காலா



கபாலியை விட தெளிவான அரசியல் படம் காலா.படத்தில் ராவணனாக காலா உருவகப்படுத்தப்படவில்லை.நேரடியாகவே ரஞ்சித் சொல்லிவிடுகிறார்.தூய்மையும் சுத்தமும் வன்முறையை தூண்ட வல்லவை.ஜெயமோகனின் மலம் என்கிற சிறுகதை நினைவுக்கு வருகிறது.புதுமைப்பித்தனின் கதையில் அகலிகை ராமரின் செயலை கேள்வி கேட்கிறாள்.தூய்மை எல்லாவற்றையும் கச்சிதமானதாக மாற்ற கோருகிறது.நான் கிழக்கு தாம்பரத்தில் வாடகைக்கு வீடு பார்த்துக்கொண்டிருந்த போது பல பிராமண இல்லங்களில் முதலில் நீங்கள் சைவ உணவு உண்பவர்களாக இருக்க வேண்டும் என்பார்கள் , ஆமாம் சைவம் என்று பேச்சுக்கு சொன்னாலும் இல்லையில்லை ,சைவம் என்று சொல்லி பின்னர் அசைவம் உண்பீர்கள் என்று சொல்லிவிடுவார்கள்.இதில் இருப்பது சாதியம் தான் என்றாலும் அது தூய்மையையும் சுத்தத்தையும் தான் முன்வைக்கிறது.

அந்த தூய்மைவாதத்தின்,கச்சிதத்தின் எதிர்தரப்பாக தாராவியும் காலாவும் வருகிறார்கள்.அவர்களின் தண்ணீரில், காற்றில் இருப்பிடங்களில் துயரம் இருக்கிறது.ஆனால் தூய்மை எனும் வன்முறையை முன்வைக்கும் ராமரை ஹரியை ராவணன் காலா எதிர்கொள்கிறான்.பத்து தலை ராவணன் என்பது உருவகம்.ராவணன் முளைத்துக்கொண்டே இருப்பான்.காலா இறந்தபின் எல்லோரும் காலாவாகிறார்கள்.அவர்கள் ராமரை கொல்கிறார்கள்.

நிலம் மிக முக்கியமான சமூக பிரச்சனை.நிலம் வைத்திருப்பவர்கள் அதிகாரத்தை அடைகிறார்கள்.நிலத்தை இழப்பவர்கள் அடிமைகளாகிறார்கள்.நிலத்தை பாதுகாக்கவும் அதிகாரத்துக்கு அருகில் இருக்க வேண்டியிருக்கிறது.படம் முழுக்க போராட்டமும் அதை ஒடுக்கும் அதிகாரத்தின் தரப்பும் காட்டப்படுகிறது.ரஞ்சித் தன் நோக்கத்தில் தெளிவாக இருக்கிறார்.அவர் முன்வைக்கும் பெருநகரத்தின் சிக்கல் ஒரு கொடூரமான உண்மை.இதில் ரஜினிகாந்த் நடித்திருப்பது ஆச்சர்யம்.ஏனேனில் இதில் ரஜினிகாந்த் காலா கதாபாத்திரமாக மட்டுமே இருக்கிறார்.காலா ஒரு கட்டத்தில் இந்த அதிகாரத்தின் ஒடுக்குதலை எதிர்த்து என்ன செய்வது என்று திகைக்கிறார்.இறக்கிறார்.மக்கள் யுக புருஷர்களை நம்பி இருக்காமல் போராட்டங்களை தங்களின் கையில் எடுப்பதன் மூலமே அதிகாரத்தை எதிர் கொள்ள முடியும் என்கிறார் ரஞ்சித்.ஒரு தொன்மத்திலிருந்து நாம் ஒரே மாதரியான உருவகங்களைத்தான் பெற வேண்டும் என்றில்லை.காலாவை ராவணனுடன் இணைத்திருப்பது நல்ல யுத்தி.

மிக நல்ல அரசியல் திரைப்படம்.


No comments: