தலைமையாசிரியரின் நன்றியுரை


வைத்தியலிங்கம் மிகவும் நல்லவர்
வைத்தியலிங்கமும் நானும் சிறுவயதில்
ஒன்றாக விளையாடியிருக்கிறோம்
வைத்தியலிங்கம் எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்
இந்த தலைப்பாகையை கூட அவர்தான் திருவல்லிக்கேணியில்
தேடிப்பிடித்து வாங்கிகொடுத்தார்.
வைத்தியலிங்கம் என்னை விட உயரமானவர்
வைத்தியலிங்கம் சிறந்த எழுத்தாளராக ஆகியிருக்கக்கூடியவர்
வைத்தியலிங்கம் வாழைப்பழத்தோல் வழுக்கி விழுந்து
இறந்து போனது வருத்தத்துக்குரியது
வைத்தியலிங்கத்தின் தலை வழுக்கை என்பதால்
தர்பூசனி போல
அவர் மண்டை சிதறி மரணித்தது மேலும் கவலையளிக்கிறது
இதற்கு மேல் பேச என்னால் முடியவில்லை
என்று தொண்டை கமறிய தலைமையாசிரியர்
தன் தலைப்பாகையை சரிசெய்துக்கொண்டு நாற்காலியில் அமர்ந்தார்
கூட்டத்தில் வைத்தியலிங்கம் வாழ்க என்று கத்திய மாணவனை
அழைத்த தலைமையாசிரியர் அவனை பிரம்பால் அடித்தார்
பின்னர் தன் அறையில் யாருக்கும் தெரியாமல்
வைத்தியலிங்கத்தின் அகால மரணத்தின் துக்கத்தை அனுஷ்டிக்க
இரண்டு டஜன் வாழைப்பழங்களை ஒரேயடியாக விழுங்கினார்.

No comments: