மாதிகா மக்களுடன் கீதா ராமசாமி


கீதா ராமசாமி


செயல்பாட்டாளர் கீதா ராமசாமி தன் இப்ராஹிம்பட்டினம் அனுபவங்களை மையப்படுத்தி நிலம்,தூப்பாக்கிகள்,சாதி,பெண் (Land,Guns Caste and Woman)என்ற நினைவுக்குறிப்புகள் நூலை எழுதியுள்ளார்.கீதா ராமசாமியின் பெற்றோர் தமிழர்கள் என்றாலும் அவர்களது பூர்விக இல்லங்கள் கேரளத்தில் இருந்தன.கீதா ராமசாமியின் தந்தை பொறியாளர்.அவருக்கு வேலையின் பொருட்டு இடப்பெயர்வுகள் இருந்தன.இதனால் கீதாவும் அவரது நான்கு சகோதரிகளும் பம்பாயிலும் சென்னையிலும் பின்னர் ஐதராபாத்திலும் பள்ளிப் படிப்பை படித்தனர்.சென்னையில் முதலில் சாந்தோமிலிருந்த ரோசரி கிறிஸ்துவப் பள்ளியில் படித்தவர் பின்னர் ராயப்பேட்டையிலிருந்த கேந்திரிய வித்யாலாவில் சேர்ந்தார்.அவருடைய பதினைந்தாவது வயதில் அவருடைய தந்தைக்கு ஐதராபாத்திற்கு மாற்றலானது.கீதா அங்கு கேந்திரிய வித்யாலாவில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார்.மத்திய உயர்நிலைக் கல்வி வாரியத்தின்(சிபிஎஸ்இ) புகுமுக தேர்வில் அனைத்திந்திய அளவில் தரவரிசையில் பத்து இடங்களுக்குள் தேர்வானார்.அன்று மத்திய கல்வி வாரியத்தின் தேர்வில் பத்து இடங்களுக்குள் வந்தவர்கள் ஐஐடியில் விண்ணப்பித்தால் இடம் கிடைப்பது உறுதி.அவர் ஐஐடியில் பொறியியல் படிக்க விரும்பினார்.ஆனால் அவருடைய தந்தை தன்னிடம் அந்தளவு பணம் இல்லை என்றும் மற்றொரு சகோதரி மருத்துவம் படித்து வருவதாலும் அவரை பொறியியல் படிக்க வைப்பது கடினம் என்று கூறி மறுத்துவிட்டார். கீதா ஐதராபாத்தில் கோடி பெண்கள் பல்கலைக்கழக கல்லூரியில் இளங்கலை வகுப்பில் சேர்ந்தார்.பின்னர் அங்கு தொடர விருப்பமில்லாமல் இரண்டாவது வருடம் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் அறிவியல் பல்கலைக் கல்லூரியில் விண்ணபித்து இளங்கலை படிப்பைத் தொடர்ந்தார்.

1953ஆம் ஆண்டு பிறந்த கீதா ஏழுபதுகளில் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.கீதா சேர்ந்த அந்த வருடம் ஜார்ஜ் ரெட்டி என்ற மாணவர் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் வலதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர்களால் கொல்லப்பட்டார்.ஜார்ஜ் ரெட்டி முற்போக்கு ஜனநாயக மாணவர் சங்கம் (பிடிஎஸ்யூ) என்ற இடதுசாரி அமைப்பை உருவாக்கியிருந்தார்.அந்த அமைப்பில் தான் பின்னர் கீதா இணைந்தார்.ஜார்ஜ் ரெட்டியின் சகோதரர் சிறில் ரெட்டி அவருக்கு அங்கு அறிமுகமானார்.ஏழுபதுகள் மாணவர்கள் பெருமளவில் நக்ஸல்பாரி அமைப்புகளில் இணைந்த காலம்.உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பல மாணவர்கள் நக்ஸல்பாரியின் பல்வேறு அமைப்புகளில் உறுப்பினர்களாக இருந்தார்கள்.கீதா சந்திரா புல்லா ரெட்டியின் சிபிஐ(எம் எல்) அமைப்பில் இணைந்தார்.இளங்கலை முடித்து முதுகலையும் அங்கேயே படித்தார்.அவரது பெற்றோர் அவரது அரசியல் நடவடிக்கைகளால் நிம்மதியிழந்தனர்.அவருடைய தந்தை சென்னைக்கு மாற்றல் வாங்கி கீதாவையும் உடன் வர வற்புறுத்தினார்.கீதா ஐதராபாத்திலேயே இருக்க பிடிவாதமாக இருந்தார்.அவரை விட்டுவிட்டு குடும்பம் சென்னை சென்றது.

1975யில் அவசரக் காலம் அமுலானது.கீதாவும் மற்ற தோழர்களும் தலைமறைவாகினர்.இந்தக் காலகட்டத்தில் அவருக்கு கட்சி பற்றி இருந்த தோற்ற மயக்கங்கள் புலப்பட்டன.சந்திரா புல்லா ரெட்டி குடும்பத்துடன் ஒன்றாக தங்கும் போது அவர் அவரது மனைவியை நடத்தும் விதத்தை பார்த்து குழம்புகிறார் கீதா.சந்திரா புல்லா ரெட்டி நாம் (தலைவர்கள்) X அவர்கள் (மக்கள்) என்ற சொல்லாடலை தொடர்ந்து பயன்படுத்துகிறார்.கட்சியில் இருந்த இறுக்கமான படிநிலைகள் கீதாவுக்கும் அவரைப் போன்ற வேறு மாணவர்களுக்கும் புரியத் தொடங்குகிறது.இதற்கிடையில் ஒரு முறை கீதாவின் செல்திசையால் மிகுந்த கவலைக்கொண்ட அவரது பெற்றோர் அவரது அன்னைக்கு உடல் நலம் சரியில்லை என்று சொல்லி அவரை சென்னைக்கு வரச் சொல்கிறார்கள்.அவரும் செல்கிறார்.அங்கு சென்ற பின்னர் அது ஒரு நாடகம் என்று அவருக்குத் தெரிகிறது. அவரை ஒரு தனியறையில் அடைக்கிறார்கள். உளவியில் மருத்துவர் ஒருவரிடம் அழைத்து சென்று மின் வலிப்பு சிகிச்சை அளிக்கிறார்கள்.வாயில் உமிழ்நீருடன் சிகிச்சை முடிந்து வந்த சித்திரத்தை அவர் நினைவுகூர்கிறார்.அந்த சிகிச்சை அவரை மிகவும் பலவீனப்படுத்துகிறது.எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவர்களுடனே இருப்பதாக கீதா அவர்களுக்கு உறுதி அளிக்கிறார்.அதன் பின் அவரை தனியறையில் அவரது பெற்றோர் பூட்டி வைக்கவில்லை.ஒரு முறை வீட்டை விட்டு தப்பிக்க முயலும் போது ஐஐடி வளாகத்தில் வந்து அவரது தந்தை அழைத்துச் செல்கிறார். இரண்டாவது முறை அவரது நண்பர்களின் முயற்சியால் தப்பித்து விடுகிறார்.

மின் வலிப்பு சிகிச்சை அவரில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.அவர் கணிதத்தில் மிகுந்த நிபுணத்துவம் கொண்டவர்.சிகிச்சைக்கு பின்னர் அந்த நிபுணத்துவம் தன்னிடமிருந்து நிரந்தரமாக போய்விட்டது என்கிறார் கீதா.சென்னையில் சிகிச்சை அளிக்கப்படுவதற்கு முன்பே கீதாவும் சிறில் ரெட்டியும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தார்கள்.அவர் ஐதராபாத் திரும்பிச் சென்ற பின்னர் அவரால் சிறில் ரெட்டியைக்கூட முதலில் அடையாளம் காண இயலவில்லை.ஒரு நரம்பியல் மருத்துவர் அவரை பரிதோசித்து விட்டு நினைவுகளின் சில பகுதிகளை அவர் நிரந்தரமாக இழந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.1975 இறுதியில் கட்சி தலைவர்களின் முன்னிலையில் சிறில் ரெட்டியும் கீதாவும் திருமணம் செய்து கொண்டார்கள்.அப்போது சிறில் ரெட்டி உஸ்மானியாவில் பொறியியல் படிப்பு முடித்திருந்தார்.

கீதா குடும்பத்தினரிடமிருந்து விலகிவிட்டார்.கட்சியின் செயல்பாடுகளால் கசப்புற்று அவரும் சிறில் ரெட்டியும் கட்சியிலிருந்து வெளியேறினர்.கட்சியிலிருந்து வெளியேறியது அவர்களை மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளாக்கியது.அங்கிருந்து சென்று சத்திஸ்கர்,டெல்லி,காஸியாபாத் ஆகிய நகரங்களில் தங்கினர்.சிறில் ரெட்டிக்கு டெல்லியில் வேலை கிடைத்தது.காஸியாபாத்திலிருந்த இருந்த பால்மீகி சமூகத்தின் பிள்ளைகளுக்கு அவர்கள் ஆங்கிலம் கற்றுத் தந்தனர். அவசரக்காலம் முடிந்து சில வருடங்கள் கழித்து 1980யில் அவர்கள் ஐதராபாத் திரும்பினர்.வாழ்க்கையை புதிதாக தொடங்க வேண்டிய இடத்தில் இருவரும் இருந்தனர்.

சிறில் ரெட்டி சட்டம் படிக்க முடிவெடுத்தார்.கீதா ஐதராபாத் புக் டிரஸ்ட் என்ற பதிப்பு நிறுவனத்தை நண்பர்களுடன் இணைந்து தொடங்கினார்.அதுவரை தெலுங்கில் வராத தலித் மார்க்ஸிய கண்ணோட்டம் கொண்ட புத்தகங்களை கொண்டு வந்தார்கள்.அவர்களின் புத்தகங்கள் நன்கு விற்பனை ஆகின. டேவிட் வெர்னர் எழுதிய Where there is no doctor என்ற புத்தகத்தை தெலுங்கில் மொழிபெயர்த்து வெளியிட்டனர்.அடுத்த நான்கு வருடங்களில் அவருடைய நிறுவனம் நல்ல வளர்ச்சி கண்டது.

சிறில் ரெட்டியும் சட்டம் முடித்து வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார்.ஏழை மக்களுக்கு சட்ட ரீதியில் உதவக்கூடிய சலஹா என்ற அமைப்பை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கினார்.1984யில் ஒரு புத்தகத்தின் வேலையை முன்னிட்டு கீதா ரெங்காரெட்டி மாவட்டத்தில் இருந்த இப்ராஹிம்பட்டனம் தாலுக்காவிற்கு பயணித்தார்.ஐதராபாத்திலிருந்து முப்பது கீலோமீட்டர் தொலைவில் இருந்தது இப்ராஹிம்பட்டினம் தாலூக்கா.

தெலுங்கானாவில் ரெட்டிகளிடமே நிலம் இருந்தது.அங்கே பெரும்பாலும் விவசாயக் கூலியாக வேலை செய்தவர்கள் மாதிகா இனத்தவர்கள்.தெலுங்கானாவில் ரெட்டிகளிடம் இருந்த நிலங்கள் வாழையடி வாழையாக அவர்களுக்கு வந்தவை அல்ல.தெலுங்கானாவில் நிஜாம் ஆட்சி முடிந்து இந்திய அரசு தெலுங்கானாவை கைப்பற்றிய போது அங்கிருந்த இஸ்லாமிய நிலச்சுவான்தார்களிடம் பறித்தவை தான் அந்தச் சொத்துகள்.பத்து லட்சம் கேள்விகள் – பெண்களின் நலம், பண்பாடு , அரசியல் என்ற புத்தகப் பணியின் பொருட்டு இப்ராஹிம்பட்டினம் சென்ற கீதா அங்கு மாதிகா இனத்தவர்களுடன் இணைந்து பணி புரிய ஆரம்பித்தார்.மாதிகா இனத்தவர்கள் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.இப்ராஹிம்பட்டினத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடன் அவர் பயணித்த அடுத்த பத்து வருடங்கள் கீதா வாழ்வின் பொற்காலமாக அமைந்தது.

இப்ராஹிம்பட்டினத்தில் ஜலல்மியாபள்ளெ என்ற கிராமத்தில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்தவரின் வீட்டில் முதலில் தங்கினார் கீதா.அருகில் இருக்கும் கிராமங்களுக்கு சைக்கிளில் இலக்கற்று பயணித்தார்.பிறகு குங்கல் என்ற கிராமத்தில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார்.கிராமத்து மக்களுடன் புத்தகப் பணியை காரணமாக கூறி உரையாடினார்.பெருநகரங்களில் மத்திய தர வர்க்கத்தில் வளர்ந்த கீதா முதல் முறையாக கிராம அமைப்பையும் நிலப்பிரபுத்துவத்தையும் மக்களின் வாழ்க்கை முறைகளையும் நேரடியாக அறிந்து கொள்ளத் தொடங்கினார்.




டிசம்பர் 1984யில் ஒரு முறை ஐதராபாத் சென்ற கீதா அங்கு சிறில் ரெட்டி நடத்திய பயிலரங்கில் கலந்து கொண்டார்.குறைந்த பட்ச ஊதியம், கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றை பற்றி அந்த கருத்தரங்கில் விவாதிக்கிறார்கள்.அப்போது தான் இப்ராஹிம்பட்டினம் தாலுக்காவில் இருக்கும் மாதிகா மக்கள் பெறும் ஊதியத்தையும் அளிக்கப்பட வேண்டிய குறைந்த பட்ச ஊதியத்தையும் ஒப்பிட்டு பார்க்கிறார்.அவர் தங்கியிருந்த குங்கல் கிராமத்தின் அருகிலிருந்த சீதத் கிராமத்தில் மாதிகா ஆண்களுக்கு ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து நான்கு ரூபாயும், பெண்களுக்கு எட்டாணாவிலிருந்து இரண்டு ரூபாயும் , பண்ணையடிமைகளுக்கு இரண்டு ரூபாயும் ஊதியமாக கொடுக்கப்பட்டன.குறைந்த பட்ச ஊதியம் ஆண்களுக்கு எட்டு ரூபாய் தர வேண்டும் என்று சொன்னது.இந்தச் சட்டத்தை பற்றி சீதத் கிராமத்தின் மாதிகா மக்களிடம் விளக்கிச் சொன்னார் கீதா.இந்த அறிதல் கிராமத்து மக்களை பற்றிக்கொள்கிறது.மறுநாள் மாதிகா மக்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.இதை சற்றும் எதிர்பாராத நிலச்சுவான்தார்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறார்கள்.மூன்றே நாட்களில் சமரசத்திற்கு தயாராகிறார்கள்.அதன் படி பெண்களுக்கு மூன்றுமுதல் ஐந்து ரூபாயும் , ஆண்களுக்கு ஆறு முதல் ஏழு ரூபாயும் , பண்ணையடிமைகளுக்கு மாதத்திற்கு அறுபதிலிருந்து எண்பது ரூபாயும் அளிக்கப்படும் என்று முடிவாகிறது.

முதல் வெற்றி மாதிகா மக்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது.இந்த வெற்றியை அனைத்து கிராமங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டுமென்றால் பண்ணையடிமைகள் விவசாயக்கூலிகளுடன் இணைய வேண்டும். ஏனேனில் பண்ணையடிமைகள் இருக்கும் வரை நிலச்சுவான்தார்களுக்கு வேலை செய்ய ஆட்கள் இருந்தார்கள்.அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடமுடியாது.கொத்தடிமை தடைச் சட்டத்தை பற்றி பண்ணையடிமைகளிடம் விளக்குகிறார்கள்.இவர்கள் முதலில் நிலச்சுவான்தார்களை எதிர்க்க அஞ்சுகிறார்கள்.பின்னர் சிலர் மட்டும் தாசில்தாரிடம் மனு அளிக்கிறார்கள்.மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கிறார்கள்.மாவட்ட ஆட்சியர் வரை விஷயம் சென்று விட்டதால் தாசில்தார் கிராம பஞ்சாயத்துகளில் இது குறித்து விசாரிக்கிறார். கிராம பஞ்சாயத்துகளாலும் நிலச்சுவான்தார்களாலும் பண்ணையடிமைகள் மிரட்டப்படுகிறார்கள்.பலர் பின்வாங்குகிறார்கள்.இறுதியில் ஒவ்வொரு கிராமத்திலும் உறுதியாக நின்ற பத்து பதினைந்து பேர் மட்டும் பண்ணையடிமை முறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.இது மற்றவர்களுக்கும் நம்பிக்கையை அளிக்கிறது.

இந்த இரண்டு வெற்றிகள் இப்ராஹிம்பட்டினம் விவசாயக்கூலிகளிடம் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது.இனியும் அவர்கள் உதிரியாக செயல்பட இயலாது என்று முடிவு செய்து தொழிற்சங்கத்தை உருவாக்குகிறார்கள்.இப்ராஹிம்பட்டினம் தாலூக்கா விவசாயக் கூலி சங்கம் என்று அதை பதிவு செய்கிறார்கள்.அதற்கு சீதத் கிராமத்தை சேர்ந்த சங்கரய்யா தலைவராக பொறுப்பேற்கிறார்.கீதா பொதுச் செயலாளராகிறார்.இந்தச் சங்கம் இரண்டு விஷயங்களை தீவிரமாக எடுத்துச் செல்கிறது.ஒன்று குறைந்த பட்ச ஊதியம் மற்றது பண்ணையடிமை ஒழிப்பு.இரண்டிலும் சட்டத்தின் துணைக்கொண்டு அவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கின்றன.

1984யில் என்.டி.ஆர். ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சி பொறுப்பேற்றார்.1985யில் வருவாய்த் துறையில் முக்கியமான ஒரு மாற்றத்தை கொண்டு வந்தார்.அந்த மாற்றத்தின் மூலம் தாலூக்காக்கள் மண்டலங்களாக பிரிக்கப்பட்டன.தாலூக்காவிற்கு தாசில்தார் இருப்பது போல மண்டலங்களுக்கு மண்டல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.இப்ராஹிம்பட்டினம் தாலூக்கா இப்ராஹிம்பட்டினம்,மஞ்சள் , யாச்சரம், மகேஸ்வரம்,கண்டுகூர் என்று ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டது.பண்ணையடிமை முறைக்கு எதிராக மண்டல் அதிகாரிகளிடம் நிறைய கிராம மக்கள் மனு அளிக்கிறார்கள்.அதே நேரத்தில் அவர்கள் வேலை நிறுத்தத்திலும் ஈடுபடுகிறார்கள்.மண்டல் அதிகாரிகள் மனுக்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காத போது உயர் நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்கிறார்கள்.மறுபடியும் அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத் தொடங்குகிறது.பண்ணையடிமை முறையிலிருந்து விடுவிக்கப்படுகையில் ஒவ்வொருவருக்கும் நிவாரணத் தொகையாக ஐநூறு ரூபாயும் புனர்வாழ்வுக்கு நான்காயிரம் ரூபாயும் அளிக்கப்பட்டது.குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தின் துணைக்கொண்டு பின் ஊதியமும் கணக்கிடப்பட்டு கொடுக்கபட்டது.

இப்ராஹிம்பட்டினம் தாலூக்காவிலிருந்த யாச்சரம் மண்டலத்தில் சங்கத்தினர் செய்த பணிகளையும் அதில் கிடைத்த வெற்றிகளையும் தாலூக்காவின் பிற மண்டலங்களில் இருக்கும் மக்கள் அறிய வருகிறார்கள்.இவர்கள் தங்கள் சங்கத்தின் நிதித்தேவைகளுக்காக ஒவ்வொரு உறுப்பினரிடமும் ஒரு ரூபாய் வசூலிக்கிறார்கள்.மேலும் தனி நபர்களிடம் கீதா ஓரளவு நிதி வசூலிக்கிறார்.ஆனால் எந்த நிறுவனத்திடமிருந்தும் அமைப்பிடமிருந்தும் பணம் பெற்றுக்கொள்வதில்லை என்பதில் கீதா உறுதியாக இருந்திருக்கிறார்.பண்ணையடிமை முறை ஒழிக்கப்பட்டு குழந்தைகள் விடுவிக்கப்பட்ட பின் அவர்களுக்கான கல்வி குறித்த கேள்வி உருவாகிறது.அந்தக் குழந்தைகள் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட குழந்தைகள் நல விடுதிகளில் சேர்க்கப்பட்டனர்.ரெங்கா ரெட்டி, மகபூப்நகர், நல்கொண்டா மாவட்டங்களிலிருந்த சமூக நல தங்கும் விடுதிகளிலும் அனுமதிக்கப்படுகின்றனர்.

இப்ராஹிம்பட்டினம் விவாசயக் கூலி சங்கம் பண்ணையடிமை ஒழிப்பு மற்றும் குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றிற்கு மட்டுமே போராடினார்.இந்த மண்டலங்களில் உள்ள மக்கள் நிலம் சார்ந்த சில பிரச்சனைகளை கொண்டு வந்த போது முதலில் சங்கத்தினர் அதை ஏற்றுக் கொள்ளத் தயங்கினர்.பல அரசாங்க நிலங்களை , நில உச்சவரம்பு சட்டத்தின் வழி பெறப்பட்ட நிலங்களை அந்தப் பகுதியின் பண்ணையார்கள் தங்களின் நிலமாகவே பாவித்து வந்தார்கள்.கண்டுகூர் மண்டலத்தில் ஜாபர்குடெம் கிராமத்தில் புபால் ரெட்டி என்ற பண்ணையார் 107 ஏக்கர் அரசாங்க நிலத்தை தன்னுடைய நிலம் என்று கூறி அந்த நிலத்தின் மீது தடை உத்தரவு பெற்றிருந்தார்.இத்தகைய சூழலில் 1986ஆம் ஆண்டு அந்த நிலத்தில் பயரிட ஜாபர்குடெம் மக்கள் முடிவு செய்தார்கள்.

ரெட்டிகளுக்கும் கிராம மக்களுக்கும் நிகழ்ந்து வந்த பூசல்களை கவனித்து வந்த அரசு நிர்வாகம் நிலைமை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவை பிறப்பித்தது.ஆனால் அந்த நிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்ததின் வழி அந்த நிலத்தின் உடைமையை பண்ணையார்கள் இழந்தனர்.கிராமத்து மக்கள் பயிரிட்ட சோளத்தை வேலையாட்களை வைத்து அறுவடை செய்ய மண்டல் அதிகாரி உத்தரவிட்டார்.வேலையாட்களுக்கான ஊதியத்தை கிராமத்து மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்தார்.ஆனாலும் நில உடைமை பண்ணையாரிடமிருந்து பறிக்கப்பட்டதும் கிராமத்து மக்கள் அங்கு பயிர் செய்து அறுவடை செய்ய இயன்றதும் முக்கிய வெற்றிகளாக அமைந்தன.யாராலும் எதிர்க்க இயலாத புபால் ரெட்டி குடும்பத்தை ஜாபர்குடெம் மக்கள் எதிர்த்து வெற்றி பெற்றனர் என்பது அங்குள்ள பிற கிராமத்து மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் சமிக்ஞையாக அமைந்தது.

அதே போல கண்டுகூர் மண்டலில் இருந்த புலிமாமிடி என்ற கிராமத்தில் இராமச்சந்திர ரெட்டியின் குடும்பத்தினருக்கு இரண்டாயிரம் ஏக்கருக்கும் மேல் நிலம் இருந்தது.ஆந்திர நில உச்சவரம்பு சட்டத்தின் படி ஒருவருக்கு அதிகப்பட்சம் ஐம்பத்தியைந்து ஏக்கர் தான் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது.இதனால் இராமச்சந்திர ரெட்டி நிலங்களை பினாமிகளுக்கு மாற்றினார்.ஒரே நாளில் 50B என்ற விற்பனை பத்திரத்தின் மூலம் எண்ணூறு ஏக்கர் நிலம் பினாமிகளுக்கு மாற்றப்பட்டது.240 ஏக்கர் நிலத்தை கோயில் பெயருக்கு மாற்றினார்.1986யில் புலிமாமிடி ஊர் மக்கள் இராமச்சந்திர ரெட்டி குடும்பத்திற்கு எதிராக சமூக விலக்க போராட்டத்தை மேற்கொண்டார்கள்.அவர்கள் வீட்டிற்கு பால் விநியோகம், முடி திருத்தம், சமையல், துணி துவைத்தல் , வீடு சுத்தம் செய்தல் என்று எந்த பணிக்கும் ஆட்கள் செல்லவில்லை. அவர்களுக்கு ஏழு கோழி பண்ணைகள் இருந்தன.மக்கள் போராட்டத்தால் ஒன்றைத் தவிர மற்றவை அனைத்தும் மூடப்பட்டன.அவர்கள் அனைவரும் சமூக விலக்கத்தை எதிர் கொள்ள இயலாமல் ஐதராபாத் சென்றனர்.

ஜாபர்குடெம் , புலிமாமிடி ஆகிய கிராமங்களில் சங்கத்திற்கு போராட்டங்கள் வழி முன்னகர்வு சாத்தியப்பட்டது. அதே போல இப்ராஹிம்பட்டினம் மாவட்டத்தில் மண்டலங்கள் வாரியாக 1954யில் நில அளவீடு செய்து உருவாக்கப்பட்ட காஸ்ரா பஹானி என்ற நில ஆவணங்களும்  வரைபடங்களையும் பெறப்பட்டன.சங்கத்து உறுப்பினர்கள் நில ஆவணங்களையும் வரைபடங்களையும் வைத்து நிலங்களை அளந்து பண்ணையார்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை கண்டறிந்தார்கள்.மக்கள் வாய்மொழியில் சொன்ன ஆக்கிரமிப்புகளும் ஆவணங்கள் வழி கண்டறிந்தவையும் பொருந்தி போயின.

இதற்கு அடுத்தபடியாக அவர்கள் குத்தகைகாரர் பாதுகாப்புச் சட்டத்தின் படி குத்தகைகாரர்களுக்கு அளிக்கப்பட்ட நிலங்களை மீட்கும் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.மேலே உள்ள மூன்று விஷயங்களுக்கும் நான்காவதுக்கும் முக்கிய வித்யாசம் இருந்தது.முதல் மூன்றில் அந்தப் போராட்டங்கள் வழி பயன் பெறுபவர்கள் தலித் சமூகத்தினராக இருந்தனர்.முக்கியமாக இப்ராஹிம்பட்டினரத்தின் மாதிகா இனத்து மக்கள். ஆனால் நான்காவது போராட்டம் தனி ஒருவருக்காக செய்யப்பட வேண்டிய போராட்டமாக இருந்தது.இதில் பெரும்பாலும் அவர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர்.முதலில் சங்கத்தினர் இதில் தலையீட தயக்கம் காட்டினர்.பின்னர் பல்வேறு மக்கள் தொடர்ந்து இதன் பொருட்டு அவர்களை அணுகவும் அதன் முக்கியத்துவத்தையும் நியாயமான உரிமை தான் என்ற அடிப்படையிலும் அத்தகைய மீட்பு நடவடிக்கைகளிலும் அவர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கினர்.அத்தகைய மக்களுக்கு மறுபடியும் நிலத்தின் உரிமையை பெற சங்கம் வழக்குகள் தொடுத்தது.

அரசாங்க நில ஆக்கிரமிப்பு, பண்ணையடிமை ஒழிப்பு , குறைந்த பட்ச ஊதியம் ஆகிய போராட்டங்களில் அவர்களுக்கு பல இடையூறுகள் ஏற்பட்டன.புலிமாமிடி, மீர்கான்பேட், தண்டமல்காபுரம் ஆகிய இடங்களில் பண்ணையார்கள், காவல் துறை, வருவாய்த்துறை , அரசியல்வாதிகள் என்ற பல வழிகளில் இடர்கள் இருந்தன.மக்கள் காவல் துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடித்து துன்புறுத்தப்பட்டனர்.அவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டன.அனைத்து தருணங்களிலும் கீதா அவர்களை உடனடியாக ஜாமீனில் கொண்டு வந்தார்.கீதாவின் கணவர் சிறில் ரெட்டி தன்னுடன் பணிபுரிந்த வழக்கறிஞர்களுடன் இணைந்து உருவாக்கிய சலஹா என்ற அமைப்பின் வழி அவர்களுக்கு சட்ட உதவிகள் கிடைத்தன.

இத்தகைய போராட்டங்கள் மட்டுமில்லாமல் மக்கள் நலம் சார்ந்த முன்னெடுப்புகளையும் சங்கத்தினர் முன்னெடுத்தனர்.பல வருடங்கள் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் கல்விக்காக செய்யுதா (கை கொடு) என்ற சொசைட்டியை உருவாக்கினார் கீதா.இதன் வழி அவர்கள் ஏழாம் வகுப்பு ,பத்தாம் வகுப்பு தேர்வுகளை எழுத முடிந்தது.இந்த அமைப்பின் வழி இருபத்தியைந்து முறை சாரா கல்விக்கூடங்கள் தொடங்கப்பட்டன.இந்த அமைப்பிற்கு அரசாங்கத்தின் நிதி பெறப்பட்டது.சங்கத்தின் முழு நேர உறுப்பினர்கள் இதில் மேற்பார்வையாளராக பணி புரிந்தார்கள்.அதன் வழி அவர்களுக்கு ஊதியம் கிடைத்தது.பகுதி நேர ஆசிரியர்கள் வகுப்பு எடுத்தார்கள்.இத்தகைய முயற்சிகள் வழி இப்ராஹிம்பட்டினம் தாலூக்காவின் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கப்பட்டது.இவர்களில் சிலர் பின்னர் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களாகவும் கிராம பஞ்சாயத்து தலைவர்களாகவும் வந்தார்கள் என்று குறிப்பிடுகிறார் கீதா.

மேலும் மக்களுக்கு கிராமத்தில் செய்ய சாத்தியப்பட்ட தொழில்களுக்கு கடனுதவி பெற உதவினர்.யாச்சரம் மண்டலில் இருபத்தி மூன்று ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு இருபத்தி மூன்று முன்னாள் பண்ணையடிமைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டன.இந்த இருபத்தி மூன்று ஏக்கர் நிலத்தில் ஆழ்குழாய் கிணறு , பால் பண்ணை அமைக்கப்பட்டன.கூட்டுறவு அமைப்பின் வழி குடும்ப கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டு அதன் வழி நிலம் பண்படுத்தப்பட்டது.இப்ராஹிம்பட்டினம் மக்களின் மருத்துவத் தேவைகளுக்காக கீதா தனது மருத்துவத்துறை நண்பர்களை வாரம் ஒருமுறை இப்ராஹிம்பட்டினத்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.பொதுநல மருத்துவர்கள் வாரம் ஒரு முறை ஐதரபாத்திலிருந்து இப்ராஹிம்பட்டினம் வந்து சென்றார்கள்.மருத்துவ முகாம்களும் நிகழ்த்தப்பட்டன.மாற்றுத் திறனாளிகளுக்கான சங்கம் தொடங்கப்பட்டு அவர்களுக்கான உரிமைகளை பெற முயற்சித்தனர்.விவசாய வேலைகள் செய்ய சாத்தியமற்ற கிராமத்தினருக்காக காதி நூல் நூற்றல் கிடங்கு தொடங்கப்பட்டது.இதன் மூலம் பல பெண்கள் பயன் பெற்றனர்.இந்தக் கிடங்கு நான்காண்டுகள் தொடர்ந்து இயக்கப்பட்டது.பண்ணையடிமைகளாக இருந்தவர்களுக்கு வாழ்வதாரத்திற்காக தரப்பட்ட நான்காயிரம் ரூபாயில் அவர்களுக்கு முதலில் மண்டல் அதிகாரிகள் காளைகளை வாங்கித் தந்தனர்.ஆனால் அதனால் பெரிய பயன் இல்லை என்று அறிந்த சங்கத்தினர் அந்தத் தொகையை கொண்டு நிலத்தை வாங்கித் தந்தனர்.மேலும் யாச்சரம் மண்டலில் முதல் முறையாக 52 வீடுகளை கட்ட சங்கம் உதவியது.மக்கள் தாங்களாகவே இந்த வீடுகளை கட்டிக் கொண்டனர்.பொதுவாக அரசாங்கம் கட்டித் தரும் வீடுகள் கான்கிரீட் கட்டிடங்களாக இருந்தன.இவை இரண்டு அறைகளும் ஒரு கழிப்பறையும் கொண்டிருந்தன.அதற்கு மாற்றாக சங்கத்தினர் ஒரு பெரிய அறை கொண்ட ஓட்டு வீடுகளை கட்டினர்.இவை மழைக்காலங்களில் கால்நடைகளை வீட்டுக்குள் கட்டி வைக்க உதவியாக இருந்தன.

புலிமாமடி என்ற கிராமத்தில் இராமச்சந்திர ரெட்டியின் ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை மக்களுக்கே தர அப்போதைய முதலமைச்சர் சென்னா ரெட்டியின் வீட்டில் அவருடைய மகன்கள் சஷிதர் ரெட்டியுடனும் ரவிந்தீர் ரெட்டியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.பேச்சுவார்த்தை வெற்றி பெற்றாலும் மக்கள் பெயருக்கு நிலங்கள் மாற்றப்படவில்லை.ஆனால் சங்கத்திற்கு இந்த பேச்சுவார்த்தை முக்கியமான நிகழ்வாக அமைந்தது.

1991யில் புலிமாமிடியின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பல பண்ணையார்கள் தாங்கள் ஆக்கிரமித்திருந்த நிலங்களை அவர்களாகவே மக்களுக்கு தர முன்வந்தனர்.மக்கள் யுத்தக் குழுவினர் அருகிலிருந்த மாவட்டங்களில் இருந்ததும் அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. இந்த நிலங்களை முதலில் பண்ணையார்கள் அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்கள்.பின்னர் அரசாங்கம் இந்த நிலங்களை மக்களுக்கு பிரித்து தந்தது.நேரடியாக நிலங்கள் மக்களுக்கு மாற்றப்பட்டால் பத்திரப்பதிவு செலவை மக்களால் ஏற்க இயன்றிருக்காது என்கிறார் கீதா.இந்த வெற்றிகள் மிகப்பெரிய கொண்டாட்டங்கள் ஆகின.அப்போதைய ஆந்திர ஆளுநர் கிருஷ்ணகாந்த் தலைமையில் மக்களுக்கு நிலப்பட்டாக்கள் வழங்கப்பட்டன.அனைத்து கட்சிகளையும் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.

1991யில் நிலச் சீர்த்திருத்தம் பற்றிய ஒரு ஆய்வுக்காக தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்த முப்பத்தி மூன்று மண்டல்களில் நில அளவை செய்தது.கீதா அதில் பங்கெடுத்தார்.சர்ச்சைக்கு உரிய நிலங்களில் நில அளவை செய்ய பல்வேறு அமைப்புகளை கீதா ஒருங்கிணைத்தார்.இந்த ஆய்வின் மூலம் நில ஆவணங்களையும் உண்மையில் அவற்றை உடைமை கொண்டாடுபவரையும் பதிவு செய்தனர்.இதில் அரசாங்க நிலங்கள் , நில உச்சவரம்புக்கு அதிகமான நிலங்கள், பாதுகாக்கப்பட்ட குத்தகைகாரர் நிலங்கள் ஆகியவை அடங்கும்.இந்த நில அளவை முடிவுகள் மிகப்பெரிய அளவில் பல்வேறு வகையிலான நிலங்கள் நிலச்சுவான்தார்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை ஆவணப்படுத்தின.

சங்கம் நிலம்,ஊதியம் சார்ந்த உரிமை போரட்டங்களில் பங்கெடுத்தாலும் அதன் வழி வேறு சில மாற்றங்களும் மக்கள் மத்தியில் நிகழ்ந்தன.கிராமங்களில் மக்கள் சாதிகளின் வெளிக்கு அப்பால் செல்ல ,மற்றவர்களை சந்திக்க, உரையாட இந்தச் சங்கத்து பணிகள் அவர்களுக்கு உதவின.அவர்களுக்குள் சகோதரத்துவம் மிளிர்ந்தது.மேலும் அவர்கள் இதன் மூலம் தங்களின் உரிமைகளை அறியத் தொடங்கினர்.அதை அவர்கள் சங்கம் வழி அடைந்தனர்.

ஆந்திரத்தில் 1985யில் நிகழ்ந்த கரம்சேடு படுகொலை முக்கியமான ஒரு துர் நிகழ்வாக அமைந்தது.அதுவரை தலித்துகள் ஒடுக்கப்படுவதை ஒரு வர்க்கம் சார்ந்த பிரச்சனையாக மட்டுமே பார்த்தவர்கள் அதற்குப் பின்னர் வர்க்கப் பிரிவினைக்குள் மற்றொரு பிரிவாக சாதியப் பாகுபாட்டை அங்கீகரிக்கத் தொடங்கினர்.கீதா கரம்சேடு படுகொலைக்குப் பின்னர் அந்த ஊருக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்தார்.இந்த நிகழ்வு தலித்துகள் ஒரு சிக்கலை ஒரு நிகழ்வை எப்படி பார்ப்பார்களோ அதே போல தன்னை பார்க்கத் தூண்டியது என்கிறார்.இப்ராஹிம்பட்டினம் தாலுக்காவில் அவர் பெரும்பாலும் மாதிகா இனத்து மக்களுடன் தான் பணியாற்றினார்.மாதிகா இனத்து மக்கள் வறியவர்களிலும் மிக வறியவர்களாக இருந்தனர் என்பது தான் அவர்களுடன் பணி புரிய முக்கிய காரணம் என்கிறார் கீதா.மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீதாவின் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து எதிரப்பு தெரிவித்தது.சங்கத்து கூட்டங்களை ஊருக்குள் நடத்தாமல் ஊருக்கு வெளியே சேரிகளில் நடத்துவதை கண்டித்தனர்.ஆனால் ஊருக்குள் நடத்தினால் உயர்த்தப்பட்ட சாதியினர் நேரடியாகவோ மறைமுகமாகவோ மாதிகா மக்களை கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாதவாறு செய்யக்கூடும் என்பதால் கீதா கூட்டங்களை சேரிகளிலே நடத்தினார்.மாதிகா மக்களுடன் பணி புரியத் தொடங்கிய பின்னர் அவர்கள் மெல்ல கீதாவை ஏற்றுக்கொண்டனர்.கீதா அந்த மக்கள் மீது காட்டிய அன்பை அவர்களும் அவர் மீது பொழிந்தனர்.அத்தனை வறுமையிலும் , துயரத்திலும் , சுரண்டலுக்கு மத்தியிலும் , தங்கள் குழந்தைகள் பசியால் இறந்த போதும் , பண்ணையார்களால் தங்களின் பெண்களும் மனைவிகளும் வன்புணர்வு செய்யப்பட்ட போதும் , ஊட்டச்சத்து குறைப்பட்டால் நாற்பது வயதிலேயே வயதோகித்தை அடைந்த போதும் , கடுமையான வேலைகளும் , எவ்வித மருத்துவ வசதியும் இல்லாத போதும் அவர்கள் நுண்ணுணர்வு கொண்டவர்களாகவும் மன்னிக்க கூடியவர்களாகவும் இருந்தனர் என்கிறார் கீதா.அவர்கள் வாழ்க்கையை விரும்பினர் , மக்களை விரும்பினர்.அவர்களுக்கான இடத்தை அவர்கள் அடைய உதவும் போது உதவுபவர்கள் மீது அவர்கள் அன்பு செலுத்தினர்.அவர்கள் அசாத்தியமான திறமைகள் கொண்டிருந்தனர்.வீட்டில் திருமணம், மரணம் , கொண்டாட்டம் என்று எந்த சடங்கின் போதும் அவர்கள் பறை அடித்தனர்.குச்சியாட்டம் போன்ற நடனங்களில் சிறந்து விளங்கினர்.மாதிகா பெண்கள் சுதந்திரமானவர்களாக இருந்தனர் என்கிறார்.

1992யில் கீதா இப்ராஹிம்பட்டினத்தில் தன் பணிகளை நிறுத்திக்கொண்டார்.இப்ராஹிம்பட்டினத்தில் ஆளுநர் முன்னிலையில் மக்களுக்கு பட்டா வழங்கப்பட்ட நிகழ்வுடன் ஓரளவு அவர்கள் தங்கள் பணிகளை முடித்திருந்தனர்.தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் நில அளவையைக் கொண்டு மேலும் பல முன்னெடுப்புகளை செய்ய வேண்டிய அவசியம் இருந்தது.ஆனால் ஆந்திரத்தின் முப்பத்தி மூன்று மண்டல்களில் அதை யார் செய்வது.மறுபடியும் அனைத்தையும் முதலில் இருந்தே தொடங்க இயலாது என்ற சோர்வுக்கு வந்து சேர்ந்தார் கீதா.

அந்தந்த மண்டல்களில் இது போன்ற சங்கங்கள் உருவாகி தங்களுக்கான உரிமைகளுக்கு போராடியிருக்க வேண்டும்.அப்படியான ஒரு அமைப்பு உருவாகவில்லை.மேலும் இப்ராஹிம்பட்டினத்தில் ஏதேனும் செய்ய வேண்டுமென்றால் அதுவரை இருந்த இலக்குகளை விட்டுவிட்டு புதிய இலக்குகளை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.எத்தகைய இலக்குகளை தேர்வு செய்வது என்ற கேள்வி அவர் முன் எழுந்தது.விவசாயம் மட்டும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை.இயற்கை வளத்தை முழுமையாக சுரண்டும் தொழில் நிறுவனங்களும் நீண்ட கால அளவில் ஒரு மாற்றான தேர்வாக இல்லை.அரசு நிர்வாகத்தில் மக்களுக்கு போதிய பங்கு இல்லை.இது மாற வேண்டுமென்றால் வேறு வகையான புரட்சி தேவைப்பட்டது.ஆனால் அது எம்.எல். அமைப்புகள் முன்வைக்கும் புரட்சி அல்ல.நீடித்த வளர்ச்சிக்கான பாதை தேவைப்பட்டது.ஆனால் அதை முன்னெடுப்பது எப்படி என்று கேள்வியுடன் தன் இப்ராஹிம்பட்டினம் பயணத்தை முடித்துக் கொள்கிறார் கீதா.

கிட்டத்தட்ட பத்து வருடங்களில் அவர் மாதிகா மக்களுடன் இணைந்து பல வெற்றிகளைப் பெற்றார்.அவருக்கு ஊடக வெளிச்சம் கிடைத்தது.அவர் பலரால் அறியப்பட்ட ஒரு ஆளுமையானார்.ஈநாடு இராமோஜி ராவ் அவரைப் பற்றிய திரைப்படத்தை எடுக்க விரும்பினார்.ஆனால் இது மக்கள் போராட்டம்.வெற்றி அவர்களுடையது என்று அதிலிருந்து முழுக்க விலகிவிட்டார் கீதா.நாற்பது வயதை நெருங்கிய கீதா குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்து அடுத்த ஒரு வருடத்தில் லீலா என்ற பெண் மகவை பெற்றெடுத்தார்.

கீதா இந்தப் புத்தகத்தில் மறுபடி மறுபடி ஒரு விஷயத்தை சொல்லிக்கொண்டே இருக்கிறார்.இப்ராஹிம்பட்டினம் தாலூக்காவில் மக்கள் தங்கள் போராட்ட முறைகளை அவர்களே கண்டுபிடித்தனர்.அவர்களுக்கு ஒரு முகமை தேவைப்பட்டது.அந்த முகமை அவர்களுக்கான உரிமைகள் பற்றிய அறிதல்களை அவர்களுக்கு தந்து அவர்களோடு இருக்கும் போது அங்கு அன்பு சாத்தியப்பட்டது.அவர் ஒரு போதும் அது தன்னால் நிகழ்ந்த வெற்றி என்று பறைசாற்றிக் கொள்ளவில்லை.கிட்டத்தட்ட ஏழு மண்டல்களில் விவசாயச் சங்கத்தின் பணிகள் நடைபெற்றன.1990களில் கிட்டத்தட்ட பதினான்காயிரம் ஏக்கர் நிலம் ,நிலம் அற்ற ஏழை மக்களால் பயரிடப்பட்டது.இதில் பெரும்பகுதி நிலம் ,பண்ணையார்கள் நிலங்களை கைதுறந்தபின்னர் மக்களின் பெயருக்கு மாற்றப்பட்டன.கீதா தங்கள் சங்கத்தின் வழி அடைந்த சில வெற்றிகளை பட்டியலிடுகிறார்.

அதிகாரபூர்வமாக 1500 பண்ணையடிமைகள் பண்ணையடிமை முறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.அவர்களுக்கு நிவாரணத் தொகையும் புனர்வாழ்வுக்கு பணமும் தரப்பட்டன.இதைத்தவிர 1420 பண்ணையடிமைகள் விடுவிக்கப்பட்டனர்.இவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பெண்களுக்கு எட்டு அணா முதல் இரண்டு ரூபாய் என்றிருந்த கூலித்தொகை நான்கிலிருந்து ஐந்து ரூபாயாக உயர்ந்தது.ஆண்களுக்கு ஆறு முதல் ஏழு ரூபாயிலிருந்து பன்னிரெண்டு முதல் பதினைந்து ரூபாயாக உயர்ந்தது.பண்ணையடிமைகளாக இருந்தவர்களுக்கு அறுபதிலிருந்து எண்பதுரூபாய் என்பதலிருந்து நூற்றியெண்பது முதல் மூந்நூறு ரூபாயாக உயர்ந்தது.விவசாயக் கூலிகளுக்கு கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய் பின் ஊதியத் தொகையாக கொடுப்பட்டது.அறுபத்தி ஆறாயிரம் ரூபாய் அவர்களுக்கு வேலையின் போது ஏற்பட்ட காயங்களுக்கு நிவாரணத் தொகையாக கொடுக்கப்பட்டது.இன்று இப்ராஹிம்பட்டினம் தாலூக்காவில் ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு எண்பது லட்சத்திலிருந்து ஐந்து கோடி வரை போகிறது என்கிறார் கீதா.அந்த அடிப்படையில் பார்க்கும் போது சங்கம் 11,200 கோடியிலிருந்து 70,000 கோடி வரை மதிப்புள்ள நிலத்தை மக்களுக்கு இந்தப் போரட்டங்கள் வழி பெற்றுத்தந்திருக்கிறது சங்கம் என்கிறார்.

வன்முறையற்று மக்களை திரட்டி போராடுவதன் வழி மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதற்கு கீதாவின் நிலம்,தூப்பாக்கிகள்,சாதி,பெண் என்ற இந்தப் புத்தகம் ஒரு சாட்சி.ஆனால் இந்திய அரசியலமைப்பும் சட்டங்களும் அளிக்கும் உரிமைகள் வறியவர்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை என்பதற்கும் அதற்கு சங்கங்களும் வலிமையான மக்கள் போராட்டங்களும் தேவைப்படுகின்றன என்பதற்கும் இந்தப் புத்தகமே சாட்சி.ஆனால் நீடித்த வளர்ச்சி போன்ற பெரிய திட்டங்களுக்கு சங்கங்களும் மக்கள் போராட்டங்களும் மட்டுமே போதுமானவை அல்ல என்ற குறிப்புடன் இந்தப் புத்தகம் தன் வாதத்தை நிறைவு செய்து கொள்கிறது.

பின் குறிப்பு : கீதா ராமசாமி(Gita Ramaswamy) ஐதராபாத் புக் டிரஸ்ட் என்ற பதிப்பு நிறுவனத்தை 1980யில் நண்பர்களுடன் தொடங்கி இன்று வரை நடத்தி வருகிறார்.400க்கும் மேற்பட்ட புத்தகங்களை இந்தப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.அவரின் நிலம்,தூப்பாக்கிகள்,சாதி,பெண் (Land,Guns,Caste,Woman) என்ற இந்தப் புத்தகத்தை நவயானா(Navayana) பதிப்பகம் பிரசுரித்துள்ளது.


- தளம் இதழில் பிரசுரமான கட்டுரை.