அக்கறை


என்னுடன் அலுவலகத்தில் ஒன்றாக பணிபுரிந்த ஒருவருக்கு விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருந்தது.அவர் தன் துணைவியாருடன் சேர்ந்து வாழ நிறைய விரும்பினார்.ஆனால் அவரது துணைவியாருக்கு அதில் எந்த விருப்பமும் இருந்ததாக தெரியவில்லை.ஒரு கட்டத்தில் என் நண்பர் மனச்சோர்வு காரணமாக தூக்கம் வராமல் அவதிப்பட்டார்.அதன் காரணமாக மனநல மருத்துவரிடம் சென்றார்.அவர் சில Anti-Depressant மாத்திரை பரிந்துரைத்திருக்கிறார்.ஒரு கட்டத்தில் அதை உண்டால்தான் உறக்கம் என்ற நிலைக்கு வந்துவிட்டார்.ஒரு கட்டத்தில் ஏதோ சில காரணங்களுக்காக என்னுடன் தன் தனிப்பட்ட வாழ்க்கையை பேச ஆரம்பித்தவர் ஒரு கட்டத்தில் எல்லா விஷயங்களையும் சொன்னார்.சில மாதங்களில் என்னிடம் அவர் எப்போதும் புலம்ப ஆரம்பித்தார்.என் அனுபவம் சார்ந்து ,வாசிப்பு சார்ந்து ,எனக்கிருந்த புரிதல்கள் சார்ந்து அவருக்கு நான் சில ஆலோசனைகள் சொன்னேன்.மறுபடியும் ஒரு முறை அவருடைய துணைவியாருடன் பேச சொன்னேன்.அதுவும் சரிப்பட்டுவரவில்லை.பின்னர் அவர் என்னை முழுவதும் சார்ந்திருக்க ஆரம்பித்துவிட்டார்.பேசும் நேரங்களில் எல்லாம் அவருடைய பிரச்சனைகளை பற்றி, அவருடைய அவதி , கண்ணீர், தனிமை இதைப்பற்றியே பேசினார்.கிட்டத்தட்ட எட்டுமாதங்கள்.என்னுடனே என் இல்லத்துக்கு வருவார்.மாலை முழுவதுமிருந்து என்னுடன் உணவருந்திவிட்டு செல்வார்.முழுவதும் அவருடைய புலம்பல் தான்.ஒரு கட்டத்தில் நான் நினைத்திருந்தால் அவரிடம் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எனக்காக செலவு செய்ய வைத்திருக்க முடியும் என்ற நிலைமையில் இருந்தார்.என்னுடைய எல்லா வேலைகளையும் செய்யும் ஒரு வேலைக்காரரை போல அவரை நடத்தியிருக்க கூடிய அளவில் பலவீனமாக இருந்தார்.அவருக்கு எவ்வளவு ஆலோசனை வழங்கினாலும் அவர் முதல் முறையாக என்னுடன் பேசிய போது என்ன புலம்பினாரோ அதையேதான் புலம்பிக்கொண்டிருந்தார்.ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து நிறைய கத்திவிட்டேன்.அதன் பின் அவருடன் அலுவலக வேலை சம்மந்தமாக மட்டும் பேச ஆரம்பித்தேன்.அவரும் தனிப்பட்ட உரையாடல்களை தவிர்த்தார்.


நான் ஒருவரை காதலித்தேன்.அவர் என்னை காதலிக்கவில்லை.அதை அவர் தெளிவாக சொல்லியும்விட்டார்.மேலும் அவருக்கு என்மீது அன்போ , அக்கறையோ இல்லவே இல்லை என்றும் தெளிவாக சொல்லிவிட்டார்.அந்த உறவு பின்னர் நட்பு என்ற அளவில் தொடர்ந்தது.என் விருப்பத்தால் தொடர்ந்தது என்று சொல்லலாம்.அவருக்கு பெரிய விருப்பமில்லை.ஒரு கட்டத்தில் நான் மேலே சொன்ன என் நண்பர் போல அவரிடம் புலம்ப ஆரம்பித்தேன்.புலம்புவது , பலவீனமான தருணங்களில் அவரை புண்படுத்துவது போல எழுதுவது என்று நிறைய இருந்தது.எல்லாம் நாகரீமானவை தான். நட்பு என்ற எல்லைக்குள் நின்று பேசக்கூடியவை தான்.அவருக்கு எழுதிய கடிதங்களை தொகுத்து பெயர் , சம்பவங்கள் போன்றவற்றை திருத்தினால் மஞ்சள் வெயில் போல ஒரு நாவல் தயாராகிவிடும்.அந்த அளவுக்கு நாகரீமானவை தான்.அச்சிடக்கூடியவைதான்.ஆனால் புலம்பல் புலம்பல்தானே.Nuisance is Nuisance.தொந்தரவு தான்.தவறுதான்.ஒரு கட்டத்தில் என் புலம்பலும் , புண்படுத்தும் பேச்சும் அவருக்கு அதீத மன அழுத்தம் தந்தது.அவரும் பொறுமையிழந்து கத்திவிட்டார்.நட்பு என்ற அளவில் நீடித்த அந்த உறவும் முடிந்துபோனது.

நமக்கு ஒரு இழப்பு, வீழ்ச்சி, மரணம், அவமானம், தோல்வி போன்ற தருணங்களில் நாம் மிகவும் பலவீனமாக நடந்துகொள்கிறாம். நம்மீது அன்பு கொண்ட சிலர் அந்த தருணங்களில் நமக்காக உதவ முற்படலாம்.பெற்றோர் , நண்பர்கள், துணை, பிள்ளைகள், உறவினர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனால் எந்த அளவுக்கு உதவ முடியும் என்பதே கேள்வி.முதலில் பலவீனமான தருணங்களில் நமது பிரச்சனைகளை செவிகொடுத்து கேட்க எத்தனை பேருக்கு நேரம் இருக்கிறது.அப்படியே நேரம் இருந்தாலும் அக்கறை செலுத்துவது அவ்வளவு எளிதல்ல.அக்கறை சமயங்களில் ஒரு ஆடம்பரம் போல ஆகிவிடுகிறது.நான் சொல்வது நெருங்கிய உறவுகளில் கூட.நான் ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் மிகவும் பலவீனமாக இருந்தேன்.அப்போது ஒரு முறை வீட்டில் வெடித்து அழுதேன்.என் பெற்றோர் என்னை சமாதானப்படுத்தினர்.பிறகு சில நாள் கழித்து என் அன்னை நான் அவ்வளவு பலவீனமாக அழுதது எரிச்சல் தருவதாக இருந்தது என்றார்.அந்த அர்த்தத்தில் தான் சொன்னார்.ஆண்கள் அழக்கூடாது என்றும் அவர் சொன்னதாக ஞாபகம்.அப்போது நான் எதனால் பலவீனமாக இருந்தேன் என்பதை என்னால் பெற்றோருக்கு புரியவைக்க முடியவில்லை.நண்பர்களுக்கும் புரியவில்லை.என் பலவீனத்திலிருந்து நான் மீண்டதற்கு எனக்கு உதவியவர்கள் அசோகமித்திரனும் , நகுலனும், ஆல்பெர் காம்யூவும், தஸ்தாவெய்ஸ்கியும் தான்.அந்த வாசிப்பு மூலமாகத்தான் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து நான் எனது பலவீனங்களிலிருந்து மீண்டேன்..Life is Life everywhere என்று திமித்ரி சொல்வதும், எல்லா வாழ்க்கை நிலைகளும் மதிக்கத்தக்கதே என்று மெர்சால்ட் சொல்வதும், எனது அடையாளங்கள் ஒன்றுமில்லை என்று சந்திரசேகரன் விடியகாலை பொழுதில் ஒடுவதும், நகுலனின் கவிதைகளுமே என்னை மீட்டன.வேறு யாராலும் என்னை காப்பாற்றி இருக்க முடியாது.அந்த பலவீனம் என்னை அப்படியே விழுங்கியிருக்கும்.உதவி செய்ய நினைப்பவர்கள் கூட ஒன்றும் செய்ய இயலாது.என் தாய் தந்தையருக்கு என்மீது நிறைய அன்பு இருக்கிறது.என்னுடைய பால்ய காலம் மிக சிறப்பாக இருந்தது.ஆனால் அவர்களாலேயே எனது பிரச்சனைகளை புரிந்துகொள்ள முடியவில்லை.நமது பிரச்சனைகள் அந்தரங்கமானவை.ஒரு போதும் அதை வேறொருவரால் தீர்க்க முடியாது.நீங்கள் நடுக்கடலில் தத்தளித்தாலும் உங்களை காப்பாற்ற எந்த கரமும் வராது.நீங்களாக முயற்சி செய்து கரைக்கு வரவேண்டும்.வேறு வழியே இல்லை.உறவுகள், நட்பு , பெற்றோர், சகோதரர்கள், துணைவர்,பிள்ளைகள் எல்லாரும் ஒரு எல்லை வரைதான்.நாம் எல்லோரும் அந்தரங்கமாக தனியானவர்கள் தான்.என் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார்.அவருக்கு எழுபது வயது.அவருடைய துணைவியார், பிள்ளைகள் உட்பட யாரும் வருத்தப்படவில்லை.அவர் எப்போதும் மற்றவர்களை புண்படுத்தும்படியே பேசக்கூடியவர்.அவரது மரணத்தை எல்லோரும் விரும்பினார்கள் என்று தான் தோன்றுகிறது.அநேகமாக எல்லா உறவுகளிலும் எதிர்பார்ப்பின்மை, சாராது இருத்தல், நமது பிரச்சனைகளை பற்றி பேசாமல் இருப்பது , மற்றவருக்கான வெளியையும் , சுதந்திரத்தையும் அளிக்கும் பண்பு ஆகியவை இருந்தால் ஒரளவு அந்த உறவு ஆரோக்கியமாக இருக்கும்.உறவுகளால் லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை.திருமணமாகி பெற்றோர் , பிள்ளைகளுடன் இருக்கும் சிலருடன் வெகு நேரம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்களின் தனிமை சட்டென்று புலப்படுகிறது.என்னுடைய நண்பருக்கு உதவ வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன்.ஆனால் அது சாத்தியமில்லை.அவரை அவர் தான் காப்பாற்றி கொள்ள வேண்டும்.நம்மால் மிக சில ஆலோசனைகளை மட்டுமே சொல்ல முடியும்.இது தான் யதார்த்தம்.நீங்கள் மற்றவர் மீது சாய்ந்தால் ஒன்று அவர் உங்களை சுரண்டிக்கொள்ள சாத்தியம் இருக்கிறது.அல்லது சற்று நல்லவராக இருந்தால் விலகிசென்றுவிடுவார்.அப்படியும் ஒரு உறவு நீடிக்கிறதென்றால் தினசரி வாழ்க்கை சார்ந்து ஒருவரை ஒருவரை சார்ந்திருக்கிறார்கள் என்று தான் அர்த்தம்.நான் என் கல்லூரி காலத்திலிருந்தே ஒரு உறவில் இருவருமே ஒருவரை ஒருவர் புண்படுத்தாமல் , அகங்காரம் சிறிதும் இல்லாமல், மிக அந்தரங்கமான ஒரு அன்புடன் இருக்க முடியுமா என்று நினைத்திருக்கிறேன்.நிச்சயம் சாத்தியமில்லை.ஆக, எந்த இடத்திலும் பிறர் உங்களுக்காக அக்கறை பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கிட்டத்தட்ட பைத்தியக்காரத்தனமானது.உங்கள் பிரச்சனைகளை பல்லை கடித்துக்கொண்டு நீங்களே சமாளித்து சற்று பலம் பொருந்தியவர் போல நின்றுகொண்டிருந்தால் உங்களை சுற்றி உறவுகளும் நட்பும் இருக்கும்.நீடிக்கும்.அவ்வப்போது பேசிக்கொள்ளலாம்.மகிழ்ச்சியை சிரித்து பகிர்ந்து கொள்ளலாம்.ஒரு நல்ல ஆராக்கியமான எளிய அன்பு சாத்தியம்.அவ்வளவுதான். உறவுகள் இல்லாவிட்டாலும் ஒன்றுமில்லை தான்.ஆனால் இருந்துவிட்டு போகட்டுமே.

   

No comments: