அபத்த தரிசனம்






ஆல்பர் காம்யூ மற்ற எழுத்தாளர்களை விட ஒரு வகையில் முக்கியமானவர்.அவர் வாழ்வதற்கான ஒரு வழியை கண்டுபிடிக்க யத்தனித்தார்.அவருடைய அந்நியன் நாவல் , பிளேக், வீழ்ச்சி , சிசிபஸின் தொன்மம் கட்டுரைகள் எல்லாவற்றிலும் வாழ்வை ஒரு குறிப்பிட்ட தளத்தில் தொகுக்க முயல்கிறார்.

முதலில் அவர் இந்த வாழ்க்கை அபத்தமானது என்கிற முடிவுக்கு வருகிறார்.இந்த அபத்த வாழ்வை அது அபத்தமானது என்கிற பிரக்ஞையின் வழி மட்டுமே கடக்க முடியும் என்று நினைக்கிறார்.பின்னர் இந்த அபத்த வாழ்வின் வழியும் நாம் ஒருவரை ஒருவர் நேசிக்க முடியும் என்று எண்ணுகிறார்.

முதலில் அபத்தம் என்கிற கருத்தை முன்வைக்க அந்நியன் நாவலும் சிசிபஸின் தொன்மம் என்கிற கட்டுரை தொகுப்பையும் எழுதுகிறார்.அபத்தம் என்கிற போது அவர் ஒரு கேலிச்சிரிப்பை உருவாக்க முனைவதில்லை.மாறாக உங்கள் கைகளை பற்றி நாம் இருவரும் தேநீர் அருந்தலாம் என்றே சொல்கிறார்.எல்லா வாழ்க்கை நிலைகளும் மதிக்கத்தக்கதே என்பதே அவர் முன்வைக்கும் அபத்தம்.மாறாக எதுவுமே மதிக்கத்தக்கதல்ல என்பதல்ல.சிசிபஸின் தொன்மம் கட்டுரை தொகுப்பில் சரியான பிரக்ஞையோடு இருந்தால் ஒரு தபால்காரராக இருப்பதற்கும் பிரதமராக இருப்பதற்கும் ந்த வித்யாசமும் இல்லை என்கிறார்.இந்த சரியான பிரக்ஞை என்பது சூட்சமமானது.அந்த பிரக்ஞையை எப்படி அடைவது, ஏன் அடைய வேண்டும் என்பதில் அவர் கூறும் ஒரே விஷயம் வேற்றுமையின்மை தான்.ஆனால் அந்த வேற்றுமையின்மையை நாம் தான் உணர வேண்டும் , அது புறத்தில் இல்லை, அகத்தில் தான் இருக்கிறது.

வீழ்ச்சி நாவலில் மிகத் தீவிரமாக தன்னைத் தானே குதறி சுய விசாரனை செய்கிறார்.அவர் இறுதியாக இங்கு நல்லவர்கள் , யோக்கிமானவர்கள் யாருமில்லை என்கிற முடிவுக்கு வருகிறார்.இந்த நாவல் ஒரு வகை குற்ற ஏற்புரைதான்.அவரின் மனைவி காம்யுவின் திருமணத்திற்கு வெளியே வைத்துக்கொள்ளும் உறவுகளால் தற்கொலைக்கு முயல்கிறார்.அந்த குற்றவுணர்வில் உருவான நாவல்தான் வீழ்ச்சி.

பிளேக் நாவல் ,வளரும் கல் சிறுகதை ஆகியவற்றில் ஒரு ஆழமான நட்பை முன்வைக்கிறார்.பிளேக் நாவலில் கதைசொல்லியும் பிளேக்கால் இறுதியில் இறந்துவிடுபவருக்கும் இடையில் உருவாகும் நட்பு மிகவும் வசீகரமானது.அவர்கள் இருவரும் ஒரு நாள் கடலில் நீந்த செல்லும் இடம் அத்தனை அழகாக இருக்கும்.அவர் எந்த அர்த்தமும் இல்லாத அபத்த வாழ்வில் ஒரு மானுட நேசத்தை முன்வைக்கிறார்.அங்கே மருத்துவர் , காவலாளி, பொறுக்கி என்கிற பேதங்கள் இல்லை.

ஆல்பர் காம்யூ காசநோயால் பாதிக்கப்பட்டவர்.அதனால் அவரால் தொடர்ந்து கால்பந்து விளையாட முடியவில்லை.எல்லோரும் நினைப்பது போல காம்யூ செளகரியமான வாழ்வை வாழவில்லை.அவர் பிரான்ஸில் மிகுந்த தனிமையை எதிர்கொண்டார்.அவரின் அல்ஜிரியா பற்றிய நிலைப்பாடு மற்றும் கம்யூனிஸத்திலிருந்து விலகியது அவரை தனிமைப்படுத்தியது.அவரின் பால்ய காலம் துயரமானது.ஆனால் அவர் மூளை கொண்டு மட்டுமே வாழ்ந்தவர் அல்ல.கால்பந்தில் ஆர்வம் கண்டவர்.இறுதிவரை நாடகங்கள் இயக்கினார்.நடித்தார்.பல பெண்களோடு உறவு கொள்கிறார்.அது அவரின் மனைவியின் மனதை புண்படுத்துகிறது என்கிற போதும் அவர் அதை பொருட்படுத்தவில்லை.ஆனால் தான் திருமணம் செய்திருக்கக்கூடாது என்று மட்டும் ஒப்புக்கொள்கிறார்.

அவரின் காசநோய் , பால்ய காலத்தின் வறுமை இவை ஏதோ ஒரு வகையில் அவரின் அபத்த தரிசனத்தை உருவாக்கி இருக்குமா என்று தெரியவில்லை.அதாவது வேற்றுமையின்னமை.தஸ்தாவெய்ஸ்கியின் பேதை நாவலில் இப்போலிட் அவசியமான விளக்கம் என்ற ஒரு கட்டுரையை வாசிப்பான்.அவன் காசநோயால் பாதிக்கப்பட்டவன்.

ஏதோ ஒரு வகையில் தோல்வி, வெறுமைதான் ஒருவரை வாழ்வின் அபத்தம் நோக்கி நகர்த்துகிறதா.இருக்கலாம்.வாழ்வை கொண்டாட்டமாக பார்ப்பவர்கள் ஏன் வாழ்வின் அபத்தம் குறித்து எண்ணப்போகிறார்கள்.எல்லா வாழ்க்கைநிலைகளும் மதிக்கத்தக்கதே என்பவர் , ஏன் வாழ்வில் பொருளியில் ரீதியில் முன்னேற முனைவார்கள்.இருப்பதே மகிழ்ச்சிதானே.ஆனால் இந்த தரிசனம் ஒருவரின் வாழ்க்கை பற்றிய பார்வையை முற்றிலுமாக மாற்ற வல்லது.ஆல்பர் காம்யூ முன்வைக்கும் நேசம் வாழ்வின் அபத்தம் மூலமாக நாம் அடையும் வேற்றுமையின்மை எனும் ஆன்மிக தளத்தை அடைகிறது.அதை ஒருவரால் அடைய முடியும் என்றால் அவர் ஞானிதான்.அந்த மனநிலையே வசீகரமானது.அதன்பின் இந்த உலகில் உங்களை யாராலும் ஒன்றுமே செய்ய முடியாது.