ஆத்மாநாம்
கவிதைகள் தொகுப்பை பற்றி கல்யாணராமன் எழுதியுள்ள
கட்டுரையின் முக்கிய
பிரச்சனை அதன் தொனிதான்.மிகப் பெரிய பிழை நிகழ்ந்துவிட்டதாகவும் அது
உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற அந்த தொனியில் சிக்கல் உள்ளது.
ஆத்மாநாம் கவிதைகளை 1989 முழுதாக பதிப்பிக்கிறார் பிரம்மராஜன்.பின்னர் அது
2002யில் காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வருகிறது.கிட்டத்தட்ட மூன்று பத்தாண்டுகள் கழித்து அதன் பிழைகளை கல்யாணராமன்
பட்டியலிடுகிறார்.பட்டியலிடும் போது பெரும் தவறு நிகழ்ந்துவிட்டது என்பது
போல பதற்றமடைகிறார்.
சிற்றிதழ்களில் வெளியான ஆத்மாநாம்
கவிதைகள்,காகிதத்தில் ஒரு கோடு என்ற 1981 ஆண்டு வெளியான தொகுப்பு,
பிரம்மராஜன் தொகுத்து 1989 ஆம் ஆண்டு வெளியிட்ட தொகுப்பு, பிரம்மராஜன் 2002
யில் வெளியிட்ட காலச்சுவடு தொகுப்பு இவற்றிற்கு இடையிலான விடுபடல்கள்,
மாற்றங்கள், பிழைகள், திருத்தங்கள் ஆகியவற்றை பட்டியலிடுகிறார்.
ஆத்மாநாமின் கையெழுத்து பிரதி ஏதேனும் கல்யாணராமனிடம் இருக்கிறதா என்று
தெரியவில்லை.அதையும் ஒரு தரப்பாக எடுத்துக்கொள்ளலாம்.இவைகளை எல்லாம்
தரவுகளாக வைத்து காலவரிசைப்படி செம்பதிப்பு வெளியிடலாம்.ஆனால் இதில் எதை
கல்யாணராமன் Frame of Reference ஆக வைத்துக்கொள்வார்.அவரே ஆத்மாநாம் 156
கவிதைகள் எழுதியிருக்கிறார்.ஆனால் 147 கவிதைகள்தான் பிரசுரமாகியிருக்கிறது
என்கிறார்.அப்படியென்றால் Frame of Reference ஆக அவர் முன்வைப்பது
பிரம்மராஜனின் தொகுப்பை.
அப்படியென்றால் பிரம்மராஜனின் தொகுப்பை
அவர் இன்னும் சரியான பதிப்பாக கொண்டு வர முனைகிறார் என்பதுதானே
அர்த்தம்.அவர் சூனியத்திலிருந்து ஆத்மாநாம் கவிதைகளை கொண்டுவரப்
போவதில்லை.அவன் பத்து மைல் தூரம் ஓடினான் என்ற வரியில் அவன் எங்கிருந்து
பத்து மைல் ஓடினான் என்பதும் இருக்கிறது.நிலையான,ஸ்திரமான ஒரு
இடத்திலிருந்துதான் அவன் பத்து மைல் ஓடுகிறான்.சூனியத்திலிருந்து அல்ல.
பதிப்பித்தல் என்பது தனிநபர் செயல்பாடு அல்ல என்கிறார்.ஆத்மாநாமை ஒரு
வாசகன் ஏன் பிரம்மராஜன் விரும்புவது போல வாசிக்க வேண்டும் , அதை ஆத்மாநாம்
எழுதியது போலவே வாசிக்கட்டுமே என்கிறார்.பிரம்மராஜனுக்கும் ,
ஆத்மாநாமுக்கும் இடையிலான உரையாடல்கள், கடிதங்கள் இவற்றையும் கணக்கில்
கொண்டால்தான் அதையும் சொல்ல முடியும்.முதலில் ஒரு விஷயத்தை அவர் உணர
வேண்டும்.இங்கு எந்த அநீதியும் நிகழவில்லை.ஒருவர் மிகுந்த அர்ப்பணிப்புடன்
கொண்டுவந்த ஒரு தொகுப்பில் பிழைகளை சுட்டிக் காட்டும் போது அவர் அதை
இன்முகத்துடன் ஏற்பார் என்று சொல்ல முடியாது.அவர் ஒரு கட்டத்தில்
மெளனமாகிவிடுவார்.பிரம்மராஜன் அதையே செய்திருக்கிறார்.செம்பதிப்பை கொண்டு
வரட்டும்.இதுவரை ஆத்மாநாமை அறிந்திராத வகையில் புதிய வெளிச்சத்தை அந்த
தொகுப்பு ஆத்மாநாம் மீது செலுத்தட்டும்.
ஆனால் அதில் மூலத்தொகுப்பு
பிரம்மராஜனின் தொகுப்பு என்று இருக்க வேண்டும் என்றே ஒரு வாசகனாக நான்
ஆசைப்படுகிறேன்.மற்றும் பின்னினைப்பாக சிற்றிதழ்களில் வெளியான ஆத்மாநாம்
கவிதைகள், 1981 ஆம் ஆண்டு வந்த தொகுப்பு, 1989 ஆம் ஆண்டு வந்த தொகுப்பு ,
2002 வந்த தொகுப்பு – இதில் 2002 யில் தொகுப்பிலிருந்து மாற்றிய,
திருத்தியவற்றை பட்டியலிட வேண்டும்.அதன் மூலமாக உங்களின் Frame of
Reference பிரம்மராஜன் என்பதை அங்கீகரியுங்கள்.
இத்தகைய
அர்ப்பணிப்பான செயல்களால் நம் சூழலில் ஒருவர் எதை பெறப்போகிறார்.பணம்,புகழ்
எதுவுமே இல்லை.ஒரு திருப்தியும் மகிழ்ச்சியும் கர்வமும்தான்.கல்யாணராமனின்
இந்த கட்டுரை பிரம்மராஜனின் அந்த திருப்தியை, மகிழ்ச்சியை, கர்வத்தை
அசைக்கிறது.அது பிழை என்று நினைக்கிறேன்.அப்படி நிகழக்கூடாது.அவ்வளவுதான்.