வருடம் 2017



இந்த வருடத்தின் தொடகத்தில் வேலை இல்லை.பிப்ரவரி மாதத்தில் சென்னையில் வேலை கிடைத்தது.கடந்த மாதம் பெங்களூரில் வேறு வேலை கிடைத்தவுடன் இங்கு வந்து விட்டேன்.இந்த வேலை மாற்றத்தின் போது ஒரு மாதம் இடைவெளி கிடைத்தது.அப்போது வாரத்தின் சில நாட்கள் எல்எல்ஏ நூலகம் சென்று வந்தேன்.தினமும் இரண்டு மணி நேரம் எந்த இடைஞ்சலும் இல்லாமல் வாசித்தேன்.தொடர்ந்து ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் இப்படி எந்த வேலைக்கும் செல்லாமல் வாசித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.ஏன் இந்த நூலகம் சென்று வாசிக்கும் பழக்கம் சிறுவயதிலேயே ஏற்படவில்லை என்று எரிச்சலாக இருந்தது.எழுத்தா அல்லது வேலையா எதை முதன்மையாக கொள்வது என்ற எண்ணம் இந்த வருடம் முழுதும் இருந்தது.நிறைய குழம்பினேன்.வேலை என்று முடிவு செய்தேன்.வேலை மாறி பெங்களூரு வந்தேன்.

இந்த வருடம் "நடிகர்" என்ற சிறுகதை எழுதி தளம் இதழுக்கு அனுப்பினேன்.பிரசுரமானது.சிறுகதை தொகுப்பை கொண்டுவரலாம் என்று ஆசைப்பட்டேன்.மணல் வீடு ஹரிகிருஷ்ணனிடம் பேசினேன்.எட்டு சிறுகதைகளின் பக்கங்கள் 64 கூட வரவில்லை என்பதால் இன்னும் ஐந்தாறு கதைகளை எழுதியபின் கொண்டுவரலாம் என்றார்.ஆக,நான் சிறுகதை தொகுப்பை கொண்டுவர ஐந்தாறு வருடங்கள் கூட ஆகலாம்! தஸ்தாவெய்ஸ்கியின் பதின் நாவல் இந்த வருடம் வாசித்த முக்கிய புத்தகம்.என்னில் ஆழமான பாதிப்பை செலுத்திய புத்தகம்.
வாழ்க்கையில் எதுவுமே நிலையானதல்ல என்ற எண்ணம் இந்த வருடம் வலுப்பட்து.இந்த எண்ணம் எனக்குள் ஏற்படும் பல்வேறு பதற்றங்களை குறைத்தது.நகுலன்-அசோகமித்திரன்-ஆல்பர் காம்யூ இவர்களின் புத்தகங்களை வாசித்தது வழியாக இந்த வாழ்வு பற்றிய ஒரு சித்திரம் எனக்குள் பதிந்துவிட்டது.வாழ்வின் அபத்தம்,அது உருவாக்கும் அடையாளமின்மை என்கிற ஆன்மிக தரிசனம் அதன் வழி மட்டுமே அனைத்தையும் பார்ப்பது என்ற மனப்பதிவு உருவாகிவிட்டது.இது ஒரு வகையில் என் தேடலை நிறுத்திவிட்டது.எனக்குள் எப்போதும் ஒரு அவதி இருந்தது.இப்போது அது இல்லை.அதனால் பெரிதாக எழுதவும் தோன்றவில்லை.பெளத்த அறிஞர் ஓ.ரா.ந.கிருஷ்ணன் விஷ்ணுபுரம் பற்றி எழுதிய விமர்சன நூலில் பெளத்தம் குறித்த குறிப்பில் மறுபிறவி பற்றி எழுதியிருந்தார்.அது சட்டென்று மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்தியது.வேறு ஒரு பார்வை வழியாக இந்த வாழ்வை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் போது மட்டுமே கதைகள் எழுத முடியும் என்று தோன்றுகிறது.பார்க்கலாம்.

நான் காதலித்த பெண்னை கடுமையாக தாக்கி ஒரு கட்டுரையை இந்த வருடத்தில் எழுதியிருந்தேன்.அதை எழுதியிருக்கக் கூடாது என்று சில நேரங்களில் நினைத்துக்கொள்வேன்.ஆனால் எனக்குள் இருந்த எரிச்சலை அந்தக் கட்டுரையின் வழி கடந்துவிட முடிந்தது என்றும் இப்போது புரிந்துகொள்கிறேன்.வேறு வழி இருக்கவில்லை.

என் மகன் கெளதம் மீது அதீத பற்று இந்த வருடத்தில் ஏற்பட்டது.எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.



நாம் பிறர்


தமிழ் தேசியவாதத்தை முன்வைக்கும் கட்சிகள் வளர்ந்து வரும் சூழலில் ,ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் தமிழை தவிர்த்த பிற மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் வளர்ந்து வரும் பாதுகாப்பற்ற சூழலால் ரஜினிகாந்தை ஆதரிக்கலாம் என்று ஸ்டாலின் ராஜாங்கம் சொல்லியிருக்கிறார்.மேலும் அவரிடம் பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்கும் போக்கு இருந்தால் சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகளை இழக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.இரண்டும் முக்கியமான அவதானிப்புகள்.
பி.ஏ.கிருஷ்ணன் ஓரிரு மாதங்களுக்கு முன் தமிழகத்திற்கு வெளியே குடியேறிய தமிழ் பிராமணர்களின் புள்ளிவிபரத்தை பட்டியலிட்டு இது பெரிய அளவிலான குடியேற்றம் என்று சொல்லியிருந்தார்.இன்று எழுதிவரும் இளம் எழுத்தாளர்களில் அநேகமாக யாரும் தமிழ் பிராமணர்கள் இல்லை.எழும்பூர்,சைதாப்பேட்டை நீதிமன்றங்களில் பெரிய அளவில் இளம் தமிழ் பிராமணர்கள் வழக்கறிஞர்களாக இல்லை.இலக்கியம் , சட்டத்துறை,கட்சி அரசியல் இவைகளுக்கு மத்தியில் ஏதோ தொடர்பு இருக்கிறது.இன்று இந்த மூன்று துறைகளிலும் அநேகமாக தமிழ் பிராமணர்கள் இல்லை.

தமிழை தாய் மொழியாக கொள்ளாத தமிழர்கள் இன்றும் இலக்கியம்,சட்டம்,அரசியலில் இருக்கிறார்கள்.ஆனால் தமிழ் தேசியவாதம் தொடர்ந்து வளர்ச்சி பெறும் என்றால் இது தொடர்ந்து குறையும் என்று தோன்றுகிறது.அவர்கள் வேறு மாநிலங்களுக்கு,நாடுகளுக்கு எந்த வித அச்சுறுத்தல் பாதுகாப்பின்மை பிரச்சனைகள் ஏற்படாவிட்டாலும் குடிபெயர்வது அதிகரிக்கும்.

தமிழகத்தில் தொடர்ந்து மற்றமையின் மீதான ஒரு வெறுப்பை எளிதாக உருவாக்கமுடிகிறது.அதே நேரத்தில் அது பெரிய வன்முறை அற்றதாகவும் இருக்கிறது.ஆனால் அது மக்கள் மத்தியில் சில மனப்பதிவுகளை உருவாக்கியபடியே இருக்கிறது.

தமிழகத்தில் தொடர்ந்து மத்திய அரசால் கொண்டுவரப்படும் தொழிற் துறை திட்டம் தீவிரமாக எதிர்க்கப்படுகிறது.தமிழகத்தில் மிக எளிதாக விவசாயம் நண்மை என்பதும் , தொழிற்துறையின் வளர்ச்சி தீமை அளிப்பதும் என்ற இருமைகளின் மனப்பதிவுகள் தொடர்ந்து பிரச்சாரிக்கப்படுகிறது.அது ஏற்றுக்கொள்ளவும் பட்டுள்ளது.நியூட்ரினோ திட்டம் தீவிரமாக எதிர்க்கப்பட்டது.மித்தேன் எரிவாயு திட்டம் எதிர்க்கப்பட்டது.பெரும்பாலானோருக்கு அதைப்பற்றிய மனப்பதிவுக்கு அப்பால் எதுவும் தெரியாது.

உண்மையில் விவசாயம் எந்தளவு வருமானத்தை வழங்கும் தொழிலாக உள்ளது என்று எந்த விவசாயிடம் கேட்டாலும் சொல்வார்.குறைந்தது இருபது ஏக்கர் நிலம் இருந்து நல்ல தண்ணீர் பாசனம் இருந்தால்தான் ஒரளவு வருமானம் பார்க்க முடியும்.அதுவும் இலவச மின்சாரம் நிறுத்தப்படும் என்றால் விவசாயம் உடனே கைவிடப்படும்.இல்லையென்றால் வருடம் ஒரு லட்சம் பார்ப்பதே பெரிய விஷயம்.தொழில் துறைகளின் வளர்ச்சிதான் வேலை வாய்பபுகளை உருவாக்கும்.தொடர்ந்து தொழிற் வளர்ச்சி தடுக்கப்படும் என்றால் தமிழகம் கேரளம் போன்ற ஒரு பண்பாட்டு தேசமாக மட்டுமே எஞ்சும்.

சிறுநகரத்து காதல்கள்


Woman gazing out of a window contemplating, 2004 (b/w photo), Spiller, Stephen (Contemporary Artist) / Private Collection / The Bridgeman Art Library



சங்கரின் கொலை வழக்கில் கெளசல்யாவின் தந்தைக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.அடுத்தடுத்த முறையீடுகளில் இது குறையலாம்.இந்தக் கொலையை திட்டமிட்டு கூலிப்படையை கொண்டு செய்தது முக்கிய விஷயமாக இருக்கிறது.இளவரசன் – திவ்யா காதலில் இளவரசனும் பெண்ணின் தந்தையும் இறந்து போனார்கள்.இந்த வழக்கிலும் மரண தண்டனை நிறைவேறினால் அதுவே நடக்கும்.இரண்டிலும் காதலித்த ஆண்கள் தலித் வகுப்பை சேர்ந்தவர்கள்.திவ்யா வண்ணியர் பிரிவை சேர்ந்தவர்.கெளசல்யா தேவர் சாதியை சேர்ந்தவர்.இரண்டு வழக்குகளிலும் ஆண்கள் மட்டுமே இறந்திருக்கிறார்கள்.ஏன் ஆண்கள் மட்டும் இறக்கிறார்கள்.ஏன் பெண்கள் இறப்பதில்லை.இதுவே காதலித்த ஆண்கள் தலித் வகுப்பை தவிர்த்த வேறு சாதியாக இருந்தால் இத்தகைய மரணங்கள் நிகழாமல் இருந்திருக்குமா.இவர்கள் இருவரும் சிறுநகரத்தில் இருந்திருக்கிறார்கள்.இதுவே இவர்கள் பெருநகரங்களில் பிறந்து காதலித்திருந்தால் இந்த மரணங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு.கிராமங்களும் சிறுநகரங்களும் சாதியால் கட்டுண்டவை.அங்கே நிலப்பிரபுத்துவ மனநிலைதான் செயலாற்றுகிறது.நிலப்பிரபுத்துவ மனநிலையில் விஸ்வாசம்,செய்நன்றி,பிறப்பு சார்ந்த அடையாளங்கள்,உடைமை மனநிலை,சாதிய சடங்குகள்,குல தெய்வங்கள் அணைத்தும் இருக்கின்றன.அங்கு ஆசிரியர் வேலையில் இருக்கும் ஒருவர் ஆசிரியராக மட்டும் பார்க்கப்படுவதில்லை.வழக்கறிஞர் வெறும் வழக்கறிஞர் இல்லை.அவர் எந்த சாதியை சேர்ந்தவர் என்பதன் அடிப்படையில்தான் அவருக்கான க்ளைண்ட் வருகிறார்.அங்கு வேலை கொடுப்பவருக்கும் வேலை செய்பவருக்கும் இருக்கும் உறவு படிநிலை கொண்டது.வேலை செய்பவரின் வாழ்வாதாரம் வேலை கொடுப்பவரால் உறுதி செய்யப்படுகிறது.தன் உழைப்பை விற்று ஊதியம் பெற்றாலும் அவர் வேலை கொடுப்பவருக்கு நன்றியுடனும்,விஸ்வாசத்துடனும்,மரியாதையுடனும் நடந்து கொள்கிறார்.அங்கு எல்லோருக்கும் சமூக அடையாளம் இருக்கிறது.குழு மனநிலை எளிதல் செயல்புரிகிறது.

சிறுநகரத்தில் , கிராமத்தில் தன் வீட்டின் பெண் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த இளைஞனின் உடைமை ஆவது கொந்தளிப்பை உருவாக்குகிறது.ஒரு வகையில் அந்த இளைஞனின செயல் பெண் வீட்டாரின் ஆண்களின் ஆண்மையை கேலி செய்கிறது.அவர்களை அவமானப்படுத்துகிறது.அந்த இளைஞனின் செயல் , பெண் வீட்டின் ஆண்களை தாழ்த்தப்பட்ட சாதி இளைஞன் வென்றதன் குறியீடாகிறது.அவள் அவளது சாதி இளைஞர்களை மறுத்து தாழ்த்தப்பட்ட சாதி இளைஞனை தேர்வு செய்யும் போது அந்தப் பகுதியை சேர்ந்த அவளது சாதி இளைஞர்களும் கொந்தளிக்கிறார்கள்.பெண் வீட்டில் இருப்பவர்கள் அவமானத்தால் வன்மம் கொள்கிறார்கள்.திவ்யாவின் தந்தை தற்கொலை மூலம் தன் பெண்னை பழிவாங்கினார்.கெளசல்யாவின் தந்தை சங்கரை கொலை செய்து பழிவாங்கி தன் அவமானத்தை துடைத்துக்கொண்டார்.சிறுநகரங்களில் கிராமங்களில் பெண் அந்த வீட்டின் ஆண்களால் தங்களின் உடைமையாகத்தான் பார்க்கப்படுகிறாள்.உங்கள் வீட்டின் இருசக்கர வாகனத்தை ஒருவன் வீட்டிலிருந்து உங்களின் அனுமதியின்று எடுத்து சென்று தனதாக்கிக் கொண்டு தினமும் ஊரில் அதை ஓட்டினால் , அதை நீங்கள் கேட்காமல் அமைதியாக இருந்தால் ஊர் உங்களை கேலி செய்யும்.இதிலும் அதே மனநிலை செயல்புரிகிறது.நம் ஊரில் இன்றும் கூட ஒரு பெண் ஆணின் காதலை ஏற்றுக்கொண்டதும் அவனது நண்பர்கள் "அவன் அந்தப் பொண்ண கரேக்ட் பண்ணிட்டான் தெரியுமா" என்று பேசிக்கொள்கிறார்கள்.இத்தகைய மனநிலை சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் அதிகம் இருக்கிறது.இந்தக் காரணத்தால் தான் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் பெண்ணின் திருமண வயதை 21ஆக மாற்ற வேண்டும் என்கிறார்.அதன் பின் ஒரு பெண்னை அவ்வளவு எளிதில் பிற சாதி குறிப்பாக தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள் தங்கள் வசீகர பேச்சால் கவர்ந்துவிட முடியாது என்று நம்புகிறார்.

கிராமங்களில் இன்றும் காலனி பகுதி என்று தனியாகத்தான் இருக்கிறது.அந்தப் பிரிவு புறத்தில் எப்படி இருக்கிறதோ அதே போல அகத்திலும் இருக்கிறது.பெருநகரங்களில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வண்ணியரும்,தேவரும்,தலித்தும்,பிராமணரும் ஒன்றாக வாழ்வதற்காக சாத்தியங்கள் இருக்கின்றன.அவர்களின் பிள்ளைகள் ஒரே பள்ளியில் படிக்கலாம்.அவர்கள் காதலிக்கலாம்.திருமணமும் செய்து கொள்ள இயலும்.அங்கே பிரச்சனைகள் இல்லாமல் இல்லை.ஆனால் அங்கு குழு மனநிலை இல்லை.உடைமை மனநிலை குறைவாக இருக்கிறது.பெருநகரத்தில் உங்கள் இருசக்கர வாகனத்தை உங்கள் அனுமதியின்றி ஒருவன் எடுத்து ஓட்டினால் அது உங்கள் வண்டி என்று யாருக்கும் தெரியாது.அதனால் உங்களிடம் வந்து யாரும் அதைப்பற்றி கேட்கப் போவதில்லை.ஏனேனில் உங்களையே யாருக்கும் தெரியாது.மேலும் தன் வீட்டின் பெண் தன் வண்டி போன்ற ஒரு உடைமை அல்ல என்ற முதிர்ச்சி பெருநகரங்களில் ஒரளவு இருக்கிறது.
பெருநகரத்தில் வேலை செய்பவர் வேலை கொடுப்பவரிடம் செய்நன்றியுடனும்,விசுவாசத்துடனும்,மரியாதையுடனும் நடந்துகொள்வதில்லை.அவர் பணிவாக இருக்க வேண்டிய அவசியமில்லை.தன் உழைப்புக்கு இதை விட அதிக ஊதியம் கிடைக்கும் என்றால் அவர் அங்கு சென்று விடுகிறார்.வேலை கொடுத்தவரும் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

கிராமங்கள்,சிறுநகரங்கள் பெருநகரங்களை போன்ற தனிமனித சமூகமாக மாறும் போது மட்டுமே இத்தகைய சிக்கல்கள் குறையும்.மேலும்,பெண் குறித்த பல்வேறு மனப் பதிவுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிறையவே இருக்கிறது.தொடர்ச்சியாக நம் திரைப்படங்களின் வழி பெண் தன்னளவிலேயே ஒருவன் மீது காதல் வயப்படுவதற்கான வாய்ப்புகள் அநேகமாக இல்லை என்பது தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.அவளை தன் சாகசங்கள் மூலம், அறிவின் மூலம் ஆண் தன் பக்கம் ஈர்க்கிறான்.அடுத்து சூழலின் அழுத்தத்தால் பெண் தன் மனதை சட்டென்று மாற்றிக்கொள்ளக் கூடியவள் என்கிற மனப்பதிவும் நம்மிடம் உள்ளது.இது போன்ற கொலைகளுக்கு பின்னால் தன் வீட்டின் பெண் காலப்போக்கில் இந்தக் காதலை மறந்து தான் பார்த்து வைக்கும் பையனை திருமணம் செய்து கொண்டு வாழ்வாள் என்கிற மனநிலை உள்ளது.

நம் கிராமங்களிலும் சிறுநகரங்களிலும் ஆண் பெண் உறவு சமீப காலம் வரை எளிமையான ஒன்றாக இல்லை.பெருநகரங்களில் ஆண்களும் பெண்களும் எளிதாக கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ளது.தனக்கு பிடித்த ஆணிடம் காதலை தெரிவிப்பதும், தன் காதல் மறுக்கப்படும் போது உருக்குலைவதும் பெண்ணுக்கும் சாத்தியம் என்பதை பெருநகரத்து மனிதன் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. கருத்து நிலைகளும், சிந்திக்கும் திறனும்,காதல் உணர்வுகளும்,குரூரமும் அன்பும்,அதிகார படிநிலைகளில் முன்னே செல்வதற்கான விருப்புறுதி என்று எல்லாமே ஆண்களை போல பெண்களுக்கும் உள்ளது என்று பெருநகரம் புரிந்துகொள்கிறது.அவள் தனி மனுஷி என்பதும் யாருடைய உடைமையும் அல்ல என்பதும் மெல்ல பெருநகரம் உணரும் உண்மைகள்.சமீபத்தில் கோரமங்களாவில் வீடு தேடிக்கொண்டிருந்தேன்.அப்போது ஒரு வீட்டிற்கு சென்ற போது அங்கே இரண்டு மூன்று தாடி வைத்த யுவன்கள், யுவதிகள்,வீட்டின் மத்தியில் ஒரு நாய்,எங்கும் பீர் பாட்டில்கள் இருப்பதை பார்த்தேன்.அவர்கள் சகஜமாக இருந்தார்கள்.அந்தப் பகுதி முழுக்க குடும்பங்கள் சிறு குழந்தைகளுடன் இருக்கின்றது.இவர்கள் அடிக்கடி பார்ட்டிகளில் ஈடுபடுவதால் அது மற்றவர்களை தொந்தரவு செய்வதாக அவர்களே உணர்ந்து வீட்டை காலி செய்வதாக வீட்டுக்காரரிடம் சொல்லியிருக்கிறார்கள்.அங்கே சுற்றியிருப்பவர்கள் இதை புகாராக வீட்டுக்காரரிடம் சொல்லவில்லை.இந்த யுவன் யுவதிகளை யாரும் கேள்வி கேட்கவில்லை.தொந்தரவு செய்யவில்லை.இது போன்ற ஒரு காட்சியை நீங்கள் சிறுநகரத்தில் கிராமத்தில் பார்ப்பது அநேகமாக சாத்தியமில்லை.

பெருநகரங்கள் சொர்க்கங்கள் இல்லை.சென்னையில் செம்மஞ்சேரி,கண்ணகி நகர் போன்ற பகுதிகள் உருவாகி வந்திருப்பதை பார்க்க முடிகிறது.ஆனால் ஒரே பொருளாதார நிலையில் இருக்கும் இருவேறு சாதியினர் திருமணம் செய்துகொள்வதற்கான வாய்ப்பு அதிகம் பெருநகரங்களில் உள்ளது.தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த என் நண்பன் ஒருவன் இடைநிலை சாதியை சேர்ந்த பெண்னை அவர்களின் வீட்டின் அனுமதியின்றி திருமணம் செய்துகொண்டான்.அவர்கள் இருவரும் சென்னையில் வேலை செய்தார்கள்.இரண்டு மூன்று வருடங்கள் கழித்து பெண் வீட்டார் இவர்களை ஏற்றுக்கொண்டார்கள்.பெண்ணின் தந்தை என் நண்பனிடம் நாங்கள் நினைத்திருந்தால் உன்னை எதுவும் செய்திருக்க முடியும் , ஆனால் நாங்கள் செய்யவில்லை என்று சொல்லியிருக்கிறார்.என் நண்பன் பெரிய சிக்கல்கள் இல்லாமல் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பெருநகரம் அவனுக்கு உதவியது என்றே எனக்கு தோன்றுகிறது.பெருநகரத்து தனிமனித மனநிலைதான் அனைவருக்குமான வாழ்வுரிமையை அளிப்பதற்கான சாத்தியங்களை கொண்டுள்ளது.