்னர் கோபாலி அவளை சந்தேகப்படவும் அந்த சந்தேகத்தை நிஜமாக்குகிறாள்.பரதம் கற்கிறாள்.வெளிநாடுகளுக்கு செல்கிறாள்.ஒரு முறை ப்ரூஸை சந்திக்கிறாள்.அவள் அவனின் வருங்கால முதுமையை நினைவூட்டுகிறான்.அவள் அதன்பின் பட்டாபியை உடைமையாக்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்கிறாள்.
அவள் எம்.ஏ. வரை படிக்கிறாள்.கோபாலி அவள் அழகுக்காக அமைத்து தரும் செளகரியங்களை ஏற்றுக்கொள்கிறாள்.கோபாலியை சுரண்டுகிறாள்.கோபாலிக்கு பிற ஆண்களுடன் அவள் பழகுவது பிடிக்காத போது அதை செய்து அவரை சீண்டுகிறாள்.கோபாலியின் மருமகன் பட்டாபியை அவளே விரும்பி உடலுறவு கொள்கிறாள்.அவனை குற்றவுணர்வு கொள்ளச் செய்கிறாள்.அவளுக்கு பிடிக்காத சுந்தரித்திடம் உறவு கொள்ள மறுக்கிறாள்.அவள் வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை.அவளுக்கு பிடித்த சோம்பேறித்தனமான எளிதான வாழ்வை வாழ்கிறாள்.எந்த உழைப்பும் இல்லாமல் எந்த பொறுப்புணர்வோடும் இல்லாமல் இருக்கிறாள்.இறுதியில் அவளின் முதுமையை நினைக்கும் போது மரணித்து விட்ட பசுவுடனும் மரத்தாலான பசுவுடனும் ஒப்பிட்டுக்கொள்கிறாள்.இறுதியில் தன் உழைப்பால் முன்னேறி கல்கத்தாவில் வேலையில் இருக்கும் பட்டாபியை சென்னை வந்து தன்னுடன் தங்கச் சொல்வதுடன் நாவல் முடிகிறது.பட்டாபி அவளின் துணிகளை மடித்து வைக்கிறான்.சமைத்துக் கொடுக்கிறான்.அவளாக வந்து அழைக்கும் போது உறவு கொள்கிறான்.அவளுக்கு அவனை பிடித்திருக்கிறது.
ஜானகிராமன் நாவல்களில் உள்ள முக்கிய விஷயம் மைய கதாபாத்திரங்களுக்கு இணையான அல்லது ஒப்பிடக்கூடிய குறுங் கதாபாத்திரங்களை அவர் உருவாக்குவது.மோகமுள் நாவலில் பாபுவின் இன்னொரு வடிவமாக தங்கம்மாள் வருகிறாள்.இந்த நாவலில் அப்படியாக மரகதம் என்கிற பெண் வருகிறாள்.அம்மணியின் வீட்டில் வேலை செய்யும் பச்சையப்பனின் மனைவியாகிறாள் மரகதம்.பேரழகி.அவள் மீதும் கோபாலி மையம் கொள்கிறான்.அவள் அந்த வேலையை விட்டுவிட்டு பச்சையப்பனை அழைத்துக்கொண்டு வடபழனி சென்று தங்குகிறாள்.கோபாலி தன்னால் மிகவும் துன்புறுகிறார் என்றும் அங்கே இருந்தால் பச்சையப்பனின் கதியும் தன் கதியும் என்னாகும் என்பதால் வேலையை விட்டுவிட்டதாக அம்மணியிடம் சொல்கிறாள் மரகதம்.
மரகதம் நினைத்திருந்தால் அம்மணி போலவே கோபாலியை சுரண்டி அம்மணியை விட செளகரியமாக வாழந்திருக்க முடியும்.பச்சையப்பனை ஒன்று துரத்தியிருக்க முடியும் அல்லது அடிமையாக உடன் வைத்திருக்க முடியும்.அவள் தனது நிலைமை,பச்சையப்பனின் வாழ்க்கை,கோபாலியின் தவிப்பு ஆகிய மூன்றையும் கணக்கில் கொண்டு வேலையை விடும் முடிவுக்கு வருகிறாள்.இத்தனைக்கும் அவளுக்கு கோபாலி மீது அசூயை இல்லை.இது அம்மணி மிகத் தீவிரமாக வெட்கம் அடையச் செய்கிறது.அவள் தன் செளகரியமான வாழ்க்கை மீது அருவெருப்பு கொள்கிறாள்.அவள் அங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்று முடிவு செய்கிறாள்.பட்டாபி தனக்கு ஏதேனும் வேலைக்கான வழியை காட்டக்கூடும் என்று கருதுகிறாள்.அவள் முதல்முறையாக உழைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.மரகதம் கோபாலியை பற்றி சொல்லும் போது அவர் மிகவும் துன்புறுவதை பார்த்து நான் இளகிவிட்டால் என்னவாவது என்கிறாள்.அம்மணி அப்படி யாருக்காகவும் இளகுவதில்லை.சுந்தரத்தை பட்டாபி காந்தம் போல தூக்குவதை ரசிக்கிறாள்.அவள் சொல்லும் நான் எல்லோரையும் தொட்டு விட விரும்புகிறேன் என்பதில் உண்மையாக பெரிதாக ஒன்றும் இல்லை என்பதை அவளே அறிகிறாள்.ரயிலில் பென்னட் உடம்பெல்லாம் அழுகிச் சொட்டுகிற ஒரு மனிதரிடம் இதே மாதிரி செய்வீர்களா எனும் கேள்விக்கு மழுப்பலான பதிலைத்தான் அவளால் அளிக்க முடிகிறது.அவள் விரும்பும் ஆண்களுடன் உறவு கொள்கிறாள்.செளகரியமாக இருக்கிறாள்.இறுதியில் ப்ரூஸ் அவளின் முதுமை பற்றி கேட்கும் போதும் மரகதத்தோடு தன்னை ஒப்பிட்டு கொண்டும் அவற்றிலிருந்து மீள்கிறாள்.
சிறு வயது குழந்தையாக அம்மணி கண்டு மாமாவை பார்க்கும் விதம்.அந்த வயதில் உடல் மீது அவளுக்கு ஏற்படும் ஈர்ப்பு.இதை எழுதுவது அத்தனை எளிதல்ல.அதற்கு அபாரமான தைரியம் மட்டுமல்ல,அதில் உண்மை இருக்கிறது என்ற நம்பிக்கையும் இல்லாவிட்டால் அதை எழுத முடியாது.நாம் குழந்தைகளை பார்த்தால் என்னம்மா படிக்கிறே என்று கேட்கிறோம்.கன்னத்தை பிடித்து கிள்ளுகிறோம்.அபத்தமாக ஏதோ பேசுகிறோம்.குழந்தைகளின் உலகம் குறித்த எளிய புரிதல் கூட நமக்கு இருப்பதில்லை.அவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரிவதில்லை.ஒரு வயதானவருடன் பேசும் அதே தீவிரத்துடன் ஒரு குழுந்தையுடனும் பேச முடியும்.பேசும் விஷயங்கள் மாறுபடும் அவ்வளவுதான்.நமக்கு அதை எல்லாம் புரிந்துகொள்ள அவகாசம் இருப்பதில்லை.அம்மணியின் சிறு வயது பார்வை நாவலை முக்கியமாக்குகிறது.
மற்றபடி இந்த நாவல் உண்மையில் இன்னும் ஐம்பது வருடங்களில் கழித்து எந்த முக்கியத்துவத்தையும் கொண்டிருக்காது என்றுதான் தோன்றுகிறது. பெண்ணின் அகம் குறித்து அறிந்துகொள்ள விரும்பும் ஒரு குறுகுறுப்புக்கு அப்பால் நாவலில் பெரிதாக ஒன்றுமில்லை.முன்னர் இருந்தை விட பெண்ணின் அகம் குறித்த ஆணின் குறுகுறுப்பு நிறைய குறைந்திருக்கிறது.வருங்காலங்களில் இன்னும் நிறைய குறையும்.இந்த நாவலை விட உயிர்த்தேன் இன்னும் தீவிரமான நாவல் என்று நினைக்கிறேன்.
மரப்பசு - தி.ஜானகிராமன் - ஐந்தினைப் பதிப்பகம்