உரையாடல்


முந்தைய To Negate என்ற கட்டுரை சார்ந்து அபிலாஷூடன் நடத்திய சின்ன உரையாடல்.




அபிலாஷ் - சர்வோத்தமன் நான் பேசியது மாநகரத்தில் சாதி கடந்து மணப்பது சாதனையா என்றல்ல; சொந்தக்காரர்கள் எப்படி சாதியை தக்க வைக்கிறார்கள்; அவர்கள் தவிர்க்க முடியாதவர்கள் என்பது உண்மையா என்பதே. மனிதன் அந்நியமாதலால் சாதியை பற்றிக் கொள்வதாக நான் நம்பவில்லை. அதிகாரத்துக்காகத் தான் சாதியை தொடர்கிறான். அது மேல் கீழ் சாதிகளுக்கு ஒருசேர பொருந்துகிறது. ஒரு அடையாளமாக சாதிக்கு சின்ன இடம் தான். அதுவும் படைப்பூக்கமும் சுயசிந்தனையும் இல்லாதவர்களுக்கே தேவைப்படுகிறது. எனக்கு அவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. hollow men!

நான் - அபிலாஷ் , சாதி என்ற கருத்தில் இனத்தூய்மை , அந்நியமாதல், அதிகாரம் (அரசியல் அதிகாரமும் இதில் அடங்கும்) ஆகிய மூன்று விஷயங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். பெருநகரத்தில் தனித்துபோய் நிற்கும் ஒருவன் ஒரு அடையாளத்திற்காகவும் சாதியை பற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.ஆனால் நான் எழுதியதின் முக்கிய விஷயம் இன்று மாற்று சாதி திருமணங்கள் கருத்தியல் வெற்றிகளால் அடையப்பெற்ற ஒன்றல்ல என்பதே.அவை மாநகரங்களில் பொருளாதார மாற்றங்களால் அடையப்பெற்றவை.அப்படியென்றால் கருத்தியல் தளத்தில் தமிழ் அறிவுஜீவி சமூகம் செய்துகொண்டிருப்பது என்ன என்பதே நான் கேட்டுக்கொண்ட கேள்வி.

அபிலாஷ் - சர்வோத்தமன் கருத்து முதலிலும் செயல் தொடர்ந்தும் நிகழும் என நான் நம்பவில்லை. பொருளியல், உளவியல்ம், சமூகவியல் காரணங்களுக்காக பல்வேறு விசயங்களை செய்கிறோம். அதற்கு நியாயமும் அர்த்தமும் வழங்கத் தான் கருத்தியல். சாதியை ஒழிக்கவென்று யாரும் மணம் புரிவதாக நானும் நம்பவில்லை. சாதி கடந்த திருமணங்கள் சாதியை ஒழிக்குமா என்பதிலும் சந்தேகம் இருக்கிறது. சாதியை நான் குறுகின மனப்பான்மை என புரிந்து கொள்கிறேன். குறுகின மனப்பான்மையை வெளியில் இருக்கிற ஒன்றைக்கொண்டு அழிக்க முடியாது.

நான் - அபிலாஷ் , சாதி என்பது ஒரு குறுகிய மணப்பாண்மை என்று சொல்ல முடியாது.கோசாம்பி ராஸ் பேஸ் பார்தி என்ற பழங்குடியினர் பற்றிய ஆய்வில் பார்திகள் திருடுவதை குற்றம் என்று கருதுவது பாதிக்கப்பட்டவரும் அதே பழங்குடியை சேர்ந்தவர் என்றால் தான் என்று சொல்கிறார்.பேருந்து நிலையத்திற்கு ஒரு பேருந்து காலியாக வந்து நிற்கிறது.நாம் முட்டிமோதி முதலில் ஏறிவிடுகிறோம்.நம்மை போல வேறு சிலரும் ஏறுகிறார்கள்.அப்போது நமக்கு பக்கத்தில் ஒரு கைக்குட்டையை போட்டு என் நண்பர் வருகிறார் என்று சொல்கிறாம்.நமது நண்பர் நிதானமாக கடைசியில் ஏறி நமக்கு அருகில் அமர்ந்துகொள்கிறார்.நம்முடன் ஏறியவர் கடைசிவரை நின்று கொண்டு பயணம் செய்கிறார்.இதில் இருக்கும் மனநிலைக்கும் மேலே சொன்ன பார்தி பழங்குடியினர் பற்றிய மனநிலைக்கும் பெரிய வித்யாசம் இல்லை.ஆக சாதி என்பது ஒரு குறுகிய மணப்பாண்மை என்று மட்டும் சொல்லி விட முடியாது.அது ஒரு இனக்குழு சமூகத்தின் நாம்X பிறர் என்ற முரணில் இருக்கிறது.சாதிக்கு பல்வேறு அடுக்குகள் இருக்கிறது.கருத்தியல் ரீதியாக அதை எளிய அளவில் கூட நாம் இன்றும் அசைக்கவில்லை.சாதியை விட வேண்டும் சொல்லி விட்டால் சாதியை விட முடியாது.நேர்மையாக ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் அதற்கு எதிராக தனக்குள் போராடி கொள்ள வேண்டும்.ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலில் இதே போல ஒரு பேருந்தில் எத்தனை இடம் காலியாக இருக்கிறது வெளியே எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற ஒரு எளிய கணக்குகூட போட்டுகொள்ளாமல் இப்படி முட்டிமோதி கொள்கிறார்களே என்று ஜே.ஜே. கேட்கும் ஒரு கேள்வி வரும்.அதற்கு எளிய பதில், ஏனேனில் நின்று கொண்டிருப்பது ஒரு இனக்குழு சமூகம் என்று ஜே.ஜேவுக்கு நாம் சொல்லிவிடலாம்.

My Concern is that, is Tamil Literature just yet another Institution like School , College, Religion to facilitate the Industrialisation process of India.Is it just educating the people to understand the Civic Values an Industralized society needs? ஏன் ஒரு குரல் பேருந்தில் இருந்து கீழே இறங்கி வா நாம் இந்த மரநிழலில் அமர்ந்துகொண்டு சில பழங்கதைகளை பேசுவோம் என்று சொல்லவில்லை.ஆர்.நல்லகண்ணு தான் ஒரு பொதுவுடைமைவாதியாக மாறியதற்கு பாரதி கவிதைகள் ஏற்படுத்திய பாதிப்பு ஒரு முக்கிய காரணம் என்று சொல்கிறார்.நான் பார்த்தவரையில் அதன்பிறகு தமிழின் மிக சிறந்த ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன் மட்டும் தான் தேவதேவனின் ஆளுமையால் பாதிக்கப்பட்டதாக சொல்கிறார்.இங்கே தமிழில் பல தளங்களில் போராடிய பலரும் ஒன்று காந்தியவாதிகள் அல்லது இடதுசாரிகள்.இவர்களை மக்களுக்காக போராடிய தூண்டியது காந்தியும் மார்க்ஸூம் தான், தவிர எந்த நவீன தமிழ் இலக்கிய பிரதியும் அல்ல.ஒரு எழுத்தாளன் ஒரு சமூகத்தில் நேரடியாக பாதிப்பு செலுத்துவதில்லை.அவன் மூலமாக சில செயற்பாட்டாளர்கள் உருவாகுகிறார்கள்.அவர்கள் சமூகத்தை பாதிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.அப்படி பாரதிக்கு பின் எத்தனை செயற்பாட்டாளர்களை நவீன தமிழ் இலக்கிய பிரதிகள் உருவாக்கியிருக்கின்றன.

பாலாஜி சங்கர் என்ற இயற்கை விவசாயம் செய்யும் ஒருவரை பற்றி சில காலமாக நான் அறிவேன்.அவர் தன் அனுபவங்களை அவ்வவ்போது earth.org.in என்ற வலைதளத்தில் எழுதிவருகிறார்.இந்தியாவின் மிகச்சிறந்த கல்லூரிகளில் படித்துவிட்டு மிக நல்ல வருமானம் பெற்றுவந்த ஒருவர் சீர்காழி அருகில் சில ஏக்கர் நிலங்களை வாங்கி விவசாயம் செய்கிறார்.தன் பிள்ளைகளுக்கு மைய அமைப்பு வழி கல்வி கூடாது என்பதால் பள்ளிக்கு அனுப்பாமல் தானே கற்றுத்தந்தார்.பிறகு பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடும் என்பதால் பள்ளியில் சேர்த்தார்.இதை கற்பனை செய்து பார்த்தால் அந்த குடும்பம் இவரின் முடிவுகளால் எத்தனை கொந்தளிப்புக்கும் பரிகாசத்திற்கும் உள்ளாகியிருக்கும் என்று புரிந்துகொள்ள முடியும்.இவரை பாதித்தவர்கள் தோரேவும் மாசானபுவும் தான்.இவருக்கு நவீன தமிழ் இலக்கியத்தோடு எளிய அறிமுகம் கூட இல்லை.ஒரு மைய அமைப்பு இருக்கிறது.அந்த மைய அமைப்பின் திசையில் எல்லாம் பேசப்படுகிறது.அந்த மைய அமைப்பை மேலும் நல்ல விதமாக மாற்ற அந்த அமைப்புக்குள் நிறைய உரையாடல்கள் நடக்கும்.அதில் எந்த தவறும் இல்லை.ஆனால் அந்த குரல்களில் ஒன்றாக இலக்கியம் இருக்கக்கூடாது என்கிறேன்.அது இலக்கியத்தின் பணி அல்ல.நான் எழுதியுள்ள பதில் உளறல் போல தெரியலாம்.தாடி வளர்த்து காடுகளில் வாழ்ந்து ஆயுதம் ஏந்தி இலக்கியம் வளர்க்க சொல்லவில்லை.அக்கினிக்குஞ்சு இல்லை.கார்ப்ரேட் நிறுவணங்கள் ஒரு இடத்தில் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் தங்கள் தொழில் மேலும் வளம்பெற நிறைய விஷயங்கள் செய்கிறார்கள்.கல்வி சாலைகள் தொடங்குவது, சாலைகளை சீரமைப்பது, ஏழைகளுக்கு உதவுவது, நாட்டார் கலைகளுக்கு உதவுவது என்ற பல விஷயங்களை செய்கிறார்கள்.அவற்றில் இந்த சமூகத்தை இன்னும் தெளிவாக புரிந்துகொள்ளவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்கவும் , தங்கள் தொழில் வளம்பெறுவதற்கு தேவையான விழுமியங்களை வளர்ப்பதும் முக்கிய விஷயங்கள்.இது போன்ற காரணங்களுக்கு இல்லாமல் ஒரு நிறுவணம் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாது.அப்படிப்பட்ட கார்ப்ரேட்கள் தமிழ் இலக்கியத்தை கவனிக்க தொடங்கினால் நிச்சயம் நிறைய நீதி அளித்து அதை வளர்ப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு ஐரோப்பாவாவின் குடிமைச்சமூகச்சூழல் ஒரு இஷ்டலோகமாக இருக்கக்கூடாது.ஏனேனில் அடைவதற்கு அது இஷ்டலோகம்(Utopia) அல்ல.



No comments: