ரஸ்கோல்நிகோவ்



ரஸ்கோல்நிகோவ் வட்டிக்கடை அம்மையார் அல்யோனா இவானோவ்னாவை கொலை செய்கிறான். அப்போது அங்கு எதிர்பாராதவிதமாக வந்துவிடும் அவளது தங்கை லிசாவெதாவையும் கொலை செய்து விடுகிறான். அவன் ஏன் அந்த கொலையை செய்தான் என்பதே நாவலின் பிரதானம். இந்த உலகத்தில் மொத்தம் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒரு வகை சாதாரண மனிதர்கள்.இவர்கள் சட்டம் , அறம் போன்றவற்றிற்கு கட்டுப்பட்டு வாழ்பவர்கள்.அவர்கள் அதை மீறும் போது அந்த சட்டத்தை கொண்டு அவர்களை தண்டிக்கலாம். ஆனால் மற்றொரு வகையினர் இருக்கிறார்கள்.இவர்கள் அதிமனிதர்கள்.இவர்கள் எல்லா சட்டத்தை மீற கூடியவர்கள் அல்ல.ஆனால் தாங்கள் செய்யும் செயலால் மானிட இனமே நன்மை பெறும் எனும் போது அதை முன்னிட்டு அவர்கள் எதை வேண்டுமானால் செய்யலாம். அதாவது நியூட்டன் , கெப்லர் போன்றவற்கள் தாங்கள் செய்ய விரும்பும் ஒரு செயலால் மானிடம் நன்மை அடையும் என்கிற போது அதை முன்னிட்டு யாரையும் எவ்வளவு பேரையும் கொலை செய்யலாம். அது தவறு ஆகாது. மாறாக அவர்கள் மனித குலத்தின் புரவலர்களாக கொண்டாடப்படுவார்கள்.அவர்களால் புது சட்டங்கள் இயற்றப்படும். அப்படி தானும் ஒரு அதிமனிதனே என்ற எண்ணம் ரஸ்கோல்நிகோவிடம் எழுகிறது. சரியாக சொல்வதென்றால் தான் அதிமனிதனா அல்லது எல்லோரையும் போல தானும் ஒரு மந்தை மனிதன் தானா என்னும் கேள்வி அவனுள் எழுகிறது. அதை முன்னிட்டு தான் அதிமனிதன் தான் என்ற நிறுவ முயல்கிறான்.அப்படி நிறுவுவதற்கு அவன் மேற்கொள்ளும் செயலே வட்டிக்கடை அம்மையாரை கொலை செய்வது.அதாவது அந்த செயலின் மூலம் மானுடர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதை விட தான் அதிமனிதன் எனும் தன் இருப்பை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனும் எண்ணமே அவனை கொலை செய்ய தூண்டுகிறது.

ரஸ்கோல்நிகோவ் எவ்வித நம்பிக்கையும் இல்லாமல் வாழ்கிறான். புனித பீட்டர்ஸ்பர்க் நகரமும் அதன் மனிதர்களும் , அதன் தட்பவெப்ப நிலையும்,அவன் வாழ்ந்து வரும் மிகச்சிறய அறையும் அவனது செயலுக்கு புறக்காரணங்கள்.அவன் வேறு ஏதேனும் ஒரு மனிதரோடு இந்த காலகட்டத்தில் வாழ்ந்திருந்தால் அவன் இந்த கொலை செய்யாமல் போயிருக்கலாம்.

அகக்காரணங்கள் என்று பார்க்கும் போது அவனது இருப்பே முதன்மை காரணம் .ஆம் எதை முன்னிட்டு அவன் தன் வாழ்க்கையை வாழ்வது எனும் கேள்வி அவனுள் எப்போதும் இருக்கிறது. அவன் கடவுளை மறுக்கிறான் என்று சொல்ல இயலாது. ஆனால் அவனால் கடவுளிடம் மண்டியிட்டு அழ முடியவில்லை.லாசரஸின் மீள்உயிர்ப்பு நாவலின் முக்கியமாக பேசப்படுகிறது. அதே நேரத்தில் தன்னை அவன் ஒரு மறுப்புவாதி என்றும் சொல்லிக்கொள்வதில்லை.

ரஸ்கோல்நிகோவ் நாவலின் ஆரம்பித்தில் ஒரு கனவு காண்கிறான். அவன் சிறுவயதில் தன் தந்தையுடன் கல்லறை நோக்கி செல்லும் போது ஒரு மதுவகத்திற்கு வெளியே ஒருவன் தன் குதிரை வண்டியில் அந்த வயோதிக குதிரையால் நகர முடியாத அளவுக்கு மக்களை ஏற்றிக்கொண்டு அவர்களை இழுக்குமாறு குதிரையை அடிக்கிறான்.ஆனால் அந்த குதிரையால் ஒரு அடி கூட எடுத்து வைக்கமுடியவில்லை. ஆனால் அவன் தொடர்ந்து அதை அடிக்கிறான்.வெறி கொண்டு தன் மகிழ்ச்சிக்காக தன்னை சுற்றி இருப்பர்கள் சிரிக்க அதை கொல்லும் வரை அடிக்க போவதாக கூறி அடிக்கிறான் .இறுதியில் அதை அடித்தே கொல்கிறான். இந்த கணவு ஒரு வகை குறியீடு. ஸ்விட்ரிகைலோவ் என்ற கதாபாத்திரம் ரஸ்கோல்நிகோவின் கொலை செயலை புரிந்து கொள்ள மேலும் உதவுகிறது. ஸ்விட்ரிகைலோவ் மார்ஃபா பெத்ரோவ்னா என்ற பெண்மனியின் கணவர்.கடனில் சிக்கி கடனாளிக்களுக்கான சிறையில் இருக்கும் ஸ்விட்ரிகைலோவை மார்ஃபா திருமணம் செய்து கொள்கிறாள். அவன் ஒரு பதினைந்து வயது சிறுமியின் தற்கொலைக்கு காரணமாக இருக்கிறான்.அந்த கொலையில் ஸ்விட்ரிகைலோவ் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க மார்ஃபா பணம் தந்து சமாளிக்கிறாள். அதைப்போல அவன் வீட்டின் வேலைக்காரனாக பிலிப் என்பவனின் தற்கொலைக்கும் அவன் காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.இறுதியில் மார்ஃபாவின் மரணத்திற்கும் அவனே காரணமாக இருக்கிறான். அவன் ரஸ்கோல்நிகோவின் தங்கை துனியா அவர்கள் வீட்டில் வேலை செய்யும் போது அவளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறான்.ஸ்விட்ரிகைலோவிடம் ரஸ்கோல்நிகோவ் உரையாடும் போது பெண்களால் தனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்கிற போது அதைத்தான எதன் பொருட்டு நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்கிறான்.ஆக ரஸ்கோல்நிகோவின் கனவில் வருபவன் தன் மகிழ்ச்சிக்காக குதிரையை கொலை செய்வது போல , ஸ்விட்ரிகைலோவ் தனக்கு பெண்கள் மீதுள்ள மையத்தின் காரணமாக தான் செய்த எந்த செயலுக்கும் குற்றவுணர்வு கொள்ளாமல் இருப்பது போல,ரஸ்கோல்நிகோவின் கொலையும் அமைகிறது. அவனும் தன் இருப்பின் நிறைவுக்காகவே அந்த கொலையை செய்கிறான்.

கொலைக்கு முன்னால் ஒரு மதுவகத்தில் ரஸ்கோல்நிகோவ் ஏதேர்ச்சையாக மர்மலதோவ் என்பவனை சந்திக்கிறான். அவன் மூலம் சோனியா என்ற அவனது பெண்ணை பற்றி தெரிந்து கொள்கிறான்.கொலை செய்த பின் தனக்குள் நடக்கும் போராட்டங்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் காவலர்களிடம் சென்று சொல்லிவிடலாம் என்று அவன் முடிவு செய்யும் போது மர்மலதோவ் ஒரு வண்டியில் சிக்கி இறந்து போகிறான். அவனை அவன் வீட்டிற்கு எடுத்து செல்கிறான்.அப்போது அங்கு சோனியாவை சந்திக்கிறான். பிறகு தான் ஏன் கொலை செய்தேன் என்பதை சோனியாவிடம் சொல்ல முடிவு செய்கிறான்.உண்மையில் அவன் தான் ஏன் கொலை செய்தேன் என்பதை கொலை செய்வதற்கு முன்னே அவளிட்ம்தான் சொல்ல வேண்டும் என மதுவகத்தில் சோனியாவை பற்றி மர்மலதோவ் சொல்லிய போதே முடிவு செய்ததாக சொல்கிறான். மர்மலதோவ் இறந்த பின் அவளது அறைக்கு செல்லும் ரஸ்கோல்நிகோவ் அவன் ஏன் கொலை செய்தான் என சொல்கிறான்.நான் நெப்போலியனாக விரும்பினேன்.ஆகவே நான் கொலை செய்தேன் என்கிறான். அதைக் கேட்கும் சோனியா உடனடியாக நாற்சந்திக்கு சென்று மானிட குலத்திற்குமுன் மண்டியிட்டு நான் ஒரு கொலைகாரன் என்று பிரகடனம் செய் என்று அழுகிறாள்.

இந்த கொலை வழக்கை விசாரிக்கும் பெர்போரி பெட்ரோவிச் ரஸ்கோல்நிகோவ்தான் கொலை செய்தான் என்பதை கண்டுகொள்கிறான்.ஆனால் அதை நிரூபிக்க அவனிடம் எந்த ஆதாரங்களும் இல்லை. அவன் இறுதியில் ரஸ்கோல்நிகோவிடம் பேசும் போது சொல்கிறான் குற்றம் செய்தததை ஒப்புக்கொள்.அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்.நீ எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் இருக்கிறாய்.உனக்கான நம்பிக்கையை கண்டுகொள். அதன்மூலம் நீ உயிர் வாழ்வாய்.அந்த நம்பிக்கை துயரத்தை ஏற்றுக்கொளவதாக இருக்கலாம் என்கிறான்.

சோனியா ரஸ்கோல்நிகோவிடம் துயரத்தை ஏற்றுக்கொள்ள சொல்கிறான்.ரஸ்கோல்நிகோவ் நாற்சந்தியில் மனித குலத்திற்கு முன் மண்டியிட்டு நான் கொலைக்காரன் என்று சொல்கிறான் .இறுதியில் காவலர்களிடம் சென்று குற்றத்தை ஒப்புக்கொள்கிறான்.

இதற்கு முன் அதிமனிதர்கள் பல செயல்களை செய்திருக்கிறார்கள்.அவை சட்டத்திற்கும் அறத்திற்கும் மீறிய செயலாகவே இருந்திருக்கின்றன.தானும் எதற்கும் உதவாத ஒரு கிழட்டு பெண்ணையே கொலை செய்தேன்.ஆனால் என்னால் அதை தாண்டிச் செல்ல முடியவில்லை.ஏனேனில் நான் அதிமனிதன் இல்லை. ஆம் நான் எல்லோரும் பிற்காலத்தில் போற்றக்கூடிய புரவலராக மாற முடியவில்லை.நான் நெப்போலியன் இல்லை.எளிய மனிதன் என்பதை கண்டுகொள்கிறான்.ஆனால் நாவலில் இறுதி வரை அந்த கோட்பாடை தவறு என்று ரஸ்கோல்நிகோவ் சொல்வதில்லை.
எவ்வித நம்பிக்கையும் இல்லாமல் இருப்பவன் இறுதியில் துயரத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் வாழ்வை சந்திக்கிறான்.


குற்றமும் தண்டனையும் நாவல் - பியோதர் தஸ்தாவெய்ஸ்கி.




No comments: