இடதும் வலதும்
பொதுவாக இடதுசாரி அரசுகள் மக்களுக்கு நண்மை அளிக்கக்கூடிய அரசு என்றும் வலதுசாரி அரசு மக்களை நசுக்கக்கூடிய ஒர் அரசு என்றும் ஒரு மனப்பதிவு நம்மிடம் உள்ளது.1925 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்ஸூம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தோன்றின.இடதுசாரி சிந்தனை பாட்டாளிகளின் பிரதிநிதிகளை தேர்தெடுத்து அவர்கள் வழி பாட்டாளி சர்வாதிகாரத்தை உருவாக்கி முதலாளித்துவம் அற்ற ஒரு சமூகத்தை உருவாக்க முனைகிறது.ஆனால் அது தன் போக்கில் எல்லாரையும் இந்த இரண்டு குப்பிகளுக்குள் தான் போட விரும்பியது.சிறு முதலாளிகள் ,அமைப்பு சாரா உதிரி தொழிலாளிகள்,விவசாயிகள் போன்றோரை அது கணக்கில் எடுத்துக்கொள்ள தவறியது.மிக திட்டவட்டமாக அது சமூகத்தை பிரிக்க முனைகிறது.நடைமுறையில் அது பல வன்முறைகளை சோவியத் ரஷ்யாவில் உருவாக்கியது.கலைஞர்கள் மீது அச்சம் கொண்டு அவர்கள் விசுவாசமாக இருக்கிறார்களா என்று சோதித்து கொண்டே இருந்தது.அவர்களை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருந்தது.சிறிய அளவில் பிறழ்தவர்களை கூட அது ஒடுக்கியது.வலதுசாரி அமைப்புகள் தங்கள் அளவில் ஒரு சித்தாந்தத்தை கொண்டு சமூகத்தை பண்பாட்டுத் தளத்தில் பிரிக்கிறது.இடதுசாரி சிந்தனை பொருளாதார தளத்தில் செய்ய விரும்புவதை வலதுசாரி சிந்தனை பண்பாட்டுத் தளத்தில் செய்கிறது.இந்தியாவை எடுத்துக்கொண்டால் ஒரு மதம்,ஒரு மொழி,ஒரு கலாச்சாரம் கொண்ட நாடு என்ற சிந்தனையை ஆர்.எஸ்.எஸ் கொண்டுள்ளது.அப்படியாக அது எல்லாவற்றையும் இந்த குப்பிக்குள் கொண்டு வர பார்க்கிறது.அடிப்படையில் இரண்டு சிந்தனைக்களுக்கும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை.ஏனேனில் இரண்டு சிந்தனைகளும் தங்களால் பயிற்சி அளிக்கப்படும் பிரச்சாரக்குகள்,பாட்டாளி பிரதிநிதிகளால் மட்டுமே மக்களை நல்வழி படுத்தமுடியம் என்று நினைக்கிறார்கள்.மக்களுக்கு என்ன தெரியும் என்ற எண்ணம் இரண்டு சிந்தனைகளுக்கும் உண்டு.

இடதுசாரி சிந்தனை அடிப்படையில் சுரண்டல் அற்ற ஒர் ஆன்மிகமான சமூகத்தை உருவாக்கும் நோக்கம் இருந்தாலும் எங்கும் எப்போதும் அவர்கள் விரும்பும் வகையில் சமூகம் இருப்பதில்லை.அதில் குட்டி  முதலாளிகள்,கலைஞர்கள்,விவசாயிகள்,பிச்சைகாரர்கள்,விலைமாதுக்கள்,சிந்தனையாளர்கள் என்று முதலாளி x பாட்டாளி என்ற இருமைக்குள் கொண்டு வர முடியாத பலரும் எப்போதும் இருந்தனர்.ஆர்.எஸ்.எஸ் இந்தியா முழுக்க மொழி,இன,கலாச்சாரம் என்ற எல்லா பாகுப்பாட்டுகளையும் கலைய விரும்புகிறது.அப்படி கலைவதன் மூலம் இந்தியாவிற்கு என்ற ஒரே அடையாளத்தையும் அதன் கீழ் அதன் மக்களையும் கொண்டு வந்து விட முடியும் என்று அது நம்புகிறது.அதனால் அதற்கு இயல்பாகவே கஷ்மீருக்கு தனிச்சலுகைகள் அளிக்கப்படுவதை ஏற்க முடியவில்லை.ஆங்கிலம் ஹிந்திக்கான மாற்று மொழியாக இருப்பதை சகிக்க இயலவில்லை.இந்தியா பல்வேறு மாநிலங்களாக இருப்பதும் பல்வேறு மாநிலங்கள் தங்களுக்கென்று தனித்த அடையாளங்களை கொண்டிருப்பதையும் அதனால் உள்வாங்க முடியவில்லை.இந்திய மக்கள் அனைவரும் தங்கள் மாநில , இன,மொழி,சாதி அடையாளங்களை துறந்து இந்துத்துவம் என்ற சித்தாந்தத்தின் வழி ஒரே அடையாளத்தை அடைவதன் வழி பெரும் ஜனசக்தியாக மாற முடியும் என்று அது எண்ணுகிறது.அது இந்தியா பலம் பொருந்திய நாடாக மாற்றும்.ஒரு வகையில் அது பயிற்சி அளிக்கப்பட்ட ராணுவ வீரர்களை கொண்ட அணியாக மாறும்.அவர்களின் வேலை கட்டளைக்கு கீழ்படிவது.அங்கு தனிப்பட்ட சிந்தனைகளுக்கு இடமில்லை.

அப்படியாக அது மாபெரும் பண்பாட்டு தளத்தை அதன் மக்களுக்கு அளிக்க முடியும்.இந்தியா அப்படியாக மதச்சார்புடைய இந்து ராஷ்டிரியமாக மாறும்.அதை ஆள்பவர் ராமரின் ராஜ்ஜியத்தை நாட்டில் உருவாக்குவார்.(காந்தியின் ராம ராஜியம் அல்ல).காந்தியின் ராம ராஜ்ஜியம் கிராம பொருளாதாரத்தை முன்வைக்கும் போது , இது பெருமுதலாளித்துவத்தை , இன்றைய காலகட்டத்தில் உலகமயமாக்கலை இயல்பாக ஆதிரிக்கிறது.ஏனேனில் அது கிராமங்களுக்கு கிராம தெய்வங்களுக்கு எதிரானது.அது முன்வைப்பது ஒரு இந்திய மனிதன்.இந்திய மனிதன் கிராம அடையாளத்தை கொண்டவனாக இருக்க முடியாது.சென்னையின் மனிதனும் , கல்கத்தாவின் மனிதனும் ஒரே கடவுளை , ஒரே மொழியை , ஒரே ஆட்சியை, ஒரே கனவை காண்பவர்களாக இருக்க வேண்டும்.அப்போது மட்டுமே இந்து ராஷ்டிரியம் சாத்தியமாக முடியும்.(உரையாடல் ஒன்றில் அபிலாஷ் உலகமயமாக்கலுக்கு பின்னர் தான் பாரதிய ஜனதா கட்சி வலுவாக வளர்ந்தது என்றார்.நகர மனிதனுக்கு பொது அடையாளம் தேவைப்பட்டது என்றார்.அதை விரிவாக இந்தக் கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.)

இந்தியாவில் இடதுசாரி அரசு மேற்கு வங்கம்,கேரளா,திரிபுரா தவிர பிற மாநிலங்களில் ஆட்சி பொறுப்பு ஏற்றதில்லை.ஜோதி பாசு ஒரு முறை பிரதமராகும் வாய்ப்பு சாத்தியப்பட்டு அது அவருடைய கட்சியால் நிராகரிப்பட்டது.இடதுசாரி அரசு ஒரளவு நிலச்சீர்திருத்தத்தை அவர்கள் ஆளும் மாநிலங்களில் கொண்டு வந்தார்கள்.புத்ததேவ் பட்டாச்சார்யா மேற்கு வங்கத்தில் தன் மாநில இளைஞர்களக்கு வேலை வாய்ப்பை உருவாக்க தொழில்துறை சீர்திருத்தங்களை கொண்டு வர முனைந்த போது மம்தா பானர்ஜி தீவிர இடதுசாரி அமைப்புகளுடன் இணைந்து அதை தடுத்தார்.அதன் மூலம் அவரால் ஆட்சிக்கு வர முடிந்தது.கேரளா தொழில் துறையில் வளரவே இல்லை.ஒரு வேளை இடதுசாரிகள் பெரும்பாண்மை பலத்தோடு மத்தியில் ஆட்சிக்கு வந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை.அவர்கள் இன்னும் அதிகம் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியிருக்கலாம். நிலச்சீர்த்திருத்தங்களை இன்னும் சிறப்பாக செய்திருப்பார்கள். உலகமயமாக்கல் கொள்கையை இந்தியாவிற்கு வராமல் செய்திருக்கலாம்.ஆனால் படித்து வரும் இளைஞர்களுக்கு அவர்கள் எப்படி வேலை வாய்ப்பை உருவாக்கியிருப்பார்கள் என்று தெரியவில்லை.பண்பாட்டுத்தளத்தில் அவர்களுக்கும் நேருவின் காங்கிரஸூக்கும் பெரிய வேறுபாடுகள் இருந்திருக்க வாய்ப்பில்லை.

இந்தியா அதன் பண்மைத்துவத்தை எப்போதும் தன்னுடன் கொண்டிருக்க வேண்டும்.பல மொழி கொள்கை,மாநிலங்களுக்கு அதிகாரம்,மதர்சார்ப்பிண்மை ஆகியவை இந்தியாவுடன் எப்போதும் இருக்க வேண்டும்.அதுவே இந்தியா வன்முறையின்றி அமைதியாக இருப்பதற்கான வழி.அதற்கு வலதுசாரி அரசு இந்தியாவை ஆளாமல் இருக்க வேண்டும்.மறுபக்கம் ஏன் வலதுசாரி அரசு பெரும்பாண்மையுடன் வளர்ந்து வருகிறது என்பதை இடதுசாரிகளும் , காங்கிரஸூம் , மாநில கட்சிகளும் எண்ணிப் பார்க்க வேண்டும்.இன்றைய பெரு நகரத்து மனிதனுக்கு என்ன மாதிரியான பண்பாட்டுத்தளத்தை காங்கிரஸூம்,இடதுசாரிகளும்,மாநில கட்சிகளும் தருகிறார்கள்.பண்பாட்டுத்தளத்தில் இன்று பெருநகரத்து தனிமனிதன் தனது அடையாளமாக எதைக் கொள்வான்.அவன் வெறுமையாக நிற்கிறான்.அவனுக்கு தனது அடையாளங்கள் என்று எதுவுமில்லை.அவனுக்கு வலதுசாரி அரசு ஒர் அடையாளத்தை அளிக்கிறது.அவன் அதனால் கவரப்படுகிறான்.அவன் ஒரு குடைக்குள் செல்கிறான்.

இன்று காங்கிரஸூக்கும் , பாரதிய ஜனதா கட்சிக்கும் பொருளாதார தளத்தில் பெரிய வேறுபாடுகள் இல்லை.காங்கிரஸை பொருளாதார தளத்தில் கட்டுப்படுத்தும் நிலையில் இடதுசாரிகள் இருக்கும் அரசுதான் இந்தியாவின் சரியான அரசாங்கமாக இருக்க முடியும்.அதே நேரத்தில் பண்பாட்டுத் தளத்தில் அவனுக்கு வலதுசாரி சிந்தனை அளிக்கும் அடையாளத்திற்கு எதிரான ஒர் அடையாளத்தை எப்படி அளிப்பது என்பதை பற்றி இந்த அமைப்புகள் கவலைப்பட வேண்டும்.அதைக்குறித்து ஆராய்ந்து புதிய கலாச்சார விழாக்களை உருவாக்க வேண்டும்.அவனுக்கான கலாச்சார வெளிகளை கொண்டு வர வேண்டும்.வலதுசாரி அரசு ஒரு இந்திய மனிதனை உற்பத்தி செய்ய முனையும் போது இடதுசாரிகளும் காங்கிரஸூம் உலக மனிதனையும்,உள்ளூர் மனிதனையும் ஒரே நேரத்தில் உற்பத்தி செய்ய முனைய வேண்டும்.பொருளாதாரத் தளத்தில் பெருநகரத்தை மையப்படுத்தும் பொருளாதார கொள்கைகளை ஒருபக்கம் வைத்துக்கொண்டு கிராம , சிறுநகர பொருளாதாரத்தை முக்கியப்படுத்தும் கொள்கைகளை இவர்கள் கொண்டு வர வேண்டும்.அப்படியாக பல்கிப் பெருகி திணறிக்கொண்டிருக்கும் பெருநகரங்களை நோக்கி இளைஞர்கள் வந்து கொண்டே இருப்பதை தடுக்க முடியும்.அவர்கள் தங்கள் உள்ளூரிலேயே பிழைத்துக்கொள்ள முடியும் என்கிற போது இயல்பாகவே அவர்களுக்கு இந்திய மனிதன் அடையாளம் தேவையில்லை.அவர்களை வலதுசாரி சிந்தனையால் கவரமுடியாது.

இன்ற வலதுசாரி சித்தாந்த்தத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட வெறும் பொருளியல் லாபங்களுக்காக இணைகிறார்கள்.ஆனால் ஆர்.எஸ்.எஸூக்கு நிச்சயம் இந்தியா குறித்த எதிர்கால திட்டங்கள் உண்டு.அவை முறியடிக்கப்பட வேண்டும்.அதற்கு பண்பாட்டுத் தளத்தில் பொருளாதார தளத்தில் மாற்று எண்ணங்களை இடதுசாரி,காங்கிரஸ்,மாநில கட்சிகள் உருவாக்க வேண்டும்.அதன் மூலம் காங்கிரஸ்,இடதுசாரி,மாநில கட்சிகளின் கூட்டாட்சி மத்தியில் தோன்ற முடியும்.அது இந்தியாவின்  எதிர்காலத்திற்கு , நமது எதிர்காலத்திற்கு ,நமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு முக்கியமானதாகும்.
No comments: