உளவியல் பாடங்கள்பல வருடங்களுக்கு முன் தற்செயலாக ஒரு பெண் என் வாழ்க்கைக்குள் வந்தாள்.அவளாகவேதான் வந்தாள்.என்னை உணர்வு ரீதியில் சுரண்டினாள்.அந்தப் பெண்ணுடனான தொடர்பிலிருந்து விலக முடியவில்லை.சூழலில் மாட்டிக்கொண்டது போல.அவள் ஒரு சோஷியோபாத் என்பதும் ஹிஸ்டோரானிக்(histrionic) என்கிற ஆளுமைச் சிக்கல் உள்ளவள் என்பதெல்லாம் மிகவும் பின்னர் அவளுடனான உறவு முறிந்தபின் புரிந்து கொண்டேன்.இருண்மையான பெண்.தீமையின் உருவம்.ஒரு ஆணை மண்டியிட வைத்து இரு கைகளாலும் மாரிலும் வயிற்றிலும் வெற்றி பெற்று விட்டேன் , வெற்றி பெற்று விட்டேன் என்று ஓங்கி அறைந்து கொள்ள விரும்பும் அற்பப் புழு.இன்று நினைக்கும் போது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.என் தரப்பிலிருந்த முக்கிய சிக்கல் என்னைப்பற்றி எனக்கிருந்த தாழ்வான சுய மதிப்பீடு.சோஷியாபாத்துகள் இத்தகையோரை கண்டுகொண்டு அவர்களை தேர்வு செய்கிறார்கள்.சுரண்டுகிறார்கள்.சிதைக்கிறார்கள்.இனி செய்ய ஒன்றுமில்லை என்ற பின் அடுத்த தேர்வை நோக்கி நகர்கிறார்கள்.அவர்களுக்கு குற்றவுணர்வு இருப்பதில்லை,அறவுணர்வு இருப்பதில்லை.சோஷியோபாத்துகளை பொறுத்தவரை அவர்கள் தான் இறுதியில் உறவை முறிக்க வேண்டும்.நாம் முறித்தால் எப்படியும் திரும்ப வருவார்கள்.அது போல முறிந்திருந்த எங்கள் உறவில் அவளாகவே திரும்ப வந்து என்னை மண்டியிட வைத்து என் ஆன்மாவை சிதைத்து வெற்றி பெற்று விட்டேன் வெற்றி பெற்று விட்டேன் என்று கூக்குரலிட்டுக்கொண்டு விலகி ஓடிய சமயத்தில் தற்கொலை செய்து கொள்ள தோன்றியது.

சோஷியோபாத்துகளை பொறுத்தவரை அவர்கள் முதலில் ஒருவனை மதிப்பீடுகிறார்கள். நம்மை பிடித்திருக்கிறது என்பார்கள்.உங்களை போல ஒருவரை சந்தித்தில்லை என்பார்கள். பின்னர் நெருங்குவார்கள்.ஏதோ ஒரு கட்டத்தில் நாம் உணர்வு ரீதியாக அவர்களை சார்ந்து இருக்கும் படி செய்துவிடுவார்கள்.மிக நுட்பமாக உங்களின் சுய மதிப்பீட்டை குலைப்பார்கள்.உங்களுக்கு அந்த உறவில் ஏதோ ஒரு சிக்கல் இருப்பது தெரியும்.நீங்கள் கோபப்பட்டு அவர்களை கேட்கும் போது உங்களை குழப்புவார்கள்.இதற்கு பெயர் Gas Lighting.மிக எளிதாக உங்களை அவர்கள் கையாள்வார்கள்.நீங்கள் அவர்களை உணர்வு ரீதியில் சார்ந்து இருப்பதால் விலகவும் முடியாது.உங்களை உணர்வு ரீதியிலான சூழலில் சிக்க வைத்துவிட்டு அதைக்கொண்டே காய் நகர்த்துவார்கள்.அவர்களுக்கு உங்கள் உணர்வுகள் ஒரு பொருட்டே அல்ல.அவர்கள் கையில் உள்ள விளையாட்டு பொருள் நீங்கள்.அவ்வளவுதான்.

அவர்கள் ஒரு இரைக்கொல்லி.அவர்களுக்கு எப்போதும் ஒரு இரை இருந்துகொண்டே இருக்க வேண்டும்.அந்த இரை அவர்களின் இருப்புக்காக ஏங்க வேண்டும்.அதை அவர்கள் ரசிப்பார்கள்.அவர்களுக்கு நிஜ வாழ்க்கையில் உண்மையில் செய்ய ஒன்றுமே இருக்காது.ஏதேனும் த்ரில்லான சம்பவம் அவர்களுக்கு நடந்து கொண்டே இருக்க வேண்டும்.அவர்களுக்கு உண்மையில் வெட்கம்,குற்றவுணர்வு,அறவுணர்வு,புரிந்துணர்வு ஆகியவை இருப்பதில்லை.புரிந்துணர்வு மனிதர்களுக்கு மிகவும் முக்கியம்.ஒருவர் கஷ்டப்படுகிறார் என்கிற போது அவர் நிலையில் நம்மை வைத்து பார்க்கும் உணர்வு.மிகப்பெரிய லட்சியவாதங்களுக்கு பின்னால் இந்த புரிந்துணர்வுதான் இருக்கிறது.திருநங்கைகள் ஏன் கூத்தாண்டவர் கோயிலில் அரவானை திருமணம் செய்து தாலி அறுக்கிறார்கள்.ஒரு தொன்ம கதாபாத்திரத்துடன் தங்களை தொடர்பு கொள்வதன் மூலமாக தங்களை இருப்பை அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள்.அவர்களால் சமகாலத்தில் உள்ள மனிதர்களிடம் தங்களை வேதனையை புரிய வைக்க முடிவதில்லை.அந்த புரிந்துணர்வு மைய சமூகத்தில் இல்லை.அவர்கள் கேலிக்குரியவர்களாகத்தான் பார்க்கப் படுகிறார்கள்.இத்தகைய புரிந்துணர்வு சோஷியோபாத்துகளுக்கு முற்றிலும் இருப்பதில்லை.அவர்களுக்கு நீங்கள் பேசுவதே புரியாது.நீங்கள் உங்கள் துயரங்களை சொல்லும் போது அவர்கள் மரத்துப்போய் அமர்ந்திருப்பார்கள்.உங்களுக்கு நாம் வேறு பாஷையில் பேசுகிறோமோ என்ற சந்தேகம் எழும்.சோஷியோபாத்துகள் தாங்கள் வெளிப்பட்டுவிடுவோமோ என்று மட்டும் அஞ்சுவார்கள்.ஏனேனில் அது அவர்கள் அடுத்த இரையை அடைவதற்கு தடையாக இருக்கும்.

ஹிஸ்டோரனிக்(Histrionic) என்கிற ஆளுமைச் சிக்கல் இன்னும் விசேஷமானது.உங்களை முதல் முறை பார்க்கும் போதே ஏதோ நீண்ட நாட்கள் பழகியது போல பேசுவார்கள்.உங்களுக்கும் அவர்களுக்கும் ஒரு அந்தரங்கமான உறவு இருப்பதாக கற்பிதம் செய்து கொள்வார்கள்.அதன் அடிப்படையில் உங்களுடன் பழுகுவார்கள்.எனக்கு அந்தப் பெண்ணின் பெயரை தவிர வேறு எதுவும் தெரியாத போதே உங்களை மிகவும் பிடித்திருக்கிறது என்று குறுஞ்செய்தி  அனுப்பினாள்.அவர்கள் எப்படியாவது தாங்கள் ஈர்ப்புக்குரியவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.Introjection என சொல்லப்படும் பிறரின் எண்ணங்களுக்கு கருத்துக்களுக்கு எளிதல் ஆட்படுவது இவர்களிடம் அதிகம் இருக்கும்.ஏனேனில் இவர்களக்கு தனிப்பட்ட முறையில் பெரிய கருத்துக்கள் எதுவும் இருக்காது.இவர்களின் எதிர்வினைகள் எல்லாமே மிகவும் மேலோட்டமானது.முற்றிலும் ஆழமில்லாதவர்கள்.உங்களின் துயரத்தின் போது ஐயகோ என்பார்கள்.ஆனால் அவர்களுக்கு நீங்கள் சொல்வதன் பொருள் கூட சரியாக விளங்கியிருக்காது.பொது இடங்களில் மிகவும் எளிதில் பேசக்கூடியவராக , வேடிக்கையானவராக தங்களை காட்டிக்கொள்வார்கள்.இவர்களுடன் உறவில் இருப்பவர்கள் தொடர்ந்து இவர்களை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.தங்களின் ஒவ்வொரு செயலும் பாரட்டப்பட வேண்டும் என்று ஏங்குவார்கள்.எல்லோரும் அரிதாரம் பூசிக்கொண்டு  வரும் இடத்திற்கு எளிதான உடைகளில் வந்து கவனத்தை ஈர்ப்பார்கள்.தங்களுக்கு அரிதாரம் போன்ற விஷயங்களில் நம்பிக்கை இல்லை என்று பேசுவார்கள்.இத்தகைய குணம் கொண்டவர்கள் பெண்களாக இருக்கும் போது அவர்கள் ஆண்களின் மத்தியில் தான் இருக்கிறார்கள்.ஏனேனில் ஆண்கள் தானே பெண்னை கவனிப்பார்கள்.டாம் பாய் போல வலம் வருவார்கள்.ஆண்களுடன் அமர்ந்து கொண்டு பெண்களை கேலி செய்வார்கள்.தங்களை பலம் பொருந்தியவர்களாக எண்ணிக் கொள்வார்கள்.தாங்கள் எல்லா ஆண்களின் கவனத்திலும் இருக்கிறோம் என்பது அவர்களுக்கு கட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கும்.இவர்கள் பொதுவாக தாழ்வு மணப்பாண்மை உள்ளவர்கள்.டாம் பாய் எல்லோரும் ஹிஸ்டோரினிக் அல்ல என்பது வேறு விஷயம்.இவர்கள் காதல் போன்ற உறவை கொண்டாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அந்த உறவில் இவர்களால் ஈடுபட முடியாது.அந்த உறவு முறிந்து விடும்.மிகவும் அந்தரங்கமாக இவர்களால் ஒருவரை காதலிக்க முடியாது.பின்னர் மிகவும் மனச்சோர்வுக்கு உள்ளாவார்கள்.இவர்கள் காதலில் அல்லது நட்பான ஒரு உறவில் இருக்கும் போது கூட ஒரு கதாபாத்திரமாகவே இவர்கள் செயல்படுகிறார்கள்.ஒன்று இளவரசியாக அல்லது வஞ்சிக்கப்பட்டவளாக.ஒரு சமமான உறவில் இவர்களால் இருக்கவே முடியாது.வயது முதிர முதிர இவர்கள் தோழி காதலி என்ற கதாபாத்திரங்களை துறந்து தாய் என்ற கதாபாத்திரத்தின் மூலம் கூட சுரண்டுவார்கள்.

இவர்கள் சோஷியோபாத்துகளாகவும் இருக்கும் போது இவர்களின் செயல்களில் வேடிக்கையான பல விஷயங்கள் இருக்கும்.மிகவும் தனிமைப்பட்டுப் போன மனிதர்களையே இவர்கள் தங்கள் நட்பாக தேர்வு செய்கிறார்கள்.அதன் மூலம் அவர்களுக்கான ரட்சகர்களாக தங்களை முன்நிறுத்துகிறார்கள்.தனிமைப்பட்டுப் போன மனிதர்கள் தங்களிடம் இன்முகத்துடன் நடந்து கொள்கிறார் என்பதால் இவர்களை புகழ்கிறார்கள்.அது இவர்களை மகிழ்விக்கிறது.ஒரு கட்டத்தில் இவர்களுக்கு அந்த மனிதர் சலிப்பாக மாறிவிடுவார்.அவர்கள் விலகுவார்கள்.வேறு இரையை தேடுவார்கள்.அப்போது அது காதலோ , நட்போ அந்த உறவை முறித்துவிடுவார்கள்.ஆனால் அவர்கள் தான் முறிக்க வேண்டும்.நாம் முறித்தால் மறுபடி வந்து முறித்துவிடுவார்கள்.அதன்பின் நீங்கள் எத்தனை முயற்சித்தாலும் முட்டினாலும் அவர்கள் உங்களை கண்டு கொள்ளவே மாட்டார்கள்.நம் உறவு அத்தனை அந்தரங்கமாக நெருக்கமாக இருந்ததே பிறகு ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று நீங்கள் குழம்புவீர்கள்.ஆனால் அவர்களின் மன ஆழத்தில் நீங்கள் எப்போதும் இருந்திருக்க மாட்டீர்கள்.சிலருக்கு ஆரம்பத்தில் உண்மையான ஒரு ஈர்ப்பு இருந்திருக்கலாம்.ஆனால் காலப்போக்கில் அதெல்லாம் மறைந்துவிடும்.அவர் கண்டு கொள்ளாத போது நீங்கள் மேலும் மேலும் முட்டுவீர்கள்.அவர்கள் மெல்லிதாக ஏளனத்துடன் உங்களை பார்த்து சிரிப்பார்கள்.ஏனேனில் இப்போது நீங்கள் அவரின் கைப்பாவை ஆகிவிட்டீர்கள்.ஆனால் உங்கள் மீது அவருக்கு சலிப்பு வந்துவிட்டது.இதற்கு பெயர் Stone Walling.உண்மையில் அவர்களுடனான உறவில் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை எல்லாமே அவர்களால் கட்டமைக்கப்பட்டது.எதுவுமே உண்மையில்லை.

சிறுவயதில் ஏற்பட்ட அகச்சிக்கல்கள் அல்லது உயிரியல் ரீதியிலான காரணத்தால் இதெல்லாம் ஒருவருக்கு வரலாம் என்று தெரிகிறது.முக்கியமாக இவர்களுக்கு ஆரோக்கியமான பதின்ம பருவம் இருப்பதில்லை.இந்த பருவத்தில்தான் ஒருவரின் ஆளுமை உருவாகிறது.இவர்கள் இந்தக் காலத்தில் முழுவதும் சிதைந்து இருக்கிறார்கள்.ஒரு சிதைவான ஆளுமையாக உருவாகும் இவர்களின் உலகம் சிதைவாகத்தான் இருக்கிறது.அவர்களுக்கு நீண்ட கால கனவுகள் இருப்பதில்லை.மிகவும் வெறுமையாக இருக்கிறார்கள்.அப்படி கனவுகளோடு இருப்பவர்களை கண்டு பொறாமை படுகிறார்கள்.அவர்களை அழிக்க முடிந்தால் அழித்துவிடுகிறார்கள்.இவர்களை பழிவாங்க வேண்டும் என்றால் இவர்களை முழுக்க புறக்கணிக்க வேண்டும்.அவர்கள் ஆட்டத்தில் நாம் இல்லை என்று முடிவு செய்ய வேண்டும்.அவர்களை பழிவாங்க முயல்வது கூட அவர்கள் ஆட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று சொல்வது போலத்தான்.சோஷியோபாத்துகள் ஒரு விஷயத்திற்குத்தான் மிகவும் பயப்படுகிறார்கள்.தாங்கள் வெளிப்பட்டுவிடுவோமோ என்று அஞ்சுகிறார்கள்.உங்களுக்கு அவர்கள் யார் என்ற தெரிந்துவிட்டது என்று அவர்கள் அறிந்தால் உங்களை மறுபடி தொடர்பு கொள்ளவே மாட்டார்கள்.

எப்போது அந்தப் பெண் ஒரு சோஷியோபாத் என்பது புரிந்ததோ உண்மையில் அன்றே அந்தப் பெண்னை பழிவாங்கும் எண்ணமும் போய்விட்டது.ஏனேனில் அந்தப் பெண் மீதான ஈர்ப்பு போய்விட்டது.அந்த வித்யாசமான குணம் தான் என்னை மிகவும் இம்சித்தது.ஏன் அவள் குற்றவுணர்வு கொள்வதில்லை,ஏன் அவளிடம் அறவுணர்வு இல்லை என்பது எல்லாம் குழப்பமாக இருந்தது.அதனை புரிந்துகொள்ளும் ஒரு கருவி கிடைத்தவுடன் அவள் மீதான பகையும் போய்விட்டது.உண்மையில் பல சமயங்களில் தர்க்கம் போல விடுதலையை அளிக்கும் கருவி வேறில்லை.

மரப்பசுமரப்பசு நாவல் அம்மணி என்கிற பெண் தன்னைப் பற்றி சொல்லும் கதை.அவள் சிறு வயதில் கண்டு மாமாவின் மாம்பல உடம்பை பார்ப்பதிலிருந்து முப்பத்தி எட்டு வயதில் ப்ரூஸ் என்கிற இளைஞனுடன் அவள் கொள்ளும் உறவு வரை கதை செல்கிறது.அவளுக்கு கண்டு மாமா தன் பெண்ணுக்கு இழைத்த அநீதியால் திருமணம் குறித்த கசப்பு ஏற்படுகிறது.அவளுக்கு கோபாலி என்ற பாடகரின் குரலின் மீது சிறு வயதிலிருந்தே பெரும் ஈர்ப்பு உண்டு.அவளுடைய இருபதுகளில் அவரிடம் சென்று சேர்கிறாள்.பின்னர் கோபாலி அவளை சந்தேகப்படவும் அந்த சந்தேகத்தை நிஜமாக்குகிறாள்.பரதம் கற்கிறாள்.வெளிநாடுகளுக்கு செல்கிறாள்.ஒரு முறை ப்ரூஸை சந்திக்கிறாள்.அவள் அவனின் வருங்கால முதுமையை நினைவூட்டுகிறான்.அவள் அதன்பின் பட்டாபியை உடைமையாக்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்கிறாள்.

அவள் எம்.. வரை படிக்கிறாள்.கோபாலி அவள் அழகுக்காக அமைத்து தரும் செளகரியங்களை ஏற்றுக்கொள்கிறாள்.கோபாலியை சுரண்டுகிறாள்.கோபாலிக்கு பிற ஆண்களுடன் அவள் பழகுவது பிடிக்காத போது அதை செய்து அவரை சீண்டுகிறாள்.கோபாலியின் மருமகன் பட்டாபியை அவளே விரும்பி உடலுறவு கொள்கிறாள்.அவனை குற்றவுணர்வு கொள்ளச் செய்கிறாள்.அவளுக்கு பிடிக்காத சுந்தரித்திடம் உறவு கொள்ள மறுக்கிறாள்.அவள் வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை.அவளுக்கு பிடித்த சோம்பேறித்தனமான எளிதான வாழ்வை வாழ்கிறாள்.எந்த உழைப்பும் இல்லாமல் எந்த பொறுப்புணர்வோடும் இல்லாமல் இருக்கிறாள்.இறுதியில் அவளின் முதுமையை நினைக்கும் போது மரணித்து விட்ட பசுவுடனும் மரத்தாலான பசுவுடனும் ஒப்பிட்டுக்கொள்கிறாள்.இறுதியில் தன் உழைப்பால் முன்னேறி கல்கத்தாவில் வேலையில் இருக்கும் பட்டாபியை சென்னை வந்து தன்னுடன் தங்கச் சொல்வதுடன் நாவல் முடிகிறது.பட்டாபி அவளின் துணிகளை மடித்து வைக்கிறான்.சமைத்துக் கொடுக்கிறான்.அவளாக வந்து அழைக்கும் போது உறவு கொள்கிறான்.அவளுக்கு அவனை பிடித்திருக்கிறது.

ஜானகிராமன் நாவல்களில் உள்ள முக்கிய விஷயம் மைய கதாபாத்திரங்களுக்கு இணையான அல்லது ஒப்பிடக்கூடிய குறுங் கதாபாத்திரங்களை அவர் உருவாக்குவது.மோகமுள் நாவலில் பாபுவின் இன்னொரு வடிவமாக தங்கம்மாள் வருகிறாள்.இந்த நாவலில் அப்படியாக மரகதம் என்கிற பெண் வருகிறாள்.அம்மணியின் வீட்டில் வேலை செய்யும் பச்சையப்பனின் மனைவியாகிறாள் மரகதம்.பேரழகி.அவள் மீதும் கோபாலி மையம் கொள்கிறான்.அவள் அந்த வேலையை விட்டுவிட்டு பச்சையப்பனை அழைத்துக்கொண்டு வடபழனி சென்று தங்குகிறாள்.கோபாலி தன்னால் மிகவும் துன்புறுகிறார் என்றும் அங்கே இருந்தால் பச்சையப்பனின் கதியும் தன் கதியும் என்னாகும் என்பதால் வேலையை விட்டுவிட்டதாக அம்மணியிடம் சொல்கிறாள் மரகதம்.

மரகதம் நினைத்திருந்தால் அம்மணி போலவே கோபாலியை சுரண்டி அம்மணியை விட செளகரியமாக வாழந்திருக்க முடியும்.பச்சையப்பனை ஒன்று துரத்தியிருக்க முடியும் அல்லது அடிமையாக உடன் வைத்திருக்க முடியும்.அவள் தனது நிலைமை,பச்சையப்பனின் வாழ்க்கை,கோபாலியின் தவிப்பு ஆகிய மூன்றையும் கணக்கில் கொண்டு வேலையை விடும் முடிவுக்கு வருகிறாள்.இத்தனைக்கும் அவளுக்கு கோபாலி மீது அசூயை இல்லை.இது அம்மணி மிகத் தீவிரமாக வெட்கம் அடையச் செய்கிறது.அவள் தன் செளகரியமான வாழ்க்கை மீது அருவெருப்பு கொள்கிறாள்.அவள் அங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்று முடிவு செய்கிறாள்.பட்டாபி தனக்கு ஏதேனும் வேலைக்கான வழியை காட்டக்கூடும் என்று கருதுகிறாள்.அவள் முதல்முறையாக உழைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.மரகதம் கோபாலியை பற்றி சொல்லும் போது அவர் மிகவும் துன்புறுவதை பார்த்து நான் இளகிவிட்டால் என்னவாவது என்கிறாள்.அம்மணி அப்படி யாருக்காகவும் இளகுவதில்லை.சுந்தரத்தை பட்டாபி காந்தம் போல தூக்குவதை ரசிக்கிறாள்.அவள் சொல்லும் நான் எல்லோரையும் தொட்டு விட விரும்புகிறேன் என்பதில் உண்மையாக பெரிதாக ஒன்றும் இல்லை என்பதை அவளே அறிகிறாள்.ரயிலில் பென்னட் உடம்பெல்லாம் அழுகிச் சொட்டுகிற ஒரு மனிதரிடம் இதே மாதிரி செய்வீர்களா எனும் கேள்விக்கு மழுப்பலான பதிலைத்தான் அவளால் அளிக்க முடிகிறது.அவள் விரும்பும் ஆண்களுடன் உறவு கொள்கிறாள்.செளகரியமாக இருக்கிறாள்.இறுதியில் ப்ரூஸ் அவளின் முதுமை பற்றி கேட்கும் போதும் மரகதத்தோடு தன்னை ஒப்பிட்டு கொண்டும் அவற்றிலிருந்து மீள்கிறாள்.

சிறு வயது குழந்தையாக அம்மணி  கண்டு மாமாவை பார்க்கும் விதம்.அந்த வயதில் உடல் மீது அவளுக்கு ஏற்படும் ஈர்ப்பு.இதை எழுதுவது அத்தனை எளிதல்ல.அதற்கு அபாரமான தைரியம் மட்டுமல்ல,அதில் உண்மை இருக்கிறது என்ற நம்பிக்கையும் இல்லாவிட்டால் அதை எழுத முடியாது.நாம் குழந்தைகளை பார்த்தால் என்னம்மா படிக்கிறே என்று கேட்கிறோம்.கன்னத்தை பிடித்து கிள்ளுகிறோம்.அபத்தமாக ஏதோ பேசுகிறோம்.குழந்தைகளின் உலகம் குறித்த எளிய புரிதல் கூட நமக்கு இருப்பதில்லை.அவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரிவதில்லை.ஒரு வயதானவருடன் பேசும் அதே தீவிரத்துடன் ஒரு குழுந்தையுடனும் பேச முடியும்.பேசும் விஷயங்கள் மாறுபடும் அவ்வளவுதான்.நமக்கு அதை எல்லாம் புரிந்துகொள்ள அவகாசம் இருப்பதில்லை.அம்மணியின் சிறு வயது பார்வை நாவலை முக்கியமாக்குகிறது.

மற்றபடி இந்த நாவல் உண்மையில் இன்னும் ஐம்பது வருடங்களில் கழித்து எந்த முக்கியத்துவத்தையும் கொண்டிருக்காது என்றுதான் தோன்றுகிறது. பெண்ணின் அகம் குறித்து அறிந்துகொள்ள விரும்பும் ஒரு குறுகுறுப்புக்கு அப்பால் நாவலில் பெரிதாக ஒன்றுமில்லை.முன்னர் இருந்தை விட பெண்ணின் அகம் குறித்த ஆணின் குறுகுறுப்பு நிறைய குறைந்திருக்கிறது.வருங்காலங்களில் இன்னும் நிறைய குறையும்.இந்த நாவலை விட உயிர்த்தேன் இன்னும் தீவிரமான நாவல் என்று நினைக்கிறேன்.

மரப்பசு - தி.ஜானகிராமன் - ஐந்தினைப் பதிப்பகம்