ஜானி திரைப்படத்தில் ஜானியின் கதாபாத்திரமும் வித்யாசாகரின்
கதாபாத்திரமும் அநேகமாக ஒன்றுதான்.ஜானிக்கும் வித்யாசாருக்கும் இருக்கும் ஒரு வித்யாசம்
இசை.வித்யாசாகர் ஒரு பெரிய ஹோட்டலில் பார்பராக இருக்கிறான்.மலை மீது தனியாக ஒரு வீட்டில்
செளகரியமாக வாழ்கிறான்.பெற்றோர் , சுற்றோர், காதலி , நண்பர்கள் யாருமில்லை.ஆனால் அவன்
கோழிகளோடு தூங்கி அவைகளோடே எழுந்து அதன் முட்டையை உடைத்து குடித்துவிட்டு தன் நாளை
ஆரம்பிக்கிறான்.மறுபுறம் தன் தந்தையை
தன்னுடைய தந்தைதான் என்று சொல்ல இயலாத ஜானி தன் அன்னையின் மரணத்திற்குபின் தான் யாருமில்லை
என்பதை உணர்கிறான்.அவனுடைய தந்தை கடனால் அடைந்த அவமானத்திலிருந்து அவரை மீட்க கீழ்நோக்கிய
பயணத்தை மேற்கொள்கிறான்.அப்போது அவனின் இருப்பை அர்த்தப்படுத்தும் ஒரே விஷயமாக அவன்
அன்னை வழங்கிசென்ற இசை அவனோடு இருக்கிறது.அவள் சிதார் வாசிப்பதை அருகிலிருந்து கேட்டு
வளரும் ஜானி அதன் வழி இந்த உலகத்தின் மனிதர்கள், கேலி, அவமானம் , துயரத்திற்கு அப்பால்
ஒரு அரூபமான இஷ்டலோகத்தை உருவாக்கி கொள்கிறான்.
உண்டு உறங்கி சொரூப வாழ்க்கை வாழ்ந்து வரும் வித்யாசாகரின் வாழ்வில்
ஒரு பெண் வருகிறாள்.அவளை மிகவும் தயங்கி பின்னர் வீட்டு வேலைக்கு சேர்த்துக்கொள்கிறான்.நம்
வீட்டில் நாம் உபயோகப்படுத்தும் பொருட்கள் மீது நமக்கு காலப்போக்கில் ஒரு பற்றுதல்
ஏற்பட்டுவிடும்.அதுபோல வித்யாசாகருக்கும் தான் அடிக்கடி பேசிக்கொண்டிருக்கும் அந்த
பெண் மீது ஒரு பற்று ஏற்படுகிறது.அவன் அவளின் எந்த செயலையும் கண்டு பரவசம் அடைவதோ ஈர்ப்பு
கொள்வதோ இல்லை.மாறாக ஒரு முறை துணிக்கடையில் அவள் புடவைகளை தேர்தெடுக்கையில் ஒன்றிலிருந்து வேறொன்றுக்கு சஞ்சலித்துக்கொண்டிருப்பதை
பார்த்து அவன் வாழ்வில் ஒன்றை விட மற்றொன்று எப்போதும் சிறப்பாகவே இருக்கும் நாம் தான்
ஒரு கட்டத்திற்கு பிறகு தேர்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பான்.ஆக அவனுக்கு அவள்
மீது காதலோ, அன்போ உருவாகுவதில்லை.நாம் சிறுவயதிலிருந்து நம் பெற்றோரை , உறவினர்களை,
உடன்பிறந்தவர்களை பார்த்து வளர்கிறோம், கூட படிப்பவர்கள் , வேலை செய்பவர்களை நண்பர்களாக்கி
கொள்கிறோம்.இப்படித்தான் நமது உறவும் சுற்றும் இருக்கிறது.இவர்களில் பெரும்பாலோர் மீது
நமக்கு அன்போ காதலோ இருப்பதில்லை.ஆனால் அவர்களுக்கும் நமக்கும் இடையில் ஒரு பற்று உருவாகிவிடுகிறது.நாம்
அவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம், அவர்கள் நம் மீது அன்பு செலுத்துகிறார்கள், நாம்
அவர்களை புண்படுத்துகிறோம், நம்மை அவர்கள் புண்படுத்துகிறார்கள்.இப்படியாக செல்கிறது
நம் உறவுகள்.இந்த மனிதர்களோடான நம் உறவு ஒரு அஃறிணை பொருளோடான உறவை போன்றதுதான்.உதாரணமாக
உங்கள் மடிக்கணிணி உடைந்துவிட்டதால் நீங்கள் அடைந்த துயரம் உங்களோடு படித்த நண்பன்
ஒருவன் இறந்த செய்தி கேட்டு அடைந்த துயரத்தை விட அதிகமாக இருந்திருக்கலாம்.ஏனேனில்
மடிக்கணிணியோடான நம் பற்று காலப்போக்கில் அதிகமாகிவிட்டது, நண்பன் வாழ்க்கைபோக்கில்
விலகிச்சென்றுவிட்டான்.வித்யாசாகருக்கும் அந்த பெண் மீது இப்படியாக ஒரு பற்று ஏற்படுகிறது.அவளை
திருமணம் செய்துகொள்ளலாம் என்று நினைக்கிறான்.ஆனால் அவள் வேறு ஒருவனை தேர்வு செய்கிறாள்.அவளை
தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக வித்யாசாகர் சொல்லும் போது அவன் பார்பர் என்பதால்
தனக்கு அதில் விருப்பமில்லை என்கிறாள்.அவள் அவனிடமிருந்து நிரந்தரமாக விலகிச்சென்றுவிடலாம்
என்று முற்படும் போது அவளையும் அவள் தேர்வுசெய்தவனையும் வித்யாசாகர் கொன்றுவிடுகிறான்.
இங்கு அந்த பெண் வித்யாசாகருக்கு
செய்தது தவறா என்றால் இல்லை என்பதே உண்மை.நம் இந்திய சமூகத்தில் ஒரு ஆண் தான் குடும்பத்தை
உருவாக்குவதாக நினைத்துக்கொள்கிறான்.பெண் அவன் உருவாக்கும் குடும்பத்தில் தன்னை இணைத்துக்கொள்வதாக
நினைத்துக்கொள்கிறாள்.இயல்பாகவே தான் இணையும் குடும்பம் தனக்கு செளகரியமானதாக இருக்க
வேண்டும் என்று அவள் எண்ணுகிறாள்.அது தன் தேர்வில் உள்ளது என்கிற போது அவள் துணிகிறாள்.ஒரு
ஆண் பெரும்பாலும் தன்னை சமயங்களில் சமூகத்தின் தனிமனிதனாக கற்பனை செய்துகொள்கிறான்.பெண்
அவளை எப்போதும் குடும்பமாகவே கருதுகிறாள்.தனிமனுஷியாக அல்ல.தன் குழந்தைகளுக்காக அவள்
எதையும் பொறுத்துக்கொள்வாள்.பெரும்பாலும் நம் இந்திய குடும்பங்களில் அன்னைகளை குழந்தைகள்
மதிப்பதே இல்லை.இரண்டாம் தர குடிமக்கள் போலத்தான் அவர்கள் நடத்தப்படுகிறார்கள்.அவள்
தன் கணவனும் குழந்தைகளும் தனக்கு இழைக்கும் அத்தனை கொடுமைகளையும் சகித்துக்கொள்கிறாள்.ஏனேனில்
அவள் வரையில் அவள் தனியான ஒரு பெளதிக இருப்பு இல்லை.குடும்பமே அவள் அடையாளம்.அவளே குடும்பம்.ஆனால்
அதே பெண் தன் குடும்பத்திற்கு வெளியே நடந்துகொள்ளும் விதம் பெரிய அளவில் வித்யாசமானது.உதாரணமாக
மத்திய மத்தியதர பெண்கள் தங்கள் வீட்டில் வேலைக்கு வரும் பெண்கள் மீது செலுத்தும் அதிகாரம்
சமயங்களில் பயங்கரமானது.பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் வீரபத்ரபிள்ளை இரண்டு நாட்கள்
பசியில் மிகவும் சோர்வாகி வெளி வாசலில் அமரந்திருக்கும் ஒரு பெண்ணிடம் பசிக்கிறது என்று
கெஞ்சுவான்.அதற்கு அவள் ஒரே வார்த்தை தான் சொல்வாள் – ‘அதுக்கு’. ‘அதுக்கு’ என்ற ஒரே
வார்த்தை அவனை மிகவும் பயங்கரமாக துரத்தும்.ஜெயமோகன் அந்த மன அவஸ்தையை மிக அற்புதமாக
சித்தரித்திருப்பார்.பெண் என்பது கருணையின் வடிவமல்லவா அவள் எப்படி பசியால் வாடுபவனை
பார்த்து ‘அதுக்கு’ என்று கேட்க முடியும் என்பதை வீரபத்ரபிள்ளையால் புரிந்துகொள்ளவே
முடியாது.இதே பெண் தன் குழந்தைகள் ஒரு வேளை பசித்து இருந்தால் துடித்துபோயிருப்பாள்.பெண்கள்
பெரும்பாலும் ஒரு உறவில் அதிகாரத்திற்கு கீழ்படிபவர்களாக இருக்க விரும்புகிறார்கள்
அல்லது அதிகாரம் செலுத்தக்கூடியவர்களாக இருக்க விரும்புகிறார்கள்.பெரும்பாலும் ஒரு
சமத்துவமான உறவில் அவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று குழம்பிவிடுகிறார்கள்.
அம்பிகாபதி(ராஞ்சனா) படத்தில்
குந்தன் ஸோயா என்ற முஸ்லீம் பெண்னை சிறுவயதிலிருந்தே விரும்புகிறான்.ஆனால் அவள் அவனை
எப்போதும் பொருட்படுத்துவதேயில்லை.அவள் ஒரு முறை ஏதேர்ச்சையாக சந்திக்கும் அக்ரம் என்ற
சீக்கிய மதத்தை சேர்ந்தவனை நேசிக்க ஆரம்பிக்கிறாள்.குந்தன் அவளுக்காக நிறைய உதவிகள்
செய்திருக்கிறான்.ஆனால் அவள் வீட்டில் அவளை தாங்கள் தேர்வு செய்த மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்ள சொல்கிற போது அவள் நான் குந்தன்
மாதிரி ஒரு பிச்சைகாரனை திருமணம் செய்துகொண்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட வேண்டுமா
என்று கேட்கிறாள்.இங்கே அக்ரம் கல்லூரியில் மாணவர் தலைவனாக இருக்கிறான்.லெளகீக வாழ்வில்
வலுவானவனாக இருக்கிறான்.ஒரளவு ஜனநாயக பண்புகள் கொண்டவனாகவும் இருக்கிறான்.எதிர்காலத்தில்
அரசியல் அதிகாரத்தை நோக்கி செல்லக்கூடியவன்.அவனை தேர்வு செய்வதன் மூலம் அவளும் அந்த
அதிகாரத்தை எதிர்காலத்தில் அடையக்கூடும்.இதை அவள் திட்டமிட்டு செய்யவில்லை.அவனுடன்
பழகும் சிறிது நேரத்திலேயே அவளுக்கு அவனை பிடித்துவிடுகிறது.அவள் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறாள்.அக்ரம் இறந்துவிடுகிறான்.ஆனால் அவள்
எப்போதுமே குந்தனை காதலிக்கப்போவதில்லை.அவள் அக்ரம் போன்ற ஒருவனையே தன்வாழ்வில் திருமணம்
செய்துகொள்வாள்.பதினாறு வயதினிலே படத்தில் மயில் முதலில் மருத்துவனை நேசிக்கிறாள்.பின்னர்
அந்த மருத்துவன் அவளை விட்டு சென்றுவிடுகிறான்.வீட்டில் பார்க்கும் சம்மந்தங்களையும் பரட்டை
கலைத்துவிடுகிறான்.இப்போது அவள் சப்பானியை தேர்கிறாள்.இங்கே மறுபடி அந்த மருத்துவன்
வந்து நான் தவறு செய்துவிட்டேன் இப்போது உன்னை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்
என்று சொன்னால் அவள் தடுமாறக்கூடும்.ஏனேனில் மருத்துவனை அவள் தேர்வு செய்வதன் மூலம்
அவள் நகர வாழ்க்கையை , அதிகாரத்தை , வேலையாட்களை, செளகரியத்தை என்ற அனைத்தையும் அடைகிறாள்.ஒரு
எளிய தேர்வு அவள் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றக்கூடிய ஒன்றாக இருக்கும் போது அவள்
நிச்சயம் தடுமாறத்தான் செய்வாள்.
இங்கே அம்பிகாபதியில் வரும்
குந்தன் போல , வித்யாசாகரை போல ஒரு காதலால் அல்லது பற்றால் தங்களை அழித்துக்கொள்ளும்
நிறைய ஆண்களை பார்க்கிறோம்.உண்மையில் ஆண்களால் தன்னை நிராகரிக்கும் பெண்னை மறந்து வாழமுடியாதா?
நம் சமூகத்தில் ஒரு ஆண் குடும்பத்தை உருவாக்குபவனாக இருக்கிறான்.ஒரு முறை குந்தனுக்கு உதவுவதற்காக
கேஸ் சிலிண்டரை தரையிலிருந்து எடுத்து ரிக்ஷாவில் வைக்கிறான் அக்ரம்.அவன் சென்ற பின் அதே சிலிண்டரை
கீழே வைத்து மறுபடியும் ரிக்ஷாவில் ஏற்றுகிறான் குந்தன். ஆக , ஒரு பெண் தன்னை நிராகரிக்கும்
போது அவன் தான் குடும்பத்தை உருவாக்கும் தகுதியற்றவன் என்று கருதுகிறான்.அது அவனது
அகங்காரத்தை சீண்டுகிறது.திரெளபதி துரியோதனன் தடுமாறி கீழே விழுவதை பார்த்து கேலியாக
சிரிப்பதுதான் துரியோதனனின் அகங்காரத்தை சீண்டுகிறது.தன் அகங்காரம் சீண்டப்படும்
குந்தன் அவளிடம் தன்னை ஏற்றக்கொள்ளும்படி மன்றாடுகிறான்.மறுபுறம் அதே அகங்காரத்தால்
வித்யாசாகர் அந்த பெண்னை கொல்கிறான்.நம் சமூகத்தில் ஆண்கள் காதல் தோல்வியால் தற்கொலை
செய்து கொள்வது, கொலை செய்வது, ஆசிட் ஊற்றுவது, அவதூறு செய்வது எல்லாம் அந்தப்பெண் தன்
துணைவி ஆகாததின் வலியால் அல்ல.அது அகங்காரத்தாலும் அது ஏற்படுத்தும் வன்மத்தாலும் தான்.என்னை
பொறுத்தவரை ஒரு ஆண் ஒரே நேரத்தில் பத்து பெண்களை மானசீகமாக காதலிக்க முடியும்.ஒரே பெண்ணிற்காக
தன் வாழ்வை அழித்துக்கொள்ளும் அளவுக்கு எந்த பெண்ணும் அத்தனை முக்கியமில்லை என்பதை
ஆண் அறிவான்.ஆனால் நம் சூழலில் காதலால் ஆண்கள் தங்கள் வாழ்க்கையை தொலைப்பதற்கு அவர்களுக்கு
வேறு பெண் கிடைப்பதில்லை என்பதுதான் முக்கிய காரணம்.வின்னைத்தாண்டி வருவாயா படத்தில்
கார்த்திக் கதாபாத்திரம் எப்போதோ முடிந்துபோன காதலுக்காக மூன்று வருடங்கள் கழித்து
வேறொரு பெண்னை நிராகரிக்கும் காட்சி வரும்.மிக அபத்தமான காட்சி.அப்படியெல்லாம் ஒரு
அழகான பெண் வந்து காதலை தெரிவிக்கும் போது எந்த ஆணும் நிராகரிக்க மாட்டான்.அப்படி நிராகரித்தால்
அவன் நினைவுகளில் வாழும் ஒரு முட்டாள்.அவ்வளவுதான்.
இங்கே வித்யாசாகர் அந்த
பெண்னை கொலை செய்வதற்கு அவள் அவனை நிராகரித்து வேறு ஒருவனை தேர்வு செய்வது
காரணம் அல்ல.அதை அவன் எளிதில் மறந்துவிடுவான்.அவன் நன்றாக குடித்துவிட்டு இரண்டு நாட்கள்
உறங்கி எழுந்தால் எல்லாம் சரியாகிவிடும்.ஆனால் அவள் வேறு ஒருவனை தேர்வு செய்வதன் மூலம்
ஒரு கேலிப்புன்னகையை அவன் மீது செலுத்துகிறாள்.அந்த சீண்டலும், அவன் தனிமையும் வேறு
ஒரு பெண் அவன் வாழ்வில் வருவதற்கான சாத்தியமின்னையும்தான் அவனை கொலை செய்ய வைக்கிறது.
வம்ச விருக்ஷா என்ற எஸ்.எல்.பைரப்பாவின்
நாவலை முன்வைத்து கிரிஷ் கர்னாடும் பி.வி.காரந்தும் இணைந்து இயக்கிய படத்தில் தன் மகன்
இறந்துவிட்டபின் தன் மருமகளை மாமனார் படிப்பதற்காக கல்லூரிக்கு அனுப்புவார்.அவளுக்கு
ஒரு மகன் இருப்பான்.கல்லூரியில் அவள் ஒருவரை காதலிப்பாள்.அவளை திருமணம் செய்துகொள்ள
விரும்புவதாக மாமனாரிடம் சொல்லும்போது அவர் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் பொறுப்பு வம்சவிருக்ஷம்
தான் மற்றபடி நம் தனிப்பட்ட ஆசைகளுக்கும் கனவுகளுக்கும் குடும்பம் என்ற அமைப்பில் இடமில்லை.உன்
மகனை ஒரு சான்றோனாக வளர்த்து வம்சத்தை விருக்ஷம் செய்வதே உன் பணி, உன் ஆசைகளை துறந்துவிடு
என்பார்.ஆனால் அவள் தான் விரும்புவரை திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்துவிடுவாள்.அப்போது
அவர் தன் பேரனை அவளோடு அனுப்ப முடியாது என்று சொல்லிவிடுவார்.கதை அதன்பின் வேறு தளத்தில்
பயணிக்கும்.இங்குள்ள முக்கிய விஷயம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அவர்கள் குடும்பம்
என்ற அமைப்பில் ஆற்ற வேண்டிய பங்களிப்பு , அவர்களின் பொறுப்பு என அணைத்தையும் அவர்கள்
சிறுவயதிலிருந்தே கற்றே வளர்கிறார்கள்.இன்றைய பெண் விரும்புவதும் ஜனநாயக பண்புகளை கொண்ட
மரபான ஆண்தான்.நேற்றைய பெண் ஒரு லட்சியவாத ஆணை ஏற்றாள்.இன்றைய பெண் அதில் கொஞ்சம் ஜனநாயக
பண்புகள் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.இதில் உள்ள முக்கிய செய்தி இது ஒரு பெண்ணின்
பிரச்சனையோ ஆணின் பிரச்சனையோ அல்ல.நம் சமூகம் குடும்பம் என்ற அமைப்பின் லட்சியவடிவத்திற்காக
உருவாக்கிய விழுமியங்களின் சிக்கல்.இந்த சிக்கலை புரிந்துகொண்டு இத்தனை பெரிய உலகில்
ஒரு பெண் மட்டுமே தன் இருப்பை நியாயப்படுத்தக்கூடியவள் இல்லை என்ற எண்ணம் சாத்தியப்பட்டிருந்தால்
வித்யாசாகர் கொலை செய்திருக்கமாட்டான்.குந்தன் கொல்லப்பட்டிருக்கவும் மாட்டான்.
வருங்காலத்தில் குடும்பம் என்ற அமைப்பு சீர்குலையலாம்.அப்போது
ஆண் பெண் உறவுகளில் பிரச்சனைகள் இல்லாமல் போகலாம்.இயந்திரங்களும் Artificial
Intelligenceயும் வளர்ந்து வரும் சூழலில் நாளை ஆண்களும் பெண்களும் இயந்திரங்களை தங்கள்
வாழ்க்கை துணையாக தேர்தெடுக்கலாம்.அப்போது இயந்திரங்கள் சிந்திக்கின்றன, அவைகளுக்கு
உணர்வு இருக்கிறது, அவைகளை அடிமைகள் போல் நடத்தக்கூடாது என்று இயந்திரவாதிகள் போர்க்கொடி
தூக்கலாம்.அப்போது பெண்ணியவாதிகளும் இயந்திரவாதிகளும் சண்டை போட்டுக்கொள்ளலாம்.ஆண்கள்
நிம்மதியாக தூங்கி எழுந்து கோழியின் முட்டையை அப்படியே உண்டு தங்கள் நாளை ஆரம்பிக்கலாம்.
கீழ்மை நோக்கிய பயணத்தை
மேற்கொள்ளும் ஜானி அர்ச்சனா என்ற பாடகியை சந்திக்கிறான்.அவள் அவனது துயரத்தை அவனது
அன்னையின் துயரத்தை புரிந்துகொள்கிறாள்.இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள்.அர்ச்சனா ஒரு
லட்சிய வடிவம்.பொதுவாக நம் சமூகத்தில் சீதை ஒரு முக்கிய தொன்மம்.சீதையின் வாழ்வு பொறுமையும்
கண்ணீரும் பேரமைதியும் துயரமும் கொண்டது.அவள் நிலையானவள்.அர்ச்சனா அத்தகைய ஒரு லட்சிய
வடிவமாக வருகிறாள்.இதை பல்வேறு கலைஞர்களில் பார்க்கலாம்.எதன் மீதும் நம்பிக்கை அற்ற
புதுமைப்பித்தன் கதைகளில் ஒரு பெண் குழந்தை மறுபடி மறுபடி வருகிறாள்.ஜெயமோகன் கதைகளில்
நீலி வருகிறாள்.அர்ச்சனா ஜானியை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாள்.ஜானியும் விரும்புகிறான்.பின்னர்
ஜானி வித்யாசாகர் செய்த கொலையால் தலைமறைவாகிறான்.அவன் தவறான வழியில் ஈட்டிய பணம் குறித்த
அனைத்து விபரங்களையும் அர்ச்சனா அறிந்துகொள்கிறாள்.அவள் அவனிடம் ஏமாந்தவர்களின் பணத்தை
அவர்களுக்கு திருப்பி அளிக்கிறாள்.அவள் அவனை வெறுக்கவில்லை.அவனை விட்டு விலகாமல் அவன்
நினைவில் வாழ்கிறாள்.அவள் நிலையானவளாக பொறுமையானவளாக துயரத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவளாக
இருக்கிறாள்.இறுதியில் வித்யாசாகர் எல்லா குற்றங்களையும் ஏற்றுக்கொண்டு ஜானியை காப்பாற்றுகிறான்.
விசு படங்களில் வருவதுபோல
ஒரு ஆணின் வாழ்வை சீரழிப்பதும் சீராக்குவதும் ஒரு பெண்தான் என்ற தொனியில் இந்த படம்
அமையவில்லை என்பதே ஜானி படத்தின் முக்கிய தளம்.ஜானி இசையின் வழியாக தான் எத்தனை கீழ்மையான
வாழ்வை வாழ்ந்தாலும் ஒரு அரூப தளத்தில் மேன்மையான
வாழ்வை எதிர்நோக்குபவனாக இருக்கிறான்.அந்த லட்சிய வடிவின் பெளதிக இருப்பாக அர்ச்சனா
அவன் வாழ்வில் வருகிறான்.அவன் இசையால் தன்னை இந்த கோரமான உலகிலிருந்து காத்துக்கொள்கிறான்.
ஜானி ஒருமுறை தன் தந்தையிடம் Johnny is nobody என்று சொல்வான்.தான் யாருமில்லை என்பவன்
எந்த குற்றங்களையும் செய்யலாம்.ஜானி குற்றங்கள் செய்கிறான்.இசை அவனை குற்றங்களிலிருந்து
விடுவிக்கிறது.அவன் இருப்பை அர்த்தப்படுத்துகிறது. கொதிநெருப்பில் நிற்பவனை இசை அவன்
அன்னையின் கருவறைக்குள் இழுத்துச்செல்கிறது.அவன் பாதுகாப்பான ஒரு இடத்தை அடைந்துவிடுகிறான்.அதன்பின்
அவன் யாருமற்றவன் அல்ல.அவனுடைய பாதங்கள் அதன் நிழலை அடைகிறது.
ரஜினிகாந்த் நடித்த சிறந்த
படங்களின் பட்டியலில் எப்போதும் முள்ளும் மலரும் திரைப்படமும் ,ஜானியும் இருக்கும்.ஜானியில்
செனோரிட்டா பாடலில் யாருமில்லாத தனியாளாக வாழும் வித்யாசாகரின் வாழ்வில் ஒரு பெண் வருவதால்
அவன் அடையும் பித்தநிலையின் மகிழ்ச்சி அற்புதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.ஒரு குழந்தையின்
குதூகலத்தை அவன் அடைவதை அந்த பாடலில் நாம் கண்டுகொள்ளலாம்.படத்தில் பல இடங்களில் ஜானி
Music is life giver என்ற டீ சர்ட் அணிந்து மலையில் புற்களின் மீது ஒடும் காட்சி வரும்.பேரமைதியின்
நிலத்தை கண்டுவிட்டவனின் சித்திரம் அந்த காட்சிகளில்
தெரியும்.இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் மிக அற்புதமாக நடித்திருப்பார்.வித்யாசாகரின் தொங்கு மீசை
, அவன் பைப் பிடிப்பது , அத்தனையும் மிகவும் ஸ்டைலாக இருக்கும்.படத்தின் குறை இறுதிக்காட்சி.அத்தனை
புயலில் அந்த பாடல் ஏதோ ஒரு வகையில் நம்பகத்தன்மையை குறைத்துவிடுகிறது.மேலும் படத்தில்
தேவையான அளவுக்குக்கூட வெளிப்புற காட்சிகள் இல்லை.எனக்கு பின்னனி இசையை கவனிக்க தெரியாது.ஆனால்
இந்த படத்தில் வரும் இசையை மட்டுமே நாம் தனியாகவே கேட்கலாம்.இளையராஜாவின் பின்னனி இசையை
பேசும் போது அவசியம் ஜானி படத்தை பேசியே தீரவேண்டும்.அதிலும் இறுதிக்காட்சியில் ஜானியும் அர்ச்சனாவும் இணையும் போது வரும் பின்னனி இசை எவரையும் அசைத்துவிடக்கூடியது.அசோக்குமார் சட்டகங்களை உருவாக்கியுள்ள விதமும் ஒளியமைப்பும் அற்புதமாக இருக்கும்.ஜானியின் அன்னை கதாபாத்திரம் மோகமுள் நாவலில் வரும் பார்வதி கதாபாத்திரத்தை நினைவுபடுத்துகிறது.தமிழில் பத்மராஜன் போல எந்தவித சிரமமும்
இல்லாமல் கதை சொல்லக்கூடியவர் மகேந்திரன் மட்டுமே.ஜானி படத்தில் ஒரிடத்தில் கூட கதை
நிற்பதில்லை.திரைக்கதை எழுதுவது எப்படி என்பதற்காக மட்டுமே ஜானி திரைப்படத்தை பார்க்கலாம்.தமிழில்
அடுத்த ஐம்பது வருடங்கள் கழித்தும்கூட ஜானி திரைப்படம் நினைவுகூறப்படும்.