தஸ்தாவெய்ஸ்கியின் நாவல்கள் இதுவரை நான் வாசித்ததில் இரட்டை (The Double) வாசிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது.கரமசோவ் சகோதரர்கள் ஆயிரம் பக்க நாவல் என்றாலும் அது அவ்வளவு கடினமாக இல்லை.நூற்றியெழுபது பக்கங்கள் மட்டுமே கொண்ட இந்த நாவல் மிகவும் சலிப்பேற்றுவதாக இருந்தது.அவருடைய நாவல்களில் சில கதாபாத்திரங்களை குரூர நகைச்சுவையோடு விவரிப்பார்.ஒரளவுக்கு குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் மர்மலதேவை சொல்லலாம்.இந்த இரட்டை நாவலில் வரும் கொல்யாட்கின் (Golyadkin) கதாபாத்திரத்தை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை குரூர நகைச்சுவை மூலமே சித்தரிக்கிறார்.நாவலில் நிறைய கதாபாத்திரங்கள் இல்லை.இது முழுக்க கொல்யாட்கினின் வீழ்ச்சியை பேசும் ஒரு நாவலாகவே வருகிறது.நகரத்தின் முக்கிய மனிதர் ஒருவரின் விருந்து நிகழ்வில் அழைக்கப்படாத விருந்தாளியாக செல்லும் கொல்யாட்கின் அங்கிருந்து வேலையாட்கள் மூலமாக வெளியேற்றப்படுகிறார்.அந்த அவமானத்தில் இரவில் பாலத்தில் நின்று அழுதுகொண்டிருப்பவர் அங்கே தன்னை போன்ற உருவம் கொண்ட ஒருவரை சந்திக்கிறார்.இந்த விருந்து நிகழ்வில் கலந்துகொள்ளும் அதே நாள் அவர் ஒரு மருத்துவரை சந்திக்கிறார்.அவர் சில மருந்துகளை பரிந்துரைக்கிறார்.மேலும் தனிமையில் இருக்காமல் ஒரு சமூக மனிதனாக மாற்றிக்கொள்வது அவருக்கு நிறைய உதவும் என்கிறார்.கொல்யாட்கின் அதை மறுக்கிறார்.மேலும் தான் தனிமையையும் அமைதியையுமே விரும்புவதாகவும் தன்னால் தன்னை மாற்றிக்கொள்வது இயலாது என்றும் கூறுகிறார்.தன்னை போல உருவம் கொண்டவரை உண்மையிலே பார்த்தோமா அல்லது கற்பனையா என்று இவருக்கு புரியவில்லை.அடுத்தநாள் அலுவலகம் சென்றால் பாலத்தில் இரவில் பார்த்தவர் அங்கே புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.ஜூனியர் கொல்யாட்கின் அலுவலகத்தில் முக்கியத்துவம் அடைகிறார்.சமூகத்திலும் அவர் முக்கியத்துவம் அடைகிறார்.தனக்கு எதிராக மிகப்பெரிய சதி நடப்பதாக நினைக்கும் சீனியர் கொல்யாட்கின் இதற்கு எதிராக தன்னால் முடிந்தவரை போராடுகிறார்.ஜூனியர் கொல்யாட்கினிடம் மன்றாடுகிறார்.கடைசியில் நாவல் ஆரம்பத்தில் இருந்த விருந்து நிகழ்வு போல இறுதியிலும் ஒரு விருந்து நிகழ்வு நடக்கிறது.அங்கே செல்லும் சீனியர் கொல்யாட்கின் மருத்துவரிடம் ஒப்படைக்கப்படுகிறார்.அவருடைய வேலையும் போகிறது.அவர் அந்த மருத்துவரின் கண்கானிப்பில் ஒரு அறையை வாடகை எடுத்து வாழவேண்டும் என்று அந்த மருத்துவரால் கட்டளையிடப்படுகிறார்.
இதில் முக்கிய விஷயம் ஒரு விருந்து நிகழ்விலிருந்து வெளியேற்றப்படும் கொல்யாட்கின் மிகுந்த அவமானம் கொள்கிறார்.அதன் பின்னான நாவல் முழுவதும் அவருடைய வீழ்ச்சி பற்றியது தான்.ஆனால் அந்த வீழ்ச்சியை தஸ்தாவெய்ஸ்கி குரூர நகைச்சுவையோடு விவரித்திருக்கிறார்.இங்கே ஜூனியராக வருபவர் உண்மையிலேயே அந்த அலுவலகத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தாரா அல்லது அது சீனியரின் விருப்ப கற்பனையா என்பது நாவலில் தெளிவாக சொல்லப்படவில்லை.அது ஒரு மனப்பிறழ்வு நோயாக இருக்கலாம்.அல்லது உண்மையில் அப்படி ஒருவர் இருந்திருக்கலாம்.தஸ்தாவெய்ஸ்கியின் வேறு சில நாவல்களில் இது போன்ற விஷயங்களை பார்க்க முடியும்.குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் குறும்கதாபாத்திரம் ஸ்விட்ரிகைலோவ் ரஸ்கோல்நிகோவை புரிந்துகொள்ள உதவும் ஒரு கதாபாத்திரம்.அது ரஸ்கோல்நிகோவின் கீழ்மையை புரிந்துகொள்ள உதவுகிறது.அதுபோல கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் இவான் கரமசோவ் ஒரிடத்தில் சாத்தானுடன் உரையாடும் ஒரு நிகழ்வு வருகிறது.அந்த சாத்தான் இவான் தன் அறிவின் துணையால் அடையும் கீழ்மையை ,அவதியை குறிப்பதாக இருக்கலாம்.அதே போல இந்த கதையில் வரும் மற்றொரு கொல்யாட்கின் நிஜ கொல்யாட்கின் உவகை கொள்ளும் பிம்பம் அல்ல.அவன் தன்னில் முழுமையாக வெறுக்கும் ஒரு பிம்பமாக வருகிறான்.பொது இடங்களுக்கு செல்வது, அலுவலகத்தில் சிறப்பாக பணிபுரிந்து பணியில் உயர்வது, சமூகத்தில் நன்மதிப்போடு இருப்பது ஆகியவை இயல்பாகவே கொல்யாட்கினுக்கு உவப்பாக இல்லை.நாவலின் ஆரம்பித்தில் மருத்துவரிடம் பேசும் போது தன்னுடைய எதிரிகள் தனக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று சொல்கிறார். பிறருக்கு தீங்கியிழைக்கும் வகையில் தனக்கு எதையும் திட்டமிட்டு செய்ய தெரியாது என்றும் சொல்கிறார்.கொல்யாட்கின் லெளகீகமானவர் இல்லை.அவரால் அதை செய்யவும் இயலவில்லை.தன்னை வருத்தி அப்படி அவர் செய்ய விரும்புவதின் ஒரு விருப்ப கதாபாத்திரமே மற்றொரு கொல்யாட்கினாக இருக்கலாம்.அல்லது அதுவே அவர் ஆக விரும்பும் கதாபாத்திரமாகவும் இருக்கலாம்.ஆனால் முதலாவதுதான் சரி என்று படுகிறது.பீட்டர்ஸ்பர்க் நகரத்தின் முக்கிய பிரமுகரின் மகள் அவரை அன்றிரவு வந்து அழைத்து போக சொல்கிறாள்.அப்படியான ஒரு கடிதத்தை அவர் வாசிக்கிறார்.அதுவும் அவரது கற்பனையாக இருக்கலாம்.ஆனால் அவர் அவளது வீட்டருகில் இரவில் நின்றுகொண்டு தனக்குத்தானே பேசிக்கொள்ளும் போது நான் இவ்வாறு நடந்து கொண்டால் எனக்கு வேலை போய்விடும்.மேலும் வேறு வேலையும் கிடைக்காது.எனக்கு பெண்களை புகழ்ந்து பேச தெரியாது.மேலும் என் முகமும் அவ்வளவு அழகாக இல்லை.எனக்கு இதில் எல்லாம் எந்த விருப்பமும் இல்லை என்று சொல்பவர் சட்டென்று அந்த இடத்தைவிட்டு ஒட ஆரம்பிக்கிறார்.அந்த வகையில் பார்த்தால் அவரால் ஒரு லெளகீகமான ஒரு மனிதராக இருக்க முடியவில்லை.ஆனால் அந்த மன அழுத்தம் தரும் பிறழ்வால் மற்றொரு கொல்யாட்கினை அவர் பார்க்கிறார்.இறுதியில் அவர் நினைத்து போலவே அவருடைய வேலை பறிக்கப்பட்டு ஒரு மருத்துவரின் கண்கானிப்பில் ஒரு தனி அறையில் வாழ அவர் ஆணையிடப்படுகிறார் என்பதோடு நாவல் முடிகிறது.தஸ்தாவெய்ஸ்கி இந்த குறுநாவலை எழுதியபின் மிகுந்த பரவசம் அடைகிறார்.ஏனேனில் அவருடைய பிற்கால நாவல்களான குற்றமும் தண்டனையும் , கரமசோவ் சகோதரர்கள் ஆகிய நாவல்களில் அவர் இந்த உத்தியை கையாள்கிறார்.அதன் முதல் பொறி அவருக்கு இந்த நாவலில் தான் கிடைக்கிறது.தஸ்தாவெய்ஸ்கியின் இந்த நாவல் பற்றி தமிழில் யாரேனும் எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.இந்த நாவலை ஆய்வுக்கு உட்படுத்தி மிக பெரிதாக எழுதலாம்.