ஹரியின் ஜனங்களும் தலித்துகளும்
1933ஆம் ஆண்டு இரட்டை வாக்குரிமையை
எதிர்த்து காந்தி இருபத்தியோரு நாட்கள் பூனாவின் ஏர்வாடா சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கிறார்.அங்கே
ஒரு ஹரிஜன இளைஞன் படிப்புதவி தொகை சம்மந்தமாக அவரை சந்திக்கிறான்.சந்திப்பின் மூலம்
அந்த உதவித்தொகை குறித்த உத்தரவாதத்தை பெற விரும்புகிறான்.உரையாடலின் போது அவன் கண்களில்
நீருடன் காந்தியிடம் அவர் தங்களை விட்டு சென்றுவிடக்கூடாது என்று இரைஞ்சுகிறான்.அதற்கு
அவர் நான் உங்களை விட்டு சென்று விடுவேன் என்று ஏன் சொல்கிறாய் , இதோ உனக்கு உறுதி
அளிக்கிறேன் , உண்ணாவிரதம் முடியும் திங்கட்கிழமையின் மதியப் பொழுதில் நீயே வந்து எனக்கு
ஆரஞ்சு பழச்சாறை அளித்து என் உண்ணாவிரதத்தை நிறைவு செய் , அதன் பின் நாம் உன் படிப்புதவித்தொகை
சம்மந்தமாக பேசுவோம் என்று சொல்கிறார்.ஆனால் இருபத்தியோராம் நாள் அந்த இளைஞன் காந்தியின்
உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வரவில்லை.தாக்கர்சே என்ற பெண்மனி ஆரஞ்சு பழச்சாறை அளித்து
காந்தியின் உண்ணாவிரதத்தை நிறைவு செய்கிறார்.இந்த நிகழ்வை பதிவு செய்யும் மகாதேவ் தேசாய்
பத்திரிக்கையாளர்களிடம் அந்த இளைஞன் வரவில்லை என்ற செய்தியை வலியுடன் சொல்கிறார்.அந்த
இளைஞன் மறுநாள் தேசாய்க்கு எழுதும் கடிதத்தில் தான் அன்று வந்ததாகவும் ஆனால் உள்ளே
வர அனுமதி மறுக்கப்பட்டதாகவும் சொல்கிறான்.தேசாய் அவனை நேரில் வர சொல்கிறார்.தேசாயை
நேரில் சந்திக்கும் இரண்டாவது சந்திப்பில் தான் அந்த வரலாற்று தருணம் நிறைந்த நாளில்
வரவேயில்லை என்ற உண்மையை அந்த இளைஞன் சொல்கிறான்.நான் உண்மையில் வரவேண்டும் என்றே விரும்பினேன்.ஆனால்
அந்த இறுதிநாளில் எனக்கு வருவதற்கான துணிவு இல்லை.அந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் அளவிற்கு
நான் முக்கியமானவல்ல, மேலும் அன்று நான் அங்கு வந்திருந்தால் எனக்கு அளிக்கப்படும்
முக்கியத்துவம் சிலருக்கு ஏற்படுத்தியிருக்கக்கூடிய பொறாமையும் எரிச்சலும் எனக்கு சாத்தியப்பட்டுள்ள
சிறிதையும் என்னிடமிருந்து பறித்திருக்கும் என்கிறான்.அந்த நிகழ்வில் பங்கேற்பதன் மூலமாக
தான் ஏதோ ஒரு வகையில் பணிவானவனாக கீழ்படிந்தவனாக சிறுமைபடுத்தப்படுவனாக பரிதாபத்துக்குரிய
பொருளாக மாறும் சித்திரத்தை அவன் உணர்கிறான்.அதனால் அதில் பங்கேற்பதை தவிர்க்கிறான்.தலித் இயக்கம் ஒரு உருவகமாக அந்த
நிகழ்வில் தொடக்கம் கொள்கிறது என்கிறார் டி.ஆர்.நாகராஜ்1.
|
டி.ஆர்.நாகராஜ் |
சரியாக அந்த தருணத்தில்
காந்தியின் ஹரிஜன இளைஞன் அம்பேத்கரின் தலித் இளைஞனாக மாறுகிறான்.அவன் எதிர்க்கிறான்.சுயமரியாதை
உணர்வு கொள்கிறான்.அவன் காந்திக்கு முன் பத்திரிக்கையாளர்களுக்கு முன் பணிந்து நிற்பதை
நிராகரிக்கிறான்.கிட்டத்தட்ட அதே காலத்தில் ஹரிஜன் இதழில் காந்தி தீண்டாமை ஒரு பாவச்செயல்
என்றும் ஆனால் சாதியும் தீண்டாமையும் ஒரே வகைமாதிரியானவை அல்ல என்றும் எழுதுகிறார்.இதிலிருந்து
மாறுபடும் அம்பேத்கர் அதே ஹரிஜன் இதழில் எழுதும் போது சாதிய அமைப்பு இருப்பதாலேயே தீண்டாமை
இருக்கிறது, சாதிய அமைப்பு அழிக்கப்படுவதே ஒடுக்கப்பட்டவர்களுக்கான விடுதலை என்கிறார்.தகவல்களின்
அடிப்படையிலான வரலாற்றில் அதுவே தலித் இயக்கத்தின் சரியான தொடக்கம் என்கிறார் டி.ஆர்.நாகராஜ்.இங்கு
காந்திக்கு எதிராக தன் நிலைப்பாட்டை வைப்பதின் மூலமாக அம்பேத்கர் தலித் இயக்கத்திற்கான
வரைவை உருவாக்குகிறார்.காந்தி முன்வைத்த ஹரிஜன் என்ற வார்த்தையில் அவர்கள் ஹரியின்
ஜனங்கள்.ஹிந்து மதத்தின் ஒரு அங்கம்.ஹரிஜனங்களின் இன்றைய ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலையை
காந்தி தன்னிலைப்படுத்துகிறார்.காந்தி குற்றவுணர்வு கொள்கிறார்.அந்த குற்றவுணர்வை சாதி
இந்துக்களின் குற்றவுணர்வாக மாற்றுகிறார்.அதாவது தீண்டாமைக்கு எதிராக ஒரு கூட்டு குற்றவுணர்வை
உருவாக்குகிறார்.காந்தி எல்லா பிரச்சனைகளிலும் இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்.ஹரிலாலின்
தீமை குணங்களை தன்னிலிருந்து உருவான ஒன்றாகத்தான் பார்க்கிறார்.அதே வகையில்தான் தீண்டாமை
பிரச்சனையையும் ஆராய்கிறார்.குற்றவுணர்வு கொள்ளும் சாதி இந்துக்கள் மரபை பின்பற்றும்
சாதி இந்துக்களோடு முரண்படுகிறார்கள்.இங்கே பிரச்சனை சாதி இந்துக்களுக்குள் நிகழ்கிறது.நிகழ்த்துவோரும்
எதிர்ப்போரும் அவர்களே.ஹரிஜனங்கள் இந்த சாதி இந்துக்களின் பெருந்தன்மை நிறைந்த செயல்களை
பார்த்து பணிவு கொள்ளலாம், வணங்கலாம் ஆனால் பங்கேற்க முடியாது.அங்கு அவன் ஒரு பார்வையாளன்
மட்டுமே. சாதி இந்துக்கள் குற்றவுணர்வை அடைவதற்கான பொருட்களாக ஹரிஜனங்கள் இருக்கிறார்கள்.இது
சேவை என்கிற தளத்தை அடைகிறது.சேவையை பெறுபவனின் அகங்காரம் சீண்டப்படுகிறது.அது சமதர்மத்தை
உருவாக்குவதில்லை.மாறாக அவன் மேலும் பணிவானவாக மாற வேண்டிய அவஸ்தையை உருவாக்குகிறது.அம்பேத்கரின்
தலித் ஒடுக்கப்பட்டவன்.ஒடுக்கப்பட்டவன் வன்மம் கொள்கிறான்.எதிர்க்கிறான்.உடைக்கிறான்.உருவாக்குகிறான்.சரியாக
சொல்வதென்றால் செயல் புரிகிறான்.காந்தி முன்வைத்தது சாதி இந்துக்கள் அவர்களின் பாவச்செயல்களிலிருந்து
விடுபடும் சுய தூய்மை, மாறாக அம்பேத்கர் முன்வைத்தது சுய மரியாதை.அம்பேத்கர் மூலமாக
தலித் இயக்கம் சரியான பாதையை தேர்கிறது.இன்று ஒடுக்கப்பட்ட மக்கள் தலித் என்றே அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.தலித்
என்ற சொல்லுக்கும் ஹரிஜன் என்ற சொல்லுக்கும் இன்னொரு முக்கிய வித்யாசம் உண்டு.தலித்
என்ற சொல் தத்துவத்தில சொல்லப்படும் Universal.கலாச்சார ரீதியில் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற பொதுத்தன்மை
கொண்ட சாதிகள்தான் தலித் என்ற அடையாளத்திற்குள் ஒருங்கிணைக்கப்பட்டன.அந்த அடிப்படையில்
மஹராஷ்டிராவின் மஹர்களும் தமிழ்நாட்டின் ஆதித்திராவிடர்களும் ஒரு குடையின் கீழ் தலித்
என்று ஒடுக்கப்பட்ட மக்களாக ஒன்றிணைக்கப்பட்டார்கள்.அப்படியாக தலித் என்ற அடையாளம்
உருவாக்கப்பட்டு அதன் மூலம் ஒடுக்கப்பட்டவர்களுக்கான சமூக இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.இன்று
சாதி இந்துக்கள் பிற்படுத்தப்பட்ட சாதிகள் ,மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்ற
பிரிவுகளுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள போது தலித்துகள் அட்டவணை சாதிகள் என்றே அடையாளப்படுத்தப்படுகின்றனர்.இது
சரியான அறிவியல் பார்வை.சைமன் கமிஷன் முன் ஓட்டுரிமை பற்றி அம்பேத்கர் பேசும் போது
தலித்துகளை Depressed Classes என்றே
குறிப்படுகிறார்.அம்பேத்கர் தீண்டாமை பிரச்சனையை ஒரு அமைப்பின் பிரச்சனையாக பார்த்தார்.காந்தி
அதை ஒரு தனிமனிதனின் பிரச்சனையாக பார்த்தார்.அம்பேத்காரின் பார்வை சமூகவியல் தளத்திலான
மிகச்சிறந்த தரிசனம்.
தலித் இயக்கம்
தலித்துகளின் முன்னேற்றம்
கல்வி, வேலை , பெருநகரம் என்பதில்தான் இருக்கிறது என்று அம்பேத்கர் நம்பினார்.கிராம
அமைப்பில் சாதிய கருத்தியல் உள்ளூற உறைந்திருக்கிறது.அதனால்தான் கிராம பஞ்சாயத்துகளுக்கு
காந்தி முக்கியத்துவம் கொடுத்த போது அம்பேத்கர் அதை நிராகரித்தார்.இன்று கிராம பஞ்சாயத்துகள்
ஒருவரின் குற்ற செயல்களுக்கு தீர்ப்பு வழுங்கும் அதிகாரம் அற்றவையாக இருக்க வைத்தது
ஒரு தீர்க்கதரிசியின் செயல்.ஒரு தலித் கிராமத்தில் தவறிழைக்கும் போது அது தலித்துகளின்
பிரச்சனையாக மாற்றப்படுகிறது.அதுவே சாதி இந்து தவறிழைக்கும் போது அது அந்த தனிமனிதனின்
பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.இன்றும் சாதி இந்துக்களுக்குள் திருமணம் செய்துகொள்ளலாம்
என்ற மனமாற்றம் எங்கும் உருவாகவில்லை.அதே நேரத்தில் அத்தகைய திருமணங்கள் நடக்கும் போது
ஏற்படும் மனகசப்புகள் அந்த இருவீட்டாரின் பிரச்சனையாக முடிந்துவிடுகிறது.அது அந்த இரு
சாதிகளுக்கு இடையிலான பிரச்சனையாக மாறுவதில்லை.ஆனால் ஒரு தலித்துக்கும் சாதி இந்துக்குமான
திருமணத்தின் போது மிகப்பெரிய கலவரங்கள் உருவாக்கப்படுகின்றன.அம்பேத்கர் கிராம அமைப்பு
என்பது தீண்டாமை உள்ளூரைந்திருக்கும் நரகங்கள் என்றே சொன்னார்.அதனால் காந்தி முன்வைத்த
கிராம பொருளாதாரம் பற்றியோ சுவராஜ் பற்றியோ அவர் எந்த வகையிலும் கவலைப்படவில்லை. அணைகளையையும்
, பெருந்தொழில்களையும் அதனால் உருவாகும் பெருநகரங்களையும் அவர் ஆதரித்தார்.பொருளாதார
தளத்தில் தலித்தின் விடியல் பெருந்தொழில்களிலும் பெருநகரங்களிலுமே உள்ளதாக அவர் எண்ணினார்.அம்பேத்கார்
முன்வைத்த தலித் இயக்கம் கோயில் நுழைவு போராட்டத்தை முன்னெடுக்கவில்லை மாறாக அவை பொது
இடங்களில் புழங்கும் சம உரிமைப்பற்றியே பேசின.நில உரிமையும் பொது இடங்களுக்கு செல்லும்
உரிமையும் சுயமரியாதையுமே அம்பேத்கர் கிராம அமைப்புக்குள் நிகழ வேண்டிய மாற்றங்களாக
முன்வைத்தார்.இதை காந்தி முன்வைத்த பணிவான ஹரிஜன இயக்கமாக அல்லாமல் போராட்டங்கள் மூலமாக
பெறும் தலித் இயக்கமாக உருவாக்கினார். நில உரிமை போன்ற விஷயங்களில் மார்கஸியர்களும்
அம்பேத்கரோடு இணைகிறார்கள்.ஆனால் மார்க்ஸியர்கள் போல அம்பேத்கர் தலித் பிரச்சனையை ஒரு
பொருள் பிரச்சனையாக மட்டும் பார்க்கவில்லை.அவர் சாதிய கருத்துக்குத்தான் முக்கியத்துவம்
கொடுத்தார்.இங்கே காந்தியும் அம்பேத்கரும் இணைகிறார்கள்.அதே நேரத்தில் பெரியார் போல
சுயமரியாதையை மட்டும் முன்வைக்கக்கூடியவராக அம்பேத்கார் இல்லை.அவர் மனிதனுக்கு ஆன்மிகம்
தேவைப்படுகிறது என்பதை அறிந்திருந்தார்.ஆனால் அது இந்து மதம் இல்லை என்பதில் தெளிவாக
இருந்தார்.அவர் பெளத்தத்தை தேர்ந்தார்.
கிராமமும் பெருநகரமும்
காந்தியின் எல்லா சிந்தனைகளையும்
ஒழுங்குப்படுத்தி காந்தியமாக மாற்றி அதற்கு ஒரு மூலநூல் வைக்க முடியுமென்றால் அது ஹிந்து
சுவராஜ் என்ற அந்த சிறிய நூல்தான்.ஹிந்து சுவராஜ் நூலை 1912யிலேயே காந்தி எழுதிவிட்டார்.அவன்
லண்டனிலிருந்தது அவருக்கு பெருநகரங்கள் குறித்த புரிதலை ஏதோ ஒருவகையில் உணர்த்தியிருக்கிறது.பெருநகரங்கள்
இந்தியாவிற்கு எந்த வகையிலும் பயண் தராது என்று காந்தி அழுத்தமாக நம்பினார்.தொழில்மயமும்
அதன் மூலமாக உருவாகும் பெருநகரங்களும் இந்தியாவை குப்பைத்தொட்டியாக மட்டுமே மாற்றும்
என்று அவர் வாதாடினார்.ஆனால் இதில் ஒரு முக்கிய விஷயம் இருக்கிறது.காந்தியின் ஹிந்து
சுவராஜ் அல்லது கிராம சுவராஜ் என்பது ஒரு செயல்வடிவம் மட்டுமே.அதன் கருப்பொருள் தனிமனிதன்.இந்தியா
ஒரு இனக்குழு சமூகம்.பெருநகரங்கள்தான் தனிமனிதனர்களை உருவாக்குகிறது.புதுமைப்பித்தனில்
தனிமனிதன் வருகிறான்.ஆனால் காந்தி கிராமத்தின் தனிமனிதனை யத்தனித்தார்.அது அவரது இஷ்டலோகம்.இந்த
பூலோகத்தில் மனிதன் அடையக்கூடிய மிக உயர்ந்த ஆன்மிக மெய்மை.அந்த தனிமனிதன் தான் காந்தியின்
கனவு.அந்த தனிமனிதனை தக்கவைக்கும் ஒரு அமைப்பாகத்தான் கிராமம் வருகிறது.டி.ஆர்.நாகராஜ்
காந்தியை பற்றி பேசும் போது பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த யோகிகளை
பற்றி சொல்கிறார்.அந்த காலகட்டத்தில் வாழ்ந்த யோகிகளின் உலகம் நூறு அல்லது இருநூறு
மைல்களுக்குள் அடங்கக்கூடியதாக இருந்தது என்று அவர் சொல்கிறார்.அதுவே அவர்களின் புறவெளி.
அத்தகைய சிறிய உலகத்திற்குள்தான் காந்தியின் தனிமனிதன் தனது அனைத்து அடையாளங்களையும்
விட்டுவிட்டு தனக்குத் தானே சேவை செய்துகொள்ளும் இஷ்டலோகத்தில் வாழமுடியும்.அத்தகைய
தனிமனிதன் உருவாக கிராமம் அவசியம்.அதாவது காந்தி உருவாக்க விரும்பிய தனிமனிதன் அமைப்பு
அற்றவன்.மைய அரசு, அதன் நிறுவனங்கள் ஏதனோடும் அவனுக்கு தொடர்பில்லை.He Lives in his own cosmos.அதற்கு கிராம பொருளாதாரம் அவசியம்.அதற்கு கிராம அமைப்பும்
அதன் தொழில்களும் தொடர வேண்டும்.அதன் குறியீடு தான் ராட்டை.அந்த மனிதனின் உடைதான் காந்தியின்
உடை. தோரோவின் அரசுக்கு எதிரான அனார்கிஸ்டும் காந்தியின் தனிமனிதனும் சகோதரர்கள்தான்.ஆக,
கிராமம் நிலைப்பெற வேண்டும் என்று காந்தி மிகவும் விரும்பினார்.அதன் மூலம் சாத்தியப்படக்கூடிய
அமைப்புதான் இந்தியா உலகத்திற்கு அறிவிக்கக்கூடிய செய்தி என்று அவர் நினைத்தார்.ஆனால்
யதார்த்த உலகத்திற்கும் காந்தியின் இஷ்டலோகத்திற்குமான இடைவெளி வெகுதூரமாக இருந்தது.கிராமங்களில்
நிலைத்திருந்த சாதியும் அதன் தீண்டாமையும் அம்பேத்கரை காந்தியின் கொள்கைகளை முழுக்க
நிராகரிக்க செய்தது. காந்தி கிராம பொருளாதாரம் வலுப்பெற வேண்டும் என்று விரும்பினார்.அம்பேத்கார்
பெருநகர பொருளாதாரம் தரக்கூடிய விடுதலை பற்றி சிந்தித்தார்.காந்தியால் இந்த அமைப்பை
கைவிட முடியாது.அதுதான் அவரின் கனவு.ஆக, காந்தி இந்த அமைப்புக்குள் நின்றுகொண்டே சாதிய
பிரச்சனைக்கு முக்கியமாக தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை முன்வைத்தார்.அவைகளில் முக்கியமானவை
கோயில் நுழைவு போராட்டங்கள்.
மாறாக அம்பேத்கர் பெருந்தொழில்கள்
மூலம்தான் மாற்றங்கள் நிகழும் என்பதை உணர்ந்து அதை நோக்கி பயணித்தார்.ஆனால் துரதரிஷ்டவசமாக
இன்று பெருநகரங்களிலும் பெரும்பாலான தலித்துகள் மையத்தில் இல்லை என்பதே சுதந்திரம்
பெற்ற இத்தனை ஆண்டுகளில் நாம் உணரும் இந்தியாவின் நிதர்சனம்.பெருநகரங்கள் நிறைய கழிவுகளை
உருவாக்குகிறது.எதிர்காலத்தில் இன்னும் நிறைய கழிவுகளை உருவாக்கும்.அந்த கழிவுகளை துப்பரவு
செய்வதற்கான மக்கள் பெருநகரங்களில் இருக்கிறார்கள்.அந்த மக்கள் அந்த தளத்திலேயே நிலைத்திருப்பதற்கான
செயல்களை பெருநகர அமைப்பே பார்த்துக்கொள்ளும்.இந்த மக்களில் எத்தனை சாதி இந்துக்களும் பிராமணர்களும் இருக்கிறார்கள்
என்று தெரியவில்லை.இந்த மக்களின் பெருநகர வாழ்க்கையின் கையறு நிலை பயங்கரமானது, கொடூரமானது.
இன்று நன்கு கல்வி கற்று,
மிகப்பெரிய நிறுவனங்களில் வேலை செய்யும் தலித்துக்கும் இவர்களுக்கும் எந்த சம்மந்தமும்
இல்லை.முன்னவன் பெரும்பாலும் அரசியல் அற்றவனாக இருக்கிறான்.அவன் தனது தலித் அடையாளங்களிலிருந்து
முழுவதுமாக வெளியேறுகிறான். பிராமணர்களோடும் சாதி இந்துக்களோடும் Gated Communities என்று சொல்லப்படும் பெருநகரத்தின் அக்ராஹரத்தின் வீதிகளில்
வாழ்ந்து அவன் பெருநகரத்தின் மையகலாச்சாரத்தை ஏற்கிறான்.தனது கிராமத்துடனான
உறவினர்களுடனான தொடர்புகளை துண்டித்துக்கொள்கிறான்.அவனுக்கும்
உலகின் வேறு எங்கும் உள்ள பெருநகரத்து மனிதனுக்கும் பெரிய வித்யாசமில்லை.அவனுடைய சிந்தனை
முறையும் ஷாங்காயில் பணிபுரியும் ஒருவனின் சிந்தனை முறையும் கூகிளில் தேடும் சொற்களும்
உண்ணும் உணவும் உடுத்தும் உடையும் ஆசைகளும் கனவுகளும் ஒன்றுதான். அவர்களின் வேலை நேரத்தை
மட்டுமல்ல ஒய்வு நேரத்தையும் பெருநகர அமைப்பே பார்த்துக்கொள்கிறது. ஒற்றை பரிமாண உலகம் என்கிறார் புதுமார்க்ஸியர் ஹெர்பர்ட்
மார்க்யூஸா2 . பொருளாதாரதளத்தில் முன்னேறிய தலித் விளிம்புநிலையிலிருக்கும்
தலித்தோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதில்லை.பெரும்பாலும் இத்தகைய முன்னேறிய தலித்துகளும்
சாதி இந்துக்களும் பிராமணர்களும் உழைப்பே உயர்வு என்பது போன்ற பொன் மொழிகளை எல்லோருக்கும்
சொல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இன்று அனைத்து அதிகார பீடங்களும் வேலை வாய்ப்புகளும்
நிரப்பப்பட்டுவிட்டன.அந்த இடங்களை பிடித்தவர்கள் தங்கள் பிள்ளைகளை அதில் அமரச்செய்துவிட்டுத்தான்
ஒய்வுபெறுவார்கள்.பெருநகரங்களின் தலித் தனித்து விளிம்பு நிலையில் நிற்கிறான்.கிராம
சுவராஜை முன்வைத்த காந்தியின் இஷ்டலோகமும் பெருநகரங்களை முன்வைத்த அம்பேத்கரின் சிந்தனையும்
முழுமையாக தோற்றுபோய்விட்டன என்பதுதான் இன்றைய யதார்த்த உண்மை.
கலாச்சார வெறுமையும் அந்நியமாதலும்
டி.ஆர்.நாகராஜ் யு.ஆர்.அனந்தமூர்த்தியின்
சம்ஸ்காரா3 நாவலை முன்வைத்து சாதி ஒரு மனிதனின் ஆழ்மனதில் உருவாக்கும் பிரபஞ்ச
வெளியை பற்றி பேசுகிறார்.பிராணேஸாசார்யார் தன் மரபை முழுவதுமாக துறந்துவிட்டு தூர்வாசபுரம்
என்ற கிராமத்தை விட்டு வெளியேறுகிறார்.அப்போது தற்செயலாக அவரோடு புட்டன் என்ற வழிப்போக்கன்
சேர்ந்து கொள்கிறான்.இருவரும் மேளிகே என்று ஊருக்கு தேரோட்டம் பார்க்க செல்கின்றனர்.அங்கே
திருவிழாவில் ஒரு பரந்த திண்னையில் நடக்கும் சேவல் சண்டையை பார்க்க புட்டன் ஆச்சாரியாரை
அழைக்கிறான்.சேவல் சண்டையை பார்க்கும் ஆச்சாரியார் பதற்றமடைகிறார்.அந்த கள்ளின் நெடி,
சண்டையின் போது சேவல்கள் ‘ரப்’‘ரப்’ என்று இறக்கைகளை அடித்துக்கொள்வது, அந்த சண்டையை
அத்தனை கூர்மையாக கொடூரமாக பார்க்கும் மக்கள், இதையெல்லாம் கானும் பிராணேஸாசார்யார்
தன்னால் இந்த பிரபஞ்ச வெளியில் வாழ முடியுமா என்று குழும்புகிறார்.சாதிய கலாச்சாரம்
ஒரு மனிதனின் மனதில் உருவாக்கும் படிமங்களும் அதன் மூலமாக உருவாகும் பிரபஞ்ச வெளியையும்
சம்ஸ்காரா நாவல் முன்வைக்கிறது.பிராணேஸாசார்யார் நாரணப்பாவாக மாற முயல்கிறார்.நாரணப்பாவிற்கு
இந்த பிரச்சனைகள் எதுவுமே இல்லை.ஆனால் ஆச்சாரியார் அதுவரை கடைப்பிடித்து வந்த மரபும்
அது உருவாக்கிய மன படிமங்களும் அவரது தர்க்க அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றன.
இந்த இடத்தில் அசோகமித்தரனின்
பதினெட்டாவது அட்சக்கோடு நாவலையும்4 கண்மனி குணசேகரனின் அஞ்சலை நாவலையும்5
இணைத்து வாசிக்கலாம்.பதினெட்டாவது அட்சக்கோடு நாவலில் கல்லூரி மாணவனான சந்திரசேகரன்
காரில் உலர்ந்துபோன வெண்டக்காய் போல செல்லும் நிஜாமுக்கும் ஒரு கலவரத்தில் தான் ஏதேர்சையாக
குடிசையில் பார்த்த முஸ்லிம் மூதாட்டிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று உணர்கிறான்.நிஜாம்
அரசு இந்தியாவுடன் இணைந்த நாட்களில் அங்கே வாழ்ந்த முஸ்லிம் மக்கள் மிகப்பெரிய அச்சத்திற்கு
உள்ளாகியிருந்தனர்.அந்த தருணத்தில் தற்செயலாக ஒரு முஸ்லிம் வீட்டிற்குள் நுழைந்துவிடும்
சந்திரசேகரன் அங்கே நிறைய மனிதர்கள் மிகவும் ஒடுங்கிபோன நிலையிலிருப்பதை பார்க்கிறான்.அங்கே அவனை விட வயது குறைந்த இளம் பெண்
தனது குடும்பத்து மனிதர்களை காப்பாற்றும் பொருட்டு தன் உடைகளை கழற்றிவிட்டு சந்திரசேகரனின்
முன் வந்து நிற்கிறாள்.இன்னொரு சகமனிதன் மீது வன்முறையை ஏவக்கூடிய அடையாளங்களை தான்
சுமந்துகொண்டிருப்பதை உணரும் சந்திரசேகரன் வீட்டை விட்டு அந்த விடிகாலை பொழுதில் தெறித்து
ஒடுகிறான்.அவன் தனது அடையாளங்களிலிருந்து ஒடுகிறான்.அவன் இனி இந்த பெருநகரின் தனிமனிதன்.அவனுக்கு
இனி எந்த அடையாளங்களும் கிடையாது.
கண்மனி குணசேகரனின் அஞ்சலை
நாவலில் அஞ்சலை ஒரு சின்ன சூழ்ச்சியால் அவளின் எதிர்பார்ப்புக்கு மாறாக வேறு ஒருவனுக்கு
திருமணம் செய்து வைக்கப்படுகிறாள்.அதிலிருந்து வெளியேற விரும்புகையில் வேறு ஒரு சூழ்ச்சியில்
சிக்கி கொள்கிறாள்.அதன் பின் அவள் தன் வாழ்நாள் முழுவதும் மிகுந்த சித்ரவதைகளையும்
கொடுஞ்சொற்களையும் கேலி பேச்சுகளையும் மட்டுமே எதிர்கொள்கிறாள்.தன் திருமண உறவுக்கு
வெளியே பிறந்த தன் மூத்த மகள் வெண்ணிலாவை திருமணம் செய்து கொள்வான் என்று அவள் மிகவும்
எதிர்பார்க்கும் அவளுடைய சகோதரனும் திடீரென்று மாறி விடுகிறான். உடல் அளவிலும் உளவியல்
ரீதியிலும் முற்றிலும் உருக்குலைந்துவிடும் அஞ்சலை தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறாள்
. முந்திரிக்காட்டில் தற்கொலைக்கு முயலும் அவளை வெண்ணிலா காப்பாற்றுகிறாள்.அஞ்சலை அந்த
காட்டில் வீற்றிருக்கும் அரிவாள் எந்திய நாட்டார் தெய்வத்தை பார்த்தவாறு வீடு திரும்புகிறாள்.உண்மையில்
எல்லாவற்றாலும் முற்றிலுமாக கைவிடப்பட்ட அஞ்சலையை காப்பாற்றுவது அங்கே வீற்றிருக்கும்
நாட்டார் தெய்வம்தான்.இந்த உலகில் வேறு எந்த சக்தியும் அவளை காப்பாற்ற முடியாது.அது
தான் அவளின் உளவியல் சக்தி.
இங்கே சந்திரசேகரன் அடையும்
அடையாளமின்னையும், ஆச்சாரியார் அடையும் குழப்பமும், அஞ்சலை அடையும் ஆன்மிக பற்றுக்கும்
இடையிலிருக்கும் ஊடுபாவுகளே தலித் சமூகத்தினர் தங்கள் மதத்தை கைவிடுவதால் ஏற்படக்கூடியதும்.அம்பேத்கர்
ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஆன்மிகத்திற்கான முக்கியத்துவத்தை அறிந்திருந்தார்.அவர்
தலித் அடையாளத்தை முன்வைத்தது பொருள் அடிப்படையில் அல்ல மாறாக கலாச்சாரத்தின் அடிப்படையில்தான்.ஆனால்
அதே நேரத்தில் அவர் ஒரு போதும் இந்து மதத்தினுடான உரையாடலை ஏற்கவில்லை. ஒரு மனிதனுக்கு
எதிர்காலம் மட்டும் அல்ல இறந்தகாலமும் முக்கியம்.அம்பேத்கர் தலித்துகள் பூர்வகுடிகளாக
பெளத்தர்கள் என்றும் அவர்கள் இந்து மதத்தை விட்டுவிட்டு தங்களின் பெளத்த சமயத்துக்கு
திரும்ப செல்ல வேண்டும் என்ற லட்சியத்தை முன்வைத்தார்.அவரின் மரணத்திற்கு முன் பல தலித்
மக்களோடு சேர்ந்து பெளத்தத்தை தழுவினார்.இப்போது அம்பேத்கர் பெளத்தத்திற்கு மாறிய அந்த
புகைப்படத்தை பார்க்கும் போது அதில் அவர் வெண்ணிறத்தில் இந்திய பாணியிலான உடையை அணிந்திருப்பதை
பாரக்க முடிகிறது.மேற்கத்திய உடையுடன் தோற்றமளிக்கும் அம்பேத்கரோடு இதை ஒப்பிடுகையில்
இது ஒரு நெகிழ்வை உருவாக்குகிறது.ஆனால் அம்பேத்கரும் அயோத்திதாசரும் முன்வைத்த பெளத்த
சமயத்திற்கான மாற்றம் தமிழ்நாட்டை பொருத்தவரை பெரிய அளவில் நிகழவில்லை.இன்றைய நிலையில்
வைத்துப்பார்த்தால் தமிழ்நாட்டில் பெளத்தத்தை ஏற்பதிலான முக்கிய பிரச்சனைகளில் ஈழமும்
ஒன்று.இன்று புத்த விஹார்களை கிராமங்களில் அமைப்பதில் எல்லோருக்கும் மன விலக்கம் இருக்கிறது.மேலும்
ராஜ் கெளதமன் குறிப்படுவது போல6 அம்பேத்கரும் அயோத்திதாசரும் முன்வைத்த
பெளத்தம் ஒரு லட்சியம்.ஆனால் இன்று பெரும் துயர்களில் வாழும் தலித் மக்களுக்கு அதனால்
கலாச்சார அளவில் உளவியல் ரீதியில் பெரும் பங்கு வகிக்க முடியாது.அஞ்சலைக்கான உளவியல்
சக்தியை அளித்தது உக்கிர கண்களோடு வீற்றிருந்த அந்த நாட்டார் தெய்வம்தான்.
படைப்பூக்கமிக்க உழைப்பை
கோரும் வேலையை செய்யக்கூடிய மனிதனுக்கு சமயமும் சாதியும் அத்தனை முக்கியமில்லை.அத்தகைய
அடையாளங்களும் பற்றுதலும் இல்லாமல் கூட அவனால் வாழ்ந்துவிட முடியும்.உழைப்பது மனித
இயல்பு என்கிறது மார்க்ஸியம்.அது அளிக்கும் மன நிறைவை வைத்துக்கொண்டு அவன் இந்த வாழ்க்கையை
எப்படியோ வாழ்ந்துவிடலாம்.கிராம அமைப்பில் இருந்த கொல்லர்கள், நெசவாளர்கள், குயவர்கள்
பெருநகர மாற்றத்தின் போதான சூழற்சியில் காணாமல் போய்விட்டனர். சாதி இந்துக்கள், தலித்துகள்
என்றில்லாமல் நிறைய முஸ்லிம் மக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ரமலான் பெருநாளை
முன்னிட்டு என் பக்கத்து தெருவில் ஒரு முஸ்லிம் வீட்டின் முன் நிறைய கூட்டம் இருந்தது.அந்த
வீட்டினர் கொஞ்சம் துணிகளை எளியோர்களுக்கு வழங்குவதற்காக அவர்களை அழைத்திருக்கின்றனர்.அங்கே
நின்று கொண்டிருந்த வயதான முஸ்லிம்கள் சிலர் சாணை பிடிக்கும் இயந்திரத்தை வைத்திருந்தனர்.இன்றைய
பெருநகரத்தின் இரைச்சலில் இந்த இயந்திரம் கையறு நிலையின் குறியீடு போல இருந்தது.மேலும்
இன்றைய மாற்றங்களினால் கிராம அமைப்பின் நாட்டார் கலைகள் பெருமளவில் அழிந்துவிட்டன.அவைகளை
உண்மையில் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டுமென்றால் கிராம அமைப்பு நிலைத்திருக்க வேண்டும்.பெருநகரங்களில்
வாழும் மனிதன் உயிர்வாழ்தலுக்காக படைப்பூக்கமற்ற வேலையை செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு
உள்ளாகிறான்.அவன் அந்நியப்படுகிறான்.அந்நியப்பட்டு , கலைகள் அற்று,கலாச்சார வெறுமையில்
வாழும் மனிதனின் தினசரி வாழ்க்கை கொடூரமானது.அது ஏற்படுத்தக்கூடிய அகச்சிக்கல்களும்
அதனாலான பிரச்சனைகளும் ஒரு தொடர் சங்கலி போன்றவை.
சூழியலும் தலித் இயக்கமும்
இன்று இயற்கை விவசாயம்
மூலமாக விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கும் தாணியங்களுக்கும் ஒரு சந்தை உருவாகி இருக்கிறது.இயற்கை
விவசாயம் மோஸ்தராக உருவாகி வருகிறது.அநேகமாக இயற்கை விவசாயத்தின் மூலமான விளைபொருட்களின்
விலை அதிகம் என்பதால் அதை நுகர்வோர் மேல்வர்கத்தினராகத்தான் இருக்கின்றனர்.சற்று வேடிக்கையான
விஷயம்தான்.ஆனால் இன்று தீவிர தளத்திலும் சூழியல் குறித்த உரையாடல்கள் நிகழ்கின்றன.நிறைய
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இயற்கை விவசாயம் சம்மந்தமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.மேலும்
சூழலை பாதிக்கக்கூடிய தொழில் நிறுவனங்கள் உருவாகுவதையும் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதையும்
எதிர்த்து நிறைய அமைப்புகள் போராடுகின்றன.பழங்குடிகள் தங்கள் வாழிடங்களை விட்டு வெளியேற்றப்படுவதை
எதிர்த்து தீவிர குரல்கள் எழுகின்றன.நிறைய இடங்களில் மக்களே தங்கள் வாழ்வாதாரங்கள்
பாதிக்கப்படும் என்பதால் இந்த அமைப்புகளுக்கு முழுமையான ஆதரவையும் அளிக்கின்றனர்.இன்று
விஞ்ஞானம் உண்மை என்று சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்கக்கூடிய நிலையில் யாருமில்லை.
சிறுகதையாடல்கள் உருவாக்கிய முக்கிய மாற்றம் இது. ஆனால் மைய நீரோட்டத்தில் நின்று பார்க்கும்போது
இதில் தலித் இயக்கங்கள் எல்லா இடங்களிலும் ஒரே நிலைப்பாட்டை எடுக்க முடியாது.இத்தகைய
விவசாய அமைப்புகளுக்கும் சூழியல் அமைப்புகளுக்கும் சாதி குறித்த எந்த நிலைப்பாடும்
இல்லை.முக்கியமாக விவசாய அமைப்புகளில் சாதியம் தீவிரமாக இருக்கிறது.அத்தகைய அமைப்புகளில்
நேர்மையானவர்கள் கூட ஆன்மிகவாதியை போலத்தான் இருக்கின்றனர்.மேலே சொன்ன பல கோரிக்கைகள்
நிலைக்க வேண்டுமென்றால் கிராமம் நிலைக்க வேண்டும்.கிராமம் நிலைக்குமென்றால் சாதியும்
சாதிய அதிகாரமும் நிலைக்கும்.இதை தலித் இயக்கங்களினால் நிச்சயம் ஏற்க முடியாது.இன்றைய
சூழியல் பிரச்சனைகளால் சுத்தமான குடிநீர், சூழல், சத்தான உணவு ஆகியவை சாத்தியப்படாமல்
போனதில் முக்கியமாக பாதிக்கப்பட்டது வறிய மக்கள்தான்.அவர்களில் பெரும்பாலானோர் தலித்துகள்.இன்று
புவிவெப்பமடையும் மாநாடுகளில் இந்தியா எடுக்கும் நிலைப்பாடுகளும் தலித் அமைப்புகள்
எடுக்க சாத்தியப்படும் நிலைப்பாடுகளும் அநேகமாக ஒன்றுதான்.வளர்ந்த நாடுகள் புவிவெப்பமடைதலை
முன்னிட்டு தங்களின் தொழில் வளர்ச்சியை முடுக்க முனைவதை வளரும் நாடுகள் எதிர்ப்பது
போலத்தான் தலித் அமைப்புகளின் நிலையும்.இங்கே சூழியல் அமைப்புகள் சாதிய அமைப்பின் கொடூரத்தை
குறித்த அரசியல் உணர்வு கொள்ள வேண்டும்.தலித் அமைப்புகள் காந்தி முன்வைத்த அமைப்பின்
நண்மைகளை பரிசீலிக்க வேண்டும்.இரண்டு அமைப்புகளும் உரையாட வேண்டும்.அது ஒரு வகையில்
காந்தியும் அம்பேத்கரும் உரையாடுவது போலத்தான்.
நவீன மனிதன்
|
மாசானபு புகுவோகா |
ஆல்பெர் காம்யூவின் வீழ்ச்சி7
நாவலில் கிளெமன்ஸ் வட ஆப்பரிக்காவில் முகாம் ஒன்றில் இருக்க நேர்கிறது.அங்கே அவர் இருக்கும்
குழுவில் அவர் போப்பாக நியமிக்கப்படுகிறார்.அதாவது அந்த குழுவில் உள்ள மக்களின் மத்தியில்
ஒரு படிநிலை தேவைப்படுகிறது.கிளெமன்ஸ் சொல்வதற்கு எல்லோரும் கீழ்ப்படிகிறார்கள்.அங்கே
தண்ணீர் தட்டுப்பாடு.ஒரு நாள் இறந்து போகும் நிலையிலிருக்கும் தன் குழுவை சேர்ந்த மனிதனுக்கான
தண்ணீரை எடுத்து குடித்துவிடுகிறார்.அதற்கு அவர் அளிக்கும் விளக்கம் அவனை விடவும் தானே
மற்றவர்களுக்கு அதிகம் பயண்படக்கூடியவனாக இருக்க முடியும் என்பதுதான்.அத்துடன் அந்த
குழுவை கலைத்துவிடுகிறார்.மனித சமூகத்தில் சமத்துவம்,சமதர்மம் சாத்தியமில்லை என்கிறார்.இது
மனிதனின் ஆதார குணங்களான கீழ்மையையும் தீமையையும் பற்றி பேசும் நாவல்.இது மனிதனின்
வீழ்ச்சியை பற்ற பேசுகிறது.மனிதன் எங்கெல்லாம் குழுவாக இருக்கிறானோ அங்கெல்லாம் அதிகாரத்தை
உருவாக்குகிறான்.படிநிலையை உருவாக்குகிறான்.முடிந்தால் அதற்கு ஒரு கருத்தியலை உருவாக்குகிறான்.ஆனால்
மனிதன் மேண்மையை நோக்கி நகரக்கூடியவனும் தானே.தலித் அமைப்பில் உள்ள சாதிகளில் படிநிலை
இருக்கிறது.சில சாதிகள் தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியில் சேர்க்க வேண்டுமென்று
விரும்புகிறார்கள்.இன்று தலித் இயக்கம் சாதிய அதிகாரத்திற்கு எதிராக போராடும் அதே நேரத்தில்
சாதி உருவாக்கும் அகங்காரத்திற்கு எதிராகவும் போராட வேண்டும்.மேலும் சமீபத்தில் தலித்
மக்களுக்கு எதிராக நிகழ்ந்த சம்பவங்கள் ஒரு முக்கிய செய்தியை அறிவிக்கின்றன.தமிழ்நாட்டில்
திராவிட இயக்கம் உருவாக்கிய மாயை முழுவதுமாக உடைந்துள்ளது.தலித் மக்களுக்கான முன்னேற்றத்தை
தலித் இயக்கங்கள் தான் முன்னெடுக்க வேண்டும்.வேறுயாரும் அவர்களின் நலனில் அக்கறை கொள்ளப்போவதில்லை.
இன்று கிராமம் மற்றும் சிறுநகரங்களில் நிகழும் சாதிய பிரச்சனைகளில் அக்கறை செலுத்தும்
அதே வேளையில் பெருநகரங்களில் விளிம்புநிலையில் வாழும் தலித்துகளின் பிரச்சனைகளுக்கும்
இந்த அமைப்புகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
|
அகிரா குரசோவாவின் டிரிம்ஸ் படத்தில் இறுதியாக வரும் Village of the windmills அத்தியாயம் |
இன்றைய தனிமனிதன் நாற்பதுகளில்
இலக்கியங்களில் உருவானவன் என்று ஜமாலன் சமீபத்தில் எழுதியிருந்தார்.சாதிய அகங்காரம்
இல்லாத கலாச்சாரம் கொண்ட நவீன மனிதன் படைப்பூக்கமிக்க உழைப்பை சாத்தியப்படுத்தக்கூடிய
நாளைய யதார்த்த அமைப்பில் உருவாவதற்கு முதலில் நமது இன்றைய இலக்கியங்களில் அத்தகைய
நவீன மனிதனும் அமைப்பும் சிருஷ்டி பெறவேண்டும்.அது ஒரு வகையில் அம்பேத்கரும் காந்தியும்
இளம் மார்கஸூம் முன்வைத்த இஷ்டலோகத்தின் மனிதன்தான்.
குறிப்பு
- இந்த கட்டுரை கன்னட சிந்தனையாளர் டி.ஆர்.நாகராஜின் The Flaming Feet and other essays - Permanent Black Publication - என்ற நூலை முன்வைத்து
எழுதப்பட்டது.
- One Dimensional Man – Herbert Marcuse – Beacon Press.
- சம்ஸ்காரா - யு.ஆர்.அனந்தமூர்த்தி – அடையாளம் பதிப்பகம்.
- பதினெட்டாவது அட்சக்கோடு - அசோகமித்திரன் – காலச்சுவடு பதிப்பகம்
- அஞ்சலை – கண்மனி குணசேகரன் – தமிழினி பதிப்பகம்
- தலித் விமர்சன கட்டுரைகள் – ராஜ் கெளதமன் – காலச்சுவடு பதிப்பகம்
- The Fall – Albert Camus – Everyman’s Library.