உத்தராயணம்






ஏழுபதுகளின் மத்தியில் வேலை தேடி அலையும் இளைஞன் ரவியின் தந்தை ஆங்கில ஆட்சியினருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடியவர்.ரவியின் பாட்டனார் காந்தியின் போராட்ட வழியில் நம்பிக்கை கொண்டவர்.ரவியின் பாட்டனார் காந்தியின் வழியில் நம்பிக்கை கொண்டிருந்தாலும் அவர் ஆயுதம் ஏந்தி போராடுபவர்களை வெறுக்கவில்லை.அந்த வழியில் செல்வது சரியல்ல என்று மட்டும் சொல்கிறார்.ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட அச்சுதன் நோயுற்று படுக்கையிலிருக்கிறார்.அச்சுதனுடன் இணைந்து போராடிய குமாரன் மாஸ்டரை ரவி அடிக்கடி சந்திக்கிறான்.குமாரன் மாஸ்டர் முகமூடிகளை செய்கிறார்.இன்று அவை எளிதாக சந்தையில் கிடைக்கிறது என்கிறான் ரவி.
இன்று காந்திய,மார்க்ஸிய சிந்தனைகளின் முகமூடியை அணிந்திருக்கும் சமூகத்து மனிதர்களை சந்தித்தபடியே இருக்கிறான் ரவி.தன் கல்லூரியில் உடன்படித்தவன் ஒருவன் இப்போது தொழிற்சங்கத் தலைவனாக இருக்கிறான்.அவன் தன் தொடர்புகளை சொல்லியபடியே இருக்கிறான்.ஆயுத போராட்டங்களை பற்றி பேசும் மற்றொருவனை சந்திக்கிறான்.அவன் தான் இன்னும் பணி நிரந்தரம் பெறாததால் தன்னால் விடுப்பு எடுக்க முடியவில்லை என்கிறான்.தன்னுடைய கல்லூரியில் ஜூனியராக இருந்தவன் இவனை கண்டுகொள்கிறான்.அவன் மருத்துவ பிரதிநிதியாக இருக்கிறான்.அவனுடன் அறைக்கு செல்கிறான்.அவன் ரவியை மாணவ காலத்தில் பார்த்து வியந்ததை சொல்கிறான்.இருவரும் குடிக்கிறார்கள்.கஞ்சா அடிக்கிறார்கள்.பெண்களிடம் அழைத்து செல்கிறான்.அவனால் எதிலும் ஒன்ற முடியவில்லை.லட்சியமின்மை நிரம்பிய உலகம் ஒருபுறம்.அதனால் உருவாகும் சிதைவுற்ற வாழ்க்கை மறுபுறம்.அவன் இரண்டிலிருந்தும் விலகுகிறான்.

தன் அன்னையிடம் ஒருமுறை விடுதலை போராட்ட வீரர் ஓய்வுதியத்தை அவள் பெற்றிருக்க வேண்டும் என்கிறான். திசைகளற்று அலைகிறான்.ஒரு காட்டில் மூதாட்டி ஒருவள் நெருப்பூட்டி குளிர்காய்கிறாள்.அவள் அருகில் அமர்பவன் தன்னிடம் இருக்கும் முகமூடியை நெருப்பில் எறிகிறான்.ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட அச்சுதன் இறந்துபோகிறார்.அந்த காலம் முடிவடைந்துவிட்டது.காந்திய,மார்க்ஸிய சித்தாந்தங்களை தீவிரமாக மக்கள் ஏற்றுக்கொண்ட காலம் கடந்துவிட்டது.அது அச்சுதன் போல நோயுற்று இறந்துவிட்டது.இனி அந்த இறந்தகாலத்தின் முகமூடிகளை அணிந்துகொண்டு திரியமுடியாது என்று உணரும் ரவி அச்சுதன் உடலைப் போலவே அதை நெருப்பில் கொளுத்துகிறான்.அவன் அந்த மூதாட்டியின் வரலாற்றுக்கு முன்னான களங்கமற்ற சிரிப்பை எதிர்கொள்கிறான்.அவன் லட்சியமின்மையை அப்படியாக எதிர்கொண்டு வரலாற்று முன்பான நிஷ்களங்கத்தை அடைகிறான்.

ரவியின் தொடர்ச்சிதான் எஸ்தப்பன்.உத்தராயணம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய சூரியனின் பயணம்.பிஷ்மர் இந்தக் காலத்தில்தான் மரணமடைய வேண்டும் என்று காத்திருந்து மரணமடைந்தார்.குளிர் காலம் முடிந்து வசந்த காலம் துவங்குகிறது.மலையாளத்தில் எண்பதுகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் பெரும்பாலும் ஒளிப்பதிவு மிகவும் சுமாராக இருக்கும்.அந்தக் கதையை நகர்த்தி செல்வதற்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும்.பத்மராஜன் படங்களில் கூட நாம் இதை பார்க்கலாம்.ஆனால் அரவிந்தனின் இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவு அழகாக இருக்கிறது.ஷாட்கள் கச்சிதமாக முடிவு செய்யப்பட்டு சரியாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.நேர்த்தியான ஒளிப்பதிவு.கச்சிதமான ஷாட்கள்.அற்புதமான பின்னணி இசை.அரவிந்தன் ராபர்ட் பிரஸ்ஸான் திரைப்பட பள்ளியை சேர்ந்தவர் என்று சொல்லலாம்.மிக மெதுவாக செல்லும் காட்சி அமைப்புகள்.நாடகத்தனமான அல்லது யதார்த்தமான முக பாவனைகளை காட்டாத நடிப்பு.அரவிந்தனிடம் தன் திரைப்படத்தின் மீதான முழு கட்டுப்பாடு இருக்கிறது.உத்தராயணம் அவரின் முதல் படம்.ஆனால் அந்த சுவடே இல்லை.அரவிந்தன் இந்திய சினிமாவின் இயக்குனர்களில் முதன்மையானவர்.