தமாஷ்








சென்ற வருட இறுதியில் அடுத்த வருடத்தின் பிரதான திட்டம் திருமணம் என்று எழுதியிருந்தேன்.ஒரு கனவு போல அது இந்த வருடம் நிகழ்ந்தது.கிலாய்ட்ஸ் இருந்தது ,அதற்காக குழம்பியது, ஒரு பெண் மீது கொண்டிருந்த பெரும்பற்று உடைந்த போது ஏற்பட்ட வலி, பெங்களூரின் தனிமை வாழ்க்கை என்று இந்த வருடமும் எல்லா குழப்பங்களுடன்தான் தொடங்கியது.சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தின் முதல் நாள் தற்கொலைக்கு முயன்றேன்.தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வது நிறைய வலிக்கலாம் என்று தோன்றியது.தூக்க மாத்திரைகள் பற்றி தெரிந்து கொள்ள மடிக்கணினியை திறந்தேன்.பேஸ்புக்கில் கவிஞர் சுகுமாரன் என் அலைபேசி எண்னைக் கேட்டார்.கொடுத்தேன்.அழைத்தார்.காலச்சுவடு கொண்டு வர இருக்கும் காகித மலர்கள் நாவலுக்கு முன்னுரை எழுத முடியுமா என்று பாருங்கள் என்று சொன்னார்.

அவர் பேசி முடித்தப்பின் நான் கூகிளிலில் தூக்க மாத்திரைகள் பற்றி தேடவில்லை.இன்னும் சில காலம் வாழலாம் என்று தோன்றியது.அன்று புரசைவாக்கத்தில் ஒரு ஜோசியரை சென்றுப் பார்த்தேன்.வெட்கமாக இருந்தது.ஆனால் அன்று மிகவும் பதற்றமாக இருந்தேன்.வேறு வழியில்லை.ஏதோ ஒரு நம்பிக்கை கிடைத்துவிட வேண்டும் என்று தோன்றியது.அவர் நீங்கள் உங்களின் கெளரவம் பாதிக்கப்படும் என்று நினைத்து எந்த காரியத்தையும் செய்யாமல் இருக்க வேண்டாம் என்றார்.ஏதோ நம்பிக்கையாக உணர்ந்தேன்.அப்போது சென்னையில் விடுமுறையில் இருந்தேன்.இரண்டு வாரங்களும் பஷீரின் புத்தகங்களை வாசித்தேன்.பின்னர் பெங்களூர். எனக்கு பெங்களூரில் ஒரே பிரச்சனைதான் இருந்தது.அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போது யாரோ பெரிய பாறாங்கல்லை எடுத்து மார்பில் வைத்துவிட்டது போல இருக்கும்.

ஜூலையில் முன்னர் என்னுடன் பெங்களூரில் அறையில் தங்கியிருந்த நண்பருக்கு அழைத்து சென்னை வந்திருக்கிறேன் என்றேன்.எதற்காக என்றார்.நிச்சியதார்த்தம் என்றேன்.யாருக்கு என்றார்.எனக்கு என்றவுடன் உங்களுக்கா என்றார்.திருமணம் நெய்வேலியில் நிகழ்ந்தது.இரண்டு நாட்களுக்கு முன் சென்றேன்.என் பள்ளித் தோழன் சாலையில் என்னைப் பார்த்தான்.பிறகு மாலையில் அழைத்தான்.என்ன விசேஷம் எல்லோரும் வந்திருக்கிறீர்கள் என்றான்.திருமணம் என்றேன்.யாருக்கு என்றான்.எனக்கு என்றேன்.உனக்கா , எப்போ என்றேன்.நாளை என்றேன்.என்னடா சொல்றே என்று கொஞ்ச நேரம் பேச்சற்று போனான்.நண்பர் ஒருவர் சென்றாண்டு திடீரென்று ஒரு நாள் அழைத்து நீங்கள் நல்ல எழுத்தாளர் , உங்கள் எழுத்தில் கவனம் செலுத்துங்கள் என்றார்.கிலாய்ட்ஸ் இருப்பதால் திருமணம் செய்து கொள்ள முடியாது , எழுத்தாளன் ஆவதற்காவது முயற்சி செய்யச் சொல்லி வாழ்த்துகிறார் என்று புரிந்து கொண்டேன்.நன்றி சொன்னேன்.வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அப்போது ஒரு வீட்டில் மேற்கொண்டு பேசுவதற்கு ஒப்புதல் தெரிவித்தார்கள்.எனக்கு அந்த சம்மந்தம் வேண்டாம் என்று தோன்றியது.உறவினர் ஒருவர் நமக்கே கிலாய்ட்ஸ் எல்லாம் இருக்கிறது, கிடைப்பதை எதற்கு வேண்டாம் என சொல்ல வேண்டும் என்றார்.பஷீர் வாழ்க்கையே ஒரு பெரிய தமாஷ் என்றார்!!!தமாஷ் தான்.

இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் லேபாக்ஷியும் பெனுகொண்டாவும் சென்றேன்.பெனுகொண்டாவில் ஷெர் கான் மசூதி சென்றேன்.பாபையா என்ற சூஃபி தியானம் செய்த இடம் சென்று பார்த்தேன்.இரண்டும் மிகுந்த கிளிர்ச்சியை அளித்த சம்பவங்களாக இருந்தன.அப்போது பஷீர் பற்றி எம்.கே.ஸானு எழுதிய தனிவழியிலோர் ஞானி நூலையும் தர்மானந்த் கோஸாம்பியின் சுயசரிதையையும் வாசித்திருந்தேன்.இருவரும் பெனுகொண்டா போன்ற ஊரில் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.பூதக்கண்ணாடி சிறுகதையை எழுதினேன்.மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.காலச்சுவடு இதழுக்கு அனுப்பினேன்.பிரசுரமானது.கே.என்.செந்தில் கொண்டு வந்த கபாடபுரம் இணைய இதழுக்கு சவரக்கத்தி என்ற சிறுகதையை எழுதினேன்.நீலம் என்ற தந்தைக்கும் மகனுக்குமான கதையை எழுதினேன்.மனல் வீடு சிற்றிதழில் பிரசுரமாகும்.இந்த வருடத்தின் மகிழ்ச்சியான விஷயம் நான் மூன்று சிறுகதைகளை எழுதினேன் என்பதுதான்.திருமணத்தை விட சிறுகதைகள் எழுதினேன் என்பதே பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

தொடர்ந்து எழுத வேண்டும்.எழுத முடியும் என்று தோன்றுகிறது.சுந்தர ராமசாமி புதுமைப்பித்தன் என்றால் சுதந்திரம் என்று சொன்னதாக நினைவின் நதியில் நூலில் ஜெயமோகன் எழுதியிருப்பார்.சிறுகதைகள் எழுதும் போது அந்த சுதந்திரம் வேண்டும் என்று நினைக்கிறேன்.மிக எளிய விஷயங்களிலிருந்து மிக சிக்கலான விஷயம் வரை எதை குறித்தும் எழுதலாம்.அது மிகப்பெரிய தத்துவத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றில்லை.இதுதான் சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த கதை என்று யாரும் சொல்லத் தேவையில்லை.நான் தொடர்ந்து தொடக்கம் – முடிச்சு – முதிர்வு என்ற பாணியிலான கதைகளைத்தான் எழுத விரும்புகிறேன்.ஆனால் அதில் ஒரு தரிசனம் இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன்.தரிசனம் இல்லாமல் எழுதக்கூடாது என்றில்லை.தரிசனம் இருந்தால் எல்லாவற்றையும் இணைத்துவிடலாம்.

நமது சூழலில் இலக்கியம், தீவிர எழுத்து அதன் பொருளிழந்து இருப்பது போல தோன்றுகிறது.எல்லோருமே இதனால் என்ன பிரயோஜனம் என்று மறுபடி மறுபடி கேட்கிறார்கள்.எழுதுபவர்கள் கூட சந்தேகம் கொள்கிறார்கள்.வேறு துறைக்கு போகிறார்கள்.இலக்கியம் ஓர் அறிவுத்துறை.ஸ்டீபன் ஹாக்கிங் இயற்பியல் என்ற அறிவுத்துறையில் இயங்குகிறார்.அவரிடம் நீங்கள் செய்வதன் பயன்மதிப்பு என்ன என்று யாரும் கேட்பதில்லை.ஆனால் இலக்கியவாதியிடம் தொடர்ச்சியாக இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது.அறிவியல்,தத்துவம் போல இலக்கியம் ஓர் அறிவுத்துறை.இலக்கியம் ஒரு போதும் சினிமாவைப் போல சமகால விஷயங்களை பேச முடியாது.அதனால் அது சமகாலத்தில் அதிக கவனத்தை பெற முடியாது.அதன் தளம் வேறு.தஸ்தாயெவ்ஸ்கி எழுதியுள்ளவை இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு பொருந்துகிறது.இது அசாதரணமான விஷயம்.இலக்கியம் சமயம் போன்றதும் கூட.அறிவியலின் சட்டகத்தில் இல்லாதது விழுமியம்.அதை இலக்கியமே கொடுக்க இயலும்.தத்துவம் அதற்கான தர்க்கத்தை அளிக்கும்.மற்ற துறைகள் அதற்கான தரவுகளை அளிக்கும்.இன்றைய தனிமனிதன் நாற்பதுகளில் புதுமைப்பித்தனில் உருவானவன் என்று ஜமாலன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார்.அதுதான் இலக்கியத்தின் பயன்மதிப்பு.ஒரு துறையில் நிறைய கவனம் செலுத்தி அதிலேயே இருந்தால்தான் எதையாவது உருப்படியாக செய்ய முடியும்.எழுத வேண்டுமென்றால் தொடர்ந்து மனம் இதிலேயே இருக்க வேண்டும்.உணர்வுகள் அனைத்தையும் மொழியாக்கி விடுவதற்கான சாத்தியங்கள் கைப்பெற வேண்டும்.வேறு விஷயங்களில் கவனம் இருக்கலாம்.ஆனால் அதை தனது அடையாளமாக எழுத்தாளன் ஒரு போதும் கொள்ளக் கூடாது.இதுதான் நான் எனக்காக கண்டுகொண்ட பதிலும் கூட.நம் சூழலில் எழுத்தை யாரும் பொருட்படுத்துவதில்லை.எந்த அங்கீகாரமும் கிடைக்கப்போவதில்லை.யாரும் வாசிக்கப் போவதில்லை.மேலும் தனிப்பட்ட வாழ்க்கை சிக்கல்கள், வேலை சார்ந்த சிக்கல்கள், பொருளாதார நெருக்கடிகள், உடல் பிரச்சனைகள் என்று நம் வாழ்க்கையில் எவ்வளவோ நிகழலாம்,நிகழ்கிறது.அந்தக் கொந்தளிப்புகளின் போதும் ஒருவன் எழுத்துக்குள் இருக்க வேண்டும்.அடிப்படையில் இதில் ஒரு மகிழ்ச்சி இருக்க வேண்டும்.இருந்தால் மற்றவை பிரச்சனையில்லை.எனக்கு இருக்கிறது.ஆதலால் நான் எழுதுவேன் என்றே நினைக்கிறேன்.பஷீர் எங்கு சென்றாலும் அங்கு ஒரு ரோஜா தோட்டத்தை உருவாக்கியது போல நாமும் உருவாக்கலாம் நமக்கான குட்டிப் பிரபஞ்சத்தை.

தாய்



நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது கணித ஆசிரியர் வீட்டுப் பாடம் செய்யவில்லை என்பதால் தரையில் மண்டியிட சொன்னார்.என்னுடன் சேர்ந்து இன்னும் ஐந்தாறு சிறுவர்களும் இருந்தனர்.பிறகு சட்டையை கழற்றச் சொன்னார்.எவ்வளவு மன்றாடியும் அவர் விடவில்லை.எல்லோரும் சட்டையை கழற்றினோம்.அந்த வகுப்பு முடியும் வரை அப்படியே இருந்தோம்.நான் ஆண்கள் பள்ளியில்தான் படித்தேன்.ஆனால் அன்று மதிய உணவு இடைவேளையில் என் சகோதரன் மற்றும் நண்பர்களுடன் உணவருந்திக் கொண்டிருந்த போது, நண்பர்கள் விஷயத்தை என் அண்ணனிடம் சொன்னார்கள்.நான் அப்போது தலை குனிந்திருந்தேன் என்பது இப்போதும் நினைவில் இருக்கிறது.அதை ஒரு அவமானமாக உணர்ந்திருக்கிறேன், தண்டனையாக அல்ல என்பதை இப்போது அவதானிக்க முடிகிறது.

அந்த ஆசிரியர் பெண்.எனக்கு முப்பது வயது கடந்து விட்டது.இன்று வரை அந்த ஆசிரியரின் மனம் ஏன் அப்படி செயல்பட்டது என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. நான் இதுவரை எந்தக் குழந்தையையும் அடித்ததில்லை.தண்டித்ததில்லை.அப்படி ஒன்றை செய்ய முடியும் என்பதையே என்னால் கற்பனை செய்ய முடியவில்லை.ஆனால் குழந்தைகளை கண்டிக்காமல் வளர்க்க முடியாது என்பதும் உண்மை.

குற்றம் கடிதல் திரைப்படத்தின் மைய கதாபாத்திரம் மெர்லின்.கிறுஸ்துவப் பெண். புரோட்டஸ்டண்ட்.அதிலும் பெந்தகோஸ்தே பிரிவைச் சேர்ந்தவள்.அவள் ரோமன் கத்தொலிக்க பிரிவை சேர்ந்தவள் அல்ல, பெந்தகோஸ்தே என்பதில் இரண்டு செய்திகள் இருக்கிறது.
கத்தொலிக்கர்களை போல புரோட்டஸன்ட் கிறுஸ்துவர்கள் அன்னை மேரியை  முக்கியமாக கருதுவதில்லை.அவர் கிறுஸ்துவின் தாய்.வணக்கத்துக்குரியவர்.அவ்வளவுதான்.பிராத்தனையும் மன்றாடலும் கிறுஸ்துவிடம் மட்டுமே செய்யப்பட வேண்டும்.இந்த அன்னை மேரியின் வழியாக மெர்லின் படத்தின் இறுதியில் மாக்ஸிம் கார்க்கியின் தாயுடன் இணைகிறாள்.இரண்டாவது பெந்தகோஸ்தே போன்ற பிரிவுகளை சேர்ந்துவர்கள்தான் ஆழமான மதப்பற்று உள்ளவர்களாக இருப்பார்கள்.பெரும்பாலும் இந்து மதத்திலிருந்து கிறுஸ்துவத்திற்கு மாறுபவர்கள் இந்தப் பிரிவில் தான் இணைகிறார்கள்.அவர்களுக்கு கிறுஸ்துவை தவிர பிறிதொரு கடவுளை வணங்குவது பெரிய குற்றம்.பிற மதத்தினர் தங்கள் தெய்வத்தை வழிபட்டு கொடுக்கும் பிரசாத உணவை அவர்கள் உண்பதில்லை.பாலியல் உணர்வுகள், சின்னச் சின்ன குற்றங்கள் கூட பெரிய பாவம் என்று போதிக்கப்படுகிறார்கள்.எப்போதும் ஆழமான மன அழுத்தத்தில் இருக்கிறார்கள்.திரைப்படங்களை குறைவாக பார்க்கிறார்கள்.அல்லது குற்றவுணர்வுடன் பார்க்கிறார்கள்.உயிரியல் ரீதியாக நம்மை மகிழ்ச்சியடைய செய்யும் எதுவும் அவர்களால் பாவமாக்கப்படுகிறது.அவர்களின் கூட்டு வழிபாட்டு முறை உளவியல் ரீதியாக பலவீனமானவரை எளிதில் வசீகரிக்கக்கூடியது.கிட்டத்தட்ட மனவசியம் போன்ற வழிபாட்டு முறை அது.

நான் கிறுஸ்துப் பள்ளியில் படித்தேன்.ரோமன் கத்தொலிக்க பள்ளி.அங்கே ஒரு முறை கூட நான் மதமாற்றம் போன்ற விஷயங்களை எதிர்கொண்டதில்லை.மிக ஆரோக்கியமான பள்ளி வாழ்க்கை என்னுடையது.ஆனால் ஏழாம் வகுப்பு படிக்கும் போது சிறிது காலம் டியூஷன் சென்றேன்.அவர்கள் புரோட்டஸ்டண்ட் கிறுஸ்துவர்கள்.அவர் பாதிரியாரும் கூட.வள்ளலார் இறுதி காலத்தில் போதித்தது கிறுஸ்துவம்தான், அதனால் தான் அவர் கொல்லப்பட்டார் என்றார்கள்.எனக்கு என் மதம் குறித்து அப்போதும் பெரிதாக ஒன்றும் தெரியாது.ஆனால் அவர்கள் சொல்வது உண்மையில்லை என்று மட்டும் தெரிந்தது.பிறகு நான் நிறைய நாட்கள் டியூஷன் செல்லவில்லை என்று நினைக்கிறேன்.  

அத்தகைய பிரிவின் போதகரான பெண்ணின் மகள் மெர்லின்.பள்ளி ஆசிரியர்.அவள் மணிகண்டன் என்ற இந்துப்பையனை திருமணம் செய்துக் கொள்கிறாள்.அவளுக்கு தன் அன்னை தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதிலும் தான் இந்து மத அடையாளங்களை ஏற்றுக் கொள்கிறோமே என்பதிலும் குற்றவுணர்வு இருக்கிறது.ஒரு கிறுஸ்துவ பையனை காதலித்திருக்கக்கூடாதா என்று ஏங்குகிறாள்.திருமணத்திற்கான விடுமுறை முடிந்து மறுபடியும் பள்ளிக்கு செல்கிறாள்.அவளை பள்ளியில் விட்டுவிட்டு தன் அலுவலகம் செல்கிறான் மணிகண்டன்.அன்றைய நாளில் பள்ளியில் ஒரு குறும்புக்கார சிறுவனை அடித்துவிடுகிறாள்.அவன் மயங்கி கீழே விழுகிறான்.அவனை மருத்துவமனை எடுத்துச் செல்கிறார்கள்.

பிரச்சனை பெரிதாகிவிடும் என்று பள்ளியின் முதல்வர் அவளையும் அவளது கணவனையும் எங்காவது சென்றுவிட சொல்கிறார்.வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்பதால் தேவாலயம் செல்பவள் அங்கு இருசக்கர வாகனத்தின் கண்ணாடியில் தன் முகம் பார்த்து அழுகிறாள்.பின்னர் நெற்றியில் குங்குமம் இருப்பதை பார்த்து அதை துடைக்கிறாள்.அவள் இந்து மதத்தின் அடையாளங்ளை ஏற்றுக்கொண்டதால் கிறுஸ்து தன்னை தண்டித்துவிட்டார் என்று அவள் மனம் தர்க்கம் புரிகிறது.பெருங்கருணையின் வடிவாக கிறுஸ்து அவளுக்கு அறிமுகாகவில்லை.அவளின் கிறுஸ்து தண்டனைகள் வழங்க வல்லவர்.அடிப்பட்ட மாணவன் செழியனின் மாமா உதயன் இடதுசாரி சிந்தனையாளர்.தொழிற்சங்கத்தில் இருக்கக்கூடும்.படத்தில் காட்டப்படவில்லை.தொழிற்சாலையில் பணிபுரிகிறார்.செழியனின் அன்னை ஆட்டோ ஒட்டுநர்.

காவல் துறையினர் மெர்லின் நேரில் வர வேண்டும் என்று நிர்பந்திக்க மெர்லினும் மணிகண்டனும் சென்னை திரும்புகிறார்கள்.காவல் நிலையம் செல்லாமல் மருத்துவமனை சென்று செழியனின் அன்னையிடம் மன்னிப்பு கேட்கிறாள் மெர்லின்.மெர்லின் பேருந்தில் திரும்ப சென்னை வரும் போது செழியனை பற்றி நினைக்கிறாள்.அவளின் நினைவுகள் ஊடாக சின்னஞ்சிறு கிளியே பாடல் ஒலிக்கிறது.என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய் என்ற வரியில் அவனை பின்தொடர்ந்து அவள் படிகளில் ஏறி செல்கிறாள்.செழியன் அவளது கன்னத்தில் முத்தமிடுகிறான்.அவள் அவனின் அன்னையாகிறாள்.அன்னையான பின் அவளின் மன அழுத்தம் குறைகிறது.செழியனின் அன்னையை பார்த்து மன்னிப்பு கேட்கிறாள்.செழியன் உடல் மீள்கிறான்.மெர்லின் செய்தியாளர் சந்திப்பில் மாணவனை அடித்தது தவறுதான் என்கிறாள்.எல்லாவற்றையும் விட உயிர் முக்கியம் என்கிறாள்.அதன்பின் இந்து அடையாளங்களை கொண்டிருப்பதில் அவளுக்கு குற்றவுணர்வு இல்லை.அவளுக்கு செழியனின் மாமா உதயன் தாய் நாவலை அளிக்கிறார்.செழியனின் அன்னையின் பெயர் படத்தில் எங்கும் வரவில்லை.ஒரு வேளை அவளின் பெயர் மேரியாக இருக்கலாம்.மெர்லின் மேரியை வணங்குகிறாள்.அப்படியாக அவள் மாக்ஸிம் கார்க்கியின் தாயுமாகிறாள்.புரட்சியின் தொடக்கமாகிறாள்.

ஒரு பக்கம் குற்றம் – குற்றவுணர்வு – பாவம் – தியாகம் அல்லது மன்னிப்பு என்ற கிறுஸ்தவ தளத்தில் பயனிக்கும் திரைப்படம், மறுபுறம் பள்ளிக்கூடங்களில் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டிய பாலியல் கல்வி, மாணவர்கள் தண்டிக்கப்படுதலுக்கு பின்னாலுள்ள குற்றம், இடதுசாரி சிந்தனை, பத்திரிக்கையாளர்களின் பொறுப்பற்ற தண்மை என்று நிறைய அடுக்குகளை கொண்டிருக்கிறது.ஆனால் தங்கமீன்கள் திரைப்படத்தில் தனியார் பள்ளிக்கூடங்களை காண்பிப்பது போல இதில் அத்தனை எதிர்மறையாக காண்பிக்கவில்லை.தனியார் பள்ளிகள் குறித்த எதிர்மறையான கேள்விகளை உதயன் கேட்கிறார்.ஆனால் அவரே இவர்கள் ஏதோ பணத்தின் மீது மட்டும் அக்கறை கொண்டவர்கள் அல்ல என்பதையும் புரிந்துகொள்கிறார்.மருத்துவர்கள் கூட நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள்.பத்தரிக்கையாளர்களின் பொறுப்பற்ற தண்மை மட்டும்தான் எதிர்மறையாக காட்டப்பட்டுள்ளது.

இந்தப் படம் யதார்த்த தளத்தில் பள்ளிக்கூட மாணவர்களை அடிக்கக்கூடாது என முன்வைக்கும் போதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம்தான்.ஆனால் அவர்களை கண்டிக்கத்தான் வேண்டும்.ஏப்படி பெரியவர்களின் உலகில் சுரண்டல் இருக்கிறதோ அது போல் சிறியவர்களும் சுரண்டக்கூடியவர்கள்தான்.ஒரே மாற்றம் அவர்களின் சிக்கல்கள் வேறு தளத்திலானவை.நாம் குற்றம் என் கொள்வதிலும் சிறுவர்கள் குற்றம் என கொள்வதிலும் வேறுபாடு உள்ளது.ஆனால் இரு உலகங்களிலும் குற்றம் உள்ளது.ஒரு பள்ளியில் எல்லா குழந்தைகளையும் ஒரு ஆசிரியரால் தன் பிள்ளைகளாக பார்க்க முடியாது.ஏதேனும் ஒரு குழந்தையிடம் மட்டும் முகச்சாயல் காரணமாக , பெயர் காரணமாக , அவர்களின் செயல்கள் காரணமாக தனிப்பட்ட அன்பும் பற்றும் சாத்தியம்.உண்மையில் பற்றற்று சற்று விலகி நின்று அவர்களை கண்டிப்புடன் வளர்ப்பதே ஆசிரியர்களுக்கு சாத்தியம்.ஆனால் அந்த கண்டிப்பின் பெயரில் உடலை துன்புறுத்தக் கூடாது.அவர்கள் அவமானமாக கருதும் தண்டனைகளையும் வழங்கக்கூடாது.ஒருவர் தன் உடல்மொழியால் கூட குழந்தைகளை கட்டுப்படுத்த முடியும்.ஒரு வகுப்பு சூழலை பொறுத்து அந்த ஆசிரியர் எத்தகைய கண்டிப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை அவரே கண்டுபிடிக்க வேண்டும்.

இந்த திரைப்படத்தை பிரம்மா எழுதி இயக்கியுள்ளார்.அற்புதமான காட்சிசார் நுண்ணுணர்வு கொண்டவர்.படத்தின் இசையமைப்பும் பாடல்களும் நன்றாக உள்ளது.காலை நிலா கடல் தாண்டி கரை ஏறுதே பாடலும் சின்னஞ்சிறு கிளியே பாடலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதம் சிறப்பாக உள்ளது.படத்தொகுப்பை சி.எஸ்.பிரேம் செய்திருக்கிறார்.இவர் லெனினிடம் பணிபுரிந்தவர்.இதற்கு முன் இவர் பணிபுரிந்த சில படங்கள் இன்னும் வெளிவரவில்லை.இதுதான் அவர் வேலை செய்து வெளியாகும் முதல் முழுநீளத் திரைப்படம் என்று நினைக்கிறேன்.இந்தப் படத்தில் சிறப்பாக பணிபுரிந்திருக்கிறார்.அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.மெர்லின் கதாபாத்திரத்தில் நடித்த பெண் நாடகத்துறையை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.பாலகிருஷ்ணன் என்ற ஒரு நாடக நடிகர் சென்னையில் ஆங்கில நாடகங்களை அரங்கேற்றி நடிப்பார்.இருவரின் முகச்சாயலும் ஒரே போல இருக்கிறது.உறவுக்காரர்களாக இருக்கலாம்.நன்றாக நடித்திருக்கிறார்.அந்த மன அழுத்தத்தையும் குற்றவுணர்வையும் சிறப்பாக வெளிகொணர்ந்துள்ளார்.மணிகண்டனாக நடித்தவர் பிசாசு படத்திலும் நடித்திருக்கிறார்.மெர்லினை காதலிக்கும் போது அவர் தாடியில்லாமல் நீல நிற சட்டை அணிந்து மகிழ்ச்சியாக இருப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும்.அந்தக் காட்சி நன்றாக இருந்தது.காதல் திருமணமும் அதில் உருவாகும் மன அழுத்தங்களும் ஆண்களை தாடி வளர்க்கச் செய்துவிடுகிறது போலும்!

இன்று நிறைய இளைஞர்கள் மாற்றுப் பொருளாதாரம் குறித்து, நமது அமைப்பின் சிக்கல்கள் குறித்து ஆழமாக சிந்திக்கிறார்கள்.இந்தப் அமைப்பை இப்படியே ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் ,நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கான பாதைகள் இருக்கிறது , அவற்றை நோக்கிச் செல்லலாம் என்கிறார்கள்.பிரம்மா அவர்களில் ஒருவர்.அவர் இன்னும் நிறைய நல்ல திரைப்படங்களை நமக்களிப்பார் என்று தாராளமாக நம்பலாம்.


ட்டய்கு ரியோக்கன் கவிதைகள் (2)




மறத்தல்

நீ என்னை மறந்துவிட்டாயா
அல்லது இந்த பாதையை தொலைத்துவிட்டாயா
நான் உனக்காக காத்திருக்கிறேன்
எல்லா நாட்களும், ஒவ்வொரு நாளும்
ஆனால் நீ தோன்றுவதில்லை.

Have you forgotten me?

have you forgotten me
or lost the path here?
i wait for you
all day, every day
but you do not appear.

ஒர்மை அற்று

ஒர்மை அற்று
பூக்கள் கவர்கின்றன வண்ணத்துப்பூச்சிகளை.
ஒர்மை அற்று
வண்ணத்துப்பூச்சிகள் வருகின்றன மலர்களிடம்.
இருப்பினும் பூக்கள் மலரும் போது
வண்ணத்துப்பூச்சிகள் வருகின்றன
வண்ணத்துப்பூச்சிகள் வரும் போது
பூக்கள் மலர்கின்றன.

No Mind

With no mind, flowers lure the
butterfly;
With no mind, the butterfly visits
the blossoms.
Yet when flowers bloom, the butterfly
comes;
When the butterfly comes, the
flowers bloom.


சுய மதிப்பீடு





ஜெயகாந்தனை பற்றி ரவி சுப்பரமணியன் எடுத்த எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் என்ற ஆவணப்படத்தில் உலகமயமாக்கல் குறித்த கேள்வி ஒன்றிற்கு அதன் நேர்மறையான அம்சங்களை பதிலாக சொல்வார்ெயகாந்தன்.ஆனால் அதனால் உருவாகும் வேறு பாதிப்புகளை பற்றிய அடுத்த கேள்விக்கு, I’m not a scientist, I’m not a ruler, I’m a dreamer என்று பதிலளிப்பார்.இந்த சமூகத்தில் தன்னுடைய பங்கு,வேலை என்ன என்பது குறித்த ஒரு தெளிவு அவரின் பதிலில் இருக்கிறது.அவருடைய இரண்டு கட்டுரை தொகுதிகளின் தலைப்புகள்ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவக் கட்டுரைகள்மற்றும்ஒரு இலக்கியவாதியின் ஆன்மிக அனுபவங்கள்என்பதும்தான்.அவர் சினிமா எடுக்கும் போது, அரசியல் மேடைகளில் பேசும் போது, ஆன்மிக அனுபவங்களை சொல்லும் போதும் - தன்னை ஒரு இலக்கியவாதியாகத்தான் முன்வைக்கிறார்.அவர் எப்போதும் தன் வேலை குறித்த, தன் அடையாளம் குறித்த தன்னுணர்வுடன்  இருந்திருக்கிறார்.இது ஒருவர் தன்னை குறித்து சரியான சுய மதிப்பீடை செய்து கொள்வதால் உருவாவது.

ரஜினிகாந்த் உடல்நலம் குன்றி மீண்டுவந்து ஒரு கூட்டத்தில் பேசும் போது நான் இயக்குனர் அல்ல, எழுத்தாளன் அல்ல, நடிகன்.என் உடல்நலமும் வேகமும் குன்றிவிட்டால் தான் நடிப்பதில் பொருளில்லை என்றார்.அவருக்கு தன்னை குறித்த சரியான மதிப்பீடு இருக்கிறது.அவர் திரையில் தோன்றினாலே படம் வெற்றி அடைந்துவிடும் என்ற கற்பனைகள் சிறிதளவும் அவருக்கில்லை.

மகிழ்ச்சியாக இருப்பதற்கும் சுய திப்பீட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.தன்னை சரியாக மதிப்பீட்டு கொள்ளத் தெரிந்தவர் தனக்கு தெரியாத ஒரு விஷயத்தை செய்வதில்லை.ஒரு தவறிழைத்து விட்டால் சட்டென்று அந்த குற்றவுணர்விலிருந்து தண்ணீர் மறுபடியும் தன்னிலையை அடைவது போல விடுபடுகிறார்.பெரும்பாலும் இத்தகையவர்கள் தங்களுக்கு நன்கு தெரிந்த தங்களால் செய்ய இயன்ற விஷயங்களை மட்டும்தான் செய்கிறார்கள்.இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.இவர்கள் சட்டென்று பாதை மாறி புதிதாக ஒரு விஷயத்தை செய்ய மாட்டார்கள்.தங்களுக்கு சம்மந்தமற்ற இடத்தில் தங்களை பொருத்திக் கொள்ளமாட்டார்கள்.அதனால் இவர்கள் அவமானப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பதில்லை.

ஆனால் இதனால் இவர்கள் புதிதாக எதையும் செய்வதில்லை என்பதையும் பாரக்க வேண்டும்.தங்களுக்கு தெரிந்ததை தொடர்ந்து செய்வதால் அவர்களின் துறைகளில் அநேகமாக வெற்றியும் பெறுகிறார்கள்.மாறாக தாழ்வான சுய மதிப்பீடு கொண்டவர்கள் தங்களால் எதை சரியாக செய்ய இயலும எதை செய்ய இயலாது என்பதில் குழப்பம் கொள்கிறார்கள்.அதனால் முடிவு எடுப்பதில் தடுமாறுகிறார்கள்.தவறான மதிப்பீட்டால் சமயங்களில் அவமானப்படுகிறார்கள்.தாழ்வான சுய மதிப்பீடு கொண்டவர்கள் அவமானப்படும் போது பயங்கரமாக புண்படுகிறார்கள்.பிறருடன் எப்போது தங்களை ஒப்பிட்டுக்கொள்கிறார்கள்.சின்ன சின்ன அவமானங்கள் கூட அவர்களை பெரிய அளவில் பாதிக்கிறது.எப்போதும் பிறரின் மதிப்பீட்டை எதிர்பார்ப்பதால் உருவாகும் அவஸ்தை இது.அதே போல ஒரு சின்ன குற்றத்திற்கு கூட அதிக குற்றவுணர்வு கொள்கிறார்கள்.ஒரு கட்டத்தில் இவர்கள் சுவர்கள் போல இறுக்கமாக மாறி விடுகிறார்கள்.உடைந்தால் அவ்வளவுதான்.மீண்டெழுவது பெரிய விஷயமாகிறது.முக்கியமாக இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை.

தாழ்வான சுய மதிப்பீட்டிற்கும் - பயம், வெட்கம், மனச்சோர்வு, ஏக்கம் மற்றும் சஞ்சலம்,தாழ்வு மனப்பான்மை ஆகிய மனநிலைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.ஒரு செயல் குழப்பமான மதிப்பீட்டுடன் செய்யப்படும் போது அதன் விளைவுகளும் குழப்பங்களை உருவாக்குகிறது.தன்னைப் பற்றிய சரியான மதிப்பீடு இல்லாததால் அவர்களால் வேறு எதையும் சரியாக மதிப்பீடு செய்ய முடிவதில்லை.ஆனால் தாழ்வான சுய மதிப்பீடு உள்ளவர்களுக்கு எப்போதும் நல்லூழ் ஒன்று உண்டு.அவர்களால் தங்களை சரியாக கணிக்க முடியாததால் புதிதான ஒன்றை தங்களுக்கு சற்றும் தெரியாத ஒன்றை செய்துவிடுகிறார்கள்.அது வெற்றி அடையும் போது , மகிழ்ச்சியை அளிக்கும் போது தங்களால் அதை செய்ய இயலும் என்பதை அறியும் போது , அவர்களின் வாழ்வில் முதல் முறையாக வசந்தம் சாத்தியப்படுகிறது.புதிய பயணம் உருவாகுகிறது.மற்றொரு விஷயம் அவர்கள் பெரும்பாலும் வாழ்க்கை முழுவதும் குழப்பத்தில்தான் இருக்கிறார்கள்.அதனால் இத்தகையவர்களே கலைஞர்கள் ஆகிறார்கள்.விதிவிலக்குகள் இருக்கிறார்கள்.எனக்குத் தெரிந்து உயர் சுய மதிப்பீடு கொண்டு கலைஞராக இருக்கும் ஒரே எழுத்தாளர் ஜெயமோகன் மட்டும்தான்!! உயர் மதிப்பீடு கொண்டவர்கள் செயல்பாட்டாளர்களாகவும்,தாழ்வு மதிப்பீடு கொண்டவர்கள் கலைஞர்கள் ஆவதும் தான் இயற்கை.ஏனேனில் உயர் மதிப்பீடு கொண்டவர்களுக்கு இயல்பாகவே தங்கள் முடிவுகளின் மேல் பிடிவாதம் இருக்கிறது.

ஆனால் அதீத உயர் மதிப்பீடு கொண்டவர்களுக்கு சில பிரச்சனைகள் இருக்கிறது. அவர்கள் தங்களை தாக்குபவர்களை மிகத் தீவிரமாக திருப்பி புண்படுத்துகிறார்கள்.ஜெயமோகனிடம் இதைப் பார்க்கலாம்.ஒரு முறை வண்ணநிலவன் சொல்வனத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஜெயமோகன் எல்லாவற்றையும் கதையாக்கி விடுகிறார், உதாரணமாக நீங்கள் ஒரு செய்திதாளை கொடுத்தால் அதையும் கதையாக்கி விடுவார் என்று சொல்லியிருந்தார்.அடுத்த சில நாட்களில் ஒரு கட்டுரையில் ஜெயமோகன் - கடல்புரத்தில் நாவல் ஆண் பெண் சல்லாபத்தை பற்றிய எளிய நாவல் என்று எழுதியிருந்தார்.அந்த நாவல் மரபான உற்பத்தி முறை இருக்கும் போது தொழில்நுட்பத்தால் உருவாகும் புதிய உற்பத்தி முறை மனித உறவுகளுக்கு மத்தியில் உருவாக்கும் நெருக்கடியை பேசும் நாவல்.சுமாரான வாசிப்புப் பழக்கம் உள்ளவர் கூட அதை உணரலாம்.ஜெயமோகன் அதை நன்கு அறிவார்.ஆனால் அந்த நேரத்தில் அவர் வண்ணநிலவனை பற்றி அப்படி எழுதியாக வேண்டிய தளத்திற்கு சென்று சேர்கிறார்.அது அதீத உயர் மதிப்பீட்டால் உருவாகும் பிரச்சனையும் கூட.

கலைத்துறையை அல்லது விஞ்ஞானத்துறையை சாராத ஒருவர் தாழ்வு மதிப்பீடு கொண்டவராக இருந்தால் அது அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய கொந்தளிப்புகளை உருவாக்கும்.ைத்துறயினருக்கும் விஞ்ஞானிகளுக்கும் மாறாக அது பயன் அளிக்கிறது.ஏனேனில் அவர்கள் தாழ்வு மதிப்பீடால் தாங்கள் செய்வதை மிக் சரியாக செய்ய முனைகிறார்கள்.பிறர் முதலில் தங்களுக்கு அப்படியான ஒரு சிக்கல் இருக்கிறது என்பதை அறிய வேண்டும்.ஒரளவுக்கு சுய பரிசீலனை செய்ய முடிந்தால் அதைக் கண்டுபிடித்து விடலாம்.பிறகு அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பது குறித்து ஆராயலாம்.

தாழ்வான சுய மதிப்பீடு உருவாவதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது.பால்ய காலத்தில் உருவாகும் தனிமை, பாலியல் சிக்கல்கள், அடையாள சிக்கல்கள்,கொடூரமான அவமானம், இவைகள் முக்கியமானவை.எல்லாவற்றையும் விட ஒருவரின் இயல்பான குணம்.ஒரே போன்ற அனுபவங்களை கொள்ளும் இருவரில் ஒருவர் அதனால் புண்படுவதும் மற்றவர் அதை இயல்பான விஷயமாக பார்ப்பதற்கும் குணத்திலிருந்து வரும் சுய மதிப்பீடும் காரணம்.சமூக மதிப்பீட்டிற்கும் சுய மதிப்பீட்டிற்கும் கூட உறவு இருக்கிறது.சிலர் தங்களின் கிராம பெயரை குல தெய்வத்தின் பெயரை சொல்வதற்கு வெடகப்படுவதை பார்த்திருக்கிறேன்.இந்த தாழ்வு ப்பான்மை தன்னை குறித்து பிறர் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்திலிருந்து உருவாவது.தன்னை தாழ்வாகவும் பிறரை உயர்வாகவும் கருதும் எண்ணம் இதிலிருக்கிறது.தாழ்வு மதிப்பீட்டின் முக்கியமான பிரச்சனை தனக்கு எதையும் சரியாக செய்யத் தெரியாது என்ற எண்ணம்தான்.நகரத்து மனிதர்கள் விஷயம் அறிந்தவர்கள், கிராமத்தவர்கள் விஷயம் அறியாதவர்கள் என்ற சமூக மதிப்பீடு ஒருவர் தன்னைப்பற்றி கொள்ளும் தாழ்வு மதிப்பீடாக உருமாறலாம்.இங்கு தாழ்வின் காரணம் நகரம் X கிராமம் என்ற எதிரடைவுகள்தான்.சமூகத்தின் வரலாற்று போக்கை புரிந்து கொள்ளும் போது அவர்களுக்கு இந்த தாழ்வு மதிப்பீடும் அதனாலான தாழ்வு ப்பான்மையும் விலகலாம்.ந்த மதிப்பீடுகள் பல்வேறு அடுக்குகளை கொண்ட மனம் சம்பந்தப்பட்ட ஒரு சிக்கல்.ஆனால் ஒருவர் அதை உணரும் போதே பாதி சிக்கலை கடந்துவிடுகிறார்.அதன் பின் அவர் செய்ய வேண்டியது சுய பரிசீலனை.பிறகு ஆலோசனைகளும் புத்தகங்களும் உதவலாம்.ஒரு நல்ல வெற்றி அவருக்கு தன்னை குறித்த நம்பிக்கையை அளிக்கலாம். மேலே சொன்னது போல குணம் கூட முக்கிய காரணம்தான். ஆனால் தன்னுணர்வுதான் இந்த சிக்கலிலிருந்து விடுபட முதல் படி.