காலச்சுவடு மே ஜூன் இதழ்கள்


காலச்சுவடு மே மாத இதழில் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதியுள்ள ரானடேவின் இடத்தில் அம்பேத்கர் கட்டுரையில் கட்டுரையின் தலைப்பு வரியை கட்டுரை முழுதும் எழுதியிருக்கிறார்.அம்பேத்கர் காந்தியையும் ஜின்னாவையும் ஒரு தரப்பில் வைத்து ரானடேவை மறு தரப்பில் வைக்கிறார்.அது அம்பேத்கரின் அப்போதைய நிலைப்பாடு.அதைப்பற்றிய வாசிப்பை முன்வைக்கும் ஸ்டாலின் ராஜாங்கம் அம்பேத்கர் ரானடேவின் இடத்தில் தன்னை பொருத்திப் பார்க்கிறார் என்கிறார்.

காந்தி ஜின்னா ஆகிய அம்பேத்கர் காலத்தின் தலைவர்கள் மாமனிதர்களாக போற்றப்படும் சூழலில் ரானடே போன்றவர் தான் உண்மையான மாமனிதர் என்கிறார் அம்பேத்கர்.யார் மாமனிதர் என்கிற போது வரலாற்றை உருவாக்குவதற்கு காரணமாக அமைபவன் , அறிவும் நேர்மையும் ஒருங்கே பெறுபவன் , சமூக சீர்திருத்தத்தை முன்னெடுப்பவன் மாமனிதன் என்று அம்பேத்கர் சொல்வதை சுட்டிக்காட்டுகிறார் கட்டுரையாளர்.
மேலும் பிம்ப வழிபாட்டை பற்றி அம்பேத்கர் சொன்னதை பற்றி எழுதுகிறார்.காந்தி பிம்ப வழிபாட்டை நுட்பமான அணுகுமுறை வழியாக வளர்தெடுத்தார் என்கிறார் கட்டுரையாளர்.

மேலே மாமனிதர் பற்றி சொல்லியுள்ள மூன்று விஷயங்களும் காந்திக்கும் பொருந்தும் தானே.பிம்ப வழிபாடு பற்றி எழுதுகிறார்.பிம்பத்தை உருவாக்காத அரசியல் சமூக தலைவர் இருக்க முடியுமா.மேலும் இப்படி செய்தால் பிம்பம் உருவாகும் என்பது அது சாத்தியப்படும் முன் யாருக்காவது தெரியுமா.அம்பேத்கர் இன்று ஒரு பிம்பமாக மாறவில்லை என்று சொல்ல முடியமா.இந்த கட்டுரையின் வழி தற்பெருமைக்குப் பதிலாக தன்னடக்கம் , தனிப்பட்ட பகைமைக்கு மாறாக அறிவார்ந்த தலைமை , துதிப்பாடலுக்கு பதிலாக சமமானவர்களோடு விவாதித்தல் , ஆன்மிகத்திற்கு பதிலாக பகுத்தறிவு, பத்திரிக்கையின் வெளிச்சத்திற்கு பதிலாக ஆதரவின்மை,அரசியல் சீர்திருத்தத்திற்கு முன்பாக சமூக சீர்திருத்தம் ஆகியவையே மாமனிதரை உருவாக்கும் என்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது.

இந்த கட்டுரையின் வழி காந்தி கீழே இறக்கப்பட்டு அம்பேத்கரின் பிம்பம் மேலே ஏற்றப்படுகிறது.இது போன்ற பிம்பங்களை உருவாக்காத ஆளுமைகளின் கட்டுரைகள் சாத்தியமில்லை.அம்பேத்கருக்கு தன் காலகட்டத்தில் எதிர் கொண்ட தனிமை , காந்திக்கு கிடைத்த ஊடக வெளிச்சம் , மக்களின் வழிபாடு ஆகியவற்றின் மீது விமர்சனம் இருந்திருக்கலாம்.அது இயல்பு.காந்தியை விட தான் செய்ய விரும்பும் சமூக சீர்திருத்தம் தான் முக்கியமானது என்றும் அவர் கருதியிருக்கலாம்.அது அந்த உரையில் வெளிப்பட்டுள்ளது.

ஆனால் கட்டுரையாளர் அதைப்பற்றிய எந்த கருத்தையும் முன்வைக்காமல் அதை மேலும் விளக்க மட்டுமே செய்கிறார்.இந்தக் கட்டுரையின் நோக்கம் அம்பேத்கரின் அந்த உரையின் தலைப்பான ரானடே காந்தி ஜின்னா என்பதை மாற்றி அம்பேத்கர் காந்தி ஜின்னா என்றுதான் இருந்திருக்க வேண்டும் என்பதில் இருக்கிறது.

காந்தியை தமிழ் அறிவுச்சூழலில் தொண்ணூறுகளுக்கு பிறகு விமர்சனமின்றி பேசுவது சாதியத்துக்கு ஆதரவானதாக பணக்காரர்ளுக்கு ஆதரவானதாக இந்துகளுக்கு ஆதரவானதாக தொழில் வளர்ச்சிக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது.அம்பேத்கர் காந்தியின் சமகாலத்தில் வாழ்ந்தவர்.அவர் காந்தியை விமர்சிக்கலாம்.ஆனால் இன்று காந்தியை விமர்சிக்க மட்டும் தேவையில்லை.ஆக்கபூர்வமான சிந்தனைகளையும் அவரிடமிருந்து பெறலாம்.இந்தக் கட்டுரையின் மிகப்பெரிய குறை ஜின்னாவையும் காந்தியையும் ஒன்றாக்கியது.அம்பேத்கர் அதை செய்யலாம்.கட்டுரையாளர் அதை செய்துள்ளது அவசியமற்றது.அவர் தன் கருத்து என்ன என்று விளக்கவே இல்லை.ஜின்னா வெறுப்பும் அகங்காரமும் மட்டுமே நிரம்பிய மனிதர்.நவகாளி சென்று அமைதி திரும்ப போராடியவர் காந்தி.காந்தியை பற்றி இத்தனை எதிர்மறை சிந்தனைகள் இந்திய மொழிகளில் வேறு எதிலும் இருக்காது.காந்தி தன் அகங்காரத்தை ஆக்கப்பூர்வமான வழியில் பயன்படுத்தினார்.ஜின்னா எதிர்மறை நோக்கில் பயன்படுத்தினார்.அகங்காரம் இருந்ததால் இருவரும் ஒன்றாக ஆக முடியுமா.அம்பேத்கர் அகங்காரம் கொண்டதால் தான் காந்தியிடம் அமர மறுத்து தனித்து நின்றார்.அகங்காரம் மனித இயல்பு.அகங்காரம் அற்ற மனிதன் தலைவனாவது சாத்தியமே இல்லை.

ஏற்க மறுத்தல் ஏற்று மறுத்தல் என்ற கட்டுரையை சிவசங்கர் எஸ்.ஜே எழுதியிருக்கிறார்.அற்புதமான கட்டுரை.இவரை இதற்கு முன் எங்கும் படித்ததாக நினைவில்லை.இவர் எழுதியுள்ள விதம் மிக நன்றாக இருக்கிறது.தலித் கவிதைகளின் புதிய போக்கை சொல்வதன் வழியாக தனக்கான பாதையையும் அவர் அறிவித்துக்கொள்வதாக தோன்றுகிறது. பல முக்கிய படைப்புகளை உருவாக்குவார் என்று தோன்றுகிறது.

போகன் சங்கர் கவிதைகள் இன்றைய ஊடகத்தின் சட்டகங்களை மீறி செல்வது குறித்தும் அந்த கவிதைகளை வெறும் அச்சு கவிதைகளாக மட்டும் மொழியாக்கம் செய்ய முடியாது என்றும் சொல்கிறார்.பாப் டிலோன் நோபல் பரிசு பெற்ற போது அதைப் பற்றி தடம் இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.இதை அதன் தொடர்ச்சியாக கொள்ளலாம்.அவரின் வாதம் ஏற்றுக்கொள்ளும் வகையில் தான் இருக்கிறது.நல்ல கட்டுரை.

தி.பரமேசுவரி எழுதியுள்ள பெண்ணிய கவிதைகள் பற்றிய கட்டுரை நன்றாக வந்திருக்கிறது.பெண்ணிய கவிதைகள் தனி மனித பார்வையிலான கவிதைகளாக சுருங்கி விட்டதை சொல்கிறார்.கவிதைகள் பற்றிய இந்த மூன்று கட்டுரைகளும் கவிதைகளை விட சிறப்பாக இருப்பதாக தோன்றியது.

சித்துராஜ் பொன்ராஜ் காலச்சுவடு ஜூன் இதழில் எழுதியுள்ள உண்ணாமுலை சிறுகதையின் தலைப்பு லாசராவின் அபிதா நாவலை நினைவுப்படுத்தியது.ஆனால் கதையில் முதல் சில உரையாடல்களிலேயே சீனு என்ற பெயர் வந்துவிடுகிறது.அவன் பிராமனன் என்பதும்.ஐயராக இருக்க வாய்ப்பு இல்லை.ஐயங்கார்.அதே போல இறுதியில் பார்த்தசாரதி கோயிலும் நாச்சியார் திருமொழியும் வருகிறது.அப்படித்தான் இருக்க முடியும் என்பதை முன்னர் ஊகிக்க முடிகிறது.நாம் ஒரு சிக்கலை தொன்மத்துடன் இணைக்கையில் நம் மரபின் வழியிலேயே இணைக்கிறோம்.லாசரா அதை அபிதாவில் இணைக்கையில் சித்துராஜ் பொன்ராஜ் அதை நாச்சியார் திருமொழியில் இணைக்கிறார்.



No comments: