ஜான் மரணமடைந்த செய்தி எனக்குத் தெரிவிக்கப்பட்டது. எண்பது வயதில் இறப்பது அத்தனை வருத்தம் தரும் செய்தி அல்ல. ஆனால் ஜானின் மரணம் எனக்குத் தொந்தரவு அளித்தது.அவனது இன்மைச்செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.அவனது பள்ளிப் பருவம் ,அவனது அரசியல் பயணம் , அவனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பலரும் பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு நிறைய அழைப்புகள். நான் அவனது இள வயது நண்பன்.
நான் அவனை முதல் முறை சந்தித்தது இன்றும் நன்றாக நினைவில் உள்ளது.ஐம்பது வருடங்கள் இருக்கும்.மறுநாள் நிகழவிருந்த போராட்டத்திற்காக கட்சி கொடிகளையும் பதாகைகளையும் வண்டியில் ஏற்ற நான் அலுவலகம் சென்றேன்.அவற்றை என் வீட்டுக்கு கொண்டு செல்ல முடிவு எடுத்தேன்.காலை கட்சித் தோழர்கள் வீட்டின் அருகிலிருந்த சர்க்கிளில் கூடும் போது அதை அவர்களுக்கு கொடுக்க முடிவு செய்திருந்தோம்.
வண்டி கிளம்பிப் போன பின்னர் நான் சிகரெட் எடுத்து பற்ற வைத்து அருகிலிருந்த மைதானத்தில் சென்று அமர்ந்தேன்.தை மாதம் தொடங்கிய பின்னரும் குளிர் குறையவில்லை.நான் எனது சால்வையை இறுகப் போர்த்திக்கொண்டேன்.மைதானத்தில் பார்வையாளர்கள் அமரும் கேலரியில் யாரோ படுத்திருப்பது போலத் தோன்றியது.பெரிய ஜமுக்காளத்தை சுருட்டி வைத்திருப்பார்களோ என்று கூட நினைத்தேன்.ஆறடிக்கும் நீளமான உருவம்.நான் அருகில் சென்று அது ஜமுக்காளமா அல்லது ஆளா என்பதை உறுதி செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.
அருகில் சென்ற போது அது ஒரு மனிதன் தான் என்பது உறுதியானது.கனமான போர்வை ஒன்றை போர்த்தியவாறு அவன் உறங்கிக் கொண்டிருந்தான்.இவன் இந்த நகரத்து ஆசாமி அல்ல என்பது எனக்குப் புரிந்துவிட்டது.இந்த நகரத்து பிச்சைகாரர்கள், பொறுக்கிகள் கூட இந்தக் குளிரில் இப்படியான வெட்டவெளியில் படுக்கத் துணிய மாட்டர்கள்.அவன் தலைக்குத் தனது ஜோல்னா பையை வைத்திருந்தான்.கீழே ஒரு வஸ்திரத்தை விரித்திருந்தான்.மூக்குக் கண்ணாடியோட தூங்கிக்கொண்டிருந்தான்.நான் அவன் தலைமாட்டின் அருகே உட்கார்ந்தேன்.அவனது தோள்பட்டையில் லேசாக தட்டினேன்.அவன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான்.மெல்ல அவனைப் பற்றி உலுக்கிய போது எழுந்து கொண்டான்.என்னைப் பார்த்ததும் சற்று திடுக்கிட்டான்.அவனது இடது கையை கொண்டு தலையை சரி செய்து மூக்குக் கண்ணாடியை கழற்றி மாட்டினான்.
“யார் நீங்கள்”
“நான் ஜான்.”
“இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்.”
“தூங்கிக் கொண்டிருக்கிறேன்”
நான் சிரித்தேன்.அவனும் சிரித்தான்.அவனை எங்கோ பார்த்திருப்பதை சொன்னேன்.என் பெயர் பரதன் தானே என்று கேட்டான்.உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.அலுவலகம் மூடியிருந்தது.நான் நகருக்கு புதிது. எங்கு செல்வது என்று தெரியவில்லை.இங்கு வந்து சற்று கண் அயர்ந்தேன்.அப்படியே உறங்கிவிட்டேன் என்றான்.
அவனை என் இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு என் வீட்டுக்குச் சென்றேன்.பத்மா அவனுக்கு ஆலூ பரோட்டாவும் கெட்டித் தயிரும் ஊறுகாயும் எடுத்து வந்தாள்.உண்டான்.மேல் மாடியிலிருந்த ஒரு படுக்கை அறைக்கு அவனை அழைத்துச் சென்றேன். இங்கே உறங்கிக் கொள்ளலாம்.காற்றாடி ஓடாது என்றேன்.கம்பளி கொடுத்தேன்.இந்தக் குளிரில் காற்றாடி அத்தனை முக்கியமானதல்ல.மற்றவை காலையில் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லி இறங்கி வந்தேன்.பத்மா உறங்கியிருந்தாள்.
மறுநாள் காலை நாங்கள் சர்க்கிளிலிருந்து பிஎம்சி கட்டடம் வரை செல்லத் திட்டமிட்டிருந்தோம்.கார்ப்பரேஷனில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் கோரி கோஷம் எழுப்பியவாறு நாங்கள் சென்றோம்.ஜான் குறித்து உண்மையில் நான் மறந்து விட்டேன்.என் மனைவி பத்மா கூட பள்ளிக்குச் சென்று விட்டாள்.வீட்டில் யாருமில்லை.மேல்மாடிக்கு தனியாக செல்லும் படிக்கட்டு உண்டு.எங்கள் தொழிற்சங்கத்திற்கு இன்னும் மூன்று தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்திருந்தன.துப்புரவு பணியாளர்கள் பணி செய்யாமல் இருந்தால் நகரம் முடங்கும்.போராட்டத்தை தொடங்கி இரண்டு கீலோ மீட்டர் கூட நாங்கள் செல்லவில்லை.அனைவரும் கைது செய்யப்பட்டோம்.அருகிலிருந்த திருமண அரங்கில் எங்களை கொண்டு போய் அமர்த்தினர்.கார்ப்பரேஷன் கமிஷனர் , மேயர் வந்து பேசினார்கள்.எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
மற்ற தொழிற்சங்கங்கள் போராட்டத்திலிருந்து விலகிக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்தன.அன்றே துப்புரவு பணியாளர்கள் போராட்டம் கைவிடப்பட்டது.மாலை நாங்கள் விடுவிக்கப்பட்டோம்.வீடு திரும்பினோம்.இது இவ்வாறு தான் முடியும் என்று நாங்கள் அறிந்திருந்தோம்.இல்லம் வந்து குளித்து உடை மாற்றி நான் சற்று கண் அயர்ந்தேன்.வெளியில் ஒருவர் கம்பளி விற்றுக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.அப்போது தான் ஜான் நினைவு வந்து மேல் மாடிக்குச் சென்றேன்.அங்கே அவனைக் காணவில்லை.பத்மாவிடம் கேட்ட போது அவளுக்கும் தெரியவில்லை.
அருகிலிருந்த பெட்டிக்கடையில் சிகரேட் வாங்கச் சென்றேன். தெரு முக்கில் ஜான் ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டு அங்கிருந்த நான்கைத்து பேருடன் கதைத்துக்கொண்டிருந்தான். உடைந்த ஹிந்தியில் அவன் பேசுவது வேடிக்கையாக இருந்தது.என்னைப் பார்த்ததும் எழுந்து வந்தான்.
“சிகரெட்” ஒன்று என்று சொல்லி தனக்கும் வாங்கிக்கொண்டான். அவர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு என்னோடு திரும்பினான்.பேச்சு போராட்டம் பற்றித் திரும்பியது.போரட்டத்தின் தோல்வி பற்றி நான் புலம்பத் தொடங்கிய போது அவன் சொன்னான்.போராட்டங்கள் நதி போலத் தங்களின் பாதைகளை எடுத்துக் கொள்கின்றன.போராட்டங்களை எப்போது நிறுத்த வேண்டும் என்ற புரிதல் நமக்கு இருக்கு வேண்டும்.துப்புரவு பணியாளர்களுக்கான போராட்டத்தை கைவிட்டது நல்ல முடிவு தான்.அதற்கான தருணம் இன்னும் கூடிவரவில்லை.அது வரும் போது நமக்கு காற்று சமிக்ஞை அளிக்கும் என்றான்.கைதுகள் போரட்டங்களை வலுவிலக்கச் செய்யும்.வலு பெற வைக்கவும் செய்யும்.அவன் பேசியபடியே வந்தான்.அவனை நண்பனாக்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.
நாங்கள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் கட்சி நாளிதழை கொண்டு வந்தோம். ஆங்கில நாளிதழின் துணை ஆசிரியராக பணிபுரியத் தொடங்கினான் ஜான்.அவன் தனக்கென்று தனியாக அறை எடுத்துக் கொண்டு தங்கினான்.நாங்கள் அநேகமாக தினமும் சந்தித்துக்கொண்டோம்.ஒரு முறை அவனது அறைக்குச் சென்ற போது அங்கே இரைந்து கிடந்த புத்தகங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.பாதி திறந்து கிடந்த புத்தகங்கள் ஏதேதோ சிதறல்களுடன் கிடந்த காகிதக் குறிப்புகள் என்று அந்த அறை எனக்கு குழப்பமாக இருந்தது.அவனிடம் இது குறித்து கேட்டேன்.என் அறை சிதறிக்கிடக்கலாம் , ஆனால் என் சிந்தனையில் எல்லாம் ஒழுங்காகத்தான் இருக்கிறது என்றான்.ஆங்கிலத்தில் , தெலுங்கில், ஹிந்தியில் என்று பல்வேறு மொழிகளில் படித்தான்.சில மாதங்களில் ஹிந்தியில் நன்கு உரையாடினான்.அரசியல் , சமூகவியல் , தத்துவம் ஆகிய துறைகளின் மீது ஆழமான வாசிப்பை கொண்டிருந்தான். புனைவுகளை எப்போதாவது வாசிப்பான்.துப்பறிவு கதைகளின் மீது அதிக நாட்டம் கொண்டிருந்தான்.காமிக்ஸ் கதைகளை பயணங்களில் படிப்பதை பார்த்திருக்கிறேன்.ஒரு முறை எங்கள் கட்சி அலுவலகத்திற்கு வெளியே ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டிக்கொண்டிருந்தான்.அவன் அந்தப் பெண்ணின் கணவன் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.குடிக்க பணம் கொடுக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தான்.கூட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.ஜானும் நானும் அப்போது தான் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தோம். ஜான் அந்த ஆளின் அருகில் சென்றான்.அவன் ஜானை நோக்கி கத்தியை திருப்பினான்.ஜான் ஒரு கையால் அவனது மணிக்கட்டை அழுத்தி பிடித்துக்கொண்டு மறுகையால் அவன் மார்பைத் தட்டினான்.உண்மையில் அது ஏதோ கதவைத் தட்டுவது போலத்தான் இருந்தது.ஆனால் ஆச்சரியமாக அவன் தூரச் சென்று விழுந்தான்.கத்தி அவன் கைகளிலிருந்து கீழே விழுத்தது.அதை எடுத்து சாக்கடையில் எறிந்து விட்டு அந்தப் பெண்ணை பார்த்து அவன் இனி மேல் தொந்தரவு செய்தால் இங்கு வந்து சொல்லவும் என்று கூறிவிட்டு என்னுடன் வந்துவிட்டான்.அடிவாங்கியவன் நிறைய நேரம் அங்கிருந்த மரத்தடியில் மார்பை பிடித்தவாறு அமர்ந்திருந்தான்.
ஜான் சிறுவயதில் குங்பூ கற்றான்.முழுமையாக கற்றான்.ஜான் தற்காப்புக்கலைகளின் அவசியத்தை தொடர்ந்து சொல்வான்.என் வரையில் தற்காப்புகலைகள் உடல் அளவிலான தியான முறை என்றான்.ஜான் நல்ல உயரம்.கலைந்த சிகையோடே எப்போதும் இருந்தான்.அவன் ஒரு போதும் தன் உடைகளை இஸ்திரி செய்து உடுத்திக்கொண்டதில்லை.அவன் மெல்ல சட்டை ஃபேண்ட் அணிவதிலிருந்து ஜிப்பா பைஜாமாவிற்கு மாறினான்.அவன் துணிகளை அவனே துவைத்தான்.சமைத்துக்கொண்டான்.அவனுடைய தந்தையும் தாயும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள்.தாயார் ஹிந்து.தமிழர்.சென்னையில் கல்லூரியில் ஒன்றாக படித்த போது திருமணம் செய்து கொண்டார்கள்.தந்தை கிறிஸ்தவர்.ஐதராபாத் நகரத்தை சேர்ந்தவர்.திருமணத்திற்கு பின்னர் ஜானின் தந்தை வீட்டில் அவரின் தாயார் மரியாதையுடன் நடத்தப்படவில்லை.
இதனால் அவர் பிரிந்து சென்னைக்குச் சென்று வேலை செய்து பிள்ளைகளை வளர்த்தார். ஜான் ஓரளவு தமிழ் பேசுவான். ஆனால் அவன் தனது தாய்மொழி என்று தெலுங்கைத்தான் சொல்லிக்கொண்டான். அவனுக்கு ஐதராபாத் நகரத்தின் மீது ஆழமான வாஞ்சை உண்டு.இரயிலில் ஊருக்குச் திரும்பும் போது பெரும் பாறைக் கற்களை பார்க்கும் போதே வீட்டுக்கு சென்று விட்டதாக தோன்றும் என்பான்.சென்னையில் சில காலம் படித்து பின்னர் ஐதராபாத்தில் படிப்பைத் தொடர்ந்தான்.
உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது தான் அவனுக்கு அரசியல் அறிமுகமானது. அவன் ஒரு இடதுசாரி அமைப்பை உருவாக்கினான்.வியட்நாம் போர், கறுப்பின மக்களின் எழுச்சி , பிரான்ஸில் மாணவர் போராட்டம் , இந்தியாவில் நகஸல்பாரி அமைப்புகளின் துவக்கம், கட்சி சார்ந்த இடதுசாரி அமைப்புகளின் மீதிருந்த அதிருப்தி, வேலையின்மை , வறுமை என்று அன்று இளைஞர்களை வதைத்துக் கொண்டிருந்தன வெம்மையும் வாழ்வும்.
கல்லூரித் தேர்தலில் அவனுக்கும் வலதுசாரி அமைப்புகளுக்கும் ஏற்பட்ட சண்டையில் அவன் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டான்.அப்போது அவன் இந்தியாவிற்கு கம்யூனிஸம் சரியான பாதை அல்ல என்ற முடிவுக்கு வந்திருந்தான்.அவன் லோஹியாவை ஏற்றான்.ஆனால் சோஷியலிசம் இந்தியாவில் இறந்து பிறந்த சவலைக் குழந்தை என்றும் என்னிடம் சொல்லியிருக்கிறான்.
சோஷியலிசக் கட்சிகள் காங்கிரஸின் அங்கமாக இருந்து பின்னர் காங்கிரஸிலிருந்து வெளியேறி தனி அடையாளத்தை பெற முயன்று பின்னர் காங்கிரஸிடமே இணைந்து விடலாமா என்று சிந்தித்து இறுதியில் ஜனதா சங்கமத்தில் முடிவு கொண்டது என்று அதன் சுருக்கமான வரலாற்றை சொல்லிச் சிரிப்பான்.ஜான் பேசும் ஆங்கிலம் கேட்பதற்கு சுவராசியமாக இருக்கும்.அவன் கூர்மையானவன்.வார்த்தைகளை கோர்த்து பேசுவான்.அவனது ஆங்கிலம் அவனது சிந்தனையை மேலும் கூர்மையாக்கியது.
பெண்கள் அவன் வாழ்வில் வந்து கொண்டே இருந்தார்கள்.பல பெண்கள் அவனிடம் சரணாகதி என்று விழுந்து கிடந்தார்கள்.அவன் யாரையும் காதலிக்கவில்லை.யாரையும் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளிக்கவில்லை.யாரையும் ஏமாற்றவில்லை.அவன் மீது காதலை பொழிந்தவர்களிடம் பரிவுடன் பேசி அவர்களைப் புண்படுத்தாமல் வழியனுப்பி வைத்தான். சில பெண்களுடன் அவன் உறவில் இருந்தான் என்பதும் உண்மை தான்.அவை எதுவும் நிரந்தரமான உறவுகள் அல்ல.அந்த உறவுகள் உரையாடலின் பொருட்டு உருவாகின.இனி பேசிக்கொள்ள ஒன்றுமில்லை என்றான போது அவை முடிவுக்கு வந்தன.அந்த உறவுகளுக்குப் பின்னர் அந்தப் பெண்களுக்கு ஜான் மீது புகார் ஏதும் இல்லை.ஏனேனில் அங்கே எந்தச் சுரண்டலும் இல்லை.எப்போதும் எங்கும் கொடுக்கும் நிலையிலேயே அவன் இருந்தான்.யாரிடமும் அன்பையும் , உடலையும் , பணத்தையும் அவன் யாசிக்கவில்லை.அவன் எந்தப் பெண்ணின் இருப்புக்காகவும் ஏங்கியதில்லை.அதே நேரத்தில் அவன் பெண்களுடன் உரையாடுவதை விரும்பினான் என்பதும் மெய்யே.
அவன் தன் முப்பதுகளின் துவக்கத்தில் திருமணம் செய்து கொண்டான்.அவன் வாழ்வின் முதல் சறுக்கல் அங்கு தான் தொடங்கியது என்று நினைக்கிறேன்.ஜான் அதன் பின் தன் களங்கமற்ற சிரிப்பைத் தொலைத்தான்.தனித்து அமர்ந்திருக்கையில் அவன் முகம் இறுகுவதை இருண்மை கொள்வதை பார்த்திருக்கிறேன்.நாங்கள் ஒரு நாள் கடற்கரையில் அமர்ந்திருந்த போது அவன் என்னிடம் சொன்னான் “பரதன் , உனக்குத் தெரியுமா, உனக்கு சாத்தியப்பட்டுள்ள வாழ்க்கை மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டது.காரணம் ஒன்று தான். உன் மனைவி பத்மா. எத்தனை அற்புதமான பெண் அவர்.அவர் ஒரு போதும் உன்னை இகழ்ந்து பேசி புறம் பேசி நகைத்து பேசி நான் பார்த்ததில்லை.அவர் ஒவ்வொரு முறை பேசும் போதும் அதில் உன் மீதான பிரமிப்பை அன்பை நட்பை பிரமையை பரிவை நான் பார்க்கிறேன்.அவர் உன் மீது கொண்டுள்ள அன்புக்கு நீ உன் அரசியல் வாழ்க்கையில் உண்மையானவனாக இருப்பது தான் முக்கிய காரணம்.நீ உண்மையில் மக்கள் நலனில் அக்கறை கொண்டவன் , தனிப்பட்ட வாழ்வில் நேர்மையானவன் என்பதே அந்த அன்பின் முதல் துளி என்று நான் கருதுகிறேன்.அவர் மனதில் நீ மிகப்பெரிய ஆகிருதி.உன்னை அவர் எப்போதும் ரசித்துக்கொண்டிருக்கிறார்.ஒரு நாள் உன் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.நீ வீட்டிலில்லை.பத்மாவோடு எதையோ பேசிக்கொண்டிருந்தேன்.பிறகு பேச்சு உன்னைச் சுற்றி வந்தது.அவர் நீ காலை படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்து பேப்பர் படிக்க அமர்வதை மிமிக் செய்து காட்டினார்.நான் வெடித்து சிரித்தேன்.அப்படியே நீ செய்வது போலவே இருந்தது.அசலாக உன் உடல்மொழியை கொண்டு வந்திருந்தார்.கை கால்களைக் கூட உன்னைப் போலவே அசைத்தார்.நான் அதிசயித்து போனேன்.ஒரு பெண்ணால் ஒரு ஆணை இந்தளவு காதலிக்க இயலுமா என்று எனக்கு உண்மையில் புரியவில்லை.எந்தளவு உன்னை அவர் உள்வாங்கி இருக்கிறார்.ஒரு ஆணுக்கு குழந்தைகள் , பெற்றோர் , சுற்றோர், நண்பர்கள் எல்லோரும் முக்கியம் தான்.ஆனால் மனைவி இருக்கிறாளே அவள் தான் முதன்மையானவள்.அவளில் தான் உண்மையில் அவனது படிமம் பொதிந்திருக்கிறது.ஒரு பெண்ணின் மார்பில் முகம் பொதித்து உறங்கும் போதும் பேரன்பின் கரங்கள் அவனை தழுவிக் கொள்ளும் போதும் அவன் மறுபடியும் கருவறைக்குள் செல்வது போன்ற பாதுகாப்பை அடைகிறான்.அவனது கர்வம் முழுக்க இல்லாமல் ஆகிறது.அல்லது அவனது கர்வம் முழுமை பெறுகிறது.மிட்டாய் சாப்பிடும் சிறு குழந்தையின் ஓர்மையை அவனுக்கு அவள் அளிக்கிறாள்.அவள் அவனை வாரிச்சுருட்டி ஒக்கலித்துக்கொள்கிறான்.உன் வாழ்க்கை அந்த வகையில் ஒளி நிரம்பியது” என்று சொன்னபடியே இருந்தான்.
உண்மையில் பத்மா என் மீது கொண்டிருந்த காதலை நான் அத்தனை தீவிரமாக அப்போது தான் உணர்ந்தேன். பத்மா என்னைக் காதலித்து தன் வீட்டைத் துறந்து திருமணம் செய்து கொண்டாள்.பத்மா ஒரு முறை ஒரே ஒரு முறை கூட என்னை காயப்படுத்தும் வகையில் பேசியதில்லை.நிறைய சலித்துக்கொள்வாள்.ஏனேனில் நிறைய அன்றாட வேலைகளை அவள் தான் செய்வாள்.எங்கள் மகன் பள்ளிக்குச் செல்வதை நான் அதிகம் பார்த்ததில்லை.அனைத்தையும் அவள் தான் பார்த்துக்கொண்டாள்.ஆனால் என்னை எதற்கும் ஏசியதில்லை.இரவில் நான் வீடு திரும்பிய பின்னர் அவள் எழுந்து ஐந்து பத்து நிமிடம் பேசிவிட்டுத்தான் உறங்கச் செல்வாள்.ஜான் சொல்வதை நான் ஏற்றேன்.நான் அதிர்ஷ்டக்காரன் தான்.
இதன் மறு பொருள் ஜான் துரதரிஷ்டசாலி.அவன் வாழ்வில் வந்தப் பெண் வெண்ணலா.தெலுங்கப் பெண்.ஜான் சில காலம் தான் அலுவலகப் பணியிலிருந்தான்.பின்னர் தொழிற்சங்கங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான்.துப்புரவு பணியாளர்களின் வேலை நிறுத்தத்தை அவன் முழுமையாக நிகழ்த்திக்காட்டினான்.பெருநகரத்தை முடக்கினான்.பேச்சுவார்த்தையில் அவனுக்கு வெற்றி கிடைத்தது.துப்புரவு வேலை செய்பவர்களை முழு நேரப் பணியாளர்களாக ஏற்றுக்கொள்வதாக கார்ப்பரேஷன் ஆணை பிறப்பித்தது.அவன் கூட்டங்களில் பேசும் போது உண்மையில் அங்கு தீ பற்றிக் கொள்ளும். இந்தப் போராட்டங்களின் பின் அவன் பிரபலம் அடைந்தான்.ஒரு முறை வெள்ள நிவாரணப் பணிக்காக நாங்கள் சென்றிருந்த போதுதான் அவன் அவளைச் சந்தித்தான்.அகன்ற நெற்றி.தாடை நன்றாக மடிந்திருந்தது.உதட்டின் கீழ் அழுத்தமான கோடு.அது அவளை அழகாகக் காட்டியது.கதுப்புக் கன்னங்கள்.கண்ணாடி அணிந்திருந்தாள்.சற்று குள்ளமாக தெரிந்தாள்.மாநிறம்.குட்டையான கைகள்.ஆரோக்கியமான தேகம்.சலசலவென்று பேசிக்கொண்டே இருந்தாள்.அவள் கல்லூரி படிப்பை முடித்து வேலைக்காக காத்திருந்தாள்.வெள்ள நிவாரணப் பணிக்காக ஒரு என்ஜிஓவில் இணைந்து பணிபுரிந்தாள்.அவனைப் புகழ்ந்து கொண்டே இருந்தாள்.ஒரு பெண் முதல் சந்திப்பிலேயே ஒரு ஆணிடம் எப்படி இவ்வாறு நடந்து கொள்ள முடியும் என்று எனக்கு குழப்பாக இருந்தது.ஒரு வேளை அவனை அவள் வெகுவாக காதலிக்கிறாளோ என்று கூடத் தோன்றியது.அதெப்படி முதல் சந்திப்பிலேயே காதல் தோன்றும் என்பதும் எனக்கு விளங்கவில்லை.ஏனோ அவளது முகத்தை பார்க்கும் போது எனக்குச் சர்ப்பம் நினைவுக்கு வந்தது.
ஜான் அந்தப் பெண்ணை பற்றி என்னிடம் பேசினான்.அவளை பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை.ஆனால் ஏதோ சுழலில் சிக்கிக்கொண்டது போல உணர்கிறேன் என்றான்.அவன் ஐதராபாத் சென்று திரும்பி வந்த போது அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று வந்ததாகவும் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறினான்.எனக்கு அந்தப் பெண்ணை பிடிக்கவில்லை.ஆனால் நான் மறுப்பேதும் சொல்லவில்லை.
திருமணத் தேவைகளுக்கு ஒரு நாள் கூட ஜான் செலவிடவில்லை.வெண்ணலாவே அனைத்து ஏற்பாடுகளையும் செய்தாள்.பொருட்கள் வாங்கினாள்.ஜானும் வெண்ணலாவும் வீட்டுக்கு வந்து எங்களைத் திருமணத்திற்கு அழைத்தார்கள்.அப்போது வெண்ணலா ஒளிர்ந்து கொண்டிருந்தாள்.திருமணம் என்றால் ஏன் பெண்களின் முகங்கள் அத்தனை பொலிவு கொள்கின்றன என்பது இன்று வரை எனக்கு புரிந்ததே இல்லை.
ஒரு மழைநாளில் அவர்களுக்கு திருமணம் நிகழ்ந்தது.திருமணத்திற்கு வாங்கிய உடைகள் மழையில் முழுக்க நனைந்துவிட்டதால் அவர்கள் எளிய உடைகளில் வரவேற்புக்கு நின்றார்கள்.சடங்குகள் ஏதும் அற்ற எளிய திருமணம்.அன்று அவன் நிறைய சிரித்தான்.அவன் சிரித்த கடைசி நாள்.வெண்ணலாவின் பிரச்சனை அவளால் எதையும் கொடுக்க இயலாது என்பது தான்.அவள் அவனை உண்ண முயன்றாள்.அவனை , அவனது கனவுகளை.ஜான் மிகவும் சுதந்திரமான மன அமைப்பை கொண்டவன்.அவளின் பதின் வயது சிக்கல்கள் , தனக்கென்று ஒரு பாதையை அமைத்துக்கொள்ள இயலாததின் வெறுப்பு என்று அனைத்தையும் ஜான் மீது கொட்டினாள்.அவர்களுக்கு குழந்தை பிறந்தது.அதற்கு அவர்கள் கோபாலன் என்று பெயர் வைத்தார்கள்.ஜானுக்கு கர்நாடகத்தின் கோபால கெளடா மீது மிகுந்த மதிப்பு இருந்தது.அவனுக்கு ஏ.கே.கோபாலனும் முக்கியமானவர் தான்.இந்தியன் காபி ஹவுஸின் உருவாக்கம் அவனுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்த நிகழ்வு.ஏ.கே.கோபாலனுக்கும் மதராஸ் மாநிலத்தற்குமான வழக்கு சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்மையான மனித உரிமைகள் வழக்கு என்பான்.
குழந்தை பிறந்த பின்னர் அவள் ஐதராபாத் கிளம்பிச் சென்றாள். அதன் பின்னர் ஜான் பெரும்பாலும் தனியாகத்தான் இருந்தான்.அவனுள் ஏதோ ஒன்று உடைந்து போனது.அது அவனது அறியாமையா, குழந்தமையா என்று எனக்குத் தெரியவில்லை.ஆனால் அவனுக்குள் ஒரு சலிப்பு உண்டானது.அதற்கு முன்னர் அந்த சலிப்பு அவனிடம் இருந்ததில்லை.புரட்சிகளுக்கு தேவைப்படுவது இரண்டே இரண்டு தான்.குழந்தைமையும் , பிடிவாதமும்.இரண்டையும் ஜான் திருமணத்திற்கு பின்னர் இழந்தான்.அல்லது இழக்கத் தொடங்கினான்.
எமர்ஜென்சியின் போது நாங்கள் கைது செய்யப் பட்டோம்.அப்போது நான் மாநிலத்தின் பொதுச் செயலாளராக இருந்தேன்.ஜான் எங்கள் கட்சியிலிருந்து விலகி ஒரு சோஷியலிச கட்சியைத் தொடங்கியிருந்தான்.அவன் பாராளுமன்றத்தின் உறுப்பினராக நின்று வெற்றி பெற்றிருந்தான்.சிறையில் நாங்கள் இருவரும் ஒரே அறையில் தான் இருந்தோம்.அவனது மனைவி அப்போது அவனுக்கு நிறைய கடிதங்கள் எழுதினாள்.அவனும் பதில் எழுதுவான்.உண்மையில் அவன் வெளியே வர வேண்டும் என்று அவள் போராடினாள்.உடனிருக்கும் போது விலகிச் சென்றாள்.சந்தித்து கொள்ள இயலாத போது அவனுக்கு ஏங்கினாள்.சாத்தியப்படும் போது ஜான் சமைத்தான்.ஜான் நன்றாகச் சமைப்பான்.கைது செய்யப்பட்ட புதிதில் நான் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டேன்.சிறை உணவு எனக்கு உவக்கவில்லை.அவன் இருப்பு எனக்கு ஆறுதலாக இருந்தது.அவன் என்னை நன்றாக பார்த்துக்கொண்டான்.
நாங்கள் சிறையில் நிறையப் படித்தோம்.அலெக்சாண்ட்ரா கொலேந்தாய் புத்தகத்தை அப்போது நான் வாசித்தேன்.கிராம்சியை முழுமையாக கற்றோம்.அப்போது ஜான் சொன்னது எனக்கு நினைவில் இருக்கிறது.செவ்வியல் இடதுசாரி சிந்தனையில் நாம் இயங்கியல் பொருள்முதல்வாதம் என்ற பதத்தை அடிக்கடி பயன்படுத்துகிறோம்.இது சமூகத்தை பற்றிய புரிதலை அளிப்பதற்காக பயன்படுத்துகிறோம்.அதாவது மேற்கட்டுமானம் , அடித்தளம் என்று பிரித்து இவைகளுக்கு மத்தியிலான இயங்கியலைப் பற்றி பேசுகிறோம்.ஆனால் இதை நாம் மிக எளிமையாகச் சொல்ல முடியும்.சமூகம் என்பது மனிதக் கூட்டம்.அதாவது பல மனித உடல்கள்.அப்படியென்றால் நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த மேற்கட்டுமானமும் அடித்தளமும் உண்மையில் சமூகத்தின் அகமும் புறமும் தானே என்றான்.அகம் புறத்தை பாதிக்கிறது, புறம் அகத்தை பாதிக்கிறது.புறம் என்பது பொருள் உற்பத்தி நிகழும் தளம்.அகம் என்பது பொளுள் உற்பத்திக்கான விழுமியங்களை உருவாக்கில் கருத்தியல் பூமி.அவ்வளவுதானே என்றான்.நான் புன்னகைத்தேன்.ஜான் தேர்ந்த சிந்தனையாளன்.
ஜான் ஒரு போதும் தன் வலிகளை பகிர்ந்து கொண்டதில்லை.அவன் மிகவும் சலிப்புற்றால் அமைதியாக இருப்பான்.சிறையிலிருந்த போது சீட்டுக்கட்டு விளையாடுவது எங்களுக்கு சற்று இளைப்பாறலாக இருந்தது.சிறை தன்னளவில் ஒர் உலகம்.அங்கு முதல் முறை வந்த குற்றவாளிகள், தொடர் குற்றம் புரிந்தவர்கள் , குற்றமே செய்யாமல் வந்தவர்கள் என்று எண்ணற்றோர் இருந்தனர்.நான் சமூகப் பணியில் இருப்பவன்.ஒர் இடதுசாரி கட்சியின் மாநில பொதுச் செயலாளார்.ஆனால் சிறையிலிருந்த நாட்கள் எனக்கு நீதி என்றால் என்ன என்ற கேள்வியை கேட்க வைத்தது.
ஆடு மேய்த்து கொண்டிருந்தவன் நக்ஸல் என்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.தந்தையை கொன்றுவிட்டு மகனே கொன்றதாக மாற்றி அவனை சிறையில் அடைத்தார்கள்.எங்களைப் போன்ற அரசியல் கைதிகளை குற்றத்தின் பொருட்டு வந்தவர்கள் மதித்தார்கள்.அவர்களுக்கு மனுக்கள் எழுதித் தருவது , ஆலோசனைகள் வழங்குவது , சிறையிலிருந்து வெளியேற வழக்கறிஞர்களின் உதவியைப் பெறுவது, படிப்புக்கான பொருள் உதவியை அளிப்பது என்று நாங்கள் சில பணிகளைச் செய்து கொடுத்தோம்.சிறையிலிருந்தவர்கள் பட்ட பாடுகளுக்காக நாங்கள் போரட்டங்கள் நடத்தினோம்.உண்மையில் எமர்ஜென்சி முடிந்து நாங்கள் வெளியே வருவோம் என்ற எண்ணமே எங்களுக்கு இருக்கவில்லை.
சட்டென்று மூடுபணி விலகுவது போல ஒரு நாள் எமர்ஜென்சி முடிவுக்கு வந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டது.ஜான் தேர்தலில் போட்டியிட்டு மறுபடியும் பாராளுமன்றத்தின் உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டான்.டெல்லியில் அவனது வீடு எந்த பாதுகாப்பு விதிகளும் கொண்டதல்ல.யாரும் செல்லலாம், உதவி கோரலாம், அவனோடு பேசலாம், சண்டை செய்யலாம்.அவன் பின்னர் மத்திய அமைச்சரான போது கூட இதே போலத்தான் இருந்தான்.அவன் மாறவில்லை.அவன் முதல் முறை மத்திய அமைச்சராக வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட போது எனக்கு மிகச் சிறிய கையடக்க தட்டச்சுப்பொறியை வாங்கி வந்தான்.அதை எளிதில் எங்கும் எடுத்து செல்லலாம்.இந்தியாவில் சாதியும் வர்க்கமும் என்ற என் முதல் புத்தகத்தை அதில் தான் தட்டச்சு செய்தேன்.கணிப்பொறி பயன்படுத்த தொடங்கிய பின்னர் தான் அது என்னை விட்டுப் போனது.
நான் பொலீட்பீரோ உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அவனை டெல்லியில் அடிக்கடி சந்திந்தேன்.பாராளுமன்றத்தின் கேண்டீனில் மாலைகளில் சிற்றுண்டிகளும் தேநீரும் அருந்திக்கொண்டு பேசிக்கொண்டிருந்த நாட்கள் எங்கோ பல ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருப்பது போல தோன்றுகிறது.ஜான் காங்கிரஸ் மீதான எதிர்ப்பிலிருந்து தன் அரசியல் பாதையைத் துவக்கினான்.அறுபதுகளில் , ஏழுபதுகளில் இளைஞர்களாக இருந்த பலரும் அப்படியான பாதையைத்தான் தேர்ந்தார்கள்.ஆனால் ஜான் காங்கிரஸை முழுமையான வெறுத்தான்.தெலுங்கானாவில் நிலச்சுவான்தார்கள் பண்னையடிமைகளையும், விவசாயக் கூலிகளையும் நடத்திய விதத்தை எண்ணி குமறுவான்.அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு அந்தப் பெண்கள் சந்தித்த அவலங்களுக்கு நாம் எங்கு சென்று நீதி பெற போகிறோம் என்று ஒரு நாள் உக்கிரமாக பேசினான்.அத்தனை நிலச்சுவான்தார்களும் ரெட்டிகளும் ராவ்களும் தான்.ஜானும் ஒரு ரெட்டிதான்.தன் பெயருக்கு பின்னாலிருந்த ரெட்டியை நீக்கிவிட்டு ஜான் ஸ்ரீ ஆபிரகாம் என்று வைத்துக்கொண்டான்.ஸ்ரீமதி என்பது அவனது அண்ணையின் பெயர்.அவனது தந்தையின் பெயர் ஆபிரகாம் ரெட்டி.இருவரையும் தன் பெயருடன் இணைத்துக்கொண்டான்.ரெட்டிகளும் ராவ்களும் காங்கிரஸில் இருந்தார்கள்.வெறும் உறுப்பினர்களாக அல்ல.சட்டசபை உறுப்பினர்களாக , பாராளுமன்ற உறுப்பினர்களாக, மத்திய அமைச்சர்களாக , மாநில அமைச்சர்களாக.அதைப் பார்த்து வளர்ந்த ஜான் காங்கிரஸை வேரறுக்க வேண்டும் என்று சூழறைத்துக் கொண்டான்.இங்கே வறிய நிலையில் இருக்கும் மக்கள் விடியலை நோக்கி பயணிக்க காங்கிரஸ் தோற்க வேண்டும் என்று எண்ணினான்.
ஆனால் காங்கிரஸூக்கு மாற்றாக அவன் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஏற்கவில்லை.சோஷியலிசக் கட்சிகளே இந்தியாவிற்கு உகந்தது, வன்முறை அற்றது என்று சொல்வான்.பின்னர் சோஷியலிசக் கட்சிகள் ஜனதாவில் இணைந்து , பிரிந்து , மரணமடைந்தன.அவன் மறுபடி வேறொரு கட்சியைத் தொடங்கினான்.ஜனதா சங்கமத்தில் பயனடைந்த ஒரே அமைப்பு ஜன சங்கம்.அவர்கள் பாரதிய ஜனதா கட்சியாக புது அவதாரம் கொண்டார்கள்.
தொண்ணூறுகளில் காங்கிரஸ் வலுவிழந்து வலதுசாரி அமைப்புகள் மெல்ல மேலெழுந்தன.இந்த இடைப்பட காலத்தில் உருவான பல்வேறு கூட்டணி அரசுகளில் ஜான் ஏதோ ஒரு வகையில் பங்கு கொண்டான்.தனித்திருந்த கட்சிகளை ஒன்று திரட்டி கூட்டணியாக மாற்ற அவனால் முடிந்தது.அதில் அவன் பங்களிப்பு முக்கியமானது.அவன் எப்போதும் பாராளுமன்றத்தில் இலங்கை அகதிகளுக்காக , திபெத்திய மக்களுக்குகாக , சாதிய அவலங்களுக்காக , மத ரீதியிலான ஓடுக்குதல்களுக்காக , பாலஸ்தீனர்களின் வாழ்க்கைக்காக குரல் கொடுக்க கூடியவானகவே இருந்தான்.தன் தொகுதி மக்களுடன் எப்போதும் தொடர்பில் இருந்தான்.கடிதங்களுக்கு பதில் எழுதுவான்.மனுக்களை முழுமையாக படித்து முடித்தவற்றை செய்தான்.அவன் எளிய மக்களின் பக்கம் நின்றான்.
எண்பதுகளின் பிற்பகுதியில் பஞ்சாப்பைத் சேர்ந்த ஒருவனுக்கு கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை அளிக்கப்பட்டு தண்டனை நிறைவேற இன்னும் சில தினங்களே இருந்த நிலையில் பிரதம மந்திரியின் வீட்டுக்கே சென்று வெகு நேரம் வாதித்து அன்றிரவே ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்து அந்த மரண தண்டனையை ரத்து செய்தான்.
உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் நன்கு படித்துக்கொண்டிருந்த ஜான் வலதுசாரி அமைப்புகள் உடனான சண்டையால் தான் வெளியேற்றப்பட்டான்.இல்லை என்றால் அவன் இயற்பியலாளராக ஆகியிருப்பான்.அப்படிப்பட்ட ஜான் தொண்ணூறுகளின் முடிவில் வலுதுசாரி அமைப்புகளில் சென்றுச் சேர்ந்தான்.
என்னால் அதை புரிந்து கொள்ளவே முடியவில்லை.நான் ஒரு முறை அவனை தொலைபேசியில் அழைத்து அவனது செயல்களை விளக்கச் சொன்னேன்.அவன் எதுவும் சொல்லவில்லை.நான் அவனோடு பேசுவதை குறைத்துக்கொண்டேன்.உண்மையில் நான் அவனை வெறுக்கத் தொடங்கியிருந்தேன்.அவன் என் இள வயது நண்பன் என்பது எனக்கு எரிச்சலை அளித்தது.நாங்கள் பம்பாயில், நாக்பூரில் இருந்த காலங்கள் , அவனது வாதங்கள் எல்லாம் எனக்கு சலிப்பைத் தந்தன.
கோத்ரா இரயில் சம்பவமும் அதன் பின்னான கலவரங்களும் இந்திய சமூகத்தில் இந்திய அரசியலில் புதிய அத்தியாயங்களை தொடங்கி வைத்தன.அவன் பாராளுமன்றத்தில் அந்தக் கலவரங்களைப் பற்றிய உரையில் அரசுக்கு ஆதரவாகப் பேசினான்.காங்கிரஸ் ஆட்சியில் கலவரங்கள் நிகழவில்லையா என்று கேட்டான்.
நான் கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்களுக்கு பின்னர் அன்று மாலை அவனைச் சந்தித்தேன். பச்சை நிற ஜிப்பா அணிந்திருந்தான்.கலைந்த கேசம்.நாங்கள் இருவரும் தேநீர் கோப்பைகளோடு அமர்ந்திருந்தோம்.எங்களுக்கு மத்தியில் பல ரயில்கள் கடந்திருந்தன.நிறைய நேரம் மெளனமாகவே இருந்தோம்.உனக்கு வெட்கமாக இல்லையா ஜான் என்று நேரடியாகவே கேட்டேன்.அவன் ரஜாக்கர்கள் தெலுங்கானாவில் நிகழ்த்திய கொடூரங்கள் பற்றி எனக்குத் தெரியுமா என்று எதிர் கேள்வி கேட்டான்.எனக்குத் தலையே வெடித்து விடும் என்பது போல இருந்தது.ஜான் இப்படி தரம் தாழ்ந்து பேசுவான் என்று நான் எண்ணவில்லை.நான் அருந்திக்கொண்டிருந்த தேநீர் கோப்பையை அப்படியே வைத்துவிட்டு எழுந்து வந்தேன்.அன்று தான் அவனோடு கடைசியாக பேசினேன்.
அதன் பின் அவனுக்கு சில வருடங்களில் பார்கின்ஸன் நோய் வந்தது.பார்க்கின்ஸன் முற்றிய போது ஞாபக மறதி ஏற்பட ஆரம்பித்தது.அவன் மனைவி வெண்ணலா அவனை வந்து பார்த்துக்கொண்டாள்.எனது அலுவலகத்திலிருந்து ஜானின் இல்லம் வெறும் பத்து கீலோ மீட்டர் தூரம் தான்.ஆனால் நான் செல்லவில்லை.ஒரு முறை முயன்ற போது வெண்ணலா அனுமதிக்கவில்லை.அவள் யாரையும் அனுமதிக்கவில்லை.
இப்போது அவன் மரணமடைந்து விட்டான்.கிட்டத்தட்ட பத்து வருடங்கள் நோயால் அவதிப்பட்டு இறந்து போனான்.மரணம் எல்லா உறவுச் சிக்கல்களையும் தீர்த்து விடுகிறது.இப்போது நான் அவன் வீட்டுக்குச் சென்றேன்.பத்திரிக்கைகள் , கேமராக்கள், கட்சித் தலைவர்கள்.கண்ணாடி பெட்டிக்குகள் இருந்த அவனை நான் வெகு நேரம் பார்த்துக்கொண்டே இருந்தேன். யார் யாரோ என்னன்னவோ பேசினார்கள்.நான் ஏதேதோ பதில் சொன்னேன். மழை.கார் மேகங்கள் உடைந்து விழுவது போன்ற பெரும் மழை.நான் ஒரு வெண்ணிற கம்பளியை அந்தப் பெட்டகத்தின் மீது வைத்தேன்.வெண்ணலாவை பார்த்தேன்.அருகில் ஜானின் மகன் கோபாலன்.அவனில் ஜானின் சாயலே இல்லை.அவன் அவளது அன்னை போலவே இருந்தான்.அவள் என் கரங்களை பற்றிக்கொண்டாள்.நான் தலையை மட்டும் அசைத்து விட்டு வெளியே வந்தேன்.பத்மா இறந்த பின்னர் நான் கட்சி அலுவலகத்திலேயே ஒரு அறையை எடுத்துக் கொண்டு தங்க ஆரம்பித்தேன்.என் அறையில் மாட்டப்பட்டிருந்த பத்மாவின் புகைப்படத்தை பார்த்தவாறு அமர்ந்தேன்.பத்மாவை பற்றி ஜான் சொன்ன வார்த்தைகள் என்னுள் பெருக்கெடுத்தது. எத்தகைய கொடையாளன் ஜான். மக்களின் மீது உண்மையான அன்பும் அக்கறையும் பரிவும் கொண்டிருந்தான்.அவர்களுக்காக வாதாடினான் , சண்டை போட்டான்.ஒரு முறை பாராளுமன்ற வளாகத்தில் ரயில்வே ஊழியர்களுக்காக அவன் செய்த போராட்டத்தின் போது போலீஸ்காரர்கள் அவன் மண்டையில் தாடையில் லத்தி கொண்டு கொடூரமாக தாக்கினார்கள்.அவனுக்கு பார்க்கின்ஸன் வருவதற்கு அது காரணமாக இருந்திருக்கலாம் என்று என்னிடம் சிலர் சொன்னார்கள்.
ஜானின் வாழ்க்கை துயரம் நிரம்பியது.அவனது தாய் அவனை மிகவும் கடினப்பட்டு வளர்த்தார்.கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டான்.அவனது திருமணம் தோற்றுப் போனது.ஜான் அரசியலில் பல வெற்றிகளைப் பெற்றான்.ஆனால் அவன் தன் இறுதி அரசியல் அத்தியாயத்தில் பல பிழைகளையும் செய்தான்.அவனை எப்படி புரிந்து கொள்வது.தொகுத்துக் கொள்வது.எனக்குத் தெரியவில்லை.மனிதன் எப்போது மற்றமையை உருவாக்கிக் கொள்கிறான்.தன்னிலை உருவாகும் போதே மற்றமை உருவாகுகிறதா.தன்னிலை அழிந்தால் மற்றமையும் அழியுமா.புரியவில்லை.ஆனால் அந்த வீழ்ச்சி எப்போதோ தொடங்கி எங்கேயோ அவனை கொண்டு போய் விட்டது.அவன் வாழ்வில் ஒளி அகன்று நிழல் விழுந்தது.பரதன் நீ ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று அவன் சொன்ன வரி உறங்கச் செல்லும் போது என்னுள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது.பத்மாவை பற்றி ஜான் சொன்னதை பத்மாவிடம் பல வருடங்கள் கழித்து ஒரு மாலைப் பொழுதில் பகிர்ந்து கொண்டேன்.பத்மா சட்டென்று கண் கலங்கினாள்.மரணமடைந்த ஜானின் இல்லத்திற்கு சென்று திரும்பிய போது பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டார்கள்.எதாவது சொல்லுங்கள் எதாவது சொல்லுங்கள் என்று தொடர்ந்து கேட்டார்கள்.என்னிடம் உண்மையில் சொற்களே இல்லை.என் மனதில் கடற்கரையில் , அலுவலகத்தில் , போராட்டங்களில் நாங்கள் கழித்த பொழுதுகள் தான் காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது.இறுதியில் என்னைத் தொகுத்துக் கொண்டு ஜான் என் நண்பன் , என் சிறந்த நண்பன், எமர்ஜென்சியின் போது அதிகாரத்தை எவ்வித அச்சமுமின்றி எதிர்த்து நின்ற அந்தத் தருணமே அவன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.அலமாரியிலிருந்து என் முதல் புத்தகத்தை தேடிப் பிடித்து எடுத்தேன்.பத்மா என் ஒவ்வொரு நூலினும் ஒரு பிரதியை பைண்ட் செய்து பத்திரப்படுத்தி வைத்திருந்தாள்.அந்த நூலின் முன்னுரையில் ஜானின் நட்புக்கு, அவன் எனக்கு வாங்கித் தந்த தட்டச்சுப்பொறிக்கு நன்றி தெரிவித்திருந்தேன்.பத்மாவுக்கு அந்த நூலை சமர்பித்திருந்தேன்.இன்று என் அருகில் இவர்கள் இல்லை.சாளரத்திற்கு வெளியே தூவானம்.உள்ளே என்னுள் எண்ணற்ற நெகிழ்வான நினைவுகள்.நான் என்னை அறியாமல் உறங்கத் தொடங்கியிருந்தேன்.
- வனம் இதழில் பிரசுரமான சிறுகதை- புகைப்படம் - By Google Arts & Culture — KwF-AdF1REQl6w, Public Domain,https://commons.wikimedia.org/w/index.php?curid=22554513