தமிழ் மெய்யியல்






இந்திய தத்துவங்களும் தமிழின் தடங்களும் என்ற ந.முத்துமோகனின் நூல் இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது.இந்தியத் தத்துவங்கள் குறித்து ஒரு பகுதியும் தமிழின் தடங்களும் மற்றொரு பகுதியாகவும் இருக்கிறது.பொதுவாக இந்திய தத்துவம் பற்றிய நூல்கள் ஒவ்வொரு தத்துவம் பற்றியும் ஒர் அத்தியாயத்தை கொண்டிருக்கும்.ஆசிரியருக்கு என்று ஒரு சாய்வு இருக்கும்.அனைத்து தத்துவங்களை விளக்கும் போது அதில் எது முக்கியமானது என்ற குறிப்பு நூல் முழுவதிலும் இருக்கும்.பொதுவாக இடதுசாரி சிந்தனையாளர்கள் இந்திய தத்துவங்களை இரண்டாக பிரிப்பார்கள்.கருத்து முதல்வாதம் , பொருள் முதல்வாதம் என்று பிரித்து சாங்கியம் போன்ற தத்துவங்கள் ஆரம்பத்தில் பொருள்முதல்வாதமாக இருந்து பின்னர் புருஷன் என்ற கருத்தை உள்வாங்கி கருத்துமுதல்வாத தத்துவமாக மாறியது என்று விளக்குவார்கள்.ந.முத்துமோகனின் நூல் அப்படியான இறுக்கமான விதிகளை கொண்டிருக்கவில்லை.

தனித்த அத்தியாயங்கள் கொண்டு தத்துவங்களை விளக்கவில்லை என்றாலும் பொதுவாக பெளத்தம் , சமணம் ,ஆஜிவிகம், சார்வாகம் போன்ற தத்துவங்களை விளக்கி எப்படி வேதாந்தம் முன்வைக்கும் பிரம்மம், ஆன்மா போன்ற கருத்துக்களுக்கு இந்த சிராமண மரபு எப்படி எதிராக இருந்தது என்பதையே அவர் தொடர்ந்து விளக்குகிறார்.மண்ணின் தொல்மரபு - சிந்து வெளி நாகரீகம் - ஆரியர் வருகை  - வேதங்கள் - பிரம்மம் - ஆன்மா கருத்துக்கள் - இனத் தூய்மை - பிராமண சத்திரியக் கூட்டணி - பக்தி இயக்கம் - நிலவுடைமை - சாதியின் விரிவு என்ற சட்டகத்தை முத்தமோகன் உருவாக்குகிறார்.

இங்கு சாதிகளற்ற இயற்கையை தாய் தெய்வங்களை வழிபடும் மரபு இருந்துள்ளது.சிந்து வெளி நாகரீகம் அத்தகைய வாழ்க்கை முறையை கொண்ட நாகரீகமாகவே இருந்திருக்கிறது.ஆரியர் வருகை நிகழ்கிறது.பிரம்மம் என்ற கருத்து அவர்களின் வேதாந்தம் வழி உருவாகுகிறது.அதன் வழி இந்த உலகம் மாயை என்றும் அனைத்தும் பிரம்மம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.மேலும் நம் உடலில் சூக்கும வடிவில் ஆன்மா இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.இந்த இரண்டிலும் உடல் தூய்மையற்றது என்பதும் உலகம் பொய்யானதும் என்ற கருத்துக்களும் இருக்கின்றது.இதுவே சாதி அடிப்படையிலான சமூகத்திற்கான மூலக்காரணங்கள்.பெளத்தம் ஆன்மாவிற்கு எதிராக அனான்மவாதத்தை முன்வைக்கிறது.சமணம் ஏகாந்தவாதத்திற்கு எதிராக அநேகாந்தவாதத்தை முன்வைத்தது.பெளத்தம் வாழ்க்கை பற்றிய நோக்கு, நம் இருப்பிற்கான அர்த்தம் போன்ற மெய்யலிலுக்குள் பயணிப்பதை விட அறவியல் தளத்தில் அதிகம் பயணித்ததை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

நிலவுடைமை சமூகம் உருவாகி வந்த போது சாதிய கருத்து அந்த நிலவுடைமை சமூகத்தை நிலைநிறுத்திய உதவியது என்ற வகையில் அதை பக்தி இயக்கங்கள் மூலம் நிலவுடைமை சமூகம் சுவீகரித்துக்கொண்டது என்கிறார் முத்துமோகன்.இந்த பிரம்மம் ஆன்மா போன்ற கருத்துக்கள் ஆரியர்கள் இங்கே இருந்து பழங்குடிகளிலிருத்து தங்களை வேறுபடுத்தி தங்கள் இனத்தூய்மையை பாதுகாத்துக்கொள்ள செய்த ஏற்பாடு என்கிறார்.உபநிடதங்கள் வேதங்களின் தர்க்க ரீதியிலான விளக்கங்கள் என்கிறார்.இந்த முதற்பகுதியின் முக்கியமான சிக்கலாக எனக்குத் தோன்றியது ஆரியர் வருகை என்ற கருத்து மட்டுமே.வெளியிலிருந்து வந்த ஒரு இனக்குழூ சமூகம் தன் தூய்மையை பாதுகாக்க செய்த ஏற்பாடு தான் சாதி என்கிறார்.இதை பின்னர் சத்திரியர்களும் நிலவுடைமை சமூகங்களும் ஏற்றுக்கொண்டது என்கிறார்

ஆனால் தொடர்ச்சியாக இங்கே சிராமண மரபு இருந்தது என்றும் விளக்கம் தருகிறார்.ஆனால் இந்த ஆரியர்கள் யார் எங்கிருந்து வந்தார்கள் , இப்படி ஒரு இனக்குழூ சமூகம் பற்றி நாம் பேசும் போது வேறு தளத்தில் இங்கே இருந்த தூய்மை வெளியே இருந்து வந்தவர்களால் கெட்டுப்போய்விட்டது என்று சொல்கிறோமா.அப்படியென்றால் நாம் மற்றொரு இனத்தூய்மை பற்றி பேசுகிறோமா.இதை தவிரத்துவிட்டு பார்த்தால் இந்த முதல் பகுதியில் பெளத்தம் குறித்தும் சமணம் குறித்தும் சாங்கியம் குறித்தும் நூலாசிரியர் விரிவாகவே எழுதியிருக்கிறார்.

இரண்டாம் பகுதியில் சங்க இலக்கியத்தில் வரும் ஆதிப் பொருள்முதல்வாதப் பண்பாடு, பின்னர் புறநானூறு, அகநானாறு ஆகியவற்றில் தோன்றும் ஆண் பெண் தன்னிலைகள் , தொல்காப்பியம் காட்டும் திணைக் கோட்பாடு ஆகியவற்றை பற்றி குறிப்பிடுகிறார்.மணிமேகலை , சிலப்பதிகாரம் ஆகியவற்றில் வரும் பெண்கள் பற்றிய மாற்றுப்பார்வையை முன்வைக்கிறார்.  சைவ சித்தாந்த்தத்தின் வளர்ச்சி பற்றியும் அது எப்படி பல்வேறு இந்திய தத்துவகங்ளிலிருந்து தன் பார்வை எடுத்துக்கொண்டது என்பதையும் அதே நேரத்தில் நடைமுறையில் இருக்கும் சிக்கல்களை கணக்கில் கொண்டு தன் தத்துவத்தை  வரையறைத்தையும் சொல்கிறார்.

தமிழ் சமூகத்தின் புதிய குரல்கள் என்ற அத்தியாயத்தில் வள்ளலார் , அயோத்திதாசர், பெரியார் , சிங்காரவேலர் ஆகியோரை பற்றி சற்று விரிவாக எழுதியிருக்கிறார். ஆறுமுகநாவலர் தூய சைவத்தை உருவாக்கிய போது வள்ளலார் அத்தகைய சைவத்திலிருந்து விலகி பெருங்கருணை மட்டுமே இறை என்ற ஜீவகாருண்யத்தை முன்வைக்கிறார்.அவரின் அறவியல் பசித்தவர்களுக்கு அண்ணமிடும் கருணை.சைவத்தின் வளரச்சியும் தமிழ் அடையாளமும் எங்கோ இணைந்துவிடுகிறது என்பதையும் பல இடங்களில் நூலாசிரியர் சொல்கிறார்.அயோத்திதாசர் இங்கே இன்று தீண்டப்படாதவர்களாக ஒடுக்கப்பட்டிருக்கும் மக்கள் பூர்வ பெளத்தர்கள் என்று சாக்கிய பெளத்த மீட்டுருவாக்கத்தை முன்வைத்தது பற்றி எழுதுகிறார்.அதேபோல பெரியாரிடம் இருந்த பெளத்த சிந்தனைகளின் தாக்கம் பற்றியும் சொல்கிறார்.

சிங்காரவேலர் வழக்கிறஞராக இருந்து , பெளத்த தத்துவத்தில் ஈடுபாடு கொண்டு , பின்னர் மார்க்ஸியம், பகுத்தறிவு, சுயமரியாதை இயக்கம் என்று பயணப்பட்டதை பற்றி சொல்கிறார்.சிங்காரவேலர் சுயமரியதை இயக்கத்தை இடதுபக்கம் திருப்ப எவ்வளவு முயன்றும் அது தோல்வியில் முடிந்ததை பற்றி குறிப்பிடுகிறார்.

அயோத்திதாசர், பெரியார், சிங்காரவேலர் ஆகியயோரின் செயல்பாடுகளில் பெளத்த தத்துவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.(பெரியார் எந்தளவு பெளத்தம் கற்றார் என்று தெரியவில்லை!). அதே நேரத்தில் அயோத்திதாசர் சாக்கிய பெளத்தத்தை முன்வைத்த போது சிங்காரவேலர் அதிலிருந்து வேறுபடுகிறார்.பெளத்தம் அடிப்படையில் ஒர் அறவியல் கோட்பாடாக ஒரு மெய்யிலாக இந்திய சூழலில் சாதியத்திற்கு எதிரனாதாக வேதாந்தத்திற்கு  எதிரான சிந்தனையாக பலரையும் ஈர்த்திருக்கிறது.மணிமேகலை போன்ற காப்பியங்கள் முழுக்க பெளத்தத்தை முன்வைப்பவை.வள்ளலார் எந்தளவு பெளத்த, சமண தத்துவங்களால் ஈர்க்கப்பட்டார் என்று தெரியவில்லை.இதைப்பற்றி யாரும் எழுதவில்லை.வள்ளலார் தன் இறுதிக்காலத்தில் முன்வைத்தவை கிறுஸ்துவ கருத்துக்களே என்று சொல்வோர் உண்டு.இவை விரிவாக ஆராயப்பட வேண்டியவை.

இந்திய முழுவதிலும் பொதுவாக எது இருந்தது என்ற கேள்விக்கு சாதி என்று அவர் பதலிளிக்கிறார்.சாதியின் வேர்கள் வேதாந்த தத்துவத்தில் இருக்கிறது என்கிறார்.அதற்கு மாற்றான சிந்ததனைகளாக பெளத்தம் , ஆஜிவிகம், சமணம், சாங்கியம், சார்வாகம் ஆகிய இருந்தன என்கிறார்.பெளத்தம் எப்படி இந்திய சிந்தனையாளர்களுக்கு ஒர் அறவியலாக மெய்யிலாக தொடர்ந்து இருந்தது இருக்கிறது என்கிறார்.இதே சிந்தனையாளர்களின் பலர் மார்க்ஸியம் நோக்கி சென்றதையும் குறிப்பிடுகிறார்.முக்கியமான நூல்.

இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும் - ந.முத்துமோகன் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

புகைப்படம் : https://commons.wikimedia.org/wiki/File:Sathya_gnana_sabha,_vadalur_1.jpg


No comments: