கடல்புரத்தில்





லாஞ்சிகள் இல்லாதிருந்து , எல்லோரும் வல்லங்களையும் , நாட்டுப்படகுகளையும் மட்டும் உபயோகபடுத்திக்கொண்டிருந்திருந்தால்:

* பிலோமி சாமிதாஸின் திருமணம் நடந்திருக்கும்.

* ஜசக்கிற்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்காது.

* ரொசாரியோ இறந்து போயிருக்கமாட்டான்.

* குருஸூ மனம் குழந்தைபோல ஆகியிருக்காது.

* கடல்புரத்து ஊர் திரிந்திருக்காது.

உற்பத்தி முறைகள் மாறும் போது உற்பத்தி மட்டும் பெருகவதில்லை.மனதிர்களின் மனமும் மாறுகிறது.லாஞ்சிகள் வந்த பின் கிறுஸ்துமஸ் அன்று கடலுக்கு போவதில்லை என்ற மரபு மீறப்பட்டு கடலுக்கு செல்ல நினைக்கிறார்கள் லாஞ்சிகாரர்கள்.கிட்டத்தட்ட கொலை வரை செல்லும் அந்த நிகழ்வு பவுலு பாட்டாவால் தடுத்து நிறுத்தப்படுகிறது.விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் எவ்வளவு மாற்றங்கள்.விஞ்ஞானத்தின் வளர்ச்சி உண்மையில் எதனால் மனிதனை கவர்கிறது.அதனால் உற்பத்தி பெருக்கலாம், எல்லா துறைகளிலிலும்.கோசாம்பி Indus Valley நாகரிகம் பற்றி எழுதுகையில் மாற்றங்களே இல்லாமல் தேக்க நிலையில் இருந்த அந்த நாகரிக்த்தை ஆரியர்கள் எளிதல் அழித்து ஆக்ரமித்தார்கள் என்று எழுதுகிறார்.உண்மை என்னவோ.
ஆனால் ஒரு ஊர் சிரான இயக்கம் கொண்ட நிலையில் இருக்கும் என்றால் அதற்கான ஆன்மிகம் அந்த சமூகத்திற்கு இருக்கும்யென்றால் அதுவே சிறந்த சமூகம் தான்.
குருஸூ தன வல்லத்தை இழந்ததை நினைத்து ஆன்மிக மரணம் அடைகிறான்.இனி அவன் எப்படி வாழ்வான்.இந்தியாவில் எத்தனை குருஸூகளை நாம் உருவாக்கி கொண்டிருக்கிறோம்.கவலைப்பட வேண்டிய விஷயம் லாஞ்சிகள் வருகைஅல்ல.அதை , அந்த மனசாட்சியை உலுக்கி குற்றவுணர்வு கொள்ள செய்யும் பவுலு பாட்டாக்கள் நம்மிடம் இல்லை என்பது தான்.

பரதவர்களின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்தது போல இருக்கிறது கடல்புரத்தில் நாவல்.யாரும் மகாத்மாக்கள் அல்ல.ஆனால் எல்லோரும் எவ்வளவு அற்புதமாக இருக்கிறார்கள்.பிலோமியின் மனம் எத்தனை நுட்பமாக வாழ்க்கையை புரிந்து கொள்கிறது.நிஜ வாழ்க்கையில் வெறும் உணர்ச்சிக்கு இடமில்லை என்கிற வரிதான் எத்தனை அழகானது..வண்ணநிலவன் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எழுதியிருக்கிறார்.இப்போதய எழுத்தாளர்கள் ஏன் இவ்வளவு ஆர்ப்பரிக்கிறார்கள் என்று நினைக்த் தோன்றுகிறது.வண்ணநிலவனுக்கு என் வணக்கங்கள்.


கடல்புரத்தில் நாவல் - எழுத்தாளர் வண்ணநிலவன் - கிழக்கு வெளியீடு.


புயலிலே ஒரு தோணி





நமக்கு இந்த புவியில் பல விஷயங்கள் பிடிக்கவில்லை.மிக பெரிய அமைப்பு.ஒன்றும் செய்வதற்கில்லை.எங்கு நோக்கினும் அற்பப் பதர்கள்.மனதை சமநிலை படுத்திக்கொள்ள அங்கதம்.அப்போதும் மனம் கேட்கவில்லை.அங்கதம் கசப்பாக மாறுகிறது.அந்தக் கசப்பை நாம் ப.சிங்காரத்தில் காணலாம்.

மாதவர் நோண்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனில் இன்றால்....
சிங்காரம் மனிதன் மீது , மானுடத்தின் மீது நம்பிக்கை கொண்டவரோ , அல்லது தாகங்கள் கொண்ட அற்ப மனிதர்கள் தானே என்ற கரிசனமும் இல்லை.'கட்டுபாடு இல்லாத மனிதன் கொடிய விலங்கு' என்றே நாவல் பேசுகிறது.

பாண்டியன் மந்தைகளிலிருந்து விலகி செல்லும் மனிதன்.ஆனாலும் அவனும் சொல்கிறான் -வல்லவன் வகுத்ததே வாய்க்கால்.நேதாஜி, காந்தி, ஸ்டாலின், மார்க்ஸ், எப்படியோ மந்தைகளுக்கு தேவை ஒரு ஆளுமை.வல்லமையான ஆளுமை.'எல்லாம் யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாய் முடியும்'.இந்த வரிதான் நாவலில் மறுமறுபடி வருகிறது.இது தான் பாண்டியனை செயலில் ஆழ்த்துகிறது.

* பாண்டியன், தில்லைமுத்து , தங்கையா தமிழ்ர்கள் நிலை குறித்த உரையாடல்.
* பாண்டியன், மாணிக்கம் ,மற்றவர்கள் தமிழ் பெருமை பற்றிய உரையாடல்.
* இறுதியல் மறுபடியும் பாண்டியன் தங்கையா அறிவுநெறி பற்றிய விவாதம்.
* பாண்டியன் பினாங் செல்ல முடிவு எடுத்தபின் அவனது பாலியல் உறவுகள் குறித்த சிந்தனை.
* மறுபடியும் பினாங்கிலிருந்து சுமத்ரா செல்கையில் ஒழுக்க நெறி பற்றிய அவனது எண்ணங்கள்.

இந்த எண்ணங்களை தொகுத்து பார்த்தால் அந்த மந்தை வாழ்வின் கசப்பும் அதிலிருந்து தப்பிச் செல்ல எண்ணும் பாண்டியனின் சாகஸமும்,பின்னர் சாகஸத்திலிருந்து அறநெறி நோக்கிய அவனது பயணம் தெரிகிறது.சாகஸத்திற்கு சமநிலை ஒத்துவராது.ஆக பின்புலம் யுத்த காலம். அசாதாரண காலம்.உரையாடலும் நினைவுமாக சின்னமங்கலம், மதுரை வாழ்வு.இப்படியாக விரிகிறது நாவல்.

நாவலின் இறுதியில் பாண்டியனும் தங்கையாவும், பாண்டியன் கொரில்லா போரில் ஈடுபட முடிவெடுத்தபின் அறிவுநெறி, அறநெறி பற்றி பேசும் உரையாடலே இந்த நாவலின் உச்சம்.முதலில் அறிவியல் கோட்பாடுகள்.பின்னர் அந்த கோட்பாடுகளை நிருபிக்க வேண்டி அதே கோணத்தில் உருவாக்கப்படும் கருவிகள்.இது ஒரு நோக்கு , ஒரு பார்வை.முற்றான உண்மைகள் அல்ல. அதற்கு நிகரானதும் சற்று மேலானதும் என்று அறநெறி பற்றி பாண்டியன் கூறுவதுதான் நாவலின் தரிசனம்.அறநெறி என்பது மாறாது இருப்பது.அப்போதுதான் குழப்பங்க்ள் இருக்காது என்கிறான் பாண்டியன்.கட்டுபாடு இல்லாத மனிதன் கொடிய விலங்கு என்ற வாக்கியத்திற்கு நாவலின் பதில் அறநெறி மிக்க வாழ்க்கையே சரியான தீர்வு என்பதில் முடிகிறது.இது மானிடத்தை நோக்கி தேவதூதன் கூறும் அறநெறி அல்ல.மாறாக இது கசப்பினம் முழுமையில் கிடைக்கும் தரிசனம்.அதுவே ப.சிங்காரத்தின் தரிசனம்.

புயலிலே ஒரு தோணி.தோணி என்பது பாண்டியன் என கொண்டால் யுத்தம் என்பது புயல் என கொள்ளலாமா.

-தமிழினி வெளியீடு



எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது





வைக்கம் முகமது பஷீரின் எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது.குளச்சல் மு.யூசப் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கிறது.குரானின் முதல் வார்த்தை வாசிப்பீராக! வாசித்ததில் நிறைய மகிழ்ச்சி.1951ல் எழுதியிருக்கிறார்.அட்டை வடிவமைப்பு மிக அற்புதமாக இருக்கிறது.ஏதோ ஒரு குழந்தையின் கனவு.குஞ்ஞுபாத்துமாவின் கனவு.யானையில் வருவானோ தன்னைக் கட்டிக்கொள்ள.இறுதியில் கக்கூஸ் கட்டிக்கொடுக்கும் நிஸார் அகமதுவை கட்டிக்கொள்கிறாள்.கனவிலிருந்து நடைமுறையை நோக்கி.நிஸார் அகமதுவில் பஷீர்.

அழகான பெயர்.முகம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடைய மகளார் பாத்திமாவின் பெயர்.ஆயிஷா குஞ்ஞுபாத்துமாவின் பெயரை கேட்டுவிட்டு சொல்கிறாள்.

"ஆயிஷா வீவி ஆரு புள்ளே ?"

குஞ்ஞுபாத்துமா சொன்னாள்.

"முத்து நபிக்கெ பெஞ்சாதி"

ஆயிஷா குஞ்ஞுபாத்துமாவுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கையில் "இனி என் மகள் என்னை அடிக்கத் தொடுங்குவாள்.அதற்கும் எனக்கு விதி இருப்பதாகத்தான் தெரிகிறது.'அப்போதும் ஆயிஷா பீவி புன்னகை பூத்த முகத்துடன் காணப்பட்டாள்.'என்று உலகம் சொல்லும்".

"என்னத்தெ துட்டாப்பி?" இது குஞ்ஞுபாத்துமா.

குஞ்ஞுபாத்துமா ஆயிஷா வினது உரையாடல்கள் ....துட்டாப்பி.கள்ள புத்தூசே.

நாவலின் முதல் வரிகள் - "அனேகமாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த்துபோல ஞாபகம்.ஏனென்றால் சிறுவயதென்பது நெடுந்தொலைவில் அல்லவா?".

இருப்பின் உவகை அகமகிழ்வால் மட்டுமே அடைக்கூடியது.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.