Showing posts with label மதிப்புரை. Show all posts
Showing posts with label மதிப்புரை. Show all posts

எஞ்சியிருக்கும் சொற்கள்





சுரேஷ் பிரதீப் எழுதியுள்ள எஞ்சும் சொற்கள் அவருடைய இரண்டாவது சிறுகதை தொகுப்பு.பன்னிரெண்டு கதைகள்.இந்தக் கதைகளை இரண்டு அல்லது மூன்று தலைப்புகளின் கீழ் தொகுக்கலாம்.சமூகத்தில் நிலவும் சாதிய பாகுபாடுகளை பேசும் கதைகள் என்ற தலைப்பின் கீழ் வீதிகள், எஞ்சும் சொற்கள், ஆழத்தில் மிதப்பது, வரையறுத்தல் ஆகியவற்றை வகுக்கலாம்.பரிசுப்பொருள், மடி, மறைந்திருப்பவை , 446A, அபி , ஈர்ப்பு  ஆகியவை ஆண் பெண் உறவை மையப்படுத்திவை.பாரம் , பதினொரு அறைகள் ஆகிய இருகதைகளையும் பால்ய காலத்தின் தனிமை,துயரம் ஒருவனில் உருவாக்கும் ஆளுமைச் சிக்கல் பற்றிய கதைகள் என்று கூறலாம்.

எஞ்சும் சொற்கள் ஒர் அரசு அலுவலகத்தில் சொற்களால் ,சைகைகளால் ஒருவன் சாதி ரீதியில் துன்புறுத்தப்படுவதை பேசும் கதை.கதையில் இறுதியில் கதைச்சொல்லி மாவட்ட ஆட்சியரிடம் சொல்லியிருக்க வேண்டிய ஆனால் சொல்லாமல் விட்டதாக எண்ணிக்கொள்ளும் சொற்களே இந்தக் கதையின் தலைப்பு.தொகுப்பின் தலைப்பும் கூட. வீதிகள் சாதி மாற்று திருமணத்தின் சிக்கல்களை பேசும் கதை. வீதிகள் புறத்தில் மட்டுமல்ல அகத்திலும் சாதிய வீதிகள் உண்டு.வரையறுத்தல் ஊரில் சாதி மாற்று திருமணத்தால் நிகழும் வன்முறை பற்றியும் அந்த வன்முறையால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தை பற்றியும் அந்தக் குடும்பத்திலிருந்து படித்து பண்பாட்டு மானுடவியல் பேராசியராக மேலெழுந்து வரும் பெண் பற்றியும் அவளது சாதி தேவையற்றது என்ற பிரசங்கத்தை பற்றியதுமான கதை.இந்தக் கதை மிக நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.நேர்கோட்டு தன்மையற்று சொல்லப்பட்டிருந்தாலும் எந்த குழப்பமும் அற்று நல்ல மொழிநடையில் முன் பின்னாக நிகழ்வுகளை அடுக்கி சொல்கிறார்.கதையில் அந்தப் பெண் சாதிய அவசியமின்மை பற்றி பிரசங்கிப்பது தேவையற்றது என்று தோன்றியது.ஆனால் அது மிகப்பெரிய அளவில் கதையில் துரத்திக் கொண்டு இருக்கவில்லை.ஆழத்தில் மிதப்பது கதையில் அந்தப் பெண்னை மகேந்திரனுக்கு திருமணம் செய்து வைக்க அவளது தந்தையின் இரண்டாம் மனைவி விரும்புகிறாள்.அவளது தந்தை இறக்கும் போது தன் சாதிப்பையனுக்கு அந்தப் பெண்னை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இறந்துவிடுகிறார்.அவள் தத்தெடுக்கப்பட்ட பெண் என்று கதையின் முற்பகுதியில் வந்தாலும் அவள் அவளது தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்தவளாக இருக்க வேண்டும் என்றும் அவளை தன் சாதிக்குகள் கொண்டு வந்து விட வேண்டும் என்ற விருப்பம் இரண்டாவது மனைவி, இறந்து போன கணவன் ஆகியோரின் ஆழத்தில் இருப்பதான குறிப்பு கதை இறுதியில் வருகிறது.

பரிசுப்பொருள் , மடி , மறைந்திருப்பவை , 446A,  அபி, ஈர்ப்பு  கதைகள் ஆண் பெண் உறவின் சிக்கல்களை பேசும் கதைகள்.இதில் 446A,மடி,அபி எந்த வகையிலும் தொகுப்புக்கான கதைகள் இல்லை.மிக எளிய கதைகள்.கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஈர்ப்பு கொண்ட இருவர் அதே கல்லூரியில் சில வருடங்கள் கழித்து சந்தித்து கொள்வது, ஒரு பெண்ணின் மீதான காமத்தால் அவளை பின்தொடர்வது , திருமணத்திற்கு வெளியே தோன்றும் உறவு , விவாகரத்து , புதிய உறவும் எளிதல் முடிந்துவிடுவது என்று இந்த கதைகள் எளிதில் கட்டமைக்கக்கூடியவையாக இருக்கின்றது.இன்று எழுதும் யாரும் எழுதக்கூடிய கதைகள்.பரிசுப்பொருள் ,மறைந்திருப்பவை ஒர் ஆண் பெண் உறவில் நொதிக்கும் வன்மம் பற்றி சொல்பவை.பரிசுபொருள் கதையில் உரையாடல் நன்றாக வந்திருக்கிறது.சுரேஷ் பிரதீப்பின் கதைகளில் நான் கண்ட முக்கியமான குறை அப்போது என்னை அவர் சந்தேகித்து விடுவாரோ என்று நான் முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டேன் என்பது போன்று ஒருவரின் உளநிலையை விவரிக்க முனையும் வரிகள்.இவை மிக செயற்கையாக பின்னப்பட்டுள்ளது.இவற்றை தவிர்க்கலாம்.ஈர்ப்பு கதை அத்தனை பெரிய கதையாக இருப்பதற்கான தேவை இருக்கிறதா என்று தெரியவில்லை.அந்தக் கதையில் வரும் பெண் பற்றிய அவதாணிப்புகள் அனைத்தும் எளிய அளவில் எங்கெல்லாம் ஆண்கள் கூடுகிறார்களோ அங்கெல்லாம் பேசப்படுபவை.அதை தீவிரமாக சொல்வதாக முன்வைக்கும் தொனி இந்தக் கதையில் இருக்கிறது.

பதினொரு அறைகள் கதையில் கதைத்தலைவனின் அன்னை அவனது சிறுவயதில் அவர்களை விட்டுவிட்டு அவனது தந்தையின் முதலாளியுடன் சென்று விடுகிறாள்.அவளது அன்னை சிறுவயதில் அவளுக்கு கொடுக்கும் பதினொரு அறைகளை அவன் வளர்ந்து அவளது மகனுக்கு கொடுக்கிறான்.இந்தக் கதையில் அவனது அன்னை வீட்டை விட்டு கணவனின் முதலாளியுடன் சென்று விட முடிவு செய்து விடுகிறாள்.தன் கணவன் உணவருந்தும் போது இதைச் சொல்கிறாள்.அடுத்த நாள் கணவனின் முதலாளி அவளை வந்து அழைத்து செல்கிறான்.இரண்டுமே அபத்தமானவை.கணவன் மனைவி உறவில் விலகிச்செல்பவர்கள் நான் சென்று விடுகிறேன் என்று சொல்வதும் அடுத்த நாள் அந்தக் காதலன் வந்து அழைத்துச்செல்வதும் நிகழாதவை.ஒர் உறவில் இருவருக்கும் மன விலக்கம் இல்லாவிட்டால் அந்த உறவு முடிவுக்கு வரும் போது அங்கே மிகப்பெரிய வன்முறை நிகழும்.அதுவும் வீட்டுக்கு வந்து அழைத்து செல்ல அது முறையான திருமண நிகழ்வு இல்லை.அவளாகவே சென்றுவிடுவாள்.பின்னர் ஊரும் வீடும் அறியும்.

பாரம் கதை பால்ய காலத்தில் நிகழும் ஒர் துர் சம்பவத்தால் நிகழும் உளவியல் பாதிப்பை பற்றியது.சுமை அற்று போகும் போது அவன் இறந்து விடுகிறான்.பால்ய காலத்தில் நிகழும் துர் சம்பவங்கள் சிலரை மரத்துப் போக செய்துவிடுகிறது.அவர்கள் ஒர் உறவில் இருந்தாலும் நண்பர்களுடன் இருந்தாலும் எங்கும் தங்களை கரைத்துக்கொள்ள இயலாதவர்கள்.அவர்கள் எங்கோ இருக்கிறார்கள்.அவர்களின் காலம் எங்கோ உறைந்துவிடுகிறது.இந்தக் கதையில் அந்த விஷயம் நன்றாக வந்திருக்கிறது.

சுரேஷ் பிரதீப்பிடம் நல்ல கிராஃப்ட் இருக்கிறது.சுவாரசியமாக கதை சொல்ல முடிகிறது.இன்னும் விரிந்த தளங்களுக்கு அவர் செல்ல வேண்டும்.வாக்கிய அமைப்புகளில் மட்டும் சில இடங்களில் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. எழுத்துப்பிழைகள் உள்ளது.அடுத்த பதிப்பில் திருத்திவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

எஞ்சும் சொற்கள்  - சுரேஷ் பிரதீப் - கிழக்கு பதிப்பகம்

Photograph by Chetan Hireholi on Unsplash




தவிட்டுக்குருவியின் பாடல்


 
பெருநகரங்களில் வாழும் பெரும்பாலானோர் சிறுநகரங்கள் அல்லது கிராமங்களிலிருந்து பெருநகரங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள்தான்.பெருநகரங்கள் தீமையின் உருவமாக நமக்கு காட்சி அளிக்கிறது.வா.மணிகண்டனின் என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி தொகுப்பில் வரும் பெருநகரம் தீமையின் உருவமாகவே வருகிறது. வெடிகுண்டு வெடிக்கலாம் என்று வந்த செய்தி வெறும் வதந்தி என்று நம்ப மறுக்கும் சத்யன் தான் இன்றிரவு புரட்டிப் படுக்கும் இந்த தலை இந்த உடலில் உள்ளது வெறும் தற்செயல் மட்டுமே என்று நம்புகிறான். காதலர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் மரம் ஒன்று வெட்டப்படுகிறது.பறவைகள் இழந்த குஞ்சுகளையும் கூட்டையும் தேடுகிறது.பின்னர் ஒரு நாள் தன் காதலி தன்னை பிடிக்கும் என்று சொன்னது அனைத்தும் பொருளற்றவை என்று விலகிச் செல்ல அவன் இரவில் வெறுமையில் விழித்துக்கிடக்கிறான்.அவன் அருகில் ஒரு நைலான் கயிறு கிடக்கிறது

அதே பெருநகரத்தில் காவல்துறையிலோ, பத்திரிக்கையிலோ பணிபுரியும் அவன் இரத்தச் சகதியோடு தோண்டப்பட்ட கண்களை பார்க்கையில் தனக்கு மிகவும் நெருக்கமான ஒருவரின் கடைசி முத்தத்தில் கசிந்த கண்களின் சாயலை பார்க்கிறான். 

உறவுகளின் நிலையற்றதண்மை, பறவைகளும் மரங்களும் அற்ற நகரம்,தற்கொலைகள் தினந்தோறும் நிகழும் ஊரில் முழுக்க நிராகரிப்பட்டவனாக உணரும் ஒருவனின் கதையை கேட்க வரும் சிலர் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள்.அவர்கள் இவனின் துக்கத்தை மதுக்கோப்பையில் பிடித்துக்கொள்வார்கள்.அது அவர்களுக்கு சந்தோஷத்தின் சிறகுகளை தரும்.அவர்கள் கோடையின் கொடூரச் சாலையில் பாடுவதற்கான பாடலின் வரிகளுக்காகவே இவனை தேடி வந்திருக்கிறார்கள்.நிராகரிப்பைப் போர்த்திக்கொண்டவன் என்ற இந்த கவிதையை வாசித்தபோது சில தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள், சமீபத்தில் பார்த்த ஜிகிர்தண்டா திரைப்படம் ஆகியவை இயல்பாகவே நினைவுக்கு வருகின்றன.இன்று பெருநகரத்தில் ஒங்காரமிட்டு அழும் ஒருவன் இறுதியில் கண்டுகொள்வது தன் துக்கத்திற்கும் கதறலுக்கும் எந்த செவியும் மடியப்போவதில்லை என்பதைத்தான்.இறுதியில் அவன் கொதிக்கும் சுடுமணலில் மென்பாதங்கள் வதங்கி போக வழி தெரியாமல் அலையும் பூனையென இறக்கத் துவங்கினான் என்று அந்த கவிதை முடிகிறது.

தொடர்ச்சியாக இந்த தொகுதி முழுவதும் பெருநகரத்தில் நடக்கும் சாலை விபத்துக்கள், தற்கொலைகள், மரணம், கோடைக்காமம் ஆகியவையே மறுபடி மறுபடி வருகின்றன.அதை எதிர்கொள்பவன் அதற்கு எந்த எதிர்வினையும் செய்யாதவனாக இருக்கிறான்.அவனுக்கு வழிபட ஒரு கடவுளோ, நம்ப ஒரு சித்தாந்தமோ, பற்றிக்கொள்ள ஒரு கரமோ, கதை கேட்க ஒரு செவியோ இல்லை.அவன் தனித்து நிராகரிப்பட்டு செய்வதறியாது நிற்கிறான். 
இந்த கவிதைகள் அனைத்தும் இருத்தலிய அபத்தம் பற்றியதோ அல்லது இருத்தலிய துயர் பற்றியதோ இல்லை.மாறாக இவை அனைத்தும் இருத்தலிய அவதி பற்றியதாகவே இருக்கின்றன.பெரும் அவதியில்,அவஸ்தையில் துயரறும் மனிதன் அந்த அவஸ்தையை எதிர்த்து புரியும் செயல்தான் என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி கவிதையில் வருகிறது.அவன் செம்மண்ணைக் குழைத்து ஒரு குருவியைச் செய்துவிட முயற்சிக்கிறான்.அவன் தவிட்டுக்குருவியைத்தான் உருவாக்க முயற்சிக்கிறான்.அவன் இந்த பெருநகரத்தின் இல்லாத வனங்களிலிருந்து அதன் சாம்பல் நிறத்தை எடுக்கிறான், அதன் பாடலுக்கு வாகன இரைச்சலை பயன்படுத்திக்கொள்கிறான்.பறத்தல் என்பதே சாத்தியமற்ற இந்த நகரத்தில் ஒரு தவிட்டுக்குருவியை உருவாக்குவதை குறித்து கேலி செய்யும் கடவுளை செருப்பால் அடித்துவிட்டு அமர்கையில் அவன் குழைக்க விரும்பும் செம்மண்ணில் மழைத்துளி விழுகிறது.காமத்தின் குறியீடாகவே இந்த தொகுப்பில் பல கவிதைகளில் வரும் மழை இந்த கவிதையில் ஒரு ஆசிர்வாதத்தின் பெருங்கருணையின் தாய்மையின் குறியீடாக மாறுகிறது.

பறத்தல் என்பது பறவைகளுக்கு உரியது.பறத்தல் என்பது விடுதலை. எல்லாவற்றாலும் நிராகரிப்பட்ட அவன் இரவின் தனிமையில் தன் அகத்தில் ஒரு தவிட்டுக்குருவியை பறக்க விடுகிறான்.முதல் முறையாக அவன் உலகத்தில் ஒரு குருவி பறக்கிறது. அவன் தவிட்டுக்குருவியாகிறான்.அவன் பறக்கிறான்.அவன் தன் உலகத்தை சிருஷ்டித்து கொள்ளும் கடவுளும் ஆகிறான்.

 என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி  - வா.மணிகண்டன்.காலச்சுவடு பதிப்பகம்.