சவரக்கத்தி




நான் வண்டியை நியூட்டரலுக்குக் கொண்டு வந்து நிறுத்தினேன்.எங்கிருந்தோ ஓடிவந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி குழந்தைகளை ஏழு மணிக்குப் பள்ளிக்கு ஏற்றிச்செல்ல அங்குதான் நிறைய வாகனங்கள் வந்து நிற்கும் என்றார்.அவரே அங்கு நிறுத்துங்கள் என்று ஒரு ஹோட்டல் வாசலைக் கைக்காட்டினார்.நான் வண்டியைத் தள்ளிக்கொண்டே அங்கு சென்று நிறுத்தினேன்.ஹோட்டல் மூடியிருந்தது.அதன் வாசலில் நான்கைந்து பேர் நாளிதழ்களை திறந்து துண்டு காகிதங்களை வைத்துக்கொண்டிருந்தார்கள்.அவர்களின் கைகள் அத்தனைக் கச்சிதமாக வேலை செய்தது.அலுவலகத்தில் மேரி இப்படித்தான் கச்சிதமாக மின்சுற்றியில் கம்பியைச் சுற்றுவாள்.ஒரு பூக்கூடையை பின்னுவதுப் போல எந்தப் பிசிறுமில்லாமல் அத்தனை ரசனையோடு செய்வாள்.மேரிக்கு கரிய முகம்.டீ குடிக்கச் செல்கையில் தனியாகத்தான் செல்வாள்.இங்கே ஆலமரத்தின் அருகில் ஒருவன் தூக்குவாளியில் டீயை சைக்கிளிலில் வைத்து நின்றுக்கொண்டிருந்தான்.இந்த இடத்தில் இந்த நேரத்தில் யார் வந்து டீ வாங்குவார்கள் என்று புரியவில்லை.ஒரு வேளை அந்த தோல் மருத்துவரிடம் முன்பதிவு செய்ய வரும் நோயாளிகள் இவனுடைய வாடிக்கையாளராகவும் இருக்கலாம்.இரண்டு வருடங்களுக்கு முன் இந்த தோல் மருத்துவரைப் பார்க்க வரும் போது தொலைபேசியில் அழைத்து முன்பதிவு செய்துவிட்டு வரலாம்.சமயங்களில் நமக்கான நேரம் ஒரு மாதம் கழித்துக்கூட கிடைக்கும்.ஆனால் இப்போது நேரில் வந்துதான் முன்பதிவு செய்ய வேண்டும்.திங்கட்கிழமையின் காலையில் வந்து அந்த வாரத்திற்கான முன்பதிவைச் செய்து விட வேண்டும்.அந்தக் குடியிருப்பின் இரண்டாவது மாடிக்கு இருட்டானப் படிகளில் ஏறிச்சென்றேன்.எனக்கு முன்பே ஐந்தாறு பேர் நின்றுகொண்டும் படிக்கட்டுகளில் அமர்ந்துகொண்டும் பேசிக்கொண்டும் அலைபேசியில் எதையோ பார்த்துக்கொண்டும் இருந்தார்கள்.நான் அந்தக் குறுகலான பாதையில் நின்று எல்லோரையும் பார்த்தேன்.அனைவரும் என்னைப் பார்த்துவிட்டு அமைதியாக இருந்தார்கள்.அந்த மருத்துவரின் பூட்டப்பட்ட அறைக்கதவில் ஒரு காகிதம் ஒட்டப்பட்டிருந்தது.அதில் சில பெயர்கள் இருந்தன.ஒருவர் அந்தக் காகிதத்தில் என் பெயரை எழுதச்சொன்னார்.காகிதத்தில் உள்ள பெயர்களின் அடிப்படையில்தான் முன்பதிவுக்கான வரிசை அமையும் என்றார்.கைப்பிடியில் கயிறு கட்டி தொங்கவிடப்பட்டிருந்த பைனாவை எடுத்து எழுதினேன்.எப்போது கதவு திறக்கப்படும் என்றேன்.எட்டு மணிக்கு என்றார்கள்.மணி ஆறு கூட ஆகவில்லை.இரண்டு மணி நேரத்தில் டிரஸ்ட்புரம் சென்றுக் குளித்து உடைமாற்றித் திரும்ப மருத்துவகம் இருக்கும் இந்தப் பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு வர இயலுமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.ஒரு வேளை ஏதாவது தாமதமாகிவிட்டால் முன்பதிவு செய்ய இயலாது.நான் கீழே இறங்கிச் சென்றேன்.அந்த ஆலமரத்தைச் சுற்றி கட்டப்பட்டிருந்த சிமெண்ட் திண்ணையில் அமர்ந்துக்கொண்டேன்.டீ பையன் அங்கேயே நின்றான்.அவன் வைத்திருந்த ரேடியோவில் இளையராஜாவின் குரலில் ஜனனி ஜனனி என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.அந்தப் பையன் சூரியோதையத்தை பார்த்தவாறு நின்றான்.அவன் அத்தனை ஏகாந்தமாக நிற்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

மேலே என்னோடு நின்றுக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் கீழே வந்தார்.என் அருகில் அமர்ந்தார்.நீங்க போயிட்டீங்கன்னு நினைச்சேன் என்று சொன்னார்.டீ குடிக்கிறீங்களா என்று கேட்டுவிட்டு அவரே இரண்டு என அந்த பையனிடம் சைகை செய்தார்.அப்போது அவன் ரேடியோவில் ஜெயச்சந்திரன் பூவண்ணம் போல நெஞ்சம் பாடிக்கொண்டிருந்தார்.வேலூரில் காலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து கோயம்பேடு வந்து அங்கிருந்து 15B பஸ் பிடித்து வந்ததாக சொன்னார்.அந்தப் பையனிடம் பத்து ரூபாய் கொடுத்தார்.இன்னும் இரண்டு ரூபாயை என்னை கொடுக்கச் சொன்னார்.இப்போது எஸ்.பி.பி. காதலின் தீபம் ஒன்று பாடிக்கொண்டிருந்தார்.தன் மகன் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டதாகவும் இப்போது சட்டப்படிப்பு படிக்க வைக்கலாம் என்றிருப்பதாகச் சொன்னார்.நேரடியாக ஐந்து வருட சட்டப்படிப்பில் சேர்க்காமல் முதலில் ஏதேனும் இளங்கலையில் சேர்த்துப் பிறகு சட்டப்படிப்பில் சேரச் சொல்லுங்கள் என்றேன்.தலையாட்டினார்.இன்னும் இரண்டு மூன்று பேர் மேலேயிருந்து வந்து டீ குடித்து சென்றனர். பள்ளிச் சிறுவர்களை ஏற்றிச் செல்ல வாகனங்கள் வந்து நின்றன.சிலர் அலுவலகம் சென்றார்கள்.யுவன்களும் யுவதிகளும் அந்த குடியிருப்பின் அருகிலிருந்த உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்றார்கள்.வயோதிகர்கள் வேகமாக நடந்து கொண்டிருந்தார்கள்.அந்தப் பையனுக்கு டீ நன்றாக விற்றது.அவன் ரேடியோவை நிறுத்தியிருந்தான்.அந்தக் குடியிருப்பில் வேலை செய்யும் பெண்கள் வந்துக்கொண்டிருந்தார்கள்.நான் வேலூரில் சத்துவாச்சாரியில் ஒரு மருத்துவரிடம் ஐந்து வருடங்களாக இந்த தழும்புக்காக வைத்தியம் பார்த்தேன் என்று கையை காட்டினார். எனக்கு எந்த தழும்பும் தெரியவில்லை.இவரிடம் வந்துதான் குணமாகியது.அநேகமாக இதுதான் கடைசிமுறையாக இருக்கும் என்றார்.நாங்கள் இருவரும் மேலே சென்று படிக்கட்டுகளில் அமர்ந்தோம்.மணி எட்டாகிவிட்டது.இன்னும் யாரும் வரவில்லை.குண்டான ஒரு பெண் வேகமாக வந்து கதவைத் திறந்து விளக்குகளைப் போட்டு தன் நாற்காலியில் அமர்ந்தாள்.பள்ளிச்சிறுவர்கள் போல சட்டென்று வரிசை உருவாகியது.நான் ஆறாவது.வெங்கடன் என்றாள்.நான்தான் என்றேன்.இன்று மாலை ஆறு மணிக்குப் பார்க்கலாம்.பதிவு செய்துவிடலாமா என்றாள்.சரி என்று தலையாட்டினேன்.அங்கிருந்த தரைவழித் தொலைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது.அவள் அதைப் பொருட்படுத்தவே இல்லை.கீழே வந்து வண்டியை எடுத்தேன்.ஹோட்டல் திறந்திருந்தது.அந்த டீ பையனைக் காணோம்.

வீட்டுக்குச்சென்று சவரம் செய்து குளித்து உடைமாற்றி கண்ணாடி முன் நின்றேன்.சரியாக சவரம் செய்யவில்லை என்று தோன்றியது.அந்த சவரக்கத்தி கூர்மையாக இல்லை.மாற்ற வேண்டுமென்று நினைத்தேன்.மறந்துவிட்டேன்.அந்த கிரீம் நிறச் சட்டையின் பையில் ஏதோ கறை இருப்பது போல பட்டது.நான் சட்டையை கழற்றி வெளிச்சத்தில் பார்த்தேன்.பாக்கு சாப்பிட்டு விட்டு மீதத்தை பையிலேயே வைத்திருக்கிறேன்.துவைக்கும் போது எடுக்காததால் ஏற்பட்ட கறை.நன்றாக உற்றுப்பார்த்தேன்.கறை அவ்வளவாக தெரியவில்லை.சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பி வெளியே வந்தேன். பூட்டும் போது ஏதோ தோன்றவும் மறுபடி உள்ளே சென்று அந்தச் சட்டையை கழற்றி விட்டு வெள்ளை நிறச்சட்டை ஒன்றை எடுத்து இஸ்திரி போட்டு அணிந்துக்கொண்டு வெளியே வந்து கதவைப் பூட்டினேன்.ஆர்காட் ரோட் வழியாக ராமாபுரம் செல்வதற்குள் மணி பத்து ஆகிவிட்டது. அன்று இஸ்ரேலிருந்து எங்கள் தலைமை பொறியாளர் வருகிறார்.எங்கள் அலுவலகத்தில் உருவாக்கப்படும் ஆர்.எப்.டிரான்ஸிஸ்டர்களை பரிசோதிக்க நான் முற்றிலும் மனி்தர்களே தேவையற்ற இயந்திரம் ஒன்றை உருவாக்கியிருந்தேன். அது டிரான்ஸிஸ்டர்களை ஒவ்வொன்றாக எடுத்து பரிசோதித்து பாஸ் அல்லது பெயில் என்ற டிரேகளில் போட்டு விடும்.அதை ரிலேக்களும் டைமர்களும் வைத்து முன்னர் யாரோ உருவாக்கிய இயந்திரம் அத்தனை கச்சிதமாக வேலை செய்யாததால் அதை தலைமைப்பொறியாளர் அங்கீகரிக்கவில்லை. நான் அதை முற்றிலும் பி.எல்.சி கொண்டு மாற்றி அமைத்தேன்.இன்று அதை தலைமைப்பொறியாளரிடம் காட்ட வேண்டும். இந்த இயந்திர மாதிரி அவருக்கு பிடித்துவிட்டால் அநேகமாக நான் இஸ்ரேல் சென்று இதுபோல சில இயந்திரங்களை உருவாக்கும் குழுவை உருவாக்கி ஆறுமாதங்களிலிருந்து ஒரு வருடம் வரை அங்கு இருக்க வேண்டும். நான் சென்றவுடன் என் சென்னை அலுலகத்தின் மின்னியல் துறை தலைவர் மரியக்கொழந்தை நான் வந்துவிட்டேனா என்று விசாரித்ததாக வைஷாலி சொன்னாள். நான் என் இடத்தில் சென்று அமர்ந்தேன். என்னைக் கடந்து சென்ற மரியக்கொழந்தை என்னிடம் ஒன்றும் பேசவில்லை.

அன்று மாலை போல அந்த இஸ்ரேலியப் பொறியாளரிடம் இந்த இயந்திரத்தைக் காட்ட வேண்டும். நான் ஒரு முறை அதைப் பரிசோதிக்கலாம் என்று நினைத்தேன். ஒரு பழுதான டிரான்ஸிஸ்டரையும் , நன்றாக வேலை செய்யக்கூடியதையும் ஓடும் வாரில் வைத்தேன்.முதல் சுற்றில் சரியான டிரான்ஸிஸ்டரை எடுத்துப் பாஸ் டிரேயில் போட்டது. இரண்டாவது சுற்றில் பழுதானதை எடுத்துப் பாஸ் டிரேவை கடந்து பெயில் டிரே அருகில் சென்று மின்னோடி நின்றது.ஆனால் இயந்திரக்கைப் பெயில் டிரேவை கடந்து இன்னும் ஓர் அங்குலம் சென்று டிரான்ஸிஸ்டரைப் போட்டது.நான் பதற்றமடைந்தேன்.வெள்ளிக்கிழமை சரியாக வேலை செய்தது.இன்று ஏன் தள்ளிச் சென்று இறக்குகிறது.எனக்கு ஒன்றும் புரியவில்லை.நான் எதையும் மாற்றவில்லை.அடுத்த இரண்டு நிமிடங்களில் மொத்த இயந்திரத்தையும் கழற்றிவிட்டேன்.ஏன் ஓர் அங்குலம் தள்ளிச் சென்று இறக்குகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.மரியக்கொழந்தை என் இடத்திற்கு வந்தார்.இயந்திரத்தை கழற்றி போட்டிருப்பதைப் பார்த்தவர் அதைப்பற்றி விசாரித்தார்.நான் சொன்னேன்.அவரிடம் நான் ஒத்தியங்கு மின்னோடியைத்தான் பயன்படுத்தியிருக்கிறேன்.அப்படியென்றால் அது உடனடியாக நிற்க வேண்டும் , ஏன் ஓர் அங்குலம் தள்ளிச் சென்று நிற்கிறது என்றேன்.அவர் புன்னகைத்தார்.பிரச்சனை மின்னோடியில் இல்லை.நீ உபயோகப்படுத்தியுள்ள இயந்திரக்கை சற்று நீளமாக இருக்கிறது.அது சுழற்சியில் இருக்கும் போது மின்னோடி சட்டென்று நிற்கிறது. வேக மாற்றத்தின் காரணமாக இயந்திரக்கை சற்று தள்ளிச் சென்று நிற்கிறது என்றார்.நியூட்டனின் முதல் விதி என்ன சொல்கிறது என்று தீவிரமான தொனியில் சிரிக்காமல் கேட்டார்.ஆனால் போன வாரம் சரியாக வேலை செய்தது என்றேன்.அவர் பொறுமையாக அனைத்தையும் பார்த்தார்.நீ பெயில் டிரேவை பாஸ் டிரேவிலிருந்து சற்று தள்ளி வைக்கப்போவதாக சொன்னாய் அப்படி செய்தாயா என்றார். எனக்கு சட்டென்று ஞாபகம் வந்தது. ஆமாம் மற்றொரு இயந்திரம் இந்த டிரேக்களில் உள்ளதை அள்ளி எடுப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று அவ்வாறு செய்தேன்.அதன் பின் பரிசோதிக்கவில்லை. அவர் அது கூட காரணமாக இருக்கலாம், இப்போது அந்தக்கை சற்று அதிக தொலைவு சுற்ற வேண்டியிருப்பதால் மின்னோடி நின்றவுடன் கை சற்று நேரம் கழித்து நிற்கிறது.இது ஒன்றும் பிரச்சனையில்லை.நாம் பெயில் டிரேவை நகர்த்தலாம்,அல்லது கையின் நீளத்தை குறைக்கலாம் அல்லது சுழன்றுச் சென்று பாஸ் மற்றும் பெயில் டிரேக்களில் இறக்குவதற்கு பதிலாக அதை நேர்கோட்டில் வைக்கலாம்.அப்படி செய்தால் நிற்கும் போது இந்தப் பிரச்சனை இருக்காது என்றார்.அதற்கு ஏன் இயந்திரத்தைக் கழற்றி போட்டாய் என்று சற்று எரிச்சலுடன் கேட்டார். நான் குழப்பத்தில் அப்படி செய்து விட்டேன் என்றேன். இன்று தலைமைப்பொறியாளர் மாலையில் இதைப்பார்ப்பதாக சொல்லியிருக்கிறார். இப்போதுதான் ஆராய்ச்சிக்கு நிதி அளிக்க நல்ல சமிக்ஞை கிடைத்திருக்கிறது.இப்போது அவர் ஒப்புக்கொண்டால் நீ இஸ்ரேல் சென்று இதை பயனுக்குக் கொண்டுவரலாம்.நான் ஒன்றும் சொல்லாமல் அவரைப் பார்த்தேன். அவர் தொடர்ந்து இது வெறும் மாதிரிதான் வெங்கடன், முக்கிய விஷயம் டிரான்ஸிஸ்டர் சரியானதா பழுதானதா என்று கண்டுபிடிப்பதற்கான சமிக்ஞைகளைச் சரியாக பெறுவது, அதை இந்த இயந்திரம் சரியாகச் செய்கிறது.அப்படியிருக்கையில் இந்த சின்னப் பிசிறுகளுக்கு ஏன் இத்தனைப் பதற்றம் கொள்கிறாய் என்று கோபப்பட்டார். நான் கண்ணாடி வழியாக வெளியே பார்த்தேன்.உச்சி வெயிலில் அத்தனை வாகனங்கள், என் காதுகளுக்கு எந்த இரைச்சலும் இல்லாமல் சென்று கொண்டிருந்தன.அவர் போய்விட்டார்.

நான் சோர்வடைந்து அமர்ந்துவிட்டேன்.அதன் பின் அந்த இயந்திரத்தைத் தொடவில்லை.இனி வேலை செய்தாலும் மாலைக்குள் மறுபடியும் இயக்க வைக்க முடியாது.வெளியே சற்று கூச்சலாக இருந்தது.பெண்கள் மின்சுற்றியில் கம்பிகளை சுற்றிக்கொண்டிருந்தார்கள்.சில பெண்கள் சத்தமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.மேரி அமைதியாக அவள் வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள்.நான் அங்கு சென்று நின்று ஏன் இவ்வளவு சத்தம் என்று கத்தினேன்.எல்லோரும் அமைதியானார்கள்.மேரி நிமிர்ந்து புன்னகைத்தாள்.நானும் லேசாகப் புன்னகைத்தேன்.

மாலையில் இஸ்ரேலியப் பொறியாளரை சந்தித்துப் பேசினேன்.இயந்திரத்தைப் பற்றி அவர் கேட்கவில்லை.மரியக்கொழந்தை ஏதாவது சொல்லியிருப்பார்.நான் அன்று மாலை தோல் மருத்துவரை பார்க்கச் செல்ல வேண்டியிருந்ததால் சீக்கிரமாக கிளம்புவதாக மரியக்கொழந்தையிடம் சென்று சொன்னேன்.அவர் எதற்காக என்றார்.மருத்துவரைச் சந்திக்க வேண்டும் என்றேன்.என்ன பிரச்சனை என்றார்.நான் பதில் சொல்லவில்லை.இன்று இஸ்ரேலிலிருந்து வந்துள்ள குழுவினருடன் நாம் இரவு உணவுக்கு செல்கிறோம்.நீ வர வேண்டும் என்றார்.நான் வரமுடியாது என்றேன்.அந்த மருத்துவரை நாளை போய் பார்த்துக்கொள் என்றார்.முடியாது என்றேன்.சரி அப்படி என்ன பிரச்சனை என்றார்.அதை கேட்க உங்களுக்கு உரிமை இல்லை என்று சொன்னேன்.அவர் அமைதியானார்.நான் அப்படி பேசுவேன் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.நான் அப்படி பேசியதை நினைத்துப் பதற்றமடைந்தேன்.அவருடைய மேஜையின் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த இயேசு கிருஸ்துவின் வரைப்படத்தை பார்த்தேன்.நான் வேலைக்கு சேர்ந்த காலத்திலிருந்து அதை பார்க்கிறேன்.அது அவருடைய மனைவி அவருடைய காதலியாக இருந்த போது வரைந்து அவருக்கு அளித்தது.சூரியோதையமும் பக்கவாட்டில் தெரியும் கிருஸ்துவின் முகமும்.அந்த ஏகாந்தமான மனநிலையில் நிற்கும் அந்த முகம்.நாம் இந்த முகத்தை மிகச் சமீபத்தில் எங்கேயோ பார்த்தோமே என்று குழம்பினேன்.அந்த டீக்கடை பையன்.நான் அந்த வரைப்படத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தேன்.நான் வருகிறேன் என்றேன்.அந்த மருத்துவர் நீ பிரச்சனையாக கருதுவதைப் பிரச்சனையே இல்லை என்றுதான் சொல்லப்போகிறார் என்றார்.எனக்கு மறுபடியும் கோபம் வந்தது.நீங்கள் தேவையில்லாமல் பேசுகிறீர்கள் என்றேன்.சரி நீ போகலாம் என்றார்.

இத்தனை வருடத்தில் மரியக்கொழந்தை என்னிடம் இதுபோலப் பேசியதில்லை.எப்போதும் என்னிடம் கரிசனத்தோடே நடந்துகொண்டிருக்கிறார்.நான் காதலித்த பெண் அவர்கள் வீட்டின் அழுத்தம் காரணமாக அவளின் தாய்மாமனை கட்டிக்கொண்ட போது என்னால் அலுவகத்திற்குச் செல்ல முடியவில்லை.கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள்.அவர்தான் என் வேலைக்கு எந்தப் பிரச்சனையும் நிகழாதவாறு பார்த்துக்கொண்டார்.எப்போதாவது திருமணம் செய்துக்கொள்ள சொல்வதைத் தவிர்த்து என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவர் எதுவும் அவராகவே சொல்லவோ கேட்கவோ மாட்டார்.நான் கேட்டால் கூட அறிவரை கூற மாட்டார்.இன்று இவ்வளவு கோபமாக அவர் நடந்துகொண்டது ஆச்சரியமாக இருந்தது.அந்த இயந்திரத்தை நான் கழற்றி போட்டது மட்டும் காரணமில்லை என்று தோன்றியது.

நான் அலுவலகத்திலிருந்து நேராக பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்த அந்த மருத்துவகத்திற்குச் சென்றுவிட்டேன்.நான் செல்லும் போது மருத்துவர் வந்துவிட்டிருந்தார்.என் பெயரை அந்தப் பெண் அழைத்தவுடன் உள்ளே சென்றேன்.அந்த வேலூர்காரர் வெளியே வந்தார்.நான் புன்னகைத்தேன்.அவர் என்னைப் பார்க்கவே இல்லை.மருத்துவர் ஜிலாணிக்கான் தன் நாற்காலியை விட பெரிதாக இருந்தார்.அவரின் கன்னங்கள் அத்தனை பெரிதாக குழந்தைகளின் கன்னங்கள் போல இருந்தன.நான் சென்றவுடன் புன்னகைத்தார்.உட்காருங்க,என்ன பிரச்சனை என்றார்.ஏதோ யோசித்தவாறு நீங்கள் இதற்கு முன் வந்திருக்கிறீர்கள் இல்லையா என்றார்.ஆமாம் என்றேன்.சரி சொல்லுங்கள் என்ன பிரச்சனை.சட்டையை கழற்றி தோல்பட்டையில் கறுப்பாக சிறிய அளவில் வடு போலிருந்ததை காட்டினேன்.அவர் தடவிப்பார்த்தார்.பின்னர் டார்ச் அடித்து பார்த்தார்.இது ஒன்றுமே இல்லையே.மச்சம் போலத்தான் இதுவும் என்று சொல்லி தன் முகத்திலிருந்த வடு ஒன்றை காட்டினார்.அப்படியே விட்டுவிடுங்கள் என்றார்.நான் சமாதானமாகாமல் அப்படியே இருந்தேன்.கவலைப்பட ஒன்றுமில்லை என்று ஆங்கிலத்தில் சொல்லி சிரித்தார்.அவர் உடலே குலுங்கியது.நான் எவ்வளவு கட்டணம் என்றேன்.அதெல்லாம் தேவையில்லை நீங்கள் போகலாம் என்றார்.நான் கீழே இறங்கி வந்து வண்டியைக் கிளப்பினேன்.என் அலுவலகத்திலிருந்து உடன் பணிபுரியும் கிறிஸ்டோபர் அழைத்தான்.எங்கிருக்கிறாய் , இன்றைய விருந்தில் நீ இல்லையே என்றான்.நான் வெளியிலிருப்பதாகச் சொன்னேன்.இங்கு நிறைய சிக்கன் வகைகள், மீன் வகைகள் இருக்கிறது.மிகவும் சுவையாக இருக்கிறது.இந்த நிகழ்வைத் தொகுத்து வழங்கும் பெண் மிக அழகாக இருக்கிறாள் என்றான்.மேலும் வைஷாலி உன்னைத் தேடினாள் என்றான்.நான் அலைபேசியைத் துண்டித்தேன்.எங்காவது சிக்கன் பிரியாணி சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.வண்டியை புஹாரிக்குச் செலுத்தினேன்.வண்டியை நிறுத்தி உள்ளே சென்று ஒரு சிக்கன் பிரியாணி மற்றும் மிளகு போட்ட சிக்கன் வறுவல் என்று சொல்லி விட்டு அதன் வருகைக்காகக் காத்திருந்தேன்.இளையராஜாவின் ஜனனி ஜனனி என்ற பாடல் ஒலிக்கவும் அருகிலிருந்தவர் அலைபேசியை எடுத்துச் சொல்லுங்க சுவாமி என்றார்.நான் வெடித்துச் சிரித்தேன்.


No comments: