லக்ஷ்மி நரசு






பி.லக்ஷ்மி நரசு எனும் பொக்காலா(பாகாலா) லக்ஷ்மி நரசு எழுதிய “பெளத்தம் என்றால் என்ன?” என்ற புத்தகத்தை ஓ.ரா.ந.கிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.லக்ஷ்மி நரசு பற்றி K.பிரம்மச்சாரி 1959யில் தொண்டு இதழில் எழுதிய கட்டுரை , ஜி.அலாய்சியஸ் எழுதிய கட்டுரை , தேவப்பிரிய வலிசின்ஹா அவர்கள் 1946யில் எழுதிய கட்டுரை ஆகியவை புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெளத்தம் மறுமலர்ச்சி பெற்றது.தமிழகத்தில் பெளத்த மறுமலர்ச்சிக்கு பங்காற்றியவர்களில் முக்கியமானவர்கள் பி.லக்ஷ்மி நரசு, சிங்காரவேலர் , அயோத்திதாசர் ஆகிய மூவர்.சிங்காரவேலர் வழக்கறிஞர்.பெளத்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.பின்னர் மார்க்ஸியம் , பகுத்தறிவு , சுயமரியாதை இயக்கம் என்று பயணப்பட்டார்.அயோத்திதாசர் இங்கே ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பவர்கள் பூர்வ பெளத்தர்கள் என்று இறந்தகாலத்தில் இருந்ததாக அவர் முன்வைத்த ஒரு பொற்காலத்தை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றார்.லக்ஷ்மி நரசு வாழ்க்கை மார்க்கமாக பெளத்தத்தை பார்த்தார்.பகுத்தறிந்து பிரக்ஞைபூர்வமாக வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டிய ஒரு வழிமுறையை லக்ஷ்மி நரசு பெளத்தத்தின் வழி முன்வைக்கிறார்.கிட்டத்தட்ட ஒரு தற்காப்புக்கலை நூலை போல உள்ளது பெளத்தம் என்றால் என்ன என்ற புத்தகம்.கடும் நோண்பு இருந்து தன்னை வருத்தி அறியும் வழி ஒரு எல்லையாகவும் புலன் இன்பத்தில் தோயும் வாழ்க்கை மறு எல்லையாகவும் கொள்ளும் போது பெளத்தம் மத்திம மார்க்த்தை வலியுறத்துகிறது.இந்த மத்திம மார்க்கத்தை பெளத்தம் வாழ்வின் அனைத்து நிலைகளுக்கும் எடுத்து செல்கிறது.பெளத்தம் இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது,நாம் யார் போன்ற கேள்விகளின் அடிப்படையில் அல்லாமல் நம் முன் இந்த வாழ்க்கை இருக்கிறது, இந்த வாழ்வை நாம் எப்படி வாழப் போகிறோம், மனிதனுக்கு சாத்தியப்பட்டுள்ள இந்த அறிவின் வழி வாழ்வை எப்படி அனுகப் போகிறோம் என்ற அடிப்படையிலேயே இருக்கிறது.ஒவ்வொன்றும் கணத்திற்கு கணம் மாறிக்கொண்டு இருக்கிறது.அனைத்தும் காரண காரிய அடிப்படையிலேயே இயங்குகிறது. இங்கு அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது.சார்ந்து இயங்குகிறது. தனியான முழுமுதற் பொருள் என்று எதுவும் இல்லை.நிலையின்மையில் நித்யத்தை தேடும் மனிதன் நிலையானது ஒன்றை அடைய விரும்புகிறான்.அது அவனுள் துக்கத்தை உருவாக்கிறது.ஒவ்வொரு பொருளும் கணத்திற்கு கணம் மாறிக்கொண்டு இருக்கிறது.நாம் ஒரு பொருளுக்கு அளிக்கும் பெயர் ஒரு சுட்டுப் பெயர் மட்டுமே.நாம் முன்பு பார்த்த பொருள் அல்ல மறுபடி பார்ப்பது.அந்த பகுத்தறிவோடு வாழ்வை வாழ ஒரு வழியை அளிக்கிறது பெளத்தம்.

அந்த வழியில் செல்ல அடிப்படையான சில பயிற்சிகளை மேற்கொள்வது உதவியாக இருக்கும் என்கிறது.அவை நான்கு உன்னத உண்மைகளும் உன்னத எட்டு அங்கப் பாதையும் ஆகும்.

நான்கு உன்னத உண்மைகள்

அ.இன்ப துன்ப உணர்வு கொண்டு நாம் இயங்கும் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் துக்கம் இணைந்திருக்கிறது.(துக்கம் வாழ்வில் இருக்கின்றது என்கிற உண்மை)

ஆ.துக்கம் காரணத்தால் விளைகின்றது.துக்கத்தின் காரணம் தன்னலப்பற்றோடு கூடிய பெரும் வேட்கையாகும்.புலனின்பங்களிலும் காம சுகங்களிலும் கொள்ளும் பெரும் வேட்கையாகும்.(திருஷ்ணை). (துக்கம் காரணத்தால் உண்டாகின்றது என்கிற உண்மை)

இ.தன்னலப்பற்றோடு கூடிய பெரும் வேட்கைகளைத் துறப்பதன் மூலம் துக்கத்தை நீக்க முடியும் (துக்க நிரோதம் என்கிற உண்மை)

ஈ.தன்னலப்பற்றோடு கூடிய பெரும் வேட்கைகளை ஒழித்து துக்கத்திலிருந்து பரிபூர்ணமாகவும் நிரந்தரமாகவும் விடுதலை பெறுவதற்கான மார்க்கம் இங்கு உள்ளது.அது உன்னத எட்டு அங்கப்பாதையாகும்.(அரிய அட்டங்கிக மார்க்கம், துக்க நிரோத மார்க்கம் என்கிற உண்மை)

எட்டு அங்கப்பாதை

நல்லறிவு
நல் நோக்கம்
நற்பேச்சு
நற்செயல் (சீலம் , தானம் )
நற்தொழில்
நன் முயற்சி (தன்னலத்துறவு , தற்கட்டுப்பாட்டை வளர்ப்பது)
நல் மன விழிப்புணர்வு (நல்ல ஆசை , நல்ல எண்ணம்)
நற்சமாதி 

ஆகிய எட்டு அங்கப்பாதைகள் நான்கு உன்னத உண்மைகளை அடைவதற்கான பாதையை வகுக்கிறுது.இந்த எட்டு அங்கப்பாதை வழி உண்மையை அடைவதற்கு சிரத்தை தேவை என்று பெளத்தம் வலியுறுத்துகிறது.இந்த நூலின் பெரும்பகுதி இந்த எட்டு அங்கப்பாதைகளை விளக்குகிறது.மிக கூர்மையான மொழியில் ஓ.ரா.ந.கிருஷ்ணன் இதை மொழிபெயர்த்துள்ளார்.

சிங்காரவேலர், அயோத்திதாசர் ஆகியோரிலிருந்து லக்ஷ்மி நரசு ஒரு விஷயத்தில் வேறுபடுகிறார்.சிங்காரவேலர் பெளத்தத்தின் வழி மார்க்ஸியம், பகுத்திறவு, சுயமரியாதை இயக்கம் என்று எதிர்காலத்தில் அடையக்கூடிய பொற்காலத்தை நோக்கி பயணித்தார். அயோத்திதாசர் ஓடுக்கப்பட்டவர்கள் பூர்வ பெளத்தர்கள் என்று இறந்தகாலத்தில் பொற்காலத்தை கண்டு கொண்டு அதனை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றார்.லக்ஷ்மி நரசு பெளத்தத்தின் வழி எந்த பொற்காலத்தையும் அடைய முயலவில்லை.பெளத்தம் அதன் அளவில் ஒரு வாழ்க்கை மார்க்கம் என்பதையே அவரின் இந்த நூல் வழி நாம் அடைய முடிகிறது.பகுத்தறிந்து நம் முன் உள்ள இந்த வாழ்வை தக்க தற்காப்புகளுடன் கருணையுடன் கூர்மையுடன் வாழ பெளத்தம் வழி வகுக்கிறது என்பதை இந்த நூலின் வழி அவர் சுட்டிக்காட்டுகிறார்.அந்த அளவில் அவர் சிங்காரவேலர் போல அயோத்திதாசர் போல லட்சியவாதி அல்ல.

லக்ஷ்மி நரசு இயற்பியல் பேராசிரியர்.சென்னை கிறுஸ்துவக் கல்லூரி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரியில் பணிபுரிந்திருக்கிறார்.இயற்பியல் எப்படி இயற்கையை புரிந்துகொள்ள உதவும் ஒரு அறிதல் துறையோ அப்படியே அவர் பெளத்தத்தையும் பார்த்தார் என்று தோன்றுகிறது.அவர் இயற்பியலில் மிக ஆழ்ந்த அறிவை கொண்டிருந்தார் என்று அவரைப்பற்றிய எழுதப்பட்ட கட்டுரைகளில் கூறப்பட்டுள்ளது.1860யில் பிறந்த லக்ஷ்மி நரசு 1934 வரை வாழ்ந்தார்.சென்னை மாகாணத்தில் பெளத்த தர்மத்தை பரப்புவதற்கு இடைவிடாமல் செயலாற்றியிருக்கிறார்.அயோத்திதாசர் , சிங்காரவேலர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.இவர் எழுதிய பெளத்தத்தின் சாரம் (Essence of Buddhism) பெளத்தம் பற்றிய முக்கிய நூலாக பார்க்கப்படுகிறது.மேலும் சாதி பற்றிய ஆய்வு (The Study of caste) என்ற நூலை எழுதியிருக்கிறார்.பெளத்தம் சுருக்கமாக என்று மற்றொரு நூலையும் எழுதியிருக்கிறார்.ஆனால் அந்த நூல் கிடைக்கவில்லை.பெரம்பூர் தென்னிந்திய சென்னை பெளத்த சங்கத்தை அயோத்திதாசருக்கு பிறகு பொறுப்பேற்று நடத்தினார்.

பெளத்தம் என்றால் என்ன – லக்ஷ்மி நரசு – தமிழில் ஓ.ரா.ந.கிருஷ்ணன் – மெத்தா பதிப்பகம்

No comments: