வெறுங்கால் நடை

எண்பதுகளின் மலையாளப் படங்களில் கதை எங்கே துவங்குகிறது என்பதை எளிதில் கண்டுபிடிக்க இயலாது. எல்லோரும் அமர்ந்து தேநீர் அருந்திக்கொண்டு பேசிக் கொண்டு இருப்பது போல இருக்கும். எங்கோ கதையின் தொடக்கம் நிகழ்ந்திருக்கும்.பின்னர் எங்கோ ஒரு முடிச்சு விழும்.இறுதியில் முதிர்வு அரங்கேறும். கே.ஜி.ஜார்ஜ், பத்மராஜன் , பரதன் , பின்னர் வந்த லோகிததாஸ் என்ற இயக்குனர்களின் திரைப்படங்களில் இந்தச் சட்டகங்கள் இருக்கும். 

மற்றொராள் என்ற கே.ஜி.ஜார்ஜ் படத்தில் கணவன் மனைவி குழந்தைகள் என்று எந்தவித நாடகத்தனமும் இல்லாமல் மிக எளிமையாக தோன்றும் சித்திரம் சட்டென்று மாற்றம் கொள்ளும்.இறுதியில் கணவன் தற்கொலை செய்து கொள்ளும் இடம் நாம் சற்றும் எதிர்பாராதது.ஒரு பெண்ணின் சின்ன தடுமாற்றத்தை அடிப்படையாக கொண்ட கதை.

அதே போல பத்மராஜனின் நமக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள். எந்த வித அலட்டலும் இல்லாத திரைக்கதை. சாலமன் தன் பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்ணுடன் வேடிக்கையாக பேசுகிறான்.அந்தக் கதையின் தொடக்கம் அந்தப் பெண்ணின் தந்தை உண்மையில் உயிரியல் தந்தை அல்ல என்பதில் துவங்குகிறது.பின்னர் சாலமனுக்கும் பெண்ணுக்குமான காதல் .காதலை முறிக்க தகப்பனின் நிலையில் இருப்பவன் செய்யும் பிறழ்வான செயல்.அதையும் மீறி காதலர்கள் இணையும் இறுதி முதிர்வு.

இப்படியான திரைக்கதைகளை அமைப்பது மிகவும் கடினம். லோகிததாஸின் பூதக்கண்ணாடியும் அப்படியான ஒரு கதை தான். தமிழில் நான் கவனித்த வரை மகேந்திரன் மட்டுமே அப்படியான திரைக்கதைகளை அமைத்திருக்கிறார்.அவருடைய முள்ளும் மலரும் , ஜானி போன்ற படங்களில் அத்தகைய சட்டகம் இருக்கும்.

எனக்கு மிகவும் பிடித்தமான கதை சொல் முறை இது தான். கதை ஏதோ துவங்குகிறது , ஏதோ நடக்கிறது , ஏதோ முடிகிறது என்ற தன்மை கொண்டிருக்க வேண்டும். நுணுக்கங்கள் திருப்பங்கள் என்று போட்டு மண்டையை உடைத்துக் கொள்ளக் கூடாது. கதைகள் எளிமையானவை.கூழாங்கற்களுக்கு மேல் போகும் நதி போன்ற நீரோட்டத்தை கொண்டிருக்க வேண்டும்.சலனமற்று , மெல்லிய சையை எழுப்பியவாறு செல்லும் நதி. நான் என் சிறுகதைகள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று விரும்புவேன்.அப்படி அமைகிறதா என்பது வேறு விஷயம்.பிளவு என்று நான் எழுதிய கதை அரவிந்தனின்  போக்குவெயிலை அடிப்படையாக கொண்டது. 

சமீபத்தில் சு.வெங்குட்டுவன் எழுதிய வெறுங்கால் நடை என்ற சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன்.மிக நல்ல படைப்பு. தமிழில் பொதுவாக இப்படியான தொகுப்புகள் இல்லை. வெறுமன எழுந்து ஒரு கடைக்கு போய் தேநீர் அருந்துவது , வேடிக்கைப் பார்ப்பது , பிஸ்கட் திண்பது , பேப்பர் படிப்பது , அப்போது அங்கே நிகழும் ஏதோ ஒரு சம்பவம் , அந்தச் சம்பவத்தை விவரிப்பது , அதன் வழி ஒரு கதையை நிகழ்த்துவது என்று வெங்குட்டுவனின் கதை சொல் முறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.மிகப்பெரிய திருப்பங்களையோ  , தத்துவ விசாரணைகளையோ அவருடைய கதைகள் கொண்டிருக்கவில்லை. மிக மிக எளிய கதைகள். விந்தையான மனிதர்கள். பேருருவமாக நிற்கும் காலத்தின் முன் கையறு நிலையில்  ஏன் இப்படி எல்லாம் நிகழ்கிறது என்ற கேள்வியோடு இருப்பவர்கள் , ஆனால் பதில் தேடாமல் தேநீர் அருந்திக்கொண்டு பேராக்கு பார்த்தபடி அமர்ந்திருப்பவர்கள். அன்றைய பொழுதை முடிந்தவரை இனிமையாக வாழ்பவர்கள்.

வெறுங்கால் நடை - சு.வெங்குட்டுவன் - மணல் வீடு.