கோடைக்காலம்


சுகுமாரனின் கவிதை ஒன்றில் இப்படி ஒரு வரி வரும்

திரும்ப முடியுமா பறவைகள் முட்டைகளுக்கு

ரஸ்கோல்நிகோவ் - சோனியா
நாம் நம் கருப்பையின் பாதுகாப்பிற்கு

சுயம்புலிங்கத்தின் கவிதைகள் இரண்டு இப்படி இருக்கும்

1. அதோ காற்று மேகத்தை இழுத்து செல்கிறது

மேகத்தை பிடி மடக்கு பணிய வை.

2.பறவை நம் தானியங்களை திண்கிறது.

இரக்கம் காட்டாதே

தெறி. 

                                                                                           

சொற்கள் சரியாக நினைவில்லை.ஆனால் மேலேயுள்ள சுகுமாரனின் கவிதைகளுக்கும் , சுயம்புலிங்கத்தின் கவிதைகளுக்கும் நெருக்கம் உண்டு.

கருப்பையின் பாதுகாப்பிற்கு திரும்ப யத்தனிக்கும் ஒருவன் ஒரு கட்டத்தில் தானியங்களை கொத்தி திண்ணும் பறவையை தெறிக்கிறான்.மேகத்தை பணிய வைக்கிறான்.பற்றிக்கொள்ள ஒரு கரத்தை எதிர்பார்த்து தவிக்கும் ஒருவன் வாழ்வின் கருணையற்ற கொடிய கரங்கள் முன் குரூரத்தின், வன்மத்தின் பாதையை தேர்வு செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறான்.மிகவும் வன்மம் கொண்டவர்களையும் இறுக்காமானவர்களையும் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.அவர்கள் எதையும் செய்யும் துணிச்சல்கொண்டவர்கள் போல இருப்பார்கள்.ஆனால் அவர்கள் உண்மையில் மிகுந்த அச்சத்தோடும், பாதுகாப்பின்மையோடும் இருப்பதை அவதானித்திருக்கிறேன்.என் உறவினர் ஒருவரை நான் சிறுவயதிலிருந்து பார்த்துவருகிறேன்.மிகவும் இறுக்கமானவர்.கோபக்காரர்.அவர் எதற்கும் அச்சப்பட மாட்டார் என்றுதான் சிறுவயதில் நினைத்திருந்தேன்.ஆனால் அவர் வாழ்வின் ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளும் முடிவிலிருந்ததாகவும் அவரது சகோதரரின் முயற்சியால் மீண்டதாகவும் தெரிந்துகொண்டேன்.இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அவருடைய சகோதரர் எதை பற்றியும் கவலைபடாதவர் போல் காட்சியளிப்பார்.ஆனால் அவர்தான் என் உறவினரின் வாழ்வின் சிக்கல்களை எளிதாக அனுகுவதற்கான மூளையாக செயல்பட்டிருக்கிறார்.பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் மனப்பிறழ்வு நிலைக்கு செல்லும் அருணாச்சலம் நாகம்மை மூலம் மீள்கிறார்.நாம் நம் கருப்பையின் பாதுகாப்பிற்கு என்ற சுகுமாரனின் வரியும் அருணாச்சலம் நாகம்மையிடம் அடையும் மீட்பும் நெருக்கமானவை.

Strength comes from Strength என்று கரமசோவ் சகோதரர்கள் நாவலில் ஒரு வரி வரும்.நாம் நம்மை வாழ்வின் நெருக்கடி காரணமாக வேறொருவராக உருமாற்றிக்கொள்கிறோம்.குரூரத்தோடும் வன்மத்தோடும் வாழ்க்கையை கடத்தும் ஒவ்வொருவரும் பாதுக்காப்பின்மை காரணமாகத்தான் அப்படி செய்கிறார்களா.இருக்கலாம்.ஏனேனில் நாம் எப்போதும் வாழ்வது கோடைக்காலத்தில் இல்லையா.