காகித மலர்கள்









ஆதவனின் காகித மலர்கள் நாவலின் முதல் பதிப்பு 1977 ஆம் ஆண்டு வெளியீடப்பட்டது.இரண்டாம் சுதந்திர போராட்டம் என்று சொல்லப்பட்ட ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையிலான போராட்டம் வெற்றி பெற்று ஜனதா கூட்டணி அந்த ஆண்டுதான் ஆட்சியை பிடித்தது.மொரார்ஜி தேசாய் சில காலமும் சரண் சிங் சில காலமும் பிரதமராக இருந்தார்கள்.பின்னர் இந்திரா காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.காகித மலர்கள் நாவலில் பத்திரிக்கையாளர் நரசிம்மன் ஜெயபிரகாஷ் நாராயணனின் அரசியல் வருகை மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார்.எந்த வகையான மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்கிறார் மற்றொருவர்.இருவரும் ஒருவரை ஒருவர் குத்திக்கொள்கிறார்கள்.வெறும் கைகளால் தான்.அப்போது விசுவம் அவர்களை தடுக்கிறான்.அவனுக்கும் அடிகள் விழுகிறது.

விசுவம் டெல்லியில் பணிபுரிந்து பின்னர் மேலதிகாரிகளோடு இனைந்து செயல்பட முடியாமல் தவித்து வேலையை ராஜினாமா செய்து அமெரிக்கா சென்று சூழியல் துறையில் ஆராய்ச்சி மாணவனாக சேர்கிறான்.அவன் மறுபடியும் டெல்லி வருவதிலிருந்து நாவல் தொடங்குகிறது.விசுவம் அவனது இளைய சகோதரர்கள் செல்லப்பா மற்றும் பத்ரி , அவனுடைய தந்தை பசுபதி, அன்னை பாக்கியம், மனைவி பத்மினி, செல்லப்பாவின் நண்பர்கள் , பத்ரியின் நண்பன் கணேசன், தாரா ஆகியோரை பற்றிய கதைதான் காகித மலர்கள் நாவல்.

இந்த நாவலில் யாரும் மைய கதாபாத்திரம் அல்ல. ஒரு தென்னிந்திய மேல் மத்திய தர வர்க்க பிராமண குடும்பம் டெல்லியில் வாழ்கிறது.அந்த குடும்பத்து அங்கத்தினரின் பாசாங்குகள், பாவனைகள், வேஷங்கள், அகங்கார சீண்டல்கள், கேளிக்கைகள், வேலைகள் ஆகியவைதான் நாவலின் மையம்.கணேசன் பத்ரியின் நண்பன்.ஒரே கல்லூரியில் உடன் படிப்பவன்.கணேசனின் தந்தை எம்.ஜி.ஒய்.ஐயர் செக்ரடேரியட்டில் செக்ஸன் ஆபிசராக பணிபுரிகிறார்.ஐயர் வேலை செய்யும் துறையின் டிபுடி செக்ரடேரியட்ரி பசுபதி.மத்திய மந்திரி ஒருவர் தன் மாநிலத்தில் செயற்கை உரத்தொழிற்சாலை அமைப்பதற்கு ஏதுவான குறிப்பொன்றை எழுதி தரும்படி கேட்கும்போது பசுபதி அதை சிறப்பாக செய்கிறார்.அந்த மந்திரி நீக்கப்பட்டு தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் மந்திரியானபின் அதே உரத்தொழிற்சாலையை தென்னிந்தியாவில் அமைப்பதற்கான குறிப்பை தயார் செய்கிறார் பசுபதி.திட்டக் கமிஷன் கூட்டத்தில் தற்போது இருக்கும் உரத்தொழிற்சாலைகளின் உற்பத்தியை அதிகரித்தாலே போதும் புதிதாக தொழிற்சாலைகளை தொடங்கத் தேவையில்லை என்று பேசப்பட்டதை பற்றி அவர் அக்கறை கொள்வதில்லை.மாறாக எந்த வகையிலும் சிறிதளவு கூட பயன்தராத முந்தைய மந்திரியின் மாநிலத்தில் தொழிற்சாலையை தொடங்குவதற்கு சுற்றுச்சூழலை முன்வைத்து குறிப்பை தயாரிக்கிறார்.விசுவம் படிக்கும் சூழியல் உயர் ஆராய்ச்சி இந்த வகையில் பசுபதிக்கு பயன்படுகிறது.அவருக்கென்று தனியான கருத்துக்கள் இல்லை.அவருக்கென்று மாநிலம் இல்லை.அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லை.அவர் வேர்கள் அற்றவர்.அதுவே காகித மலர்கள் என்று ஆதவன் கருதுகிறார்.

அத்தகைய பசுபதியின் மகனான விசுவம் ஒருநாள் சாலையில் நடந்துசெல்லும் போது உண்மையில் தன் அக்கறைகள் சூழியல் சார்ந்தவைதானா என்று கேட்டுக்கொள்கிறான்.அவனுடைய உண்மையான அக்கறைகள் உடல் சார்ந்தவையாகவும் பொருள் சார்ந்தவையாகவும் இருப்பதை உணர்கிறான்.தன்னை ஒருவர் தாக்கும் போது அவரை திருப்பி தாக்குவதும் தான் செளகரியமாக வாழ்வதற்கான பொருள் சேர்த்துக்கொள்வதும்தான் தன் உண்மையான அக்கறைகளாக இருப்பதை அவன் புரிந்துகொள்கிறான்.பசுபதியின் கடைசி மகனான பத்ரி கல்லூரி சார்பாக நடக்கும் போராட்டத்தில் ஒரு பஸ்ஸை கடத்துகிறான்.அதை ஒட்டிச் செல்ல முற்படும் போது நடைபாதையில் இருக்கும் இருவர் மீது ஏற்றி அவர்களை கொன்றுவிடுகிறான்.பசுபதி தன் அதிகாரத்தின் துணைகொண்டு அதிலிருந்து அவனை காப்பாற்றுகிறார்.ஆனால் பத்ரி குற்றவுணர்வு இல்லாமல் இருக்கிறான்.அவன் சிறை செல்வதை பற்றி கவலைப்படவில்லை.இது புலன் இயல்புகளை ஒடுக்க முயற்சிக்கும் நாகரீக சமூகத்தில் திமிர்ந்து எழும் எதிர் கலாச்சார நிலைப்பாடு என்கிறார் பத்திரிகையாளார் நரசிம்மன்.

பசுபதியின் கடைசி மகன் செல்லப்பாவை ஒரு வேளை இந்த கதையின் நாயகனாக கருதலாம்.அவன் பகட்டுகள் அற்றவன்.அவன் எதையும் செய்வதில்லை.மறுபடி மறுபடி பேருந்தில்,சாலையில், பக்கத்து வீட்டில் பெண்களை பார்த்தவாறு இருக்கிறான்.தொடர்ந்து தேர்வில் தோற்றவாறு இருக்கிறான்.அவன் ஒரு வேலையில் சென்று சேரவிரும்பவில்லை.சமூகத்தில் தான் ஒரு கெளவரமான அடையாளத்தை அடைய வேண்டும் என்று எண்ணுவதில்லை.தாரா என்ற பெண் அவனுக்கு வாழ்வின் மீதான ஒரு பற்றுதலை உருவாக்குகிறாள்.அல்லது அப்படியாக அவன் கருதிக்கொள்கிறான்.அவள் மூலமாக அவன் மற்றவர்களை போல தட்டையானவனாக இல்லாமல் இருக்கலாம் என்று கருதுகிறான்.அவள் போடுவது வேஷமே என்றாலும் பரவாயில்லை என்று நினைக்கிறான்.

பசுபதியின் மனைவி பாக்கியம்.அவள் பசுபதியின் மேலதிகாரிகளோடு குழைந்து பேசுபவளாக, அடையாளம் அற்றவளாக, நாடகங்களில் நடிப்பவளாக , தன் மருமகளை போல தன்னையும் நவநாகரீக பெண்ணாக காட்டிக்கொள்ள எடுக்கும் முயற்சிகளால் கோமாளியாக மாறுவதை கண்டுகொண்டவளாக ,ஏமாற்றப்பட்டவளாக, தொலைந்துபோனவளாக உணர்கிறாள்.அந்த புரிதல் அவளுக்கு அச்சம் அளிக்கிறது.இறுதியில் அவளே ஒட்டிச்செல்லும் காரில் விபத்துக்குள்ளாகி இறந்துபோகிறாள்.

பத்ரியின் நண்பன் கணேசன்.அவன் ஒடுக்கப்பட்ட இச்சைகள் திமறி எழுவதால் பேருந்தை சாலையோரம் இருக்கும் எளிய மனிதர்கள் மீது செலுத்தும் பத்ரியை போன்றவனோ தன் அக்கறைகள் உண்மையிலேயே உடல் சார்ந்தவையும் பொருள் சார்ந்தவையும்தான் என்று கண்டுகொள்ளும் விசுவம் போன்றவனோ தாரா போன்ற ஒரு பெண்னை பற்றிக்கொள்வதால் மட்டுமே வாழ்வை எதிர்நோக்க முடியும் என்று கருதும் செல்லப்பாவை போன்றவனோ அல்ல.அவன் நரசிம்மன் மூலமாக அந்த பத்திரிக்கையில் சப்-எடிட்டராக பணியில் சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.அவன் பேருந்தில் பார்த்தது போல ஒரு அழகிய மங்கை அவனோடு வேலை செய்ய வேண்டும் என்று கனவு காண்கிறான்.அவன் தன்னை நரசிம்மனிடம் நிரூபித்துக்கொள்ள வேண்டுமென்ற முயற்சிகளில் ஈடுபடுகிறான்.

பசுபதி தனக்கு முதன் முதலில் பதவி உயர்வு அளிக்கப்பட்டப்போது அடைந்த மகிழ்ச்சியை ஒரு முறை நினைத்துக்கொள்கிறார்.அவர் டிபுடி செக்ரடேரியிலிருந்து ஜாயின்ட் செக்ரடேரியாக பதவி உயர்வு பெறும் போது எந்த மகிழ்ச்சியையும் அடையாமல் தவிக்கிறார்.அவருக்கு அவருடைய முகமே சமயங்களில் மறந்துவிடுகிறது.வேஷங்கள் போட்டு அவர் சுயத்தை இழந்துவிடுகிறார்.ஆனால் அவர் வேஷங்களை செளகரியமாக அணியவும் செய்கிறார்.அத்தகைய பசுபதியின் மகன்களான விசுவமும் , பத்ரியும், செல்லப்பாவும்தான் வெறுமையை உணர்ந்தவர்களாக , அழிவை உருவாக்குபவர்களாக , எதையேனும் பற்றிக்கொள்ள துடிப்பவர்களாக இருக்கிறார்கள்.ஆனால் கணேசன் ,பசுபதி தன் இளமையில் வாழ்க்கையில் முன்னேறிவிட வேண்டும் என்று எண்ணியதை போலவே ஆசைகள் கொண்டவன்.அவனுக்கு நரசிம்மனை சந்தித்து தன் கட்டுரையை வெளியிட்டதற்காக நன்றி தெரிவிப்பதும் சிறிது நேரம் பேசுவதும் தன் வருங்கால வாழ்வை வசந்தம் நிறைந்ததாக மாற்றுவதற்கான வழி.அவன் அதை பகட்டான ஒன்றாக உணர்வதில்லை.கணேசன் நிச்சயம் வாழ்வில் முன்னேறிவிடுவான்.அவன் எப்போதும் தடுமாறப் போவதில்லை.எந்த கையெழுத்தையிடும் போதும் அவன் சுற்றுச்சுழல் மாசுபட்டுவிடுமே என்று கவலைகொள்ளப்போவதில்லை.அவனே செயல் புரிபவன்.பணம் , செளகரியங்கள், அதிகாரம் அனைத்தும் தன் மடியில் வந்துகொட்டும் போது ஒருவன் அடையும் வெறுமையின் சித்திரமே பசுபதியின் பிள்ளைகள்.அப்படியான சாத்தியங்கள் இல்லாத கணேசன் பசுபதியின் தொடர்ச்சி.ஆனால் கணேசனும் சுய அடையாளம் அற்றவனே.அவன் பசுபதியை போலச்செய்கிறான்.அவ்வகையில் அவனும் காகித மலரே.

கணேசன் பசுபதி போலவும், பாக்கியம் தன் மருமகள் பத்மினி போலவும், பத்ரி ஒரு கலகக்காரனை போலவும், விசுவம் சமூகத்திற்காக சிந்திக்கும் அறிவுஜீவி போலவும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகையில் செல்லப்பா தன்னை எவர் ஒருவர் போலவும் அடையாளப்படுத்திக்கொள்ள விருப்பமில்லாமல் வெளியில் நிற்கிறான்.அவன் பிறர் பொருட்டோ பிறரை போலவோ ஒரு செயலை செய்யும் போது மிக அந்நியமாக உணர்கிறான்.அவன் எவ்வித பகட்டுகளும் அற்ற இயல்பானதான தன்னை அந்நியப்படுத்தாத எளிமையான வாழ்வை வாழ விரும்புகிறான்.அதன் தொடக்கமாக தாராவுடனான தன் பற்றுதலை உணர்கிறான்.அந்த வகையில் அவனே கதையின் நாயகன்.

ஜெயபிரகாஷ் நாராயணின் தலைமையிலான போராட்டம் வெற்றி பெற்று ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்து பின்னர் அது கலைக்கப்பட்டு இந்திரா காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து என்று முப்பது வருடங்களுக்கு மேலாக சென்றுவிட்டன.முன்பை விட சூழியல் சார்ந்த அக்கறைகள் அதிகரித்திருக்கின்றன.முன்பை விட சுற்றுச்சூழலை அழித்தொழிக்கும் காரியங்களும் அதிகரித்திருக்கின்றன.உலகமயமாக்கல் கொள்கை வந்து இருபது வருடங்களுக்கு மேலாக கடந்துவிட்டன.பெரு நகரங்களே வாழ்வை தொடங்குவதற்கான இடங்கள் என்று எல்லா இளைஞர்களும் பெரு நகரங்களுக்கு வந்தபடியே இருக்கிறார்கள்.விசுவமும், பத்ரியும் , செல்லப்பாவும், தாராவும், கணேசனும், பசுபதி தம்பதியும் பெருநகரங்களில் அதிகரித்தபடியே இருக்கிறார்கள்.ஜெயபிரகாஷ் நாராயணன் உருவாக்கிய இரண்டாம் சுதந்திர போராட்டம் கூட மூன்று ஆண்டுகளுக்கு மத்தியில் ஒரு ஆட்சியை உருவாக்கியது.எத்தனையோ மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளை சேர்ந்த ஜெயபிரகாஷின் மாணவர்கள் ஆட்சியை பிடித்தார்கள்.சரியானதோ தவறானதோ ஆனால் மாற்றங்கள் நிகழ்தன.ஆனால் அது போன்ற போராட்டங்களை போலச்செய்த சமீபத்திய ஆண்டுகளில் தொடங்கப்பட்ட உள்ளீடற்ற போராட்டங்களும் அவற்றின் தொடர்ச்சியாக உருவான கட்சிகளும் உண்மையான கேலிக்கூத்தாக மாறி போனதை நாமும் அதன் பங்கேற்பாளர்கள் என்ற முறையில் ரசித்தோம். அடுத்த முப்பது வருடங்களில் இன்னும் பிரம்மாண்டமான காகித மலர்கள் மலரும்.அத்தகைய காலத்தில் இன்னும் பெரிய கேலிக்கூத்தான போராட்டங்கள் நடக்கும்.நாம் எல்லோரும் இப்போது இருப்பதை விட இன்னும் சிறப்பான கேலிச்சித்திரங்களாக மாறியிருப்போம்.

சூழியல் சார்ந்த அக்கறைகள், டெல்லி அரசியலின் குறுக்கு வெட்டு பார்வை,பெருநகரத்து மனிதர்களின் உள்ளீடற்ற போலியான வாழ்க்கை, புதிய அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் மீது நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் கொள்ளும் எதிர்பார்ப்பு, ஏதோ ஒரு வகையில் எளிமையானதின் மீதும் இயல்பானதின் மீதும் ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் பற்றுறுதியும் அது தரும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையுமே காகித மலர்கள் நாவல் நமக்கு அளிக்கும் சித்திரம்.இந்த சித்திரமே இந்த நாவலை இன்றைய சூழலில் அவசியம் வாசிக்க வேண்டிய படைப்பாக்குகிறது

- காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் நாவல்கள் வரிசையில் சென்றாண்டு வெளிவந்த காகித மலர்கள் நாவலுக்கு நான் எழுதிய முன்னுரை.

No comments: