கவிஞர்களின் ஒழுக்கமின்மை


கண்டாரதித்தன் விருது விழாவுக்கு நண்பர் முரளி கிருஷ்ணனுடன் சென்றிருந்தேன்.ஜெயமோகன் அற்புதமாக பேசினார்.அஜயன் பாலாவின் பேச்சும் நன்றாக இருந்தது.ஜெயமோனின் பேச்சு கவிஞர்களை சீண்டக்கூடியது.இருத்தலியம்,ப்ராய்ட், நிட்ஷே இவைகளின் தாக்கம்தான் இன்றைய கவிதைகள் என்றார்.தேவதேவன் மட்டுமே இதிலிருந்து விலகியிருப்பவர்.எங்கோ அடையும் தாழ்வுணரச்சியால் வேறொரு தளத்தில் அதிமானுடர்களாய் நிறுத்திக்கொள்ள விரும்புவதன் விளைவாக இருக்கலாம் இந்தக் கவிதைகள் என்றார்.யவனிகா ஸ்ரீராமின் கவிதை ஒன்றை குறிப்பிட்டு அப்படி ஒரு வாழ்க்கை இந்தியாவில் எங்குமே இல்லை என்றார்.

இந்த கவிதைகளின் கருத்துக்கும் நம் கவிஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சம்மந்தமே இல்லை என்பது அவரின் பேச்சின் மையமாக இருந்தது.நகுலனின் கவிதைகளை வாசிக்கும் போது கவிதைகளின் வழி அவர் உருவாக்கும் அபத்த வாழ்வின் அடையாளமின்மை எனும் ஆன்மிக தரிசனம் அவரின் வாழ்க்கை வழியாகவே அவருக்கு கிடைத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.அதை அவர் உருவாக்க வேண்டும் என்று உருவாக்கியதாக தோன்றவில்லை.தமிழ் நவீன இலக்கியத்தின் மகத்தான கவிஞன் நகுலன்.அவர் உருவாக்கிய தரிசனம் அவரின் கண்டுபிடிப்பு.

ஆத்மாநாமின் கவிதைகள் நிகழ் வாழ்வில் கருத்தியல் கொண்டு உருவாகும் அனைத்து அமைப்புகளும் இறுதியில் தொடங்கிய இடத்திற்கே வந்துவிடுவதை பற்றி சொல்கிறது.ஒரு தனி மனிதன் தன்னை எங்கும் பொருத்திக்கொள்ள இயலாமல் சிதறுகிறான்.தலைவனும் பெயரும் அற்ற இயக்கத்தை உருவாக்க முனைகிறான்.இறுதியில் உங்கள் காலை தொழுகை முடிந்ததா அவ்வளவுதான் உங்கள் உணவு ஊர் சுற்றாமல் ஒழுங்காய்ப் போய் தூங்குங்கள் என்கிறார்.

ஜெயமோகன் நம் கவிதைகளில் வரும் தனிமனிதன் உண்மையில் இல்லை என்கிறார்.இது விவாதத்திற்குரியது.பெரு நகரங்களில் தனிமனிதன் உருவாகிவிட்டான் என்றே தோன்றுகிறது.சபரிநாதனின் வால் தொகுப்பில் அந்த பந்தை ஏன் அந்தக் கூடையில் போட வேண்டும் என்று யாருக்கும் தெரியாது என்பதில் வரும் அபத்தம் நவீன தமிழ் கவிதைகளின் மீது பரிச்சயம் அற்றவரை கூட புன்னகைக்க வைக்கக்கூடியது.ஆனால் இவை எல்லாம் ஏன் கருத்துத்தளத்தில் ஒரே போல இருக்கிறது என்பது முக்கியமான கேள்விதான்.

கூட்டத்தில் சபரிநாதன்,ந.பெரியசாமி,சுநீல் கிருஷ்ணன்,விஷால் ராஜாவை சந்திக்க முடிந்தது.வே.நி.சூர்யாவை நீங்கள் எந்த ஊர் என்றேன்.திருநெல்வேலி வரை சென்று திரும்பி வந்து திருநெல்வேலி என்றார்.எங்கு படிக்கிறீர்கள் என்றேன்.பெரம்பலூர் வரை சென்று திரும்பி வந்து பெரம்பலூர் என்றார்.




No comments: