பஷீரின் புன்னகை
சாரம்மா இடைமறித்து , 'கொஞ்சம் நிறுத்துங்க.உங்கக்கிட்ட ஒண்ணு கேக்கணும்' என்றாள்.
'தாராளமா ஆணையிடு'
'எப்போதிலிருந்து நான் உங்க இதயத்து நாயகி?'
'என்னிக்கோவிலேயிருந்து!'
'இந்த விஷயத்தை ஏன் என்கிட்ட இவ்வளவு நாளா சொல்லல்லே?'
'நான் சொல்லல்லியா? - ஒவ்வொரு நாளும் உன்னை நினைப்பேன்.காதல் கடிதம் எழுதுவேன்'
'அதுக்கப்புறம்?'
'கிழிச்செறிஞ்சிடுவேன்'
'சரி,உங்க இதயத்து நாயகின்னா நான் என்ன சொன்னாலும் நீங்க கேப்பீங்க இல்லையா?'
'என்ன சொன்னாலும் செய்யத் தயார்.யாரையாவது கொல்லணுமா,கொல்றேன்.கடலை நீந்திக் கடக்கணுமா, கடக்கறேன்.உனக்காக நான் சாகக்கூடத்தயார!' உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார் கேசவன்.
'இப்போதைக்குச் சாக வேண்டாம்.எங்கே தலைகீழா நில்லுங்க பார்ப்போம்'
'உண்மையாகவே நிக்கணுமா?'
'ஆமாம்.'
'அதாவது சிரசாஸனம்..இல்லியா?'
'ம்..'
சட்டையைக் கழற்றிய கேசவன் அதை நாற்காலியின்மேல் வைத்தார்.வேஷ்டியை மடக்கிக் கட்டித் தலையைத் தரையில் ஊன்றிக் கால்கள் இரண்டையும் மேல் நோக்கித் தூக்கி நின்றார்.
அவரையே வைத்த கண் எடுக்காமல் பார்த்து நின்ற சாரம்மா மெல்ல முறுவலித்தாள்:
'பேஷ்'
கேசவன் நின்ற கோலத்தில் கேட்டார்: 'சாரம்மா! உனக்கும் என்னைப் பிடிச்சிருக்கு இல்லையா?'
அவள் பதில் ஒன்றும் கூறவில்லை.
கேசவன் மீண்டும் கேட்டார்.
'சாரம்மாவுக்கு வேலை பிடிச்சிருக்கா?'
ஒசையின்றிப் படியில் இறங்கிப் போன சாரம்மா , கீழே இருந்தபடி 'நாளைக்குச் சொல்றேன்...' என்றாள்.
காதல் கடிதம் - வைக்கம் முஹம்மது பஷீர் - தமிழில் சுரா...

மனிதன் கீழ்மையும் தீமையுமான குணங்களாலானவன்.அந்த கீழ்மையை மிக மெல்லிய வகையில் உணர்த்தும் ஆக்கங்கள் இருக்கின்றன.மிக தீவிரமான அதை விசாரணை செய்யும் ஆக்கங்கள் இருக்கின்றன.காம்யுவின் வீழ்ச்சி நாவலைப் போல.பிறரின் கீழ்மை குணங்களை பேசும் போது நமது கீழ்மை குணங்கள் , வக்கிர எண்ணங்கள், ஆபாச உணர்வுகள், பாசாங்குகள், பாவனைகள் என எல்லாவற்றையும் நம்மால் பட்டியலிட முடியும் என்றால் அப்போது நமது கீழ்மையும் பிறிரன் கீழ்மையும் ஒன்றோடு ஒன்று மோதி ஒரு புன்னகை மேலெழும்.அங்கே சண்டையோ,சச்சரவோ ,புகாரோ, கண்ணீரோ, கவலையோ இல்லை.முக்கியமாக கேலிப்புன்னகை இல்லை.மானுடத்தின் மீது உண்டாகும் மிகப்பெரிய கரிசனம்.அப்போது நாம் பஷீரை கண்டடையலாம்.அது பஷீரின் புன்னகை.அந்த புன்னகையோடு பஷீர் தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறு சொல்கிறார்..

மங்களம்
சுபம்...


No comments: