நீதிபதி சந்துரு


                                                            


இந்த மாத காலச்சுவடு இதழில் நீதிபதி சந்துருவின் நேர்காணல் வந்துள்ளது.மிக சிறப்பான நேர்காணல்.1951யில் சந்துரு பிறக்கிறார்.1955யில் அவருடைய தாயார் இறக்கிறார்.1966யில் அவருடைய தந்தை இறந்து போகிறார்.சகோதரர்களில் மூத்தவர் பொறியியல் படிக்க அமெரிக்கா செல்கிறார்.இரண்டாம் சகோதரர் கான்பூர் ஐஐடியில் சென்று படிக்கிறார்.தந்தை இறந்துவிடவே இவர் விடுதியில் சேர்ந்துவிடுகிறார்.தம்பியை அவர்களுடைய மூத்த சகோதரி வாழும் மாயவரத்தில் அவருடைய பொறுப்பில் விடுதியில் சேர்த்துவிடுகிறார்கள்.தி.நகரில் ராமகிருஷ்ணா பள்ளயில் படிக்கிறார்.இந்த இடத்தில் அசோகமித்திரன் கேணி கூட்டத்தில் சொன்னது நினைவுக்கு வருகிறது.அப்போது பள்ளிகளில் மிக சுமாரான கட்டணத்தில் தரமான கல்வி மாணவர்களுக்கு தரப்பட்டிருக்கிறது.அசோகமித்திரனின் பிள்ளைகளும் தி.நகர் ராமகிருஷ்ணா மிஷனில்தான் படித்தார்கள் என்று நினைக்கிறேன்.பின்னர் சில காலம் லயோலாவில் படிக்கிறார்.அங்கே படிக்கும் போது இந்து இதழில் கல்லூரியின் விடுதி குறித்த ஒரு கட்டுரை எழுதவே கல்லூரியிலிருந்து நீக்கப்படுகிறார்.பல்வேறு போரட்டங்களில் கலந்துகொள்கிறார்.சி.பி.எம் கட்சியில் சேர்கிறார்.இதற்கிடையே என்.ராம் மூலமாக தாம்பரம் எம்.சி.சி கல்லூரியில் சேர்கிறார்.அங்கே இருக்கும் போது எம்.ஆர்.எஃப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை செல்கிறார்.டிகிரி முடித்தபின் மேற்கொண்டு படிக்காமல் 71யிலிருந்து 73வரை கட்சிபணியில் இருக்கிறார்.தமிழகம் முழுவதும் பயணிக்கிறார்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஏற்பட்ட மோதலில் இறந்து போன உதயகுமாருக்காக விசாரணை கமிஷன் அமைக்க போராடுகிறார்.பின்னர் இறந்தது உதயகுமார் தான் என்பது விசாரணை கமிஷன் மூலம் உறுதிசெய்யப்படுகிறது.இப்படியே போராட்டங்களில் மட்டுமே ஈடுபட்டு கொண்டிருந்தால் வாழ்க்கை வீணாகிவிடும் என்ற புரிதலில் சட்டம் படிக்கிறார்.பின்னர் பல்வேறு மனித உரிமை வழக்குகளில் வாதாடுகிறார்.தன்னுடைய நாற்பதாவது வயதில் தன்னை ஒரு நேர்காணல் எடுக்க வந்தவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.1995யில் குழந்தை.மூத்த வழக்கறிஞர் ஆகிறார்.பின்னர் 2006யில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆகிறார்.சிறப்பாக பணியாற்றி ஒய்வுபெறுகிறார்.


இந்த நேர்காணலை படிக்கும் போது சில விஷயங்கள் முக்கியமாக பட்டன.அவருடைய பள்ளி வாழ்க்கை.தாயார் இறந்தபின் தந்தை மறுமணம் செய்து கொள்ளாமல் ஐந்து குழந்தைகளையும் வளரத்திருக்கிறார்.ஒரு கட்டத்தில் வீட்டில் ஆண்கள் மட்டுமே இருந்திருக்கின்றனர்.அவருடைய 15வயதில் தந்தையின் மரணம்.பின்னர் விடுதி வாழ்க்கை.இவருடைய சகோதரர்கள் எல்லோரும் நன்றாக படித்திருக்கிறார்கள்.மிக குறைவான கட்டணத்தில் தரமான கல்வி தரப்பட்டிருக்கிறது.எனக்கு மிகவும் முக்கியமான பட்டது இவருடைய 71யிலிருந்து 73வரையான வாழ்க்கை.இன்று நாம் பெரும்பாலும் பள்ளி அதன் பின் கல்லூரி அதன் பின் வேலை என்று இருக்கிறோம்.இதில் சமூகம் குறித்த புரிதலே நமக்கு ஏற்படுவதில்லை.பள்ளி, கல்லூரி,வேலை இவைகளுக்கு இடையே இடைவெளிகளே இல்லை.அப்படி ஒரு இடைவெளிதான் சந்துருவின் வாழ்க்கையில் முக்கியமானதாக இருந்திருக்கிறது.அப்போது தான் அவர் தமிழகம் முழுவதும் பயணித்திருக்கிறார்.அப்போது அவருக்கு சமூகம் குறித்த அழுத்தமான புரிதல் ஏற்பட்டிருக்கிறிது.அதுவே அவரை மனித உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞராக , சிறந்த நீதிபதியாக வாழ வைத்திருக்கிறது.அவர் சி.பி.எம் கட்சியில் இருந்தது அவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய விஷயம் என்று நினைக்கிறேன்.எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும் மார்க்சிய கல்விதான் ஒருவருக்கு சமூகம் குறித்த ஒரு புரிதலை ஏற்படுத்துகிறது.அது தான் மேற்கட்டுமானம் , அடித்தளம் என்ற தர்க்க பிரிவை உருவாக்கி நாம் சமூகத்தில் எங்கே இருக்கிறோம் என்ற புரிதலை ஏற்படுத்துகிறது.காந்தியவாதிகளின் பிரச்சனை என்னவென்றால் அவர்கள் சட்டென்று ஆன்மிகவாதிகளாகி விடுகிறார்கள்.இயற்கை விவசாயம் பேசும் நம்மாழ்வார் ஒரு ஆன்மிகவாதியை போலத்தான் பேசுகிறார்.இது ஏதோ ஒரு கட்டத்தில் முடங்கிவிடுகிறது.மார்க்சிய சிந்தனை சமூகம் குறித்த ஒரு புரிதலை பல விஷயங்களை அறிந்து கொள்ளும் ஒரு கருவியை நமக்கு அளிக்கிறது.அது எதை தருகிறதோ இல்லையோ இந்த சமூக அமைப்பை பற்றிய நல்ல புரிதலை தருகிறது.இன்றைய வழக்கிறஞர்களின் பிரச்சனை குறித்து சந்துரு பேசும் போது அவர்களுக்கு சமுதாய அமைப்பின் மீது எந்த பங்குமில்லை என்கிறார்.ஆக, அவருடைய பயணமும் ,மார்க்கஸிய கல்வியும் அவருக்கு ஒரு வலுவான கருத்தியல் தளத்தை அளித்திருக்கிறது.சில வருடங்களுக்கு முன் மறைந்த மனித உரிமை ஆர்வலர், வழக்கறிஞர் கே.பாலகோபால் பற்றி படித்த போது இதே போன்ற மன எழுச்சியை அடைந்தேன்.அவரும் மார்க்ஸிய கல்வி கற்றவர்.இப்போது சந்துருவின் நேர்காணல் மிகுந்த மன எழுச்சியை தருவதாக இருக்கிறது.சி.பி.எம் குறித்து ஒரு விஷயம் எப்போதும் எரிச்சல் தருவதாக இருக்கிறது.அந்த கட்சி ஏன் இவ்வளவு இறுக்கமானதாக இருக்கிறது.கட்சிக்குள் ஏன் ஆரோக்கியமான உரையாடலே இல்லை.இலங்கை தமிழர் பிரச்சனையில் போராட்டங்களில் கலந்துகொண்டதால் சந்துரு கட்சி நடவடிக்கை காரணமாக நீக்கப்படுகிறார்.இன்று ஒரு இடதுசாரி தரப்பு என்பது சி.பி.எம் மாத்திரமே.பிரகாஷ் காரத் ஏதோ ஒரு கார்ப்பரேட் நிறுவணத்தின் CEO போல இருக்கிறார்.சி.பி.எம் வலுவான ஆரோக்கியமான இடதுசாரி தரப்பாக இருப்பது மக்களுக்கு முக்கிய விஷயம்.சி.பி.எம் கட்சியில் கருத்தியல் தளத்தில் சில மாற்றங்கள் வந்தால் நன்றாக இருக்கும்.சந்துரு போன்ற உறுப்பினர்களை அது இழக்கக்கூடாது.காலச்சுவடுவில் சில நேர்காணல்கள் நன்றாக இருக்கிறது.தியோடர் பாஸ்கரனின் நேர்காணல் இப்போதும் நினைவில் இருக்கிறது.நேர்மையான நேர்காணல்கள் ஒரு நாவலை போல ஒரு சிறந்த திரைப்படத்தை போல வாழ்வும் வசந்தமும் என்ற சுந்தர ராமசாமியின் சிறுகதை போல வாழ்க்கையை நமக்கு அப்படியே அள்ளி தருகிறது.

No comments: